Sunday, January 5, 2014

Put some more .....!!

எங்கள் மகள் இரண்டு மாதங்கள் விடுதி வாசம் முடிந்து முதல் முறையாக வீடு வரும் அன்றிரவு அவளுக்குப் பிடித்த சமையலை செய்யலாமே என மெனு அனுப்பினேன்.

அவளோ ' கிள்ளிப்போட்ட சாம்பாரும் ,  உருளைக்கிழங்கு பொரியலும்' என டிக் செய்தாள்.

நானும் எதேச்சையாக எப்போதும்போல் காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டுத் தாளிக்காமல் ஒரு மிளகாயை அப்படியே முழுதாகப் போட்டு முழுமிளகாய் சாம்பாராக‌ வைத்துவிட்டுக் காத்திருந்தேன்.

வந்து முகம், கை, கால்கள் கழுவிக்கொண்டு சாப்பிட உட்கார்ந்தாள். 'வாவ், எனக்குப் பிடிச்ச சாம்பார் !!' என்று சொல்லிக்கொண்டே ஒருவாய்தான் சாப்பிட்டாள்.

'அம்மா, ஏம்ம்ம்ம்மா இவ்ளோ காரம் போட்டு வச்சிருக்க ?" என்றாள் .

அடுத்து உருளைக் கிழங்கை சுவை பார்க்குமுன்னரே காருமோ என பயந்துவிட்டாள்.

"மிளகாயைக் கிள்ளிக்கூடப் போடாமல் முழுசாதானே போட்டிருக்கேன் . மிளகு ஒன்றிரண்டுதான் தட்டிப்போட்டேன். அதுவா இப்படி காரும் !!" என சொல்லிக் கொண்டே சமைக்கும்போது பார்த்தது போதாதென்று இப்போது மீண்டும்  ஒருமுறை சுவை பார்த்தேன்.

" எனக்கொன்னும் தெரியலயே, நல்லாத்தானே இருக்கு !" என்றேன்.

எப்படியோ ஒருவாறு சாப்பிட்டு முடித்தாள். அதன்பிறகுதான் புரிந்தது கடந்த இரண்டு மாதங்களாக சுத்தமாகக் காரமே இல்லாமல் சாப்பிட்டிருக்கிறாள் என்று.

எங்கள் வீட்டில் சாப்பாட்டில் அந்தளவுக்கு காரம் இருக்காது. இவருக்குக் காரம் பிடிக்காது. ஆனால் மகளுக்கு கொஞ்சம் காரம் வேண்டும், அதனால் சமைக்கும்போது அடிக்கடி "Amma, Put some more  kaaram " என்பாள்.

சட்னியில் ஒரு மிளகாயுடன் கூட ஒரு 1/4 மிளகாய் வைத்து அரைத்துவிட்டு இவர் சாப்பிடும்போது நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒன்றும் சொல்லிக்கொள்ளாமல் பார்த்து சிரிப்போம்.

மகளின் தோழிகள் வீட்டிற்கு வந்தாலும் கையைக்காலை உதறி 'ஆ, ஊ' என்று தமிழ் எழுத்துக்களை தாறுமாறாக வரிசைப்படுத்தி, ஆனாலும் சாப்பாட்டை ஒருகை பார்த்துவிடுவார்கள். எங்களுக்கு சிரிப்பாக வரும்.

"அம்மா, ஊர்ல வக்கிற மாதிரி நல்லா காரமா நீயும் வைம்மா" என்பாள். பிறகு இவரை நினைத்து வேண்டாம் என்று விட்டுவிடுவோம்.

இப்படியெல்லாம் காரம் விரும்பிய இவளா 'ஆ, காருது'ன்னு சொல்கிறாள் !!

மனசு கேக்குமா சொல்லுங்க. சட்னியில் வைக்கப்படும் ஒரு மிளகாய் 1/2 மிளகாய் ஆனது. எல்லாவற்றிலும் காரம் தடாலடியாய் குறைக்கப்பட்டது.

நிலைமை ஒருவாறாக சீராகும் நிலையில், இப்போது பிரச்சினை வேறொரு ரூபத்தில் வந்தது. இதுவரை கிச்சன் எந்தப் பக்கம் என்றுகூடத் தெரியாத ஒரு ஆள் இப்போது அடிக்கடி தலையை நீட்டி ' Put some more  காரம் ' என்று சொல்கிறார் !!

வீடு பார்க்கும் படலத்தின்போது மட்டும் 'கிச்சன் நல்லாருக்கா பாரு' என்று சொல்வதோடு சரி. அதன்பிறகு அது எந்தப் பக்கம் என்றுகூடத் தெரியாது இவருக்கு.

'இது நல்லாருக்கே, இன்னும் கொஞ்சம் காரத்தைக் குறைத்தால் ஒருவேளை இவர் சமையலில்கூட உதவலாம், அல்லது அதற்கும் மேலாக...... மேலாக.........சமையலேகூட .............. !!".

