Sunday, June 30, 2013

வாங்க, மீண்டும் ஊர் சுற்றுவோம் !! ____(தொடர்ச்சி)


மீண்டும் ஒருமுறை கல்லூரியைச் சுற்றிப் பார்த்துவிடலாம் என‌ பேசிக்கொண்டே இறங்கி நடக்க ஆரம்பித்தோம். இவர் 'அந்தப் பக்கம் பார்க்கிங் லாட்தான் இருக்கு, வேண்டாம்' என்றார்.

'கல்லூரியின் பார்க்கிங் லாட் எப்படி இருக்குன்னு பார்க்க வேணாமா?' என்றேன். அங்கங்கே நிறைய இடங்களில் பார்க்கிங் லாட் இருந்தது.

இவருக்கு கொஞ்சம் கடுப்புதான், வேறு வழியில்லாமல் வந்தார். குறைந்தது மூன்று மணி நேரத்தை ஓட்ட வேண்டுமே!

பார்க்கிங் லாட் தாழ்வான பகுதியில் இருந்தது. கொஞ்சம் தொலைவிலேயே வரிசையாகக் கூடாரங்களும்,மக்கள் நடமாட்டமும் தெரிய ஆரம்பித்ததும் இவர் கண்டுபிடித்துவிட்டார். இந்நேரம் நீங்களேகூட யூகிச்சிருப்பீங்க.

ஆமாங்க, கல்லூரியின் ஒரு பார்க்கிங் லாட்டில் ஒருபகுதியில் ஒவ்வொரு சனிக் கிழமையும் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணிவரை ஃபார்மர்ஸ் மார்க்கெட் உண்டு.

'உனக்கு முதலிலேயே தெரியுமா? சொல்லாம இருக்க மாட்டியே!', என்றார். இரண்டு நாட்களாக இந்த சீக்ரெட்டைக் காப்பாற்ற நான் பட்டபாடு எனக்குத் தானே தெரியும் !!

இந்தளவிற்கு ரகசியத்தைக் காப்பாற்றியதால் இனி  பழக்கம்பெனி விவரங்களைக்கூட என்னுடன் பகிர்ந்து கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இவர் ரூட்டை பிரிண்ட் எடுத்து வைக்க‌ சொன்னபோது, கல்லூரியின் பெயரைப் போட்டதும் இதுதானே முதலில் வந்தது.

(மனித நடமாட்டத்தைக் காணோமே என கவலை கொண்டவர்களுக்கு இந்தப் படங்கள் கொஞ்சம் ஆறுதல் அளிக்கலாம்.)


சரி இந்த ஊர் மார்க்கெட் எப்படி இருக்கும்னு போய் பார்த்தோம். நாங்கள் இருக்கும் ஊரில் உள்ள‌து போலவேதான் இருந்தது.

ஆனால் இங்கு கொஞ்சம் கடைகளும் அதிகம், கூட்டமும் அதிகமாக இருந்தது. நம்ம ஊர் சமோசா கடை ஒன்றும் தென்பட்டது.



தொலைவில் இருந்து பார்க்கும்போதே முதல் கடையில் ஒரு பெரிய வரிசை இருந்தது. ஒருவேளை இந்த ஊரில் நுழைவுச்சீட்டு எதுவும் வாங்க வேண்டுமோ என நினைத்துக் கொண்டே வந்தேன்.

ஆனால் அது சோளக்கதிருக்கான வரிசை என்பது அருகில் வந்த பிறகுதான் தெரிந்தது. வரிசை ஒருபக்கம் என்றாலும் அது வெள்ளை சோளம் என்பதால் நாங்கள்  வாங்கவில்லை.



தேவையான‌ காய்கறிகள், பழங்களுடன் அங்கிருந்து கிளம்பி எதிரிலேயே இருந்த ஒரு பெரிய மேடான மரங்கள் நிறைந்த புல்வெளியில் வந்து சிறிது நேரம் அமர்ந்து, வாங்கிய சோளப் பொரியில் பாதியைக் காலி பண்ணிவிட்டு பிறகு கிளம்பியாச்சு.

வெயிலுக்கு நிறைய பேர் அங்குதான் தஞ்சமடைந்திருந்தனர்.

வளாகத்திலுள்ள மற்றொரு ஃபவுன்டெயின் / Fountain. வெயிலுக்கு அங்கு கொஞ்ச நேரம் நின்றது ஆஹா என இருந்தது.


இப்படியாக ஃபார்மர்ஸ் மார்க்கெட்டை சுற்றிவிட்டு எங்க பார்க்கிங் லாட்டுக்கு வந்து சேர்வதற்குள் எப்படியோ ஒருமணி நேரம் ஓடிவிட்டது.

