Friday, February 28, 2014

ம்ம்ம் ............ ?



இப்போல்லாம் நான் பெயிண்ட்டும், ப்ரஷ்ஷுமாத்தான் சுத்திகிட்டிருக்கேன். மேலேயுள்ள படத்தை  எப்படி வரைஞ்சேன்னு மட்டும் கண்டுபிடிச்சு வையுங்க, கண்டிப்பா நாளை மாலைக்குள் வந்துவிடுவேன்.

கலிஃபோர்னியா காரங்க ஈஸியா கண்டுபிடிச்சாலும் பிடிச்சிடுவாங்க. அத‌னால அவங்கள ஆட்டத்துல சேத்துக்கலாமா, வேண்டாமான்னு பொதுக்குழுவும், செயற்குழுவும் கூடி விவாதிச்சிகிட்டிருக்கு.

Wednesday, February 26, 2014

மேக மலையினூடே ......... !

மேக மலையினூடே ............ சூரிய அஸ்தம‌னம் !



பழைய புகைப்படங்களைப் புரட்டியபோது கிடைத்த மறக்க முடியாத புகைப்படங்கள் இவை. 2010 ஆம் ஆண்டு மே மாதத்தின் கடைசி வாரத்தில் ஒருநாள் மாலை 8:30 மணிக்கெல்லாம்(ஆமாங்க, இங்கு கோடையில் எட்டு, ஒன்பது மணியெல்லாம் மாலையாகத்தான் இருக்கும்) மகள் Badminton வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்தாள். வந்ததும் வராததுமாக எதையோ எடுத்துக்கொண்டு வெளியே ஓடினாள்.

'Badminton racquet ஐ பள்ளியிலேயே வச்சிட்டு வந்துட்டாளோ ! இருக்காதே, அதுக்கு சான்ஸே இல்லையே. Backpack ஐ மறந்து வச்சிட்டு வந்தாலும் வருவாளே தவிர ஸ்போர்ட்ஸ் சம்மந்தமான‌ பொருள்களை மறக்கவேமாட்டாளே !'  என நினைக்கும்போதே உள்ளே வந்து எங்களை வெளியில் வரச்சொல்லி,  மேகக் கூட்டத்தினிடையே சூரியன் மறைந்துகொண்டிருக்கும் இந்த அழகான காட்சியையும், காமிராவில் தான் பிடித்த படங்களையும் காட்டினாள்.

முதலிரண்டு படங்களை வெளியிலிருந்தும், கடைசி இரண்டு படங்களை பேட்டியோவிலிருந்தும் எடுத்திருந்தாள்.

'ஹைய்யோ, சூப்பரா வந்திருக்கு!" என்று நாங்கள் கூறியதும், அதன்பிறகான ஜாலி பேச்சுகளும் மனதில் வந்துபோயின‌ !!

Friday, February 21, 2014

பிறந்த மண்ணின் பாசம் !!

 
படம் உதவி_கூகுள்

ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியிலும் 'ஊருக்கு போவதா வேண்டாமா' என்ற கேள்வி வந்துவந்து போகும். 'போவதில்லை' என்றே முடிவெடுத்திருந்தாலும் ஒரு நப்பாசையில் அந்தக் கேள்வி மட்டும் தொக்கி நிற்கும்.

வழக்கம்போல இந்த வருடமும், ஆனால் கொஞ்சம் முன்னதாகவே அந்தக் கேள்வி வந்துவிட்டது.

"அம்மா,  இந்த வருஷம் நாம ஊருக்குப் போறோமா?" என்று எப்போதும்போல் மகள்தான் ஆரம்பித்து வைத்தாள்.

"தெரியலையே" என்றேன்.

"அப்படி ஊருக்குப் போறதுன்னா சிங்கப்பூர் டூ சென்னைக்கு நாம ஏற்கனவே போனோமே ஒரு ஃப்ளைட், அதுல போற மாதிரி டிக்கெட் புக் பண்ணுங்க‌" என்றாள் சிரித்துக்கொண்டே !

அந்த பயணத்தை நினைவுபடுத்தியதும் எனக்கும்கூட‌ சிரிப்புதான்.   ஏன்?  ஏன்?  ஏன்?

நாங்கள்(நான் & மகள்)  இந்தியாவுக்கு போகும்போது எப்போதும் சிங்கப்பூர் வழியாகத்தான் போவோம். அப்படி போகும்போது சிங்கப்பூரில் எட்டு மணி நேரம் வெயிட் பண்றமாதிரி வரும். ரொம்பவே கடுப்பா இருக்கும்.

