Tuesday, October 22, 2013

தீபாவளி ஸ்பெஷல் !!'தீபாவளி ஸ்பெஷல்' என்றதும் ஏதோ பலகாரங்களை எல்லாம் தனித்தனியாக ஸிப்லாக் கவரில் அல்லது பேப்பர் லன்ச் பேகில் போட்டு அவரவர் பேரெழுதி ஒரு கூடையில் போட்டுக் கொண்டுவந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்டுவேன் என்று நினைத்திருந்தால்..... ஹா.. ஹா...ஹா.....

அந்த நாளில் ஒவ்வொரு வார, மாத இதழும் தீபாவளி மலர் ,பொங்கல் மல்ர்..... என ஒவ்வொரு பண்டிகையின்போதும் சிறப்பு மலர்களை வெளியிடுவதுபோல், தீபாவளியை முன்னிட்டு என்னுடைய வலையிலும் ஏதாவது செய்து தீபாவளிக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் உங்களை உள்ளிழுக்க வேண்டுமே என்ற (நல்ல‌) எண்ணத்தில் உருவானதுதான் இந்த 'தீபாவளி ஸ்பெஷல்' !

எங்க ஊர் தீபாவளி !!

இது நான் பிறந்து வளர்ந்த ஊரில், எனக்கு முதன்முதலில் அறிமுகமான, தீபாவளி பற்றிய பகுதியாகும். ஆடம்பரமில்லாத, பளபளப்பில்லாத‌  தீபாவளி இது. எங்கள் ஊர் ஒரு சிறிய கிராமம். இங்கு தீபாவளியை எப்படி ஆரம்பிப்பார்கள் என்று பார்ப்போமே !

இப்போது பல மாற்றங்கள் ஏற்பட்டு 'எப்படி கொண்டாடுகிறார்கள்' என்று எனக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஒரு தடவையாவது தீபாவளி சமயமாகப் பார்த்து ஊருக்குப் போய்வர வேண்டும். இது எனக்கு மட்டுமல்ல, பலருடைய ஆசையும் இதுவாகத்தான் இருக்கும்.

தீபாவளி வருவதற்கு ஒரு மாதம் முன்னரே எங்கள் ஊரில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பட்டாசுகளின் ஒலி கேட்க ஆரம்பித்துவிடும். அது பெரிதாக ஒன்றுமில்லை, 'பொட்டு படாசு' என்று எங்களால் சொல்லப்படும் ஒரு வட்டமான, சிறிய அட்டை டப்பாவில், சிவப்பு நிறத்தில் வரும் குட்டிகுட்டி பட்டாசுகள்தான் அவை.

பிறகு இது கொஞ்சம் கொஞ்சமாக, தீபாவளி நெருங்க நெருங்க,....கம்பி மத்தாப்பூ, தரை சக்கரம்,லக்ஷ்மி வெடி,......... என நீளும்.

பொங்கலைவிட பெரிய அளவில் கொண்டாடமாட்டார்கள். இருந்தாலும் பெரியவர்களைவிட பிள்ளைகள்தான் ஆர்வமுடன் இருப்பார்கள். எல்லாம் பட்டாசு படுத்தும் பாடுதான்.

தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது 'நோன்பு சட்டி' என்று சொல்லப்படும் மண் சட்டிதான். விற்பனைக்கு கொஞ்சம் தொலைவிலுள்ள‌ ஊரிலிருந்து, நிறைய மண் பாத்திரங்களை மாட்டு வண்டியில் வைத்தும், தலையில் ஏகப்பட்ட பானைகள் & சட்டிகளை கயிறு கொண்டு லாவகமாக கட்டி உடையாமலும் எடுத்து வருவார்கள்.

பானைகளை தலையில் வைத்து எடுத்து வருவது எங்களுக்கெல்லாம் ஆச்சரியமான விஷயம். அன்று என்னிடம் காமிரா இல்லை. இருந்திருந்தால் படமெடுத்து பொக்கிஷமாகப் பத்திரப்படுத்தியிருப்பேன்.

இவற்றில் பிரதானமான 'நோன்பு சட்டி' சாதாரண சட்டியைவிட பெரிய அளவில் இருக்கும். ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் இரண்டுமூன்று சட்டிகள் வாங்குவார்கள்.

