Thursday, October 30, 2014

திருவீரட்டானேஸ்வரர் திருக்கோயில் __ திருவதிகை (தொடர்ச்சி)


          
இக்கோயிலுக்கு நிறைய 'முதன்முதலில்' என்ற பெருமைக‌ள் உண்டு.

இறைவன் கருவறை விமானத்தின் நிழல் பூமியில் விழாதவாறு கட்டியிருக்கிறார்களாம். இதில் தஞ்சை பெரிய கோவிலின் முன்மாதிரியே இந்தக் கோவில்தானாம்.

முதன்முதலில் தேவாரம் பாடப்பட்டதும் இங்குதானாம்.

இறைவன் தேரில் வந்ததால் கோயிலின் அமைப்பு தேர் வடிவில் இருக்கிற‌தாம். தேர் ஏற்பட்ட வரலாறும் இங்குதானாம்.

சூறைத் தேங்காய் பழக்கமும் இங்குதான் முதன்முதலில் ஏற்பட்டதாம்.

                                                            பதினாறுகால் மண்டபம்

                                                                   நடராஜர் மண்டபம்

                                                                      நந்தியம்பெருமான்

                                                                     திலகவதியார் சந்நிதி

திருநாவுக்கரசரின் சகோதரி திலகவதியார் இங்கு தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம் இது. 

திருநாவுக்கரசரின் சூலை நோய்( வயிற்று வலி) நீங்கப் பெற்றதும் இங்குதான். இவருக்கு அம்மையப்பன் திருமணக் கோலத்தில் காட்சி தந்த தளம் இது என்பதால் இங்கு நிறைய திருமணங்கள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

                                                            சிவலிங்கத் திருமேனி
                                                           
                                                63 நாயன்மார்களின் அணிவகுப்பு

                                                         இந்தப் பக்கமிருந்து ....

பின்னாளில் 'காரைக்காலம்மையார்'  என்றழைக்கப்பட்ட 'புனிதவதி அம்மையார்'.
                                                                                                                                         (தொடரும்)

Tuesday, October 28, 2014

திருவீரட்டானேஸ்வரர் திருக்கோயில் __ திருவதிகை



'பண்ருட்டி'யையொட்டி 'திருவதிகை' என்று ஒரு ஊர். சொல்லும்போது 'திருவதி' என்றே சொல்லுவோம். இங்கு பழமையான, புகழ்பெற்ற சிவன் கோயில் ஒன்று உள்ளது.  இன்னும் நிறைய கோயில்களும் உள்ளன.

முகூர்த்த நாட்களில் இங்கு ஏகப்பட்ட திருமணங்கள் நடக்கும். அதற்கு காரணமில்லாமல் இல்லை. கருவறையில் மூலவருக்குப் பின்னால் உள்ள சுவரில் அம்மையப்பன் கல்யாணத் திருக்கோலம் சிற்பமாக உள்ளது.

அர்ச்சகர் சொல்லும்போது தீபாராதணை வெளிச்சத்தில்  இக்காட்சியைக் காணலாம். கொஞ்சம் கவனம் சிதறினாலும் ...... பரவாயில்லை, நின்றிருந்து அடுத்த ஆராதணையின்போது கண்குளிரப் பார்த்துவிட்டு வரலாம்.


நாமும் கோவிலின் உள்ளே போய் வணங்கிவிட்டு வருவோமே !


                                                              திருநீற்று மண்டபம்

                                                              தீர்த்தவாரி மண்டபம்

உள்ளே நுழைந்ததுமே வலது பக்கத்தில் புத்த சிலையொன்று உள்ளது. அப்படியென்றால் ...... என்றால் ........ அந்த நாளில் எங்கள் ஊர் பக்கம் புத்த சமயமும் தழைத்தோங்கி இருந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்.
                                                               குளத்தின் நுழைவாயில்
            
                                                                      சூல தீர்த்தம்          
            
                               கீழே கொடிமரத்திலேயே விநாயகர் சிலை உள்ளது.
                                                                                                                                                    (தொடரும்)

Thursday, October 23, 2014

எறும்பு & கரையான் புற்று



எங்கள் ஊரில் சகோதரி வீட்டு வாசலில் தினமும் எறும்புகள் வலைகளைத் தோண்டுவதும், காலையில் அவர்கள் அவற்றைப் பெருக்கி அகற்றுவதும், சளைக்காமல் எறும்புகள் மீண்டும் வலைகளைத் தோண்டுவதும், இவர்கள் மீண்டும் மீண்டும் அவற்றை அகற்றுவதும், ........... இப்படியேதான் தினமும் போய்க் கொண்டிருந்தது. அவையும் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை, இவர்களும் விடுவதாக இல்லை.