அதனால் இறங்கியதும் calling card வாங்கி சுந்த‌ருக்கும், ஊருக்கும் ஃபோன் செய்து சிங்கப்பூர் வந்துவிட்டதை தெரிவிப்பது, குளிப்பது, அங்குள்ள காவேரி ரெஸ்டாரண்டில் தோசை சாப்பிடுவது, அங்கேயே 'பிடிக்காது' எனத் தெரிந்தும் ஒரு ஆர்வத்தில் 'டீ'யை வாங்கி ஒரு வாய் குடித்துப் பார்த்துவிட்டு கொட்டிவிடுவது, ஒரு பத்துபதினைந்து டைகர்பாம் வாங்குவது, இங்கு அவளுடன் படிக்கும் பிள்ளைகளுக்கு குட்டிகுட்டியா க்யூட்டா டாய்ஸ் வாங்கி தனியாக பேக் பண்ணி வைத்துக்கொள்வது, மீண்டும் டயர்டாகி பர்கர் & ஃப்ரென்ச் ஃப்ரைஸ் வாங்கி சாப்பிடுவது, எதையுமே வாங்காமல் பல கடைகளுக்கும் விஜயம் செய்வது, மீண்டும் ஒருமுறை எல்லோருக்கும் ஃபோன் செய்வது என இதையெல்லாம் எவ்வளவுதான்     ஸ்  லோ  மோ  ஷ  னி  ல் செய்தாலும் இரண்டுமூன்று மணி நேரங்கள் மீதமிருக்கும். என்ன செய்வது எனத் தெரியாமல் முழிப்போம்.

கடைசியில் ஒரு வழியாக விமானத்தில் ஏறுவதுதான் தெரியும், அதன்பிறகு இறங்கும்வரை என்ன நடக்குதுன்னே தெரியாது. அசதியில் நான் தூங்கிவிடுவேன். ஏதோ சலசலப்பு இருப்பது கனவுல வர்ற‌ மாதிரி தெரியும்.

ஆனல் அதிசயமாக‌ சென்ற முறை(2011) ஊருக்கு போனபோது சிங்கப்பூரில் இறங்கிய ஒரு மணி நேரத்திலேயே எங்களுக்கு ஃப்ளைட். அதுவும் நண்பக‌லில். காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.  அதனால் மேற்சொன்ன வேலைகளில் 'ஃபோன் பேசியது, டைகர்பாம் வாங்கியது' இதை மட்டும் முடித்துக்கொண்டு ஓடிப்போய் ஏறியாச்சு.

ஃப்ளைட்ல இருக்கோமா அல்லது எங்க‌ ஊரு டவுன்பஸ்ல இருக்கோமா என்றே தெரியவில்லை. ஒரே பேச்சு சத்தம். பயணிகள் பையை வைப்பதும் திரும்ப எடுப்பதுமாக நெரிசல்வேறு. கூச்சலும் இரைச்சலுமாக .......... இதுவரை விமானத்தில் பார்த்திராத காட்சிகளாக இருந்தன.

விமானத்தை எடுக்கப்போவதாக அறிவிப்பு வந்தும்கூட‌ யாரும் உட்காருகிற மாதிரி தெரியவில்லை. மின்னணு கருவிகளை அணைக்கச்சொல்லியும், seat belt போடச் சொல்லியும் யாரும் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை.

இப்போது நடக்க ஆரம்பித்தவர்கள்தான் விமானப் பணிப்பெண்கள், விமானம் சென்னையில் இறங்கும்வரை அவர்களை உண்டுஇல்லை என்று சுறுசுறுப்பாகவே வைத்திருந்தனர் நம் மக்கள்.

ட்ரே முழுவதும் பிஸ்கட்டுகளை அடுக்கிஅடுக்கி எடுத்து வந்து கொடுத்துக் கொண்டே இருந்தனர். அதுபோலவே ட்ரிங்ஸும். 'இது வேண்டும் அது வேண்டும்'  என அவர்களை சுழலவிட்டனர்.

'மாப்ள, மச்சான்' என உறவுசொல்லி அழைப்பதும், கூட்டமாக‌ நின்று கத்தி பேசுவதும், சிரிப்பதுமாக ஒரு வழி பண்ணிவிட்டனர்.

