Tuesday, September 30, 2014

முன்னோர்களின் மாநாடு !!

        எங்கள் வீட்டு மொட்டை மாடியில் நடந்த குடும்பப் பொதுக் கூட்டம் !!


என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன, எவையெல்லாம் நிறைவேற்றப்பட்டன‌ என்பதெல்லாம் எனக்குத் தெரியாது, ஏதோ அவர்களுக்கு வேண்டாத சானலில் இருந்து நான் வந்திருப்பதாக நினைத்து என்னை விரட்டி விட்டுவிட்டனர்.

Monday, September 29, 2014

விருது பெற்ற மகிழ்ச்சியில் ....

                          
ரஞ்சனியின் விருதிற்கு நன்றி

நாம் எத்தனைப் பெரியவர்களானாலும் நமக்கும் விருது, பரிசு கிடைக்கிறது எனும்போது வரும் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. அப்படித்தான் சமீபத்தில் இரண்டு ஜாம்பவான்களிடமிருந்து எனது இரண்டு வலைப்பூவுக்கும் விருதுகள் பெற்றது சந்தோஷமாக உள்ளது. இரண்டு பேருமே பின்னூட்டங்கள் வாயிலாக உற்சாகத்தைக் கொடுப்பவர்கள். இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !!

விருது பெற்றதை முதலில் நம்ப முடியாமல்தான் திகைத்தேன். பிறகு "நமது வலைப்பூவிலும் ஏதோ ஒன்று இருக்கப்போய்தானே கொடுத்தார்கள்" என எனக்கு நானே சமாதானமானேன்.

1) ஒருவர் சொல்லுகிறேன் காமாக்ஷி அம்மா அவர்கள் ____ என்னுடைய சமையல் வலைப்பூவுக்காகக் கொடுத்தார்.

2) மற்றொருவர் அரட்டை இராஜலஷ்மி அவர்கள் _____ என்னுடைய பொழுதுபோக்கிற்காகக் கொடுத்தார்.


விருதுதான் கிடைத்துவிட்டதே, யாரையும் தொட விடாமல் அப்படியே அள்ளிக்கொண்டுபோய் வீட்ல பத்திரப்படுத்திக்கலாம் என விரைந்தால், விருதினை 5 நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளச் சொல்லி நிபந்தனை விதித்துவிட்டனர்.

பல நட்புகள் இருக்கும்போது ஐவரை மட்டும் எப்படித் தெரிவு செய்வது என குழம்பி, எல்லா வலைப்பூவுக்கும் ஓடினேன். ஆனால் எல்லோரும் ஏற்கனவே, எனக்கு முன்னமே பெற்றுக்கொண்டுவிட்டனர் என்பதால், இவ்வலைபூவுக்கு வருகை தரும் வலையுலக நட்புகள் அனைவருக்கும் இவ்விருதினை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தளிக்கிறேன்.

மீண்டும் இருவருக்கும் நன்றி பல !!

Friday, September 26, 2014

மெரீனா பீச் _ தொடர்ச்சியின் தொடர்ச்சி !


கடல் அலைகள் வந்து போன பிறகு நானும், பொண்ணும் சேர்ந்து, கண்டுபிடித்து, சேர்த்த பொக்கிஷங்கள் இவைதான் !!

        "அம்ம்ம்மா, இதெல்லாம் எவ்ளோ அழகா இருக்கு பாரும்மா", __ மகள்.

பொறுக்கி எடுத்ததையெல்லாம் என்னிடம் ஒப்படைச்சாச்சு. இனி இவற்றை நான் பத்திரமா வீடு போய் சேர்க்கணும்.

கையில் பை எதுவும் இல்லாததால் உள்ளங் கையிலேயே வைத்துக் கொண்டிருந்தேன். திடீரென அவற்றுள் ஒன்று மட்டும் உருள்வதுபோல் உணரவும் ........ பார்த்தால் ........ ?

                                     நல்லவேளை இவர்களிடமிருந்து தப்பித்தேன் !!

நீளமான ஒன்றன் உள்ளிருந்து கறுப்பான சதைப்பகுதி வெளியே வரவும் பயத்தில் எல்லாவற்றையும் தூக்கி வீசிவிட்டேன். பிறகு அதை மட்டும் விட்டுவிட்டு மற்ற கிளிஞ்சல்களைப் பொறுக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அலைகள் ஓடி வரும்போது பார்டர் வைத்த மாதிரி முதலில் ஒரு மெல்லிய கோடாய் தெரியும் பாருங்க‌. அவற்றை ரசிக்கத்தான் எனக்கு நேரம் பத்தாது.

