Monday, January 20, 2014

டெய்ஸி மலர்கள் !!

கொஞ்ச நாட்களாகவே பதிவுகள் வழக்கத்துக்கு மாறாக‌ கொஞ்சம் சீரியஸாக போகவும், அதிலிருந்து கொஞ்சம் வெளியே வரும் விதமாகத்தான் இந்தப் பதிவு.

வசந்தம் வர முழுதாக இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், அதை வரவேற்கும் விதமாகவோ என்னவோ கண்ணைப் பறிக்கும் பல வண்ணங்களில்  இந்த டெய்ஸி மலர்களின் ஆதிக்கம் எங்கும் நிறைந்துள்ளது.

                         நாங்கள் பார்த்து ரசித்தவை.....இதோ உங்களுக்காகவும்....!! 


          <<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<


 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

Saturday, January 18, 2014

பொங்கல் ஸ்பெஷல் _ திருநாள் _ ஆற்றுத்திருவிழா


தை மாதம் 5 ந் தேதி திருநாள். தெண்பெண்ணை ஆறு ஓடும் வழியில் உள்ள ஊர்களில் எல்லாம் ஆற்றுத் திருவிழா வெகு சிறப்பாக நடக்கும். அதிலும் மேம்பாலம் இருந்துவிட்டால்.....சொல்லவேத் தேவையில்லை ! எங்கு பார்த்தாலும் ஏராளமான கடைகளும் மக்கள் வெள்ளமும் இருக்கும். சுற்று வட்டாரத்திலுள்ள சாமிகள் எல்லாம் வந்திருக்கும். ஆற்றில் எவ்வளவு (அப்போது) தண்ணீர் ஓடினாலும் ஊற்று தோண்டித்தான் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடக்கும்.

இப்போது என்னுடன் திருவிழாவுக்கு வருகிற நீங்க எல்லோரும் 1 முதல் 8 ஆம் வகுப்புக்குள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்த வயதைக் கற்பனை பண்ணிக்கோங்க. அப்போதான் ஜாலியா, சோர்வாகாம, முக்கியமா கால் வலிக்காம‌  நடக்க முடியும். வேடிக்கை பார்த்துட்டே பின்னாலே வராம நின்னுட்டிங்கன்னா தொலைஞ்சிருவீங்க. அதனால கவனமா பின்னாலேயே வரணும்.

பண்ருட்டி ஆற்றுத் திருவிழாவை முன்னிட்டு, கெடில நதிக்கு தீர்த்தவாரிக்கு வந்த சுற்று வட்டார பகுதியில் உள்ள கோயிலின் உற்சவ மூர்த்திகள் மற்றும் ஆற்றில் கூடியிருந்த பொது மக்கள்.
                                       ஆற்றுத்திருவிழாவில் மக்கள் வெள்ளம்.

இன்று எல்லோரது வீடுகளும் கோலங்களால் ஜொலிக்கும். காலையிலேயே ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்ளும். எல்லோரும் குளித்து முடித்து பொங்கலுக்கு எடுத்த‌ புத்தாடை அணிந்துகொண்டு திருவிழாவிற்கு சென்றுவர துணைக்கு ஆள் சேர்ப்பார்கள்.

ஒவ்வொரு தெருவிலும் ஒன்றிரண்டு கோயில்கள் இருக்கும். காலையிலேயே அதிலுள்ள சாமி சிலைகளை எல்லாம் தனித்தனியாக மாட்டு வண்டியில் வைத்துக்கட்டி ஆற்றில் போய் குளித்துவிட்டு வருவதற்கு தயார் செய்வாங்க.

எங்கள் ஊருக்கு அருகில் ஆறு இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு போவாங்க. வண்டிக‌ள் போகும்போது திருவிழாவிற்கு போகும் பிள்ளைகள் வண்டியில் அமர்ந்துகொள்வார்கள். வண்டிக‌ள் ஆடி அசைந்து போகும்.

காலையிலேயே ஊர் பொதுவில் நிறைய சர்க்கரைப்பொங்கல் செய்வாங்க. செய்து ஒரு குடும்பத்திற்கு ஒன்றென எல்லா குடும்பத்திற்கும் பெரியபெரிய உருண்டைகள் பிடித்து அவற்றை வண்டிகளில் போட்டு வெள்ளைத்துணியால் மூடி, மதியத்துக்கு மேல் எங்க ஊர் சாமி போகும் இடத்திற்கு எடுத்து செல்வார்கள். இந்த வண்டி போகும்போது மீதமுள்ள மக்கள் கூடவே நடந்துபோவார்கள்.

எங்கள் ஊரிலிருந்து பக்கத்து ஊர் அருகில் போகும்போது ஆற்றின் கரை வரும். சாலையில் நடந்தால் வெயில் அடிக்கும் என்பதால் மரங்கள் அடர்ந்த கரையின்மேல் நடப்பார்கள். ஆற்றின் கரையின்மேல் ஒத்தையடிப்பாதை இருக்கும்னு நினைக்கிறேன். ஏனென்றால் எல்லோரும் ஒருவர் பின்னால் ஒருவராக போவாங்க.

எனக்கும் அவர்களோடு நடந்து போகத்தான் ஆசை. ஆனால் எங்க அண்ணனுடன் என் மூத்த சகோதரி, நான், தம்பி மூன்று பேரும் சைக்கிளில் போவோம்.

 நான் ரொம்ம்ம்ம்ம்ப நல்ல பொண்ணு என்பதால், handlebars  ஐ ஆட்டாமல் வருவேன் என்பதற்காக என்னைத்தான் முன்னால் உட்கார வைப்பார்.

வீட்ல புலி, சிங்கம், கரடியாக அடித்துக்கொள்ளும் நாங்கள் மூன்று பேரும் திருவிழாவிற்கு சென்று வீடு திரும்பும்வரை ஒரு வார்த்தைகூட பேசாமல் நல்ல பிள்ளைகளாக‌ வருவோம். அண்ணனிடம் அவ்வளவு மரியாதை கலந்த பயம். வீடு வந்து சேர்ந்த பிறகு வட்டியும் முதலுமாக அடித்துக்கொள்வோம்.

வாழையிலையில் இட்லிகளை வைத்து, ஒரு தினசரி பேப்பரால் கட்டி, தொட்டுக்கொள்ள தூளும் எடுத்துக்கொண்டு கூடவே ஒரு கூஜாவும் (அப்போது பாட்டில்கள் இல்லை) எடுத்துக்கொள்வோம்.

