Saturday, March 30, 2013

'பயாலஜி' படுத்தும்பாடு_3

இந்த வருடம் மீண்டும் 'பயாலஜி' வந்துள்ளது.இம்முறை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்கிறாள்.

சில‌ மாதங்களுக்குமுன் 'மூளை'யைப் பற்றி படித்துக்கொண்டிருந்தனர்.

ஒரு நாள் காலை திடீரென 'அம்மா இனி எனக்கு காலையில் cereal / சீரியல் வேண்டாம்' என்றாள்.

நான் பரவாயில்லையே,இந்த சீரியல் பழக்கத்தை எப்படி நிறுத்துவது என நினைத்திருந்தேன்.அவளாகவே நிறுத்திவிட்டாளே என எண்ணி 'இட்லி ஊத்தவா' என்றேன்.

'ஒரு ஆம்லெட்டும்,1/2 கப் பாலும் போதும்மா' என்றாள்.

'காலையிலேயே முட்டை சாப்பிடப்போறியா!' என்றேன்.

'முட்டையில் நிறைய புரோட்டீன் இருக்குமா,காலையில் புரோட்டீன் எடுத்துக்கிட்டா it will wake you up,மூளைக்கு நல்லது' என்றாள்.

'இதுக்கு சீரியலே பரவாயில்லை' என நினைத்துக்கொண்டேன்.

பின்ன என்னங்க, perfect omelet னு தேடித்தேடி எல்லாம் செய்து முடித்து,இப்போது தாளிக்கும் கரண்டி ஆம்லெட் செய்துகொண்டிருக்கிறேன்.

வீட்டுக்காரர் ஒரு இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்தார்.அடுத்த நாள் கேட்டேவிட்டார்.

'காலையிலேயே என்ன பன்ற' என்றார்.நான் விஷயத்தைச் சொல்லவும் சரியென்று விட்டுவிட்டார்.

ஆனாலும் அன்று மாலை இதைவைத்து மகளை ஓட்டப்போகிறார் என்பது மட்டும் புரிந்தது.

தினமும் மாலையில் இவர் ஆஃபீஸ் விட்டு வீட்டுக்கு வந்து உள்ளே நுழையும் முன்னமே இவள் 'you know what' என்று ஆரம்பித்து அன்று முழுவதும் நடந்ததை எல்லாம் ஒன்று விடாமல் தூங்கப் போகும்வரை சொல்லிக்கொண்டே இருப்பாள்.

அன்றும் அப்படித்தான்,எப்போதும்போல் பேச ஆரம்பித்தாள்.

கொஞ்ச நேரம் அவள் சொன்னதையெல்லாம் கேட்டுவிட்டு 'என்ன காலையிலேயே ஆம்லெட் சாப்பிற்றயாமே' என ஆரம்பித்தார்.

அவளும் சீரியஸாக விஷயத்தைச் சொன்னாள்.

உடனே இவர் ' நாங்க எவ்வளவோ முயற்சித்தும் முடியாமத்தானே விட்டுட்டோம்,இப்போ நீ ஆரம்பிச்சிருக்க‌,இனிமேலாவது நடக்குதான்னு பார்க்கலாம்'என்றார்.

அவ்வ்வ்வ் என இரண்டு கை விரல்களையும் அவரது முகத்தருகே கொண்டு சென்றாள்.பின்னர் என்பக்கம் திரும்பி 'அம்ம்மாஆஆ,அப்பாவுக்கு எல்லாமே ஜோக்தானா, எதையுமே சீரியஸா எடுத்துக்க மாட்டாரா' என்றாள்.

'இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டா என் நிலை என்னாவது' என நினைத்து மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டேன்.
  ___________________   _  _  _  ___________________  _  _  _  _________________________  

Thursday, March 28, 2013

'பயாலஜி' படுத்தும்பாடு_2

மகள் கடந்த மூன்று மாதங்களாக‌ புது ஆசிரியையிடம் Flute கற்றுக்கொள்கிறாள்.இதில் ஒரு வகுப்பு மட்டும் அனைத்து மாணவர்களுக்குமானது என்பதால் அந்த ஆசிரியை அவரிடம் பயிலும் ஒத்த வயதுடைய மாணவர்களை குழுகுழுவாக சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

மாணவர்கள் ஒருவருக்கொருவர் முன்பின் அறிமுகமில்லாதவர்கள். அவரவருக்குரிய Notes ஐ தனித்தனியாக அக்குழுவின் முன்னிலையில் வாசித்துக்காட்ட வேண்டும்.

