Monday, November 11, 2013

கார்த்திகை தீபம்....தொடர்ச்சி


வரிசையாக வீடுகள், அதன் பின்னால் எல்லோருக்கும் நீளமான ஒரு தோட்டம் உண்டு. அதில் கண்டிப்பாக ஒரு பனைமரம் இருக்கும். எங்கள் வீட்டு தோட்டத்தில் இரண்டு பனைமரங்கள். பூக்கள் மட்டுமே பூக்கும். காய்கள் காய்க்காது. ஏன்னா எங்க வீட்ல பனங்காய், அதாங்க நுங்கு சாப்பிட ஆள் இல்லை பாருங்க, அதனாலதான். அதை ஆண்பனை என்று சொல்வார்கள்.

எல்லோரது வீட்டிலும் பனம்பூவை பொறுக்கும்போது அதிலும் நம் வயது குட்டீஸ்கள் அதை செய்யும்போது நமக்கு மனசு கேக்குமா சொல்லுங்க!

நாங்கள் (நான் & தம்பி) எடுத்து வைக்கும் பூவை பயன்படுத்தப்போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் மன திருப்திக்காக கொஞ்சம் பொறுக்கி வைப்போம்.

யார் வீட்டுத் தோட்டத்தில் இருந்து முதலில் புகை வருதுன்னு வெயிட் பண்ணுவோம். புகை வரும் இடத்தை நோக்கி மொத்த கூட்டமும் படையெடுக்கும். அடுத்தாற்போல் யார் வீடு என்று அங்கே ஓடுவார்கள்.

இத்தனையும் எதற்காக? பனம்பூவை வைத்து கார்த்தி சுற்றுவதற்கு தேவையான‌ மருந்து செய்வதற்காகத்தான்.

வீட்டின் தோட்டத்தில் யாராவது பெரியவங்க அரை அடி அகலம் ஒரு அடி ஆழம் அளவிற்கு சிறு கடப்பாறையால் ஒரு குழி தோண்டுவாங்க. அப்படி வந்து தோண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எள் என்றால் நாங்கள் (நல்)எண்ணெயாக இருப்போம். ஓடிஓடி உதவிகள் செய்வோம்.  இதெல்லாம் கார்த்தியை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தால்தான்.

அவர் வந்து முதலில் செய்வது நாங்கள் எடுத்து வைத்திருக்கும் பனம்பூவை கண்டுகொள்ளாமல் பனைமரத்தில் இருந்து புது பூவாக ஒரு கொத்து பறித்துவந்து பயன்படுத்துவார். அவ்வ்வ்வ்.......

நாங்கள் எடுத்து வைத்திருப்பது விரல் நீளத்திற்கு குட்டிகுட்டியான, உடைந்துபோன, குப்பைக்கு போகவேண்டிய பூக்களாக இருக்கும். அவர் பறிப்பது நீளநீளமாக இருக்கும்.

பள்ளம் தோண்டி முடித்ததும் ஈரம் போவதற்காக அதில் கொஞ்சம் தவிடு தூவி, அதன்மேல் பனம்பூக்களை அடுக்கி, மேலேயும் கொஞ்சம் தவிடு தூவி, விறக‌டுப்பில் கனன்று கொண்டிருக்கும் கட்டை நெருப்பில் ஒன்றிரண்டு எடுத்துவ‌ந்து வைத்து விசிறிவிடப்படும்.

ஊதக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஊதினால் ஊமக்காத்தி ஆகிவிடுமாம். தீ கனன்றுகொண்டே இருக்க வேண்டும். தீப்பிடித்து எறியக் கூடாது.  அதாவது பனம்பூ எறிந்துவிட்டால் சாம்பல்தான் மீதமாகும். அதை வைத்து மருந்து செய்ய முடியாது. இதை சொன்னால் புரியாதுன்னு என்னவெல்லாம் சொல்லியிருக்காங்க பாருங்க‌ !

பனம்பூ முழுவதும் நெருப்பு மாதிரி வந்தவுடன் தோட்டத்தில் இருக்கும் பூவரசு இலைகளைப் பறித்து குழியை மூடி அதன்மேல் மண் போட்டு மூடிவிடுவார்கள்.

