Wednesday, May 1, 2013

என்றும் மார்க்கண்டேய‌ன்(யி)...

சில தினங்களுக்கு முன் ராணியைச் சந்தித்தேன்.உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் அவர் புதியவர்தான்.சிறிது நேர நல விசாரிப்புகளுக்குப் பிறகு, அவர் சொல்லிச்சென்ற விஷயம் என்னை பல வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்று அசைபோட வைத்ததுமல்லாமல் இந்தப் பதிவையும் எழுதத் தூண்டியது.

ஆரம்பப்பள்ளி முடிக்கும்வரை கள்ளம்,கபடமில்லாத அந்த வயதில் குட்டிப் பாப்பாக்களாகிய நாங்கள் பாரதியின் காலைக் கனவை நிறைவேற்றினோமோ என்னவோ,மாலைக்கனவை அளவுக்கு அதிகமாகவே நிறைவேற்றினோம்.ஆட்டம்னா ஆட்டம் அப்படியொரு ஆட்டம்.

பிறகு ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்ந்தாச்சு.புது இடம், புது பிள்ளைகள்.வகுப்பில் 60 பேருக்குமேல் உள்ளார்கள்.இவர்களில் யாருடன் விளையாடுவது,பேசுவது!ஒன்றும் புரியாத நிலை.

இப்படியான‌ ஆயிரத்தெட்டு முக்கியமான‌ கேள்விகளுடன் உட்கார்ந்திருந்த எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ரேவதி,ஜோதி இரண்டு பேரின் சுவாரசியமான பேச்சுகள் தானாக காதில் வந்து விழுந்தன‌.

அவர்கள் இருவரும் ஒரே பள்ளியிலிருந்து வந்தவர்கள் என்பது அவர்கள் பேசியதிலிருந்தே புரிந்தது.அவர்கள் படித்த பள்ளியில் இருந்து யார் யாரெல்லாம் இங்கு வந்திருக்கிறார்கள்,எந்தப் பிரிவில் இருக்கிறார்கள் என்றெல்லாம் அலசினார்கள்.

எனக்கு மட்டும் இங்கு யாரையுமே தெரியவில்லையே,இவர்களை மாதிரி என் தோழிகளும் இங்கு வந்து சேர்ந்திருக்கலாமே என்றெல்லாம் படிப்பைத் தவிர மற்ற எல்லா எண்ணங்களும் வந்துபோயின.

பள்ளி திறந்து முதல் நாள் என்பதால் வகுப்பாசிரியை மட்டும் வந்து எட்டிப் பார்த்துவிட்டு,புன்னகைத்துவிட்டு,தன்னை ஒரு சிறு அறிமுகம் செய்துகொண்டு,இன்னும் சிறிது நேரத்தில் வருவதாகச் சொல்லிச் சென்றார்.

பக்கத்து இருக்கைத் தோழிகள் இருவரும் மீண்டும் சலசலவென பேசத் தொடங்கினார்கள்.பிறந்த தேதிகளைப் பறிமாறிக்கொண்ட‌ அவர்கள் தாங்கள் இப்போது ஐந்தாம் வகுப்புதான் படிக்க வேண்டும் எனவும்,ஒரு வயது முன்னதாகவே பள்ளியில் சேர்த்துவிடப்பட்டார்கள் எனவும் கதை (அப்போது அதை உண்மை என்றே நம்பினேன்) அளந்தார்கள்.

அதன்பிறகு பார்த்தால் இப்படி சொல்லாத பிள்ளைகளே இல்லை எனும் அளவிற்கு எல்லோருமே ஏதோ மந்திரம் போலவே இதைச் சொன்னார்கள். என்னைப் போன்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் போல இருந்தது.

ஒருவேளை என்னையும் அப்படித்தான் சேர்த்திருப்பார்களோ!எனக்குத்தான் இது தெரியவில்லையோ என பலவாறாகக் குழம்பினேன்.

மாலை நேரே வீட்டுக்குப் போனதும் அப்பாவிடம் பிறந்த தேதியை வருடத்துடன் கேட்டுத் தெரிந்துகொண்டு யார் கேட்டாலும் ஒரு வருடத்தைக் குறைத்துச் சொல்ல வேண்டுமென எனக்கு நானே தீர்மானம் கொண்டுவந்தேன்.புது பள்ளியில் முதல்நாள் நான் கற்றுக்கொண்டது இதைத்தான்.

