Thursday, December 26, 2013

அது போன மாசம்...... !! ......இது இந்த மாசம்.......!!.(தொடர்ச்சி)

மரங்கள் பசுமையாக இருக்கும்போது ஒன்றும் தெரிவதில்லை, அதுவே இலையுதிர் காலத்தில் நிறம் மாறத் தொடங்கும்போது மனதில் ஒரு சந்தோஷம் வந்துவிடும்.

அவை வித்தியாசமான நிறங்களில் இருப்பதைப் படம் எடுத்து வைத்துக் கொள்வேன்.  அவ்வாறு எடுத்தவைகளில் ஒருசில படங்கள் இங்கே....


இரண்டும் ஒரே மரம்தான். இலைகளுடனும், இலைகள் உதிர்ந்த நிலையிலும் ...

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""


"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

மேலேயுள்ளதுபோல் இருந்த இந்தத் தெரு, இப்போது கீழே இருப்பது மாதிரி பார்க்க, கொஞ்சம் பாவமாத்தான் இருக்கு...

"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

மேலே படத்தின் வலது பக்கத்தில் இருப்பது சென்ற ஜுன் மாதம் 6_ஆம் தேதிவரை எங்கள் மகள் படித்த பள்ளி. ஒரு நினைவுக்காக இங்கே பதிந்துகொண்டேன்.

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""


""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

                           இவையிரண்டும் எங்கள் குடியிருப்பில் உள்ளவை.

""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""

Tuesday, December 24, 2013

பொங்கல் ஸ்பெஷல் _____ போகிப் பண்டிகை

சென்ற பதிவில் முக்கியமான ஒன்றை சொல்லாமல் விட்டுவிட்டேன். அது மார்கழி முதல் தேதியிலேயே ஊரில் உள்ள எல்லாக் கோயில்களிலும் ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டு, அது மூலைக்குமூலை அலறிக் கொண்டிருக்கும். அதிகாலை நான்கு மணிக்கு பக்திப் பாடல்களுடன் ஆரம்பித்து, அது அப்படியே சினிமா பாடல்களில் போய் முடியும்.

அதேபோல் மாலை நான்கு மணிக்கு மீண்டும் பாடல்கள் ஒலிபரப்பப்படும். அரையாண்டுக்கு படிப்பதா ? அல்லது பாடல்களைக் கேட்பதா? இந்தப் பாடல்களால் எவ்வளவுதான் தொந்திரவு என்றாலும் அதைக் கேட்பதிலும் ஒரு சுகம் இருந்தது என்பதுதான் உண்மை.

ஆற்றுத் திருவிழா முடியும்வரை ஒலிபெருக்கியும் இருக்கும். சில சமயங்களில் பணம் கொடுக்க தாமதமானால் மேலும் ஒன்றிரண்டு நாட்கள் பாடல்களைக் கேட்டு மகிழலாம்.

மார்கழி மாதத்தின் கடைசி இரண்டு நாட்களில் மக்கள் கொஞ்சம் அதிகமான சுறுசுறுப்பாக இருப்பார்கள். பொங்கலுக்குத் தேவையான புது மண்பானைகள் வாங்குவது, பொங்கலுக்கான சாமான்களை பக்கத்திலுள்ள கொஞ்சம் பெரிய ஊருக்குப்போய் வாங்கி வருவது, இதுவரை வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிக்காதவர்கள் அல்லது முடிக்காதவர்கள் எல்லோரும் கபகபவென வேலையை முடிப்பது என வேலைகள் ஜோராக நடக்கும்..

எங்கள் வீட்டில் மார்கழியின் கடைசி இரண்டு நாட்களில் யாராவது ஓரிருவர் ஒட்டடை அடித்து விடுவார்கள். நாங்களும் கூட இருந்து உதவிகள் செய்வோம்.

போகிக்கு முதல்நாள் எங்கள் அப்பா பொங்கலுக்குத் தேவையான எல்லா சாமான்களையும் வாங்கிக்கொண்டு வந்துவிடுவார். அதில் முக்கியமானவை கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் செடிகள், பூசணிக்கீற்று, நிறைய பூக்கள், முக்கியமாக மஞ்சள் சாமந்திப் பூக்கள், தெரிந்த கடைகளிலிருந்து நிறைய சில்லறைகள் போன்றவை

கொல்லியில் இருந்து தேங்காய்கள் பறித்துவந்து மூட்டைகளில் இருக்கும். அப்போது யாரும் காசு கொடுத்து தேங்காயை வாங்கிச் சென்றதாக நினைவில்லை. "அக்கா ஒரு தேங்கா குடுக்கா, மாமா ஒரு தேங்கா குடு மாமா" இப்படித்தான் கேட்டு எடுத்துச் செல்வார்கள்.

போகியன்று காலையிலேயே கதவுகள், சன்னல்கள், தரை எல்லாம் கழுவிவிட்டு காயவிடுவோம். அப்பா வஞ்சனையில்லாமல் ஏகப்பட்ட கதவுகள், சன்னல்கள் எல்லாம் வைத்து நம்மை வேலை வாங்குகிறார் என பேசிக்கொள்வோம். அன்று தெருவாசல், படிக்கட்டுகளில் மட்டும் மாக்கோலம் போடுவோம்.

