Sunday, January 12, 2014

பொங்கல் ஸ்பெஷல் _ கரிநாள்

மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் கரிநாள். இன்று எந்த நல்ல காரியங்களையும் செய்யமாட்டார்கள். அதிகாலை எழுந்ததுமே பொங்கலுக்கென தோட்டத்தில் தோண்டப்பட்ட அடுப்பை, தோண்டிய மண்ணை வைத்தே மூடிவிடுவார்கள்.

இதில் எனக்கு வருத்தமுண்டு.  அட்லீஸ்ட் நான் எழுந்த பிறகாவது இதை செய்திருக்கலாம். சின்ன வயசுல இதுக்காகவே எங்கம்மாவிடம் அழுது, ஆர்ப்பாட்டமெல்லாம் செய்திருக்கிறேன்.

வீடு முழுவதும் தோஷம் நீங்க நேற்று எடுத்து வைத்த பொங்கல் தண்ணீரை தெளிப்பாங்க. மீதமுள்ளதை அவரவர் சொந்த நிலத்திற்கு எடுத்துச்சென்று சிறப்பான விளைச்சல் வேண்டும் என்பதற்காக வயல் முழுவதும் 'பொங்கலோ பொங்கல்' என்று சொல்லிக் கொண்டே தெளிப்பார்கள்.

நேற்று மாலை பயந்து, மிரண்டு போயிருந்த மாடுகளை அதிகாலையிலேயே அந்த இடத்திற்கு அமைதியாக கூட்டிக்கொண்டு போய் அழைத்து வருவாங்க. அவ்வாறு செய்வதால் அதன் பயம் நீங்கி சகஜ நிலைக்கு வரும் என்பது நம்பிக்கை.

இன்று தலைக்குக் குளிக்காமல் எதுவும் சாப்பிடக் கூடாது. வீடு முழுவதும் கழுவி விடப்ப‌ட்டு வாசல் & படிக்கட்டுகளில் மட்டும் மாக்கோலங்கள் போடப்படும். இன்று பாய், படுக்கைகள், தலையணை உறைகள் என எல்லாமும் துவைத்தாக வேண்டும்.

இது ஒருபுறம் நடந்தாலும் சிலர் ஆற்றுக்கு குளிக்கக் கிளம்புவார்கள். பக்கத்து ஊர்களிலெல்லாம் ஊருக்குப் பக்கத்திலேயே தெண்பெண்ணையாறு போகும். ஆனால் எங்கள் ஊர் மட்டும் ஆற்றை விட்டு ரொம்ப தூரத்தில் இருக்கும். அதனால் நீண்ட, நெடுந்தூரம் நடந்தோ அல்லது சைக்கிளிலோ(ஆண்கள்) சென்று குளித்துவிட்டு வருவார்கள்.

என் மூத்த சகோதரிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகள் எனக்கு இல்லை. ஒருவேளை அது என் நச்சரிப்பால்கூட இருந்திருக்கலாம். நானும் என் வயதொத்த சித்தப்பா பெண்ணும் சேர்ந்து அனுமதி வாங்கிக்கொண்டு அவர்களுடன் சேர்ந்து போயிருக்கிறோம்.

ஒரு பையில் ஒரு செட் ட்ரெஸ், துண்டு, ஒரு கூஜா(எதற்கு என பதிவின் இறுதியில் தெரிந்துவிடும்), நிறைய பூ, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய், பழம், வெற்றிலைப் பாக்கு, கற்பூரம், பத்தி என பேஸ்ட் , சோப்பு, ஷாம்பூவைத் தவிர எல்லாமும் இருக்கும். ஜாலியாகக் குளிக்கும்போது பல் துலக்கிக்கொண்டு, சோப்பெல்லாம் போட்டு தேய்த்து....... சோகம் வேண்டாமே என்பதால் அவை மட்டும் மிஸ்ஸிங் !!

