Thursday, December 4, 2014

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்


                                                                        ராஜ கோபுரம்

கோயிலுக்குள் காமிரா அனுமதி இல்லை என்பதால் வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டேன். எவ்வளவு முயன்றும் அலைபேசியில் முழுதாக எடுக்க முடியவில்லை.

                                                ராஜ கோபுரம் _ பக்கவாட்டிலிருந்து

இனி கோயிலின் உள்ளே செல்வோமே. நேரமின்மையால், அவசரத்தில் எடுத்ததால் படங்கள் வரிசையின்றி இருக்கும்.

                           இங்கே நின்று மலையைப் பார்த்து ஒரு பெரிய கும்பிடு

                                                               கம்பீரமான மலை

கோயிலின் உள்ளே போகும்போதே பார்த்தோம், யானை வெளிநாட்டவர் உட்பட எல்லோருக்கும் ஆசீர்வாதம் கொடுப்ப‌தை. நடையை சாத்திவிடும் நேரம் என்பதல் படமெடுக்க நேரமில்லை. அப்பனை தரிசித்துவிட்டு வெளியே வந்தபோது ஓய்வெடுக்க(!) அழைத்து சென்றதை மட்டுமே என்னால் படமாக்க முடிந்தது. இவ்வளவு பெரிய யானையைக் கட்டிவைத்து , பணியவைத்து,  ...... !

                                        கம்பிவேலி போடப்பட்டுள்ள தீர்த்தக் குளம்

1989 ல் இருந்து திருவண்ணாமலைக்குப் போவதும், தீபத்தின்போது மலையை சுற்றுவதும் என 2000 வரை சென்றுவந்தேன். 99 தீபத்தின்போது அண்ணாமலையாரிடம், "அடுத்த வருட தீபத்திற்கெல்லாம் நான் அமெரிக்காவில் இருக்க வேண்டும்" என்ற கட்டளையுடன்தான் மலையைச் சுற்றினேன்.

அதன் காரணம் முதல் நாள்தான் வீட்டுக்காரர் அமெரிக்கா புறப்பட்டார். ஏர்போர்ட்டிலிருந்து நேராக சகோதரி வீட்டிற்கு திருவண்ணாமலைதான் போனோம். சோகத்தில் இருந்த நான் ப்ரீஃப்கேஸை ஆட்டோவிலேயே விட்டுவிட்டு இறங்கிவிட்டேன்.

"இப்போ என்ன செய்வது?" என சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆட்டோக்காரர் திரும்பிவந்து கொடுத்துவிட்டு போனார். மறக்க முடியாத நபர்.

அடுத்த வருட(2000) தீபத்தின்போது ? ..... மீண்டும் அங்கேயேதான் மலையைச் சுற்றி வந்தேன். கொஞ்சமல்ல, இந்தமுறை நிறைய 'கர்ர்ர்ர்ர்'ருடன்.

அதன் பிறகு இங்கே வந்தாச்சு. அதிலிருந்து ஊருக்குப் போனால் 'பௌர்ணமிக்காவது மலையைச் சுற்ற வேண்டும்' என நினைப்பதோடு சரி. மாட‌ வீதியை மட்டும் வலம் வந்து வீட்டுக்கு வந்துவிடுவேன்.

இந்த வருடம் அதுவுமில்லை . அடித்துப் பிடித்து கோயிலுக்கு ஓடினேன். மதியம் 11:50 க்குத்தான் போகும் வாய்ப்பு. நடையை சாத்திவிடக்கூடும் என்பதால் நேராக மூலஸ்தானம், அம்மன் சந்நிதி. உடனே வீட்டுக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் என்னால் பொறுமையாகக்கூட படங்கள் எடுக்க முடியவில்லை. கோயில் தரிசனம் கிடைத்த சந்தோஷத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.

முன்பு ஒருமுறை வீட்டுக் குட்டீஸ்களுடன் மலையில் 2 கிமீ தூரம்வரை  ஏறி அங்கிருந்த ஒரு குளத்தைப் பார்த்துவிட்டு திரும்பிவிட்டோம்.

மலையைச் சுற்றும்போது அடிஅண்ணாமலையார் கோயிலுக்கும் சென்று வருவோம். வழி நெடுகிலும் உள்ள அஷ்ட லிங்கங்களையும் தரிசிப்போம்.

அவ்வாறு வரும்போது ஒரு இடத்தில் குறுகலான சிறு வழியில் நுழைந்து (விருப்பமுள்ளவர்கள் மட்டும்) வர வேண்டும். அப்போது நம்முடைய கவனம் முழுவதும் எப்படியாவது வெளியில் வந்துவிட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அதனால் பக்கவாட்டில், சுவரில் உள்ள சிவனின் தரிசனத்தைப் பெற மறந்துவிடுவோம்.

