Wednesday, April 17, 2013

வாஆங்க,ஊர் சுற்றுவோம் !!!

சமீபத்தில் பக்கத்திலிருக்கும் ஒரு பல்கலைக் கழக வளாக‌த்திற்குள் (படிக்கப் போறாங்களோ!!!!!,வேலைக்குப் போகப்போறாங்களோ!!!!!! என்றெல்லாம் குழம்புவதைப் பார்த்தால் ஹா ஹா ஹா!!!) செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது.

பேரு & ஊரு இப்படி எதுவுமே இல்லாம வளாகத்தை சூப்பரா சுற்றிக் காட்டுவேன், பயப்படாஆஆம வாங்க!!


நல்ல தாராளமாக இடையிடையே இடம்விட்டு எங்கும் கட்டிடங்கள். இடையிலுள்ள இடங்களில் எல்லாம் புல்,செடிகள்,மரங்கள் என ஜோராக இருந்தது.

பாதி இடங்களை முடித்த நிலையில்,புது கட்டிடங்களுக்கு மத்தியில் வித்தியாசமான,அந்தக்கால கட்டிடம் ஒன்று இருந்தது. கூடவே சுற்றிலும் ஆங்காங்கே பனைமரம் மாதிரியான மரங்களும் கட்டிடத்துடன் போட்டி போட்டுக்கொண்டு நீயா? நானா? என கேட்பதுபோல் வளர்ந்திருந்தன.
 அதைப் பார்த்தவுடன்  blog fever வந்து க்ளிக்கினேன். அப்பொழுதுதான் நினைவு வந்தது,இவ்வளவு நேரமும் படங்கள் எடுக்காமல் விட்டுவிட்டோமே என்று.ஒன்மோர் பதிவிலிருந்து தப்பிச்சிட்டீங்க.

இந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து இரண்டு ஆப்ரிக்கன்அமெரிக்கன்ஸ் முதன்முதலாக கிபி 1968_ல் நடந்த ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு தங்கம், வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.அவர்களை  honor செய்யும் விதமாக அவர்களின் சிலைகளை வைத்துள்ளனர்.தீண்டாமை உச்சத்தில் இருந்த நாட்களில் இது சாத்தியமானது ஆச்சரியத்தைக் கொடுத்தது.

கீழே படத்திலுள்ளவை அங்குள்ள கட்டிடங்களுள் சில.

 

மேலே படத்திலுள்ள இக் கட்டிடமும் கொஞ்சம் வித்தியாசமாக, அழகாக‌ இருந்தது. அதன் முன்னால் construction work நடந்துகொண்டு இருந்ததால் ஒரு பக்கமாக நின்று எடுத்தேன். 

Saturday, April 13, 2013

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


வலையுலக உறவுகள் அனைவருக்கும் இனிய விஜய வருட தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Friday, April 5, 2013

அணில் # 1


புஸுபுஸு,
குண்டு,
 
கொழுக்மொழுக்  அணில்கள்
ம் ம் ம்...,ஏதோ ஒரு குறை இருக்கே!!! ஒருவேளை அது நம்ம ஊரு அணில்களுக்கு மட்டும்தான் சொந்தமோ!!!

Wednesday, April 3, 2013

சித்ராசுந்தருக்கும் அவிங்களுக்குமானத் தொடர்பு

ஒரு சில வருடங்களுக்கு முன்பு இங்கு Form/ஃபாரம் ஒன்று பூர்த்தி செய்யவேண்டி வந்தது.அதில் நம் பெயர்,குழந்தை/குழந்தைகளின் பெயர்,பெற்றோர் பெயர் இவற்றுடன் எங்களின் அம்மா & அப்பா வழி தாத்தா பாட்டிகளின் பெயர்களையும் கேட்டிருந்தனர்.

எங்கள் தாத்தாபாட்டிகளின் பெயர்களைக் கேட்டதில் எனக்கு மகிழ்ச்சியே. இப்போது (இல்லாத‌) அவர்களைப் பற்றிய நினைவுகள் மனதில் நிழலாடியது.

ஒருவருக்கு அதில் கொஞ்சம் பிரச்சினை ஏற்பட்டு,அது தொலைபேசி மூலமாக சரி செய்யப்பட்டது.