சாப்பாடு வந்ததும் சாப்பிட்டுவிட்டு மீண்டும் முன்புபோலவே அப்பெண்களை வேலை வாங்கினர். ஒரு கட்டத்தில் பிஸ்கட்டுகள் காலியாகிவிட்டதாக அவர்கள் கூறிவிட்டனர். ஒருவேளை அப்படிச் சொல்லி தப்பித்திருக்கலாமோ !

எனக்கு இக்காட்சிகளைப் பார்த்தபோது  'அவ்வளவு பசியுடனா வந்திருப்பார்கள்? ' எனத் தோன்றியது. இவ்வளவு ட்ரிங்க்ஸ் சாப்பிட்டுவிட்டு ரிஸீவ் பண்ண வருகிறவர்களை எப்படி சந்திப்பது என சங்கடமாக‌ இருந்தது.

ஃப்ளைட் லேண்ட் ஆகும்போதும்கூட அப்படியே எழுந்து நடப்பதும், மேலே வைத்த பையை எடுப்பதும், ஃபோன் செய்ய முற்படுவதுமாக இருந்தனர். அந்த நேரத்தில்கூட விமானப் பணிப்பெண்களை உட்கார விடவில்லை.

ஒருவேளை நிர்வாகம் அப்பணிப்பெண்களுக்கு தண்டனை கொடுத்து தன் கோபத்தை தீர்த்துக்கொண்டிருக்குமோ என்றுகூடத் தோன்றியது.

ஓட்டப் பந்தயமும், உயரத்திலிருந்து கீழே குதிக்கும் பந்தயமும் வைக்காததுதான் குறை. இவற்றையெல்லாம் குட்டிப்பிள்ளைகள் செய்தால் ரசிக்கலாம், அதையே பெரியவர்கள் செய்யும்போது ......... ?

என் மகளோ விழுந்துவிழுந்து சிரித்தாள். எனக்கும் சிரிப்புதான்.

இந்த பயணத்தை நாங்க ரெண்டுபேரும் அடிக்கடி நினைவுபடுத்தி சிரித்து மகிழ்வோம். "அடுத்த தடவ போறதுன்னா அதுலதான் போகணும்ம்மா" என்பாள்.

மேலே சொன்ன இந்த விமானத்தில் போகவேண்டும் என மகள் ஆசைப்பட்டதின் காரணம்,  "உண்மையான முகத்துடனும், வெகுளித்தனமான மனதுடனும் உள்ள நம் மக்களுடன் பயணம் செய்வதே பிடிக்கிறதாம்".

இதுதான் பிறந்த மண்ணின் பாசமோ !!

Thursday, February 13, 2014

ஆமையும்............ இயலாமையும்....................!!

நாங்கள் இருக்கும் ஊரில் நிறைய பூங்காக்கள் / Park உண்டு. அவற்றில் ஒரு 'பார்க்'குக்கு மட்டும் அடிக்கடி போவோம். அங்கு செயற்கை குளம் ஒன்று இருக்கும். முழுவதும் நீர் நிரம்பியும் இருக்கும். அதில் நிறைய‌ பறவைகள் தங்குயிருப்பது பார்க்க அழகாய் இருக்கும். எவ்வளவு நேரமானாலும் நேரம் போவதே தெரியாது.

சமீபத்தில் ஒருநாள் அங்கு போனபோது எடுத்தவைதான் கீழேயுள்ள படங்கள்.

'ரைமிங்'கா இருக்கட்டுமே என்று தலைப்பு வைத்ததால் இந்தப் பதிவில் ஆமையும் வந்து ஒட்டிக்கொண்டது. ஒருவர் தூங்குகிறார் !  ஒருவர் சோம்பல் முறிக்கிறார் !!

                                        ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

பகல் நேரமாக இருந்தாலும் நிறைய வாத்துகள் குடும்பம் குடும்பமாக‌ ஆங்காங்கே தூங்கி, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

                                             தண்ணீரில் மிதந்துகொண்டே தூக்கம் !!

                                            மரத்தடியையும் விட்டு வைக்க‌வில்லை !!

                                       ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அதில் ஒரு சிறிய குட்டியூண்டு வாத்து செடிகளுக்கிடையில் சுகமான தூக்கத்தில்.........

                                             ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

அதன் அழகான தூக்கத்தைக் 'க்ளிக்'கியபோது காமிராவின் Flash பட்டு விழித்துக் கொண்டது.  "இதுவே நான் சிங்கம், புலியா இருந்தா இப்படி எழுப்பி விடுவியா ?" என்று கேட்பதுபோல் ஒரு பார்வையை வீசியபோது............