மாலைக்குள் நெருப்பு ஆறிப்போயிருக்கும். மண், இலைகளை எல்லாம் தள்ளிவிட்டு பனம்பூ கரியை பத்திரமாக எடுத்துவந்து யாரிடமாவது கொடுத்து அம்மியில் வைத்து அரைத்து ரொம்பவும் மழமழனு இல்லாமல் கரகரப்பாகப் பொடித்து வைப்பதுதான் கார்த்தி மருந்து.

அடுத்த இரண்டுமூன்று நாட்களுக்கு அம்மியில் எதையும் அரைக்க முடியாது. அரைத்தால் கரிகரியா வரும்.

பழைய துணியில் இந்த மருந்தில் தேவையான அளவு வைத்து, சுருட்டி, கட்டி வைப்பாங்க. இரண்டு நாட்களுக்கு எத்தனை வேண்டுமோ அத்தனை எண்ணிக்கையில் கட்டி வைப்பாங்க.

பனை மட்டைகளை வெட்டி அவற்றை கத்தியால் சீவி எத்தனை கார்த்தி வேணுமோ அத்தனை செய்து, மேலும் கீழும் கயிறு வைத்து கட்டி, இடையில் பனம்பூ மருந்தை வைத்து இறுக்கமாக இருக்குமாறு செய்து,  தலைக்கு மேலாக சுற்றுவதற்கு வசதியாக ஒரு  கயிறும் கட்டி தருவாங்க.

இது ஒருபக்கம் நடக்கும்போதே அன்று எல்லோரும் தலை குளிப்பார்கள். இன்றைக்கு வடை & பாயஸத்துடன் சாப்பாடு தயாராகும்.


மாலை 6 மணிக்கு அகல் விளக்குகள், குத்துவிளக்குகள் எல்லாம் ஏற்றப்படும். மாலை 6 மணிக்குமேல்தான் சாமிக்கு படைப்பாங்க. ஏனெனில் திருவண்ணாமலையில் மாலை ஆறு மணிக்குதான் தீபம் ஏற்றுவார்கள். அங்கு தீபம் ஏற்றிய பிறகுதான் படைக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.

சாமிக்குப் படைக்கும்போது கார்த்தியையும் சேர்த்து படைப்பாங்க. பிறகு அந்த கார்த்திகளில் மருந்துக்கு மேலாக சிறிது நெருப்பு வைத்து கனிய வைப்போம். அது தானாக கனிந்து நெருப்பாவதற்குள் சாப்பிட்டு முடித்துவிடுவோம். ஞாபகம் இருக்கட்டும், இப்போதும் ஊதக்கூடாது, ஊதினால் .......... !.

எங்கே சாப்பிடுவது? மனசு முழுவதும் கார்த்தியில்தான் இருக்கும். சாப்பிட்டுவிட்டு வந்து அந்த கார்த்தியை தலைக்குமேலாக பிடித்துக்கொண்டு சுத்துசுத்துனு சுத்த வேண்டியதுதான். அதிலுள்ள நெருப்பு பொறிகள் கொட்டுவது கண் கொள்ளா காட்சியாக இருக்கும். ஊர் முழுவதும் இப்படிதான் இருக்கும்.

சிலர் தீபாவளிக்கு வாங்கும் பட்டாசில் கொஞ்சம் மிச்சம் பிடித்து கார்த்தியின்போது வெடிப்பாங்க.

பெரிய அண்ணன்கள், அக்காக்கள் எல்லாம் விதவிதமாக தலைக்குமேல், பக்கவாட்டில் என சுற்றுவதைப் பார்க்கும்போது பொறாமையாக இருக்கும். இவர்கள் வீட்டில் உள்ள குட்டீஸை எதிரில் நிற்கவைத்தும் சுத்துவாஙக.

நானாக தலைக்குமேல் பிடித்து சுற்றும்வரை அந்த கார்த்தியை பிடித்து தரையில் இழுத்துக்கொண்டுதான் ஓடுவேன். அதிலிருந்து பூக்கள் கொட்டுவது ஒரு அழகு.

இது இரவு பத்து பதினொரு மணிவரை தொடரும். எங்க வீட்டு மெத்தைக்கு போய்ட்டு யார்யார் வீட்டு கார்த்தியில் எவ்வளவு பூக்கள் கொட்டுகிறது எனப் பார்த்து ரசிப்போம். நிறைய பொறி கொட்டும் கார்த்திக்கு சொந்தமானவரிடம் சென்று இரவல் வாங்கி ஆசை தீர சுற்றுபவர்களும் உண்டு.

