Sunday, June 30, 2013

வாங்க, மீண்டும் ஊர் சுற்றுவோம் !! ____(தொடர்ச்சி)


மீண்டும் ஒருமுறை கல்லூரியைச் சுற்றிப் பார்த்துவிடலாம் என‌ பேசிக்கொண்டே இறங்கி நடக்க ஆரம்பித்தோம். இவர் 'அந்தப் பக்கம் பார்க்கிங் லாட்தான் இருக்கு, வேண்டாம்' என்றார்.

'கல்லூரியின் பார்க்கிங் லாட் எப்படி இருக்குன்னு பார்க்க வேணாமா?' என்றேன். அங்கங்கே நிறைய இடங்களில் பார்க்கிங் லாட் இருந்தது.

இவருக்கு கொஞ்சம் கடுப்புதான், வேறு வழியில்லாமல் வந்தார். குறைந்தது மூன்று மணி நேரத்தை ஓட்ட வேண்டுமே!

பார்க்கிங் லாட் தாழ்வான பகுதியில் இருந்தது. கொஞ்சம் தொலைவிலேயே வரிசையாகக் கூடாரங்களும்,மக்கள் நடமாட்டமும் தெரிய ஆரம்பித்ததும் இவர் கண்டுபிடித்துவிட்டார். இந்நேரம் நீங்களேகூட யூகிச்சிருப்பீங்க.

ஆமாங்க, கல்லூரியின் ஒரு பார்க்கிங் லாட்டில் ஒருபகுதியில் ஒவ்வொரு சனிக் கிழமையும் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணிவரை ஃபார்மர்ஸ் மார்க்கெட் உண்டு.

'உனக்கு முதலிலேயே தெரியுமா? சொல்லாம இருக்க மாட்டியே!', என்றார். இரண்டு நாட்களாக இந்த சீக்ரெட்டைக் காப்பாற்ற நான் பட்டபாடு எனக்குத் தானே தெரியும் !!

இந்தளவிற்கு ரகசியத்தைக் காப்பாற்றியதால் இனி  பழக்கம்பெனி விவரங்களைக்கூட என்னுடன் பகிர்ந்து கொள்வதாக உறுதி அளித்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இவர் ரூட்டை பிரிண்ட் எடுத்து வைக்க‌ சொன்னபோது, கல்லூரியின் பெயரைப் போட்டதும் இதுதானே முதலில் வந்தது.

(மனித நடமாட்டத்தைக் காணோமே என கவலை கொண்டவர்களுக்கு இந்தப் படங்கள் கொஞ்சம் ஆறுதல் அளிக்கலாம்.)


சரி இந்த ஊர் மார்க்கெட் எப்படி இருக்கும்னு போய் பார்த்தோம். நாங்கள் இருக்கும் ஊரில் உள்ள‌து போலவேதான் இருந்தது.

ஆனால் இங்கு கொஞ்சம் கடைகளும் அதிகம், கூட்டமும் அதிகமாக இருந்தது. நம்ம ஊர் சமோசா கடை ஒன்றும் தென்பட்டது.



தொலைவில் இருந்து பார்க்கும்போதே முதல் கடையில் ஒரு பெரிய வரிசை இருந்தது. ஒருவேளை இந்த ஊரில் நுழைவுச்சீட்டு எதுவும் வாங்க வேண்டுமோ என நினைத்துக் கொண்டே வந்தேன்.

ஆனால் அது சோளக்கதிருக்கான வரிசை என்பது அருகில் வந்த பிறகுதான் தெரிந்தது. வரிசை ஒருபக்கம் என்றாலும் அது வெள்ளை சோளம் என்பதால் நாங்கள்  வாங்கவில்லை.



தேவையான‌ காய்கறிகள், பழங்களுடன் அங்கிருந்து கிளம்பி எதிரிலேயே இருந்த ஒரு பெரிய மேடான மரங்கள் நிறைந்த புல்வெளியில் வந்து சிறிது நேரம் அமர்ந்து, வாங்கிய சோளப் பொரியில் பாதியைக் காலி பண்ணிவிட்டு பிறகு கிளம்பியாச்சு.

வெயிலுக்கு நிறைய பேர் அங்குதான் தஞ்சமடைந்திருந்தனர்.

வளாகத்திலுள்ள மற்றொரு ஃபவுன்டெயின் / Fountain. வெயிலுக்கு அங்கு கொஞ்ச நேரம் நின்றது ஆஹா என இருந்தது.


இப்படியாக ஃபார்மர்ஸ் மார்க்கெட்டை சுற்றிவிட்டு எங்க பார்க்கிங் லாட்டுக்கு வந்து சேர்வதற்குள் எப்படியோ ஒருமணி நேரம் ஓடிவிட்டது.