                                             
                                           மேலும் சில அலை அடிக்கும் படங்கள் !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
         வேறொரு நாளைக்கு எங்கள் ஊர் 'சில்வர் பீச்' பக்கம் போகலாம், வாங்க !!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Thursday, September 25, 2014

மெரீனா பீச் ____ தொடர்ச்சி


                                  கடலுக்குப் போயிட்டு கால் நனைக்காட்டி எப்படி ?

கடற்கரைக்கு எத்தனை தடவை போனாலும், எவ்வளவு நேரம் அலையில் நின்றாலும் சலிப்பதேயில்லை.  இயற்கையின் பிரமிப்பில் மூழ்கித்தான் போகிறோம்.


செவ்வக வடிவிலான படங்கள் நான் எடுத்தவை. சதுர வடிவிலான படங்கள் ... ஹி  ஹி ......... வீட்டுக்காரரின் செல்லில் இருந்து எடுத்துக்கொண்டேன். 

கடல் அலையில் தேடிக் கண்டுபிடித்த பொக்கிஷங்களான கிளிஞ்சல்களை அடுத்த பதிவில் எடுத்து வருகிறேன்.

Wednesday, September 24, 2014

மெரீனா பீச்

                           

1999 _ ல் மெரினவுக்குப் போனதோடு சரி. அதன்பிறகு இப்போதுதான் ஜூலை கடைசியில் போகும் சந்தர்ப்பம் கிடைத்தது, இல்லையில்லை நானாக ஏற்படுத்திக்கொண்டேன். காரணம் தெரிய வேண்டுமா?  ........ சொல்லட்டுமா ? ...... சொல்லப் போ  றே    ன் .... சொல்லிடுவேன் ...... !!

ஆமாங்க, முன்பொரு பதிவில் நம் நட்பாசிரியை  , "ம்... எனக்காக காமராவோட ஒரு மெரீனா டூர் போய்ட்டு வாங்க சித்ரா"  என்று தன் விருப்பத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதிலிருந்து இந்தியா என்றாலே 'மெரீனா'தான் நினைவுக்கு வந்துபோனது. இந்தியாவுக்குப் போறோமோ இல்லையோ 'மெரினா'வுக்குப் போயேத் தீர வேண்டும் என மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

ஜூலை கடைசியில் சென்னையில் வந்த வேலையை முடித்துக்கொண்டு ஊருக்குத் திரும்பும் சமயம் நண்பகல், போதாததற்கு மழை வரப் போவதற்கான கருமேகங்கள் வேறு சூழ்ந்திருந்தன. இந்த நேரத்தில் நான் 'மெரினாவுக்குப் போகலாம்' என்றதும் 'வேறொரு நாள் பார்த்துக்கொள்ளலாமே" என்ற பதில்தான் வந்தது.

விட  மாட்டோ  மில்ல ! போய்ட்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டு, தூறல் மழையாக வலுக்குமுன் வாகனத்தில் ஏறியாச்சு. சரியான வெளிச்சம் இல்லாததால் படங்கள் 'பளிச்' என வரவில்லை.

எப்போதும் அண்ணா சமாதி & எம்.ஜி.ஆர் சமாதி பக்கமாகத்தான் போவோம். ஆனால் இந்த முறை நாங்கள் போன அன்று சட்டமன்றத்தில் அம்மாவின் உரை இருந்ததால் பாதுகாப்பு கருதி கெடுபிடிகள் அதிகமாக இருக்குமென்பதால் கொஞ்சம் முன்னாலேயே இறங்கிக்கொண்டோம்.

நண்பகல் என்பதால் மக்கள் கூட்டத்தைக் காணவில்லை. கடைகளும் இல்லை. அதற்கு பதிலாக எங்கும் பிளாஸ்டிக் குப்பைகள், கடல் மணலைவிட அவைதான் அதிகமாக ஆக்கிரமித்திருந்தன.ஆவலுடன் போன எனக்கு சப்பென்றிருந்தது.
                                        
                                                     'மெரீனா'வுக்குப் போவோமா ... !!

                                                               நடிப்பிலக்கணம் !

                                                                       அண்ணல் காந்தி

                                                                   அய்யன் திருவள்ளுவன்

                                                    பஞ்சு மிட்டாய் இல்லாமலா !!

