Friday, April 4, 2014

இன்பச் சுற்றுலா _ 2



என்னுடைய மெட்றாஸ் கனவு மூன்றாம் வகுப்பில் பலித்துவிட்டது. மகளின் சோகம் அப்பாவையும் தாக்கியிருக்க வேண்டும். அதனால் அழைத்துக்கொண்டு சென்றார்களோ அல்லது என் தொந்தரவு தாங்க முடியாததால் கூட்டிச் சென்றார்களோ என்னவோ தெரியாது.

அப்பா, அம்மா, தம்பி & நான் என நான்கு பேரும் சென்னையில் உள்ள‌ ஒரு உறவினர் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்து விமான நிலையம், துறைமுகம், விலங்கியல் பூங்கா, அண்ணா சமாதி, பாம்புப் பூங்கா, முதலைப் பண்ணை என சுற்றிப் பார்த்தது நினைவிருக்கிறது.

இருந்தாலும் சகோதரி பார்த்ததாக சொன்ன மஹாபலிபுரமும், வேடந்தாங்கலும் பார்க்க முடியாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான்.

[ஒன்பதாம் வகுப்பு படித்தபோது போன மெட்றாஸ் டூரில் மஹாபலிபுரம் பார்த்தாச்சு. ஆனால் இன்னமும் வேடந்தாங்கல் மட்டும் பார்க்க வேண்டிய லிஸ்டில் முதலிடத்தில் உள்ளது]

என்னையும்(ஆறாம் வகுப்பு), என் சகோதரியையும்(எட்டாம் வகுப்பு) விடுதியுடன்கூடிய‌ ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டனர். அந்தப் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் சுற்றுலா செல்வார்கள் போலும். நாங்கள் போன வருடத்திலும் ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு ஊருக்கு சுற்றுலா செல்ல ஏற்பாடானது.

ஆறாம் வகுப்பு பிள்ளைகள் பாண்டிச்சேரிக்கும்( ரூ 5) , எட்டாம் வகுப்பு பிள்ளைகள் சாத்தணூர் அணைக்கும்( ரூ 10) செல்வதாக ஏற்பாடு. விடுதிப் பிள்ளைகளுக்கு மட்டும், கட்ட‌ வேண்டிய பணத்தில் கொஞ்சம் குறைத்ததால் எனக்கு ரூ 3 ம், என் சகோதரிக்கு ரூ 5 ம் கொடுத்தால் போதுமானது. எனக்கோ இரண்டாம் வகுப்பில் கேள்விப்பட்ட 'டூர்' கனவு இப்போது நிறைவேறப் போகிறது என்பதில் தனி சுகம்.

இதுவரை எல்லாமே நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது.

என் சகோதரிதான் எல்லாவற்றிலும் முடிவெடுப்பார். அதுபோலவே இப்போதும் ஒரு முடிவெடுத்தார். நீண்ட யோசனைக்குப் பிறகு, அப்பா நமக்காக நிறைய செலவு செய்கிறார், அதனால் அவரிடம் நாம் பணம் கேட்க வேண்டாம். வேறு யாரிடம் கேட்பது? உள்ளூரில் ஏகத்துக்கும் சொந்தங்கள் இருந்தாலும் சகோதரி தேர்ந்தெடுத்தது புதிதாக திருமணமாகிச் சென்றுள்ள எங்கள் பெரிய அக்காவிடம் !

'எவ்வளவோ உறவுகள் இருக்கும்போது எதற்காக இவர்களைத் தெரிவு செய்ய வேண்டும்', என்பதை சொல்லிக்காட்டி பின்னாளில் கிண்டல் செய்வேன்.

வழக்கம்போல ஒரு இன்லேண்ட் கவரில் முதல் முழு பக்கத்தில் அவர் எழுதிவிட்டு எனக்கு கடைசி பக்கத்தைக் கொடுத்து அதில் நான் என்ன எழுத வேண்டும் என்பதையும் சொன்னார்.

அக்காவைத் தவிர யாரையுமே தெரியாத அவங்க வீட்டுக்கு, எல்லோரையும் விசாரித்து, விஷயத்தைச் சொல்லி ரூ3 + ரூ5= ரூ8 வேண்டுமென கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தோம்.

தினமும் அப்பா எங்களைப் பார்க்க வருவார். அன்றும் அப்படியே வந்தார். ஆனால் முகத்தில் கொஞ்சம் கோபம் தெரிந்தது. அக்கா வீட்டிற்கு போனபோது அந்தக் கடிதத்தைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார் என்பது பிறகுதான் தெரிந்தது.