தூரத்திலேயே ஆற்றின் கரை தெரியும்போது மகிழ்ச்சியாக இருக்கும். அங்கே போனதும் பெரியவர்கள் கும்மி அடித்து, பாட்டுபாடி விளையாடுவார்கள். சில்லென இருக்கும் தண்ணீரை விட்டு வெளியேறவே மனம் வராது. நாங்கள் போகும் பகுதியில் பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

குளியல் முடிந்ததும் (அரைநாள் ஆகிவிடும்) ஒரு சிறு பள்ளம் தோண்டி அதில் ஊறும் ஊற்றுத் தண்ணீரை கூஜாவில் நிரப்பிக்கொண்டு, ஒவ்வொருவரும் மண்ணால் இரட்டைப் பிள்ளையார் பிடித்துவைத்து, அதற்கு பூவும் வைத்து தீபாராதணை காட்டி, தேங்காய் உடைத்து திரும்புவோம்.

ஆற்றின் கரை ஏறி நின்று 'bye' சொல்லும்போது மனதிற்கு கவலையாக இருக்கும். வரும் வழி நெடுக பழம், தேங்காய் எல்லாம் காலிபண்ணிக்கொண்டே வந்துவிடுவோம்.

எங்கள் தெருவின் முனையில் உள்ள துர்க்கையம்மன் சிலையில் கூஜாவில் எடுத்து வந்த தண்ணீரில் கொஞ்சம் ஊற்றிவிட்டு,  விழுந்துவிழுந்து வேண்டிக்கொண்டு, மீதியை வீட்டின் சாமி அறையில் வைத்துவிடுவோம்.

இன்று அம்மா சூப்பரா ஆப்பமும், தேங்காய் பாலும் செய்து வச்சிருப்பாங்க. பசி நேரத்தில் ஒரு ஆப்பம், அது மூழ்கும் அளவு தேங்காய் பால்________ அவ்வளவுதான்.....அன்று முழுவதும் எழுந்திருக்கவே முடியாது. சுகமான ஒரு தூக்கம்....!!

மதியத்துக்கு மேல் பக்கத்து தெருவில் பெண்கள் பாட்டுபாடி, கும்மி அடிப்பாங்க. நான் போனதில்லை....... விருப்பமில்லை + சோர்வு.

மனதிற்கு இதமான, எனக்குப் பிடித்தமான நாட்களில் இதுவும் ஒன்று !!

                                                                                                              .........(  தொடரும் ) ..........

13 comments:

 1. என்னவொரு "ரசனையான" தூக்கம்...! வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

   Delete
 2. ஆற்றில் குளித்திருக்கிறீர்கள் என்பதை கேட்கும் போது பொறாமையாக இருக்கிறது சித்ரா.
  குளித்து வந்து சாப்பிட்டு நல்ல தூக்கம் . படிக்கும் போதே ஆனந்தமாக இருக்கிறது.
  தொடருங்கள்......

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

   எனக்கே அந்த நாட்களின்மீது ஒரு பொறாமை உண்டுங்க. இப்போது தண்ணீரும் வருவதில்லை. தண்ணீர் வந்ததற்கான சுவடுகளும் இல்லை. எல்லாம் 'மணற்கொள்ளை' படுத்தும்பாடு..... தொடர்வதற்கு நன்றிங்க.

   Delete
 3. மாட்டுப் பொங்கல் நினைவுகள் சுகமாக உள்ளது... ஆப்பமும், தேங்காய்ப் பாலுடன்....:))

  நான் திருமணமாகும் வரை ஆற்றில் குளித்ததே இல்லை...:)) கணவரின் பெரியம்மா வீடு....அகண்ட காவிரியின் அருகில் உள்ள திருப்பராய்த்துறை கிராமம்...முதல் தடவை கரையில் உட்கார்ந்து கொண்டு கூஜாவில் மொண்டு ஊற்றிக் கொண்டேன்.....:))) அதன் பிறகு சுடிதாரோடு முங்கி எழுந்திருந்தேன்.... அப்புறம் அவர்களைப் போலவே குளிக்க பழக்கிக் கொண்டேன்....:)))

  கூஜா பற்றி உங்கள் பதிவில் படித்ததும் சிரித்துக் கொண்டேன்....