இவ்ளோ தூரம் வந்துட்டு கடலைப் படம் புடிக்காட்டி எப்படிங்க‌ ? அடுத்த பதிவில் பிடித்துவிடலாம் !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அதி முக்கியமான குறிப்பு :

என்னைப் போன்றவர்கள் .... ஏன் உங்களில் ஒரு சிலரும்கூட‌ கடல் பக்கம் போனாலே ஒன்றைத் தேடித்தேடி(க்/ ப்) ..................?   'அது என்ன?' ன்னு கொஞ்சம் யோசிச்சு வையுங்க‌, வரேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Saturday, September 13, 2014

திருமண வாழ்த்து


15_09_2014 திங்கட்கிழமை அன்று மணநாள் காணும் S. சுபாஷ் V. சத்தியா இருவரும் திருமண வாழ்வில் மனமொத்த தம்பதியராய் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் .....
                                                                                                                                 சுந்தரமூர்த்தி
                                                                                                                                 சித்ரா
                                                                                                                                 புனிதவதி

Tuesday, September 9, 2014

பசுமை நிறைந்த நினைவுகள் ..... கிளி ஜோஸியம்

                                                                                      

இந்தியாவுக்குப் போனதும் முதல் வேலையாக மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றார் அண்ணன். அங்கே அம்மனை தரிசித்துவிட்டு வெளியே வரும்போது ஒரு ஓரமாக கிளி ஜோஸியக்காரர் ஒருவர் உட்கார்ந்து ஜோஸியம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சுற்றி ஒரு கூட்டம்.

மகள் எங்களிடம் ' 'கிளி ஜோஸியம்'னு போட்டிருக்கே என்ன?' என்று கேட்டாள். விஷயம் தெரிந்ததும் தானும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டாள். சிறு வயதிலிருந்தே மகளுக்கு ஜாதகத்தின்மேல் ஒரு ஆர்வம் உண்டு. பல தளங்களுக்கும் சென்று கைரேகை, ராசிபலன் எல்லாம் பார்ப்பாள்.

அடுத்து சென்னைக்குப் போகிற வேலை இருந்ததால், 'இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்', என சமாதானம் சொல்லி அழைத்துச் சென்றுவிட்டோம்.

எனக்கும்கூட சிறு வயதிலிருந்தே இந்த கிளி ஜோஸியத்தின்மீது ஒரு கண் உண்டு. தெருவில் யார் வீட்டுத் திண்ணையிலாவது ஜோஸியக்காரர் உட்கார்ந்தால் போதும் வியாபாரம் களைகட்டிவிடும். ஒவ்வொருவராக வந்து பார்த்துவிட்டு அடுத்தவரையும் பார்க்கச் சொல்லி ஆசையை கிளப்பிவிடுவர்.

வீட்டில் அனுமதி இல்லாததால் வேடிக்கை பார்ப்பதோடு சரி. இந்தமுறை பாப்பாவுக்குப் பார்க்கும்போது நாமும் நம் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டியதுதான் என மனதளவில் சந்தோஷப்பட்டேன்.

இரண்டு வாரங்கள் கழித்து கிளி ஜோஸியக்காரர் எங்கள் தெரு வழியாக வந்திருக்கிறார். வெளியில் நின்றிருந்த மகள் என்னை அவசரமாகக் கூப்பிட்டு, ' "கிளி ஜோஸியர் போகிறார்,  கூப்பிடும்மா" என்றாள்.

'கிளி ஜோஸியம் பார்த்து முடிந்ததும் அவர் என்ன சொன்னார் என்பதைத் தனக்குச் சொல்ல வேண்டும்' என்ற கட்டளையுடன் பவ்யமாக உட்கார்ந்தாள். 10 ரூபாய் கொடுத்த பிறகே அதாவது ஜோஸியர் பணத்தை வாங்கிக்கொண்டு பெட்டியை ஒரு தட்டு தட்டியதும் கிளி வெளியே வந்தது.. ஜோஸியர் பெட்டியை மீண்டும் தட்டியதும் கார்டுகளை ஒவ்வொன்றாக எடுத்துப்போட்டது.


ஜோஸியர் பெட்டியை மீண்டும் தட்டியதும் வாயிலிருந்த கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு பெட்டிக்குள் சென்றுவிட்டது.பெட்டிக்குள் போகும்போது பாவமாக இருந்தது.