ஒன்று அடுப்பில் வைத்து வெல்லபாகு காய்ச்சுவதற்கும், இன்னொன்றில் இடித்த புது பச்சரிசி மாவு வைத்து அதில் வெல்லபாகை ஊற்றிக் கிண்டி வைப்பதற்கும், நோன்பு சம்பந்தமான பொருள்களை வைப்பதற்கென மற்றொன்றும் வாங்கப்படும். இவற்றை மூடுவதற்கென‌ மண் தட்டுகளும் வாங்கப்படும்.

மண்பாத்திரங்களைக் கொண்டுவருபவர் எடுத்ததுமே ஒவ்வொன்றையும் 'யானை விலை' சொல்லுவார். வாங்கப் போகிறவர்கள், விற்பவர் சொல்லும் விலையில் பாதியில் இருந்துதான் பேரத்தை ஆரம்பிப்பார்கள் என்று பாத்திரக்காரருக்கு நன்றாகத் தெரியும். அதனால் விலையை ஏற்றித்தான் சொல்லுவார். இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

இப்படியும் அப்படியுமாக பேரம்பேசி  "உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம், இதுதான் ஒரே விலை" என்று ஒரு விலையில் கொண்டு வந்து நிறுத்துவார் வயதான ஒரு அம்மா அல்லது பாட்டி. அதன்பிறகு மளமளவென ம‌ண் பாத்திரங்கள் காலியாகும்.

ஒவ்வொரு அம்மாவும் சட்டிகளை எடுத்து அங்குள்ள வயதான பாட்டியிடம் காட்டி, ஓட்டை எதுவும் இல்லாமல் இருக்கிறதா என தட்டிப்பார்த்து வாங்கி செல்வார்கள்.

வாங்கிய சட்டியைப் பயன்படுத்தும்போது அதில் நீர் கசிந்தாலோ அல்லது பாகு ஊற்றி கிண்டும்போது தவறி உடைசல் ஏற்பட்டாலோ 'ஏதோ பிரச்சினை வரப்போகிறது, சாமி அதைத்தான் சொல்லாமல் காட்டுது' என்று கவலைப் படுவார்கள்.

அடுத்து அவர்கள் செய்வது கழனியில் விளைந்த புது நெல் அல்லது அடுத்தவரிடமாவது புது நெல்லை வாங்கி மெஷினில் கொடுத்து அரைத்து எடுத்துவந்து கல், மண் நீக்கி சுத்தம் செய்து பத்திரப்படுத்துவர். இது கேதார கௌரி நோன்பிற்கு அதிரசம் செய்வதற்காக. கூடவே வெல்லம்,ஏலக்காயும் தயாராகிவிடும்.

தீபாவளிக்கு எல்லோருடைய வீட்டிலும் புதுதுணி எடுக்கமாட்டார்கள். ஆனாலும் நோன்பிற்கு விரதம் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக புதுதுணி உண்டு.

தீபாவளியை, சில சமயங்களில் இரண்டு நாள் விசேஷமாகவும், மற்ற சமயங்களில் மூன்று நாள் விசேஷமாகவும் கொண்டாடுவார்கள்..............(தொடரும்)

12 comments:

 1. இவ்வளவு இருக்கிறதா...? மேலும் அறிய தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்திற்கும்,தொடர்வதற்கும் நன்றிங்க தனபாலன்.

   Delete
 2. உங்க "ஸ்வீட்டி"க்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களும்! :) லட்டு பர்த்டே ஸ்பெஷலோ? ;)

  உங்க ஊர் தீபாவளி வித்யாசமா இன்ட்ரஸ்டிங்கா இருக்கு சித்ராக்கா!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி மகி. எங்களுக்குக் கிடைத்த தீபாவளிப் பரிசுதான் மக‌ள். இரண்டுமூன்று நாட்களாக வீட்டில் அதைப்பற்றிய பேச்சாக இருக்கவும் தலைப்பு தவிர மற்றவை வேறு விதமாகப் பதிவாகிவ்ட்டது.

   லட்டு 'ஆகஸ்ட்'டில் செய்தது மகி. இப்போதைக்கு நோ ஸ்வீட்ஸ்.

   என்னுடைய ஆரம்பப்பள்ளி நாட்களில் பார்த்த தீபாவளி இது. இப்போ எல்லாமே மாறிப்போச்சு.