சிறுவர்கள் மட்டுமின்றி வீட்டிலுள்ள பெரியவர்களும் தெருவில் இறங்கி வந்து கார்த்தியை ஒன்றிரண்டு சுற்றுகளாவது சுற்ற வேண்டும் என்பது வழக்கம் . அவ்வாறு சுற்றும்போது நம்மைப் பிடித்துள்ள பீடைகள் (கெட்டவைகள்) நீங்கிவிடும் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.

அடுத்த நாள் நாட்டுக்கார்த்தி. அன்று நல்லெண்ணெய் வைத்து தலை குளிப்பாங்க. அவரவர் வசதிக்கேற்ப அசைவ‌ சமையல் நடக்கும். இன்றும் முதல்நாள் போலவே ஆறு மணிக்குமேல் விளக்கு ஏற்றுவது, சாமிக்குப் படைப்பது, கார்த்தி சுத்துவது என எல்லாமும் நடக்கும்.

கார்த்தி சுற்றி முடித்த பிறகு அந்த மட்டைகளை வீட்டின் கூரைமேல் போட்டுவைப்பார்கள். போடும்போது மனதின் ஓரத்தில் சிறு வருத்தமிருக்கும், அது அடுத்த வருடம் வரும்வரை கார்த்தி சுற்ற காத்திருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் ! காய்ந்து போகும்வரை அவை அங்குதான் கிடக்கும் ........................................................(முற்றும்).

       அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !!

13 comments:

 1. உங்கள் கார்த்திகை நினைவுகள் உங்களை சிறுமியாக்கி விட்டது போல் தெரிகிறது. அத்தனை ஆர்வத்துடன் எழுதி இருக்கிறீர்கள்..
  உங்களிடம் நெடு நாட்களாக கேட்க வேண்டும் என்று இருந்தேன். உங்கள் பிளாக்கில் மேலே படம் ஒவ்வொரு முறையும் மாக் கொண்டே இருக்கிறதே. அதுவும் நீள வாக்கில் போடுகிறீர்களே.அந்த ரகசியத்தை உடைப்பீர்களா?

  ReplyDelete
  Replies

  1. ஆமாங்க, பழைய நினைவுகள் வரும்போது அப்படித்தான் ஆகிவிடுகிறோம்.

   எவ்ளோ நாளாகுது வகுப்பெடுத்து! ஒரு ஆள் மாட்டியாச்சு, விட மாட்டோமில்ல! முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்ல வேண்டியது என் கடமைங்க‌. அதுவந்து, cheque எழுதி மெயில் பண்ணிய பிறகுதான் கீழேயுள்ள விளக்கம் 'பளிச்'னு தெரியவரும் என்பதுதான் அது.

   முதலில் விருப்பமான புகைப்படத்தை நீளவாக்கில் edit செய்து ஒரு இடத்தில் save பண்ணி வைங்க. நான் 'desktop' ல் வைப்பேன். கொஞ்சம் நீளமான செவ்வக வடிவில் எடிட் செய்தால்தான் திட்டமாக இருக்கும். முழு படத்தையும் போட்டால் நிறைய இடத்தை அடைத்துக்கொள்ளும்.

   பிறகு தளவமைப்பிற்கு போய் 'வலைப்பதிவு தலைப்பு & வலைப்பதிவு விளக்கம்' [உ.ம்.Arattai என்று எழுதியிருக்கீங்களே,அங்குதான்} எழுதியிருக்கிற இடத்திலுள்ள 'மாற்று' என்பதை கிளிக்கினால் ஒரு சிறிய pop up window வரும்.அதில் 'படம்' என்பதின்கீழ் மூன்று விளக்கங்கள் வரும்.அதில் எது விருப்பமோ அதை செலக்ட் பண்ணிடுங்க.நான் முதலாமவதை தெரிவு செய்வேன்.'Browse' என்று வரும் இடத்தை க்ளிக்கினால், file upload விண்டோ வரும்.அதில் படம் சேவ் ஆகி இருக்கும் இடத்தை கிளிக்கினால் பாப்அப் விண்டோவில் உள்ள சிறிய கட்டத்தில் படம் வந்துவிடும். பிறகு கீழேயுள்ள சேமியை கிளிக்கினால் பாப்அப் விண்டோ காணாமல் போய்விடும்.கடைசியாக தளவமைப்பின் வலது மேலேயுள்ள‌ 'ஒழுங்கமைப்பைச்சேமி, க்ளிக்கினால் வலைப்பூவில் படம் வந்துவிடும். இதில் ஏதும் சந்தேகம் வந்தாலும் கேளுங்க.(அதுக்கு தனி payment)


   விளக்கம்தான் பெருசா இருக்கே தவிர செய்யும்போது எளிதாக இருக்கும். விரைவிலேயே உங்க ப்ளாக்கிலும் படத்தைப் பார்க்கும் ஆவலில் இருக்கிறேன். இவ்வளவு நாளும் படங்களை பார்த்துக்கொண்டே வந்ததற்கு நான்தான் நன்றி சொல்லணும். நன்றிங்க.