அடுத்தடுத்து நாங்கள் அனைவரும் பார்த்துக்கொண்டோம்.  பல வருடக் கனவு நிறைவேறியதில் எனக்கு மகிழ்ச்சி.

இந்த ஒரு கிளியை நம்பி குடும்பத்தை திருநெல்வேலியில் விட்டுவிட்டு வந்திருப்பதாகச் சொன்னார் ஜோஸியர்.

ஜோஸியர் போனதும் மகள் என்னிடம் "அம்மா, அந்தக் கிளியை அவர்தானே வளர்க்கிறார். அதை ஏன் பயமுறுத்தி வைத்திருக்கிறார் ? ஒரு தடவைகூட கிளியை அவர் தடவிக் கொடுக்கவில்லை, கொஞ்சவும் இல்லை, கிளியைப் பார்க்க பாவாமாக இருக்கிறது" என்றாள்.

ஆமாம், காசா பணமா ? தடவிக் கொடுத்திருக்கலாம்தான், அல்லது கொஞ்சம் கொஞ்சியாவது இருக்கலாம்தான்.

அவளைப் பொறுத்தவரை வளர்ப்புச் செல்லங்கள் என்றால் அவள் வளரும் ஊரில் அவள் பார்த்த மாதிரி இருக்கும் என்று நினைத்துக்கொண்டாள் !!

Sunday, September 7, 2014

பசுமை நிறைந்த நினைவுகள் ........ (2 )

                                     


ஒருநாள் நான் எனது சகோதரியின் வீட்டு சோளக் கொல்லைக்குப் போனேன். சோளம் செடியை அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்தேன். அங்கே ஒரு செடியின் சோளப் பூவின் அருகே மண்ணாலான குடம் போன்ற அமைப்பு இருந்தது. விசாரித்ததில் அது 'குளவியின் கூடு' என்பது தெரியவந்தது.

"இந்தக் குடத்தை செய்த குயவன் குளவியா!  " என்று என்னால் நம்பவே முடியவில்லை. இதைப் பார்த்ததும் நான் பசுமையான அந்தப் பழைய நினைவுகளுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

அந்த நினைவுகள்தான் என்ன? படித்துத்தான் பாருங்களேன் .

பத்தரூட்டு ஆயாவும் தாத்தாவும் !

நான் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது திடீரென பக்கத்து வீட்டிற்கு கொசவமூட்டு(குயவர் வீடு என்பதைத்தான் இவ்வாறு சொல்லியுள்ளோம் என்பது பின்னாளில்தான் எனக்குத் தெரிய வந்தது) ஆயாவும் தாத்தாவும் குடி வந்தனர். 'பத்தரூடு' என்றும் சொல்லுவோம்.

தாத்தாவுக்கு 80 வயதிற்கும் மேலிருக்கலாம். பல் ஒன்றுகூட கிடையாது. தலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கறுப்பும் வெளையும் கலந்த சில முடிகள். அவற்றை சேர்த்து சிறு குமுடி(குடுமி) கட்டியிருப்பார். தாத்தா ஒரு வார்த்தைகூட பேசி நான் கேட்டது கிடையாது. அவ்வளவு அமைதி.

ஆனால் ஆயாவோ அவருக்கு நேரெதிர். ஆயாவுக்கு அவரைவிட பத்து வயதிற்கும் குறைவாகவே இருக்கும். நெற்றி நிறைய மிகப் பெரிய குங்குமப் பொட்டு வைத்திருப்பார். இருவரும் படு ஆக்டிவ்வாக இருப்பார்கள்.

மூன்று பெண்களுக்குத் திருமணமாகியும் அவர்களின் உதவியின்றி தனித்து வாழ்ந்து தங்களின் பெண்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தனர்.

தினமும் தாத்தா ஒரு சக்கரத்தைப் பயன்படுத்தி களிமண்ணில் நீர்விட்டு நன்றாகப் பிசைந்து நிறைய சட்டி பானைகள் செய்வார். அதன் பிறகுதான் பெரிய வேலையே ஆரம்பிக்கும். ஈரப் பானைகளை மடியில் வைத்துக்கொண்டு துணிகள் சுற்றப்பட்ட மர உருண்டை ஒன்றை பானையின் உள்ளேயும் டேபிள் டென்னிஸ் பேட்ல்ஸ் மாதிரியே மரத்தாலான ஒன்றை பானையின் வெளியேயும் வைத்துக்கொண்டு தட்டி தட்டியே பானையை முழுமைப்படுத்துவார்.

