Friday, December 4, 2015

மொழினா, கிடைத்துவிட்டாள் !


தூக்கம் தெளிந்துவிட்டாலும் குளிருக்கு இதமாகப் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு' "இன்னும் என்ன தூக்கம் ? " என‌ யார் வந்து கேட்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில் மீண்டும் ஒரு குட்டித்தூக்கம் போடலாம் என நினைக்கும்போதே தொலைபேசி அழைத்தது.

கேட்க ஆளில்லை, ஆனால் அழைக்காமல் இருப்பார்களா ? அழைப்பு தொலைபேசி வழியாக வந்தது.

'ஹ்ம்ம்ம்ம் ? இவ்வளவு காலையில் யாராக இருக்கும் ?' என நினைத்துக்கொண்டே இருக்கையில் ஏதோ ஒரு பெயரைச் சொல்லிமுடித்து, தன்னை எடுக்க ஆளில்லை என்றதும் வாய்ஸ் மெயிலுக்குப் போனது.

"மொழினா, உங்கிட்ட கொஞ்சம் பேசணும், போன எடு, போன எடு" என ஒரு அம்மாவின் குரல் ஒலித்து முடித்தது.

"ஹ்ம்ம்ம்ம் ? மொழினா வந்தால் பேசிக்கட்டும்" என நான் தூக்கம் கலைந்த கடுப்பில் எழுந்து டீ போட போனேன்.

'மரினா' ( Marina )  அவர்களின் உச்சரிப்பினால் 'மொழினா'வாகி இருக்கிறாள் என்பது என் எண்ணம். காலர் ஐடி ல் அப்படித்தான் பதிவாகி இருந்தது. மொழினாவின் பெயரில் காலர் ஐடி வைத்ததிலிருந்து அவள் இவர்களின் பெண் அல்லது பேத்தியாக இருக்க வேண்டும் !

மீண்டும் தொலைபேசி சத்தம் போட்டது. அதே எண்ணிலிருந்து, அதே பெயரில் என்றதும் கொஞ்சம் எரிச்சலுடன் கண்டுகொள்ளவில்லை.

அன்று நண்பகல் மீண்டும், "மொழினா ! மொழினா ! நாங்க உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும், ஃபோன எடு" என்று மீண்டும் வாய்ஸ்மெயில் வைத்தார் அந்த அம்மா.

வாய்ஸ்மெயில் முடியும் தருணத்தில் ஒரு ஆண் குரலும் சேர்ந்துகொண்டது. குரல் யாரையோ திட்டிக்கொண்டிருந்தது.

சரி யாரோ, யாரிடமோ பேச வேண்டும்போல் தெரிகிற‌து, நாம் ஏன் அதைபற்றி யோசிக்க வேண்டும் என நினைத்து விட்டுவிட்டேன்.

ஆனாலும் போனை எடுத்து "அப்படி யாரும் இங்கில்லை" என சொல்லியிருக்கலாமோ என நினைக்குமுன்னே ஃபோன்.

'நல்லவேளை, மீண்டும் ஃபோன் செய்தார்களே' என நினைத்து, நல்ல பெண்ணாக‌, போனை எடுத்து "ஹலோ" சொன்னதுதான் தாமதம், "மொழினா மொழினா ! முக்கியமான விஷயத்த நாங்க உங்கிட்ட பேசணும். போன வச்சிடாதே" என அந்த அம்மா கெஞ்சினார்.

அவர் சொல்லும்போதே பின்னாலிருந்து அந்த ஐயா செம திட்டு திட்டினார், வேறு யாரை ? மொழினா'வைத்தான் !

"மொழினா என யாரும் இங்கில்லை, ஸாரி" என சொல்லி போனை வைத்தேன். அந்த அம்மாவும் ஸாரி சொன்னார். எனக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

அடுத்தநாள் காலை மீண்டும் அதே எண்ணிலிருந்து போன் & வாய்ஸ்மெயில் + ஐயாவின் திட்டுடன்.

