Friday, May 30, 2014

குடைக்குள் ஒரு நினைவு !

'அன்னையர் தினம்' கொண்டாடும் இந்த மே மாதத்தில் அப்பாவைப் பற்றிய ஒரு நினைவு.

எங்களுடையது கிராமத்து வாழ்க்கைதான் என்றாலும் அப்பா எங்களை, முக்கியமாகப் பெண் பிள்ளைகளை படிக்க வைக்கத் தவறவில்லை. படித்தவர்கள் படித்துவிட்டு வேலைக்கும் போனார்கள். இதில் விளையாட்டுத்தனமாக விட்டுவிட்டு வருத்தமடைந்த‌வர்களும் உண்டு.

அப்படித்தான் நான் வேலைக்குப் போன இடத்தில் எங்களுக்குள்ளாகவே  (சுமார் 50 பேர்) சிறிது தொகையை சீட்டுப்பணம் மாதிரி விட்டு அதில் வரும் லாபத்தை எல்லோருக்கும் போய் சேருகிற மாதிரி ஏதாவது ஒரு பொருள் வாங்கி பரிசு மாதிரி தருவார்கள். (இந்த சீட்டுப்பணம் என்பது இன்னமும் எனக்குப் புரியாத புதிர்தான்)

ஒருமுறை ஒவ்வொருவருக்கும் ரூ 100 மதிப்பிலான பொருள் வாங்க வேண்டுமென கணக்குபண்ணி, என்ன வாங்கலாம் என யோசித்து அது மழைக் காலமாக இருந்ததால் எல்லோரும் ஒருமனதாகக் குடையைத் தேர்வு செய்தனர்.

மறுநாள் காலையிலேயே கையெழுத்து போடச்சொல்லி சர்குலர் வந்தது. அதில் பெண்களுக்கு லேடீஸ் குடையும் (அதாவது குடையை மடக்கி கைப்பையில் வைத்துக்கொள்வது), ஆண்களுக்கு பெரிய கறுப்பு குடையும் என மொத்தமாகக் கணக்கிட்டிருந்தது.

நான் யோசித்துப் பார்த்தேன், "எனக்கு வாங்கினால் அது பத்தோடு பதினொன்று. அதுவே அப்பாவுக்கு வாங்கினால் ? ...... அவருக்கு அது பொக்கிக்ஷம் மாதிரி" .  :)

எனவே என் பெயருக்குப் பக்கத்தில் இருந்த லேடீஸ் குடையை அடித்துவிட்டு ஜென்(ட்)ஸ் குடை என எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டேன். பாண்டிச்சேரிக்குப் போய் மொத்தமாக வாங்கிவர ஆள் தயாராகிவிட்டது.

தயாரானவர் நேராக என்னிடம் வந்து, "ஆமாம், சித்ரா, உனக்கு பெரிய கறுப்பு குடையா வேணும்?" என்றார் ஆச்சரியமாக. (இங்கே ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். எங்கள் ஊர் பக்கம் ஒருசிலர் மிகவும் தெரிந்தவர்கள் என்றால் 'நீ, வா, போ' போட்டுத்தான் பேசுவார்கள். மரியாதை கொடுக்கக் கூடாது என்றெல்லாம் இல்லை. பழக்கம் அப்படி. தெரிந்தவர் என்ற உரிமை, அவ்வளவே)

நான் "அப்பா வாங்கித்தந்த குடையே என்னிடம் அப்படியே இருக்கு. அதனால ஒரு சேஞ்சுக்கு நான் வாங்கி அப்பாவுக்குத் தரப் போறேன்" என்றேன். கேட்டவருக்கும் சந்தோஷம்.

வீட்டுக்குக் கிளம்புமுன் மாலையே குடைகள் வந்துவிட்டன. என்னிடம் ஒரு பெரிய குடை வந்து சேர்ந்தது. எங்கள் ஊர் பையனைப் பிடித்து குடையை அப்பாவிடம் கொடுக்கச்சொல்லி அனுப்பினேன்.

அடுத்த நாள் அப்பா நேராகவே நான் வேலை செய்த இடத்திற்கே வந்துவிட்டார். அப்பாவுக்குத் தன் பிள்ளைகள் எல்லோரையும் தினமும் பார்த்துவிட வேண்டும். அதனால் அடிக்கடி வருவதுண்டு. பெரும்பாலும் நானுமே அவர்களுடனேயேதான் இருந்தேன்.