எங்கள் ஊரில் உள்ள கோவில் பூசாரிகள் வீட்டுக்கு வந்து புது பச்சரிசி, தேங்காய், வாழைப்பழம், மாலை, பூ , பூஜை செய்ய பணம் எல்லாம் வாங்கிக்கொண்டு செல்வார்கள். அன்று மாலையே பூஜையை முடித்துவிட்டு ப்ரசாதம், விபூதி, குங்குமம், பூ, பழம் எல்லாம் எடுத்துவந்து கொடுத்துவிட்டு போவார்கள். அவற்றை எங்கம்மா வீட்டிலுள்ள எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பார்கள்.

வீடு முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, கழுவிவிடப் பட்டிருப்பதால் அன்றிரவு தூங்க இதமாக இருக்கும்.

அன்றிரவு தூங்கப் போகுமுன் வெள்ளமணக் கட்டியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு, ஊற வைத்துவிட்டு தூங்கச் செல்லுவோம்.

என்னைக் கோலம் போட அழைத்துசெல்வாறே ஒரு அக்கா, அவர் வீட்டில் நிறைய பூசணிக் கொடிகள் இருக்கும். எங்கள் பங்கிற்கு நானும் என் தம்பியும் அவரிடம் கேட்டு நிறைய பூசணி மொட்டுகளைப் பறித்துவந்து குடத்திலுள்ள தண்ணீரில் போட்டு வைத்து விடுவோம்.

அதேபோல் அடுத்த நாள் அதிகாலையில் பொங்கல் பானை, கரும்பு இவை எல்லாம் வருகிற மாதிரியான கோலம் ஒன்றை தயார் செய்துகொண்டுதான் படுப்போம்.

பழைய பொருள்களை எல்லாம் கொளுத்தி புகைய விடுவதெல்லாம் கிடையாது.

போகியன்று எல்லா வேலைகளும் முடிந்து, எல்லோரது வீடுகளும், ஏதாவதொரு வகையில், பார்க்க,  மிகமிக‌ அழகாக இருக்கும்..........(தொடரும்)

Friday, December 20, 2013

அது போன மாசம்...... !! ......இது இந்த மாசம்.......!!


நாங்கள் குடியிருக்கும் வளாகம் இது. கலர்ஃபுல்லாக இருப்பது நவம்பர் மாதம். இலைகளை உதிர்த்துவிட்டு குச்சிகளாக‌ நிற்பது டிசம்பர் மாதம்.


அதே வளாகம்தான்...

வேறொரு கோணத்தில்....

மஞ்சள் சாமந்தி செடிகள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் மீண்டும் Pansy மலர் செடிகள் நடப்பட்டுள்ளன.


சுந்தர் வேலை செய்யும் இடம். .......நவம்பரில்....
 
                                 
                                    டிசம்பரில்....
          

Wednesday, December 18, 2013

"ஸ்ட்ராங்கா ஒரு டீ ப்ளீஸ்" !!

சென்ற மாதத்தில் ஒருநாள் வலைச்சரத்தில் ஒரு வாரத்திற்கு எழுத, ஏதாவது வேண்டுமே என்ற எண்ணத்தில்  தெரிந்த சில பதிவர்களின் பின்னூட்ட‌ங்களில் யாராவது தென்படுகிறார்களா என்று இங்குமங்குமாகத் தேடி ஓடினேன்.

அப்போது ஒரு பெண்பதிவரின் பெயரை 'க்ளிக்' பண்ணி, அவரது தளத்திற்கு சென்றேன். அங்கே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆமாங்க, நான் அதற்கும் ஓரிரண்டு நாட்களுக்கு முந்தி எழுதிய 'கார்த்திகை ஸ்பெஷல்' அங்கே என்னைப் பார்த்து சிரித்தது. நான் எழுதியிருந்த 'கார்த்தி'யை நீக்கிவிட்டு 'மாவளி' என்று எழுதி சூப்பரா சுத்த விட்டிருந்தார்.

அதன்பிறகு ஒரு இரண்டு நாட்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக‌ இருந்தது. இதை யாரிடமாவது சொல்ல வெண்டும். யாரிடம் சொல்வது ? இவரிடம் சொன்னால் சிரிப்பார், அப்படியும் புலம்பினால் 'இண்டர்நெட்ல இதெல்லாம் சகஜம்தானே' என்பார்.

அதையும் மீறி புலம்பினால்  'எதற்கும் நல்ல டாக்டரைப் பார்த்துவிடலாம்'  என்றுகூட சொல்லலாம். அதனால் இவரிடமும் சொல்லவில்லை. 'இருக்கிற வேலையில் இதுவேறயா ?' என்று விட்டுவிட்டேன்.

நான் எந்த விஷயத்தையும் சீரியஸா சொன்னா அது இவருக்கு காமெடியாதான் தெரியும். அதை வைத்தே பல நாட்கள் ஓட்டுவார். அதனால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனபிறகு சொல்லலாம் என்று விட்டுவிட்டேன்.