போனை ஸ்பீக்கரில் போட்டிருக்கிறார்கள் என்பது ஐயாவின் திட்டுகளை கேட்க முடிந்ததை வைத்து ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது.

"அய்யா சாமி, ஆள விடுங்க" என நான் கண்டுகொள்ளவில்லை.

"மொழினா சீக்கிரம் லைனுக்கு வந்திடு, இல்லாட்டி ஃபோன் போட்டே என்னை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்கள்" என மனதளவில் 'மொழினா'வுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன்.

இந்த பிரச்சினை ஒருநாள், ரெண்டுநாள் இல்லை, ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்தது.

ஒருநாள் "இத சால்வ் பண்ண முடியலயா ? இன்னிக்கு நான் எடுக்கிறேன்" என ஆத்துக்காரர் களத்தில் குதித்தார்.

வழக்கம்போல அன்றும் போன் வந்தது. இவர் எடுத்து பொறுமையா எல்லாவற்றையும் விளக்கி, அதற்கு அந்த அம்மா ஸாரி சொல்லி, 'அப்பாடா ஒரு வழியா இனி நிம்மதியா இருக்கலாம்' என நினைக்கும்போதே ...... அவ்வ்வ்வ்வ் ....... மறுபடியும் அவர்களிடமிருந்தே போன்.

இவர் ஆஃபீஸுக்கு போகும் சாக்கில் எஸ்கேப். எனக்கோ செம கடுப்பு. அவர்களாகவே, தானாக நிறுத்தும்வரை இனி எடுக்கவே கூடாது என முடிவெடுத்தேன்.

அம்மா மொழினாவை போனை எடுக்கச் சொல்லுவதும், ஐயா பின்னாலிருந்து திட்டுவதுமாக நிறைய வாய்ஸ் மெயில்கள்.

கடைசியாக ஒரு நாள், என்னுடைய முடிவை மாற்றிக்கொண்டு, எடுத்து, " ஸாரி நீங்க அடிக்கடி போன் செய்வது எனக்குத் தொந்தரவா இருக்கு, எண்களை சரி பார்த்துட்டு செய்யுங்க" என்றதும் அம்மா தனது மிகுந்த வருத்தத்தைத் தெரிவித்தார். ஐயா வழக்கம்போல திட்டிக்கொண்டிருந்தார்.

மீண்டும் போன். "இப்போதானே சொல்லிட்டு வச்சேன், அதுக்குள்ளேயேவா " என எரிச்சலுடன் அழுகையும் சேர்ந்து வந்தது, ஆனாலும் எடுத்தேன்.

 என்ன ஆச்சரியம் ! அந்த அம்மாதான் சொல்ல ஆரம்பித்தார் !

'மொழினா என நினைத்து என்னைத் தொந்தரவு செய்துவிட்டதாகவும் (இதைத்தானேம்மா இவ்வளவு நாளும் சொல்லிக்கொண்டிருந்தேன்), தனக்கு 'மொழினா'வின் தொலைபேசி எண் கிடைத்துவிட்டதாகவும், இவ்வளவு நாளும் தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கச் சொல்லியும், இப்போதுகூட மதியம் நான் சிறு ஓய்வு எடுக்கும் நேரத்தில் தான் தொந்தரவு செய்துவிட்டதாகவும் சொல்லி மன்னிப்பு கேட்டுவிட்டு, இனி தன்னிடமிருந்து எந்த தொலைபேசி அழைப்பும் வராது' என கையில் அடித்து சத்தியம் செய்யாத குறையாக பேசிவிட்டு வைத்தார்.

அவர் போனை வைக்கும் சமயம் ஐயாவின் குரல் ........ ஏதோ சொல்ல வருவதுபோல் தெரிந்தது. இவரும் 'ஸாரி' சொல்ல முற்படுகிறாரோ என நினைக்கும்படி இருந்தது குரல். நல்லவேளை, இந்த முறைதான் 'மொழினா'வுக்குத் திட்டு கிடைக்கவில்லை.