என் மகளுக்கு கடந்த சனிக்கிழமை எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் உள்ள ஒரு பள்ளியில் காலை நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

வெள்ளிக்கிழமை மாலையே என்னிடம்,"அம்மா,நாளைக்காலை உணவாக எனக்கு ஒரு வாழைப்பழமும்,1/2 கப் பாலும் போதும்மா"என்றாள்.

பரவாயில்லையே,ஆம்லெட்டிலிருந்து வெளியே வந்தாச்சுபோல‌ என நினைத்து சந்தோஷப்பட்டேன்.(ஆம்லெட் எப்படி உள்ளே வந்தது என அடுத்த பதிவில் சொல்கிறேனே.)

"இனிமேல் இதுதான் காலை உணவா", என்றேன்,சமைக்கும் வேலை மிச்சமாச்சே!என்ற சந்தோஷத்துடன்.

"இல்லம்மா,நாளைக்கு மட்டும்",என்றாள்.

"என்ன,திடீர்னு ஒரு நாளைக்கு மட்டும் ",என்றேன்.

"நாளைக்கு மியூஸிக் வகுப்பில் என்னுடய Notes ஐ play பண்ணும்போது நெர்வஸாக/nervous இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்",என்றாள்.

அதற்கும்,வாழைப்பழத்திற்கும் என்ன சம்மந்தம்?ஒன்றும் புரியவில்லை. பொறுத்துப் பார்த்து கேட்டேவிட்டேன்.

"அதாவது music instruments வாசிப்பவர்கள் கூட்டத்தைப் பார்த்து ஒருவேளை நெர்வஸாகலாம்.வாழைப்பழம் சாப்பிடும்போது அதிலுள்ள பொட்டஷியம் தாது கொஞ்சம் நெர்வஸைக் குறைக்கும் என்பதால்தான்", என்றாள்.விடை கிடைத்துவிட்டது.

ஆனாலும் இன்னொன்று புரியவில்லை.

"இவ்வளவு நாளும் வராத நெர்வஸ் இப்போது மட்டும் வர என்ன காரணம்?", என்றேன்.

"இவ்வளவு நாளும் என்னுடைய ஆசிரியர்கள்,பழகிய மாணவர்கள் உடன் இருப்பார்கள்.இப்போது எல்லா மாணவர்களுமே புதியவர்கள்,அவர்கள் முன்னிலையில் நான் நன்றாக செய்ய வேண்டுமே,அதனால்தான்",என்றாள்.

"இது முன்னமே தெரிந்திருந்தால் ஒவ்வொரு பரீட்சைக்கு முன்னும் குலைகுலையாக வீட்டில் பழுத்துக்கொண்டிருந்த‌ வாழைப்பழங்களை ஒருகை பார்த்திருக்கலாமே",என நொந்துகொண்டேன்.
 ______________  _  ____________________  _   _________________  _  __________________

போன பதிவில் வெளியான‌ புகைப்படம் சனிக்கிழமை காலை நாங்கள் போன பள்ளியில் எடுத்தது.அங்கு நுழைந்ததுமே அதுதான் என் கண்ணில் பட்டது.

என் வீட்டுக்காரர் மகளிடம்,'அம்மாவ பாத்துக்கோ,கேமராவோட‌ குதிச்சிடப் போறாங்க'என்றார்.

ஆனாலும் நான் விடுவதாக இல்லை.மகள் வகுப்பிற்கு போனபிறகு போய் படம் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேனே.

 'மகள் புராணம்'__தொடரும்.நிம்மதிப் பெருமூச்சு விடலாம்,இன்னும் ஒரு பதிவுதாங்க இருக்கு.


Sunday, March 24, 2013

'பயாலஜி' படுத்தும்பாடு_1


 உண்மையில் 'மகள் புராணம்' என்றே தலைப்பு இருந்திருக்க வேண்டும்.சரி தலைப்பையாவது விட்டு வைக்கலாமே என்ற நல்ல எண்ணத்தில் மாற்றிக்கொண்டேன்.தலைப்பும் நல்லாத்தானே இருக்கு எதுகை,மோனையுடன்!

 ஒரு புகைப்படம் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என ஒருவரிடமிருந்து அனுமதி கிடைத்ததால் அந்தசாக்கில் இந்தப் படத்தை நுழைத்துவிட்டேன். தலைப்புக்கும், படத்திற்கும் சம்மந்தம் இருக்குமா!இந்தப் பதிவில் இல்லையென்றாலும் அடுத்த பதிவுடன் கண்டிப்பாக ஒத்துப்போகும் என்றே நினைக்கிறேன்.