ஆனாலும் மனம் கேட்காமல் அடிக்கடி போய் அந்தப் பதிவரின் 'காப்பி' பதிவைப் பார்த்துவிட்டு வருவேன். அவர்கூட நினைத்திருக்கலாம், "கார்த்திகை தீபம் முடிந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டது, ஆனாலும் இந்த பதிவை யாரோ வந்துவந்து பார்த்துக்கொண்டிருக்கிறாரே" என்று.

பின்னூட்டங்களில் உள்ள கேள்விகளுக்கெல்லாம் உற்சாகமாக பதில்வேறு சொல்லியிருந்தார். புரியவில்லை எனக்கு ! எதற்காக இப்படியெல்லாம் ? எப்படி இதெல்லாம்?  ஏதோ என்கூடவே வந்து எல்லாவற்றையும் அருகிருந்து பார்த்ததுபோல்.....?

இந்த மன உலைச்சலினூடே 'வேர்ட்ப்ரஸ்'ஸிலுள்ள பதிவர்களின் லிஸ்டை பார்த்துக்கொண்டே வந்தேன். அங்கே அழகான பெயரில் ஒரு சமையல் வலைத்தளம், போய் பார்க்கலாமே என்று அந்தத் தளத்திற்கு சென்றால்..... அங்கே ... அங்கே....எனக்கு ரொம்பவும் பரிச்சயமான ஒரு வத்தக்குழம்பு கிண்ணமும், கொங்கு தமிழ் நடையுமாக.....

"அட ! இது நம்ம மகி வீட்டு வத்தக் குழம்பு கிண்ணமாச்சே , இது எப்படி இங்கே.... ? ஒருவேளை மகி கொடுத்துவிட்டிருக்கலாமோ" என்று நினைத்து நினைத்து சிரித்தேன். இப்போது மன உலைச்சல் கொஞ்சம் காணாமல் போயிருந்தது.

அதன்பிறகு சில பதிவர்களின் எழுத்துக்களை நினைத்துக்கொண்டேன், வாய்விட்டே சிரித்தும்விட்டேன், அதில் ஒன்று ___ "நம்ம ராசியும், விக்ஷ்ணுவும் எங்கெங்கு என்னென்ன பெயர்களில், உலா வந்து கொண்டிருக்கிறார்களோ" என்று.

இன்று காலையில்தான் இந்த விஷயத்தை மகளிடமும்,இவரிடமும் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தேன். 'லன்ச்'சுக்கு உள்ளே நுழையும்போதே, "அப்படின்னா இந்த வாரம் ஃபார்மர்ஸ் மார்க்கெட் போவது கட்டா? எதுக்கும் ஃப்லீ மார்க்கெட்டை பிடிச்சு வச்சுக்கோ, அதுவும் பறந்திடப்போவுது" என்றார்.

நான்தான் இப்போ நல்லா தெளிவாயிட்டேனே !! நானும் பதிலுக்கு, "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க‌, 'கார்த்தி'யை காப்பி போட்டு கொடுத்த‌மாதிரி, என் பொங்கலையும் ஸ்ட்ராங்கா ஒரு டீ போட்டுத் தந்தாலும் தரலாம்" என்றேன் .

Monday, December 16, 2013

பொங்கல் ஸ்பெஷ‌ல் !!!



எங்கள் ஊரில் மற்றெந்த பண்டிகைகளையும்விட பொங்கல் பண்டிகை விசேஷமானது. மற்ற பண்டிகைகள் எல்லாம் வந்து ஓரிரண்டு நாட்களிலேயே காணாமல் போய்விடும். ஆனால் பொங்கல் மட்டும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக மக்களுடன் கூடவே வருவதுபோல் ஓர் உணர்வு இருக்கும்.

தை முதல் தேதிதான் பொங்கல் என்றாலும் எங்கள் கிராமத்தில் மார்கழி முதல் தேதியிலேயே எல்லோரும் பொங்கலுக்குத் தயாராகிவிடுவார்கள். 

அன்று காலையே  ஒவ்வொரு வீட்டுக்கும் நிறைய‌ வெள்ளமணக் கட்டிகளும், செம்மண் கட்டிகளும் கொண்டுவந்து தருவார்கள். இவை உருண்டை உருண்டையாக இருக்கும். பொங்கலின்போது இந்த உருண்டைகளைத் தண்ணீரில் ஊறவைத்து கோலம் போடுவோம். சிலர் வீட்டைப் புதுப்பித்து சிவப்பும், வெள்ளையுமாக‌ வர்ணம் தீட்டவும் பயன்படுத்துவர்.

மார்கழியை பீடை மாதம் என்பார்கள். இரவில் கெட்டகெட்ட கனவெல்லாம் வருமாம். அந்த பீடையைக் கழிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாள் இரவும் ஒவ்வொரு தெருவாக நல்லிரவு பனிரண்டு மணியளவில் சங்கு ஊதிக்கொண்டும், மணி அடித்துக்கொண்டும் இரண்டு பேர் செல்வார்கள். அப்போதுதான் ஊருக்கு பீடை கழிந்து, காத்துகருப்பு அண்டாது இருக்கும் என்பதால்தான் இந்த ஏற்பாடாம்.