நாங்கள் முதலில் போவது கரடிப்பாக்கம் நிறுத்தத்தில் உள்ள மேம்பாலம். ரொம்ப ஃபேமஸ். மைலம் முருகன் சாமி எல்லாம் அங்கு வரும். மதியம் ஒரு இடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு, ஊற்று தோண்டி தண்ணீர் எடுத்து குடித்துவிட்டு மீண்டும் சுற்றுவோம்.

கடிக்க மென்மையாக இருக்கும் வயலட் நிற கரும்பு வாங்கி துண்டுகள் போட்டு பை நிறைய வைத்திருப்போம். சிறுவள்ளி கிழங்கு என்று ஒன்று விற்கும். அதுவும் வாங்கி வைப்போம். புல்லாங்குழல், பலவண்ணக் காத்தாடிகள், பலூன் போன்ற இன்னும் பலவற்றை வாங்கித் தந்ததும் பத்திரமாக வைத்துக்கொள்வோம்.

எனக்கும் என் தம்பிக்கும் அங்கு விற்கும் கலர்கலரான ப்ளாஸ்டிக் கண்ணாடிகளின்மீது ஒரு கண் இருக்கும். ஆனால் கேட்கமாட்டோம். நாங்கதான் நல்ல பிள்ளைகளாச்சே !!

நாங்க ஒரு இடத்தில் மட்டும் இல்லாமல் அங்கிருந்து அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வழியில் ஆற்றில் ஆங்காங்கே நடக்கும் நிறைய திருவிழாக்களை பார்த்துக்கொண்டே வருவோம்.
ஆற்றுத் திருவிழாவையொட்டி விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் தென்பெண்ணையாற்றில்,  தீர்த்தவாரிக்காக கொண்டுவரப்பட்ட ஜானகிபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உற்சவ மூர்த்திகள்.
                              சாமி அலங்காரமெல்லாம் இப்படித்தான் இருக்கும்.

கடைசியில்  மாலையில் எங்கள் ஊர் சாமிகள் நிற்கும் இடத்திற்கு வருவோம். அங்கு எங்க அப்பா இருப்பார். 'சாமிய வேண்டிக்கோங்க' என்று சொல்லிவிட்டு விபூதி & குங்குமம் வைத்து விடுவார்.

சாமிகளை குளிக்கவைத்து அலங்காரம் செய்து, மீண்டும் வண்டியில் வைத்துக்கட்டி, தீபாராதணை காட்டி, சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு உருண்டை என அங்கிருப்பவர்களிடம் கொடுப்பாங்க. இதெல்லாம் நடக்க நேரமாகும் என்பதால் நாங்கள் உடனே அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு வந்துவிடுவோம்.

மாலை நேரம் ஆகஆக திருவிழாவிற்கு போனவர்கள் எல்லாம் வீடு திரும்புவாங்க. போகும்போது இருந்த உற்சாகம் இப்போது குறைந்து 'எப்போதுதான் வீடு வருமோ' என்பதுபோல் நடந்துபோவார்கள். நடக்க முடியாமல் சாமி வண்டிகள் புறப்படும்வரை காத்திருந்து வருபவர்களும் உண்டு.

ஆற்றுக்கு போன சாமி எல்லாம் ஊருக்குத் திரும்பும்போது இரவு ஆகிவிடும். சாமிகள் ஒவ்வொரு தெருவாக சென்று ஒவ்வொரு வீட்டிலும் தீபாராதணை வாங்கிக்கொண்டு போகும்.

இன்றுடன்/இத்துடன் பொங்கல் முடிந்தது. ஆனாலும் பொங்கலை நினைவுபடுத்தும் விதமாக வீட்டின் உள்ளேயும், படிகளிலும் போட்டிருந்த கோலங்கள் மறைய சில நாட்கள் ஆகும். ஆனால் மனதிலிருந்து மட்டும்  நினைவுகள் மறையவே மறையாது...... !!
                                                                                                                    .........(முற்றும்)...........
படங்கள் உதவி_கூகுள்

Thursday, January 16, 2014

பொங்கல் ஸ்பெஷல் _ வெறும்நாள்

கரிநாளுக்கு அடுத்த நாள் வெறும்நாள். பேச்சு வழக்கில் இதை வெரி(றி)நாள் என்றுதான் சொல்லுவாங்க.

பெய‌ருக்கு ஏற்றார்போல் இன்று எந்த விதமான‌ ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருக்கும். ஏதோ ஒருசில இடங்களில் மட்டும் திருவிழா நடக்கும்.

பொங்கல் காசை எண்ணி ரெடி பண்ணி வையுங்க. கூடவே புளிசாதம் அதுவும் இல்லாட்டி இட்லி & பொடி பார்சல் ரெடி பண்ணிக்கோங்க. நாளை எங்கள் ஊர் ஆற்றுத் திருவிழாவிற்கு அழைத்துப் போகிறேன்.

Tuesday, January 14, 2014

பால் பொங்குச்சா !!

எங்கள் ஊர் பக்கம் பொங்கல் முடிந்த மறுநாள் தெரிந்தவர்கள் யாரைப் பார்த்தாலும் , 'பால் பொங்குச்சா !!' என கேட்பது வழக்கம்.

                                  'என்ன, உங்க வீட்லயும் பால் பொங்குச்சா !!'.


           பொங்கலுக்கு செய்த கருப்பட்டி பொங்கலும், பால்பொங்கலும்  !!

இந்த இனிய நன்நாளில் உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். மேலும் எல்லோரது வாழ்வும் சர்க்கரைப் பொங்கலும், கரும்புமாய் இனித்திட வாழ்த்துக்கள்.

Sunday, January 12, 2014

பொங்கல் ஸ்பெஷல் _ கரிநாள்

மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் கரிநாள். இன்று எந்த நல்ல காரியங்களையும் செய்யமாட்டார்கள். அதிகாலை எழுந்ததுமே பொங்கலுக்கென தோட்டத்தில் தோண்டப்பட்ட அடுப்பை, தோண்டிய மண்ணை வைத்தே மூடிவிடுவார்கள்.

இதில் எனக்கு வருத்தமுண்டு.  அட்லீஸ்ட் நான் எழுந்த பிறகாவது இதை செய்திருக்கலாம். சின்ன வயசுல இதுக்காகவே எங்கம்மாவிடம் அழுது, ஆர்ப்பாட்டமெல்லாம் செய்திருக்கிறேன்.

