Wednesday, November 6, 2013

கார்த்திகை தீபம் ஸ்பெஷல் !எங்கள் ஊரில் நாங்கள் கொண்டாடும் கார்த்திகை தீபம் பற்றிய பதிவு இது.

தீபாவளியை ஒட்டி வரும் மற்றொரு பண்டிகை கார்த்திகை தீபமாகும். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் வரும் நாள் அன்று கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது.

பைசா செலவில்லாமல் நன்றாக எஞ்ஜாய் பண்ணி கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது இதுதான். பொங்கலுக்கு அடுத்தபடியாக எங்களுக்குப் பிடித்த பண்டிகை என்றால் அது திருக்கார்த்திகை தீபம்தான்.

சிலர் தீபத்திற்கென‌ புத்தாடை வாங்குவதுண்டு. தீபாவளியின்போது வாங்கிய பட்டாசுகளில் மீதமானவற்றை பத்திரப்படுத்தி தீபத்தின்போது வெடிப்பதும் உண்டு.

எங்கள் ஊரில் இது இரண்டு நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படும். முதல் நாள் சாதாரண (பரணி) கார்த்தி, இரன்டாவது நாள் நாட்டு கார்த்தி. முதல் நாள் வடை & பாயசத்துடன் சமையல் நடக்கும். இரண்டாவது நாள் அசைவ சாப்பாடு, அவரவர் வசதிக்கேற்ப செய்வது வழக்கம்.

கார்த்திகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அகல் விளக்குகளின் வரிசையும், கார்த்தி சுற்றுவதும்தான். இந்த இரண்டு நாட்களிலும் இரவு நேரம் வண்ணமயமாக காட்சியளிக்கும். பார்க்கவே ஜ‌கஜோதியாக இருக்கும். ஜோதிப் பிழம்பானவன்தானே சிவபெருமான். ஊரில் எங்கும் மின்மினிப் பூச்சிகள் படையெடுப்பது போலவே இருக்கும்.

தீபம் வருவதற்கு ஒரு வாரம் முன்பாகவே அகல் விளக்குகளை கூடைகளில் வைத்து விற்பனைக்கு எடுத்து வருவார்கள். மேலே படத்திலுள்ளதுபோல் இருக்கும் சாதாரண விளக்குகள்தான் அவை. இப்போது பலவித கண்ணைப் பறிக்கும் அகல் விளக்குகள் விற்பனைக்கு வருகின்றன.

வாங்கிய புது அகல்விளக்குக்களைத் தண்ணீரில் போட்டு ஊறவிடுவர். பழைய அகல் விளக்குகள் வீட்டில் இருந்தால் அவற்றை சோப்பு நீரில் ஊறவிட்டு கழுவித் துடைத்து பயன்படுத்துவதும் உண்டு.  அன்றுதான் வீட்டிலுள்ள எல்லா குத்து விளக்குகளும் வெளியே வரும்.

விளக்குகளில் மஞ்சள், குங்குமம் வைத்து, நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவர். தீபத்திருநாள் அன்று ஒவ்வொரு வீட்டிலும் பருத்தி பஞ்சிலிருந்து விளக்கிற்கு திரி செய்வது ஒரு பெரிய‌ வேலையாக‌ இருக்கும்.

இரண்டு நாட்களிலும் எல்லோரது வீட்டிலும் மாலை 6 மணிக்கு அகல் விளக்கு ஏற்றி வைப்பார்கள். இந்த இடம் என்றில்லை, வாசல், படிக்கட்டுகள் என எல்லா இடங்களிலும், அவ்வளவு ஏன் குப்பையிலும் ஏற்றுவார்கள். கொஞ்சம் கவனமாக இருந்து எடுத்துவிட வேண்டும். சில சமயங்களில் குப்பை எரிந்த சம்பவங்களும் உண்டு.

பிறகு ஒன்பது பத்து மணிக்கெல்லாம் எல்லா விளக்குகளையும் சேகரித்து அடுத்த நாளுக்குத் தயாராக வைப்பார்கள். அதுவரை தேவையானால் விளக்கில் எண்ணெய் ஊற்றி, காற்றில் அணையாமல் பாதுகாக்க வேண்டியது எங்களின் வேலை. அன்றைக்குனு பார்த்து காற்று வீசுவீசுன்னு வீசும்.

கார்த்திகை அன்று காலையில் குட்டிப் பிள்ளைகள் எல்லோரும் அவங்கவங்க வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் பனை மரத்தின் கீழே விழுந்து கிடக்கும் பனம்பூவை பொறுக்குவார்கள்.

யார்யார் வீட்டில் யார்யார் பனம்பூக்களைப் பொறுக்குகிறார்கள் என்பது அவரவர் வீட்டுத் தோட்டத்தில் இருந்து பார்த்தாலே தெரிந்துவிடும்.

பனம்பூவை எதற்காகப் பொறுக்குகிறார்கள் ! என்ன செய்வதற்காகப் பொறுக்குகிறார்கள் ! இதற்கும் தீபத்திற்கும் என்ன சம்மந்தம் ? ......(தொடரும்)

7 comments:

 1. எங்க ஊரில் தீபம் 3 நாட்கள்..முதல் நாள் புது தீபமொன்றை பிள்ளையார் கோயிலுக்கு கொண்டு சென்று அங்கே விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு வீட்டில் மூன்று நாட்கள் தீபமேற்றுவோம். உங்க ஊர் தீப நினைவுகள் நல்லா இருக்கு. :)

  ReplyDelete
  Replies
  1. ஓ, மூன்று நாள் தீபமா ! பிள்ளையார் கோயிலிலிருந்து தீபத்தை ஆரம்பிக்கும் உங்க ஊர் வழக்கமும் நல்லாவே இருக்கு. உங்க நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி மகி.

   Delete
 2. தீபாவளி வேலையிலிருந்து இப்ப தான் ஓய்ந்து உட்கார்ந்திருக்கோம். கார்த்தியி தீபத்திற்கு தாவி
  விட்டீர்கள். எப்பொழுது தீபம் என்று பார்க்க வேண்டும்.
  உங்கள் தீப நினைவுகள் ஒரே ஜோதிமயமாக இருக்கிறதே!

  ReplyDelete
  Replies


  1. இதோடு நிற்கப்போவதில்லீங்க, தேங்ஸ்கிவிங், கிறிஸ்மஸ், 'நியூஇயர்'னு எல்லாம் (உங்களை) உட்கார விடாமல் வேலை செய்ய வைத்து கடைசியில் பொங்கலுக்கும் அழைத்துப்போவதாக உத்தேசம், எதுக்கும் ரெடியா இருங்க !

   தீபம் நவம்பர் 17 ல் வருகிறது.

   Delete
 3. post potta pothe padithu viten..comments elutha thothilamal irunthathu...ungal oor pakkangalil thiru kaargithai nanaal epadi kondadapadukindrathu enpathiruku oru katuraiyai pola entha kuraium illamal miga nerthiyaaga eluthi ullirgal..nandri..thodarungal.

  ReplyDelete
 4. பதிவைப் படித்து கருத்தையும் பகிர்ந்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 5. நாட்டு கார்த்திகை அன்று எதற்காக அசைவம் படையல் செய்கின்றனர்

  ReplyDelete