மீதமுள்ள இரண்டு மணி நேரத்தை ஓட்ட வேண்டும். இந்த வெயிலிலும் நிறைய பேர் தங்கள் ஆளுயர 'பெட்' டுடன் மேலே ஏறுவதும், கீழே இறங்குவதுமாக ஜாகிங் போய்க் கொண்டிருந்தார்கள்.

இடங்கள் அழகாக இருந்ததால் எனக்கும் விருப்பம்தான், கீழேயெல்லாம் போய் இறங்கி, ஏறி நடந்து வர‌. ஆனாலும் அடிக்கடி செய்திகளில் அடிபடும் mountain lion பிரச்சினையால் எங்கும் போகவில்லை.

நல்லவேளை, அங்கிருந்த ஒரு மரத்தினடியில் இருந்த மரப் படிக்கட்டுகளில் போய் உட்கார்ந்தோம். ஏதோ நம்ம ஊர் உணர்வு வந்தது. ஜில்லுன்னு மலைக் காற்றுவேறு வீசியது.

மரத்தின் நிழலைவிட்டு ஒரு அடி நகர்ந்தால்கூட அனல்காற்று அடித்தது. அதனால் மரத்தடியை விட்டு நகரவேயில்லை.

தேன்சிட்டு ,வண்ணவண்ண குருவிகள் எல்லாம் எங்களைச் சுற்றி சர்வ சாதாரணமாக வந்துபோயின. அவைகளின் 'கீச்கீச்' சத்தம் இதமாக இருந்தது.

அங்கு தேன்சிட்டு தேனெடுத்த‌ வீடியோக்களில் ஒன்று, இதோ உங்களுக்காக!!


 கொஞ்சம்கூட பயமே இல்லாமல் எப்படி போஸ் கொடுக்கிறது !!


கொஞ்சம் தொலைவில் சான்பிரான்ஸிஸ்கோ ஏர்போர்ட்டில் அடுத்தடுத்து இறங்கப்போகும் விமானங்கள் கொஞ்சம் தாழ்வாகப் பறந்து சென்றன.

மேலும் கொஞ்சம் தொலைவில் தெரிந்த பசிபிக் கடலில், கப்பல்கள் போய்க் கொண்டிருந்தன. இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்ததால் முக்கியமாக  கணினி இல்லாததால் நேரம் போனதே தெரியவில்லை.

Tuesday, June 25, 2013

வாங்க, மீண்டும் ஊர் சுற்றுவோம் !!



ஒரு சனிக்கிழமை  இங்குள்ள‌ ஒரு கல்லூரிக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு வாய்ப்பு எப்படி கிடைத்திருக்கும் என உங்களுக்கே தெரியும். இப்படியெல்லாம் போனால்தான் உண்டு.

மகளுக்கு தேர்வு மையம் கொஞ்சம் தொலைவிலுள்ள ஒரு கல்லூரியில் போட்டிருந்தனர். ஏறக்குறைய 40 நிமிடம் ஃப்ரீவேயில் போக வேண்டும்.

கல்லூரி, அதுவும் மலைப்பகுதியில் இருக்கிறது என்பதால் நானும் அவர்களுடன் தொற்றிக் கொண்டேன்.

காலை 10:00 மணி தேர்வுக்கு நாங்கள் முதல் ஆளாக 8:15 க்கே போயாச்சு. மீதமுள்ள நேரத்தை எப்படி கழிப்பது? கல்லூரி முழுவதையும் சுத்தோ சுத்துன்னு ஜாலியாக சுத்தினோம்.

கீழே படத்திலிருப்பது மேலேயுள்ள கட்டிடம்தான், கொஞ்சம் அருகில் சென்று பார்த்தபோது..



கல்லூரி ஒரு மலைப்பகுதியில் இருந்தது. சமீபத்தில் கட்டியதுபோல‌. எல்லா கட்டிடங்களும் புதிதாக இருந்தன. மலைப்பகுதி என்பதால் ஒவ்வொரு கட்டிடத்தையும் ஒவ்வொரு இடத்தில் மேலேயும் கீழேயுமாக கட்டியிருந்தது அழகாக இருந்தது.

சுற்றிலும் எங்கு பார்த்தாலும் கொள்ளை அழகாக இருந்தது. பசுமையான மலைகள், பார்க்க ரம்மியமாய் இருந்தது.


 தொலைவில் அமைதியும், ஆழமும் நிறைந்த‌ பசிபிக் பெருங்கடல்!


 வாங்க, அப்படியே உள்ளே இங்குமங்கும் நடந்து போகலாம்.


அதோ தொலைவில் உள்ள fountain / ஃபவுன்டெயினை.......


......அருகில் சென்று பார்ப்போமே! வெயிலுக்கு இதமாக இருக்கும்.