வீடு முழுவதும் தோஷம் நீங்க நேற்று எடுத்து வைத்த பொங்கல் தண்ணீரை தெளிப்பாங்க. மீதமுள்ளதை அவரவர் சொந்த நிலத்திற்கு எடுத்துச்சென்று சிறப்பான விளைச்சல் வேண்டும் என்பதற்காக வயல் முழுவதும் 'பொங்கலோ பொங்கல்' என்று சொல்லிக் கொண்டே தெளிப்பார்கள்.

நேற்று மாலை பயந்து, மிரண்டு போயிருந்த மாடுகளை அதிகாலையிலேயே அந்த இடத்திற்கு அமைதியாக கூட்டிக்கொண்டு போய் அழைத்து வருவாங்க. அவ்வாறு செய்வதால் அதன் பயம் நீங்கி சகஜ நிலைக்கு வரும் என்பது நம்பிக்கை.

இன்று தலைக்குக் குளிக்காமல் எதுவும் சாப்பிடக் கூடாது. வீடு முழுவதும் கழுவி விடப்ப‌ட்டு வாசல் & படிக்கட்டுகளில் மட்டும் மாக்கோலங்கள் போடப்படும். இன்று பாய், படுக்கைகள், தலையணை உறைகள் என எல்லாமும் துவைத்தாக வேண்டும்.

இது ஒருபுறம் நடந்தாலும் சிலர் ஆற்றுக்கு குளிக்கக் கிளம்புவார்கள். பக்கத்து ஊர்களிலெல்லாம் ஊருக்குப் பக்கத்திலேயே தெண்பெண்ணையாறு போகும். ஆனால் எங்கள் ஊர் மட்டும் ஆற்றை விட்டு ரொம்ப தூரத்தில் இருக்கும். அதனால் நீண்ட, நெடுந்தூரம் நடந்தோ அல்லது சைக்கிளிலோ(ஆண்கள்) சென்று குளித்துவிட்டு வருவார்கள்.

என் மூத்த சகோதரிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகள் எனக்கு இல்லை. ஒருவேளை அது என் நச்சரிப்பால்கூட இருந்திருக்கலாம். நானும் என் வயதொத்த சித்தப்பா பெண்ணும் சேர்ந்து அனுமதி வாங்கிக்கொண்டு அவர்களுடன் சேர்ந்து போயிருக்கிறோம்.

ஒரு பையில் ஒரு செட் ட்ரெஸ், துண்டு, ஒரு கூஜா(எதற்கு என பதிவின் இறுதியில் தெரிந்துவிடும்), நிறைய பூ, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய், பழம், வெற்றிலைப் பாக்கு, கற்பூரம், பத்தி என பேஸ்ட் , சோப்பு, ஷாம்பூவைத் தவிர எல்லாமும் இருக்கும். ஜாலியாகக் குளிக்கும்போது பல் துலக்கிக்கொண்டு, சோப்பெல்லாம் போட்டு தேய்த்து....... சோகம் வேண்டாமே என்பதால் அவை மட்டும் மிஸ்ஸிங் !!

தூரத்திலேயே ஆற்றின் கரை தெரியும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அங்கே போனதும் பெரியவர்கள் கும்மி அடித்து, பாட்டுபாடி விளையாடுவார்கள். சில்லென இருக்கும் தண்ணீரை விட்டு வெளியேறவே மனம் வராது. நாங்கள் போகும் பகுதியில் பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

குளியல் முடிந்ததும் (அரைநாள் ஆகிவிடும்) ஒரு சிறு பள்ளம் தோண்டி அதில் ஊறும் ஊற்றுத் தண்ணீரை கூஜாவில் நிரப்பிக்கொண்டு, ஒவ்வொருவரும் மண்ணால் இரட்டைப் பிள்ளையார் பிடித்துவைத்து, அதற்கு பூவும் வைத்து தீபாராதணை காட்டி, தேங்காய் உடைத்து திரும்புவோம்.

ஆற்றின் கரை ஏறி நின்று 'bye' சொல்லும்போது மனதிற்கு கவலையாக இருக்கும். வரும் வழி நெடுக பழம், தேங்காய் எல்லாம் காலிபண்ணிக்கொண்டே வந்துவிடுவோம்.

எங்கள் தெருவின் முனையில் உள்ள துர்க்கையம்மன் சிலையில் கூஜாவில் எடுத்து வந்த தண்ணீரில் கொஞ்சம் ஊற்றிவிட்டு,  விழுந்துவிழுந்து வேண்டிக்கொண்டு, மீதியை வீட்டின் சாமி அறையில் வைத்துவிடுவோம்.

இன்று அம்மா சூப்பரா ஆப்பமும், தேங்காய் பாலும் செய்து வச்சிருப்பாங்க. பசி நேரத்தில் ஒரு ஆப்பம், அது மூழ்கும் அளவு தேங்காய் பால்________ அவ்வளவுதான்.....அன்று முழுவதும் எழுந்திருக்கவே முடியாது. சுகமான ஒரு தூக்கம்....!!

மதியத்துக்கு மேல் பக்கத்து தெருவில் பெண்கள் பாட்டுபாடி, கும்மி அடிப்பாங்க. நான் போனதில்லை....... விருப்பமில்லை + சோர்வு.

மனதிற்கு இதமான, எனக்குப் பிடித்தமான நாட்களில் இதுவும் ஒன்று !!

                                                                                                              .........(  தொடரும் ) ..........

Thursday, January 9, 2014

பொங்கல் ஸ்பெஷல் _ மாட்டுப் பொங்கல்

 
படம் உதவி கூகுள்

உழவுத் தொழிலுக்கு உதவும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாடுவதுதான் மாட்டுப்பொங்கல்னு சொல்லுவாங்க.

நேற்று மாதிரியேதான் இன்றும் கோலம் போடுவது, நல்ல நேரம் பார்ப்பது, பொங்கல் வைப்பது எல்லாம். ஆனால் இன்று ஒரு பெரிய பானையில் மட்டும் வெள்ளைப் பொங்கல். பொங்கல் வேகும்போதே அதிலிருந்து பொங்கல் தண்ணீர் என்று கொஞ்சம் தண்ணீரை ஒரு பெரிய சொம்பில் எடுத்து வைத்துக்கொள்வார்கள்.