இந்தப் பதிவில் உள்ளவை சிலரது வீடுகளில் நடந்து முடிந்திருக்கும்.சிலரது வீடுகளில் அரங்கேறிக்கொண்டிருக்கும்,மீதமுள்ளவர்கள் நாளை எதிர்கொள்ளலாம்.ஒரு அம்மாவாக நான் ரசித்ததை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு.

நம்ம ஊர் மாதிரி இல்லாமல்,இங்குள்ள பள்ளிகளில் அறிவியல்,வரலாறு பாடங்கள் எல்லா வகுப்புகளிலும் இல்லாமல் ஒரு வருடம் இருக்கும், அடுத்த வருடம் இல்லாமல் போகும்,பிறகு மீண்டும் அடுத்த வருடம் வரும்.

ஆனால் வகுப்பில் அதைப்பற்றி படித்துக்கொண்டும்,களப்பயணம் / Field trip மேற்கொண்டும்,project செய்துகொண்டும்தான் இருப்பார்கள். இடைநிலைப் பள்ளி முடியும்வரை இப்படித்தான்.

அப்படி ஒரு வருட‌ம் மகளுக்கு அறிவியலில் 'உயிரியல்' பாடம் மட்டும் வந்தது.அதில்  'Cell / செல்'லைப்பற்றி படித்தனர்.

என்னிடம் ஒரு பழக்கம்,அதாவது வீட்டுக்காரரும்,மகளும் வீட்டிற்கு வருவதற்குள் மிக்ஸி,கிரைண்டர் வேலைகளை முடித்துவிடுவேன். எக்காரணம் கொண்டும் அவற்றை ஓடவிட்டு அவர்களுக்குத் தொந்தரவு கொடுக்க‌ மாட்டேன்.

அன்றும் அப்படித்தான்,இட்லி மாவு அரைத்து,வழிக்கவும் மகளிடமிருந்து 'அம்மா,ஸ்கூல் முடிஞ்சிருச்சு வந்துகொண்டிருக்கிறேன்"என ஃபோன் வரவும் சரியாக இருந்தது.

 எப்போதும்போல் கதவைத் திறக்காமல் தாழ்ப்பாளை மட்டும் திறந்து விட்டுவிட்டு இட்லி மாவில் உப்பு போட்டு கரைத்துக்கொண்டிருந்தேன். எங்கம்மா சொல்லுவாங்க 'அரைப்பது ஒரு பங்குன்னா கரைத்து வைப்பதில்தான் பக்குவம் இருக்குன்னு'.அதனால் கரையோகரைன்னு கரைச்சுட்டிருந்தேன்.

கதவைத் திறந்து உள்ளே வந்தவள் நான் மாவில் கையை விட்டுக்கொன்டிருப்பதைப் பார்த்ததும் ஷாக்காகிவிட்டாள்.

'Ammaaa,don't do that,don't do that' என்று சொல்லிக்கொண்டே  ஓடிவந்தவள் 'ஏம்மா மாவுல கை விட்டுட்ருக்க' என்றாள்.

நான் 'மாவு கரைச்சிட்டிருக்கேன்,இப்படி செய்தால்தான் இட்லி நன்றாக வரும்' என்றேன்.

'இவ்வளவு நாளும் இப்படியா செய்யற' என்றாள்.

'ஆமாம்,ஏன் என்ன ஆச்சு' என்றேன்.

'நீ மாவு அரைப்பது தெரியும்,ஆனால் கையால் கரைச்சு வைக்கிறது தெரியாது' என்றாள்.

ஒருவேளை அந்த நாளில் நான் என் அம்மாவிடம் கெஞ்சிய‌துபோல் 'நான் கரைச்சு வக்கட்டுமா' என்பாலோ என நினைத்து 'தெரிஞ்சா என்ன பண்ணியிருப்ப' என்றேன்.

'உடம்புல இருக்கற இறந்த செல்களையே நாம குளிக்கும்போது தேய்த்து எடுத்திடறோம்,நீ இப்படி கையை விட்டு செஞ்சினா,எல்லா இறந்த செல்களும் மாவில்தானே போய் சேரும்.இனிமே மாவு கரைக்கும்போது  க்ளௌஸ் பொட்டுக்கோம்மா,ப்ளீஈஈஸ்ஸ்' என்றாள்.

அந்த வாரம் சனிக்கிழமை கடைக்குப் போகும்போது அதிசயமாக அவளும் உடன் வந்தாள். கடைக்குப் போனதும் நேராக சமையல் பாத்திரங்கள் இருக்குமிடத்திற்கு சென்று நீளமான இரண்டு மரக்கரண்டிகளை எடுத்து என்னிடம் கொடுத்தாள்.