அதோ கூடாரங்களாகத் தெரிகிறதே, அங்கு நீச்சல் சம்பந்தமான போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.


ஒருமணி நேரத்திற்கும் மேலாக சுற்றிவிட்டு சரியாக‌ 9:30 மணிக்கு  தேர்வறைக்கு வந்து சேர்ந்தோம். 9:45 மணிக்கு தேர்வு கண்காணிப்பாளர் வந்து பிள்ளைகளை கைப்பேசியை ஆஃப் செய்யச்சொல்லி சிறிது நேரமும் கொடுத்து எல்லோரையும் உள்ளே அனுப்பினார்.

சரியாக உள்ளே நுழையும்போது ஒரு பையனின் செல்ஃபோன் முழு சத்தத்துடன் சிணுங்கியது. கண்காணிப்பாளரும் சிரித்துக்கொண்டே அதை ஆஃப் செய்யும்வரை காத்திருந்து உள்ளே அனுப்பினார்.

இதுவே எங்கள் ஊராக இருந்திருந்தால்...  அந்த நாட்களை மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டேன். தெரியவில்லை, ஒருவேளை இப்போது மாறியிருக்கலாம்!

பிள்ளைகள் எல்லோரும் உள்ளே சென்று கண்காணிப்பாளர் கதவை மூடும்வரை அங்கேயே நின்றிருந்துவிட்டு காருக்கு வந்தோம். மதியம் 1:00 மணிக்கு மேல்தான் தேர்வு முடியும். இவ்வளவு நேரமும் எப்படி, எங்கே இருப்பது?

அதையும்கூட சரியாக சொல்ல முடியாது. தேர்வறையில் தாமதமாக வந்து சேர்பவர்களும் வந்த பிறகுதான் தேர்வையே ஆரம்பிக்கின்றனர். அதனால் ஆரம்பிக்கும் நேரமும் முடியும் நேரமும் மாறுவது இயல்பாகிவிடுகிறது. பிள்ளைகள் டென்ஷன் இல்லாமல் எழுத வேண்டும், அவ்வளவே.

ஏற்கனவே வெதர் ரிப்போர்டில் வெள்ளி & சனி அதிகபட்சமான வெயில் என்று சொல்லியிருந்தனர். வந்திருந்த பெற்றோர்களில் சிலர் காரில் ஏஸி யைப் போட்டுக்கொண்டு கம்ப்யூட்டருடன் பேசிக்கொண்டிருந்தனர். சிலர் கார் / வேனின் கதவுகளைத் திறந்துவிட்டு படுத்துவிட்டனர். சிலர் கட்டிடத்தின் உள்ளே போய் ஏஸி யில் அமர்ந்துவிட்டனர்.

இவரைப் பார்த்தால் எதையோ யோசிப்பது போலவே தெரிந்தது. என்ன யோசித்திருப்பார்! மேலே சொல்லியுள்ள மூன்றுவிதமான பொழுதைப் போக்குவதில் எதைத் தெரிவு செய்வது என்பதாகத்தான் இருந்திருக்கும்.

இந்த வெயிலில் வீட்டுக்கு போய் திரும்பி வருவதெல்லாம் முடியாத காரியம். மீதமுள்ள நேரத்தை எப்படி ஓட்டினோம் என்று அடுத்த பதிவில் பார்ப்போமே!
                                                                                                                            (தொடரும்)
                                                                                                                                  

ம்..ம்..இந்தப் பழம் இங்கே எப்படி வந்தது !!!!

வெயிலைப் பொருட்படுத்தாமல் இவ்வளவு நேரமும் கூடவே வந்து சுற்றிப் பார்த்த உங்களுக்குத்தான் இந்தப் பழத்தட்டு, எடுத்துக்கோங்க.

வெயிலுக்கு இதமாக இந்த ஏப்ரிகாட் பழங்களை சுவைப்போமே! இது கொஞ்சம் மாங்காய் & பீச் இரண்டின் சுவையிலும் இருக்கும்.        

Monday, June 17, 2013

சிலையல்ல, நான்தான் !!



இந்தக் கட்டிடத்தில் உயிருள்ள ஒன்று இருக்கிறது. முதலில் அது எங்கே, என்னன்னு கண்டுபிடியுங்களேன் !!  ( பயந்துடாதீங்க, அடுத்த திகில் கதைக்கான‌ ஒத்திகைதான் )

இரண்டு வாரங்களுக்குமுன் மகளின் flute recital க்காக ஒரு பள்ளிக்கு சென்றோம். அங்கு பல கட்டிடங்கள் இருந்தாலும் இந்த கட்டிடம் மட்டும் என்னைக் கவர்ந்தது.