மீதமுள்ள இரண்டு மணி நேரத்தை ஓட்ட வேண்டும். இந்த வெயிலிலும் நிறைய பேர் தங்கள் ஆளுயர 'பெட்' டுடன் மேலே ஏறுவதும், கீழே இறங்குவதுமாக ஜாகிங் போய்க் கொண்டிருந்தார்கள்.

இடங்கள் அழகாக இருந்ததால் எனக்கும் விருப்பம்தான், கீழேயெல்லாம் போய் இறங்கி, ஏறி நடந்து வர‌. ஆனாலும் அடிக்கடி செய்திகளில் அடிபடும் mountain lion பிரச்சினையால் எங்கும் போகவில்லை.

நல்லவேளை, அங்கிருந்த ஒரு மரத்தினடியில் இருந்த மரப் படிக்கட்டுகளில் போய் உட்கார்ந்தோம். ஏதோ நம்ம ஊர் உணர்வு வந்தது. ஜில்லுன்னு மலைக் காற்றுவேறு வீசியது.

மரத்தின் நிழலைவிட்டு ஒரு அடி நகர்ந்தால்கூட அனல்காற்று அடித்தது. அதனால் மரத்தடியை விட்டு நகரவேயில்லை.

தேன்சிட்டு ,வண்ணவண்ண குருவிகள் எல்லாம் எங்களைச் சுற்றி சர்வ சாதாரணமாக வந்துபோயின. அவைகளின் 'கீச்கீச்' சத்தம் இதமாக இருந்தது.

அங்கு தேன்சிட்டு தேனெடுத்த‌ வீடியோக்களில் ஒன்று, இதோ உங்களுக்காக!!


 கொஞ்சம்கூட பயமே இல்லாமல் எப்படி போஸ் கொடுக்கிறது !!


கொஞ்சம் தொலைவில் சான்பிரான்ஸிஸ்கோ ஏர்போர்ட்டில் அடுத்தடுத்து இறங்கப்போகும் விமானங்கள் கொஞ்சம் தாழ்வாகப் பறந்து சென்றன.

மேலும் கொஞ்சம் தொலைவில் தெரிந்த பசிபிக் கடலில், கப்பல்கள் போய்க் கொண்டிருந்தன. இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்ததால் முக்கியமாக  கணினி இல்லாததால் நேரம் போனதே தெரியவில்லை.

8 comments:

  1. அழகான ஃபவுன்டெயின்...

    ரசிக்க வைக்கும் ரசனை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்து படித்ததற்கும்,வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

      Delete
  2. பொண்ணை எக்ஸாம் ஹாலுக்கு அனுப்பிட்டு அப்பாவும் அம்மாவும் ஜாலியா 3 மணி நேரம் செலவு பண்ணியிருக்கீங்க! :) :) பார்மர்ஸ் மார்க்கட்டையும் பாத்துட்டு வந்துட்டீங்க! என்ஸாய்! :))))

    ReplyDelete
    Replies
    1. ஆ, திருஷ்டி வந்தாச்சு. அடுத்த தடவ மூச்...

      Delete
  3. தேன்சிட்டு வீடியோ அழகா இருக்கு, அனைத்துப் புகைப்படங்களும் அருமை!

    ReplyDelete
  4. அப்பாடா! உங்கள் ஊரில் மனிதர்களைப் பார்த்தது ஆறுதலாக இருந்தது!எனக்காகவே இந்தப் புகைப்படம் போட்டதுக்கு நன்றிங்கோவ்!

    போன பதிவுக்குப் பின்னூட்ட பதிலில் 'பெட்' டுடன் ஜாகிங் என்று எழுதியிருந்தீர்கள். இந்தப் பதிவிலும் அதைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். விவரமாக எழுதவும்.

    அதென்ன mountain lion?

    அடுத்தடுத்த பதிவுகளுக்கு தலைப்பா?


    ReplyDelete
    Replies

    1. உங்களுக்காகத்தான் இந்த உயிருள்ள புகைப்படங்கள்! இங்குள்ளவர்கள் அவர்கள் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டிகளுடன் ஜாகிங் போவதைத்தான் எழுதியுள்ளேன். எழுதும்போதே நினைத்தேன்,pet யும் சேர்த்து எழுத,மறந்துட்டேன்.

      மௌண்டன் லயன்___சாதாரண சிங்கத்திலிருந்து கொஞ்சம் வித்தியாசமான விலங்கு. 'கூகுள் இமேஜ்'ல போட்டுப்பாருங்க.இது எப்போதாவது ஊருக்குள் வந்துவிட்டதாக செய்திகளில் வரும்.அந்த பயம்தான்.

      'அடுத்தடுத்த பதிவுகளுக்கு தலைப்பா?'_____நீங்களும் இப்படியே ஏகப்பட்ட தலைப்புகள் சொல்லிட்டீங்க,நானும் அசைந்து கொடுக்கற மாதிரி தெரியல, ஹா,ஹா,,,

      Delete