'நான் ஏற்கனவே இவற்றை செட்டுசெட்டாக வாங்கி வைத்திருக்கிறேன், அதுவே போதும்' என்றேன்.

'அம்மா மாவு கரைக்க க்ளௌஸ் வாங்கிக்கொடுத்தா அதுல இருக்கற கெமிக்கலைவிட கையாள கரைக்கிறது பரவாயில்லன்னு சொல்லுவ, அதனாலதான் இது' என்றாள்.

நானும் அந்தக் கரண்டிகளை வாங்கி வைத்துக்கொண்ட‌துடன் சரி.

முன்பெல்லாம் "அம்மா,மாவு கரைக்க அந்தக் கரண்டிகளைத்தானே பயன்படுத்தற?" என அடிக்கடி கேட்டு உறுதி செய்துகொள்வாள்.

எத்தனை நாளைக்குத்தான் ஏமாற்றுவது.ஒருநாள் உண்மையைப் போட்டு உடைத்துவிட்டேன்."நான் இப்படி கையாள கரைச்சு வக்கிறதாலதான் இட்லி & தோசை சூப்பரா இருக்கு"என்று.

இப்போதெல்லாம் ஒன்றும் சொல்வதில்லை,புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

ஒரு சமயம் 'அம்மா எனக்கு பச்சை ஓட்ஸை மாவாக்கிக் கொடும்மா 'என்றாள்.

'ஏன்?' என்றதற்கு விஷயத்தைச் சொன்னாள்.

நானும் வறுத்துப் பொடித்தது ஒரு பாட்டில்,பச்சையாகப் பொடித்தது ஒரு பாட்டில் என கொட்டி வைப்பேன்.வறுத்துப் பொடித்ததை சமைத்து முடிக்குமுன் பச்சையாகப் பொடித்தது தீர்ந்துபோயிருக்கும்.

இறந்த செல்களை எடுக்கிறேன் பேர்வழின்னு முகம்,கைகால்களில் பூசிக் கொள்வதால்தான்.ஏதேதோ கெமிக்கலை எல்லாம் போடாமல் ஓட்ஸோடு முடிந்ததே என சந்தோஷப்பட்டுக்கொள்வேன்.

இவர்கள் ஏட்டில் படித்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் செயல்படுத்துவதைப் பார்க்கும்போது சந்தோஷமே. ______ __ ______'மகள் புராணம்' தொடரும்.

Wednesday, March 20, 2013

(பூ)மரம்

இரண்டு வாரங்களுக்கு முன் வயலட் நிறத்தில் இருந்த இந்த மரத்தின் மலர்கள்,இந்த வாரம் பிங்க் நிறத்திற்கு மாறியிருக்கும் அழகைக் காண‌லாம்.

இரண்டு வாரங்களுக்கு முன்...


 இந்த வாரம்...


Sunday, March 10, 2013

தேன்சிட்டு / Humming bird


சனி & ஞாயிறு 'வாக்' போவதென்றால் எனக்கு ஜாலியோ ஜாலிதான். அப்படித்தான் இன்றும் மாலை 4:00 மணிக்கு வீட்டைவிட்டு வெளியில் வந்தால் அப்பார்ட்மெண்டின் கம்பி வேலியில் அழகான தேன்சிட்டு ஒன்று அமைதியாக உட்கார்ந்திருந்தது.இதுவரை அது உட்கார்ந்து நான் பார்த்ததில்லை.

எத்தனையோ முறை முயற்சித்தும் காமிராவுக்குள் சிக்க வைக்க முடியவில்லை.இன்று வசமாக மாட்டிக்கொண்டது.பலமுறை க்ளிக்கியும் அசையாமல், போஸ் கொடுத்துக்கொண்டு அமர்ந்திருந்தது.
 கம்பியில் மாட்டிக்கொண்டதோ என ஒரு கட்டத்தில் கொஞ்சம் பயம் வந்தது.

அவ்வாறு நினைத்த மறு நொடியில் அந்த அழகான இடத்தை, வெற்றிடமாக்கிவிட்டு அது பறந்துபோய்விட்டது.அதற்குமேல் நானும் அங்கு நிற்கப் பிடிக்காமல் இடத்தை காலி செய்துவிட்டு நகர்ந்தேன்.

Saturday, March 9, 2013

செர்ரி ப்ளாஸம் /Cherry blossom

பெயர்தான் செர்ரி ப்ளாஸமே தவிர இது செர்ரி பழமரம் இல்லை.பூக்கள் பளீர் வெண்மை நிறத்திலும்,சிறிது ப்ரௌன்,மற்றும் பிங்க் நிறத்திலும் பூத்திருப்பதைப் பார்க்கும்போதே ஒரு அழகுதான்.

