Tuesday, April 1, 2014

இன்பச் சுற்றுலா _ 1


நான் இரண்டாம் வகுப்பு படித்தபோது என் சகோதரி நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் பள்ளியில் காலைப் பாடநேர இடைவேளையில் பெரிய வகுப்பு பிள்ளைகள்(இருந்ததே 5 வரைதான்) எல்லாம் சந்தோஷ முகத்துடன் சலசலத்துக் கொண்டிருந்தனர். 

"என்ன? ஏது?" என சகோதரியிடம் விசாரித்துப் பார்த்ததில் "நாங்களெல்லாம்(4&5) மெட்ராஸுக்கு டூர் போறோமே "  என்று இதுவரை கேட்டிராத ஒரு பதில் வந்தது.

'டூர்' என்ப‌து என்னவென்று புரியவில்லை. ஆனால் மெட்றாஸுக்கு போகப் போகின்றனர் என்பது மட்டும் புரிந்தது.

"நானும் வருகிறேனே" என்றேன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.

"நீங்களெல்லாம் சின்ன பிள்ளைங்களாம், உங்களையெல்லாம் கூட்டிட்டுப் போக முடியாதாம்" என்றார்.

எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்றெல்லாம் தோழிகளுக்குள் பேசிக்கொண்டனர்.

அப்பாவும் சகோதரியிடம்  'பணம் தருகிறேன், பத்திரமா போய்ட்டு வா' என்று கூறினார். சகோதரி எல்லோரிடமும் சொல்லிசொல்லி மகிழ்ந்தார். நமக்குத்தான் யாராவது சந்தோஷமாக இருந்தால் பிடிக்காதே.

'நானும்தான் போவேன்' என்று அடம் பிடிக்கவும், அப்பா எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரைப் போய் பார்த்திருக்கிறார்.

எங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரை அப்பாவுக்கு நன்றாகத் தெரியும், உறவினரும்கூட. அவர் பெரிய வகுப்பான ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் என்பதால் எனக்குத்தான் அவரைப் பார்த்தால் பயம், ஓடி ஒளிவேன்.

எத்தனைதான் பெண்பிள்ளைகள் என்றாலும் அப்பாக்களுக்கு பெண்பிள்ளைகளின் மேல் ஒரு தனி பிரியம் இருக்கும்போலும். என்னுடைய அழுகை தாங்க முடியாமல் அப்பா அந்த ஆசிரியரிடம் கேட்டிருக்கிறார்.

அவரோ குட்டிப் பிள்ளைகளை அழைத்து செல்வதில் உள்ள சிரமங்களைச் சொல்லி, அதனால்தான் அழைத்துப் போகவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

அடுத்த நாள் என் வகுப்புக்கு வந்த அந்த ஆசிரிய‌ர் என்னைப் பார்த்து, "உங்க அப்பாகிட்ட டூர் போகணும்னு சொன்னியாமே, அப்படியா ? "  என்று சும்மா விளையாட்டுக்கு மிரட்டும் தொணியில் கேட்டார்.

'இல்லை, இல்லவேயில்லை" என்று தலையாட்டினேன். சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார். 'இனி அவங்களே கூப்பிட்டாலும் நாம போகக் கூடாது', என்று முடிவெடுத்துவிட்டேன்.

இதற்கிடையில் எங்களுக்குள் சண்டை என்றால் "நீயெல்லாம்  டூருக்கு வரலையே" என்றுதான் என் சகோதரி என்னை ஓட்டுவார். பிறகென்ன ஒருவருக்கொருவர் அடி, உதைதான்.

டூர் போகும் நாளும் வந்தது.

 "சுற்றுலாபேருந்து பள்ளிக்கு வரும், அப்படி வந்ததும் சொல்லி விடுகிறோம்" என்று ஏற்கனவே பள்ளியில் சொல்லியிருந்தனர். என்ன காரணமோ தெரியவில்லை சகோதரியின் ஒரு உள்ளூர் தோழியும் அன்றிரவு எங்கள் வீட்டிற்கு வந்து தங்கியிருந்து செல்வதாக ஏற்பாடு.

விடியும்வரை இரண்டு பேரும் சிரித்துசிரித்து பேசிக்கொண்டிருந்தது இன்னும் எரிச்சலை உண்டாக்கியது. அம்மா அந்தப் பெண்ணிற்கும் சேர்த்தே உண‌வுப் பொட்டலங்கள் தயார் செய்தார்.

அதிகாலை நான்கு மணிக்கு ஒரு பையன் வந்து பேருந்து வந்துவிட்டதாகக் கூறவும் அப்பா இவர்களை அழைத்துக்கொண்டு சென்றார்.

