Thursday, October 23, 2014

எறும்பு & கரையான் புற்று



எங்கள் ஊரில் சகோதரி வீட்டு வாசலில் தினமும் எறும்புகள் வலைகளைத் தோண்டுவதும், காலையில் அவர்கள் அவற்றைப் பெருக்கி அகற்றுவதும், சளைக்காமல் எறும்புகள் மீண்டும் வலைகளைத் தோண்டுவதும், இவர்கள் மீண்டும் மீண்டும் அவற்றை அகற்றுவதும், ........... இப்படியேதான் தினமும் போய்க் கொண்டிருந்தது. அவையும் முயற்சியைக் கைவிடுவதாக இல்லை, இவர்களும் விடுவதாக இல்லை.


                                                  முய‌ற்சியைக் கைவிடாத எறும்புகள்

வலைகள் ஒருநாள் இருப்பதுபோல் மறுநாளோ, அல்லது எல்லா வலைகளும் ஒரே மாதிரியோ இருப்பதில்லை. விதவிதமான டிசைன்களில் தோண்டுகின்றன.

இந்த எறும்பு வலைகளைப் பார்த்தபோது எனக்கு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிதான் நினைவில் வந்தது.

ஒருமுறை இங்குள்ள பப்ளிக் சானலில் நடந்த நிக‌ழ்ச்சி ஒன்றில் ஒருவர்(ஆராய்ச்சியாளர்) வேரும், பல கிளைகளுமாக உள்ள வெள்ளியால் ஆன ஒரு செடியை(!!!) எடுத்து வந்தார். அதைப் பார்த்ததும் அது ஒரு செடியின் மோல்டு என்றுதான் நினைத்தேன். பிறகுதான் தெரிந்தது அது எறும்பு வலையின் மோல்டு என்று. ஆச்சரியமாகிப் போனேன்.

ஒரு எறும்பு வலையின் மேல்புறத்தில் உருகிய வெள்ளியை ஊற்றியபோது அது கீழே எறும்பு வலையில் உள்ள அறைகளில் எல்லாம் பாய்ந்து சென்று குளிர்ந்து இறுகும்வரைக் காத்திருந்து பிறகு கவனமாக மண்ணைத் தோண்டி எடுத்து வந்திருந்தார். பார்க்க அச்சு அசல் வெள்ளியால் ஆன செடியேதான். எறும்புகளின் வாழ்க்கை முறை பற்றிய நிகழ்ச்சி அது.

      எறும்புகளுடன் 'ஸெல்'லும் வலைகளைத் தோண்டிக்கொண்டிருந்தன.

படத்திலுள்ளவை ஒரு நாள் காலையில் பார்த்த டிசைன்கள். விடியற்காலையில் சரியான வெளிச்சம் இல்லாததால் படங்கள் 'பளிச்' என்று இல்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்தப் பகுதி என்னை மாதிரியான ஆட்களுக்கானது, ஹா ஹா ஹா ! கண்டு பி டி ங் க பார்க்கலாம் !  'கோவை'யில்கூட இந்த விளையாட்டு உண்டெனக் கேள்விப்பட்டேன்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

24 comments:

  1. வணக்கம்
    சகோதரி

    எறும்பின் விட முயற்சி போல் மனிதன் வாழ்பவனாக இருந்தால் வாழ்க்கையில்வெற்றியடைவது உறுதி... அழகிய படங்கள் நானும் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ரூபன்,

      எறும்புகளிடமிருந்து விடா முயற்சியையும், டீம் ஒர்க்கையும் கற்றுக்கொள்ளலாம். வருகைக்கும் நன்றி ரூபன்.

      Delete
  2. எரும்புங்க கூட நமக்கு நல்ல பழக்கம் :) சின்ன்ன வயசில் என் frock பாக்கெட்ல போட்டு வருவேனாம் அஞ்சு நிமிஷத்தில் குய்யோ முறையோன்னு ஊரையே கூட்டுவேணாம் :)
    ஆனா என் பொண்ணு ரொம்ப விவரம் ஆறு வயசில் தோட்டத்தில் ஒரு கூட்டை அப்படி அள்ளி வந்து புக் பீரோக்குள்ள வச்சிருந்தா :) ஐ லைக் ஒன்லி பாப்பா பிள்ளையார் எறும்பு ..
    சித்ரா ..உங்க எறும்பு படங்கள் தத்ரூபம் ...நிஜம்மா ஒரு எறும்பு அசைஞ்ச உணர்வு அவ்வ்வ்வ்வ்வ்வ்

    அந்த விளையாட்டு இட்லி ஊத்தி சுடுவது :)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, அஞ்சுவால கண்டுபிடிக்க முடியல !!