ஆனால் எனக்கெல்லாம், என்னை மாதிரியே நிறைய பேர்களுக்கும் அந்த சங்கு ஓசையை நல்லிரவில் கேட்கும்போது பயம்னா பயம், அப்படியொரு பயமாக இருக்கும்.  தினமும் தூங்கப் போகும்போது,  'சங்கு சத்தம் வரும்போது நான் விழிக்கக்கூடாது' என்று சாமியையெல்லாம் வேண்டிக்கொள்வோம்.

சத்தம் வரும்போது விழித்தால் தீர்ந்தோம். விடியவிடிய பயந்து நடுங்கி, தூக்கம் வராமல், இப்படி அப்படி ஆடாமல் அசையாமல் படுத்திருப்போம். நம்முடன் சேர்ந்து நம் வீட்டில் உள்ள பயப்படும் ஆட்களும் விழித்துக்கொண்டால் ஓரளவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்.

பெரும்பாலும் எல்லோரது வீடுகளும் தரை, சுவர் என எல்லாமும் மண்ணாலேயே இருக்கும். முதலில் அவர்கள் செய்வது வீட்டில் எலி வளை, எறும்புவளை என இருக்கும் ஏகப்பட்ட வளைகளை ஒழிப்பதுதான்.

அடுத்து வீடு முழுவதும் ஒட்டடை அடிக்கப்படும். ஒட்டடைக்குச்சி எல்லோரது வீட்டிலும் இருக்காது. இந்த ஒரு மாதமும் அதற்குதான் ஏகக் கிராக்கி. புதிதாக தென்னை மரக் கீற்றிலிருந்து குச்சிகள் எடுத்து துடைப்பமாக்கி சுத்தம் செய்யப்  பயன்படுத்துவார்கள்..

தோட்டத்தில் அல்லது கழனியில் ஒரு பள்ளம் வெட்டி, அதிலிருந்து மண்ணை எடுத்துவந்து குழைத்து வீட்டு சுவர், தரை, வீட்டின் வெளியில் வாயிற்படியின் இரண்டு பக்கமும் நீளமாக, அரை அடி உயரத்திற்கு சிறிய திண்ணைகள்போல் செய்வார்கள்.

தெரு வாசலில் உள்ள மண்ணைப் பெயர்த்துவிட்டு, புது மண்போட்டு செப்பனிடல் நடக்கும். புதிதாக மண் போட்ட இடங்களில் தினமும் சாணம் போட்டு மெழுகி வைப்பார்கள். அதேபோல் எல்லோரது வீட்டிலும் புது மண் அடுப்பு போடப்படும்.

மேலே குறிப்பிட்ட வேலையையெல்லாம் எங்கள் வீட்டிலும் செய்ய வேண்டும் என நானும் என் தம்பியும் நினைப்பதுண்டு. நாங்கள் இருவரும் எங்கள் அம்மாவைப் படுத்தியெடுப்போம். "சும்மா இருக்கமாட்டீங்களா நீங்க‌, இருக்கற வேலையில இதுங்க‌வேற' என்பார். அதனால் பக்கத்து வீடு, எதிர் வீடு என வேடிக்கைப் பார்க்கப் போயிடுவோம்.

இப்போது எல்லா வீடுகளும் சிமெண்ட் வீடுகளாகிவிட்டன. மண்தரையைப் பார்ப்பதே அரிது. பெண்களுக்கும் வேலை மிச்சமாச்சு. 

இந்த ஒரு மாதமும் வீட்டு வாசலில் விதம்விதமாகக் கோலம் போடுவார்கள். அக்காக்களிடையே "எங்கள் வீட்டில் இத்தனை புள்ளிக்கோலம், உங்கள் வீட்டில் எத்தனைப்புள்ளி கோலம்?" என தினமும் ஆராய்ச்சியே நடக்கும்.

என்னையெல்லாம் ஆட்டத்திலேயே சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இந்த ஆட்டத்தில் சேர பல வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. எனக்கென ஒருசில வீடுகள் இருக்கும். ஒரு அக்காவுக்கு குழந்தைகள் கிடையாது. அவருக்கு கோலமாவால் ஒருகோடு கூட போடவராது. அவர் என்னை ஒரு வி.ஐ.பி யை அழைத்து செல்வதுபோல் வந்து கூட்டிக்கொண்டு போவார் அவர் வீட்டில் கோலம்போட.

இரண்டு வீடுகளில் ஆறு, எட்டு என அண்ணன்கள் மட்டுமே. அந்தப் பெரியம்மாக்கள் என்னைக் கூப்பிட்டு கோலம் போடச் சொல்வார்கள். 'பாப்பா எவ்ளோ அழகா கோலம் போடுது'ன்னு சொன்னால் போதும், எனக்கு நோபல் பரிசு கிடைத்த சந்தோஷம் வந்துவிடும்.

ஆடிமாதம் போட்டுவைத்த பூசணிக் கொடிகள் எல்லாம் மார்கழியில்தான் பூக்கள் பூக்க ஆரம்பித்திருக்கும். அவற்றைப் பறித்து வந்து, சாணத்தை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, கோலத்தின் இடையில் ஆங்காங்கே வைத்து அதன்மேல் பூக்களை வைத்து அழகுபடுத்துவர்.

