Thursday, September 26, 2013

நடக்குதான்னு பார்ப்போமே !!

எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் பேசி முடித்துவிட்டு  'சரி பத்திரமா இருந்துக்கோ, வச்சிடட்டுமா?', தொலைபேசியின் இந்தப்பக்கம்.

'சரிம்மா, அம்மா அம்மா, இருஇரு, சொல்ல மறந்துட்டேனே, வந்து', தொலைபேசியின் அந்தப் பக்கம்.

'சரிசரி சொல்லு', ஆவலில் இந்தப் பக்கமிருந்து.

'அம்மா, இப்போ நான் நிறைய வெயிட் குறைஞ்சுட்டேன்', அந்தப் பக்கமிருந்து.

'அப்படியா,எப்படி?', இது தெரிந்தால் நாமும் அதைப் பின்பற்றி (உடல்) எடையைக் குறைக்கலாமே என்ற நப்பாசையில் இந்தப் பக்கமிருந்து நான்.

"நாங்கள் (தோழிகளுடன்) சாப்பிடுமுன்பும் சாப்பிட்ட பிறகும் வளாகத்தை சுற்றி வந்து போகிறோம், அதனால்தான்", அந்தப் பக்கமிருந்து மகள்.

என்னதான் வளாகத்தை சுற்றிசுற்றி வந்தாலும்...ம்... ஒரே நாளில் வெயிட் குறைந்திருக்கிறாள் என்றால்? சாப்பாட்டைப் பொறுத்தவரை பழகிய, பிடித்த சாப்பாடுதான்.

இது ஏதோ பார்த்து ஆறு மாதத்திற்குப் பிறகான அல்லது ஒரு வருடத்திற்கும் மேலான தொலைபேசி உரையாடல் அல்ல.

ஞாயிறு நண்பகல் மகளை விடுதியில் விட்டுவிட்டு வந்து, மீண்டும் திங்கள் மாலை விடுதிக்கு சென்று பார்த்துவிட்டு, செவ்வாய் கிழமை மாலை வீட்டுக்கு வந்ததும் தொலைபேசியில் எனக்கும் மகளுக்குமிடையில் நடந்த ஒருநாள் பிரிவின் உரையாடல்தான் மேலேயுள்ளவை.

மகள் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறாள் என்பதில் மகிழ்ச்சி. ஆனால் வீட்டிலிருந்தே போய் வருகிறாள் என்பதாக இருந்தால் மகிழ்ச்சி பல மடங்கு எகிறி இருக்கும்.

இப்போது  தொலைவிலுள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். அதனால் சிறு குடும்பமாக இருந்த எங்கள் வீடு இப்போது மிகச்சிறு குடும்பமாகிவிட்டது.

எப்படியும் பக்கத்து ஊரில் உள்ள கல்லூரியில்தான் சேர்த்துவிடுவார் என்றே நம்பியிருந்தேன். தினமும் வீட்டிலிருந்தே அல்லது விடுதி என்றாலும் வார இறுதி நாட்களில் வீட்டிற்கு வந்து செல்வாள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் ஏப்ரல் மாதத்தில் என் ஆசை நிறைவேறாது என்று தெரிந்தவுடன் ஏகக் குழப்பத்தில் இருந்தேன்.

மகள் விடுதிக்கு சென்றுவிட்டால் இங்கே எப்படி இருப்பது என நான்கைந்து மாதங்களாகவே கொஞ்சம் மன உளைச்சலில்தான் இருந்தேன்.

விடுதியில் சேர்த்த அன்று முதல்நாள் சிறிது சஞ்சலத்துடனே நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பி வந்தோம்.

அடுத்தநாள் விடுதிக்கு போனபோது எங்களை சந்திப்பதற்கு மகளுடன் இரண்டு புது தோழிகளும் (ஹாங்காங் & வியட்நாம்) உடன் வந்தனர். மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இப்போது ஓரளவிற்கு மனபாரம் குறைந்தாற்போல் இருக்கிற‌து.

முன்பு எங்களுக்குள் நிறைய சின்னச்சின்ன செல்லச் சண்டைகள் அடிக்கடி வரும். அப்பா எப்போது வீட்டிற்கு வருவார் எனப் பார்த்துக்கொண்டே இருப்பாள். வந்ததும் இவரையே நாட்டாமை ஆக்கி, நல்ல தீர்ப்பை சொல்லச் சொல்லி, சமயங்களில் தீர்ப்பை மாற்றி சொல்லச்சொல்லி, பயங்கர காமெடியா இருக்கும்.

