Monday, March 31, 2014

அவனா ? அவளா?



  அதாங்க , சூரியனா ?    சந்திரனா?

                       ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்று மதியம் 1:00 மணிக்கு மழை வருவதற்கு, காலை 10:30 மணிக்கே வானம் நடத்திய நாடகத்தில் சூரியன் ஏற்ற வேடம்தான் இது.

சந்திரன் மாதிரியே சூரியன் கருமேகங்களுக்கிடையே ஒளிந்து ஒளிந்து கண்ணாமூச்சி ஆடியதைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது !

                    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Saturday, March 29, 2014

சுளை(வை)யான நினைவுகள் !


                                                   உங்களுக்குத்தான், எடுத்துக்கோங்க !!


மகள் வீட்டுக்கு வந்த சந்தோஷத்தில் கடந்த ஞாயிறன்று $ 15 க்கு நாங்கள் வாங்கிவந்த பலாப்பழம்தான் இது. நான்கு நாட்களுக்கு வீடு பலாப்பழ வாசனையால் திளைத்தது.

சில வருடங்களுக்கு முன்புவரை, இங்கு வந்து மிஸ் பண்ணியதில் இந்த பலாப்பழமும் ஒன்று. இப்போது பரவாயில்லை, கீற்றுகள், முழு பழம் என கிடைக்கிறது. 

ஒவ்வொரு முறை பலாப்பழத்தை அரியும்போதும் எங்களுக்குள் சில நினைவுகளைப் பகிர்ந்துகொள்வோம், தனியாக அரியும்போதும் அந்த நினைவுகள் வந்துபோகும்.  அவைதான் இன்றைய பதிவு.
                                             ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


பலாப்பழம் வாங்குபவர்களுக்குத் தெரியும், அதிலுள்ள சிரமங்கள் என்னவென்று. வாங்குமிடத்தில் பலாப்பழத்தை அரிந்துகொண்டிருப்பவர் மஞ்சள் நிறத்தில் குண்டுகுண்டு சுளைகளாக, சுவைத்துப் பார்த்தால் இனிமையாக இருப்பவைகளை கூறு போட்டு விற்றுக்கொண்டிருப்பார்.

நம்பி, அவரிடம் ஒரு முழு பழத்தை வாங்கிவந்து, நான்கைந்து நாட்கள் பழுக்கவைத்து, பழுத்துவிட்டதா என ஆங்காங்கே குட்டிகுட்டியா சதுர வடிவ ஓட்டைகள் போட்டு, முடிந்தவரைக்கும் பலத்தையெல்லாம் உபயோகித்து ஓட்டை வழியாக  ஒரு சுளையை பல பாகங்களாகப் பிச்சு எடுத்து சாப்பிட்டுப் பார்த்து, உறுதி செய்துகொண்டு அரிந்து பார்த்தால் .......... ஒன்று பழம் பழுக்காமல் இருக்கும், அல்லது அதிலுள்ள சுளைகள் குடல்(சக்கை) சைஸிலேயே  இருக்கும். வெறுத்துப் போய்விடும்.

சரி இதெல்லாம் தேவையேயில்லை, அரியும்போதே சுளைகளாக வாங்கி வந்துவிடலாம் எனப் பார்த்தால் நமக்குமுன்னே அவற்றைத் தூக்கிப்போக ஈக்கள் தயாராக இருக்கும். அதுக்குப் பயந்தே என்னவானாலும் பரவாயில்லையென ஒரு நம்பிக்கையுடன் முழு பழத்துடன் வீடு திரும்புபவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்.

அம்மா வீட்டில்  பழத்தை எப்படி அரிவதென்றெல்லாம் தெரியாது. அப்பா ஒரு பெரிய‌ முழு பழத்தை நீளவாக்கில் நான்காகப் பிளந்து, நடுவிலுள்ளத் தண்டை நீக்கிவிட்டுக் கொடுத்துவிடுவார். வெட்டுபட்ட இடத்தில் பாதிக்குப் பாதி சுளைகள் கன்னாபின்னான்னு பிஞ்சுபோய் கிடக்கும். அவற்றை மேலும் பிச்சு உதறி எடுப்பது எங்கள் வேலையாக இருக்கும்.

ஆனாலும் ஒரு குஷி, என்னன்னா, பிஞ்சு போனதையெல்லாம் இஷ்டத்துக்கும் சாப்பிட்டுக்கொள்ளலாம், முழுசா இருக்கறத மட்டும் 'குண்டான்'ல(பாத்திரத்தில்) போட சொல்லுவாங்க. அந்த வயதில் இதைவிட வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும் !

இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முற்றுப் புள்ளி வைத்தார்போல் புது உறவு ஒன்று வந்தது மாமியார் வீட்டு வடிவில். அதன்பிறகு மாவு சுளைகள், இனிப்பு சுளைகள், ஒல்லி சுளைகள், குண்டு சுளைகள் என விதவிதமாக சாப்பிட்டுப் பார்த்தாச்சு. அவங்க வீட்ல சில பலா மரங்கள் இருந்தன. இப்போது வெட்டிவிட்டார்கள்.