"ஸாரி ஸாரி, தெரியாத்தனமா(!) உன் தூக்கத்த கலச்சிட்டேன், நீ தூங்குதூங்கு" என மனதளவில் கெஞ்சினாலும் .......................

                                     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"க்ர்ர்ர்ர்ர், எழுப்பிய உன்ன‌ ஒன்னும் செய்ய முடியல‌யே" என‌ தன் இயலாமையை நினைத்து நொந்துபோய் அங்கிருந்து வெளியேறி, வேறிடம் தேடிப்போனது மனதுக்கு கவலையாய் இருந்தது. இனியாவது நான் திருந்துவேனா பார்க்கலாம் !!
                                       
                                     ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Monday, February 10, 2014

கார் ஓட்டத் தெரியு மா வா !!!!! _ _ _ (தொடர்ச்சி)


 படம் உதவி_கூகுள்

ஒருவேளை நம்ம குடியிருப்பில் ஏதாவது பிரச்சினையாய் இருக்குமோ என நினைக்கும்போதே பின்னால் நின்ற போலீஸ் கார் எங்கள் காருக்குப் பக்கத்தில் வந்து நின்றது. காரின் கண்ணாடியை இறக்கினேன்.

"தண்ணி அடிச்சிட்டு ஓட்டுவது மாதிரி இருக்கே" என்றார்.

கறுப்பு நிறத்தில், பலவடிவங்களில், விதவிதமான தண்ணீர் பாட்டில்களை கடைகளில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் உள்ளே உள்ள தண்ணீர் எந்த நிறம்னுகூட என‌க்குத் தெரியாது. என்னைய‌ப்போய்.......!!

காரில் இருந்து இறங்கச் சொல்லி நேர்க்கோட்டில் நடக்கச் சொல்லுவாரோ!

1,2,3....... ஐ நேராக சொல்ல வேண்டுமா ? அல்லது தலைகீழாகவா ?  இது பரவாயில்லை, என் நல்ல(!)  நேரம் A B C D......... யை  Z Y X W ...........  என தலைகீழாகச் சொல்லச் சொன்னால்?  இவ்வாறெல்லாம் மனது கணக்குப் போட்டது.

"மேம், லைசன்ஸ் இருக்கா" என்றார்.

எப்படியும் பின்னால் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரைப் பார்த்திருப்பார். இருந்தாலும் கேட்டார்.

நான் "பெர்மிட் இருக்கு, ஸ்டூடண்ட ட்ரைவர்" என்றேன்.

ஓட்டுனர் உரிமம் இல்லாமலேயே 'Traffic ticket' வாங்கப் போகிறேனோ !! இருந்தாலும் உள்ளுக்குள் "அந்த டிக்கெட் எப்படி இருக்குன்னுதான் பார்ப்போமே" என்ற ஆவலும் இருந்தது.

ஆனால் அவரோ "நல்லா ஓட்டிப் பழகுங்க" என்று சொல்லிவிட்டு பறந்தார். போகும்போது மறக்காமல் "வாழ்த்துக்கள்" சொன்னார்.

உங்களை மாதிரிதான் எனக்கும் 'இப்படி உப்பு சப்பில்லாம‌ முடிஞ்சு போச்சேன்னு'  வருத்தம், இருந்தாலும் 'ஏதோ தப்பித்தோம்' என்று சந்தோஷப்பட்டேன். அப்போதைக்கு இது எனக்கு பெரிய விஷயமாக இருந்தது. அதன்பிறகு நினைத்துப் பார்த்தால் சிரிப்புதான் வரும்.

'எவ்வளவு ஷார்ப்பா இருக்காங்க' என்று வியப்பு வந்தது. ஆகமொத்தம் நல்லா, தெளிவா, பின்னால் வந்தவர்களை குழப்பி, தள்ளாட வைத்திருக்கிறேன் என்பது மட்டும் புரிந்தது.

'இதையெல்லாம் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம், நீங்க நல்லாதான் ஓட்றீங்க. நாளைக் காலை ரெடியா இருங்க, Behind the wheel driving test க்கு போகணும்" என்று ட்ரெயினர்  சொல்லிவிட்டு சென்றார்.

வீட்டுக்கு வந்து இப்போது நிஜமாகவே குழம்பினேன், "டெஸ்ட்டுக்கு போகணுமா அல்லது கேன்ஸல் பண்ணிடலாமா ? " என்று.  எழுத்துத் தேர்வில் இருக்கும் தைரியம் நேர்முகத் தேர்வு எனும்போது அடிபட்டுப் போகிறது.