"அப்பாஆஆஆடா, ஆள விட்டாங்களே " என்றிருந்தது எனக்கு. என் சந்தோஷம் ஒரு நொடிகூட நீடிக்கவில்லை.

மீண்டும் போன் !! ஐய்ய யயை யையோ,  தாங்க முடியல ! மறுபடியும் ஆரம்பத்திலிருந்தேவா :(((

எது எப்படியோ போகட்டுமென எடுத்து "ஹலோ" சொன்னதும் ........ இவ்வளவு நாளும் பின்னாலிருந்து குரல் கொடுத்த‌ ஐயா இப்போது நேரடியாக லைனுக்கு வந்தார்.

"தொலைபேசி எண்ணை  நாங்கள் தவறாக சேமித்து வைத்துக்கொண்டு சில நாட்களாக உனக்கு மிகுந்த தொந்தரவு கொடுத்து விட்டோம், ரொம்ப ரொம்ப‌ ஸாரி" என்றதும் மனம் கணத்துவிட்டது.

ஏன் நமக்கு இவ்வளவு எரிச்சல் ? அவர்களின் வயிற்று வலி, கத்தினார்கள், அடங்கியதும் நிறுத்திவிட்டார்களே" என என் மீதே எனக்குக் கோபம் வந்தது.

இவர்களால் எங்கள் வீட்டின் வாய்ஸ்மெயில் பாக்ஸ் நிரம்பி வழிந்தது.

எல்லாவற்றையும் டெலீட் பண்ணிக்கொண்டே வரும்போது, 'சரி எதற்கும் இருக்கட்டும்' என‌ அவர்களின் ஒரு வாய்ஸ்மெயிலை மட்டும் அப்படியே விட்டுவிட்டேன் !

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
'நலமுடன் இருக்கிறேன்' என்பதற்காகத்தான் இந்தப் பதிவு ! நலன் விசாரித்த நல்லுள்ளங்களுக்கு நன்றி :)

இரண்டு மாதங்களாக வீடு தேடும் படலம் (வாடகைக்குதாங்க‌), ஒருவழியா அது முடிந்ததும் இப்போது பொருள்களை எல்லாம் பேக் பண்ணி, வீட்டை சுத்தம் செய்து ஒப்படைத்துவிட்டு ...... இங்குள்ள குப்பைகளை அள்ளிக்கொண்டுபோய் அங்கும் குப்பையாக்கி முடிக்கும்வரை வலைப்பதிவு பக்கம் வருவது கஷ்டம். க்றிஸ்மஸ் சமயத்தில் உங்கள் எல்லோருடைய பக்கங்களுக்கும் வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் ... சித்ரா :)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Thursday, October 8, 2015

பெரியம்மா சுட்ட தோசை !!


இன்றைக்கும் கௌரி தோசை ஊற்றும்போது அவள் அம்மாகூட அவளின் நினைவுக்கு வரமாட்டார், எதிர் வீட்டு 'பெரியம்மா'தான் வந்துவந்து போவார்.

கௌரி சின்ன பிள்ளையா இருந்தப்போ அவளின் வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு பெரியம்மா இருந்தார். ஆறோ ஏழோ ஆண் பிள்ளைகள். வீட்டில் போதிய வருமானம் கிடையாது, நிலம் கொஞ்சமாகத்தான் இருந்தது.

அதனால் அந்த பெரிய‌ம்மா வீட்டு வாசலிலேயே இட்லி & தோசைக் கடை போட்டுவிட்டார். காலையில் மட்டுமே வியாபாரம் நடக்கும்.

அந்தப் பெரியம்மாவால், இந்தக் கடையில் வந்த‌ வருமானத்தில் சேமிக்க முடிந்த‌தோ என்னவோ, அந்த அண்ணன்களுக்கு ஓரளவுக்கு சாப்பாடு கொடுத்திருப்பார் என நம்பலாம்.