"ஏம்மா, எனக்குத்தானா குடை இல்ல ? நீ வாங்கிக்க வேண்டியதானே ?" என்றார். நான் புன்னகையுடன் சமாளித்தேன்.

கடைசிவரை அந்தக் குடையை யாரும் தொடாமல் பார்த்துக்கொண்டார். வீட்டில் முக்கியமான இடத்தில் மாட்டி வைத்திருப்பார். 'த‌ன் பெண் வாங்கிக் கொடுத்தது' என்ற பெருமை அவருக்கு.

அவரது மறைவுக்குப் பிறகு சில நாட்களில் அந்தக் குடை அங்கில்லை. "அது எங்கே ?"  என்று கேட்டு அதைப் பார்க்கும் தைரியமும் எனக்கில்லை.

எந்தக் குடையைப் பார்த்தாலும் இப்போதும் இந்த நிகழ்ச்சி ஒரு கணம் மனதில் நிழலாடும். வாழ்க்கையில் இந்த நிகழ்வுகளெல்லாம் சகஜம் என நினைக்கும் மனப் பக்குவம் வர வேண்டும். அதற்கு இறைவன்தான் துணைபுரிய வேண்டும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 "குடை நம்முடன் இருக்கும்போது, அதை வாங்கித்தந்தவரும் உடன் இருப்பதுபோலவே இருப்பதாக, கூறக் கேட்டிருக்கிறேன்" _____  /////பாசமா ? அல்லது பக்குவமா ? ////  என்ற பதிவில் ஆறுமுகம் அய்யாசாமி அவர்களின் இந்த வரியைப் படித்ததும் வந்த நினைவுதான் இந்தப் பதிவு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

8 comments:

  1. மீண்டும் உங்கள் பதிவைக் கண்டதும் மகிழ்ச்சி. என் மின்மடல் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்க மின்மடலையும் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். உங்க மகிழ்ச்சியில் என்னுடைய மகிழ்ச்சியும் :)

      Delete
  2. மனதில் நெகிழ்ச்சி......

    சற்றே இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஏதோ ஒரு காரணத்தால் இப்படித்தான் தடை ஏற்பட்டுவிடுகிறது. உங்க‌ பதிவுகளையும் சென்று படிக்க வேண்டும். வருகைக்கும் நன்றிங்க.

      Delete
  3. மேடம், சற்று தாமதமாகத்தான் பதிவை பார்த்தேன். நெஞ்சம் நெகிழச்செய்த நினைவு. பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் தந்தையரின் பெருமிதம், வர்ணிக்க வார்த்தைகளற்றது.
    ஒரு வகையில் என் அனுபவமும் உங்கள் பதிவில் இருக்கிறது. எங்கோ ஊரில் இருந்து இரவு 9 மணிக்கு நான் போன் செய்யும் வரை காத்திருக்கும் என் தந்தை, போன் மணி அடித்தவுடன் எடுப்பார், பேச வார்த்தைகள் வராது. கண்களில் தண்ணீர் வந்து விடும். அம்மாவிடம் போனை கொடுத்து விடுவார்.
    அவருக்கு நான் வாங்கிக்கொடுத்த குடை, ஓரிரு வாரங்களில் உறவினர் அனைவருக்கும் அறிமுகம் ஆகி விட்டது. அடுத்தமுறை நான் ஊருக்கு வந்தபோது என் உறவினர் ஒருவர், ''அய்யனுக்கு கொடை வாங்கிக்குடுத்தியாமா, இப்பல்லாம் கொடை இல்லாம எங்கியும் போறதில்ல, கொடை கையில இருந்தா மகன் பக்கத்துலயே இருக்குறாப்புல இருக்கும் போலருக்குது,'' என்று என்னிடம் கூறினார்.
    'கூறக்கேட்டிருக்கிறேன்' என்றெழுதியது இதைத்தான். உண்மையில், உங்கள் பதிவு கண்கள் பனிக்கவும், கைகள் நடுங்கவும் வைத்து விட்டது. நன்றி மேடம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், உங்க அனுபவமும் அப்படியேதான் இருக்கு. பிள்ளைகள் மேலுள்ள பாசம்தான். எங்க அப்பாவுக்கென செய்தது இது மட்டுமே, செய்யவும் விடமாட்டார். ஆனால் அம்மா விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்தேன். இருப்பினும் ..... எல்லாம் நேரம்தான் போலும்.

      Delete