திங்கள், 16 டிசம்பர், 2013

பொங்கல் ஸ்பெஷ‌ல் !!!எங்கள் ஊரில் மற்றெந்த பண்டிகைகளையும்விட பொங்கல் பண்டிகை விசேஷமானது. மற்ற பண்டிகைகள் எல்லாம் வந்து ஓரிரண்டு நாட்களிலேயே காணாமல் போய்விடும். ஆனால் பொங்கல் மட்டும் ஒரு மாத காலத்திற்கும் மேலாக மக்களுடன் கூடவே வருவதுபோல் ஓர் உணர்வு இருக்கும்.

தை முதல் தேதிதான் பொங்கல் என்றாலும் எங்கள் கிராமத்தில் மார்கழி முதல் தேதியிலேயே எல்லோரும் பொங்கலுக்குத் தயாராகிவிடுவார்கள். 

அன்று காலையே  ஒவ்வொரு வீட்டுக்கும் நிறைய‌ வெள்ளமணக் கட்டிகளும், செம்மண் கட்டிகளும் கொண்டுவந்து தருவார்கள். இவை உருண்டை உருண்டையாக இருக்கும். பொங்கலின்போது இந்த உருண்டைகளைத் தண்ணீரில் ஊறவைத்து கோலம் போடுவோம். சிலர் வீட்டைப் புதுப்பித்து சிவப்பும், வெள்ளையுமாக‌ வர்ணம் தீட்டவும் பயன்படுத்துவர்.

மார்கழியை பீடை மாதம் என்பார்கள். இரவில் கெட்டகெட்ட கனவெல்லாம் வருமாம். அந்த பீடையைக் கழிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாள் இரவும் ஒவ்வொரு தெருவாக நல்லிரவு பனிரண்டு மணியளவில் சங்கு ஊதிக்கொண்டும், மணி அடித்துக்கொண்டும் இரண்டு பேர் செல்வார்கள். அப்போதுதான் ஊருக்கு பீடை கழிந்து, காத்துகருப்பு அண்டாது இருக்கும் என்பதால்தான் இந்த ஏற்பாடாம்.

ஆனால் எனக்கெல்லாம், என்னை மாதிரியே நிறைய பேர்களுக்கும் அந்த சங்கு ஓசையை நல்லிரவில் கேட்கும்போது பயம்னா பயம், அப்படியொரு பயமாக இருக்கும்.  தினமும் தூங்கப் போகும்போது,  'சங்கு சத்தம் வரும்போது நான் விழிக்கக்கூடாது' என்று சாமியையெல்லாம் வேண்டிக்கொள்வோம்.

சத்தம் வரும்போது விழித்தால் தீர்ந்தோம். விடியவிடிய பயந்து நடுங்கி, தூக்கம் வராமல், இப்படி அப்படி ஆடாமல் அசையாமல் படுத்திருப்போம். நம்முடன் சேர்ந்து நம் வீட்டில் உள்ள பயப்படும் ஆட்களும் விழித்துக்கொண்டால் ஓரளவுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்.

பெரும்பாலும் எல்லோரது வீடுகளும் தரை, சுவர் என எல்லாமும் மண்ணாலேயே இருக்கும். முதலில் அவர்கள் செய்வது வீட்டில் எலி வளை, எறும்புவளை என இருக்கும் ஏகப்பட்ட வளைகளை ஒழிப்பதுதான்.

அடுத்து வீடு முழுவதும் ஒட்டடை அடிக்கப்படும். ஒட்டடைக்குச்சி எல்லோரது வீட்டிலும் இருக்காது. இந்த ஒரு மாதமும் அதற்குதான் ஏகக் கிராக்கி. புதிதாக தென்னை மரக் கீற்றிலிருந்து குச்சிகள் எடுத்து துடைப்பமாக்கி சுத்தம் செய்யப்  பயன்படுத்துவார்கள்..

தோட்டத்தில் அல்லது கழனியில் ஒரு பள்ளம் வெட்டி, அதிலிருந்து மண்ணை எடுத்துவந்து குழைத்து வீட்டு சுவர், தரை, வீட்டின் வெளியில் வாயிற்படியின் இரண்டு பக்கமும் நீளமாக, அரை அடி உயரத்திற்கு சிறிய திண்ணைகள்போல் செய்வார்கள்.

தெரு வாசலில் உள்ள மண்ணைப் பெயர்த்துவிட்டு, புது மண்போட்டு செப்பனிடல் நடக்கும். புதிதாக மண் போட்ட இடங்களில் தினமும் சாணம் போட்டு மெழுகி வைப்பார்கள். அதேபோல் எல்லோரது வீட்டிலும் புது மண் அடுப்பு போடப்படும்.