வீட்டிலுள்ள கத்தி, கடப்பாறை, படி, அரிவாள்மனை போன்ற அதாவது உழவுக்கும், சமையலுக்கும் உதவும் எல்லா பொருள்களையும் கழுவிக் காயவைத்து பூசை, பொட்டிட்டு பொங்கல் மேடையில் கொண்டுவந்து வைப்பாங்க. மாலை 5 மணிக்கெல்லாம் படையல் செய்திடுவாங்க. ஞாயிறு என்றால் மட்டும் 6 மணிக்குமேல்.

அவரவர் வசதிக்கேற்ப அசைவ உணவு சமைக்கப்படும். இன்று எல்லோரும் நல்லெண்ணெய் தேய்த்து தலை குளிப்பாங்க.

இன்றுதான் எல்லோரும் பொங்கலுக்கு எடுத்த புத்தாடையை அணிவோம். தெருவிலுள்ள எல்லா பிள்ளைகளின் கையிலும் பலூன் இருக்கும்.

இன்று மாலை  'மாடு மிரட்டுவது' என்று ஒன்று நடக்கும். அதற்காக‌ காலையிலேயே மாடுகளின் கொம்புகளை சீவிவிட்டு, குளிப்பாட்டி, அவரவர் சார்ந்திருக்கும் கட்சி அல்லது பிடித்த வண்ணங்களை ( paint ) அவற்றின் கொம்புகளில் அடித்து விடுவர்.

கொம்புகளின் இடையில் பலவண்ண பலூன்களை கட்டிவிடுவாங்க. நெற்றியில் மஞ்சள் குங்குமம் & சந்தனம், கழுத்தில் தோரணம், மாவிலை மாலை போடப்படும். அவை என்னமோ ஏதோ என மிரண்டுதான் போயிருக்கும்.

இதுதவிர வீட்டிலுள்ள வாகனங்களை கழுவி துடைத்து பூசை, பொட்டிட்டு, சந்தனம் தெளித்துவிட்டு, வாழைக்கன்றுகள், தோரணம், மாவிலை மாலைகள் போடப்பட்டு, பலூன்கள் கட்டப்பட்டு தயாராக இருக்கும்.

மாலை 5 க்குமேல் ஊர் முழுவதும் தமுக்கு அடித்து மாடுகளை மாடு மிரட்டும் இடத்திற்கு அனுப்ப தயாராக வைக்கச்சொல்லி சொல்லுவாங்க. உடனே தெருவில் தண்ணீர் தெளித்து கோலம் போடப்படும்.

மீண்டும் ஒருமுறை அனுப்ப சொல்லி சொன்னதும் எல்லோரது வீட்டிலிருந்தும் தாம்பூலத்தட்டு, பழம், தேங்காய் எல்லாம் எடுத்துக்கொண்டு, மாடுகளை அழைத்துக் கொண்டுபோய் ஒரு இடத்தில் கூடுவார்கள். சில மாடுகள் முரண்டு பிடித்து எதிர் திசையில் ஓட ஆரம்பிக்கும். எங்கள் ஊரில் இரண்டு இடங்களில் மாடுகள் கூடும்.

கூட்டம்கூட்டமாக ஆண்கள், பெண்கள் எல்லோரும் அங்கு போவாங்க. ஒருமுறையாவது போயிருக்கலாமோ என்று இப்போதும் நினைப்பதுண்டு. அங்கு என்ன நடக்கும் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. நீண்ட நேரம் கழித்து அங்கிருந்து மாடுகள் மிரண்டுபோய் ஓடிவரும். அவை தானாகவே அவரவர் வீடுகளுக்குப் போய் சேர்ந்துவிடும். அல்லது சிலர் தேடிக்கொண்டிருப்பாங்க.

இது முடிந்த உடனே அவரவர் வீட்டிலுள்ள வாகனங்களை எடுத்துக்கொண்டு பொங்கலோ பொங்கல் என்று சொல்லிக்கொண்டு ஊர் முழுவதும் சுற்றி வருவாங்க. யார்யார் வீட்டில் என்னென்ன வாகனங்கள் உள்ளன‌ என்பதை பந்தாவாக சொல்லிக்கொள்ள இது நல்ல சான்ஸ்.

இவற்றுடன் மாட்டு வண்டியும் பறக்கும். நானும்கூட இதில் போயிருக்கேன். ஆனால் வழியில் கொஞ்சம் பயமாத்தான் இருக்கும். சிலசமயங்களில் குடை சாய்ந்ததும் உண்டு. ஆனாலும் விடாமல் போய்விடுவதில் ஒரு இன்பம்.

வண்டி வந்து நின்ற பிறகு மாடுகளுக்கு தீபாராதணை காட்டி, சிதறு தேங்காய் உடைப்பாங்க. வீட்டில் எவ்வளவு தேங்காய் இருந்தாலும் சிதறு தேங்காயை எடுக்கும் யாராவது ஒருவர் அதிலிருந்து சிறிது கொடுத்து சாப்பிட்டால் அதன் ருஸியே தனிதான்.

கார், டிராக்டர், இரு சக்கர வாகனங்கள் என பலமணி நேரத்திற்கு ஊரை சுற்றுவாங்க. இதில் குட்டிப் பிள்ளைகள் வைத்திருப்பவர் பாடுதான் திண்டாட்டம். அவர்களும் ஊரைச் சுற்றிவரும் ஆசையில் இருப்பாங்க. வாகனங்களின் எண்ணிக்கை குறந்தபிறகு அவர்களை வைத்துக்கொண்டு வீட்டிலுள்ளோர் மெதுவாக‌ சுற்றி வருவாங்க. இந்த ஊர்வலம் முடியவே நன்றாக இருட்டிவிடும்.

இது எல்லாம் முடிந்த பிறகு வீட்டில் படைப்பாங்க. மாடுகளுக்கும் சாதம், வாழைப்பழம் எல்லாம் சாப்பிடக் கொடுப்பாங்க. பிறகு எல்லோரும் சாப்பிடுவாங்க. தினமும் சாப்பிடும் கரும்புதான், ஆனாலும் இன்று யாருக்கும் பயப்படாமல் கரும்பை ஒருகை பார்க்கலாம்.

அதன்பிறகு அப்பா ஒரு தாம்பூலத் தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து அதில் காசு வைத்து அம்மாவுடன் சேர்ந்து நின்று வீட்டில் உள்ள எல்லோருக்கும் கொடுப்பாங்க. நாங்க ஒவ்வொருவரும் அவங்க காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு தட்டிலுள்ள தாம்பூலத்தை எடுத்துக்கொள்வோம்.