செட்டிநாட்டு பங்களா மாதிரி இருக்கவும் 'க்ளிக்'கினேன். நான் 'க்ளிக்'கவும் 'இவர்' வந்து அமரவும் சரியாக இருந்திருக்கிற‌து. கட்டிடத்தின் நிறமும் அவருடைய நிறமும் ஒன்றுபோல் இருக்கவும் அவர் அமர்ந்திருப்பதே தெரியவில்லை.

படத்தைக் காமிராவில் பார்த்தபோது முதலில் நான்கூட அது சிலை என்றே நினைத்தேன். மீண்டும் ஒரு 'க்ளிக்'. இப்போது போஸ் கொஞ்சம் மாறியிருந்தது.எனக்கோ ஒரே குழப்பம்.

வந்து அமர்ந்த சில நொடிகளிலேயே பறக்கும்போதுதான் தெரிந்தது அது ஒரு அழகான புறா என்பது.

கண்டுபிடிக்க முடியாதவர்கள் கீழேயுள்ள படங்களைப் பார்த்துவிட்டு பிறகு மேலேயுள்ள படத்திற்கு போகவும்.


Saturday, June 15, 2013

கொன்றை மலர்கள்



எங்கள் ஊரில் எங்கு பார்த்தாலும் கொன்றை மரங்கள் இருக்கும். 'கொண்ட மரம்'னு பேச்சு வழக்கில் சொல்லுவோம். 'தூங்குமூஞ்சி மரம்'னும் சொல்லுவோம்.அந்த மரத்தின் பூக்கள் படத்திலுள்ள பூக்கள் மாதிரியே, மாதிரியென்ன! இந்தப் பூக்களேதான்,  கொள்ளை அழகாகப் பூத்திருக்கும்.


பள்ளிக்கு போகும்போதும், வரும்போதும் கீழே விழுந்து கிடக்கும் இந்தப் பூக்களைப் பொறுக்கி, எடுத்து வந்து விளையாடுவது வழக்கம். ராஜாராணி விளையாட்டில் சாமரம் இந்தப் பூக்கள்தான்.  கொத்தாக வைத்து மேலே தடவினால் மென்மையாக இருக்கும்.


இங்குள்ள மரமும் அங்குள்ள மரமும் பார்ப்பதற்கு வேறுவேறாய் உள்ளன..எப்படின்னு தெரியல! படத்திலுள்ள கீரை மாதிரியான இலைகளுக்கு பதிலாக பட்டைபட்டையாக இலைகள் இருக்கும். மரமும் பெரிய பெரிய மரங்களாக இருக்கும்.நல்ல நிழல் கொடுக்கும். இங்குள்ளவை குட்டிகுட்டி மரங்களாக வளார்ந்துள்ளன.


ஆக மொத்தத்தில் இங்குள்ள‌வையும் அழகுதான், அங்குள்ளவையும் அழகுதான். ஒரேயொரு வித்தியாசம்தான். அங்குள்ளவை தானாக வளர்ந்திருக்கும். இங்குள்ளவற்றிற்கு போதுமான தண்ணீர் பாய்ச்சி, தேவையான மர,இலை உரம் இட்டு, சமயங்களில் ட்ரிம் பண்ணி அழகாக வளர்க்கின்றனர்.


வழக்கமான புகைப்பட சேமிப்புக்காக...

Friday, June 14, 2013

சார் / மேடம்... தந்தி !!


 
 படம் உதவி__கூகுள்

கடந்த நான்கைந்து நாட்களாக செய்தித் தாள்களில் அடிபடும் ஒரு செய்தி பாலாவுக்கு மலரும் நினைவுகளைக் கொண்டு வந்ததென்னவோ உண்மைதான். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை.

ஆமாம், ஒரு நாளா,இரண்டு நாளா? சுமார் ஒன்றரை வருடங்கள் அவளுடன் பின்னிப் பிணைந்த ஒரு விஷயமாயிற்றே! அவ்வளவு எளிதில் அதை மறக்க முடியுமா?

பாலா திருமண விடுப்பு முடிந்து வேலைக்கு வந்த முதல்நாளே உடன் வேலை செய்யும் தோழிகள் சூழ்ந்துகொண்டு அவளை நலம் விசாரித்தனர்.

விசாரிக்காமல் என்ன செய்வார்கள்? இவளுக்கு சொந்த ஊரில் என்றால் அவருக்கு பக்கத்து மாநிலத்தில் வேலை.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அந்த ஊர் தபால்காரர் / போஸ்ட் மேன் அவர்களைக் கடந்து அலுவலக அறையை நோக்கி நடந்தார். போன வேகத்திலேயே இவர்களை நோக்கி வேகமாக‌ வந்தார், அலுவலக ஊழியர்கள் நான்கைந்து பேர் புடைசூழ.

