Wednesday, December 11, 2013

விழுந்தது எதனால்..... ?


சுந்தர் திங்கள் கிழமை காலை 9:30 மணிக்குமேல் பழங்களைப் பார்க்கக் கிளம்பிப் போனதும் எப்போதும்போல் நானும் 'வாக்' போகத் தயாரானேன். ஒரு வாரமாக குளிர், ஊசி மாதிரி குத்துவதால் நடை நேரத்தை காலை 10 to 11 ஆக மாற்றிக்கொண்டு  'வாக்' போகக் கிளம்பி தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

நடக்கும்போது இங்குள்ள நினைவுகளுடன் அம்மா முதல் முகமே தெரியாத வலையுலக நட்புகள்வரை கற்பனையில் வந்துவந்து போவார்கள். இன்று கொஞ்சம் வித்தியாசமான நினைவுகள் வந்தன. வலைச்சரத்தில் முதல்நாள் பதிவு வந்தாச்சு. எல்லோரும் வந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் சொன்னதால் ஏதோ உறவுகளுடன் திருவிழாவிற்கு போய்வந்த ஓர் உணர்வு.

அந்த சந்தோஷத்துடனே சென்று கொண்டிருக்கும்போதுதான் கவனித்தேன், செடிகளுக்குப் பாய்ச்சிய ஒருவிதமான கொழகொழப்பு நிறைந்த‌ கெமிக்கல் தண்ணீர் அந்தத் தெரு நடை பாதை முழுவதும் ஆக்கிரமித்திருந்ததை.

சில அடிகள் தூரம்தான் போயிருப்பேன் ஒரு 15 வயது, வெள்ளைவெளேரென, ஒல்லியான, உயர‌மான, ஸ்கூல் பையன் தன் புத்தகப் பையுடன் ஜுரத்துடன் வந்ததுபோல் ஹும் ஹும் என்று முணகிக்கொண்டே மிதிவண்டியை ஓட்டிச் செல்லாமல், தள்ள முடியாமல் தள்ளிக்கொண்டு  சென்றான்.

அவனைப் பார்த்ததும் பாவமாக இருந்தது. அருகில் வந்து கடந்த‌போதுதான் தெரிந்தது, அவன் துணியெல்லாம் திட்டுத்திட்டாக ஈரம் இருந்ததை. பாவம் இந்த கொழகொழ தண்ணீரில் வழுக்கி விழுந்து நடக்க முடியாமல் நடந்துபோகிறான் போல, இப்படியே நாள் முழுவதும் எப்படி வகுப்பறையைக் கவனிப்பது என்று நினைத்துக்கொண்டே சென்றேன்.

நல்லவேளை, அவன் என் முன்னால் விழாமல் இருந்தானோ, தப்பித்தேன். இதுவே என் முன்னால் விழுந்திருந்தால் என் நிலைமை தர்மசங்கடத்திற்கு உள்ளாகியிருக்கும். சிறியவர், பெரியவர் என்றில்லை, யார் கீழே விழுந்தாலும் கட்டாயம் என்னைப் பார்த்து கோபக் கணையை வீசாமல் போகமாட்டார்கள். அப்படியானால் நான் செய்வது.......? என்னை நானே மாற்றிக்கொள்ள வேண்டும்.

சில அடிகள்தான் மேலே சென்றிருப்பேன், சொய்ய்ய்ங்... நொடிக்கும் குறைவான நேரத்தில் என்ன நடந்ததுன்னே தெரியாது, நான் ஒரு காலை மடக்கியும் ஒரு காலை நீட்டியும் கீழே உட்கார்ந்திருக்கிறேன். என்ன நடந்திருக்கும் என சுதாரித்து எழுந்திருக்கக்கூட யோசிக்காமல் விழுந்துவிழுந்து சிரித்தேன்.

நம்புங்க, சுற்றிலும் யாரையுமே காணோம். இருந்திருந்தால் 'என்ன இது யாரோ விழுந்த மாதிரி இப்படி சிரிக்குதே' என்று நினைத்துக் குழம்பியிருப்பர். குளிர் அதிகமாக இருப்பதால் இன்று வழியில் யாரையும் காணோம். !

நல்ல வேளை, உட்கார்ந்த நிலையிலிருந்தே ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. இடது முட்டிப் பகுதியில் மட்டும் லேஸான வீர அடையாளத்துடன் அதாங்க சிறிது ஈரத்துடன் நடையைக் கட்டினேன்.

இப்போது வலைச்சரமாவது ஒன்னாவது ! நினைவு முழுவதும் சிரிப்பும் எதனால் விழுந்தேன் என்ற நினைவுகளுடனும்தான்.

இவ்வளவு நாளும் இந்த வழியில்தானே நடக்கிறேன். இன்று மட்டும் என்ன வந்தது? இதே ஈரத்தில் பலமுறை போயிருக்கிறேனே! இது எனக்குப் பிடித்தமான ஒன்றாச்சே.