  இன்று எனது பக்கத்தில்....

  http://kovai2delhi.blogspot.in/2014/01/blog-post_16.html

  ReplyDelete
  Replies
  1. வருடத்தில் ஒருநாள் மட்டுமே ஆற்றுக்குப் போகும் எங்க யாருக்குமே நீச்சல் தெரியாது. அழகானத் தெளிந்த, ஓடும் தண்ணீரில் உட்கார்ந்து, படுத்து, கதைகள் பேசிக்கொண்டே நாங்களும் அப்படியே குளிச்சிடுவோம்.

   அப்போதெல்லாம் கூஜாவை எல்லாவற்றுக்கும் பயன்படுத்துவோம். இப்போது வீட்ல அது இருக்கான்னே தெரியல. உங்க நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சிங்க.

   Delete
 4. காணும் பொங்கல் அனுபவங்கள் எல்லோருக்கும் இனிமையானவை. அதுவும் சொந்த ஊரை விட்டு உறவுகளை பிரிந்து தொலைதூரத்தில் இருக்கும் உங்களுக்கு நிச்சயம் சிறு வயது நினைவுகள் ஒவ்வொன்றும் அளவற்ற மகிழ்ச்சி அளிப்பதாகத்தான் இருக்கும். அது உங்கள் பதிவின் ஒவ்வொரு வாக்கியத்திலும் தெரிகிறது. படித்து ரசித்தேன் மேடம். மிகுந்த மகிழ்ச்சி.

  ReplyDelete
 5. காணும் பொங்கல் அனுபவங்கள் எல்லோருக்கும் இனிமையானவை. அதுவும் சொந்த ஊரை விட்டு உறவுகளை பிரிந்து தொலைதூரத்தில் இருக்கும் உங்களுக்கு நிச்சயம் சிறு வயது நினைவுகள் ஒவ்வொன்றும் அளவற்ற மகிழ்ச்சி அளிப்பதாகத்தான் இருக்கும். அது உங்கள் பதிவின் ஒவ்வொரு வாக்கியத்திலும் தெரிகிறது. படித்து ரசித்தேன் மேடம். மிகுந்த மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. சொந்த ஊரைவிட்டு தொலைதூரத்தில் வருடக்கணக்கில் இருக்கும்போது பழைய நினைவுகள் எல்லாம் சுகமானதுதான். தங்களின் வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க.

   Delete
 6. நினைவுகள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  நெய்வேலியில் மாட்டுப் பொங்கல் அத்தனை சிறப்பாகக் கொண்டாடிய நினைவில்லை.....

  ReplyDelete
  Replies
  1. கிராமங்களில் மாடுகள் இருக்கும்போது மாட்டுப்பொங்கல் சிறப்பாக இருந்தது. இப்போது கொண்டாடுகிறார்களா என்றும் தெரியவில்லை.

   இங்கே உங்கள் கருத்தையும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றிங்க.

   Delete
 7. இந்தப் பதிவில் நீங்கள் அப்படியே சொந்த ஊருக்குப் போய்விட்டது தெரிகிறது. எனக்கும் சின்ன வயதில் ஸ்ரீரங்கம் கொள்ளிடத்தில் குளித்த நினைவு வந்தது. கோடை விடுமுறை முழுவதும் அங்குதான். அதனால் தினமும் ஆற்றுக் குளியல்.
  போனவருடம் ஒரு முறை தீர்த்த யாத்திரையாக ஸ்ரீரங்கம் சென்றபோது மறுபடியும் கொள்ளிடத்தில் குளித்துவிட்டு வந்தேன். பழைய நினைவுகள் காவிரி ஊற்று போலவே பொங்கி பெருகி வருகின்றன!

  ReplyDelete
  Replies
  1. வருடத்தில் ஒரு முறை ஆற்றுக் குளியல், அது தரும் சந்தோஷத்திற்காகவே அங்கு போகத்தோன்றும். தினமும் அங்குதான் குளியல் என்றால் கேட்கவே வேண்டாம். வருகைக்கும், உங்களின் இனிய‌ நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க.

   Delete