Wednesday, October 30, 2013

தீபாவளி ஸ்பெஷல் !!.........(தொடர்ச்சி)


                          சுடச்சுட புது முறுக்கு தயாரா இருக்கு, எடுத்துக்கோங்க ! 

**********************************************************************************

சென்ற பதிவின் தொடர்ச்சி....

நான் அமெரிக்கா வந்தபோது, கூடவே தீபாவளியும் வந்துசேர்ந்தது.

திருமணத்திற்குப் பிறகு சில‌ தீபாவளிகள் வந்தாலும் இங்கு வந்த பிறகுதான் ஒன்றாகக் கொண்டாடினோம். வேலை, வெளியூர் என ஆளுக்கொரு திசையில். ஊரில் இருந்தவரைக்கும் அம்மாவுடன்தான் தீபாவளி, பொங்கல்...... எல்லாம்.

முதன்முதலாக நாங்களாகக் கொண்டாடும் தீபாவளி. ஸ்வீட்ஸ், காரம் எல்லாம் நானே செய்ய வேண்டுமென ஆசை. ஊரில் அம்மாவுக்கு உதவிகள் செய்திருக்கிறேனே தவிர நானாக எதையும் செய்ததில்லை. ஆனாலும் சிலவற்றை செய்ய முடிவெடுத்தாச்சு. செய்வது எதுவாக இருந்தாலும் ஒரே நாளில் செய்யாமல் தினம் ஒன்று செய்வது எனத் தீர்மானித்தேன்.

திருமணமான புதிதில் பெங்களூருக்குப் போயிருந்தபோது இவர் ஒரு பெரிய புத்தகக்கடைக்கு கூட்டிக்கொண்டு போய் நான் விரும்பிய புத்தகங்களை வாங்கிக்கொள்ளச் சொன்னார். அவரைப்போலவே நானும் இருப்பேன் என நினைத்தது அவர் தவறு.

அங்கு 'சமைத்துப்பார்' என்ற தமிழ் புத்தகத்தை நான் கையில் எடுக்கவும் இவர் சிரித்துக்கொண்டே வாங்கிக்கொடுத்தார். அது இங்கு வந்த பிறகு அடிப்படையான சமையலுக்குக் கொஞ்சம் உதவியாக இருந்தது.

லட்டு எப்படி செய்ய வேண்டும் என்பதை மட்டும் அந்தப் புத்தகத்தில் பார்த்துக்கொண்டு அளவுகளை நானே போட்டு,  முதன்முதலாக எப்படியோ தட்டுத்தடுமாறி 11 லட்டுகள் செய்தேன். செய்து வைத்துவிட்டு என்னையே என்னால் நம்ப முடியாமல் டேஸ்ட்கூட பண்ணாமல் இவர்கள் வீட்டிற்கு வரும்வரை காத்திருந்தேன் .

சாப்பிட்டு பார்த்தால் சூப்பர் சுவை. முதல் ஸ்வீட்டே சூப்பராக வரவும் அடுத்தது என்ன செய்யலாம் என ஆர்வம் அதிகமாகிவிட்டது.

அடுத்த நாள் ஊரில் இருக்கும் என்னுடைய சகோதரியைப் பாடாய்ப்படுத்தி வெல்லப்பாகுக்கு பதம் கேட்டு, அழகழகான அதிரசங்களையும் சுட்டாச்சு. 

அடுத்து முறுக்கு செய்ய எண்ணி என்னென்னெ சேர்க்க வேண்டும் என அம்மாவிடம் அளவுகள் கேட்டு வாங்கி, அதை எந்த அளவுக்குக் குறைக்க முடியுமோ அந்த அளவுக்குக் குறைத்து, நானே ஒரு அளவைத் தயார் செய்துகொண்டு, அவற்றை வறுத்து மிக்ஸியில் போட்டு இடித்து மாவாக்கியாச்சு.