சில சமயங்களில் காலைப்பனிக்கு பயந்து முதல்நாள் மாலையே மொட்டுகளைப் பறித்துவந்து தண்ணீரில் போட்டு வைத்து காலையில் பார்த்தால் எல்லாம் அழகாக மலர்ந்திருக்கும்.

இந்த ஒரு மாதத்தில் சொந்தக் கழனியில் விளைந்த புது நெல்லைக் காயவைத்து அரிசியாக்கி பொங்கல் செய்ய புது பச்சரிசி தயார் செய்து எடுத்து வைப்பார்கள்.

இந்த ஒரு மாதமும் கோலமாவு, மண்பாத்திரங்கள்,  பலூன்காரர், வளையல்மணி விற்பவர்கள் என வரிசைகட்டி வந்து வியாபாரம் செய்து அந்த நாளைய பொருளாதாரத்தை உயர்த்தினார்கள்.

மார்கழி மாதக் குளிரில் சோம்பல்பட்டு யரும் முடங்கிவிடாமல், தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளக்கூட இந்த ஏற்பாடெல்லாம் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம்கூட வருவதுண்டு.

தை மாதம் முதல் தேதியன்று, அதாவது பெரும்பொங்கல் அன்று எல்லோரது வீடும் புது வீடு போலவே காட்சியளிக்கும்.                ......... (தொடரும்)


எங்க வீட்டு பொங்கல் கதையைக் கேட்டுட்டு சும்மா போகலாமா !!!! அதான், கரும்பை துண்டுகள் போட்டு வச்சிருக்கேன், எடுத்து கடிச்சிட்டே போங்க !!!

Saturday, December 14, 2013

பேர் வைக்கலாம் வாங்க !!


                                                    ஹலோ, ஏன் சோகமா இருக்க ?


என்ன ஆச்சு ! கண்ணெல்லாம் கலங்குது ? தூசு ஏதும் பட்டுடுச்சோ ? என்னதிது ! அழவே ஆரம்பிச்சிட்ட !!


அதுவா, இன்னைக்கு வலைச்சரத்துல, சித்ராவோட பிரிவுபசார விழாவுக்கு போய்ட்டு வந்தேனா, அங்க அவங்க பேசினத கேட்டு அழுகாச்சி, அழுகாச்சியா வருது.

இதுக்கெல்லாமா அழுவாங்க, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம் வா !!! சரியாப்போயிடும் !!


இது என்ன பறவைன்னு தெரியலீங்க. ம்ம்..ம‌யில் ?....இல்லைன்னு நினைக்கிறேன் ....கொக்கு ? சான்ஸே இல்லை, ரெண்டு கால் இருக்கறதால கொக்கும் இல்லை....அன்னம் ?....இதுவரை நேரில் நான் பார்த்ததில்லை, ஒருவேளை அன்னமாக‌த்தான் இருக்குமோ !! யாராவது வந்து சொன்னால் நன்றாக இருக்கும் .

Wednesday, December 11, 2013

விழுந்தது எதனால்..... ?


சுந்தர் திங்கள் கிழமை காலை 9:30 மணிக்குமேல் பழங்களைப் பார்க்கக் கிளம்பிப் போனதும் எப்போதும்போல் நானும் 'வாக்' போகத் தயாரானேன். ஒரு வாரமாக குளிர், ஊசி மாதிரி குத்துவதால் நடை நேரத்தை காலை 10 to 11 ஆக மாற்றிக்கொண்டு  'வாக்' போகக் கிளம்பி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

நடக்கும்போது இங்குள்ள நினைவுகளுடன் அம்மா முதல் முகமே தெரியாத வலையுலக நட்புகள்வரை கற்பனையில் வந்துவந்து போவார்கள். இன்று கொஞ்சம் வித்தியாசமான நினைவுகள் வந்தன. வலைச்சரத்தில் முதல்நாள் பதிவு வந்தாச்சு. எல்லோரும் வந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் சொன்னதால் ஏதோ உறவுகளுடன் திருவிழாவிற்கு போய்வந்த ஓர் உணர்வு.

அந்த சந்தோஷத்துடனே சென்று கொண்டிருக்கும்போதுதான் கவனித்தேன், செடிகளுக்குப் பாய்ச்சிய ஒருவிதமான கொழகொழப்பு நிறைந்த‌ கெமிக்கல் தண்ணீர் அந்தத் தெரு நடை பாதை முழுவதும் ஆக்கிரமித்திருந்ததை.

சில அடிகள் தூரம்தான் போயிருப்பேன் ஒரு 15 வயது, வெள்ளைவெளேரென, ஒல்லியான, உயர‌மான, ஸ்கூல் பையன் தன் புத்தகப் பையுடன் ஜுரத்துடன் வந்ததுபோல் ஹும் ஹும் என்று முணகிக்கொண்டே மிதிவண்டியை ஓட்டிச் செல்லாமல், தள்ள முடியாமல் தள்ளிக்கொண்டு  சென்றான்.

அவனைப் பார்த்ததும் பாவமாக இருந்தது. அருகில் வந்து கடந்த‌போதுதான் தெரிந்தது, அவன் துணியெல்லாம் திட்டுத்திட்டாக ஈரம் இருந்ததை. பாவம் இந்த கொழகொழ தண்ணீரில் வழுக்கி விழுந்து நடக்க முடியாமல் நடந்துபோகிறான் போல, இப்படியே நாள் முழுவதும் எப்படி வகுப்பறையைக் கவனிப்பது என்று நினைத்துக்கொண்டே சென்றேன்.