அந்த அண்ணன்களில் கொஞ்சம் பெரியவர்களாக இருப்பவர்கள் தோட்டத்து பக்கமுள்ள ஒரு பெரிய முள்வேலி மரத்தை அடியோடு வெட்டி இழுத்து வந்து ஒரே அளவாக நறுக்கி, நுனியில் உள்ள குச்சிகளைத் தனியாகவும், அடிப்பகுதியில் கொஞ்சம் பருமனாக உள்ள குச்சிகளைத் தனியாகவும் வாசலில் ஒரு ஓரமாக வரிசையாக பரப்பி விடுவர்.

அவை வெய்யிலில் தினமும் காய்ந்துகாய்ந்து விறகாகி எரியத் தயாராகிவிடும்.

வயலுக்குப் போய் திரும்பும் பெரியப்பா வாழையிலைக்கு பதில், பெரிய வாய்க்காலில் ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் முளைத்திருக்கும் தாமரையைப் போன்றே படர்ந்திருக்கும் ஒரு கொடியின் இலைகளைக் காலையிலேயேப் பறித்து வந்து, கழுவித் தண்ணீரை வடிய வைப்பார்.

எல்லோரது வீட்டைப் போலவே அவர்களுக்கும் பெரிய வாசல் இருந்தது . வாசலில் மண்ணாலான ஒரு ரெட்டை அடுப்பும், ஒரு ஒத்தை அடுப்பும் இருக்கும்.

காலையிலேயே ரெட்டை அடுப்பில் ஒவ்வொரு பக்கத்துக்கும் ஒன்றாக ம‌ண் தோசைக்கல் காய்ந்துகொண்டிருக்கும். ஒத்தை அடுப்பில் அலுமினிய இட்லி குண்டான் இருக்கும்.

அந்த முள் விறகு சொல்லி வைத்தாற்போல் நின்று, நிதானமாக எரியும். லேசான ஒரு பரபரப்பு அங்கே தென்பட ஆரம்பிக்கும்.

பெரியம்மா இட்லியை ஊற்றியதோ, வெந்ததும் எடுத்ததோ எதுவும் அவளுக்கு நினைவில்லை. ஆனால் இரண்டு தோசை கல்லிலும் மாறிமாறி தோசை ஊற்றி திருப்பிப்போட்டு எடுத்து அடுக்கியதுதான் இன்னமும் அவளின் நினைவில் இருக்கிறது.

தோசை மெத்து மெத்தென்று, கொஞ்சம் சிவந்தாற்போல் இருக்கும்.

தொட்டு சாப்பிட சிவப்பு மிளகாய் & பொட்டுக்கடலை வைத்து அரைக்கப்பட்ட சிவப்பு நிற சட்னியும், பச்சை மிளகாய் & பொடுக்கடலை வைத்து அரைக்கப்பட்ட பச்சை நிற சட்னியும் தயாராய் கிண்ணங்களில் இருக்கும்.

சட்னி கெட்டியா இருக்காது, தண்ணீராகத்தான் இருக்கும். சட்னி முழுவதும் தாளித்த கடுகு நிறைய மிதந்துகொண்டு இருக்கும்.

நிறைய பேர் சாப்பிட வருவார்கள். இலையில் தோசையை வைத்து, பக்கத்தில் சட்னியை ஊற்றிக் கொடுத்ததும் ஆர்வமாய் சாப்பிடுவார்கள். அவர்களுக்கு மண் தரைதான் இருக்கை.

இவை எல்லாவற்றையும் தன் வீட்டுத் திண்ணையில் இருந்து நோட்டமிட்டுக்கொண்டிருப்பாள் அக்குட்டிப் பெண்.

உள்ளிருந்து அம்மா 'சாப்பிட வா சாப்பிட வா 'என எத்தனை முறை கூப்பிட்டாலும் கௌரியின் காதிலேயே விழாது.

கிட்ட வந்து 'வா' என்றதும் "அதுதான் வேண்டும்" என எதிர் வீட்டைத்தான் கையால் காட்டுவாள்.