அம்மா சொல்லியிருந்தாங்க, "மாவு திப்பிதிப்பியா இருந்தா முறுக்கை கடித்துதான் சாப்பிட முடியும், சமயங்களில் அதுகூட முடியாது, அதனால மாவு மழமழன்னு இருக்கணும், அப்போதுதான் முறுக்கு பொரபொரனு வரும்", என்று.

என்னிடம் நம்ம ஊர் மிக்ஸி இல்லை. இந்த ஊர் மிக்ஸி எப்படி அரைக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

மாவை சலிக்க வேண்டும், சல்லடை இல்லை. அருகில் இருந்த ஒரு தோழியிடம் 'சல்லடை இருக்கிறதா' எனக் கேட்டேன்.

அவர், "என்னிடம் சல்லடை இல்லை சித்ரா, 'டீ அரிப்பி' இருக்கு, எடுத்துட்டு வரேன்" என்றார்.

சல்லடை மாதிரியிருக்கும் ஒன்றைத்தான் டீ அரிப்பி என்கிறாரோ, அது எப்படி இருக்கும் என்ற ஆவலில் அவர் வருகையை எதிர்பார்த்து வெளியிலேயே காத்திருந்தேன்.

அவரோ எவர் சிலவர் டீ வடிகட்டியுடன் வந்தார். பிறகு 'உங்கள் ஊரில் இப்படித்தான் சொல்வீர்களா, எங்கள் ஊரில் இப்படி சொல்லுவோம்' என்ற சம்பாஷனைகளைத் தொடர்ந்து, நான் வேண்டாம் என்று மறுத்தும் அவர் தன்னிடம் ம‌ற்றொன்று இருப்பதாகச்சொல்லி, கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

போகும்போது 'நான் சொன்ன மாதிரி முறுக்கு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினையில்லையே' என்றார்.  [என் பேச்சையே நான் கேட்காதபோது, அவர் சொல்வதையா கேட்கப்போகிறேன்!].

மனசு கேட்காமல், மாவை சலித்துவிட்டு டீ வடிகட்டியை நன்றாகக் கழுவி எடுத்துபோய் அவரிடம் கொடுத்தால், இனி தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள் என்று சொல்லிவிட்டார்.

அந்த டீ வடிகட்டி இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. ஒரு 10 மாதங்களுக்கு கொழுக்கட்டை, புட்டு என எல்லாவற்றிற்கும் அந்த டீ வடிகட்டிதான் ஒரு சல்லடையாய் இருந்து எங்களுக்கு உதவியது. ஊருக்குப் போனால் வாங்கி வரும் பொருள்களின் லிஸ்டில் சல்லடை முதல் இடத்தைப் பிடித்துக்கொண்டது.

அந்த முறுக்கு மாவில் அழகழ‌கான குட்டிகுட்டி முறுக்குகள் சுட்டேன். அழகாக இருந்தது போலவே நன்றாகவும் இருந்தது.

அம்மா செய்வது மாதிரி பெரிய முறுக்காக சுட்டிருந்தால் ஒரு முறுக்கிலேயே மொத்த மாவும் காலியாகியிருக்கும் என்பதுதான் உண்மை.

டீ வடிகட்டியில் மாவு சலித்து முறுக்கு சுட்டேன் என்றால் எவ்வளவு மாவு இடித்திருப்பேன் என்று கற்ப‌னை செய்துகொள்ளுங்கள்.

இதுவரை எல்லாமே சொதப்பாமல் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. பிரச்சினை மிக்ஸர் வடிவத்தில் எட்டிப்பார்த்தது.

அடுத்த நாள் மிக்ஸர் செய்யலாம் என முடிவெடுத்து நீண்ட நேரம் போராடி .....   ......    ....  .....  எல்லாம் செய்து கலந்து, கறிவேப்பிலை வறுத்துபோட்டுவிட்டு, கடைசியாக ஊறவைத்த பச்சை பட்டாணியை வடிகட்டி ஈரத்தை துடைத்துவிட்டு வாணலில் இருந்த எண்ணெயில் போட்டதுதான் தாமதம், ஒரு நொடி என்ன நடந்துதுன்னே தெரியவில்லை.

