Saturday, March 15, 2014

பாதை மாறியபோது ......... !


என்னமோ ஏதோன்னு பயந்துடாதீங்கோ ! இப்போது நான் 'வாக்'  போகும் பாதையை மாற்றிக்கொண்டுவிட்டேன். (ஹும்..எவ்ளோஓஓ முக்கியமான விஷயம் !)

"என்ன உங்கள அந்தப் பக்கமே காணோமே"ன்னு யாரும் கேட்டுட‌க் கூடாதே என்பதற்கான முன்னேற்பாடுதாங்க‌ இது.

இப்போதிருக்கும் வீட்டுக்கு குடி வந்தபோது பக்கத்திலுள்ள பூங்காவில் நடைப்பயிற்சி போக நினைத்து போனேன். அங்கிருந்த track சிறிது ஏறி இறங்குவதுபோல் இருந்ததால் 'இது வேலைக்காகாது' என தெருவிலுள்ள sidewalk ல் நடக்க ஆரம்பித்தேன். அந்த தெருக்கள்கூட  ஏற்கனவே உங்களுக்குப் பரிச்சயமானதுதான்.

என்னதான் ஒருமணி நேரம் நடந்தாலும் ஒன்றும் டயர்டாவதாகத் தெரிவதில்லை. ஏதோ ஜாலியாக ஊர்(தெருக்களை) சுற்றுவது  போலவே இருக்கும். கொஞ்சமாவது கலோரியை எரிக்க வேண்டுமாம். அதனால் இப்போது மீண்டும் பூங்காவிலுள்ள‌ மேடு பள்ளமான track ல் முயற்சித்தால் என்ன எனத் தோன்றியது.

முதலில் கிஞ்சித்து  சிரமம் இருந்தாலும் இப்போது நன்றாகவே உள்ளது. ஒரு மாதமாக ....... ஒருமணி நேரத்திற்கும் மேலாக‌,  இங்குதான் போய்க்கொண்டிருக்கிறேன். அதுக்குள்ளே சொல்லச் சொன்னா எப்படிங்க, இப்போதானே ஒரு மாதமாகுது, க‌லோரி எரிஞ்சுதா, இல்லையான்னு பிரிதொரு பதிவில் சொல்கிறேனே !

எங்கள் வீட்டிலிருந்து ரோடை க்ராஸ் பண்ணி கீழேயுள்ள‌  இந்த குட்டியூண்டு தெருவின் கடைசியில் வலது பக்கமாக சிறிது மேடாக இருக்கும், அதில் ஏறினால் அதுதான் பூங்கா. நடைப் பயிற்சியை முடிச்சுட்டு வந்த வழியே வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டியதுதான்.


இன்று(03/14/14)  இந்தத் தெருவிலுள்ள மரங்களை ட்ரிம் பண்ணப் போவதாக ஒரு வாரத்திற்கு முன்பே எல்லா மரங்களிலும் அறிவிப்பு தாள்  ஒட்டப்பட்டிருந்தன. அதேபோல் இன்று ஆங்காங்கே ஆரஞ்சு கோன் வைத்து, பெரிய பெரிய வண்டிகள் எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தன. அதனால் இன்று நான் ஏற்கனவே போன sidewalk ல் நடையைக் கட்டினேன்.

அதுசரி, மேலேயுள்ள கிறித்துவ ஆலயத்துக்கும் பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்றுதானே நினைக்கிறீர்கள் ! விஷயத்துக்கு வருகிறேன்.

இவ்வளவு நாளும் நான் 'வாக்' போன‌ வழியில்தான் இந்த கிறித்துவ ஆலயம் உள்ளது. தினமும் வழியிலுள்ள இந்த கிறித்துவ ஆலயத்தைக் கடந்துதான் போவேன்.

ஒவ்வொரு நாளும் இந்த ஆலயத்தைப் பார்க்கும்போதும் நான் ஆறாம் வகுப்பில் ஒரு கிறித்துவ பள்ளியில் சேர்ந்ததும், தினமும் ஆலயத்துக்கு நான்கு நான்கு பேராக கை கோர்த்துக்கொண்டு வரிசயில் சென்றதும், அங்கு என்னுடன் படித்த தோழிகளும், அவர்களுடன் கதைபேசி, சிரித்து, விளையாடியதும்  நினைவுக்கு வரும். இந்த நினைவுகளால் முதலில் சிறிது சோகமும், பிறகு உற்சாகமும் வரும்.

ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தப் பக்கம் போகாமல் திடீரென இன்று போனபோது,  "ம் .... இந்த ஆலயத்தையும், நம் உயர்நிலைப் பள்ளி வாழ்க்கையையும் மறந்தேவிட்டோமே, இனி மறக்கவே கூடாது" என்றெண்ணி  ஆலயத்தைக் காமிராவில்  பிடித்துக்கொண்டு வந்துவிட்டேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

[ பதிவு நேற்றே(வெள்ளிக்கிழமை) எழுதப்பட்டது. ஆனால் இன்றுதான் வெளியிட முடிந்தது]

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

13 comments:

 1. இப்படி ஒரு அழகான இடம் இருந்தால், யாருக்குத் தான் நடைப் பயிற்சி செய்ய தோணாது...?

  நாங்கள் எல்லாம் அதிகாலை 4:30 / 5 மணிக்கு சென்றால் தான் நிம்மதி...

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்வதும் சரிதான். வாகனங்களும், நடப்பவர்களும் சாலையைப் பங்கிட்டுக்கொள்ளும்போது சிரமம்தான். வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் அதிகாலையில் நடப்பதே நல்லது.

   இங்கு அந்த சிரமம் இல்லை. நினைத்த நேரத்தில் போகலாம். தங்களின் விரைவு வருகைக்கும், கருத்துக்கும் நன்றிங்க.

   Delete
 2. இனிமேல் நானும் உங்களுடன் நடைப் பயிற்சிக்கு வந்து விடுகிறேனே. பார்க்கவே ஆசையாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. எப்போதாவது ஒருதடவதாங்க இப்படி கூட யாராவது 'வாக்' போவது மாதிரி அமையும். இதைக் கேட்கவே சந்தோஷமா இருக்கு. வெயிலோ மழையோ விடாம தினமும் சரியா 9:30 க்கெல்லாம் கிளம்பிடுவோம் வாங்க !

   Delete
 3. அழகான படங்கள்.......

  எத்தனை கலோரி எரிச்சீங்கன்னு சொல்லிடுங்க சீக்கிரம்!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா சொல்றேங்க‌, பலனடைந்ததை சொல்லியே ஆகவேண்டும். வருகைக்கும் நன்றிங்க.

   Delete
 4. DD சொல்வது போல வெளியே செல்வது ரொம்பவும் ஆபத்தானதாக இருக்கிறது. தினமும் நாங்கள் செல்லும் யோகா வகுப்பு சாலையில் மரங்களை எல்லாம் போனவாரம் வெட்டிக்கொண்டு இருந்தார்கள். எதற்காக என்று யோசித்துக் கொண்டே வந்தால், செய்தித்தாளில் 'அந்த இடத்தில் மேம்பாலம் கட்டப்போகிறார்கள் என்று போட்டிருக்கிறார்கள். சுமார் 200 மரங்களை வெட்டப் போகிறார்கள்! அதுமட்டுமல்ல; இன்னும் கொஞ்ச நாளில் அந்த சாலையே குண்டும் குழியுமாக ஆகிவிடும்! எப்படி நடப்பது?
  எங்கள் வீட்டு காரிடார் தான் இனி கதி!
  நானும் வருகிறேன், ராஜியுடன்! (ஏன் ராஜி முந்திக்கிட்டாங்க?)

  ReplyDelete
  Replies
  1. ஒரு காலத்தில் மரங்கள் சூழ்ந்த பெங்களூரைப் பார்த்து பொறாமையாக இருந்தது. நீங்க சொல்வதை வைத்துப் பார்த்தால் கஷ்டமாத்தான் இருக்கு.

   சீக்கிரம் ரெடியாகுங்க, உங்களையும் கையோடு கூட்டிட்டுப் போகத்தான் நாங்க ரெண்டு பேருமா சேர்ந்து உங்க வீட்டு பக்கமா வந்திட்டிருக்கோம்.