இது முடிந்து சில நாட்களிலேயே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தங்கள் முன்னோர்களின் நினைவுகளாக,அவர்களது புகைப்படங்கள்,பெயர், கையெழுத்துப் பிரதிகள்,அவர்கள் பயன்படுத்திய பொருள்கள் போன்றவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பதுபற்றி பேசினார்கள்.

நாம்தான் சொத்தை தவிர வேறு எதையுமே பொக்கிஷமாக நினைக்கமாட்டோமே என்று மனதிற்குள் சிறு வருத்தம் ஏற்பட்டது.

ஊரில் இருந்தால் நம் பிள்ளைகளுக்கு தாத்தாபாட்டியின் பெயர் எளிதில் நினைவில் இருக்கும்.யாராவது ஒருவர் அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பர்.அல்லது இன்னார்வீட்டு பேரப்பிள்ளை என்பர்.இவை எதுவுமே இங்கு நடக்கப்போவதில்லை.

எனவே ஒரு முடிவுக்கு வந்தேன்.சித்ராசுந்தர்,சித்ராசுந்தர்ஸ்,சித்ரா_சுந்தர், சுந்தர்_சித்ரா என இப்படியே இனி மெயில் ஐடி ஆரம்ப்பிப்பதற்கு பதிலாக என்னுடைய‌ அப்பாஅம்மா,என் இரண்டு வழி தாத்தாபாட்டிகளின் பெயர்களிலும் மெயில் ஐடி ஆரம்பித்தேன்.

இப்படி வந்தவர்கள்தான் உங்கள் எல்லோருக்கும் அறிமுகமான செந்தாமரை & கோ.என் பாட்டியின் பெயர் எவ்ளோஓஓ அழகா இருக்கு!!!

இப்போது  இது நன்றாகவே வேலை செய்கிறது.என் மகளுக்கு தாத்தாபாட்டி மட்டுமல்லாமல் கொள்ளு தாத்தாபாட்டிகளின் பெயர்களும் அத்துபடி.

அவர்களின் பெயர்களை எழுதும்போதும்,சொல்லும்போதும் ஒரு மனநிறைவு வருவது உண்மையே.

Tuesday, April 2, 2013

தேடினேன்;கிடைக்கவில்லை...!!

அன்று தெருவில் எல்லோரும் பேசிக்கொண்டார்கள்,ரமணியை இன்று பெண்பார்க்க வரப்போகிறார்கள் என்று.கிராமம்தானே,சட்டென்று இவ்விஷயம் தெரு முழுவதும் பரவியது.அதுவுமில்லாமல் தெருவினர் அனைவருமே ஏன் கிராமம் முழுவதுமே ஏதாவது ஒரு வகையில் ஒருவருக்கொருவர் உறவாகத்தானே இருப்பார்கள்.

ரமணி_கலகலப்பான,வெகுளியான‌ பெண்.எல்லோரையும் கிண்டலும், கேளியுமாகப் பேசக்கூடியவள்.கள்ளம்,கபடு தெரியாதவள்.அவளுடைய சிரித்த முகமே இவை எல்லாவற்றிற்கும் சாட்சி.நுனிவரை ரிப்பன் வைத்து பின்னிவிடப்பட்ட குட்டி ஜடை,பாவாடை தாவணியுடன் அழகாக வலம்வருவாள்.

மாப்பிள்ளை வந்து பெண் பார்த்துவிட்டு போனபிறகு "மாப்பிள்ளை அழகாக‌ இருக்கிறார்,பட்டப் படிப்பெல்லாம் படிச்சிருக்கார்,அரசு வேலைகூட வந்திருமாம்,ரமணி கொடுத்து வைத்தவள்,டவுனுக்கு போகப்போகிறாள்" என பேசிக்கொண்டனர்.

சிலர் தங்களுக்குள் ரகசியம் பேசவும் செய்தனர்.ஒரு வீட்டுப் பெயரைச் சொல்லி "அவங்க வீட்டு சந்தில் (கிராமத்தில் உள்ள‌ எல்லா வீட்டிற்கும் இரண்டு பக்கமும் சந்துவிட்டு கட்டுவது வழக்கம்) பையனின் அப்பாவும், அம்மாவும் பையனை ஒருவாறு தேற்றிக் கொண்டிருந்ததாகவும்,"நான்கு பையன்களுக்கு மத்தியில் ஒரே பெண்,நிறைய நகை போடுவார்கள்,சீர்வரிசை செய்வார்கள், பிடிச்சிருக்குன்னு சொல்லு"என்பதாகவும்.