வெளியாட்களும், பிள்ளைகளும்கூட நிறையபேர் வருவாங்க. ஏற்கனவே சொன்னேனே, சில்லறையைப்பற்றி, அது இதுக்குத்தான். வருகின்ற எல்லோருக்கும் காசு, தாம்பூலம் வைத்து கொடுப்பாங்க. எல்லா வீட்டிலும் இது நடக்கும்.

வருடாவருடம் நடக்கும் இது  1999 ஆம் வருடத்துடன் முடிந்து போனது. 2000 ஆம் ஆண்டின் பொங்கல் வர ஒரு மாதத்திற்கு முன்னரே எங்க அப்பாவை இழந்துவிட்டோம். அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் அம்மாவிடம் வாங்கினேன்.

2001 ல் நான் இங்கு வந்துவிட்டதால் அதுவும் நின்று போனது. தம்பி மட்டும் எல்லா விசேஷங்களுக்கும் அம்மாவிடம் ஆசி வாங்குவது தொடர்கிறது. மற்றவர்கள் அவரவர் குடும்பம், வேலை என்ற அலைச்சலில் மறந்துபோயினர்.

இந்த நிகழ்ச்சி எல்லாம் மனதிற்கு இதமானது. எங்கிருந்தாலும் வருடந்தோறும் மாட்டுப்பொங்கல் அன்று இந்த நிகழ்வுகள் மனதில் வந்து ஒரு சந்தோஷத்தையும், அதைத்தொடர்ந்து கண்கள் குளமாவதும் வாடிக்கையாகிவிட்டது.

[.............மிரண்டுபோன மாடுகளை எவ்வாறு சமாதானம் செய்வது, சொம்பில் எடுத்து வைத்த பொங்கல் தண்ணீர் என்ன ஆனது, கரிநாள் விசேஷம் என்ன என்பதெல்லாம் அடுத்த பதிவில் ..............(தொடரும்) ]

Monday, January 6, 2014

பொங்கல் ஸ்பெஷல் _____ பெரும்பொங்கல்

 
படம் உதவி கூகுள்

தை மாதம் முதல் தேதி பெரும்பொங்கல். பொங்கல் கொண்டாட்டத்தின் முக்கியமான நாள் இன்றுதான்.

அறுவடை செய்த புது நெல்லின் புது பச்சரிசியில் பொங்கல் செய்து சூரியனுக்கு படையல் செய்வதுதான் பெரும்பொங்கல் என்று சொல்வார்கள். சூரிய உதயத்தில் படையல் செய்ய வேண்டும் என்றும் சொல்வார்கள். ஆனால் எங்கள் ஊரில் சூரிய அஸ்தமனத்தின் போதுதான் படையல் செய்வார்கள்.

இன்று அதிகாலையில் எழுந்து தெருவில் உள்ள மண் தரையில் மாக்கோலம் போட்டு, அதில் பல நிறப் பொடிகளைத் தூவி அழகாக்குவோம். பொங்கல் பானையும், கரும்பும் கோலத்தில் இருக்கும். பூசணிப் பூ அலங்காரமும் உண்டு.

வீடு, வாசல் எல்லாம் கழுவிவிட்டு, நேற்றே ஊற வைத்துள்ள வெள்ளமணக் கட்டியில் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி, நீர்க்கக் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து அதை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு லேஸாக பிழிந்துவிடுவதுபோல் செய்து மோதிர விரலின் உதவியால் கோலத்திற்கான கோடுகளை வீடு முழுவதும் வரைந்து, யாரும் மிதித்து விடாமல் அது காயும்வரை பாதுகாத்து வைப்பது ஒரு சந்தோஷம்.

பெரிய வாசற்படியிலுள்ள அழகான கிளியுடன் கூடிய டிசைன்களுக்கு இடையில் ஒவ்வொரு சாமந்திப் பூவாக நிறைய‌ வைப்போம். கதவு, சன்னல்களில் பூசை, மஞ்சள், குங்குமம் எல்லாம் வைத்து, அதன்மேல் சந்தனம் தெளித்துவிட்டு, பார்க்கவே மங்களகரமாக இருக்கும். ஏமாந்தாற்போல் கதவுகளில் சாய்ந்துவிட முடியாது.

கழனியில் இருந்து நெற்கதிர்கள், மாவிலைகள், பிரண்டை போன்ற இன்னும் சில இலைகள் எல்லாம் பறித்துவந்து சணல் கயிறின் உதவியுடன் எங்கப்பா நிறைய தோரணங்கள் கட்டுவார். வீட்டில் நிறைய அறிவுகால்கள் உண்டு. எல்லாவற்றிலும் இந்தத் தோரணம் கட்டப்படும்.

இந்தத் தோரணத்திலுள்ள நெல்லைக் கொறிப்பதற்கு நிறைய சிட்டுக் குருவிகள் வரும். எங்கள் வீட்டிலேயே குடும்பமாக இருந்தன. அவற்றிற்கு மாவு சலிக்கும் சல்லடை வைத்து வீடு கட்டி வைப்பார். வீட்டில் எந்நேரமும் கீச்சுகீச்சு சத்தம்தான்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமாக பொங்கல் செய்யப்படும். ஒருசில வீடுகளில் அவரவருக்கு சொந்தமான‌ கழனியில் பொங்கல் செய்து படையல் செய்து வீட்டிற்கு எடுத்துவர நள்ளிரவாகிவிடும். எங்கள் வீட்டில் தோட்டத்திலேயே தோட்ட வாசல்படிக்கு நேராக அடுப்பு தோண்டி வீட்டிலேயே செய்துவிடுவோம்.

காலையிலேயே உறவு மாமா ஒருவர் வந்து தோட்டத்தில், மண்தரையில்,  நீளவாக்கில் ஒரு அடுப்பு தோண்டுவார். அவர் கொஞ்சம் ஏமாந்தால் போதும், கடப்பாரை எங்கள் காலில்தான் இருக்கும். அந்த அளவிற்கு அவர் அடுப்பு தோண்டுவதை கிட்ட நின்று வேடிக்கை பார்ப்போம். தோண்டும்போது வரும் மண்ணை புதையல் மாதிரி நீ, நான் என போட்டிபோட்டு எடுக்க முற்படுவோம். சமயங்களில் திட்டும் விழும்.

தோண்டும்போது வரும் மண்ணை வைத்து இரண்டு பெரியபெரிய பானைகள் வைத்து பொங்கல் செய்வதற்கு ஏற்றவாறு 5 கொம்மைகள் வைப்பார். அவை  சாணம் போட்டு மெழுகி வைக்கப்படும். அடுப்பில் ஈரம் போக வேண்டும் என்பதற்காக தவிடு, வேர்க்கடலைத் தோல் என போட்டு வைப்பர்.

