திங்கள், 12 ஆகஸ்ட், 2013

அஸ்தமன அரங்கேற்றம்

ஒரு நான்கு நாட்களுக்கு நாங்கள் தங்கப்போவது மூன்றாவது மாடி என்று தெரிந்ததுமே மனதிற்குள் ஒரு சந்தோஷம். தங்கப்போகும் அறை கிழக்குப் பக்கமாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். அதற்கு ஒரு காரணமும் உண்டு. வாஸ்து சாஸ்திரத்தை சொல்ல வரலீங்க. கிழக்குப் பக்கம் அழகான மலைகள் இருந்தன. அதில் சூரிய உதயத்தைப் பார்த்து ரசிக்கலாமே என்ற ஆசைதான்.

அப்பார்ட்மென்டில் எப்போதும் மாடியிலேயே எங்களுக்கு வீடு அமையும். இந்த முறை விரும்பி கீழ்த்தளத்தை பெற்றுக்கொண்டோம். சூரியன் உதயம், மறைவு என எதுவுமே சரியாகத் தெரியாது. முன்பின் உள்ள வீடுகள் சொல்லி வைத்தாற்போல் சரியான நேரத்தில் அக்காட்சியை மறைத்துவிடும்.

சரி வெளியிடத்திற்கு வந்தாலாவது பார்க்கலாம் என்றால், கிடைத்ததோ மேற்கு பக்க அறை. அதனாலென்ன, சரி பரவாயில்லை, சூரியனின் மறைவைப் பார்க்கலாமே என மனதைத் தேற்றிக்கொண்டேன். (எதெதுக்குதான் கவலைப்படுவது என ஒரு வரைமுறையே இல்லாமப் போச்சு. அவரவர் கவலை அவரவர்கட்கு)

வழக்கம்போல் மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வானத்தில் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, நீலம், ஊதா என நிறங்கள் கலந்துகட்டி அடித்தன.

கொஞ்சம்கொஞ்சமாக சூரியன் இறங்கிக்கொண்டிருந்தது. சரியாக அஸ்தமிக்கும் நேரத்தில் ஒரு பனைமரம் குறுக்கே வந்ததுபோல் தெரிந்தது.  அப்போதுதான் கவனித்தேன், அங்கே ஏகப்பட்ட பனைமரங்கள் இருந்ததை!

சரி, பனமரம் நகராது, சூரியனாவது இப்படி அப்படி நகர்ந்து (அறிவியல் கொள்கை, கோட்பாடுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு) போஸ் கொடுக்கும் எனப் பார்த்தால், ம்ஹூம், நடக்கவேயில்லை, ஸாரி நகரவேயில்லை.

கண்டிப்பாக பனைமரம் விட்டுக்கொடுக்கப் போவதில்லை, அதாவது நகரப் போவதில்லை, சூரியனும் விடாப்பிடியாக பிடிவாதம் பிடித்தது. எவ்வளவு நேரம்தான் நானும் படங்கள் எடுக்காமல் காத்திருந்து வீம்பு பிடிப்பது? எல்லோருமே பிடிவாதமாக இருந்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எனவே நான்தான் கொஞ்சம் இறங்கிவந்தேன். (எனக்குத்தான் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொஞ்சம் அதிகமாச்சே, ஹி ஹி)

ஒன்றிரண்டு படங்களை எடுத்துவிட்டு பார்த்தபோது, "அட,இதுவும் அழகாத்தானே இருக்கு", என ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். வேறு வழியில்லை, ரசித்துதான் ஆகவேண்டும். பிறகென்ன, மளமளவென படங்கள் எடுத்தாயிற்று.அவற்றுள் சிலவற்றை மட்டும் வரிசைக்கிரமமாக இங்கே பதிந்து வைக்கிறேன்.

எனக்கென்னமோ படங்களைப் பார்த்தால், 'சிறு துரும்பும்...' என்ற பழமொழிக்கேற்ப, இவ்வளவு பலசாலியான சூரியன் ஏதோ பனைமரத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு தன்னுடைய அஸ்தமன நாடக‌த்தை அரங்கேற்றியது போலவே இருந்த‌து.


8 கருத்துகள்:

 1. //சூரியனாவது இப்படி அப்படி நகர்ந்து// பேராசை. ;)

  படங்கள் எல்லாம் சூப்பரோ சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'பேராசை'___ம்ம்ம்..கேள்விப்படாத வார்த்தையா இருக்கே. அருஞ்சொற்பொருளில் பார்த்துவிட்டு வருகிறேன்.

   நீக்கு
 2. எங்க ஊர் சன்செட் எம்புட்டு அயகா:) இருக்கு பார்த்தீங்களா? ;)))))

  ஆக்ச்சுவலி, சூரிய அஸ்தமனத்துடன் இப்படி மரங்கள் இருப்பது வெறும் சூரிய அஸ்தமனத்தை விட அழகாக இருக்கும், இதுக்கிறது! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. USA ல எங்கெலாம் பனைமரங்கள் வளரும்னு ஒரு லிஸ்ட் தயார் பண்ணிட்டு வந்து ஊர் பெயரை எழுதறேன்.

   நீக்கு
 3. " அந்தி வானம் அரைக்கும் மஞ்சள் " அலை பாயுதே படத்தில் வரும் பாட்டு உண்மை என்று சொல்லுகிறது உங்கள் போட்டோக்கள்.
  வாழ்த்துக்கள்......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடலுடன் இணைத்து ரசித்துப் பார்த்ததற்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க‌.

   நீக்கு
 4. சூரியன் பனைமரங்களின் பின்னணியில் கண்ணாமூச்சி ஆடுவதுபோல இறக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறும் மேகங்கள் எத்தனை அழகு! கவிஞராக இருந்தால் கவிதை பாடலாம். கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரமாயிற்றே!

  ஹலோ! யாரது? எங்க ஊர் சன்செட் என்று சொந்தம் கொண்டாடுவது? எங்க ஊர்லேயும் சன் செட்டும் ஆகும்,ரைஸ்ஸும் ஆகும்! (ச்ச்சும்மா!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க X ஊர் சன்செட்டைத்தான் சொல்றாங்க. இப்படியெல்லாம் பயமுறுத்தினா என்னாவது! ஏதோ போனாப்போகுதுன்னு நீங்களா பாத்து, மனசு வச்சு (சூரியனை) அனுப்பி விட்டாதான் அடுத்த நாள் எங்களால் ரசிக்க முடியும்.

   நீங்க ரசித்து எழுதியதே கவிதை மாதிரிதான் இருக்கு.

   நீக்கு