இவரை ஐடியா கேட்டால் "பாஸ் பண்ணா சந்தோஷம், இல்லையா? இதுவே ஒரு அனுபவமா இருக்கட்டுமே, கண்டிப்பா போய்ட்டு வா " என்றார்.

காலை 9:20 க்கு தேர்வு. அதற்கு முன்னதாக ஒருமணி நேரம் ஓட்டிப் பழகினேன். பிறகு DMV அலுவலகம் வந்தோம் .

என் மனதிற்குள் இரண்டு விருப்பங்கள் இருந்தன. ஒன்று பெண் கண்காணிப்பாளர் வரக்கூடாது, மற்றொன்று கண்காணிப்பாளர் 'பார்க்கிங்'கில் இடது பக்கமாக காரை 'பார்க்' செய்ய சொல்ல வேண்டும். இவை இரண்டும்தான்.

இடது பக்கம் அனாயாசமாக பார்க் செய்யும் என்னால் வலது பக்கம் செய்யும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவைப்பட்டது. இதுக்குதான் எங்கள் காரை பயன்படுத்தினேன்.

உள்ளே போனதும் ஏதோ ஓர் எண் கொடுத்தனர். அதை வாங்கிக்கொண்டு காரை எடுத்துக்கொண்டு மிகமிக மெதுவாக(அப்படித்தான் வரவேண்டும்) அலுவலகத்தை வலதுபக்கமாக சுற்றி இடது பக்கமாக‌ வந்து சேர்ந்தேன்.

அங்கே ஆண்பெண் என கண்காணிப்பாளர்கள் சிலர் வரிசையாக நின்றிருந்தனர். அவர்களில் எனக்கு வந்தவர் பெண் கண்காணிப்பாளர். இங்கேயே என் இரண்டு விருப்பங்களில் ஒன்று காணாமல் போய்விட்டது.

காரில் வந்து அமர்ந்து தன்னை அறிமுகம் செய்துகொண்டு சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக அவர் என்னை traffic கில் வண்டியை ஓட்டச்சொல்லி சோதனை செய்தார். கடைசியாக ஒரு இடத்தில் நிறுத்தச்சொல்லி ரிவர்ஸில் வரச்சொன்னார். அங்கு சிறிது சொதப்பினேன். அப்போதே நினைத்தேன் 'அவ்வளவுதான்' என்று.

ஏதோ என் நல்ல நேரம் "மீண்டும் முயற்சிக்கிறீர்களா" என்றார்.

"நிச்சயமாக" என்று பலமாகத் தலையையாட்டி, 'நன்றி'யையும் சொல்லிவிட்டு முயற்சித்தேன். இந்த முறை சூப்பரா பின்னாலேயே கொஞ்ச தூரம் சென்றேன்.

'நன்று' சொன்னார். பிறகு அலுவலகம் நோக்கி சென்றோம்.

அங்கே பார்க்கிங் ஏரியாவில் முதல் வரிசையில் நுழைந்தேன். எங்கு இடம் இருக்கிற‌தோ அங்கு நிறுத்தச் சொன்னார். 'பரவாயில்லையே' இடது பக்கமாக ஒரு இடத்தில் நிறுத்தலாம் என்று பார்த்தால்......எல்லா இடங்களிலும் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

மனம் முழுவதும் இடது பக்க பார்க்கிங் இடம் காலியாக இருக்க வேண்டுமே என்று வேண்டிக்கொண்டது. கடைசியாக ஒரு இடம் இருந்தது. அதுவும் வலது பக்கமாக. இங்கே என்னுடைய இரண்டாவது விருப்பமும் நிறைவேறாமல் போனது.

எனக்கு காரை சரியாக பார்க் பண்ண வேண்டுமே என்ற எண்ணம்தான் அதிகமாக இருந்தது. வலது பக்கம் திரும்பும் விளக்கை போடவேண்டும் என்று நினைக்கிறேனே தவிர போடவில்லை. கவனம் முழுவதும் நன்றாக பார்க் பண்ணவேண்டுமே என்பதிலேயே இருந்தது.

காரை நிறுத்தியதும் கண்காணிப்பாளர் என்னிடம் "நன்றாக ஓட்டினீர்கள். சில இடங்களில் தவறு செய்தீர்கள். முக்கியமாக விளக்கை போடாமலே திரும்பியது" என்றார்.

