Tuesday, April 2, 2013

தேடினேன்;கிடைக்கவில்லை...!!

அன்று தெருவில் எல்லோரும் பேசிக்கொண்டார்கள்,ரமணியை இன்று பெண்பார்க்க வரப்போகிறார்கள் என்று.கிராமம்தானே,சட்டென்று இவ்விஷயம் தெரு முழுவதும் பரவியது.அதுவுமில்லாமல் தெருவினர் அனைவருமே ஏன் கிராமம் முழுவதுமே ஏதாவது ஒரு வகையில் ஒருவருக்கொருவர் உறவாகத்தானே இருப்பார்கள்.

ரமணி_கலகலப்பான,வெகுளியான‌ பெண்.எல்லோரையும் கிண்டலும், கேளியுமாகப் பேசக்கூடியவள்.கள்ளம்,கபடு தெரியாதவள்.அவளுடைய சிரித்த முகமே இவை எல்லாவற்றிற்கும் சாட்சி.நுனிவரை ரிப்பன் வைத்து பின்னிவிடப்பட்ட குட்டி ஜடை,பாவாடை தாவணியுடன் அழகாக வலம்வருவாள்.

மாப்பிள்ளை வந்து பெண் பார்த்துவிட்டு போனபிறகு "மாப்பிள்ளை அழகாக‌ இருக்கிறார்,பட்டப் படிப்பெல்லாம் படிச்சிருக்கார்,அரசு வேலைகூட வந்திருமாம்,ரமணி கொடுத்து வைத்தவள்,டவுனுக்கு போகப்போகிறாள்" என பேசிக்கொண்டனர்.

சிலர் தங்களுக்குள் ரகசியம் பேசவும் செய்தனர்.ஒரு வீட்டுப் பெயரைச் சொல்லி "அவங்க வீட்டு சந்தில் (கிராமத்தில் உள்ள‌ எல்லா வீட்டிற்கும் இரண்டு பக்கமும் சந்துவிட்டு கட்டுவது வழக்கம்) பையனின் அப்பாவும், அம்மாவும் பையனை ஒருவாறு தேற்றிக் கொண்டிருந்ததாகவும்,"நான்கு பையன்களுக்கு மத்தியில் ஒரே பெண்,நிறைய நகை போடுவார்கள்,சீர்வரிசை செய்வார்கள், பிடிச்சிருக்குன்னு சொல்லு"என்பதாகவும்.

"இதையெல்லாம் வெளிய சொல்லி நல்ல விஷயத்தை தடுத்து நிறுத்தக் கூடாது,நாளடைவில் தானாக சரியாகிவிடும்" எனவும் பேசிக்கொண்டனர்.

விஷயம் தெரிந்த சிலர் "பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பொருத்தம் இல்லாததுபோல தெரியுதே,சரிவருமா!"எனவும் பேசிக்கொன்டனர்.

இவை எல்லாவற்றையும் தாண்டி திருமணமும் முடிந்தது.மாப்பிள்ளையை சம்மதம் சொல்ல வைத்தது எது எனத் தெரியவில்லை.

இரண்டுமூன்று முறை மறுவீடு வந்து போகும்போதே "பையன்,பெண் வீட்டார் யாரிடமும் முகம் கொடுத்து பேசுவதில்லை,பெண்ணைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை" என வெளிப்படையாகவே பேசினர்.

சவுரியின் துணையுடன் நீளமான ஜடை,சேலையில் அவளின் மொத்த‌ உருவமே மாறிப்போனது.அவளின் சிரித்த,கலகலப்பான முகம் காணாமல் போயிருந்தது

புகுந்த வீட்டில் மாமனாரைத் தவிர மற்ற எல்லோருமே அவளை கேவலமாகப் பார்ப்பதாகவும்,ஏளனமாகப் பேசுவதாகவும் பேசிக்கொண்டனர்.

சமயங்களில் அவள் வீட்டிலிருந்து யாராவது போய் அவளை அழைத்து வருவார்கள்,ஒன்றிரண்டு வாரங்கள்,ஏன் ஒன்றிரண்டு மாதங்கள்கூட ஆகும் அவள் மீண்டும் ஊருக்குப்போக.அதுவும் இங்கிருப்பவர்களின் துணையுடன்.

அங்கே அவள் வரவுக்காக யாராவது காத்திருந்தால்தானே வந்து அழைத்துப்போக?இப்படியே இரண்டுமூன்று வருடங்கள் ஓடிப்போனது.