ஆயா அவற்றை பைசா செலவில்லாமல்(நாங்க எல்லோரும் அவங்களுக்கு வாலண்டியர்ஸ்) சின்ன பிள்ளைகள் உதவியுடன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்சென்று காய வைப்பதும், காய்ந்ததும் ஓரிடத்தில் அடுக்கி வைக்க உதவுவதும், கொத்தாக மணிமாலைகளை பானைகளின்மேல் உருட்டி அவற்றை வழவழப்பாக்கி ..... இப்படியாக இது வாரக்கணக்கில் போகும்.

ஒரு நல்ல முகூர்த்த நாளாகப் பார்த்து வீட்டின் முன்புறமோ அல்லது பின்பக்கமோ இதுவரை செய்த பானை சட்டிகளை விறகுகளுடன் சேர்த்து அடுக்கி வைத்து மண்ணால் பூசி மெழுகி தீ வைப்பாங்க. அதற்கு 'சூளை'ன்னு பேர். சூளைகளை போடும் அன்று மழை வராமல் இருக்க வேண்டுமே என்று வேண்டிக்கொள்வார்கள்.

ஒரு நாள் முழுவதும் எரிந்து முடிந்த பின்னர் ஆயா சூளையைப் பிரித்து பானைகளை பார்த்துப் பார்த்து எடுத்து வைப்பார். நாங்கள் எல்லோரும் அவற்றை பத்திரமாக அவர் சொல்லும் இடத்தில் கொண்டு வைப்போம். அங்கேயே முக்கால்வாசி பானைகள் விற்றுத் தீர்ந்துவிடும். கருப்பாக இருப்பவை வேகாதவை என்றும் அவற்றை மிகக் குறைந்த விலையிலும் விற்று ஒரு வழியாகத் தேற்றிவிடுவார் ஆயா.

மீதியை ஆயா ஆள் வைத்து ஊர் ஊராகச் சென்று விற்று வருவார். கணக்கெல்லாம் வாய் வழிதான். எப்படித்தான் நினைவிருக்குமோ தெரியாது. சூளை முடிந்து சில நாட்களுக்கு ஆயா தினமும் வசூலுக்குக் கிளம்பிவிடுவார்.

வசூல் எல்லாம் முடிந்த பிறகு இருவரும் நல்ல துணி உடுத்திக்கொண்டு  உறவுகளைப் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். சில நாட்கள் கழித்துத்தான் திரும்புவார்கள்.

முகூர்த்த நாட்கள் என்றால் ரொம்பவே பிஸியாயிடுவாங்க. ஒவ்வொரு திருமணத்திற்கும் வேலைப்பாடுகள் நிரம்பிய இரண்டு பானைகளும், அவற்றிற்கு அதே வேலைப்பாடுடன் கூடிய மூடிகளும் செய்வாங்க.

வேலைப்பாடு என்றால் பானைகளில் கிளிகளும் இயற்கை சூழலும் நிரம்பிக் காணப்படும். ஏதேதோ காய்களையும், பழங்களையும் பறித்து வந்து கசக்கிப் பிழிந்து ஊறவைத்து பல வண்ணங்களைத் தயார் செய்வாங்க.

இன்றும் என் மனக்கண்ணில் அந்தக் கிளிகளும்,  மான் கூட்டமும், மயில்களும், அடர் பச்சை, சிவப்பு, நீலம், ப்ரௌன் நிறங்களும் அடிக்கடி வந்துபோகும். இந்த டிசைன்களை வரைவதற்கு தாத்தா எங்கே போய் வகுப்பெடுத்துக்கொண்டார்?

இவற்றையெல்லம் அன்று ஒன்றும் தெரியாமல் ரசித்துப் பார்த்தேன். இதுவே இன்றைய நாளாக இருந்தால் வண்ணங்களை எப்படி உருவாக்கினார் என்று வீடியோவுடன் பதிவிட்டிருக்கலாம்.

அதேபோல் குலதெய்வ வழிபாட்டுக்கு குதிரைகள் செய்து தருவார். அதன்மேல் வீரன் உட்கார்ந்து இருப்பது போலவும் இருக்கும். நிறைய வீரர்களையும் செய்வார். அவையும் பார்க்க அழகாக மூக்கும் முழியுமாக இருக்கும்..