உடன் வந்தவர்களின் முகத்தில் ஒருவித‌ பதட்டம் இருப்பதை உணர முடிந்தது.

'பாலா யாருங்க? என்றார் போஸ்ட்மேன்.

'ஏன்? நான் தான்தாங்க‌, என்ன விஷயம் '  என்றாள் பாலா.

"உங்களுக்கொரு தந்தி வந்திருக்கு, இதுல கொஞ்சம் கையெழுத்து போடுங்க", என்றார்.

கையெழுத்தைப் போட்டுவிட்டு காகிதத்தை வாங்கியவளிடம் "சீக்கிரம், பிரித்துப் படி" என அனைவரும் ஒரே குரலில் பதட்டமாக சொல்லவும், இப்போது இவர்கள் பதறிய பதறலில் பாலாவுக்கும் லேஸாக உதறல் எடுத்தது.

இதுவரை நமக்கு தந்தி என்பதே வந்ததில்லை.இதென்ன புதுசா இருக்கு. யாருக்காவது சீரியஸ் என்றால்தானே தந்தி வரும் என்பார்கள். அப்படின்னா, நேற்றிரவு ஊருக்குப் போன வீட்டுக்காரருக்கு ஏதும் பிரச்சினையா?, குழம்பினாள்.

பிறகு ஒருவாறாக சமாளித்துக்கொண்டு படித்துவிட்டு,நிம்மதிப் பெருமூச்சு விட்டுவிட்டு, சுற்றி இருந்தவர்களைப் பார்த்து புன்னகைத்தாள்.

வீட்டுக்காரர் நலமுடன் ஊர் போய் சேர்ந்ததைத்தான் தந்தியில் எழுதியிருப்பதாகக் கூறவும், அனைவருக்கும் ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும் கொஞ்சம் வருத்தமும் இருக்கத்தான் செய்தது.

'உன் வீட்டுக்காரர் என்ன இப்படியா செய்வார்? கொஞ்ச நேரத்தில் நாங்களெல்லாம் ஆடிப் போயிட்டோமே' என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

தோழிகளுள் ஒருத்தி "உன் வீட்டுக்காரரிடம் நிறைய பணம் இருக்குன்னு நினைக்கிறேன். இல்லையென்றால் இப்படியெல்லாம் செலவு செய்வாரா?" என்றாள்.

அன்று வேலைக்கு வராதவர்கள்கூட‌ அடுத்த நாள் வந்ததும் விஷயத்தைக் கேள்விப்பட்டு இவளை விசாரித்து, புன்னகைத்தது இன்றும் நினைவில் உள்ளது.

தந்தி வந்த இரண்டொரு நாளில் வீட்டுக்காரரிடம் இருந்து ஒரு கடிதமும் வந்தது. கடிதம் எழுதி, அனுப்பி ... எப்பொழுது போய் சேருவது? கடிதம் வந்துசேர குறைந்தது இரண்டுமூன்று நாட்களாவது ஆகும் என்பதால் விஷயத்தை உடனே தெரியப்படுத்த தந்தியைப் பயன்படுத்தியதாகவும் எழுதியிருந்தார்.
 
இது ஒரு நாளுடன் முடியவில்லை. பாலாவின் கணவர் அந்த மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வேலை மாறுதல் வாங்கிக்கொண்டு வரும்வரை  ஒவ்வொரு பதினைந்து நாள் அல்லது மாதமொரு முறை இது அரங்கேறியது.

அதன்பிறகு போஸ்ட்மேன் தந்தி வந்திருக்கிறது என்று வந்தாலே யாரும் பதட்டமடையாமல், புன்னகைத்தவாறே, பாலாவை நோக்கி கையைக் காட்டுவது வடிக்கையாகிவிட்டது.

'அதானே, சீரியஸானதற்கு மட்டும்தான் தந்தியைப் பயன்படுத்த வேண்டுமா என்ன? முக்கியமான,சந்தோஷமான செய்திக்கும் இதைப் பயன்படுத்தினால் என்ன தப்பு", என இவளும் நினைத்தாள்.

பாலாவுக்கு மலரும் நினைவுகளைக் கொண்டு வந்த அந்த‌ செய்தி இதுதாங்க:

"160 ஆண்டு பழமை வாய்ந்த தந்தி சேவைக்கு ஜூலை 15ல் மூடுவிழா"

அப்படிப்பட்ட தந்தித் துறைக்கு போதுமான வருமானமின்றி மூடுவிழா என்றால் அவளுக்குக் கொஞ்சம் வலிக்கத்தானே செய்யும்!!

Friday, June 7, 2013

விட்டாச்சு லீவுவூஊஊஊ!!