பின்குறிப்பு :_ (ஹா ஹா ஹா , நல்ல்ல்லா ஏமாந்தீங்களா !! எதுக்கு இப்படி அடித்துப் பிடித்து ஓடி வந்தீங்கன்னு எனக்குக் காரணம் சொல்லியே ஆகவேண்டும் !!)

12 comments:

 1. //பின்குறிப்பு :_ (ஹா ஹா ஹா , நல்ல்ல்லா ஏமாந்தீங்களா !! எதுக்கு இப்படி அடித்துப் பிடித்து ஓடி வந்தீங்கன்னு எனக்குக் காரணம் சொல்லியே ஆகவேண்டும் !!)// கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! போட்டுக்கொண்டிருந்த தூக்கத்தை கலைச்சு உங்களுக்கு ஒரு அட்டனன்ஸ் போடலாம்னுதான்! புட் சம் மோர் கமெண்ட்ஸ்னு ஒரு நல்லெண்ண்ண்ண்ண்ண்ண்ணம்! ;)

  ReplyDelete
  Replies
  1. ம், பகல்ல தூக்கமா !! எழுப்பிவிடாம என்ன பண்ணிட்ருக்காங்க அந்த ஒருத்த‌ங்க !

   Delete
 2. நல்ல பகிர்வு...

  காரம் எவ்வளவு குறைவோ அத்தனை நல்லது..

  ReplyDelete
  Replies
  1. காரம் கூடாது என்று தெரிந்தாலும் அது இல்லாம சாப்பிட முடியலயே ! வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க.

   Delete
 3. நல்லா இருக்குங்க...

  அளவிற்கு மீறினால்...!

  ReplyDelete
  Replies
  1. பொங்கி எழமாட்டாங்க என்ற தைரியம்தான். வருகைக்கு நன்றிங்க.

   Delete
 4. கணவரை சமைக்க வைப்பதற்கு எப்படியெல்லாம் ஐடியா போடுகிறீர்கள் சித்ரா.. ஆனாலும் சாம்பாரை விட சுவையாய் தான் இருக்கிறது ஐடியா.
  பின்குறிப்பு மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லையே! நிஜமாகத்தான்.

  ReplyDelete
  Replies
  1. என்ன‌ ஐடியா போட்டாலும் ஒன்னும் நடக்கமாட்டிங்குதே !

   பின்குறிப்பு மூலமா பலமான பல்பு வாங்கிட்டேன். தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கவும், ஆங்கிலப் பதிவா(!!!!!!!) ன்னு மயங்கிடுவாங்களோன்னு பயந்துட்டேன்.

   Delete
 5. அடுத்தமுறை ஆங்கில தலைப்பு மட்டுமில்லாமல் ஆங்கிலப் பதிவே போட்டுவிடுங்கள்!
  புத்தாண்டில் ஒரு ஆங்கில ப்ளாக் ஆரம்பித்துவிடுங்கள் - இப்போது பல்பு வாங்கியதை சரி செய்துவிடலாம்!

  மகளுக்கு காரம் சாப்பிட்டப் பழக்கம் போய்விட்டதா? அதெல்லாம் கொஞ்சநாளைக்குத்தான். நம் உடம்பில் பழகிய காரம் அவ்வளவு எளிதில் போகாது. மறுபடி காரம் சாப்பிட ஆரம்பித்துவிடுவாள் பாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. முன்பு ஒரு சின்ன ஆசை இருந்தது, குட்டிகுட்டியா, சிறுசிறு பதிவுகளா எழுதணும்னு. ஓ நோ !! நானேதான் வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனா!

   ஒரு வாரத்திற்கு அப்படியே இருந்தாள். எனக்குதான் முதலில் கொஞ்சம் பயம் வந்தது. அதன்பிறகு சரியாகிவிட்டாள். நீங்க சொன்ன விஷயத்தால் கொஞ்சம் ஆறுதல்.

   Delete
 6. பரவாயில்லையே .... சமையல் கட்டு இருக்கும் திசை தெரிந்து விட்டதா..... இனி சமையலே கூட செய்யலாம்....:)))

  காரம் - எங்கள் வீட்டிலும் இது தான் பிரச்சனை...:))

  உங்கம்மா திருந்தவே மாட்டான்னு மகளிடம் புகார் சொல்லப்படும்....:))

  ReplyDelete
  Replies
  1. கடையிலிருந்து பார்சல் வருமே தவிர இவராவது கிச்சன் பக்கம் போவதாவது !

   நானே காரம் குறைவாதான் செய்வேன், அதுவே இவருக்கு அதிகம் என்பார். பொறுத்துப்பொறுத்துப் பார்த்துவிட்டு, என்னக்காச்சும் ஒருநாளைக்கு என் இஷ்டப்படி செய்திடுவேன்.

   Delete