சுதாரித்துக்கொண்டு பார்த்தால் வாணலில் இருந்த எண்ணெயையும் காணோம், போட்ட பட்டாணிகளையும் காணோம், பட்.. பட்பட்.... படார் படார்..... என்ற சத்தம் மட்டுமே மனதில் கேட்டுக்கொண்டிருந்தது. நல்லவேளை வாணலில் எண்ணெய் கொஞ்சமாக இருந்ததால் தப்பித்தேன்.

சமையலறை முழுக்க எண்ணையும் பட்டாணியில் பாதியும். மீதி பட்டாணி எங்கன்னே தெரியவில்லை. பக்கத்தில் யாராவது இருந்தாலும் புலம்பித் தீர்த்திருக்கலாம்.

சிறிது நேரத்திற்கு அப்படியே உட்கார்ந்தாச்சு. 'கூல் டவுன் சித்ரா' என எனக்கு நானே சொல்லிக்கொண்டு தரை, அடுப்படி என எல்லாவற்றையும் துடைத்து கழுவி மீண்டும் துடைத்து........... போதும்போதும்னு ஆயிடுச்சு.

அடுத்த நாள் தீபாவளி........

காலை எட்டு மணிக்கெல்லாம் இட்லி, வடை, கேசரி எல்லாம் செய்துவிட்டு மக‌ளை பள்ளிக்கு அனுப்புவதற்குள் சாமி படைத்துவிடலாம் என நினைத்து கற்பூரம் ஏற்றிவிட்டு, அவர்களை அனுப்பிவிட்டு, கொஞ்சம் உயரத்தில், சுவரில் மாட்டியிருந்த முருகன் காலண்டர் என்னைப் பார்ப்பது போல இருக்கவும் அங்கே சென்று கற்பூரத்தட்டைக் காட்டியதும்தான் தாமதம், அதற்கும் மேலே உயரத்திலிருந்த‌ Smoke detector லிருந்து பீப் பீப் சத்தம் வந்துவிட்டது.

ஏதாவது பிரச்சினை என்றால் அலாரம் வரும் எனத் தெரியும். ஆனால் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியாது. இவருக்கு ஃபோன் செய்தால் எடுக்கவில்லை. உடனே டீ அரிப்பி கொடுத்த தோழிக்கு ஃபோன் செய்தேன்.

அவர் ஒன்றும் பயப்பட வேண்டாம். கதவு சன்னலை எல்லாம் திறந்துவிட்டால் போதும் என்றார். ஒன்றும் பயனில்லை. ஒருவழியாக ஃபோனை எடுத்த இவரிடம் சொன்னால் 'பேப்பர் எடுத்து விசிறிவிடு' என்றார்.

மேல் வீடு என்பதால் உயரமான ஸீலிங். நல்ல உயரத்தில் ஸ்மோக் அலாரம். நாற்காலியைப் போட்டு எட்டிஎட்டி விசிறிப் பார்த்துவிட்டேன், பலனில்லை. பதட்டமாகவே இருந்தேன். வந்த புதுசா, எமர்ஜென்ஸிகாரங்க வந்திடுவாங்களோன்னு ஒரு பயம். வந்து கேட்டால் என்ன சொல்வது?

இவர் மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வந்து அதற்கு சாமரம் வீசும்வரை சத்தம் வந்துகொண்டேதான் இருந்தது. "அதெப்படி நான் இல்லாத சமயமா பார்த்து உனக்கு பிரச்சினை வருது", என்றார். இவர் இருந்தால் பிரச்சினை பிரச்சினையாக ஆக வாய்ப்பே இல்லையே .

ஒவ்வொரு தீபாவளிக்கும் இந்த நினைவுகள் வரத்தவறுவதில்லை. என்னென்ன வேலையெல்லாம் செஞ்சிருக்கோம்னு சிரிப்புதான் வரும்.