அப்போதெல்லாம் நெருங்கிய உறவுகள், தெரிந்தவர்கள் என யார் வீட்டிற்கு வந்தாலும் என் தம்பியைப் பற்றி என்னிடம் விசாரிக்கும்போது 'உங்க சின்ன அண்ணன்' என்றே சொல்வார்கள்.நாங்கள் இருவரும் உருவத்தில் அப்படி இருப்போம். (இப்போது இருப்பதை எல்லாம் வைத்து எடை!! போடக்கூடாது)

எவ்வளவுஊஊ சந்தோஷம்.பின்ன என்னங்க,ஒரு வயதைக் குறைப்பது எப்படி?  என பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது மூன்று வயதைக் குறைத்து சொன்னால் யாருக்குதான் மகிழ்ச்சி வராது.

அதன்பிறகு நாட்கள் உருண்டோடி ஒரு வேலையும் கிடைத்து (யார் கொடுத்தது என்றெல்லாம் கேட்கக்கூடாது,நம்புங்க,அப்போல்லாம் நான் நல்ல்ல்லா படிப்பேங்க) பணியில் அமர்ந்தாச்சு.

பணியில் சேரும் நாளைக் குறிக்கும்போதே ப‌ணிமூப்பு (retirement) அடையும் நாளையும் குறித்துவிடுவார்கள்.அவர்களிடம் போய் ஒரு வருட வயதுக் குறைப்பைப்பற்றி எல்லாம் கதைவிட முடியுமா?....(கதை தொடரும்).

6 comments:

  1. ஒரு வயது குறைவதில் (குறைப்பதில்) இவ்வளவு சந்தோசமா...?

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. கதை அப்படி போகுது.உங்களின் உடனடியான வருகைக்கு நன்றிங்க‌.

    ReplyDelete
  3. @ தனபாலன்: எங்களுக்கு 3 அல்லது 4 மாதங்கள் (வயது) குறைந்தால் கூட சந்தோஷம்தான்!

    ஏங்க, அப்போ குறைச்சலா சொல்லி சொல்லி இப்பவும் அதேபோல சொல்றீங்களா? என்றும் பதினாறு?
    ஆரம்பம் சுவாரஸ்யம்! தொடரட்டும் மார்க்கண்டேயி!

    ReplyDelete
  4. ரஞ்ஜனி,

    தனபாலன் அவர்களுக்கும் சேர்த்து பதிலளித்தது மகிழ்ச்சி.

    "ஏங்க, அப்போ குறைச்சலா சொல்லி சொல்லி இப்பவும் அதேபோல சொல்றீங்களா?"____ ஆமாம், ஆமாம்!!ஒருவேளை நான் உங்களை சந்திக்க நேர்ந்து,நீங்களும் எதேச்சையாக என் பிறந்த வருடத்தைக் கேட்டு,நானும் சொன்னால்,நான் சொல்வதிலிருந்து ஒன்றைக் கூட்டிக்கொள்ளுங்கள்.நீங்க கூட்டிடுவீங்கன்னு தெரிஞ்சு நானும் உஷாராகி இரண்டு வருடங்களை குறைத்து சொல்வேனே!!!

    நான் இங்க யாஆஆர்ட போய்ங்க சொல்றது?

    ReplyDelete
  5. பாவம் தனபாலன் சார். உங்கள் இருவரிடமும் மாட்டிக்கொண்டார் போல் தெரிகிறது.
    நானும் உங்கள் கட்சிதான். எங்கெல்லாம் வயதைக் குறைக்க முடியுமோ அங்கெல்லாம் குறைத்துக் கொள்ள வேண்டியது தான்.
    பணியில் சேர்ந்த பிறகு என்னவாயிற்று தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. "நானும் உங்கள் கட்சிதான்"______நீங்களுமா!!ஹா ஹா ஹா!!!

      அடுத்த பதிவிற்கான உங்கள் ஆவலைப் பார்த்ததும் மகிழ்ச்சி.முடிந்தமட்டும் சீக்கிரமே போட்டுவிடுகிறேன்.வருகைக்கும் நன்றிங்க.

      Delete