குளுகுளு கோடை!!


நாளை வருகிறேன்.

ம்ம்,வந்துட்டேங்க!!

இங்கு வெள்ளி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை.இனி அதிகாலை சமையலுக்கும் விடுமுறை.அந்த சந்தோஷம்தாங்க!!

தினமும் மகள் படிக்கும் பள்ளி வழியாகத்தான் வாக் போவேன்.எந்நேரமும் பிள்ளைகள் வருவதும் போவதுமாக இருப்பார்கள்.அந்த இடமே களைகட்டி இருக்கும்.

ஆனால் வெள்ளிக்கிழமை காலை அந்த வழியாகப் போன‌போது ஆளரவமின்றி,அமைதியாக இருந்தது ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை. வியாழன் மாலைகூட ஏகக்கூட்டம்.எப்படி இன்று யாருமே இல்லாமல் வெறிச்சோடிப் போயிருக்கிற‌து.

மீண்டும் வழக்கம்போல் பள்ளி திறக்கும்,அதே பிள்ளைகள் கூட்டம் வரத்தான் போகிறது...

 

எதையோ எழுதவந்து ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறேன்.எல்லாம் வெயிலின் தாக்கம்தான்.

Thursday, June 6, 2013

மல(ர்)ரும் நினைவுகள்!!

இங்குள்ள எல்லா படங்களுமே சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு எடுத்தவை.

மேலே உள்ள படம் குட்டிப் பெண்ணாக இருந்தபோது மகள் எடுத்தது.அப்பா பூக்களை எல்லாம் விதவிதமாக 'க்ளிக்'கவும் அவளும் தன் பங்கிற்கு அவளுக்குப் பிடித்தமான பார்பியைக் கொண்டுவந்து ஒரு பூவின் பக்கத்தில் வைத்து எடுத்துக்கொண்டாள்.

அதுவரை single-use camera வையே வைத்திருந்த நாங்கள் முதன்முதலாக Fry's போய்ட்டு வீடியோ காமிரா வாங்கிக்கொண்டு வரும் வழியில் Home depot போய்ட்டு சில பூந்தொட்டிகளுடன் வீட்டிற்கு வந்தோம்.

வீட்டிற்கு வந்ததும் இவர் பூந்தொட்டியிலுள்ள பூக்களை எல்லாம் புது காமிராவில் படங்களாக‌ எடுத்துத் தள்ளினார்.அவற்றில் சில படங்கள் இங்கே!

 
ஒருமுறை பூந்தொட்டிகளை எல்லாம் பேடியோவின் மேல் வரிசையாக அடுக்கி வைத்திருந்தோம். அடுத்த நாளே அபார்ட்மென்டிலிருந்து அவைகளை அகற்றும்படி நோட்டீஸ் வந்துவிட்டது. வேறு வழி இல்லாமல் பேடியோவின் உள்ளேயே வைத்துவிட்டோம்.

நானும் என் பங்கிற்கு மிளகாய்,தக்காளி,புதினா,கொத்துமல்லி எல்லாம் வைத்திருந்தேன்.நிறைய படங்கள் யூஸ் அன்ட் த்ரோ காமிராவில் எடுத்ததால் அவற்றை இங்கே போட முடியவில்லை.

மேலே பதிவிலுள்ள படங்களில் ஒன்றுகூட நான் எடுத்ததில்லை.நான் எடுத்தாலும் நன்றாக வராது.அதனால் அந்தப் பக்கமே போக மாட்டேன்.

சமையல் ப்ளாக் எழுத ஆரம்பித்த பிறகுதான் விருப்பமுடன் படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.


பெரிய பேடியோ இருக்கு.ஆனாலும் அடிக்கடி வீடு மாறுவ‌தால் புதினா, மணத்தக்காளி (அப்படின்னு நான் நெனச்சிட்டிருக்கேன்) தவிர இப்போதைக்கு வேறெதுவும் இல்லை.

Wednesday, June 5, 2013

"ரொட்டி பன்னையா"












 படம் உதவி_கூகுள்

'ரொட்டி,பன்னைஐஐயா(ங்)'!!! இந்தக் குரலைக் கேட்டு மயங்காத பிள்ளைகள் இருக்க முடியாது. தாத்தாவின் பெயரெல்லாம் தெரியாது.ரொட்டிபன்னு தாத்தா என்றால்தான் அனைவருக்கும் தெரியும்.

நான்கு முழ பளீச் வெள்ளை வேட்டி,தொளதொளவென அதே பளீச் வெண்மையில் மேல்சட்டை,  இங்கொன்றும் அங்கொன்றுமாக நரை முடியுடன் ஒரு சிறு குடுமி, ஒட்டிய வயிறு, பூ விழுந்த, கொஞ்சம் மங்கலான பார்வை, காலில் தோல் செருப்பு என ஏழ்மையின் மொத்த உருவமாய் இருப்பார் ரொட்டிபன்னு தாத்தா.

