ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

கார் ஓட்டத் தெரியு மாவா !!!!!


A Woman Taking a Driving Test Royalty Free Clipart Picture


படம் உதவி __ கூகுள்

ஊரில் இருந்தவரை எனக்கு கார் ஓட்டுவதில் எல்லாம் எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனால் ஜம்பமாக உள்ளே உட்கார்ந்துகொண்டு "இப்படி ஓட்டு, அப்படி திருப்பு"  என காமெண்ட்ஸ்...... இல்லையில்லை.......தொந்தரவுதான் கொடுத்திருக்கிறேன்.

அமெரிக்கா வந்தபிறகு அது கொஞ்சம் துளிர்விட்டது என்பதுதான் உண்மை. வந்து ஒருசில வருடங்கள் அதைப்பற்றி யோசிக்கவில்லை.  'இன்னும் ஆறு மாதங்களோ அல்லது ஒரு வருடமோ, அதற்குள் ஊருக்குப் போய்விடப் போகிறோம்'  என இப்படியே இரண்டுமூன்று வருடங்கள் ஓடிப்போனது.

வந்த ஆறு மாதத்தில், அடுத்து ஒரு வருடத்தில், அதற்கடுத்து ஆறு மாதத்தில் .................... என இப்படியே இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான‌ சம்பளமில்லா நல்லெண்ணத்(!)  தூதுவர்களாக‌ நானும் எங்க பாப்பாவும் பயணம் மேற்கொண்டிருந்தோம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஒருநாள் ஒரு தோழியின் வீட்டுக்குப் போனேன். அங்கு டேபிளில் ஒரு குட்டியூண்டு புத்தகம் இருந்தது. என்னஏது என புரட்டிப் பார்த்தேன்.

'டீ'யுடன் வந்த அவர் நான் அந்தப் புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு "சித்ரா உனக்கு ட்ரைவிங் தெரியுமா?" என்றார். 'ஜோக்' என நினைத்து சிரித்துவிட்டேன். (இவர் போட்டுத்தரும் 'டீ' சூப்பரா இருக்கும்)

"சொல்லு சித்ரா, சீரியஸாதான் கேட்கிறேன்" என்றார்.

பிறகு இருவரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். அதாவ‌து இருவரும் ஒன்றாகப் போய் எழுத்துத் தேர்வை முடிப்பதென்று. எழுதுவதற்குமுன்..... இல்லையில்லை ..... படிக்க ஆரம்பிக்குமுன்பே அவர் இந்தியாவுக்கு போய்விட்டார்  நிரந்தரமாக தங்கிவிட.

அவர் விதைத்த கார் ஓட்டும் ஆசை அப்போதைக்கப்போது வந்து எட்டிப் பார்க்கும். ஒருநாள் என் விருப்பத்தை இவரிடம் சொன்னதும் DMV யில் இருந்து California driver handbook என்ற எழுத்துத் தேர்வுக்கான‌ ஒரு சிறிய‌ புத்தகம் எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தார்.

அதை ஒருமுறை புரட்டிப் பார்த்ததோடு சரி. அதற்குள் இவருக்கு வேலை விஷயமாக மூட்டை முடிச்சுகளுடன் வெளியூஊஊர் செல்லவேண்டிய சூழ்நிலை.

அங்கு சென்று செட்டிலானதும்  'எனக்கு கார் ஓட்ட வேண்டும்'  என்று கேட்டதும் இவரும் அரைமனதாக‌  'சரி'  என்றார்.

நானும் தேர்வு எழுதி பெர்மிட் வாங்கிக்கொண்டால் இன்னும் கொஞ்ச நாளிலேயே DL வாங்கிக்கொள்ளலாம் என நினைத்து தயாரானேன்.

ஒரு சனிக்கிழமை காலை 6:00 மணிக்கு Fullerton என்ற பக்கத்து ஊர் DMV ஆஃபீஸுக்கு போனோம். பார்த்தால் எங்களுக்குமுன் ஒரு பெரிய வரிசை காத்துக்கொண்டிருந்தது. எப்போதும் எங்கு சென்றாலும் நாங்கள்தான் முதலிடத்தைப் பிடிப்போம். அன்று எங்கள் இடத்தை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுத்துவிட்டோமே என்று வரிசையில் நின்று நொந்து நூலானோம்.

எனக்கான‌ நேரம் வந்ததும் உள்ளே போய் சில ஃபார்மாலிட்டிகளை முடித்துவிட்டு தேர்வு எழுதினேன். எழுதிவிட்டு திருத்துபவரிடம் கொண்டுவந்து நீட்டியதும் அவரும் திருத்திவிட்டு "ஏழு பிழைகள் உள்ளன. ஆறுக்குள் இருந்திருந்தால் நீங்கள் கார் ஓட்டிப்பழக பெர்மிட் தரலாம், அடுத்த முறை நன்றாகப் படித்துவிட்டு வந்து தேர்வெழுதி வெற்றிபெற வாழ்த்துக்கள்" என்று கூறினார்.

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே எனக்கெல்லாம் தேர்வறைக்குள் நுழையும்வரை....... அவ்வளவு ஏன், தேர்வு எழுதி முடிக்கும்வரை ஒரு குழ‌ப்பம் நீடிக்கும். குழப்பத்துடனேயே தேர்வெழுதி முடித்து தாள்களைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டு வெளியில் வரும்போதுதான் ஒரு தெளிவு பிறக்கும். கூடவே, 'கேள்வித்தாளை இப்போது கொடுத்தால் தூள் கிளப்பிடலாமே' என்றும் நினைப்பேன். அந்த உணர்வுதான் இப்போதும் வந்தது.