      நீங்க சொல்வது புது விளையாட்டா இருக்கு ! எனக்குத் தெரியல அஞ்சு.

      உங்க பாப்பாவும் நம்மள மாதிரிதான் போலிருக்கே ! எனக்கும் பிள்ளையார் எறும்பு என்றால் பிடிக்கும். கடிக்காது என்பதாலோ!

      Delete
    2. அஞ்சு,

      எறும்பை வரவைக்க கரும்பை கடிச்சு வப்போம். வருவது பிள்ளையார் எறும்பாக இருந்தால் தப்பித்தோம். அவை வந்து திரும்பும்போது எல்லோர் வாயிலும் சிறு வெள்ளை வெளேர் கரும்புத் துண்டுடன் திரும்புவாங்க. வரிசை கருப்பு & வெள்ளையில் இருப்பதைப் பார்க்க அழகாக இருக்கும்.

      Delete
  3. எறும்பு புற்றுகளை அழகாக படம் பிடித்துள்ளீர்கள் தோழி.

    8, 9 ம் புகைப்படங்களில் உள்ளது கரையான் புற்று என்றெண்ணுகிறேன். கரையான்கள் தென்படுகின்றன.

    10,11 புகைப்படங்கள் : குழிகளில் இருந்து குள்ள நரி பிடிக்கும் விளையாட்டு விளையாடிய நியாபகம் வருகிறது. சரியா தோழி ?

    அழகான புகைப்படங்கள். மிகவும் இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்முகில்,

      ரெண்டுமேதான் போட்டி போட்டுக்கொண்டு வலைகளைத் தோண்டின. கரையான் என்பதைத்தான் நாங்க 'செல்' என்போம். புற்று என்றுதான் தலைப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் மறந்துபோச்சு.

      ஓ, இந்தக் குழியில இருந்து நீங்க குள்ளநரி பிடிச்சீங்களா ! நாங்க பன்னிக்குட்டி பிடிச்சோம். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முகில்.

      Delete
    2. ஆத்தீ !!! :) பன்னிகுட்டி நரிக்குட்டி எல்லாம் புடிச்சி விளையாடிநீங்களா :)) புது விளையாட்டா இருக்கே வெர்ரி இன்டரஸ்டிங் :)

      Delete
  4. சித்ரா எறும்பு வலை படங்களை இவ்வளவு அழகா எடுத்திருக்கிறீங்க. உங்க ரசனையும் தெரிகிறது. அவையளின் வரிசையா போகும் அழகே அழகுதான். ஊரில் இவைகளிடம் கடிவாங்காத நாட்களே இல்லை.
    கோலிக்குண்டு விளையாட்டு.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியசகி,

      ஆமாம், ஒரு நாளக்கு ஒரு தடவையாவது கடி வாங்கிடுவோம், இல்ல !! கடி வாங்காத ஆட்களும் இருக்கமாட்டார்கள். அந்த வரிசையைக் கலைக்க இடையில் ஒரு குச்சியை வைப்பது அல்லது கரும்பைக் கடித்து சக்கையை வரிசைக்குப் பக்கத்தில் வைத்து திசையைத் திருப்புவது ........ இப்படி ஏகத்துக்கும் செய்வது.

      எங்க ஊர்ல மண் சுவ‌ரின் ஓரத்துல இந்தக்குழி தானாவே வரும். அதுக்குள்ள‌ குட்டிக்குட்டியா பூச்சி இருக்கும். "பன்னிக்குட்டி வா வா"ன்னு பசங்க அதைப் பிடிப்பாங்க. குண்டு விளையாட்டைக் கூ ட விட மாட்டேஏஏஏன்ன்ன் !

      வருகைக்கு நன்றி ப்ரியசகி.

      Delete
  5. உங்களுக்கு ரொம்ப பொறுமை தான்.இது கோலி அல்லது குழியானை விளையாட்டு. குழியில் உள்ளதை நோண்டினால் இதுபோல வரும்

    ReplyDelete
    Replies
    1. சுபா,

      பொறுமைலாம் இல்லீங்க. சின்ன வயசிலேருந்து பார்த்த ஓர் உயிர். திடீர்னு அதைவிட்டு விலகி சிலபல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பார்க்கும்போது வரும் பாசப் பிணைப்புதான்.