சென்ற இரண்டு வாரங்களாக இந்த மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கின. இரண்டு நாட்களாக பெய்த மழை+காற்றினால் எல்லாப் பூக்களும் கொட்டோ கொட்டென்று கொட்டித்தீர்க்கின்றன.

நான் எடுத்த சில படங்களைப் பகிர்ந்துகொள்கிறேன்.


கீழே படத்திலுள்ளது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மரம்.பூக்க ஆரம்பித்த சமயத்தில்...


ஒன்றிரண்டு நாட்கள் கழித்தபிறகு...


மேலும் இரண்டு நாட்கள் கழித்து...


 சென்ற வார நிலை...


இன்றைய நிலை...பூக்களின் இதழ்கள் கொட்டிக்கொண்டே ப்ரௌன்+சிவப்பு நிற‌ இளம் துளிர்களுடன்...

Friday, March 1, 2013

Duck(க்கு)mentary



எங்கள் வீட்டில் கொஞ்சம் rubber ducky கள் உள்ளன‌.கடந்த மூன்றரை வருடங்களில் ஓவ்வொருவராக எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இப்போதைக்கு எண்ணிக்கையில் 11 இருக்கிறது.கொஞ்சம் தேடிப்பார்த்தால் இன்னும் சிலர் சிக்குவார்கள்.

இனி எங்கு வீடு மாறிப்போனாலும் அவர்களும் எங்களுடனே பயணிப்பார்கள்.அவர்களை நன்றாகக் கழுவித் துடைத்து ஒரு ஸிப்லாக் கவரில் போட்டு பத்திரமாக வச்சாச்சு. தேவைப்படும்போது இங்கே வந்து பார்த்துக்கொள்ளலாம்.

                                                             ரெட் கார்பெட் வரவேற்பு
                                                    
ஒருசில மாதங்களுக்குமுன் இங்குள்ள பப்ளிக் சானலில் வாத்துகளைப்பற்றி  DUCKumentary என்ற தலைப்பில் ஒரு டாக்குமெண்டரி  பார்த்தேன்.தலைப்பு வித்தியாசமாக இருக்கவும் அப்படியே மனதில் ஒட்டிக்கொண்டது.அந்தத் தலைப்பினூடே எங்க வீட்டு டக்குமெண்டரியைக் கொஞ்சம் பார்ப்போமே.

இங்கு High school ல் Marchingband  என்ற elective வகுப்பு உண்டு.பிள்ளைகளின் விருப்பம்போல் ஒன்று முதல் 4 வருடங்கள் வரை இந்த வகுப்பில் சேர்ந்திருக்கலாம்.

பள்ளி அமைந்துள்ள ஊர்,அருகிலுள்ள ஊர்களில் நடக்கும் விசேஷங்களில் கலந்துகொண்டு Show,Parade, முதலியவை செய்வார்கள்.மற்ற பள்ளிகளுடன் Competition ல் கலந்துகொள்வார்கள்.நிறைய பள்ளிகள் வந்து செய்யும்போது பார்க்கவே அழகாக இருக்கும்.இதற்கு நிறைய பயிற்சிகளும் உண்டு.

இதற்கென சீருடை உண்டு.இதனை ஒவ்வொரு முறை பயன்படுத்தியபிறகும், நேர்த்தியாக மடித்து வைக்க வேண்டும்.அவ்வாறு செய்தால் அவர்களுக்கு படத்திலுள்ள‌துபோல் ஒரு ரப்பர் டக்கி கிடைக்கும்.பிள்ளைகளை உற்சாகப்படுத்துவதற்கு இது ஒரு வழி.பிள்ளைகளுக்கு அது கிடைக்கும்போது அதில் ஒரு ஆனந்தம்.அவர்களின் கடின உழைப்பிற்கான பரிசு இல்லையா!!!


ஒரு வருடம் முழுவதற்குமான சிறப்பு பரிசாக பெரிய டக்கியும்,நான்கு வருடங்களுக்குமாக அதைவிட‌ பெரிய டக்கியும் உண்டு.அந்த இரண்டும் எங்கள் வீட்டிற்கு வர வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஒவ்வொரு டக்கியின் மேலும்,சுற்றிலும் மகளின் கடின உழைப்பு எப்படி ஜொலிக்குது பாருங்க!எனக்குத் தெரியுது,முயற்சி செய்தால் உங்களுக்கும் தெரியும்.