அன்றிரவு சகோதரி வீடு திரும்பும் வரையில் ஒன்றும் ஓடவில்லை. நள்ளிரவுபோல் பேருந்து பள்ளிக்கு வரவும், அப்பா போய் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

வந்தவுடன் வாங்கி வ‌ந்தவற்றை கடை விரித்தார். மஞ்சள் நிறத்தில் பலநிற புள்ளிகளுடன் ஊதினால் சத்தத்துடன் வெளியில் வந்து உள்ளே செல்லும் மெல்லிய ரப்பரால் ஆன சிறிய நாய் பொம்மையை என்னிடம் கொடுத்தார்.

அவ்வளவுதான் ............ கோபம், வருத்தம் எல்லாம் காணாமல்போய் அந்த ராத்தியிலேயே வாய் வலிக்கும்வரை ஊதித் தள்ளினேன். இந்த பொம்மையை இப்போதும் 'மெரினா பீச்'சில் பார்க்கலாம்.

சகோதரி மட்டுமல்ல, நானும் என் தோழிகளிடம் அடுத்து சில நாட்களுக்கு மெட்றாஸுக்கு டூர் போன‌ கதையைத்தான் சொல்லிக்கொண்டிருந்தோம் !

12 comments:

 1. மெரினா பீச் செல்லும் போது பார்க்கிறேன்... ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. எங்க போகப்போறீங்க‌ என்ற தைரியத்துல எழுதினா ............ இப்படியெல்லாம்கூட‌ டெஸ்ட் பண்ணுவீங்களா !

   Delete
 2. Replies
  1. ஆமாம் மகி, முதன் முதலில் 'டூர்' என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டது, இன்னமும் மறக்க முடியாதது.

   Delete
 3. நீங்கள் அழுது அடம்பிடித்து அக்காவுடன் டூர் போயிருப்பீர்கள் என்று நினைத்தேன்!

  ReplyDelete
  Replies
  1. அடம் பிடிச்சு போயிருப்பேன், ஆனால் ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் கொஞ்சம்(இல்லையில்லை நிறையவே) பயம். அடம் பண்ணினதாலோ என்னவோ பிறகு கொஞ்ச நாள் கழிச்சு அப்பா கூட்டிட்டு போனாருங்கோ.

   Delete
 4. இன்பச்சுற்றுலா ஒரு பெரிய சுற்று வரப் போகிறது போல் இருக்கிறதே. அதான் பார்ட் 1 என்று போட்டிருப்பதைத் தான் சொல்கிறேன்.உங்கள் சகோதரி வாங்கி வந்த பொம்மை இன்னும் நினைவில் வைத்து எழுதி விட்டீர்களே. உங்கள் சகோதரி மேல் நீங்கள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது.

  ReplyDelete
  Replies

  1. பெரிய சுற்றுலாம் இல்லீங்க, சின்ன வயசு நினைவுகள் இன்னும் ஒன்றிரண்டு வரும் என நினைக்கிறேன்.

   நினைவு & அன்பு _______ எங்கங்க, கடைசி என்பதால் இன்னமும் டாமினேட் செய்யணும். அதிலிருந்து வெளியே வர முயற்சிக்கும்போது ஏகத்துக்கும் பிரச்சினைகள்.

   Delete
 5. அட! அழ..கா இருக்கே இந்த போஸ்ட்!
  ம்... எனக்காக காமராவோட ஒரு மெரீனா டூர் போய்ட்டு வாங்க சித்ரா.

  ReplyDelete
  Replies
  1. இமா,

   98ல் எடுத்த மெரினா பீச் ஃபோட்டோக்கள் நிறைய இருக்கு. எல்லாவற்றிலும் திருஷ்டி கழித்துக்கொண்டிருப்பேன். பின்னால ஒரு ப்ளாக் ஆரம்பிப்பேன், அதில் சுற்றுலா பற்றி எழுதி படங்கள் போடவேண்டும் என்று தெரிந்திருந்தால் கொஞ்சம் தள்ளி நின்றிருப்பேன்.

   இதுக்காகவே இந்தியாவுக்கு போனால் மெரினாவுக்கு போய் படங்களுடன் வருகிறேன் இமா !

   Delete
 6. இனிய நினைவுகள் தான். பள்ளியில் சுற்றுலா சென்றதில்லை. கல்லூரி காலத்தில் சென்றதுண்டு.....

  ReplyDelete
  Replies
  1. எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் இப்போது போவதுபோல் தெரிகிறது! வருகைக்கும் நன்றிங்க.

   Delete