இப்போதெல்லாம் எப்படிக் கொண்டாடுறோம்னு நெனக்கிறீங்களா? நாங்கதான் நல்ல்ல்லா தெளிவாயிட்டோமே ! இந்த வருட தீபாவளியைக்கூட நவம்பர் கடைசி 'வீக்கெண்ட்'டுக்கு தள்ளி வச்சிருக்கோம்னா பார்த்துக்கோங்க!    (முற்றும்)
                                                                                                                                            

அனைவருக்கும் இதயம்கனிந்த, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

10 comments:

  1. உங்களின் சமையல் அனுபவம் பலருக்கும் பாடம் அம்மா... நன்றி...

    இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/charity.html

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

      உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

      Delete
  2. ;)) எங்கூரு ஆளா அயலார்!!

    இங்க இப்பவும் ஸ்டேர்கேஸ்ல விசிறி இருக்கு. அது இல்லாட்டா காது டமால். ;)) சிலசமயம் கதவைத் திறந்து அதை யானைக் காதாகப் பாவித்து ஆட்டி விடுவேன். ;)

    ReplyDelete
    Replies
    1. "எங்கூரு ஆளா அயலார்!!"___________எனக்கு தெரிஞ்சே ஆகணும், ஈழமும்,கேரளாவும் எப்போ ஒன்னா இருந்துச்சி?

      "எல்லாரும் ஓடி வாங்கோ, இமா றீச்சர் தப்பா கணக்கு போட்டிருக்கினம்" ..... நாங்கல்லாம் யாரு? நாங்க 'முட்டை'யே வாங்கினாலும் டீச்சரை மட்டும் ஒரு 'மார்க்'கும் குறையாமப் பார்த்து சுட்டிக்காட்டிடுவினம்.

      காதால் மட்டுமே கேட்டு ரசித்த இலங்கைத்தமிழை இரண்டு மாதங்களுக்கு முன் நேரில் கேட்க நேர்ந்தது.நெகிழ்ச்சியான அந்த சந்திப்பும் பதிவாக வரலாம்.

      'விசிறி' நல்ல ஐடியா. வேறொரு அப்பார்ட்மென்டில், ஒரு நாள் நல்லிரவு (எல்லோருக்குமே) பலமுறை ஃபயர் அலாரம் வந்து மூன்றாவது மாடியிலிருந்து படிக்கட்டு வழியாக ஓடிஓடி வந்து.......பிறகு ஆள் வந்து அது ஃபால்ஸ் அலாரம் என்று சொல்லி......ஆனால் அடுத்த நாள் நல்லாருந்துச்சி.

      Delete
  3. முறுக்கு சுவை அலாதி . படம், பதிவு எல்லாமே அருமை. Thanks givingற்கு தீபாவளியை மாற்றி விட்டீர்கள் போலிருக்கிறது. என்னவெல்லாம் செய்ய பிளான்.....

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, என்னை ப்ளான் போட சொன்னா நல்லா போடுவேன். ஆனா இவங்க ரெண்டு பேரும் ஒத்து வரணுமே. வீட்டைவிட்டு நகர மாட்டாங்க. அதனால வீட்டு சாப்பாடு + லட்டு,சோமாஸ் மாதிரி சில ஸ்நாக்ஸ்.

      Delete
  4. Murukku looks crunchy! You had a memorable Diwali Chitra Akka..we also came to US in a November, n were staying at some hotel during our "Thalai Deepavali" :)

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு நாளும் பார்க்காமல் விட்டுட்டேனே ! ம் ம் இந்த ஊரில்தான் உங்க தலை தீபாவளியா !

      Delete
  5. அன்பு தோழிக்கு
    தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. நிறைய எழுதங்கள். சுவாரசியமாக எழுதுகிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. தோழி புனிதா,

      ஏற்கனவே இரண்டு 'புனிதா'க்கள் தெரியும். இப்போது மூன்றாவதாக இன்னுமொரு புனிதா(?) ! 'தோழி' என்று சொன்னதில் மகிழ்ச்சி.

      வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

      Delete