கடைசியாக உள்ள ஈசான லிங்கம் வரும்போது எல்லோருமே சோர்ந்து விடுவோம். அதுதான் நமது ஆயுளின் கடைசிக் காலமாம். அப்படி சொல்வதாலோ என்னவோ எனக்கு அதன்பிறகு நடக்கவே சிரமமாக இருக்கும். எங்கும் மயானமாக இருக்கும்.

அடிக்கடி கோயிலின் உள்ளே ஒரு இடம் விடாமல் சுற்றியிருக்கிறேன். தரிசனம் முடித்து அங்கேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருப்போம்.

 விசேஷ தினங்களில் திருக்கோயிலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு மாலை நேரத்தில் பேருந்தில் வர வேண்டும். அப்போதுதான் மின்விளக்குகளின் அலங்கரிப்பால் கோயில் கோபுரங்கள் ஜொலிப்பதைப் பார்க்கலாம். ஏறக்குறைய இரண்டு வருடங்கள் அவ்வாறு வந்திருக்கிறேன்.

வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறையேனும் திருவண்ணாமலைக்குச் சென்று அண்ணாமலையாரை தரிசித்து வருவோமே !

மலரும் நினைவால் பதிவு நீண்டுவிட்டது. அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் !

சொல்ல மறந்திட்டேனே, கோயிலில் 'பாதாள லிங்கம்' உள்ளது. சில படிக்கட்டுகள் இறங்கி கீழே செல்ல வேண்டும். உடன் யாராவது வந்தால் தைரியமாகப் போவேன்.

22 comments:

 1. அனைத்து படங்களும் அருமை...

  இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தனபாலன்.

   Delete
 2. சித்ரா திருவண்ணாமலைப்பதிவு மிக்க நன்றாக உள்ளது. ஒவ்வொரு இடமும்,படங்களும்,மலரும் நினைவுகளும், மிகவும் போற்றத்தக்கதாக உள்ளது.
  நானும் ஜூன் மாதம் காரில் போய்விட்டுத் திரும்பினேன். உன்னிடமுள்ளபோட்டோக்கள் போன்றே.
  ஸன்நதித்தெரு நாங்கள்,பிறந்து வளர்ந்த இடம். ஒவ்வொன்றும் உருமாறி இருந்தாலும் நினைவுகள் மாரவில்லை. ஓடாத குறையாக ஒவ்வொன்றையும் சொல்லும் போது
  அம்மாவிற்கு தெம்பு வந்துவிட்டது. நடைகூட வேகம். என்று என்பெண் சொன்னாள்.
  படங்கள் யாவும் ஏறத்தாழ இதேமாதிரி நானும் எடுத்து வந்தேன்.
  திருவண்ணாமலை மறுபடியும் தரிசிக்க வா,வா ென்று அழைப்பதுபோல உள்ளது.
  ஸந்தோஷம் பெண்ணே. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. காமாக்ஷிமா,

   நான் ஆக்ஸ்ட் மாதத்தில் இரண்டு முறை போனேன். தி.மலைக்குக் கிளம்பும்போதே உங்கள் ஞாபகமும் வந்தது. பிறந்து வளர்ந்த இடம் எனும்போது பாசம் அதிகமாகத்தானே இருக்கும்.

   அடுத்த முறை சென்னை வந்தால், முடிந்தால், இன்னொரு தடவை போய்ட்டு வாங்கம்மா. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிம்மா. அன்புடன் சித்ரா.

   Delete
 3. நானும் இந்தியா செல்லும்போது இக்கோவிலுக்கு செல்ல விருப்பப்படுவேன்.ஆனால் நடக்கவில்லை. இக்கோவிலின் சிறப்புகளை அறிந்திருக்கிறேன் சித்ரா.
  அவசரமா எடுத்திருந்தாலும் படங்கள் அருமை. இன்றைக்கு பொருத்தமா பகிர்வு போட்டிருக்கிறீங்க.
  இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ப்ரியசகி,

   ஓ, அப்படியா ! போனால் கோயில், ரமணாஸ்ரமம், பக்கத்திலுள்ள சாத்தணூர் அணை என சிலவற்றையும் பாத்துட்டு வாங்க. முன்பெல்லாம் ஃப்ரீயா எப்போ வேண்டுமானாலும் கோயிலுக்குள் நேரா போயிடலாம். இப்போ அங்கங்கே கம்பி போட்டு, காசாக்கிவிட்டார்கள்.

   தீபம் என்றதும் கோயில் படங்களைப் பகிர்ந்துகொள்ளலாமே என்ற எண்ணம்தான் ப்ரியசகி. வாழ்த்துக்களுக்கும் நன்றி.