சுந்தருக்கும், மகளுக்கும் ஃபோன் செய்து விஷயத்தை சொன்னால், அவர்களிருவருமே சொல்லி வைத்தாற்போல் சில நிமிடங்கள் விடாமல் சிரித்துவிட்டு, புரியாத சிரிப்பு மொழியில் ஏதோ ஒன்றை சொன்னார்கள். அது "வரவா, ஹாஸ்பிடல் போகணுமா", என்பதாகத்தான் இருக்கும் என நானே அதை மொழி பெயர்த்துக்கொண்டேன்.

 'வாக்' முழுவதும் ஒரே யோசனை + சிரிப்பு. எதனால் இது நடந்தது? அப்படியானால்.......? இன்று பிறந்த நாள்கூட இல்லையே ஒரு வயது அதிகமாக !

 சரி வீட்டுக்குப் போனதும் காலண்டரில் மறக்க முடியாத இன்றைய தேதியை, அதாங்க ஏதோ ஒன்று ஆரம்பமாவதைக் குறித்து வைக்க வேண்டும் என நடையைக் கட்டினேன்.

இனி பார்த்து ஜாக்கிரதையாகத்தான் நடக்க வேண்டுமோ! ஆனாலும் ஒரு மணி நேர நடையில் இரண்டு நிமிடங்கள் முன்னாலேயே வீட்டிற்கு வந்துவிட்டேன். சில நாட்களில் இரண்டு நிமி கூடுதலாகக்கூட ஆகும். ஆனால் இன்று இரண்டு நிமி முன்னாலேயே வந்துவிட்டேனே. விழுந்ததால் குறைந்தது 10 நிமிடங்களாவது லேட்டாக வந்திருக்க வேண்டுமே.

வீட்டிற்குள் நுழைந்ததும் சோகமாக காலண்டரில் அந்த‌ தேதியை பேனாவால் ஒரு வட்டம்போட்டு, சில வரிகளையும் எழுதி வைத்தேன்.

இவர் 'லன்ச்'சுக்கு வீட்டுக்கு வந்தார். 'யானை வரும் பின்னே......' பழமொழியைப்போல் முதலில் சிரிப்பு சத்தம்தான் கேட்டது. நானும் விழுந்துவிழுந்து சிரித்தேன்.

இவர் போன‌ பிறகு உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். நான் விழுந்தது சரி, ஆனால் அந்த குட்டிப் பையன்.......? இதே கேள்வி பலமுறை திரும்பத்திரும்ப‌ வந்து அலையடித்தது.

பையன் விழுந்தால் மட்டும் நீர் காரணம், நான் விழுந்தால் மட்டும்......?  அதானே  !! 

அடித்துப்பிடித்து ஓடி காலண்டரில் இருந்த வட்டத்தையும், எழுத்துக்களையும் அழிப்பானால் அழிக்க முடியாது என்பதால் விரலாலேயே சுரண்டி எடுத்துவிட்டேன்.

சுரண்டல் இருப்பதால் பார்க்கும்போதெல்லாம் அது நினைவுக்கு வரும் என்று நினைத்து காலண்டரின் பக்கத்தையே மாற்றி, அதற்குள் ஜனவரி 2014 என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறது.

                                                                   ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

11 comments:

  1. மகிழ்ச்சி வரிகளில் நன்றாகவே தெரிகிறது + சிறிது வலியுடன்...

    ReplyDelete
    Replies
    1. வலிகூட சில அடி தூரத்திலேயே காணாமல் போய்விட்டது. இன்னமும் நினைத்துநினைத்து சிரிப்புதான். வருகைக்கும் நன்றிங்க.

      Delete
  2. அடி எதுவும் படவில்லையே! உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். வலியையும் சிரிப்பால்
    மறக்கிறீர்கள் போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அடி ஏதும் இல்லீங்க. வலி இல்லாமல் போனதால்தான் ஜாலியா இருந்துச்சு.

      Delete
  3. என்னாச்சு? நீங்கள் நகைச்சுவையாகச் சொல்லியிருப்பதைப் படித்தால் சீரியஸ் இல்லை என்று தோன்றுகிறது. உங்களைப் பார்த்து நீங்களே சிரித்தது உங்கள் மன ஆரோக்கியத்தை காட்டுகிறது. இப்படியே பல ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் (கீழே விழாமல்) இருக்க வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. ம்ஹூம் வலியெல்லாம் இல்லீங்க. அத நெனச்சுநெனச்சு இன்னமும் சிரிப்புதான். சூப்பர் வாழ்த்துங்க.

      Delete
  4. விழுந்தது எதனால்....

    உங்களுடன் நாங்களும் விழுந்தோம்! சிரிப்பில்!

    ReplyDelete
    Replies
    1. சுவையான பின்னூட்டம்ங்க. உங்க முதல் வருகைக்கும் நன்றிங்க.

      Delete
  5. அடிபட்டதையும் சுவாரஸ்மாக சொல்லியுள்ளீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆதிவெங்கட்,

      வேறுவகையில் அடிபட்டிருந்தால் வலிச்சிருக்குமோ என்னவோ, கீழே விழுந்ததால் சிரிப்பு மட்டும்தான் வந்தது, நல்லவேளை வலியில்லை.

      Delete
  6. ithula sirika ena iruku..i dont like anyone laughed at anyone for their pain..nadakum pothu paathaila kavanam vachu nadanga chitrasundar

    ReplyDelete