அடுப்பில் விறகு வைத்து எரிய வைக்க இரண்டு வழிகள் வைப்பார். இது தவிர அடுப்பை சுற்றிலும் இருந்து விறகு வைத்தும் எரிய வைக்கலாம்.

மீதமுள்ள மண்ணை வைத்து அடுப்பிற்கு எதிரே ஒரு பொங்கல் மேடை செய்யப்படும். அதில் கோலம் போட்டு ஒரு செங்கல்லில் இரண்டு சாணப் பிள்ளையார்களைக் கையால் பிடித்து வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து, அவற்றின் இடையில் அருகம்புல் சொருகி, பூ வைப்பாங்க. அதற்குப் பக்கத்திலேயே வைக்கோல் அல்லது மண்ணால் பானைகளை வைக்க ஒரு இடம் செய்திருப்பர்.

பெரும்பொங்கல் அன்று 11 அல்லது 9 சின்னபடி அரிசி வேகுமளவிற்கு ஒரு பெரிய பானையும், 3 அல்லது 5 சின்னபடி சர்க்கரைப்பொங்கல் வைப்பதற்கு ஒரு பானையும், அவற்றிற்கான மூடிகளும் தயாராயிருக்கும். பானைகளுக்கு பூசை, பொட்டிட்டு, மஞ்சள் கிழங்குடன் கூடிய செடியைக் கட்டி வச்சிருப்பாங்க.

பொங்கலைக் கிண்டிவிட நீளமான துடுப்பு (மரக்கரண்டி) செய்யப்படும்.

நல்ல நேரம் பார்த்துதான் பானையை அடுப்பில் வைப்பாங்க. வைத்து அதில் நிறைய தண்ணீர் ஊற்றி மூடி, தண்ணீர் ஏதும் கசிகிறதா என்று பார்த்துவிட்டு,  கொஞ்சம் பாலும் சேர்த்து, அதன்பிறகு பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டி, வேறொரு கற்பூரத்தை ஏற்றி அடுப்பிலுள்ள விறகில் போட்டு பற்ற வைப்பாங்க.

பானையிலிருந்து தண்ணீர் கசிந்தாலோ அல்லது ஓட்டை ஏதும் இருந்து தண்ணீர் வெளியேறினாலோ கெட்ட சகுனமாக நினைப்பாங்க‌.

அதன்பிற‌கு கடகடவென அடுப்பை எரிய விடவேண்டும். பானை பத்திரம் ! உலை கொதித்ததும் பச்சரிசியை அப்படியே கொட்டிடுவாங்க.

பொங்கல் பொங்கி வெளியே வழிய வேண்டும். அப்போது பொங்கலோபொங்கல் என அடுப்பை சுற்றி நின்று சத்தம் போடுவாங்க.  பொங்கலை எங்க அம்மாதான் கிண்டி விடுவாங்க. மண் பானையாச்சே !!

கூடவே பக்கத்திலேயே தயாராகும் சர்க்கரைப் பொங்கலையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொங்கல் இரண்டும் தயாரானதும் நல்ல பலசாலிகளாக இரண்டு பேர் சேர்ந்து இறக்கி வைத்து மூடி வச்சிடுவாங்க. மாலை ஆறு மணிக்குதான் படைப்பாங்க. அடுப்பில் நிறைய நெருப்பிருக்கும். அதில் தண்ணீர் சுடவைத்து மீண்டும் ஒரு குளியல்.

இன்று எல்லோரும் தலை குளிப்பாங்க. வடை பாயஸத்துடனோ அல்லது அது இல்லாமலோ சைவ சாப்பாடு தயாராகும்..

பொங்கல் மேடையில் ஒரு சிறு பூசணிக்கீற்று, கரும்பு,  தேங்காய், பழம் எல்லாம் வைத்து படையல் செய்வோம்.

பெரும்பாலான தோட்டங்களில் பேத்தி இலை என்று ஒரு இலை கிடைக்கும். உள்ளங்கையில் வைத்து சாப்பிடும் அளவில் சிறுசிறு இலைகளாக இருக்கும். அவற்றைப் பறித்து வந்து கழுவிவிட்டு அதில்தான் பொங்கல் படைப்பாங்க. படைத்த பிறகு இலையுடன் எடுத்து கையில் வைத்துக்கொண்டு சாப்பிட லாவகமாக இருக்கும்.

தோட்டத்தில் படையல் செய்து முடித்தவுடன் பானைகளை உள்ளே எடுத்துக் கொண்டுபோய் சாமி அறையில் வைத்துவிட்டு, வீட்டுக்குள் தயாரான சாப்பாடு இப்போது படையல் செய்யப்படும்.

பிறகு சர்க்கரைப் பொங்கல் & சாதாரண பொங்கல் இரண்டையும் உறவு & தெரிந்தவர்கள் வீடுகளுக்கு கொடுத்தனுப்புவார்கள். அவர்களின் வீடுகளில் இருந்தும் எங்கள் வீட்டிற்கு அவர்கள் செய்த பொங்கல் வரும்.

அடுத்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள்.

நிறைய சாதம் மீதமாகும். எத்தனை நாட்கள் இருந்தாலும் இந்த சாதம் வீணாகாமல் 'கல்'லு மாதிரியே இருக்கும். அடுத்த நாள் மீதமானதை கரைத்து மாடுகளுக்குக் கொடுத்துவிடுவார்கள்................(தொடரும்)

Sunday, January 5, 2014

Put some more .....!!

எங்கள் மகள் இரண்டு மாதங்கள் விடுதி வாசம் முடிந்து முதல் முறையாக வீடு வரும் அன்றிரவு அவளுக்குப் பிடித்த சமையலை செய்யலாமே என மெனு அனுப்பினேன்.

அவளோ ' கிள்ளிப்போட்ட சாம்பாரும் ,  உருளைக்கிழங்கு பொரியலும்' என டிக் செய்தாள்.

நானும் எதேச்சையாக எப்போதும்போல் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டுத் தாளிக்காமல் ஒரு மிளகாயை அப்படியே முழுதாகப் போட்டு முழுமிளகாய் சாம்பாராக‌ வைத்துவிட்டுக் காத்திருந்தேன்.

வந்து முகம், கை, கால்கள் கழுவிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள். 'வாவ், எனக்குப் பிடிச்ச சாம்பார் !!' என்று சொல்லிக்கொண்டே ஒருவாய்தான் சாப்பிட்டாள்.