   Delete
 4. வணக்கம்

  நாங்களும் சென்று வந்த ஒரு உணர்வுதான்... படங்கள் எல்லாம் அழகாக உள்ளது...
  இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ரூபன்.

   Delete
 5. கோபுர தரிசனமும், மலையைக் கண்டதும் மகிழ்ச்சி. சக்தி வாய்ந்த கோயில். சித்தர்கள் நடமாடும் மலை. அப்பாவுடன் கல்லூரிப் பருவத்தில் சென்று வந்திருக்கிறேன். ரமணர் ஆசிரமம் எல்லாம் சென்றோம். நினைவுகளை மீட்ட பதிவு. நன்றி.

  கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்.

  தென்னாடுடைய சிவனே போற்றி!
  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆதி,

   நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததில் மகிழ்ச்சி. கிரிவலம் வரும்போது ரமணாஸ்ரமம் சென்று வருவோம். உங்கள் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டதில் சந்தோஷம். வாழ்த்துக்களுக்கும் நன்றி ஆதி.

   Delete
 6. கார்த்திகை தினத்தன்று அண்ணாமலையார் பதிவு மிகவும் அருமை. பாதாள லிங்கம் உள்ளே செல்ல அனுமதிக் கிடையாது என்று நினைக்கிறேன். அல்லது ஒருவேளை நான் சென்ற நாளன்று பூட்டி வைத்திருந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் படியில் உட்கார்ந்து பாதாள லிங்க தரிசனம் பெற்றோம்..

  ReplyDelete
  Replies
  1. ஓ, அப்படியா, ஒருவேளை நீங்க சொல்வதுப்போலவே இருக்கலாம். இந்தமுறை பெயர் பலகையைப் பார்த்ததோடு சரி. உள்ளே போகவில்லை. ரொம்ப நாள்வரை அங்கு போக பயப்படுவேன். பிறகு ஒருமுறை அப்பாதான் கூட்டிச் சென்றார். அந்த இடம் பார்த்ததும் இந்த நினைவும் வந்தது. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

   Delete
 7. மூன்று நான்கு முறை சென்றதுண்டு. ஒரு முறை சைக்கிளில் கிரிவலம் - ஒரு முறை அலுவலக மகிழ்வுந்தில்!

  மனதுக்கு மிகவும் பிடித்த கோவில். சில வருடங்களாக செல்ல முடியவில்லை. செல்ல வேண்டும்!

  ReplyDelete
  Replies
  1. ஓ, கிரிவலம் வந்தீங்களா ! முன்புபோல் இல்லாமல் இப்போது கோயிலினுள் சுத்தமாக இருக்கிறது.

   Delete
 8. ஓ, உங்களை அமெரிக்காவுக்கு அனுப்பியதில் அண்ணாமலையாருக்கும் பங்கு இருக்கிறதா? மகிழ்ச்சி மகிழ்ச்சி மேடம்!

  ReplyDelete
  Replies
  1. ஆறுமுகம்,

   பின்னே, எந்நேரமும் வேண்டுகோள் விடுத்தால் அப்பன் என்ன செய்வார்?

   உங்க பின்னூட்டம் ரசிக்கும்படி இருக்கிறது.

   Delete
 9. உங்கள் ப்ளாகை பார்த்த்தும் இந்த காட்சி, திருவண்ணாமலை நேரடி ஜோதி தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தது, உங்களை நினைத்துக்கொண்டோம். பார்த்தீர்களா என்று தெரியவில்லை.

  வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. ராஜேக்ஷ்,

   நேரடிக் காட்சியைப் பார்க்கவில்லை. ஆனால் மகாதீப வீடியோவை யு டியூபில் பார்த்தோம். எங்களை நினைவில் வைத்துக்கொண்டதற்கு நன்றிங்க‌.

   Delete
 10. நானும் ஒருமுறை திருவண்ணாமலை சென்றிருக்கிறேன். பிள்ளை கைக்குழந்தை அதனால் கிரிவலம் செய்ய முடியவில்லை. கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டோமே என்றிருந்தது இன்றைக்கும் அப்படியே!
  அழகான படங்கள். கோபுரமும் மலையும் வெகு கம்பீரம்!

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பை இன்னொரு தரம் உண்டாக்கிக்கொள்வோமே. எனக்கும் கிரிவலம் வர ஆசைதான். சித்ரா பௌர்ணமியா பார்த்து நீங்க போகும்போது சொல்லுங்க, நானும் அங்கிருந்தால் நிச்சயமாக சேர்ந்துகொள்கிறேன். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

   Delete
 11. மனதிற்கு மிகவும் பிடித்த கோயில். செல்ல முடியவில்லை! அருமையான படங்கள் கண்டு மகிழ்ந்தோம்....நன்றி சகோதரி!

  ReplyDelete