மேலே குறிப்பிட்ட வேலையையெல்லாம் எங்கள் வீட்டிலும் செய்ய வேண்டும் என நானும் என் தம்பியும் நினைப்பதுண்டு. நாங்கள் இருவரும் எங்கள் அம்மாவைப் படுத்தியெடுப்போம். "சும்மா இருக்கமாட்டீங்களா நீங்க‌, இருக்கற வேலையில இதுங்க‌வேற' என்பார். அதனால் பக்கத்து வீடு, எதிர் வீடு என வேடிக்கைப் பார்க்கப் போயிடுவோம்.

இப்போது எல்லா வீடுகளும் சிமெண்ட் வீடுகளாகிவிட்டன. மண்தரையைப் பார்ப்பதே அரிது. பெண்களுக்கும் வேலை மிச்சமாச்சு. 

இந்த ஒரு மாதமும் வீட்டு வாசலில் விதம்விதமாகக் கோலம் போடுவார்கள். அக்காக்களிடையே "எங்கள் வீட்டில் இத்தனை புள்ளிக்கோலம், உங்கள் வீட்டில் எத்தனைப்புள்ளி கோலம்?" என தினமும் ஆராய்ச்சியே நடக்கும்.

என்னையெல்லாம் ஆட்டத்திலேயே சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இந்த ஆட்டத்தில் சேர பல வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. எனக்கென ஒருசில வீடுகள் இருக்கும். ஒரு அக்காவுக்கு குழந்தைகள் கிடையாது. அவருக்கு கோலமாவால் ஒருகோடு கூட போடவராது. அவர் என்னை ஒரு வி.ஐ.பி யை அழைத்து செல்வதுபோல் வந்து கூட்டிக்கொண்டு போவார் அவர் வீட்டில் கோலம்போட.

இரண்டு வீடுகளில் ஆறு, எட்டு என அண்ணன்கள் மட்டுமே. அந்தப் பெரியம்மாக்கள் என்னைக் கூப்பிட்டு கோலம் போடச் சொல்வார்கள். 'பாப்பா எவ்ளோ அழகா கோலம் போடுது'ன்னு சொன்னால் போதும், எனக்கு நோபல் பரிசு கிடைத்த சந்தோஷம் வந்துவிடும்.

ஆடிமாதம் போட்டுவைத்த பூசணிக் கொடிகள் எல்லாம் மார்கழியில்தான் பூக்கள் பூக்க ஆரம்பித்திருக்கும். அவற்றைப் பறித்து வந்து, சாணத்தை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, கோலத்தின் இடையில் ஆங்காங்கே வைத்து அதன்மேல் பூக்களை வைத்து அழகுபடுத்துவர்.

சில சமயங்களில் காலைப்பனிக்கு பயந்து முதல்நாள் மாலையே மொட்டுகளைப் பறித்துவந்து தண்ணீரில் போட்டு வைத்து காலையில் பார்த்தால் எல்லாம் அழகாக மலர்ந்திருக்கும்.

இந்த ஒரு மாதத்தில் சொந்தக் கழனியில் விளைந்த புது நெல்லைக் காயவைத்து அரிசியாக்கி பொங்கல் செய்ய புது பச்சரிசி தயார் செய்து எடுத்து வைப்பார்கள்.

இந்த ஒரு மாதமும் கோலமாவு, மண்பாத்திரங்கள்,  பலூன்காரர், வளையல்மணி விற்பவர்கள் என வரிசைகட்டி வந்து வியாபாரம் செய்து அந்த நாளைய பொருளாதாரத்தை உயர்த்தினார்கள்.

மார்கழி மாதக் குளிரில் சோம்பல்பட்டு யரும் முடங்கிவிடாமல், தங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளக்கூட இந்த ஏற்பாடெல்லாம் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம்கூட வருவதுண்டு.

தை மாதம் முதல் தேதியன்று, அதாவது பெரும்பொங்கல் அன்று எல்லோரது வீடும் புது வீடு போலவே காட்சியளிக்கும்.                ......... (தொடரும்)


எங்க வீட்டு பொங்கல் கதையைக் கேட்டுட்டு சும்மா போகலாமா !!!! அதான், கரும்பை துண்டுகள் போட்டு வச்சிருக்கேன், எடுத்து கடிச்சிட்டே போங்க !!!

19 கருத்துகள்:

 1. :) nice to read Chitra akka!! Have seen these kinda sugarcane in shops here..once I bought a karumbu from indian store, but it was not sweet! Instead it was tangyyyy n tasteless! Errr!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mahi you should buy sugar canes from the farmers market instead of buying them from indian stores . i don't buy them anywhere else :)

   நீக்கு
 2. பல ஆதங்கங்கள் வரிகளில் புரிகிறது...