'அம்மா, ஏம்ம்ம்ம்மா இவ்ளோ காரம் போட்டு வச்சிருக்க ?" என்றாள் .

அடுத்து உருளைக் கிழங்கை சுவை பார்க்குமுன்னரே காருமோ என பயந்துவிட்டாள்.

"மிளகாயைக் கிள்ளிக்கூடப் போடாமல் முழுசாதானே போட்டிருக்கேன் . மிளகு ஒன்றிரண்டுதான் தட்டிப்போட்டேன். அதுவா இப்படி காரும் !!" என சொல்லிக் கொண்டே சமைக்கும்போது பார்த்தது போதாதென்று இப்போது மீண்டும்  ஒருமுறை சுவை பார்த்தேன்.

" எனக்கொன்னும் தெரியலயே, நல்லாத்தானே இருக்கு !" என்றேன்.

எப்படியோ ஒருவாறு சாப்பிட்டு முடித்தாள். அதன்பிறகுதான் புரிந்தது கடந்த இரண்டு மாதங்களாக சுத்தமாகக் காரமே இல்லாமல் சாப்பிட்டிருக்கிறாள் என்று.

எங்கள் வீட்டில் சாப்பாட்டில் அந்தளவுக்கு காரம் இருக்காது. இவருக்குக் காரம் பிடிக்காது. ஆனால் மகளுக்கு கொஞ்சம் காரம் வேண்டும், அதனால் சமைக்கும்போது அடிக்கடி "Amma, Put some more  kaaram " என்பாள்.

சட்னியில் ஒரு மிளகாயுடன் கூட ஒரு 1/4 மிளகாய் வைத்து அரைத்துவிட்டு இவர் சாப்பிடும்போது நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் பார்த்து சிரிப்போம்.

மகளின் தோழிகள் வீட்டிற்கு வந்தாலும் கையைக்காலை உதறி 'ஆ, ஊ' என்று தமிழ் எழுத்துக்களை தாறுமாறாக வரிசைப்படுத்தி, ஆனாலும் சாப்பாட்டை ஒருகை பார்த்துவிடுவார்கள். எங்களுக்கு சிரிப்பாக வரும்.

"அம்மா, ஊர்ல வக்கிற மாதிரி நல்லா காரமா நீயும் வைம்மா" என்பாள். பிறகு இவரை நினைத்து வேண்டாம் என்று விட்டுவிடுவோம்.

இப்படியெல்லாம் காரம் விரும்பிய இவளா 'ஆ, காருது'ன்னு சொல்கிறாள் !!

மனசு கேக்குமா சொல்லுங்க. சட்னியில் வைக்கப்படும் ஒரு மிளகாய் 1/2 மிளகாய் ஆனது. எல்லாவற்றிலும் காரம் தடாலடியாய் குறைக்கப்பட்டது.

நிலைமை ஒருவாறாக சீராகும் நிலையில், இப்போது பிரச்சினை வேறொரு ரூபத்தில் வந்தது. இதுவரை கிச்சன் எந்தப் பக்கம் என்றுகூடத் தெரியாத ஒரு ஆள் இப்போது அடிக்கடி தலையை நீட்டி ' Put some more  காரம் ' என்று சொல்கிறார் !!

வீடு பார்க்கும் படலத்தின்போது மட்டும் 'கிச்சன் நல்லாருக்கா பாரு' என்று சொல்வதோடு சரி. அதன்பிறகு அது எந்தப் பக்கம் என்றுகூடத் தெரியாது இவருக்கு.

'இது நல்லாருக்கே, இன்னும் கொஞ்சம் காரத்தைக் குறைத்தால் ஒருவேளை இவர் சமையலில்கூட உதவலாம், அல்லது அதற்கும் மேலாக...... மேலாக.........சமையலேகூட .............. !!".

பின்குறிப்பு :_ (ஹா ஹா ஹா , நல்ல்ல்லா ஏமாந்தீங்களா !! எதுக்கு இப்படி அடித்துப் பிடித்து ஓடி வந்தீங்கன்னு எனக்குக் காரணம் சொல்லியே ஆகவேண்டும் !!)

Thursday, January 2, 2014

புதுவருட நல்வாழ்த்துக்கள் !!

டிசம்பர் 30 ந் தேதி மாலை 7:00 மணியளவில் பிருந்தா கொத்துமல்லி & புதினா துவையல் அரைப்பதற்காக மிக்ஸியை எடுத்து, கழுவி & தண்ணீர் வடிக்கப்பட்ட இலைகளை பெரிய ஜாரில் அமுக்கு அமுக்கென்று அமுக்கி (இதுதான் பிரச்சினையே), கூடவே சிறிது புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து ஸ்விட்சைப் போட்டவுடன் வழக்கத்திற்கு மாறாக‌ இன்று  'கடகட' வென்ற‌ சத்தத்துடன் மிக்ஸி ஓடியது.

'என்னதிது, புளியங்கொட்டை அரைபடுதா ?' என நினைத்து ஒரு முறை ஜாரில் உள்ள எல்லாவற்றையும் துழாவி, அலசிப் பார்த்துவிட்டு மீண்டும் ஜாரில் போட்டு ஓடவிட்டதும், இம்முறையும் முதலில் வந்த சத்தமே மீண்டும் வரவும், மீண்டும் ஒருமுறை எல்லாவற்றையும் ஒரு தட்டில் கொட்டி,.....படிக்கிற உங்களுக்கே இவ்வளவு கடுப்பா இருக்குன்னா, பிருந்தாவின் நிலை எப்படி இருந்திருக்கும் ?

ஜாரின் பின்புறத்தை எல்லாம் நன்றாகப் பார்த்துவிட்டு, சிறிது தண்ணீர் விட்டு ஓடவிட்டும், இம்முறையும் ...... !!

சரியென வேறொரு ஜாரில் கொட்டி,.....ம்ஹூம், சத்தம் வந்ததே தவிர, உள்ளேயுள்ள ப்ளேடு சுற்றவில்லை. இப்போது முதல் முறையாக மிக்ஸியை மட்டும் ஓட விட்டபோதுதான் தெரிந்தது, ஜாரையும், மிக்ஸியையும் பொருத்துமிடத்திலுள்ள ப்ளாஸ்டிக் பட்டன்கள் (கப்ளர்/Coupler) கொட்டியுள்ளது என்று .