இதற்கிடையில் அவளின் ஒன்றிரண்டு அண்ணன்களுக்கும் திருமணமாகியது.ஒருநாள் அப்பாவால் அழைத்துவரப்பட்டாள்.ஆறு மாதங்களுக்கு மேலாகியும் வழக்கம்போல் யாரும் வந்து அழைத்துப் போகவில்லை.

என்ன பஞ்சாயத்து நடந்ததோ தெரியவில்லை,ஒருநாள் திடீரென காலை வேளையில் அவளது கணவன் வந்தான்.அவன் வராமலே இருந்திருக்கலாம்.விதி யாரை விட்டது!

அன்றே நண்பகல் வேளையில் அவன் வேகவேகமாக பேருந்து நிற்குமிடத்திற்கு விரைந்தான்.சில நிமிடங்களிலேயே அவளும் நீளமான ஜடை,தலை நிறைய பூவுடன்,கையில் ஒரு பையுடன் தெருவில் உள்ள எல்லோரிடமும்,கண்களில் ததும்பும் கண்ணீருடன் போய் வருவதாக சொல்லிக்கொண்டே சென்று பஸ் ஏறிவிட்டாள்.

தெருவில் உள்ளோருக்கு மனதில் சிறு ஆறுதல்,அவர்களது பெண் வாழப்போகிறாளே என்று.சிலநாட்கள் அமைதியாகப் போனது.

ஒரு சில மாதங்களிலேயே ஒரு நாள் இரவு அவளை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகத் தகவல் வரவும் எல்லோரும் அடித்துப்பிடித்து ஓடினர்.அன்று அவளுக்காக கண்ணீர் சிந்தாதவர்கள் அந்தத்தெருவில் யாருமே இருந்திருக்க முடியாது.

அவள் மறைந்து சில மாதங்களிலேயே தெருவிலுள்ளோர் அவனைப் பற்றி அடுத்தடுத்து பேசிக்கொண்டது,"அவனுக்கு அரசு உத்தியோகம் வந்துடுத்தாமே,அதுக்குள்ள புதுமாப்பிள்ளை ஆகிட்டானாமே,இரண்டு குழந்தைங்ககூட இருக்காமே".

இதில் அவள் செய்த தவறு என்ன?செய்திருந்தால் என்றைக்கோ இக்கதையின் தலைப்பிற்கான விடை கிடைத்திருக்குமே!

11 comments:

 1. உண்மை கதையா...?

  கதையாகவே இருக்கட்டும்...

  ReplyDelete
  Replies
  1. கதையாகவே இருந்திருக்கலாம்.வருகைக்கு நன்றிங்க.

   Delete
 2. Nice write up Chitra akka! Touching story.. Feeling bad that its a true incident. :(

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்,கருத்தைப் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றி மகி.

   Delete
 3. தேடினேன்;கிடைக்கவில்லை...

  ReplyDelete
  Replies
  1. இருந்தால்தானே கிடைப்பதற்கு.வருகைக்கு நன்றிங்க.

   Delete
 4. மனசு கனத்துவிட்டது சித்ரா!
  எத்தனைப் பெண்கள் இதுபோல ஒரு வாழ்க்கைக்கு ஆளாகி வாழாமலே முடிந்து விடுகிறார்களோ என்று மனசு பதறுகிறது.வெளியில் தெரிந்த இதைபோல தெரியாமலே போகும் ரமணிகள் எவ்வளவு பேரோ!
  மனம் முழுக்க வருத்தம்.

  ReplyDelete
  Replies
  1. அதையெல்லாம் கணக்கெடுக்க ஆரம்பித்தால் தாங்காது.

   "மனம் முழுக்க வருத்தம்"___எனக்கும்தான்.அதனால்தான் பக்கத்தை உடனே மாற்றிவிட்டேன்.

   Delete
 5. இது உண்மையாக இருந்து விடக் கூடாதே என்று மனம் பதறுகிறது.
  உண்மையாக இருக்காது என்று மனம் நினைக்க ஆசைப் படுகிறது. ஆனால் மஹியின் கருத்தைப் பார்த்தால் உண்மைக்கதையோ என்று தோன்றுகிறது.

  மிகவும் நெகிழ வைத்து விட்டீர்கள் சித்ரா.

  ReplyDelete
  Replies
  1. இப்படி நிறைய பேர் இருக்காங்க.படித்திருந்தால் ஓரளவுக்கு இதிலிருந்து மீண்டிருக்க‌லாம்...

   வருகைக்கு நன்றிங்க.

   Delete
 6. sogamana kathaikal yaarukum pidipathilai..palarathu vaalkaiye sogamaki povathu varuthapada vaikirathu.

  ReplyDelete