'சரி வா நான் சுட்டுத் தரேன்' என்றாலும் பிடிவாதமாக மறுத்துவிடுவாள். அவளின் பிடிவாதம்தான் பேர்போன ஒன்றாயிற்றே.

அம்மா ஒரு ஆளைத்தேடி, அனுப்பி, வாங்கி வரச்சொல்லி சாப்பிட‌க் கொடுப்பார். கூடவே கொஞ்சம் திட்டும் விழும்.

அந்த தோசையும், பெரியம்மா கொடுத்த‌ (தண்ணீர்)சட்னியும் சேர்ந்த சுவை, வீட்டில் அம்மா சுட்டுத்தரும் பஞ்சுபஞ்சாய் இருக்கும் இட்லியிலும், மொறுமொறு தோசையிலும், கெட்டி தேங்காய் சட்னியிலும், சுவையான சாம்பாரிலும் அவள் பார்த்ததே இல்லை.

அவ்வளவு ஏன், இப்போது அவள் சுடும் இந்த தோசையிலும் அது கிடைக்கவில்லையாம் !

Wednesday, October 7, 2015

போலாம் ரைட் !!

புதுக்கோட்டை ! புதுக்கோட்டை ! புதுக்கோட்டை ! சீக்கிரம்சீக்கிரம், இன்னும் மூனே மூனு நாள்தான் பாக்கி இருக்கு, வர்றவங்களாம் வந்து பேருந்துல‌ ஏறுங்க, வலைப்பதிவர் திருவிழாவுக்குப் போகலாம் !!

என‌க்கும் இந்த வண்டியில ஏறி புதுக்கோட்டை போய் இறங்க ஆசைதான், ஒரு முறையேனும் இந்த வாய்ப்பு வராமலா போயிடும் !!


வழக்கம்போல் ஊரில் நடக்கும் வீட்டு விசேஷங்களில் நேரில் சென்று கலந்துகொள்ள இயலாத நிலைதான் இந்த நம்முடைய வலைப்பதிவர் திருவிழாவிலும் ஏற்பட்டிருக்கிற‌து என்னைப்போன்ற ஒருசிலருக்கு. மனதைத் தேற்றிக்கொள்வோம் !

வலையுலகம் முழுவதும் விழா பற்றிய பேச்சாகவே இருப்பதால் விழா ஏகத்துக்கும் களைகட்டியிருப்பது தெரிகிறது.

விழா சிறப்பாக நடைபெற இரவுபகல் பாராமல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கும், விழா முடியும்வரை இருந்து செய்யப்போகும் விழாக் குழுவினருக்கு பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் !

Sunday, September 27, 2015

எங்கள் வீட்டுத் தோட்டம் ___ மணத்தக்காளி கீரை !


சென்ற மாதத்தில் ஒருநாள் நம்ம ஊர் கடையில் அதிசயமாக மணத்தக்காளி கீரை வந்திருந்தது. வாங்கிவந்து கீரையை ஆய்ந்துகொண்டு,  தண்டுகளை (வேரில்லாதவைதான்) சும்மா 'பார்ப்போமே' என நட்டு வைத்தேன்.

ஆஹா, அடுத்த நாளே 'துளிர்த்துவிடும்' என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.

                                           கபகபனு இலைகள் பெரிதாகின.

இனி நினைத்த மாத்திரத்தில் வீட்டிலிருந்து பறித்துக்கொள்ளலாம் என சந்தோஷப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே .................

......................... கருப்பு எறும்புகள் வர ஆரம்பித்துவிட்டன.  இலைகள் சுருண்டு, அதன் அடிப்பகுதியில் கருப்புநிற முட்டைகள் இருந்தன.  இதுதான் இலைப்பேனோ !!

தொட்டியில் பூண்டு நட்டு வச்சிருக்கேன். அது முளைத்து வருவதற்குள் பூச்சி வந்துவிட்டதே. பூச்சி விழுந்த, சுருண்ட இலைகளை எல்லாம் பறித்து கசக்கி குப்பையில் போட்டுவிட்டு,  .................