"டூருக்கு பணம் வேணும்னு என்னிடம் கேட்டால் நான் கொடுக்கப் போறேன், இதுக்காக அவங்க வீட்டுக்கெல்லாம் கடிதம் போடக்கூடாது, அதெல்லாம் தப்பு" என்றார். எங்களுக்குக் கொஞ்சம் சங்கடமாகிவிட்டது அதாவது அசிங்கமாகிவிட்டது. இதில் என்னுடைய பங்கு துளிகூட இல்லை.

அதன்பிறகு அவர்கள் வீட்டிலிருந்து யாராவது வந்தால் நாங்கள் இருவரும் தம்பியுடன் சேர்ந்து கிசுகிசுப்போம். அவர்களைப் பார்க்க கொஞ்சம் கூச்சமாகவும் இருக்கும்.

ஏதோ சின்னப் பிள்ளைங்க தெரியாமக் கேட்டுட்டாங்க ...... சரி, போனால் போகிறது ............ என் சகோதரிக்குக் கொடுக்க வேண்டாம், ஆனால் எனக்குக் கொடுக்கணுமா இல்லையா ? நீங்களே சொல்லுங்க ! அதை எப்படி கந்துவட்டி, மீட்டர் வட்டி, மைல் வட்டி எல்லாம் போட்டு வசூல் பண்ணினேன் என்பது பதிவை முழுவதும் படிக்கும்போது தெரிந்துவிடும் !    ம்  யாரு ? ........ சித்ராவா ........ !

டூர் பணம் கட்டியாகிவிட்டது. கைச்செலவுக்கும் கொஞ்சம் பணம் வைத்துக்கொண்டோம்.

ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பேருந்து வரும் என்றும், அதற்குள் எல்லோரும் தயாராகிவிட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அவ்வளவுதான் விடியவிடிய தூக்கமில்லை. பக்கத்திலிருக்கும் பாண்டிச்சேரிக்குத்தான் போகப்போகிறோம் என்பது தெரியாமல் ஆட்டம்.

பஸ்ஸில் ஏறி உட்கார்ந்ததும், ஒரே தூக்கம். தூங்க ஆரம்பிக்கும்போதே "பாண்டிச்சேரி வந்தாச்சு, எல்லோரும் இறங்குங்க" என்று சொன்னார்கள்.

அரவிந்தர் ஆசிரமம், வானொலி நிலையம், சட்டசபை, ப்ளாஸ்டிக் தொழிற்சாலை என எங்கெங்கோ சுற்றிவிட்டு பாரதி பூங்காவில் மதிய உணவாக புளிசாதம் & முட்டை , உருளைக்கிழங்கு பொரியலுடன் சூப்பர் சாப்பாடு சாப்பிட, தூக்கம் சுகமாக வந்தது.

நீண்ட‌ நேரம் அங்கே விளையாடவிட்டு, எங்களைக் கவனித்துக்கொள்ள வந்த வார்டன்கள் அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சுகளில் படுத்துத் தூங்கியேவிட்டனர். பிறகு கடற்கரைக்கு அழைத்துச் சென்று, மாலை ஷாப்பிங் முடித்து, இரவு உணவை ஒரு ரெஸ்டார‌ண்டில் முடித்துவிட்டு தங்குமிடம் வந்துசேர நள்ளிரவாகிவிட்டது.

இந்த சுற்றுலாவில் அந்த ப்ளாஸ்டிக் தொழிற்சாலையில் நான் வாங்கி வந்தது இளம் பச்சை நிறத்தில் மூடியுடன் கூடிய ஒரு சிறு ப்ளாஸ்டிக் டப்பா. டூர் போக‌ ரூ 3:00 என்றால் இந்த டப்பாவின் விலையோ ரூ 1:50.

இதுதான் பள்ளியில் நான் போன முதல் இன்பச் சுற்றுலா. அதன்பிற‌கு பல சுற்றுலாக்கள் போனாலும் இதனை மட்டும் துளியும் என்னால் மறக்க முடியாது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திருமணமான புதிதில் வீட்டுக்காரர் என்னிடம் , " நீங்க ஏதோ டூர் போகணும்னு, பணம் கேட்டு எங்க வீட்டுக்கு லெட்டர் போட்டிருந்தீங்க, இல்ல ? " என்று கேட்டார்.  'க்ர்ர்ர்ர்' என்றிருந்தாலும் அப்போதைக்கு நான் எதுவும் சொல்லவில்லை.