நல்லவேளை, அவன் என் முன்னால் விழாமல் இருந்தானோ, தப்பித்தேன். இதுவே என் முன்னால் விழுந்திருந்தால் என் நிலைமை தர்மசங்கடத்திற்கு உள்ளாகியிருக்கும். சிறியவர், பெரியவர் என்றில்லை, யார் கீழே விழுந்தாலும் கட்டாயம் என்னைப் பார்த்து கோபக் கணையை வீசாமல் போகமாட்டார்கள். அப்படியானால் நான் செய்வது.......? என்னை நானே மாற்றிக்கொள்ள வேண்டும்.

சில அடிகள்தான் மேலே சென்றிருப்பேன், சொய்ய்ய்ங்... நொடிக்கும் குறைவான நேரத்தில் என்ன நடந்ததுன்னே தெரியாது, நான் ஒரு காலை மடக்கியும் ஒரு காலை நீட்டியும் கீழே உட்கார்ந்திருக்கிறேன். என்ன நடந்திருக்கும் என சுதாரித்து எழுந்திருக்கக்கூட யோசிக்காமல் விழுந்துவிழுந்து சிரித்தேன்.

நம்புங்க, சுற்றிலும் யாரையுமே காணோம். இருந்திருந்தால் 'என்ன இது யாரோ விழுந்த மாதிரி இப்படி சிரிக்குதே' என்று நினைத்துக் குழம்பியிருப்பர். குளிர் அதிகமாக இருப்பதால் இன்று வழியில் யாரையும் காணோம். !

நல்ல வேளை, உட்கார்ந்த நிலையிலிருந்தே ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. இடது முட்டிப் பகுதியில் மட்டும் லேஸான வீர அடையாளத்துடன் அதாங்க சிறிது ஈரத்துடன் நடையைக் கட்டினேன்.

இப்போது வலைச்சரமாவது ஒன்னாவது ! நினைவு முழுவதும் சிரிப்பும் எதனால் விழுந்தேன் என்ற நினைவுகளுடனும்தான்.

இவ்வளவு நாளும் இந்த வழியில்தானே நடக்கிறேன். இன்று மட்டும் என்ன வந்தது? இதே ஈரத்தில் பலமுறை போயிருக்கிறேனே! இது எனக்குப் பிடித்தமான ஒன்றாச்சே.

சுந்தருக்கும், மகளுக்கும் ஃபோன் செய்து விஷயத்தை சொன்னால், அவர்களிருவருமே சொல்லி வைத்தாற்போல் சில நிமிடங்கள் விடாமல் சிரித்துவிட்டு, புரியாத சிரிப்பு மொழியில் ஏதோ ஒன்றை சொன்னார்கள். அது "வரவா, ஹாஸ்பிடல் போகணுமா", என்பதாகத்தான் இருக்கும் என நானே அதை மொழி பெயர்த்துக்கொண்டேன்.

 'வாக்' முழுவதும் ஒரே யோசனை + சிரிப்பு. எதனால் இது நடந்தது? அப்படியானால்.......? இன்று பிறந்த நாள்கூட இல்லையே ஒரு வயது அதிகமாக !

 சரி வீட்டுக்குப் போனதும் காலண்டரில் மறக்க முடியாத இன்றைய தேதியை, அதாங்க ஏதோ ஒன்று ஆரம்பமாவதைக் குறித்து வைக்க வேண்டும் என நடையைக் கட்டினேன்.

இனி பார்த்து ஜாக்கிரதையாகத்தான் நடக்க வேண்டுமோ! ஆனாலும் ஒரு மணி நேர நடையில் இரண்டு நிமிடங்கள் முன்னாலேயே வீட்டிற்கு வந்துவிட்டேன். சில நாட்களில் இரண்டு நிமி கூடுதலாகக்கூட ஆகும். ஆனால் இன்று இரண்டு நிமி முன்னாலேயே வந்துவிட்டேனே. விழுந்ததால் குறைந்தது 10 நிமிடங்களாவது லேட்டாக வந்திருக்க வேண்டுமே.

வீட்டிற்குள் நுழைந்ததும் சோகமாக காலண்டரில் அந்த‌ தேதியை பேனாவால் ஒரு வட்டம்போட்டு, சில வரிகளையும் எழுதி வைத்தேன்.

இவர் 'லன்ச்'சுக்கு வீட்டுக்கு வந்தார். 'யானை வரும் பின்னே......' பழமொழியைப்போல் முதலில் சிரிப்பு சத்தம்தான் கேட்டது. நானும் விழுந்துவிழுந்து சிரித்தேன்.

இவர் போன‌ பிறகு உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். நான் விழுந்தது சரி, ஆனால் அந்த குட்டிப் பையன்.......? இதே கேள்வி பலமுறை திரும்பத்திரும்ப‌ வந்து அலையடித்தது.

பையன் விழுந்தால் மட்டும் நீர் காரணம், நான் விழுந்தால் மட்டும்......?  அதானே  !! 