அவரிடம் 'இன்றே இன்னொருதடவை தேர்வு எழுதுகிறேனே' என்றேன். 'இன்று ஆஃபீஸ் அரை நாள்தான். இன்னும் நிறையபேர் காத்திருக்கின்றனர், எனவே அடுத்த வாரம் வந்து எழுதி வெற்றி பெறுங்கள்' என்றார்.

வெளியில் வந்தேன். என் முகத்தை வைத்தே கண்டுபிடித்துவிட்டார். "முதல் முறையாக ..... ஒரு தேர்வில்..... அதுவும் ஒரு குட்டியூண்டு புத்தகத்தைப் படித்து பாஸ் பண்ணாம விட்டுட்டேனே" என வீட்டுக்கு வரும் வழியில் எல்லாம் புலம்பிக்கொண்டே வந்தேன்.

இவர் "பாஸ் பண்ணா அவார்டா குடுக்கப் போறாங்க. இப்போ இல்லைன்னா இன்னொரு தடவ எழுதிட்டுப் போறது' என்றார். ஹும்.....அதுவும் சரிதான்.

புத்தகத்தை நேராகவும், தலைகீழாகவும், இன்னும் எப்படியெல்லாமோ பிடித்து படித்து அடுத்த மாதம் மீண்டும் தேர்வெழுதத் தயாரானேன்.

முன்புபோலவே ஒரு சனிக்கிழமை போய்  'தேர்வெழுதி நூற்றுக்கு நூறு சதவீதத்துடன் வெற்றி வாகை சூடி'  வெளியே வந்தேன். ஒன்றும் அதிகமில்லீங்க‌, 36 கேள்விகள்தான், எல்லாமே 'மல்டிபிள் சாய்ஸ்'தான். இதுக்குதான் இத்தனை பில்டப்பு.

இப்போது சும்மாவாவது முகத்தை 'உம்' என்று வைத்துக்கொண்டே வந்தேன். " இப்பவும் பாஸ் பண்ணலைன்னா எப்படி' என்றார் இவர் சிரித்துக்கொண்டே.

'பாஸ்'தான் பண்ணிட்டோமே ! நான் "கார் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யுங்க" என்றேன்.

இவர் கொஞ்சம் யோசித்துவிட்டு "இங்கு வேண்டாம், வேறு இடத்திற்கு வீட்டை மாற்றிய‌ பிறகு பார்க்கலாம்" என்று ஒருசில காரணங்களைச் சொன்னார். முதலில் மறுத்த நான் பிறகு ஒத்துக்கொண்டேன். எனக்கும் அதுவே சரியெனப்பட்டது .................(தொடரும்)

 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

(  கடந்த டிசம்பர் மாதக் கடைசியில் எங்கள் வீட்டிற்கு California driver handbook என்ற புத்தகம் வந்தது. அதைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வந்துபோனதன் அடையாளம்தான் இந்தப் பதிவு )

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

14 கருத்துகள்:

 1. ...hmmm! Interesting! Waiting for the next part! Hope you read about my license journal in the blog! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களோடதை இன்னும் படிக்கலையே மகி. வரேன், வரேன் !!

   நீக்கு
 2. சுவாரஸ்யம்...

  California driver handbook புத்தகம் அனுப்பியவருக்கு நன்றி... ஹிஹி...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாவும் பொண்ணும்தான் போய் எடுத்துட்டு வந்தாங்க.வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

   நீக்கு
 3. பரிச்சை எழுதி பாஸ் பண்ணாத்தான் லைசென்ஸ் கொடுப்பாங்களா மேடம்? நான் எல் எல் ஆர் வாங்கப்போனப்ப, ஆர்டிஓ ஆபீஸ் புரோக்கர் 50 ரூபா வாங்கீட்டு பிட் பேப்பர் கொடுத்தாரு. அந்த மாதிரி சிஸ்டம்லாம் அமெரிக்காவில் கிடையாதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா !! அப்படி எல்லாம் சிஸ்டம் இல்லீங்க. இங்கு எழுத்துத் தேர்வு முடித்த பிறகு behind the wheel driving test லும் பாஸ் பண்ணனும். அப்போதான் லைஸன்ஸ் கிடைக்கும். அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க.

   நீக்கு
 4. இதோ..... இதோ ....... நானும் வந்து பின் சீட்டில் உட்கார்ந்து விட்டேன். ஓட்ட ஆரம்பியுங்கள்....
  உடம்பு சரியில்லாததால் வலை பக்கம் வரவில்லை. அதான் காரை கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே!. அதில் பயணிக்கலாம் என்று வந்து விட்டேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா ! என்னையும் நம்பி ஒரு ஆள் வந்தாச்சூ ! வாங்க வாங்க, வந்து முன் சீட்லயே ஏறுங்க, இந்த மழை நேரத்துல 'ஸ்டார்பக்ஸ்'ல சூடா ஒரு காஃபி வாங்கி குடிச்சிட்டே ஜாலியா பேசிட்டே, ஒரு சுற்று சுற்றி வரலாம் !!

   முதலில் உடம்பை கவனிச்சிக்கோங்க. இப்போ சரியாகிடுச்சுதானே !

   நீக்கு
 5. பதில்கள்
  1. ஆமாங்க, இப்போது நினைத்துப் பார்க்க சுவாரஸியமான அனுபவங்களாகத்தான் இருக்கின்றன. வருகைக்கும், கருத்துப் பகிர்விற்கும் நன்றிங்க.

   நீக்கு
 6. அடுத்த பகுதியை படிக்கிறேன் - நீங்கள் கார் ஓட்டக் கற்றுக்கொண்டீர்களா இல்லையா என்று தெரிந்து கொள்ள.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம், வாங்கவாங்க, வந்து படிச்சு பாருங்க !

   நீக்கு