அதிக பட்சமாக தாத்தாவுக்கு நாற்பது அல்லது நாற்பதைந்து வயதிருக்கலாம். வறுமையும், உழைப்பும் போட்டி போட்டுக்கொண்டு அவரது தோற்றத்தை அதிகமாக்கிக் காட்டியது என்பதுதான் உண்மை.மாதம் ஒன்றிரண்டு முறைதான் அந்த ஊருக்கு வருவார்.

ரொட்டிபன்னு தாத்தா இந்த‌ ஊர்க்காரர் அல்ல.ஒருசில ஊர்களைத் தாண்டிதான் இந்த‌ ஊருக்கு வரவேண்டும்.இந்த ஊருடன் திரும்பிவிட‌ மாட்டார், இன்னும் சில ஊர்களுக்கும் சென்று விற்பனையை முடித்து விட்டுதான் திரும்புவார்.எல்லாமே நடை பயணம்தான்.

அவரது தலையில் ஒரு சிறிய செவ்வக வடிவ‌ மரப்பெட்டி,அதன் மேல் பகுதியில் ஒரு நகரும் கண்ணாடியாலான மூடி,அப்போதுதானே அதனுள்ளே இருக்கும் கலர்கலரான ரொட்டிகள் பிள்ளைகளை ஈர்த்து வாங்கத் தூண்டும்.

அந்த சுற்று வட்டாரத்தில் அவரது பெட்டியை மட்டுமே காட்டி 'யாருடையது?' என்றால் 'இன்னாருடையது' என்று சொல்லிவிடுவார்கள். பெட்டியே அவ்வளவு  பிரபலம் என்றால் தாத்தாவைப்பற்றி சொல்லவேத் தேவையில்லை.

விதவிதமான ரொட்டிகள்,பன்னுகளுடன் நிறங்கள் எல்லாமே கண்ணைப் பறிக்காத இளம் மஞ்சள்,இளம் பச்சை,ரோஸ்,நீலம்,சிவப்பு,ஆரஞ்சு,ப்ரௌன் என எல்லா நிறங்களின் முன்னாலும் இளம் சேர்த்துகொண்டால் எவ்வாறு இருக்குமோ அவ்வளவு அழகாக இருக்கும்.

தாத்தா ராகமாக  'ரொட்டி,பன்னையா' என்று சொல்லிக்கொண்டு முன்னால் போக ஒரு இளம் பட்டாளமே திரண்டு அவருக்குப் பின்னால் போய்க் கொண்டிருக்கும்.அவர் போகும் வழியில் உள்ள ஒவ்வொரு வீட்டுப் பிள்ளைகளும் அவருடன் இணைந்துகொள்வார்கள்.

தாத்தா யார் வீட்டுத் திண்ணையில் தலை சுமையை இறக்கி வைப்பார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் பிள்ளைகள் முட்டிமோதி பின் தொடர்வர்.

அதன் பிறகுதான் அந்தத் தெருவே களைகட்டும்.வந்த வேகத்திலேயே எல்லா பிள்ளைகளும் அவரவர் வீட்டுக்கு ஓடி அம்மாவிடம் அடி & உதை வாங்கிக் கொண்டு,அப்படியே காசையும் சேர்த்து வாங்கிக்கொண்டு உதை வாங்கி, அழுத சுவடே தெரியாமல் தாத்தாவை நோக்கி துள்ளிக் குதித்து ஓடி வருவர்.

இதற்கு 'வசந்தி'யும் விதிவிலக்கல்ல. [இந்த முறை கொஞ்சம் உஷாராகி கதையின் நாயகிக்கு ஒரு பெயரும் கொடுத்தாச்சுல்ல‌. யாஆஆரு? சித்ராவா......?]

பேக்கரியிலிருந்து என்னதான் அப்பா விதவிதமான ரொட்டிகள் வாங்கிவந்து தந்தாலும் வசந்திக்கு தாத்தா விற்கும் ரொட்டியின்மேல் எப்போதும் ஒரு கண் உண்டு.

பெரும்பாலான ரொட்டிகளில் ரொட்டியைச் சுற்றிலும் பல் பல்லாக இருக்கும். அவற்றை ஒவ்வொன்றாக முடித்துவிட்டு கடைசியில் ரொட்டி முழுவதையும் காலி செய்வதே ஒரு சுகம்.