      மண் சுவரின் பக்கத்துல இந்தக் குழி தானாவே வரும். இனிமேதான் இந்தக் குழியைத் தோண்ட வேண்டும். வாலுடன் உள்ள ஒரு குட்டிப் பூச்சி இதிலிருந்து வரும். ஒருவேளை உங்க குழியானை விளையாட்டும் இதுபோல்தான் இருக்குமோ ! வருகைக்கு நன்றி சுபா.

      Delete
  6. நல்ல ஒரு பதிவு! எறும்புகளின் வாழ்க்கை மிகவும் அற்புதமானது. வியக்க வைக்கக் கூடியய்து,. ஆன்ட்ஸ் படம் அதைத்தானேச் சொல்லுகின்றது! படங்களும் அருமை! - துளசிதரன், கீதா

    எனது மகன் சிறு வயதில், வீட்டின் பின் புறம் தினமும், சாக்கலேட் அல்லது சீனி சிறிது போட்டு அதை எறும்புகள் கொண்டு செல்வதைப் பார்த்து அவை தங்கள் வலைக்குள் சென்று சேமிப்பதை பார்த்து எனக்கு விள்க்கம் சொல்லிவிட்டுத்தான் பள்ளிக்குக் கிளம்புவான். ராணி எறும்பு, வேலைக்கார எறும்புகள் என்று அவற்றௌ அடையாளம் காட்டுவவான். பள்ளிக்கு அவனைக் கிளப்புவதற்குள் படாத பாடுதான்.....இதைப் பார்த்ததும் அது நினைவுகு வந்ததால்...இதைப் பகிர்ந்து கொண்டேன் - கீதா

    ReplyDelete
    Replies
    1. துளசிதரன், கீதா,

      பக்ஸ் லஃப்னு ஒரு கார்ட்டூன் படம். முடிஞ்சா அதையும் பாருங்க. சூப்பரா இருக்கும்.

      உங்க மகனின் ஆர்வத்தைப் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி.வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கீதா.

      Delete
  7. அருமையான படங்கள்.

    எரும்புக் கூடுகள் கரையான் புற்றுகளும் - நமக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  8. எறுப்பு புற்றை அழகாக படம் பிடித்துள்ளீர்கள். நானும் அதன் சுறுசுறுப்பு கண்டு வியப்பேன்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க R.Umayal Gayathri,

      நீங்களும் எறும்பைப் பார்த்து வியந்திருக்கிறீர்களா ! உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  9. ல..ள..ல..ள!!! :)
    சித்ராக்கா, முதல்ல எனக்கு இந்த லள ப்ரச்சனையைத் தீர்த்து வைங்கோ. பிறகு எறும்பு-கரையான் மற்றும் பூச்சி பிடிக்கப் போலாம். ;) :)

    அது எறும்பு வ"ளை" அல்லவோ?? ஐதிங்க் எறும்பின் வீட்டை எறும்பு புற்று என்று சொல்வதுதான் வழக்கம். எலி, பெருக்கான்(பெரிய சைஸில் இருக்கும் எலி போன்ற பிராணி, உங்கூர்ல என்ன பேர் சொல்வீங்களோ தெரில! ;)) போன்றவற்றின் இருப்பிடத்தைத்தான் "வளை" என சொல்வோம். "வலை" என்பது மீன் பிடி வலை, பறவைகள் பிடிக்கும் வலை, கம்பி வலை இவைதான் அல்லவா?? இதில எறும்பு வலை எங்ஙன வந்துச்சு? அவ்வ்வ்வ்!!!