முன்பெல்லாம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் கதவுக்குப் பின்னாலேயே பையை வைத்துவிட்டு, பிடித்த வீட்டுப்பாடமாக இருந்தாலோ அல்லது மாலை விளையாட்டு வகுப்புக்கு போவதாக இருந்தாலோ அங்கேயே உட்கார்ந்து வீட்டுப்பாடம் எழுத ஆரம்பித்து, ஒவ்வொரு பாடம் முடிந்ததும் முடித்த இடத்தில் வைத்துவிட்டு, கொஞ்சம் நகர்ந்து அடுத்த பாடத்தை ஆரம்பித்து,... இப்படியே பையும் மகளும் சாப்பாட்டு மேசை வரை அல்லது படுக்கையறை வரை பயணித்திருப்பார்கள்.

எழுதி முடிக்கப்பட்ட தாள்கள் வளைந்து நெளிந்து (எங்க ஊர் பக்கம் உள்ள சாலை மாதிரி) போயிருக்கும். எல்லாவற்றையும் முடித்தபிறகு அவளாகவே வந்து எடுத்து அடுக்கி வைத்துக்கொள்வாள். சிலசமயம் இவர் கதவைத் திற‌ந்ததும், பார்த்து உள்ளே வரவேண்டியிருக்கும்.

இவளுடைய பொருள்களையெல்லாம் எவ்வளவுதான் எடுத்துயெடுத்து வைத்தாலும் மீண்டும் அவற்றை எங்கும் பார்க்கலாம். ஆனால் இப்போது ஊரிலிருந்து வந்ததும் வேக்யூம் போட்டுவிட்டு இரண்டு நாட்களாகியும் களைத்துப்போட ஆளில்லை. வைத்த பொருள்கள் வைத்த இடத்திலேயே இருப்பதால் எனக்குமே போரடிக்குது.

இவரிடம் சொல்லியிருக்கிறேன், 'நீங்களாவது களைச்சுப் போடுங்க'னு. வாக்குறுதி கொடுத்திருக்கிறார், பார்க்கலாம் நடக்குதான்னு!

16 comments:

 1. சின்னச்சின்ன செல்லச் சண்டைகள் - அழகிய நினைவுகள் - புரிகிறது...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க.

   Delete
 2. Can understand your feelings Chitra Akka...you are missing her terribly! ... She will also be in the same state, time will heal both of you and the Dad, don't worry!

  ReplyDelete
  Replies
  1. உங்கஊர் பக்கம்தான் மகி.நினைத்தால் வந்து பார்த்துவிட்டு வரலாம்.கூடவே இருந்துட்டு..கஷ்டமாதான் இருக்கு. ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி மகி.

   Delete
  2. நேற்றே கேட்க நினைத்தேன், எங்கூரு காலேஜான்னு! லேப்டாப் கைவசம் இல்லாததால் கேட்க முடிலை! :) நீங்க இன்று போட்டிருக்கும் மால் ஃபோட்டோஸ் பாத்தால் எனக்கு பரிச்சயமான இடமாத் தெரிலையே...அவ்வ்வ்வ்வ்!

   எங்கூருக்கு பக்கம்னு சொல்றீங்க, முன்பே தெரிந்திருந்தால் இந்த முறை மீட் பண்ணிருக்கலாமே!! சமையல் ப்ளாக்ல ஒரு முறை என் மெயில் ஐடி குடுத்த நினைவிருக்கு, ஒரு மெயில் தட்டி விடுங்க. வாய்ப்புக் கிடைக்கையில் சந்திப்போம் சித்ராக்கா! :)

   Delete
  3. ரொம்பப் பக்கமில்லை,கொஞ்சம் தொலைவில் உள்ள "ஆத்துப்பக்கம்" மகி. உங்க மெயில் ஐடி வேர்ட்ப்ரஸ் ப்ளாக்ல இருக்கு. பிஸியாக இருந்ததால் எதுவும் முடியவில்லை.சான்ஸ் கிடைக்கும்போது சந்திக்கலாம். எழுதும்போதே நல்லாருக்கு.

   புது இடம் என்பதால் எல்லா இடங்களுக்கும் கொஞ்சம் பார்த்து பார்த்துதான் போகவேண்டி இருந்தது.

   இந்தப் படம் மொரீனோ வேலி மாலில் எடுத்தது.போயிருக்க மாட்டீங்கன்னுதான் நினைக்கிறேன்.

   Delete
  4. ஆத்துப்பக்கமா?? அது எங்க வீட்டிலிருந்து 50 மைலாச்சே! அதான் எனக்குப் பரிச்சயமானதாத் தெரியலை! :)

   இந்த முறை வரும்போது சொல்லியிருந்தீங்கன்னா கட்டாயம் சந்திச்சிருக்கலாம்..ஹ்ம்ம்ம்!! சரி, பரவாயில்லை. 4 வருஷங்கள் படிக்கப் போறாங்கள்ல..அதற்குள் சந்திச்சிருவோம்! :)

   Delete
  5. மெயில் ஐடியை பாத்ததுமே டக்குன்னு நீக்கிட்டேன்.அதுல என்ன இருந்துச்சுன்னுகூட பாக்கல.