இங்கு வந்த புதிதில் நம்ம ஊர் கடை ஒன்றில் சிறுசிறு பலா கீற்றுகள் வாங்கிவருவோம். சில சமயங்களில் நன்றாக இருக்கும், பல சமயங்களில் சொதப்பிவிடும்.

சீஸன் சமயத்தில் உழவர் சந்தையில் பலா கீற்றுகள் கிடைக்கும். விலை அதிகம் என்றாலும் நம்பி வாங்கலாம். புதிதாக, சுவையானதாக இருக்கும். ஏனோ இந்த வருடம் விற்பனைக்கு வரவில்லை.

இப்போதெல்லாம் ஒருசில பழக்கடைகளில் முழு பழங்களாகவே கிடைக்கின்றன. அதனால் முன்புபோல் ஊருக்குப் போனால்தான் சாப்பிட முடியும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை.

இவரோ பழத்தை கத்தியால் சுத்திசுத்தி நறுக்கிக்கொண்டே வந்து, ஒரு சுளையும் பழுதாகாமல் எடுப்பதைப் பார்த்து, இப்போதெல்லாம் நானும் அப்படியே எடுக்கக் கற்றுக்கொண்டேன். ஒரு சுளையையும் பிச்சு உதறாமல் எப்படி எடுத்திருக்கேன் பாருங்க !!

அதுக்காக என்னைப் பார்க்க வருகிறவர்கள் எல்லோரும் முழுபழத்துடன் வந்து ................  நறுக்கித் தரச் சொல்லி எடுத்துப் போகலாம் என எண்ணி வந்தீங்களோ ...............   ஒன்றும் அதிகமில்லை, கூலியாக முழு பழத்தை அப்படியே லபக்கிடுவேன், அவ்வளவே !!!!

இந்த வாரம் முழுவதும் சாம்பார், பொரியல், குருமா, பிரியாணி, மீன்குழம்பு என எல்லாவற்றையும் இந்த பலாக்கொட்டைகள் ஆக்கிரமித்துக்கொண்டன. பலாக் கொட்டைகளை அன்றன்றே பயன்படுத்திக்கொள்வது நல்லது. அப்போதுதான் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

Thursday, March 27, 2014

கஸானியா பூ / Gazania

நான் 'வாக்' போகும் பூங்காவில் எல்லா இடங்களும் திறந்த வெளியாகத்தான் இருக்கும். நான் போவது லேஸாக சிறிது மேடு போல் தோட்டத்து வழியாக அதாவது பின்வாசல் வழியாக‌ போவதுபோல் இருக்கும். இந்த வழியைப் பார்க்கும்போது எங்கள் ஊர் நினைவுதான் வரும்.  இங்கே பூத்துள்ள பூதான் படத்தில் உள்ளது.

படங்களை அப்படியே மேலிருந்து பார்த்துக்கொண்டே வந்தால் இப்பூக்கள் எங்கே பூத்துள்ளன என்பது தெரிந்துவிடும். இதுவும் சுந்தரைப் பார்த்து காப்பி அடித்ததுதான். தனிப் பூக்களும் இவர் எடுத்ததுதான். ஆனால் கஷ்டப்பட்டு அதை அழகாக 'ட்ரிம்' பண்ணியது நானாக்கும்.


மேடான பகுதியின் கீழே நடைபாதையில் பூத்திருக்கும் பூதான் இது.

பூங்காவில் இந்த வழியாகப் போகிறவர்கள் யாரும் இந்தப் பூக்களைப் பார்த்துவிட்டு 'க்ளிக்'காமல் போகமாட்டார்கள். தேனீக்களை மட்டுமல்ல, மனிதர்களையும் சுண்டி இழுத்துவிடுகிறது ........... இதன் நிறம் அப்படி !

மஞ்சளும், சிவப்பும் கலந்த, நடுவில் மயில்தோகையை நினைவுபடுத்தும் அழகிய உள்புற வேலைப்பாடுகளுடன் கூடிய, கொள்ளை அழகு கொண்டது. காட்டுப் பூ போல், தண்ணீர் பராமரிப்பு இல்லாத இடங்களில் பூத்துக் குலுங்குகின்ற‌ன.

Wednesday, March 26, 2014

உயரத்தை அளப்போமா !!! .............. தொடர்ச்சி

 எங்கள் குடியிருப்பின் நுழைவாயிலுக்கருகில் குட்டிகுட்டிச் செடிகளில் பூத்திருக்கும் அழகான பூக்கள்தான் இவை. சீசனுக்கு ஏற்றார்போல் செடிகளை மாற்றும்போது அப்படியே மொத்தமாக சேர்த்து ஒரு படம் எடுத்து வைத்துக்கொள்வேன். இந்த முறை அவ்வாறு எடுத்தபோது சுந்த‌ரும் உடன் இருந்தார்.

அலைபேசியில் நான் எடுத்துவிட்ட பிறகு இவர் அதை வாங்கி  வித்தியாசமாக எடுத்தார். படத்தைப் பார்த்தால் செடிகள் எல்லாம் மேற்கூரையைப் பிடித்துக்கொண்டு இருப்பதுபோல் இருக்கவும் ஆச்சர்யமாகி(எல்லாமே எனக்கு ஆச்சர்யம்தான்)  நானும் அவரைப் பார்த்து காப்பி அடித்து எடுத்த படங்கள்தான் இவை.