   Delete
 3. தீபாவளி ஸ்பெஷல் நன்றாக ஆரம்பித்திருக்கிறது 'லட்டு' படத்துடன். (பார்சல் இல்லை என்ற செய்தி லேசான வருத்தத்தைக் கொடுத்தது ): )

  பானைக்கு யானை விலை சொல்லுவார்களா? பதவில் ஒரு கவிஞி எட்டிப் பார்க்கிறாரே!
  சொந்த ஊர் என்றால் எல்லோருக்குமே பரவாசம்தான்!

  நாங்களும் புதுப் பானை வாங்கி புது அரிசி வாங்கி சுத்தம் செய்து விட்டோம். அதிரசம் செய்ய தயார். தொடர்ந்து படிக்கிறேன்.

  தீபாவளிக்கு என்ன வாங்கிகொண்டீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. இது ரெண்டு மாசத்துக்கு முன்னால செஞ்ச பழைய லட்டுங்க. மீண்டும் நவம்பர் கடைசியில செய்வேன், அப்போ தருகிறேனே. வருத்தத்தைப் போக்க அடுத்த பதிவிலாவது ஏதாவது செய்து கொடுத்தே ஆக வேண்டும்.

   "பானைக்கு யானை விலை சொல்லுவார்களா?"_____சின்ன வயசுல 'யானைக்கும் பானைக்கும் சரி'ன்னு ஒரு கதை படித்ததாக இப்போதான் ஞாபகமே வருது.

   இங்கு வந்த பிறகு விசேஷத்துக்குன்னு எதுவும் வாங்குவதில்லை. தேவையானால் மட்டுமே வாங்குவேன்.நீங்க என்னென்ன வாங்கினீங்கன்னு உங்க லிஸ்ட்டை அடுத்த பதிவில் வந்து சொல்லுங்க.

   Delete
 4. உங்கள் மகளுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  எனக்கும் ரஞ்சனியைப் போலவே லட்டு பார்சல் இல்லை என்பது ஏமாற்றமே .
  அதனால் என்ன தீபாவளிக்கு சேர்த்து வாங்கி விடுகிறேன்.அருமையாக உங்கள் சிறுவயது நினைவுகளை பதிவிட்டுள்ளீர்கள். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றிங்க. இந்த பழைய லட்டு இல்லாட்டி என்ன, அடுத்து 'சோமாஸ்' பார்ஸல் வந்துட்டே இருக்கு. நீங்க செஞ்சதையும் மறக்காம அனுப்பி விடுங்க.

   ஒன்றுமே அறியாத அந்த சிறு வயது நினைவுகள்தான் பிடிக்கிறது.

   Delete
 5. அட! அட! அட! அருமை சித்ரா.
  ரிவர்ஸ்ல வந்தேன். ;) நல்ல வேளை மிஸ் பண்ணாமல் வந்தேன். சுவாரஸ்ம் (குத்தியாச்சு).
  உங்கள் மகளுக்கு என் அன்பு வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவுகளும்,பின்னூட்டங்களும் எனக்கு ஏதோ புதிர் போடுவது போலவே இருக்கும். அதனால் அவற்றைப் ப‌டிக்கும்போதே இதில் ஏதாவது விஷயம் ஒளிந்திருக்குமோ என எண்ணத்தோன்றும். அப்படித்தான் இப்போதும்,"சுவாரஸ்ம் (குத்தியாச்சு)"________ நீண்ட நேரம்போட்டு குழம்பி பிறகு தெளிவானேன். நன்றிங்க.

   மகளுக்கான உங்கள் அன்பு வாழ்த்துகளுக்கு மகிழ்ச்சியும் & நன்றியும்.

   Delete
 6. eppoluthum pola alagai eluthi ullirkaal..unga posts ku comment elutha enaku rasi illai nu nenaikuren...always problem with my phone while commenting..post panave mudila :O vaalthukal ungalukum kudumbathinar anaivarukum deepavaliku than :)

  ReplyDelete
  Replies
  1. ஓஓ 'ஃபோன்'ல இருந்து கமெண்ட் வருதா! நன்றி.

   உங்களுக்கும் வீட்டிலுள்ளோருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

   Delete