   இவர் ,ஒரு வேலை என்றால் அதை மட்டுமே முடித்துவிட்டு, அடுத்து வீட்டில்தான் நிற்பார். இன்னும் இவ்வளவு நாட்கள் இருக்கிறதே, முடிந்தால் பார்க்கலாம் மகி.

   Delete
  6. //பாத்ததுமே டக்குன்னு நீக்கிட்டேன்.அதுல என்ன இருந்துச்சுன்னுகூட பாக்கல.// :) மெயில் ஐடி-யையுமே கூட பார்க்கலையா?? :)
   ஓகே, நாம சந்திக்கணும்னு இருந்தால் பார்ப்போம் சித்ராக்கா! ;)

   Delete
  7. வேர்ட் ப்ரஸ்ஸில், உங்கள் ஒவ்வொருவரின் பின்னூட்டத்திலும் இருந்து மெயில் ஐடி எனக்கு வந்துவிடும்.அதனால ஐடிதான் இருக்கேன்னு பட்டுனு டெலீட் பண்ணிட்டேன். பிறகுதான் பின்னூட்டத்தைப் படிக்காம விட்டது ஞாபகத்திற்கு வந்தது.பார்க்கலாம், மீட் பண்ணாமலா போய்டுவோம்!

   Delete
 3. குழந்தைகளை விடுதித்யில் விட்டு விட்டு வரும்போது நாம் படும் துயரம் இருக்கிறதே. .....
  எனக்கும் அந்த னுபவம் உண்டு. ஆனாலும் அவர்களுடைய வளமான எதிர்காலம் குறித்து தான் என்று சமாதானமானேன்.
  ஆனால் ஒரே நாளில் எடை குறைவதா?....இது கொஞ்சம் ஓவர் தான்.
  சரி நிறைய பதிவுகள் எழுதி உங்களை நீங்களே டைவர்ட் செய்து கொள்ளுங்கள்....
  உங்கள் மகளிற்கு என் வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கா!நீங்க சொல்வது போலவேதான் இவரும் சொன்னார்.ஆறாம் வகுப்பிலேயே என்னை விடுதியில் போட்டதால் இப்போதும் எங்க அம்மாவிடம் சண்டை போடுவேன்.எனக்குப் பிடிக்காத ஒன்று இந்த விடுதியில் தங்குவது.

   இப்போது கொஞ்சம்கொஞ்சமாக தெளிவாகி வருகிறேன்.வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

   Delete
 4. இவ்வளவு நாட்கள் கூட இருந்துவிட்டு இப்போது மகளைப் பிரிவதென்றால் கொஞ்ச நாட்களுக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். சீக்கிரமாக உங்களவரை அந்த ஊரில் வேலை பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள்.:) உங்கள் மகளும், அவள் வீட்டுப்பாடம் செய்யும் அழகும் கண் முன்னே வந்து போயின.
  உங்கள் மகளுக்கு எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.
  நிறைய எழுதுங்கள். மனசு லேசாகும்.

  ReplyDelete
  Replies
  1. இருக்கும் வேலையை விட்டுவிட்டு போவது கஷ்டம்தான்.அதுவுமில்லாம இங்கேயே இருந்து பழகியாச்சு.

   அவள் விரும்பிதான் போயிருக்கிறாள்.அவள் வேலையில் அவள் பிஸியாகிவிட்டாள். அடுத்த நான்கு வருடங்கள் எப்போதுதான் முடியுமோ என்றிருக்கிற‌து.நான் கொஞ்சம் தைரியமாகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

   வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

   Delete
 5. ungal pathivai padithen..thaaikum saeikumana muthal pirithal..intha pirithal magal ungal mel vaithirikum paasathai anbai kaatum..ningale aachiryapatriupirgal..thaai ku epothum than pillai kaikulanthai than..சிறு குடும்பமாக இருந்த எங்கள் வீடு இப்போது மிகச்சிறு குடும்பமாகிவிட்டது// nangalum unga kudumbam than ;) america vantha unga veetuku than varuven..aama soliputen :D :P

  ungal iruvarukumana kaneer moligalai patri kuripidavillye ? :))

  ReplyDelete
  Replies
  1. என்ன ஆச்சு? தத்துவ முத்துக்களா வந்து விழுது. குழந்தைகளை வளர விட வேண்டியது நம் கடமை இல்லையா."nangalum unga kudumbam than ' _____மகிழ்ச்சிங்க.

   " america vantha unga veetuku than varuven..aama soliputen " ________ நாங்க மட்டும் யாரு ? அதுக்குள்ள‌ ஜாகையை மாத்திடுவோமில்ல !

   Delete