   Delete
 5. மலரும் நினைவுகளோடு ஒரு பதிவு..நல்லா இருக்கு! :) நான் இளங்கலை படித்தது கிறிஸ்தவக் கல்லூரியில்தான், அந்த நினைவுகளைக் கிளறிவிட்டுட்டீங்க! அங்கே இருக்கும் Chaple-க்கு போய் ப்ரே பண்ணுவோம், (கம்பல்சரி இல்ல, அவரவர் விருப்பம்தான்).
  அருகில் இருக்கும் அந்தோணியார் கோயிலுக்கு செவ்வாய்க் கிழமை தவறாமல் கல்லூரியில் இருந்து நடந்தே போவோம். நிறையக் கூட்டமாக இருக்கும், லைன்ல நின்னு ஓரொரு சாமியாகக் கும்பிட்டுவிட்டு, உப்பு-மிளகு பிரசாதம் எடுத்துக்கொண்டு, தேங்காயெண்ணெய் வாங்கித் தலையில் தடவிக்கொண்டு, மெழுகுவர்த்திகள் ஏற்றிவிட்டு வருவோம். கோயிலைச் சுற்றிலும் கடைகள் போட்டிருப்பாங்க. 7-ஆம் நம்பர் பஸ்க்கு டெர்மினஸ் அங்கேதான்..காலியா வர பஸ்ல அடிச்சு புடிச்சு ஏறி காந்திபுரம் வருவோம்....ம்ம்ம், அது ஒரு அழகிய நிலாக்காலம்!! இன்னும் அந்தச் சிலுவையும், அந்தோணியாரும் என் மனதில் இருக்காங்க! :)

  பி.கு.நாங்களும் வாக் போக ஆரம்பிச்சுட்டமே! :)

  ReplyDelete
  Replies
  1. உங்க நினைவுகளையும் கிளறி விட்டுட்டேனா ! உங்க நிலாக்காலமும் சூப்பர் ! நிறைய எழுதி மக்கள் நலன் கருதி எல்லாத்தையும் களைச்சுட்டு பப்ளிஷ் பண்ணத்தான் ஒரு நாள் அதிகமாகத் தேவைப்பட்டது.

   "லைன்ல நின்னு ஓரொரு சாமியாகக் கும்பிட்டுவிட்டு, உப்பு-மிளகு பிரசாதம் எடுத்துக்கொண்டு, தேங்காயெண்ணெய் வாங்கித் தலையில் தடவிக்கொண்டு"_______ புதுசா இருக்கே மகி. நான் படித்தது Protestant பள்ளியில். சாமி சிலைகளை எல்லாம் பார்த்ததில்லை.

   எங்க பாப்பா ஒரு ஃப்ரண்டோட அங்கிருக்கும் ஆலயத்துக்கு போய் ....... பயங்கர‌ காமெடியாப் போச்சாம். எனக்கு ஃபோன் பண்ணி 'ஏம்ம்ம்மா எனக்கு ச்சர்ச்சை மொதல்லயே அறிமுகப்படுத்தலன்னு" கேட்டாள். இங்கு நம்ம ஊர் கோயிலுக்குப் போற‌தே பெரிசு, இதுல ச்சர்ச்சுக்கு வேறயா !!

   Delete
  2. பி.கு. வை இப்போதான் பார்க்கிறேன். அப்படின்னா நிறைய கதைகள் இருக்குமே. சீக்கிரமே எதிர்பார்க்கிறேன்.

   Delete
  3. //நான் படித்தது Protestant பள்ளியில். சாமி சிலைகளை எல்லாம் பார்த்ததில்லை. // ரைட்..நான் படிச்சது ரோமன் கத்தோலிக் கல்லூரியில்!! :)

   வாக்கிங் கதைகள் நிறைய இல்ல..கொஞ்சம் இருக்கு. எழுதிரலாம்ங்கறீங்க? ;)

   Delete
  4. ஆமாம் மகி, எழுதுங்க. நீங்க ஜாகிங் போனது, இடையில் பாப்பா அழுதது என நிறைய இருக்குமே. 1/4 வரியை பதிவாக்கற நானெல்லாம்(ஹி ஹி) இருக்கும்போது நீங்கபோய் கவலைப்படலாமா !

   Delete