    உங்க பிள்ளையார் எறும்பு-கரும்பு, ப்ளாக் அண்ட் வொயிட் எல்லாம் படிக்க அந்தக் காட்சிகள் அபப்டியே மனசுக்குள் ஓடுது. நல்லா ரசிச்சிருக்கீங்க எறும்ப! நான் இம்புட்டு ரசிச்சதீலீங்க! ;)

    ஊரில கருப்பு எறும்பு, சிவப்பு எறும்பு(சுள்ளெறும்பு), இந்த 2 வெரைட்டிலயே பொடி எறும்பு, கொஞ்சம் பெரீய்ய எறும்பு, நார்மல் சைஸ் எறும்பு இப்படி கிளைவகைகள், சுழுக்கை(கொஞ்சம் குண்டா டபுள் கலரில இருக்கும். கடிச்சுதுன்னா அப்படியே தடிச்சு, சில பல மணி நேரம் கடிச்சுதான் சரியாகும். வலி வேற!! அவ்வ்வ்), கட்டெறும்பு (இது பாவம்...கடிக்காது!, பெரிய சைஸில இருக்கும்) இப்படி பலவகை எறும்புகள் பார்த்ததுண்டு. ஆனா படமெல்லாம் எடுக்கும் அளவு கவனிக்கேல்ல.

    கடைசி குழிப் படங்கள் பழைய நினைவுகளை கிளறிவிடுது. எங்க கொட்டம்(மண் வீடு, சமையலறை), அதன் வெளிப்பக்க சுவற்றினருகில் இவை இருக்கும். இந்த குழியில இருக்க மண் மட்டும் அம்புட்டு நைஸா இருக்கும். ஹ்ம்ம்ம்...சரி நான் வாரேன், அப்புறமா...லள லள லள...லள லள லள..லள லள லள...

    ReplyDelete
    Replies
    1. மகி,

      எதுக்கு வம்புனு ல & ள வை விட்டுட்டு புற்றுக்குத் தாவியாச்சு.

      Delete
    2. ல, ள வை எப்படி மறந்தேன்! அவ்வ்வ்வ்.

      "நல்லா ரசிச்சிருக்கீங்க" ____ ஏதாவது வேலை கொடுத்திருந்தா இந்த ஆராய்ச்சியெல்லாம் நடந்திருக்காது மகி. அக்கா வீட்ல நல்லா சாப்ட்டு, வாசல்ல‌ உக்காந்து கத பேசி, அரட்ட அடிச்சு, பத்தாததுக்கு மழை வேறு, நான் நினைக்குமுன்னே 'டீ' வேறு, ஆஹா, ஆ ஹா ஹா ....... நெனச்சுப் பார்த்தா மூன்று மாசத்துக்கு முன்னால இருந்த சித்ரா மேல எனக்கே ஒரு பொறாமைதான்.

      "சுழுக்கை" __ புது பேரா இருக்கே. எங்க ஊர் பக்கம் கருப்பு எறும்பிலே ஒன்னு ஒல்லியா, நீளமா இருக்கும். அது கடிச்சதுன்னா அவ்ளோதான். படமெடுக்கலைன்னாலும், படமெடுக்கும்(!) அளவுக்கு இவ்ளோ விஷயம் வச்சிருக்கீங்களே.

      கொட்டம் _____ இதுகூட இப்போதான் கேள்விப்படுறேன். ஆமால்ல, அந்த மண்ணு நைஸாதான் இருக்கும்.

      Delete
  10. ஹாஹாஹா...! மேடம், இந்தக்குழியை பார்த்தால், ஏதோ போன ஜென்மத்து ஞாபகம் வந்தது போல் இருக்கிறது. இந்தக்குழிக்குள் இருக்கும் பூச்சி, கூம்புபோல் அமைத்துக் கொண்டு வெளியில் தெரியாமல் பதுங்கியிருக்கும். நைசாக இருக்கும் கூம்பு மண்ணில் சரிந்து விழும் சிறு பூச்சிகளை விழுங்கி விடும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த பூச்சியை வெளியில் எடுப்பது அந்தக்காலத்து சிறுவர் சிறுமியரின் சுவாரஸ்யமான விளையாட்டு. இந்தக்காலத்து குழந்தைகளுக்கு இந்தக்குழிகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு குறைவுதான்.

    ReplyDelete
    Replies
    1. கூம்பு மாதிரி இருக்காதுங்க‌, குழியாகத்தான் இருக்கும். அதில் உள்ள பூச்சிகளைப் பிடித்து வைத்துக்கொண்டு விளையாடுவார்கள். பிடிப்பவர்களின் தைரியத்தை வியந்து, வேடிக்கை பார்ப்பதோடு சரி.

      நான் புகைப்படம் எடுத்த‌போது எல்லா குழிகளும் அப்படியேதான் இருந்தன. சிறுவர்கள் டிவி, கணினியில் மூழ்கியிருப்பதால் இந்தப் பூச்சிகள் தப்பித்தார்கள்.

      Delete