இதுவரை 'லப்டப்' என தாறுமாறாக எகிறிக் கொண்டிருந்த இதயத்துடிப்பு இப்போது  'பக்பக், பக்பக்'  என அடித்துக்கொண்டது.

'சீக்கிரம் விஷயத்துக்கு வாங்க'  என சொல்ல‌ வேண்டும்போல் இருந்தது.

"வாழ்த்துக்கள், நீங்க பாஸ் பண்ணிட்டீங்க, இதோடு நிறுத்தக்கூடாது, மேலும் நன்றாக ஓட்டிப்பழக வேண்டும்" என்றார். நம்ப முடியவில்லை ..... வில்லை .... இல்லை !  சத்தம் போட்டு கத்த வேண்டும்போல் இருந்தது. இவரிடம் ஃபோன் பண்ணி  'ஃபெயில்'  என சொல்ல வேண்டும் என நினைத்தேன், ஆனால் உற்சாகத்தில் சோக கீதம் பாட‌வராது என்பதால் விட்டுவிட்டேன்.

'நீங்க உள்ள போய்ட்டு லைசன்ஸ் வாங்கிக்கோங்க' என்று சொல்லி அவர் கையிலிருந்த மதிப்பெண் பேப்பரை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

அவர் போனதும் முதலில் நான் செய்தது இறங்கி வந்து காரை சரியாக பார்க் பண்ணியிருக்கேனா என்றுதான். பர்ஃபெக்டா பண்ணியிருந்தேன். அதற்குள் ட்ரெயினர் வந்தார். அவரிடம் விஷயத்தை சொன்னதும் அவரும் 'வாழ்த்துக்கள்' சொன்னார்.

பிறகு உள்ளே போய் பேப்பரைக் கொடுத்ததும் அவர்களும் வாழ்த்துக்கள் சொல்லி  "இன்னும் ஒரு மாதத்தில் லைசன்ஸ் வந்து சேரும், அதுவரை இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று ஒரு லைசன்ஸை கொடுத்தனர்.
(ஆனால் ஒரு வாரத்திலேயே லைசன்ஸ் வந்து சேர்ந்துவிட்டது.)

காருக்கு வந்தேன். ட்ரைவர் ஸீட்டை நோக்கிப் போனேன். ட்ரெயினரோ "வேண்டாம், பேஸஞ்சர் ஸீட்ல உக்காருங்க, நான் ட்ராப் பண்ணுகிறேன்" என்றார். சந்தோஷமோ சந்தோஷம் !!

எனக்கோ அவர் வீட்டில் கொண்டுவந்து விட்டது ஏதோ ஜாலியாக ஊர்வலம் போவதுபோல் இருந்தது. இறங்கும்போது "லைசன்ஸ் வந்ததும் புது வாலட் வாங்கி அதுல வச்சிக்கோங்க, மறக்க வேண்டாம், இன்னும் நிறைய தடவை ஓட்டிப்பழக வேண்டும்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

 First attempt ல‌யே பாஸ் பண்ணிட்டோமில்ல !! வீட்டுக்கு வந்து இதை வைத்து ஆட்டம் போட்டதெல்லாம் தனிக்கதை !!  அப்பாடி !  ID என்ற பெயரில் இனி எல்லாவற்றுக்கும் 'பாஸ்போர்ட்'டை தூக்கிக்கொண்டு ஓட‌வேண்டாம்.

லைசன்ஸ்தான் இருக்கே, காரை எடுத்துகிட்டு சித்ரா சுத்துசுத்துன்னு சுத்துறாங்களோன்னு நினைத்து யாராவது பொறாமைப்பட்டால் ......... ஹா  ஹா ஹா !!  என்னிடம் காரைக்கொடுக்க இவருக்கு பயம். முக்கியமாக மகளை உட்கார விடமாட்டார்.

விருப்பமிருந்தால் என்னைக்காவது ஒருநாள் ஓட்டுவேன், டச் விட்டுடக் கூடாதேன்னு, அவசரத்துக்கு உதவுமே !!

தொடர்ந்து இந்த மூன்று பதிவுகளையும் பொறுமையாகப் படித்த உங்களுக்கு ஏதாவது நல்லது செய்ய‌ வேண்டுமே !!  ஹும் ........ என்னைய நம்பி, தைரியமா வண்டில ஏறுங்க, இவர் வருவதற்குள், எங்க ஊரை ஒருசுத்து சுத்தி வந்திட‌லாம் !!