   Delete
  2. உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பியிருக்கிறேன்.படித்துப் பாருங்கள்.

   Delete
  3. ம்...ம்...பார்த்திட்டேங்க‌.

   Delete
 2. கார்த்திகை சுற்றுவது..மருந்து செய்வது...எல்லாமே எனக்கு புதுசு..பகிர்வுக்கு நன்றி சித்ராக்கா!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் மகி, எங்கள் ஊர்பக்கம் உள்ள விசேஷம் இது. வருகைக்கு நன்றி மகி.

   Delete
 3. muthal paagathiruku sonathe irandam paagathirukum..ungal anupavangalai (santhosangal, thukangal) ningal evvaru enni thunitheergal enpathai patriyum eluthungal..ennai pondra ungal valai followers ku kandipaaga payanullathaaga irukum :)

  ReplyDelete
 4. சந்தோஷங்கள் ஒகே, அதென்ன துக்கங்கள் ?.....அப்படின்னா ! வருகைக்கு நன்றி ஞானகுரு !

  ReplyDelete
  Replies
  1. thavaraga eduthu kondiruka maatrigal endru nenaikuren..ningal oru visayathai paarkum muraimai,velipaduthum muraimai ennai pol ullathu ungal pathivugalai padipathaal therikirathu..athalaal ningal epadi ethir kolkirirgal enbathai therinthu kolla nenaithen.

   iravu pagal, unmai poimai, veppam kulirchi..athai polave santhosam thukam..manitha vaalgai endraal irandum irukum thane ;) ungaluku theriyatha ena :P

   Delete
  2. சும்மா சொன்னேன். சீரியஸா எடுத்துட்டீங்களா? நாம் நினைத்து எதுவும் நடக்கப்போவதில்லை. பிறகு எதற்காக கவலைப்பட வேண்டும்? அதனால் ஏதாவது வரும் என்றால் பரவாயில்லை. கவலைப்படுவதால் நம் உடல்நிலை & மனநிலை சோர்வடைவதைத் தவிர, எதுவும் ஆகப்போவதில்லை. அதற்கு பதிலாக வேறு முயற்சியில் மனதை செலுத்திக்கொள்ளலாமே. எல்லாமும் நம் கையில்தான் இருக்கிற‌து.

   Delete
 5. நாம் நினைத்து எதுவும் நடக்கப்போவதில்லை. பிறகு எதற்காக கவலைப்பட வேண்டும்?/// yen avvaru eduthu kolla vendum..andavanin viruppam endru parathai iraki vaithu paarthal etharkum kavalaipada matom..mathapadi ninga solrathu unmai. :)

  ReplyDelete
 6. நாட்டு கார்த்திகை அன்று எதற்காக அசைவம் படையல் செய்கின்றனர் தெறிந்தவர்கள் விளக்கம் கொடுங்கள்

  ReplyDelete
  Replies
  1. விஜய்,

   ஒருவேளை இப்படிகூட இருந்திருக்கலாம். ஆனால் உண்மையான காரணம் தெரியவில்லை.

   இது கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். வசதி வாய்ப்பு இல்லாத நாட்கள், இதுமாதிரி ஏதாவது விசேஷங்கள் என்றால்தான் தாங்கள் விரும்பிய உணவைச் சாப்பிட வசதி இருந்திருக்கும். அமாவாசை, கிருத்திகை போன்ற ஒருசில விசேஷங்கள் தவிர்த்து ஏனைய தீபாவளி, பொங்கல், கார்த்திகை போன்ற மற்ற விசேஷங்களில் சைவ உணவைப் போலவே அசைவ உணவுக்கும் ஒருநாள் ஒதுக்கி இருக்கலாம்.

   வருகைக்கு நன்றி விஜய் !

   Delete