........................ பூண்டு அரைத்து ஒவ்வொரு இலையின் மேலும், பின்னாலும் தடவி விட்டேன். இப்போது 'பரவாயில்லை' எனும் அளவிற்கு இலைகள் நன்றாக உள்ளன. மேலும் பூக்களும் பூக்க ஆரம்பித்துவிட்டன.

காய் காய்த்து, பறித்ததும் நிச்சயம் இங்கே எடுத்து வருவேன் :)

Wednesday, September 23, 2015

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை !

'இந்த வருடம் பத்தாம் வகுப்பு மாணவிகள் தஞ்சாவூருக்கு சுற்றுலா போகிறார்களாம்' என்ற ரகசியம் கசிந்ததும், முதலில் நினைவுக்கு வந்தது தஞ்சாவூரு தலையாட்டி பொம்மைதான்.

என்னுடைய‌ சின்ன வயசுல அப்பா தஞ்சாவூர் போனபோது இந்த பொம்மையை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார். பல வருடங்களுக்கு அது என்னுடைய விளையாட்டுப் பொருள்களுடன் ஒரு அங்கமாக‌ இருந்தது.

முறையான அறிவிப்பு வந்ததும் கூடிய சீக்கிரமே பத்து ரூபாயைக் கட்டிவிடுவதாகச் சொல்லி முதல் ஆளாக என் பெயரைப் பதிவு செய்துவிட்டேன்.

விடுதி சலுகையால் எங்களுக்கெல்லாம் பத்து ரூபாய். வெளியில் இருந்து வரும் மாணவிகளுக்கு இருபது ரூபாய்.

அப்பாவுக்குக் கடிதம் எழுதி விவரங்களைச் சொல்லி ..... வரவழைத்து ...... இல்லையில்லை ..... அப்பா தினமும் எங்களைப் பார்க்க வருவார் :) அதனால் பிரச்சினை இல்லாமல் உடனே கட்டியாகிவிட்டது.

என் சகோதரி பூம்புகார், வேளாங்கண்ணி, நாகூர், நாகப்பட்டினம் என அவரது வகுப்புடன் சென்றுவிட்டார்.

ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலையில் பேருந்தில் சன்னல் ஓரம் இடம் பிடித்து, சந்தோஷமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டே, காலை உணவையும் பேருந்திலேயே முடித்துக்கொண்டு, நேரே தஞ்சை பெரிய கோயிலில் இறக்கி விடப்பட்டோம்.

கோயிலின் சிறப்புக்களாக நிறைய சொல்லிக்கொண்டே வந்தார்கள். பல புரிந்தும் சில புரியாமலும் இங்கும் அங்குமாக போய்க்கொண்டிருந்தோம்.

பிறகு ஒரு பூங்காவில் பேருந்துகளை நிறுத்தி மதிய உணவு முடித்துக்கொண்டு ஒரு தேவாலயத்தில் கொண்டுபோய் நிறுத்தி, ..... கிறித்துவப்பள்ளி என்பதால் எங்கு சுற்றுலா போனாலும் கடைசியாக ஒரு தேவாலயத்துக்கு அழைத்துக் கொண்டுபோய் ஜெபம் செய்துவிட்டு, நாங்கள் இங்கும் அங்குமாக சுற்றிக் கொண்டிருக்கும்போது எங்களுடன் வரும் வார்டன்கள், ஆசிரியைகள் அனைவரும் ஆலயத்தில் உள்ள முக்கியமானவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள்.

இப்போதும் அப்படியே ! மனம் முழுவதும், "எப்போது ஷாப்பிங் விடுவாங்க, எப்போது பொம்மை வாங்கலாம்" என்பதிலேயே இருந்தது.

ஒருவழியாக அவர்களின் உரையாடல் முடிந்து கடைகள் இருக்குமிடத்தில் இறக்கிவிட்டதும் நாலா திசைகளிலும் பஞ்சாய் பறந்துவிட்டோம்.