அடித்துப்பிடித்து ஓடி காலண்டரில் இருந்த வட்டத்தையும், எழுத்துக்களையும் அழிப்பானால் அழிக்க முடியாது என்பதால் விரலாலேயே சுரண்டி எடுத்துவிட்டேன்.

சுரண்டல் இருப்பதால் பார்க்கும்போதெல்லாம் அது நினைவுக்கு வரும் என்று நினைத்து காலண்டரின் பக்கத்தையே மாற்றி, அதற்குள் ஜனவரி 2014 என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறது.

                                                                   ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Saturday, December 7, 2013

ஒத்தக்கால்ல நின்னாவது போஸ் கொடுத்திட்டோமில்ல !!


நம்புங்க, (கொ)க்குக்கு ஒரு கால்தான் !!!


ஒருக்கால் நம்ப முடியலைன்னா............. !!


 நம்பியாச்சு, நெஜமா இவ‌ர் கொக்கேதான் !!


அவ்வ்வ்வ்வ், கடேஏஏசில‌ இப்படி (என்)காலவாரி விட்டுடிச்சே !!

Thursday, December 5, 2013

நேரம்.....நல்ல நேரம் !!

புதுமனை புகுவிழாவிற்கு முதல் நாள் மாலையே வந்திருந்த வெளியூர், உள்ளூர் உறவுகள் எல்லாம் இரவு சாப்பாடு முடிந்ததும், அங்கேயே புது வீட்டில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு, அதிகாலை கிரஹப்பிரவேச‌ம் முடிந்ததும், காலை சாப்பாடு முடிந்ததும் முடியாததுமாக அவரவர் ஊருக்கு செல்ல ஓவ்வொருவராக கிளம்பிக்கொண்டிருந்தனர்.

ஆமாம், வேலைக்கு செல்ல வேண்டிய பெரிய‌வர்கள், பள்ளிக்குத் திரும்ப வேண்டிய பிள்ளைகள் என ஆளுக்கொரு திசையில் வாகனத்தைப் பிடிக்க பறந்துகொண்டிருந்தனர்.

மிக நெருங்கிய உறவுகள் மட்டுமே, மேற்கொண்டு அங்கு தங்கியிருந்து, மீதமுள்ள வேலைகளைப் பார்த்துக்கொண்டும், அந்த சாக்கில் தங்கள் உறவுகளோடு அள‌வளாவியும் நேரத்தைப் போக்கினர்.

அந்த நெருங்கிய உறவுகளில் பாலாவும் ஒருத்தி. உறவுப் பிள்ளைகளுடன் த‌ன்னுடைய‌ இரண்டு வயது மகளும் ஆர்வமாக விளையாடியதால் அவளால் மகளை அங்கிருந்து பிரித்து கூட்டிக்கொண்டு செல்ல மனமில்லாமல், தான் வேலை செய்யும் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அன்றைக்கு விடுப்பு எடுத்துக்கொள்வதாகக் கூறிவிட்டு, வேலைக்குப் போகாமல் மட்டம் போட்டுவிட்டாள்.

கிரஹப்பிரவேச நிகழ்ச்சியை நல்லவிதமாக‌ முடித்த சந்தோஷத்திலும், களைப்பிலும்  த‌ன் சகோதரி அவள் அருகில் வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறாரே தவிர அவரது பார்வை முழுவதும் பாலாவின் மகளைவிட்டு துளியளவும் நகரவில்லை.

சகோதரி பாலாவைப் பார்த்து,  "ஏய், நான் ஒன்னு சொல்லுவேன், கேட்பியா?" என்றார்.

சகோதரி எதையோ சொல்ல வருகிறார் என்ற ஆவலில் 'சொல்லு' என்றாள் பாலா.

'உன் மகள் பிறந்த நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன், அதனால...".

அதற்குள் பாலா இடைமறித்து "அதனால?" என்றாள் சந்தேகத்துடன்.

"அவள் ஜாதகம் சரியில்லைன்னு நினைக்கிறேன். நல்ல ஜோஸியராப் பார்த்து அவள் ஜாதகத்தைக்காட்டு" என்றார் சகோதரி.

"அப்படியா? அவள் ஜாதகம் சரியில்லைன்னு எத வச்சி சொல்ற" என்றாள் பாலா.

"ஒரு வீட்ல ஒரு குழந்தை பிறந்துச்சுன்னா, நல்ல வேலை கிடைப்பது, மனை வாங்குவது, வீடு கட்டுவதுன்னு நிறைய வசதி வாய்ப்புகள் பெருகணும். இதில் எதுவுமே உனக்கு அமையலயே", என்றார்.

மேலும் "இப்போ எங்களையே எடுத்துக்கோ, என் பையன் பிறந்ததும் இந்த மனையை வாங்கினோம், அதற்குள் வீடும் கட்டிவிட்டோம், அவனின் நல்ல நேரம் இன்னும் சில மனைகளும் வாங்கும் பாக்கியம் அமைந்தது, நம் அப்பாகூட சொன்னார், என் பையனின் ஜாதகம் மாதிரி எல்லோருக்கும் அமையாதாம்" என்று பெருமையுடன் சொன்னார், பாலாவின் மகளுடன் விளையாடிக்கொண்டிருந்த தன‌து மூன்று வயது மகனைப் பார்த்து .