ஆனால் இப்போது அடிக்கடி நான் சொல்வது, " அப்போதே அந்த மூணு ரூபா கடன அடைச்சிருந்தீங்கன்னா, இப்போ இவ்ளோ செலவு செய்ய‌ வேணாமில்ல" என்பேன். ஹா ஹா ஹா :))))))

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(பி.கு)

"சித்ராஆஆஆ எனக்கொரு உம்ம தெரிஞ்சாகணும் !"

ஆமாங்க  ஆமாம்,  நீங்க நெனச்சது 100% சரிதான்.  மீண்டும் ஹா ஹா ஹா :))))))

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

10 comments:

  1. அன்றைக்குத் தான் பணத்திற்கு எவ்வளவு மதிப்பு இருந்திருக்கிறது...!

    ReplyDelete
    Replies
    1. 3 ரூபாயில் ஒரு டூர். மதிப்பு அதிகம்தான். ஆனால் குட்டியூண்டு ப்ளாஸ்டிக் டப்பாவுக்கு ரூ 1:50 கொடுத்துட்டேனே !

      Delete
  2. ;))) எல்லோருமே முதல் ட்ரிப்ல ப்ளாஸ்டிக் டப்பாதான் வாங்குவாங்களோ!!! ;))

    எல்லாம் ப்ளான் பண்ணித்தான் லெட்டர் போட்டிருக்கீங்க!! எவ்ளோ தீர்க்கதரிசன சிந்தனை என்று வியக்காமல் இருக்க முடியவில்லை சித்ரா!! ;))

    ReplyDelete
    Replies
    1. இமா,

      ப்ளான் எதுவும் கெடையாதுங்க. அங்கு அப்படி ஒரு ஆள் இருப்பதே ரொம்ப நாளைக்கு(2 வருடம்?) எங்களுக்குத் தெரியாது. போன ........ல் எனக்குத் தெரியாமலே நான் ஏதோ நல்லது செய்திருக்க வேண்டும். அதனால்தான் இதெல்லாம் நடந்திருக்கிறது !!

      நீங்களும் ப்ளாஸ்டிக் டப்பாதான் வாங்கினீங்களா ! ஹா ஹா ! ஒருவேளை அதன் நிறம் இழுக்குதுன்னு நினைக்கிறேன்.

      Delete
  3. பிளாஸ்டிக் டப்பா! :)))))

    அட பயங்கர ப்ளானா இருக்கே! மூன்று ரூபாய் கொடுத்திருந்தால் தப்பித்திருக்கலாமோ! :))

    ReplyDelete
    Replies
    1. மூன்று ரூபாயைக் கொடுத்தெல்லாம் தப்பித்திருக்க முடியாதுங்க‌. ஒருவேளை ப்ளான் என்னுடையதாக இருந்திருந்தால் தப்பித்திருக்கலாம்.

      கடவுளும், பெரியவங்களும் சேர்ந்து கடைசியாய் எடுத்த முடிவு. அதனால் தப்பிக்க வாய்ப்பே இல்லை !!

      Delete
  4. ஜென்மஜென்மமாய் தொடரும் உறவு. அதனால் தான் இன்பச் சுற்றுலாவில் ஆரம்பித்திருக்கிறது.
    மிகவும் ரசித்தேன் உங்கள் சுற்றுலாவை.

    ReplyDelete
    Replies
    1. திருமணத்துக்குப் பிறகு ஆரம்பித்ததுதான். அதற்குமுன் பார்த்ததோ, பேசியதோகூட கிடையாது. ஜென்மஜென்மயாய் தொடர வேண்டும். சுற்றுலாவை ரசித்ததற்கு நன்றிங்க.

      Delete
  5. அட! இன்பச் சுற்றுலாவில், ஒரு இனிய தொடர்கதையா?
    உங்கள் அக்காவின் மைத்துனரையே கல்யாணம் பண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா? (ரொம்ப பொடி வச்சு எழுதினா புரியாதுங்கோ!)
    இன்னொரு விஷயமும் இதில் இருக்கு....நானும் அப்படியே தான்.....!

    ReplyDelete
  6. இப்படி போட்டு ஒடச்சுபுட்டீங்களே !! கடிதம்கூட வெளியிட்டு ....... உங்க விஷயம்தான் எல்லோருக்குமே தெரியுமே !

    ReplyDelete