எங்கள் வீட்டில் என்னிடம் யாராவது பக்கத்தில் இருக்கும் தண்ணீர் டம்ளரை நகர்த்தச் சொன்னால்கூட கண்டுகொள்ளமாட்டேன். மறந்துபோய்கூட தூசு துறும்பை இந்தண்டை, அந்தண்டை நகர்த்தமாட்டேன். ஆனால் இவர்கள் வீட்டிற்கு விடாமல் வேலை செய்வேன்.

அப்பா, அண்ணன் வீட்டில் இல்லையென்றால் அங்குதான் போய் சக்கரத்தை சுற்ற முயற்சிப்பதும் பானைகளைத் தட்ட முற்படுவதுமாக ஏதாவது செய்து கொண்டிருப்பேன். நான் மட்டுமல்ல, என் வயதொத்த எல்லோருக்குமே இதுதான் பொழுதுபோக்கு.

இந்த மகிழ்ச்சி எல்லாம் ஆரம்பப்பள்ளி முடிக்கும் வரைதான். ஆறாம் வகுப்புக்கு வெளியூர் போயாச்சு. விடுமுறையில் வந்தாலும் திடீரென அவர்களுடன் கலக்க கொஞ்சம் கூச்சம் & வெட்கம். எப்போதாவது என்னைப் பார்த்தால் ஆயா கேட்பது "என்ன அண்ண பொண்ணு வீட்டிற்கு வரவே மாட்டிங்குது" என்பார்.

காலங்கள் உருண்டோடியதில் தாத்தா கடவுளுடன் போய் சேர்ந்ததும் ஆயா தன் மகளுடன் போய் இருந்தார். பிறகு அவரும் தாத்தாவுடன் இணைந்துகொண்டார்.

உழைப்பின்றி அடுத்தவர் பொருளை சுரண்ட நினைக்கும் இன்றைய நாளைப் போல் இல்லாமல், அந்தத் தள்ளாத வயதிலும் உழைத்துப் பிழைக்க அவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்திருப்பார்கள் ?

Saturday, September 6, 2014

பசுமை நிறைந்த நினைவுகள் ..... 1

                                   

இந்த நேரத்தில் பதிவு வருகிறது என்றால்? ...... எல்லாம் ஜெட் லக் செய்யும் வேலைதான்.

ஊரில் இருந்த நாட்களில் முக்கால்வாசி நாட்கள் எனக்குப் பிடித்தமான கிராமத்து வாசனையுடன்தான் வாசம். 'அடுத்த தடவை வரும்போது இங்கேயே வந்து செட்டில் ஆகிற வழியைப் பாருங்க' என்ற எங்கள் அண்ணனின் அன்புக் கட்டளை என்னை நிறையவே யோசிக்க வைத்துவிட்டது. பார்க்கலாம், என்ன நடக்கிறதென!!

என்னதிது ? படத்தில் ஒன்றைப் போட்டுவிட்டு வேறு ஏதேதோ சொல்கிறேன் என்றுதானே பார்க்கிறீர்கள். இதோ வந்துவிட்டேன் இரண்டு கேள்விகளுடன் !

(1) மேலே படத்திலுள்ளது என்ன?         (2)  இதை யார் இவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கக்கூடும்?

முதல் கேள்விக்கு மிக எளிதாக பதில் வந்துவிடும். ஆனாலும் அது தவறாகத்தான் இருக்கும் என்பது என் எண்ணம். என் எண்ணத்தை யாராவது போட்டு உடைச்சிடுங்களேன் ப்ளீஸ் !

இரண்டாவது கேள்விக்கு பதில் சொல்வது கொஞ்சமல்ல,  நிறையவே சிரமம்.

இரண்டு கேள்விகளுக்குமான பதில்களை அடுத்த பதிவில் சொல்லிவிடுகிறேனே !! அதுவரை யோசிச்சு வையுங்க, வரேன்.

Friday, September 5, 2014

பசுமை நிறைந்த நினைவுகளுடன் ...!!

                                                    

இந்தியப் பயணம் சுகமாக அமைந்து வீடு வந்து சேர்ந்தாச்சுங்கோ. வெகு நாட்களுக்குப் பிறகு வலையுலக உறவுகளை  சந்திக்கப் போவதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.  பசுமை நிறைந்த நினைவுகளுடன் மீண்டும் வருகிறேன்.