  கரும்பை துண்டா அது...?

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரும்புத் துண்டுகள்தான் இவை. இப்படியெல்லாம் நறுக்கி வைத்தால்தானே சாப்பிடுறாங்க. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

   நீக்கு
 3. பொங்கலுக்காக உங்கள் பிறந்த ஊருக்கு அழைத்து சென்று விட்டீர்களே! கரும்பைப் போல் இனிக்கிறது உங்கள் பதிவு. எதற்கு கரும்பு தனியாக!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மார்கழி முதல்தேதி என்றதும் நினைவுகள் ஊருக்குப்போய் திரும்பி வந்தது. என்னுடன் துணைக்கு நீங்களும் வந்தது மகிழ்ச்சிங்க.

   நீக்கு
 4. அழகான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். மிகவும் ரஸித்தேன். கரும்பாய் இனித்தது. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும், பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி ஐயா.

   நீக்கு
 5. உங்களை விஐபி மாதிரி கூப்பிட்டுக் கொண்டு போகும் அக்காவையும், நீங்கள் அவர் பின்னால் விஐபி மாதிரி நடந்து போவதையும் மனக்கண்ணால் கண்டு ரசித்தேன்.
  மார்கழி மாத மலரும் நினைவுகள் அற்புதம், சித்ரா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க வீட்ல இதைத் தொடாதே, அதை எடுக்காதேன்னு ஆயிரத்தெட்டு கண்டிஷன் போடுவாங்க. அந்த அக்கா வீட்ல நான் என்ன வேணா செய்யலாம். இன்னமும் இருக்கிறார். ஊருக்குப் போனால் பார்க்காமல் வரமாட்டேன்.

   நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசித்துப் பர்த்தது மகிழ்ச்சிங்க.

   நீக்கு
 6. ஊரைப் பற்றிய பொங்கல் நினைவுகள்....

  அந்தக் கரும்பை பார்த்ததும், எங்கப்பா எனக்காக சின்ன சின்னதா வெட்டி தந்தது நிழலாடியது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரும்புத் துண்டுகளைப் பார்த்ததும் அப்பாவின் நினைவுகளா !! படித்ததுமே எனக்கும் எங்க அப்பா வந்துவிட்டுப் போனார். கரும்பைப் போலவே நினைவுகளும் இனிமையானதுதான் .

   நீக்கு
 7. மார்கழியை பீடை மாதம் என்பார்கள்./// ipo than rendu naal munadi radio la villakam sonanga..athu peedai illa...peedu maatham...peedu endral perumai enbathu porul...maarkali perumaimigu maatham :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல விளக்கம், நன்றி ஞானகுரு. ரேடியோ கேட்பீங்களோ!! ஒரு காலத்தில் ரேடியோவும் கையுமாகத்தான் இருப்பேன். என் வீட்டுக்காரர் இன்றும் அப்படியேதான் இருக்கிறார்.

   மாதங்களில் சிறந்தது 'மார்கழி'ன்னு சொல்லுவாங்க. பிறகு எதுக்கு மாத்தி சொல்றாங்களேன்னு யோசித்ததுண்டு. இப்போ தெரிஞ்சு போச்சு. ஒருசிலர் அதிகாலை குளிரில் பஜனை போவதுண்டு.

   நீக்கு
  2. maarkali yoda siripa inonu iruku...bhagawad geethai la kannan archunan ta thaan yaar enpathalai vilakum pothu..maathangalil maargali endrar :) nandri :)

   நீக்கு
  3. என்றைக்காவது நேரம் கிடைத்து, கொஞ்சம் ஃப்ரீயாக இருந்தால் உங்களுக்குத் தெரிந்த ஆன்மீக விஷயங்களை உங்கள் ப்ளாகில் போடுங்க. ஆனால் அது தமிங்கிலீஷில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

   நீக்கு
  4. iraivanin virupapadi ellam nadakum :P lol ;) anyway thanks for your encouraging words..thanks :))

   நீக்கு
 8. பொங்கல் பற்றிய நினைவுகள்......

  நெய்வேலியில் மண் தரை, மண் வீடு என இல்லாவிட்டாலும் பெரிய வாசல்கள் இருக்கும் - அங்கே சாணி தெளித்தல், கோலம், பூசணிப் பூ போன்ற எல்லாம் உண்டு. இனிய நினைவுகள்......

  நினைவுகளை மீட்டெடுத்த பகிர்வு. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைதந்து, உங்க நினைவுகளையும் பகிர்ந்துகொண்டது மகிழ்ச்சிங்க.

   நீக்கு