'அவையெல்லாம் தவிட்டில் செய்கிறார்கள்,கலர் பௌடரெல்லாம் போட்டு அவை வேண்டாம்' என்று அம்மா,அப்பாவின் மூலமாக சொல்ல வைப்பார். ம்ஹூம்,காதிலேயே விழாது. எல்லோருடனும் சேர்ந்து சுவைத்தால்தானே பிறவிப் பெரும் பயன் அடைந்தது போலிருக்கும்.

யார்வீட்டு திண்ணையிலாவது பெட்டி இறங்கியதும் பிள்ளைகள் கலர்கலரான ரொட்டிகளை வாங்கி சுவைத்துக்கொண்டே வீடு திரும்புவர். அவர்களுடன் தானும் போட்டிபோட்டு சுவைக்காமல் விட்டால் என்னாவது!எவ்வளவு இனிமையான நாட்கள் அவை!!

இப்படியே எவ்வளவு காலத்துக்கு சுகமாக இருப்பது! கூடவே சில கடமைகளும் இருக்கத்தானே செய்கிறது.

ஒருநாள் விடுதிக்கு சென்று படிக்கும் நிலை வந்தது வசந்திக்கு..ஆள்தான் வெளியூரில் இருக்கிறாளே  தவிர அவள் மனதில் எந்நேரமும் , 'ரொட்டிபன்னு தாத்தா வந்திருப்பாரா? யார் யாரெல்லாம் என்னென்ன வாங்கி சுவைத்திருப்பார்கள்' எனும் கேள்விகள் அடிக்கடி எழும்.

விடுமுறைக்கு வீட்டிற்கு வந்ததும் முதல் வேளையாக தாத்தாவிடம் இஷ்டத்திற்கும் வாங்கி சாப்பிட விரும்பினாள்.விடுதியில் இருந்து வந்திருப்பதால் அப்பாவும்,அம்மாவும் எதுவும் சொல்லாமல் அவள் கேட்டதையெல்லாம் முகம் சுளிக்காமல் நிறைய வாங்கித் தருவார்கள் என்பதில் அளவிலா மகிழ்ச்சி.

அவள் நினைத்த மாதிரியே விடுமுறையும் வந்தது.வீட்டிற்கு வந்ததும் ஓடிப்போய் தன் தோழிகளிடம் நலன் விசாரித்துவிட்டு,'ரொட்டிபன்னு தாத்தா வந்தாரா? எனக் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அவர் வந்ததாகவும்,இனி அவர் திரும்பவும் வருவதற்கு குறைந்தது பத்து , பதினைந்து நாட்களாவது ஆகலாம் எனவும் தோழிகள் கூறினர்.

விடுமுறை முடிந்து மீண்டும் விடுதிக்கு செல்லும்வரை தாத்தா வராதது அவளுக்கு ஒரு பெரிய குறையாகவே இருந்தது.

அடுத்த  முறை வீட்டுக்கு வந்தபோது தாத்தா வந்து பல நாட்களாகி விட்ட‌தாக தோழிகள் கூறவும்,அதுபற்றி அம்மாவிடம் கேட்டாள்.

அப்பா அடிக்கடி வேறு சில வேலைகள் விஷயமாக‌ அந்த தாத்தா ஊருக்கு செல்வது வழக்கம்.அவ்வாறு போகும்போது ஒருநாள் என்ன ஏதென்று தாத்தாவைப் பார்த்து வரச் சொன்னாராம் அம்மா.

அப்படி போனபோது தாத்தா,அப்பாவைப் பார்த்ததும் உடைந்துபோய் அழ ஆரம்பித்து விட்டாராம்.

எப்போதும்போல் தாத்தா விற்பனையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் சில 'குடி'மக‌ன்கள் அவரிடம் இருந்த பணத்தைப் பிடுங்க முற்பட்டிருக்கின்றனர்.

தாத்தா தன் உழைப்பின் பலனைக் காக்க போராடியிருக்கிறார்.எதையுமே புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்த‌ அவர்கள் பணத்தைப் பிடுங்கிக் கொண்டதுடன்,நையப் புடைத்தும் அனுப்பியிருக்கின்றனர்.

அப்போது போய் படுத்தவர்தான்,அடுத்து எழுந்திருக்கவே இல்லையாம். வயசாச்சில்ல, முடியல,இனி தேறி வருவது கஷ்டம்தான்,படுத்த படுக்கையாய் இருப்பதாக அம்மா சொன்னார்.

இந்த முறை விடுதிக்கு கிளம்புமுன் நம்பிக்கையிழந்த‌ வசந்தியின் மனதில் இனம் புரியாத ஒரு கவலை,அது அவரது ரொட்டிபன்னை இனி சுவைக்க முடியாது என்பதாலா அல்லது ரொட்டிபன்னு தாத்தாவையே இனி பார்க்க முடியாது என்பதாலா!!!