"இதையெல்லாம் வெளிய சொல்லி நல்ல விஷயத்தை தடுத்து நிறுத்தக் கூடாது,நாளடைவில் தானாக சரியாகிவிடும்" எனவும் பேசிக்கொண்டனர்.

விஷயம் தெரிந்த சிலர் "பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பொருத்தம் இல்லாததுபோல தெரியுதே,சரிவருமா!"எனவும் பேசிக்கொன்டனர்.

இவை எல்லாவற்றையும் தாண்டி திருமணமும் முடிந்தது.மாப்பிள்ளையை சம்மதம் சொல்ல வைத்தது எது எனத் தெரியவில்லை.

இரண்டுமூன்று முறை மறுவீடு வந்து போகும்போதே "பையன்,பெண் வீட்டார் யாரிடமும் முகம் கொடுத்து பேசுவதில்லை,பெண்ணைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை" என வெளிப்படையாகவே பேசினர்.

சவுரியின் துணையுடன் நீளமான ஜடை,சேலையில் அவளின் மொத்த‌ உருவமே மாறிப்போனது.அவளின் சிரித்த,கலகலப்பான முகம் காணாமல் போயிருந்தது

புகுந்த வீட்டில் மாமனாரைத் தவிர மற்ற எல்லோருமே அவளை கேவலமாகப் பார்ப்பதாகவும்,ஏளனமாகப் பேசுவதாகவும் பேசிக்கொண்டனர்.

சமயங்களில் அவள் வீட்டிலிருந்து யாராவது போய் அவளை அழைத்து வருவார்கள்,ஒன்றிரண்டு வாரங்கள்,ஏன் ஒன்றிரண்டு மாதங்கள்கூட ஆகும் அவள் மீண்டும் ஊருக்குப்போக.அதுவும் இங்கிருப்பவர்களின் துணையுடன்.

அங்கே அவள் வரவுக்காக யாராவது காத்திருந்தால்தானே வந்து அழைத்துப்போக?இப்படியே இரண்டுமூன்று வருடங்கள் ஓடிப்போனது.

இதற்கிடையில் அவளின் ஒன்றிரண்டு அண்ணன்களுக்கும் திருமணமாகியது.ஒருநாள் அப்பாவால் அழைத்துவரப்பட்டாள்.ஆறு மாதங்களுக்கு மேலாகியும் வழக்கம்போல் யாரும் வந்து அழைத்துப் போகவில்லை.

என்ன பஞ்சாயத்து நடந்ததோ தெரியவில்லை,ஒருநாள் திடீரென காலை வேளையில் அவளது கணவன் வந்தான்.அவன் வராமலே இருந்திருக்கலாம்.விதி யாரை விட்டது!

அன்றே நண்பகல் வேளையில் அவன் வேகவேகமாக பேருந்து நிற்குமிடத்திற்கு விரைந்தான்.சில நிமிடங்களிலேயே அவளும் நீளமான ஜடை,தலை நிறைய பூவுடன்,கையில் ஒரு பையுடன் தெருவில் உள்ள எல்லோரிடமும்,கண்களில் ததும்பும் கண்ணீருடன் போய் வருவதாக சொல்லிக்கொண்டே சென்று பஸ் ஏறிவிட்டாள்.

தெருவில் உள்ளோருக்கு மனதில் சிறு ஆறுதல்,அவர்களது பெண் வாழப்போகிறாளே என்று.சிலநாட்கள் அமைதியாகப் போனது.

ஒரு சில மாதங்களிலேயே ஒரு நாள் இரவு அவளை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகத் தகவல் வரவும் எல்லோரும் அடித்துப்பிடித்து ஓடினர்.அன்று அவளுக்காக கண்ணீர் சிந்தாதவர்கள் அந்தத்தெருவில் யாருமே இருந்திருக்க முடியாது.

அவள் மறைந்து சில மாதங்களிலேயே தெருவிலுள்ளோர் அவனைப் பற்றி அடுத்தடுத்து பேசிக்கொண்டது,"அவனுக்கு அரசு உத்தியோகம் வந்துடுத்தாமே,அதுக்குள்ள புதுமாப்பிள்ளை ஆகிட்டானாமே,இரண்டு குழந்தைங்ககூட இருக்காமே".

இதில் அவள் செய்த தவறு என்ன?செய்திருந்தால் என்றைக்கோ இக்கதையின் தலைப்பிற்கான விடை கிடைத்திருக்குமே!