பிருந்தாவுக்கு சோகம்னா சோகம், அப்படியொரு சோகம். புதுவருடம் ஆரம்பிக்க இடையில் ஒருநாளே உள்ள நிலையில் இவ்வளவு சோகம் வந்து அப்பிக் கொண்டதே . அவசரத்திற்கென இந்த ஊர் மிக்ஸி கராஜில்(Garage)  தூங்கிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் நம்ம ஊர் மிக்ஸி மாதிரி வருமா !

பிருந்தா புலம்பிய புலம்பலில் அவள் கணவர் 'நாளைக்காலை முதல் வேலையாக கடைக்குபோய் இதே மாதிரி ஒரு மிக்ஸியை வாங்கிடலாம்' என்றார். அது 'மனைவியின் மேல் உள்ள பாசத்தினாலா' அல்லது 'தேங்காய் சட்னியின்மேல் உள்ள பிரியமா' தெரியவில்லை. அந்த வார்த்தைகள் அந்நேரத்திற்கு அவளுக்கு ஆறுதலாய் இருந்தது.

மிக்ஸி வாங்கும்போதே மேலும் ஒருசில பொருள்களையும் தன் தம்பி கேட்டு வாங்கிக் கொடுத்தது நினவிருக்கிறது. அதில் இது இருக்குமா தெரியவில்லையே.

விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ள அவளது பெண் 'அம்மா, சின்ன மாமாகூட புதுச்சேரி போய்ட்டு வாங்கினோமே, அந்த மிக்ஸியா?' என்றாள்.

'ஆமாம்' என்றாள் பிருந்தா.

'மாமாகூட, கடைக்காரருடன் பேசி சில முக்கியமான பார்ட்ஸ் எல்லாம் வாங்கினாரே, அதை ச்செக் பண்ணிப் பாரும்மா' என்றாள் பெண் பிருந்தாவின் சோகமான முகத்தைப் பார்த்து. 'அம்மா புலம்பலை நிறுத்தினால்தான் இரவு ஒழுங்காகத் தூங்க முடியும்', என்றுகூட கனித்திருக்கலாம்.

'ஆமாம், ஆனால் உடைந்துபோன இது அதில் இருக்கவேண்டுமே' என்று சொல்லிவிட்டு, எப்போது விடியும் என்று காத்திருந்தாள், கராஜைப் போய் கலைத்துப்போட.

டிசம்பர் 31 ந் தேதி விடிந்ததும் விடியாததுமாக ஓடிப்போய் கராஜிலிருந்து அவசரத்திற்கு இந்த ஊர் மிக்ஸியை எடுத்துக்கொண்டு, நம்ம ஊர் மிக்ஸி வைத்திருந்த பார்சலைப் பிரித்துப் பார்த்தால், உள்ளே ஒரு ப்ளாஸ்டிக் கவரில் ........!! ஆஹா, துள்ளிக் குதிக்காத குறைதான். ஜார்களுக்குத் தேவையான ப்ளேடுகள், உடைந்துபோன அதே கப்ளர் புதிதாக‌........ என மேலும் சில பொருள்கள் ஒரு ப்ளாஸ்டிக் கவரில் இருந்தன.

அவசர  அவசரமாக வீட்டிற்கு வந்து அதை மிக்ஸியில் பொருத்தி ஓட விட்டுப் பார்த்து திருப்தி அடைந்தாள்.

'பரவாயில்லையே, நான்கூட எனக்கு வந்த இந்தப் பிரச்சினையை ஓடஓட விரட்டி விட்டேனே !! இனி புது வருடத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம்', என மனதிற்குள் நினைத்தாள்.

உடனே அவளின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

2009 ல் ஊருக்குப் போயிருந்தபோது வாங்கிவந்த மிக்ஸி, தன் தம்பியின் குடும்பத்துடன் பாண்டிச்சேரிக்குப் போய், எல்லா இடங்களையும் சுற்றிவிட்டு, தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு, இரவு வீடு திரும்பும் வழியில், பரோட்டா கடையில் காரை நிறுத்தி, பார்சலுடன் நெய்வேலி வந்து சேர்ந்தது, பல்லுக்கு சரிவரவில்லை என்றாலும் தன் அம்மா பரோட்டாவை விருப்பமுடன் சாப்பிடுவதைப் பார்த்து சந்தோஷப்பட்டு சிரித்தது, என ஒவ்வொன்றாய் மனத் திரையில் வந்துபோனது.

அந்தத் தம்பியுடன் ஒரு சிறு பிணக்கு. இரண்டு மாதங்களாகப் பேசுவதில்லை. எல்லாம் ஒரு ஈகோதான்.

சரி, நாளை புது வருடமாச்சே, அந்த சாக்கில் அவனுடன் பேசிவிடலாம் என்றெண்ணி, மகளிடம் 'நாளை மாமாவுக்கு ஃபோன் பண்ணி பேசணும்' என்றாள்.

'கோபமெல்லாம் போயாச்சாம்மா' என்றாள் மகள்.

'எல்லா பொருளுமே அவனுடன் போய்தான் வாங்கி வந்திருக்கிறேன், எதை எடுத்தாலும் அவன் நினைவுதான் வருகிற‌து, எவ்வளவு உதவி செய்திருக்கிறான், இந்த மிக்ஸியகூட எடுத்துக்கோ, அந்த எக்ஸ்ட்ரா பொருள்களை அவனே ஞாபகமாக‌ வாங்கித் தரலைன்னாகூட...... அதனால கண்டிப்பா பேசியே ஆகவேண்டும்' என்றாள் பிருந்தா.

'அம்மா, நீ நெஜமாவே ஃபீல் பண்ணி ஃபோன் செய்யப் போறேன்னு நெனச்சுட்டேன். இதுக்காகத்தான்னா வேண்டாம்மா' என்றாள் மகள்.

அசடு பௌண்டு கணக்கில் வழிவதை அவள் முகமே காட்டிக் கொடுத்துவிட்டது.

'ஆங்கிலப் புதுவருடம் போனால் போகிறது, அடுத்தாற்போல் வரும் வருடப் பிறப்பு, மாசப் பிறப்பு என எங்கள் ஊரில் சொல்லும் தை முதல் தேதியில் பேசிவிட்டுப் போகிறேனே' என மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.

அதற்கு இப்போதே ஒத்திகையும் பார்க்க ஆரம்பித்துவிட்டாள், 'பேசும்போது எக்காரணம் கொண்டும் மிக்ஸியைப் பற்றி வாயைத் திறக்கவே கூடாது', என்று !!


........எல்லோருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.......!!