"அதுதான் அப்பாவே சொல்லிட்டாரே, பிறகென்ன?" என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் பாலா.

வசதி வாய்ப்புகள் பெருகினால் மட்டும்தான் மகிழ்ச்சியா என்ன ? பண வசதி மட்டும்தான் வாழ்க்கையா? இல்லை அதுதான் அதிர்ஷ்டமா?

பாலாவுக்கு எந்தக் குறையும் இல்லாமல் நன்றாகத்தானே இருக்கிறாள். அப்படியே குறைகள் இருந்தாலும் அதற்கும் த‌ன் குட்டிப் பாப்பாவுக்கும் என்ன சம்ப‌ந்தம்? புரியவில்லை அவளுக்கு.

"சரி, என் மகளோட‌ பிறந்த நேரம் & ஜாதகம் சரியில்லைன்னே வச்சிப்போம், அதுக்கு என்ன செய்வதாம்?" என்றாள் பாலா.

"ஜாதகத்தை நல்ல ஜோசியரிடம் காட்டினால் அவரே என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை சொல்லுவார், அதை நீ செய்துவிட்டால் தோஷம் ஏதும் இருந்தால் நீங்கிவிடும்" என்றார் சகோதரி.

'இதுதான்' என்று சகோதரி முடிவே பண்ணிவிட்டார்போல் தெரிந்தது பாலாவுக்கு.

"என்னதான் சகோதரி உறவு என்றாலும் இவர் யார் த‌ன் மகளைக் குறை சொல்ல ? எந்த சரியில்லாத ஜாதகமா இருந்தா என்ன? எங்கள் வீட்டு பொக்கிஷம் அல்லவா எங்கள் மகள் !" என பாலா தனக்குத்தானே  சொல்லிக்கொண்டு, தன் சகோதரியைப் பார்த்து, "நீங்கவே முடியாத தோஷம்னு ஜோஸியர் சொல்றாருன்னு வச்சுப்போம், அப்போ என்ன செய்வதாம்?" என்றாள்.

இதை சற்றும் எதிர்பாராத சகோதரி "ஏய், நீ இதுமாதிரி ஏதாவது ஏடாகூடமா சொல்லுவேன்னு எனக்கு முன்னமே தெரியும், இருந்தாலும் நீ நல்லா இருக்கணுமேன்னு சொன்னேன், இதைக் கேட்பதும் கேட்காததும் உன் விருப்பம்" என்றார்.

ஏன்தான் இன்றைக்கு விடுப்பு எடுத்தோமோ என்றிருந்தது பாலாவுக்கு.

இதையெல்லாம் யோசித்து சொன்ன தன் சகோதரியால், அந்தக் குட்டிப் பாப்பா பின்னாளில் நல்ல நிலைக்கு வராமலா போய்விடப்போகிறது என்பதை முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டதே !!

Tuesday, December 3, 2013

பொழுது போகாதபோது.......(தொடர்ச்சி)


எங்கிருந்து 'க்ளிக்'கினேன் என்பது இப்போது தெரிந்துவிடப்போகிறது  !


இவ்வளவு நேரமும் காருக்குள்ளிருந்து ரியர்வியூ மிரர் வழியாக 'க்ளிக்'கிவிட்டு...........


இப்போது கண்ணாடியைத் தவிர்த்துவிட்டு அப்படியே திரும்பி எடுத்தபோது.....

என் பொழுதைப் போக்குகிறேன் என்று சொல்லி உங்கள் பொழுதையெல்லாம் வீணடித்துவிட்டேன், ஹா   ஹா  !!

இது ஒரு ரெஸ்டாரண்ட். உள்ளே போனால் விரைந்து வெளியே வருவது கடினம். அதனால் இவர் மட்டும் போய் வாங்கிவருவார். நீண்ட நேரம் ஆகும்போது (இந்த குறிப்பிட்ட இடத்தில் காரை பார்க் செய்திருந்தால் மட்டும்) நானும் மகளும் சுவரில் தெரியும் அந்த பெரிய கண்ணாடி வழியாக‌ இவர் உள்ளே போய் ஆர்டர் செய்வது, வெயிட் பண்ணுவது, வாங்கிக்கொண்டு கதைத்திறந்து வெளியே வரப்போவது என ஒன்று விடாமல் காரின் ரியர்வியூ மிரர் வழியாகப் பார்த்து லைவ் கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டிருப்போம்.

இப்போதெல்லாம் நான் மட்டுமே தனியாக..... எவ்வளவு நேரம்தான் தனியாக கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டிருப்பது. சும்மா காமிராவை ரியர்வியூ மிரரை நோக்கி வைத்து வருகிறாரா என பார்த்துக் கொண்டிருந்தபோது எடுத்தவைதான் இந்தப் படங்கள்.

Monday, December 2, 2013

பொழுது போகாதபோது....



ஒரே காட்சிதான், ஆனால் எதிரெதிர் திசையில்....?

Any 'க்ளூ'...........அதுதான் இரண்டாவது படத்தில் ஒட்டிக்கிட்டிருக்கே !

என்னன்னு யோசிச்சிட்டு, நாளையே வந்திடுறேங்க‌ !!