நானும் அடித்துப் பிடித்து தலையாட்டி பொம்மைகள் இருக்கும் கடைக்குச் சென்று பார்த்தேன். பல வண்ணங்களில் ஆண்க‌ளும், பெண்களுமாகக் கண்ணைக் கவரும் அழகழகான பொம்மைகள்.

பச்சை நிற பெண் பொம்மை என்னைக் கவர்ந்தது, நிறைய பொன்னிற நகைகளுடன், நீளமான ஜடையுடன், ஒரு பக்கமாகப் பெரிய கொண்டையுடனும், அழகான நெத்திச் சுட்டியுடனும் இருக்கவும் வாங்கிவிட்டேன். ( அந்த நாளில் என்னால் அதிகமான முறை வரைந்து பார்க்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்)

பொம்மை விலையும், சுற்றுலாவுக்கான பணமும் ஒன்றுதான். ஆமாம், பொம்மையின் விலை பத்த்த்து ரூபாய்.

எங்களைப் பார்க்க சனிக்கிழமை அப்பா வந்தார். அவரிடம் பொம்மையைக் கொண்டுவந்து கொடுத்து வீட்டிற்கு எடுத்து செல்லச் சொன்னேன்.

'உனக்குதானே வாங்கின, நீ வீட்டுக்கு வரும்போது எடுத்துட்டு வா" என்றார் அப்பா.

எனக்கோ நான் வாங்கிய‌தை வீட்டிலுள்ள‌ எல்லோருக்கும் காட்ட வேண்டுமென ஆசை. அதனால் கொடுத்தனுப்பிவிட்டு விடுமுறைக்காகக் காத்திருந்தேன்.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு விடுமுறை வந்தது, வீட்டுக்குப் போனேன்.

மனம் முழுவதும் பொம்மையின் மேலேயே இருந்தாலும் உறவுகளின் பேச்சு சுவாரசியத்தில் ஆர்வத்தைக் கொஞ்சம் தள்ளிப் போட்டேன்..

பள்ளி விட்டு தம்பி வந்தான். என்னைப் பார்த்ததும் ஆவலுடன் ஓடிவந்து, " அப்பாவிடம் நீ வாங்கி கொடுத்து அனுப்பினியே தலையாட்டி பொம்மை, அதுக்குள்ள என்ன இருந்துச்சு தெரியுமா ? ஒரு கொட்டாஞ்சிக்குள்ள, களிமண்ண அடைச்சு வச்சு, பேப்பர பிச்சு பிச்சு வச்சு ஒட்டி பொம்மை செஞ்சிருக்காங்க" என்றான். காகிதக் கூழைத்தான் அப்படி சொன்னான்.

எந்த ஒரு விளையாட்டுப் பொருளையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப்போட்டு அதன் உள்ளே என்ன இருக்கும்னு பார்த்துவிடும் தம்பி இந்த தலையாட்டிப் பொம்மையையும் பிச்சு எடுத்துவிட்டான்.

ஆவலுடன் "வர்றியா காட்டுறேன், தோட்டத்துல கிட‌க்கு", என்றவனிடம் "இப்போ வேண்டாம், அப்புறமா போய் பார்க்கலாம்" என்றேன்.

Monday, September 14, 2015

இக்கரைக்கு அக்கரை வசந்தம் !!


  படம் இணையத்திலிருந்து.
வெளிநாட்டுப் பெண்மணிகளை நம் நாட்டு
    பெண்களாக்கியது மட்டும் நான் :)

'வரு'வும் 'சாரு'வும் பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் மட்டுமல்ல, தங்களின் எதிர்மறையான குணங்களாலும் பிரிக்க முடியாத, நெருங்கியத் தோழிகளாக உள்ளனர்.

பள்ளியில் வேலை செய்கின்ற அவர்களில் ஒருவர் கணித ஆசிரியை என்றால் மற்றொருவர் மொழிப்பாடம். இதிலும் வேறுபாடுதான்.