அப்படியே படங்களைப் பாத்துட்டே வாங்கோ, விஷயம் புரிந்துவிடும்.

                                                   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


மேலே படத்திலுள்ள இந்த குட்டிச் செடிகள்தான் ஆளுயரமாகத் தோன்றியவை. 

நாளையும் இதே மாதிரி, ஆனால் இன்னும் அழகான பூவுடன் வருகிறேன்.

                                        ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Tuesday, March 25, 2014

செடியின் உயரத்தை அளப்போமா !!!

காலையில் 'வாக்' போனபோது பளிச்சென இருந்த வானம் இப்போது மூடிக்கொண்டு லேஸான தூறலுடன் ஒன்றும் செய்ய விடாமல் வேடிக்கை பார்க்க வைத்துக் கொண்டிருக்கிற‌து.


நமக்குத்தான் சோம்பலாக இருந்தால் பிடிக்காதே !! ஏதாவது வேலை செஞ்சே ஆகணுமில்ல ! அதான், ஒரு சேஞ்சுக்கு இன்று இப்பதிவிலுள்ள செடிகளின் உயரத்தை அளந்து பார்க்கப் போகிறேன் !!

விருப்பமிருந்தால் நீங்களும்கூட‌ அளந்து சொல்லலாம் !



கூரையை எட்டிப் பிடிக்கும் இவ்ளோ உயர செடிகளை எப்படி அளப்பது என முழிக்காம, சீக்கிரமா போய் மி.மீ, கி.மீ, இன்ச், சாண், முழம், அடி, உதை என எதெல்லாம் இருக்கோ அதையெல்லாம் கொண்டு வாங்க, அளந்து பார்த்திடலாம் !!


நீங்க சொல்ற அளவையெல்லாம் வச்சு, கணக்கு பண்ணி, முடிச்சு போட்டு, ஒரு குத்துமதிப்பா, எவ்ளோ உயரம்னு நாளை வந்து சொல்கிறேனே !!

Monday, March 24, 2014

விலைமதிப்பில்லா (அன்)பூ !!


இவ்வலைப் பூவில் பல பூக்கள் உலா வந்திருந்தாலும் இன்றைய பூ உலா கொஞ்சம் வித்தியாசமானது.


வியாழன் நண்பகல் விடுப்பில் வீட்டுக்கு வந்த மகள்  உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக‌ சூட்கேஸைத் திறந்துகொண்டே 'அம்மா, உனக்கு நான் ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன், என்னன்னு கெஸ் பண்ணு பார்க்கலாம்'  என்றாள். 

'ம்....ம்....ம்.... யோசித்துப் பார்த்தேன் ............  யோசித்துப் பார்த்தேன், ..... ம்ஹூம் ...... எதுவுமே நினைவுக்கு வரவில்லை.


"உனக்காக நான் வாங்கிக்கொண்டு வந்தது இதுதான், எவ்ளோ சூப்பரா இருக்கு பாரு "  என்று சொல்லிக்கொண்டே படத்திலுள்ள இந்த குட்டியூண்டு Solar Dancing Flower பொம்மையை எடுத்துக் கொடுத்தாள். 

எனக்கு சந்தோஷத்தில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

பொம்மையை சூரிய ஒளியில் வைத்தாள், பூவுடன், இலைகளும் சேர்ந்து ஆட்டம் போட்டதைப் பார்த்து ரசித்தோம்.


இரண்டு வருடங்களுக்குமுன் 'சான்ஃப்ரான்சிஸ்கோ'வில் china town வழியாக பேருந்தில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு கடையில் படத்திலுள்ளதுபோல் கண்ணைப் பறிக்கும் பல நிறங்களில் குட்டிக்குட்டி பொம்மைகள் ஆடிக்கொண்டிருந்தது மனதைக் கவர்ந்தது.

நான் இவர்களிடம் 'காரில் வந்திருந்தால் பொம்மையை வாங்கியிருக்கலாம்' என்றேன். அதன்பிறகு அதை மறந்தே போனேன்.

பக்கத்து ஊர் mall க்கு போன சமயம் அங்கிருந்த ஒரு கடையில் இதைப் பார்த்ததும் அதை நினைவு வைத்து வாங்கி வந்திருக்கிறாள்.


உண்மையிலேயே கொள்ளை அழகாகத்தான் தெரிகிறது !

Thursday, March 20, 2014

சிவப்பு மக்னோலியா

இது சிவப்பு தாமரை மாதிரியே, ஆனால் மரத்தில் பூக்கிறது. இதுவும் இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்த்துவிட்டு, குளிர் காலத்தில் பூத்துக் குலுங்கி, வசந்தத்தில் துளிர் வர ஆரம்பிக்கிறது.



  மேக மூட்டத்தின்போது.............



இது ஒரு வகை........................!


இவற்றின் அருகிலேயே பூத்திருக்கும் அழகான‌ வெள்ளைப் பூக்கள் !