                                                  முய‌ற்சியைக் கைவிடாத எறும்புகள்

வலைகள் ஒருநாள் இருப்பதுபோல் மறுநாளோ, அல்லது எல்லா வலைகளும் ஒரே மாதிரியோ இருப்பதில்லை. விதவிதமான டிசைன்களில் தோண்டுகின்றன.

இந்த எறும்பு வலைகளைப் பார்த்தபோது எனக்கு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் நினைவில் வந்தது.

ஒருமுறை இங்குள்ள பப்ளிக் சானலில் நடந்த நிக‌ழ்ச்சி ஒன்றில் ஒருவர்(ஆராய்ச்சியாளர்) வேரும், பல கிளைகளுமாக உள்ள வெள்ளியால் ஆன ஒரு செடியை(!!!) எடுத்து வந்தார். அதைப் பார்த்ததும் அது ஒரு செடியின் மோல்டு என்றுதான் நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அது எறும்பு வலையின் மோல்டு என்று. ஆச்சரியமாகிப் போனேன்.

ஒரு எறும்பு வலையின் மேல்புறத்தில் உருகிய வெள்ளியை ஊற்றியபோது அது கீழே எறும்பு வலையில் உள்ள அறைகளில் எல்லாம் பாய்ந்து சென்று குளிர்ந்து இறுகும்வரைக் காத்திருந்து பிறகு கவனமாக மண்ணைத் தோண்டி எடுத்து வந்திருந்தார். பார்க்க அச்சு அசல் வெள்ளியால் ஆன செடியேதான். எறும்புகளின் வாழ்க்கை முறை பற்றிய நிகழ்ச்சி அது.

      எறும்புகளுடன் 'ஸெல்'லும் வலைகளைத் தோண்டிக்கொண்டிருந்தன.

படத்திலுள்ளவை ஒரு நாள் காலையில் பார்த்த டிசைன்கள். விடியற்காலையில் சரியான வெளிச்சம் இல்லாததால் படங்கள் 'பளிச்' என்று இல்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்தப் பகுதி என்னை மாதிரியான ஆட்களுக்கானது, ஹா ஹா ஹா ! கண்டு பி டி ங் க பார்க்கலாம் !  'கோவை'யில்கூட இந்த விளையாட்டு உண்டெனக் கேள்விப்பட்டேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Tuesday, October 21, 2014

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!


வலையுலக நட்புக்கள் அனைவருக்கும் தித்திக்கும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

ஊரில் சகோதரி வீட்டுத் தோட்டத்தில் பூத்திருந்த‌ அழகிய ஒற்றை ரோஜா இது. 

Saturday, October 18, 2014

முல்லை


எவ்வளவு முயன்றும் வெண்ணிற மொட்டுக்கள் முழுவதையும் நீல வானப் பின்ன‌ணியில் எடுக்க முடியவில்லை. எல்லாம் இந்தக் கொசுவும், பூச்சியும் படுத்திய பாடுதான்.

     சகோதரியின் வீட்டுத் தோட்டத்தில் அடர்ந்து, படர்ந்துள்ள முல்லைச் செடி.

 மாலை நேரத்தில் பச்சை பசேல் என்றிருக்கும் முல்லைச் செடியில், வெள்ளை அரும்புகளைப் பார்க்கக் கொள்ளை அழகுதான் !!

 பூக் கட்டுவது என்றால் எனக்குக் கொள்ளை விருப்பம். அக்காவின் மகள் தினமும் மாலையில் தோட்டத்தில் இருக்கும் முல்லை அரும்புகளைப் பறித்து வந்து நான் கட்டுவதற்காகக் காத்திருப்பாள்.

ஊரில் இருந்தவரை முல்லை, மல்லி, கனகாம்பரம் என பறித்து 'பூ' கட்டும் ஆசையைத் தீர்த்துக்கொண்டேன். நாங்களும் கையால் மட்டுமின்றி காலாலும் கட்டுவோமே !!


ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்காக வாங்கிய அரும்பு. எங்க வீட்ல பூவைப் பிச்சிப்பிச்சிப் போட்டு கசக்குற‌ ஆள் காலேஜுக்குப் போறதால அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.


                                                                  கட்றோம், கட்றோம், ........

                                                        கட்டிகிட்டே இருக்கோம் ......

முழுவதையும் கட்டி முடிப்பதற்குள் கொஞ்சம் பூத்தும்விட்டது. பூத்த பூவைக் கட்டுவதென்பது எனக்குக் கொஞ்சம் சவால்தான். உங்களுக்கு ??