இவர்களைப் போலவே இவர்களின் கணவர்களும் எதிர்மறையானவர்கள்தான். இப்போதைக்கு இவர்களைப் பற்றிய‌ வம்பு நமக்கெதுக்கு. அதுதான் பதிவின் முடிவிலே தெரிந்துவிடப் போகிறது !

வரலஷ்மி ப்ரியா அதாங்க நம்ம  'வரு' கலகலப்புக்குப் பஞ்சமில்லாதவர். துணிச்சலாகப் பேசும் தைரியமிக்கவர். முக்கியமாக‌ எந்த ஒரு வேலையையும் ஆறப் போடமாட்டார்.

அப்படின்னா நம்ம சாருமதி அதாங்க நம்ம 'சாரு' மருந்துக்கும் சத்தம்போட்டு பேசமாட்டார். அமைதியோ அமைதி. தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர். அவ்வப்போது கொஞ்சம் சோம்பேறித்தனம் எட்டிப்பார்ப்பது உண்டு.

இப்படியான குணமுள்ள இவர்கள் தோழிகளானதில் ஏதும் சந்தேகமில்லைதானே !

வெளியூர் என்பதால் 'வரு' சீக்கிரமே பள்ளிக்கு வந்துவிடுவார். மதிய உணவுடன் காலை உணவையும் கட்டிக்கொண்டு வந்துவிடுவார்.

உள்ளூர் வாசம் என்பதால் சாரு சரியான நேரத்திற்குதான் வருவார்.

வழக்கம்போல் ஒருநாள் காலையில் வரு வேலைக்கு வந்தபோது அதிசயமாக இவருக்குமுன் சாரு அங்கிருந்தார்.

வரு, "என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க ?" என்று சொல்லிக்கொண்டே பள்ளியின் 'கேட்'டுக்கு வெளியே வாங்கிய ரோஜாக்களில் ஒன்றை 'ஹேர்பின்'னுடன் 'சாரு'வுக்குக் கொடுத்தார்.

மேசையிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்து, "அந்த ஆளு இன்னைக்கு லீவு போட்டுட்டு வீட்ல உக்காந்திருக்கு, அதான் பிரச்சினை வேண்டாமே என முன்னமேயே கிளம்பி வந்துட்டேன்" என்று சொல்லும்போதே 'சாரு'வுக்குக் கண்கள் கலங்கிவிட்டன.

"லீவுதானேன்னு கொஞ்சம் நிம்மதியா இருக்க விடறதில்ல, வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு இடத்தில் மாற்றிமாற்றி வைக்க வேண்டியது. எந்த பொருள் எங்க இருக்குன்னே மறந்து போச்சு. ஒரு நாளைக்கு இந்தப் பக்கம் திரும்பியிருக்கும் சோஃபா அடுத்த வாரமே வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருக்கும். கடுப்பா இருக்கு வரு" என்றார் சாரு.

"கேக்க நல்லாத்தானே இருக்கு, வீடும் சுத்தமாச்சு, பார்க்கவும் புதுசா இருக்கும்" என்றார் வரு.

சுட்டெரிப்பதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, "இந்த வேலையை அவரே செஞ்சிட்டா ஒரு பிரச்சினையும் இல்ல. என்னையும் செய்யச் சொல்லும்போதுதான் பிரச்சினை பூதாகரமாவுது. ஒருவார்த்தை பேசுறதுக்குள்ள ஆயிரம் வார்த்தைகள் வந்து விழுது, சமயத்துல‌ கையும் நீண்டுடுது, அப்படித்தான் நேத்தும் .... " சாரு'வுக்குக் கண்கள் குளமாகின.

" கை நீட்றதெல்லாம் ரொம்பவே ஓவர்தான் " என்று சொல்லிக்கொண்டே வரு தன் 'ஃப்ளாஸ்க்'கிலிருந்த 'காபி'யை இரு கோப்பைகளில் ஊற்றி தனக்கொன்றும், காலையில் சாப்பிடாமல் வந்திருக்கும் தன் தோழிக்கும் ஒன்றைக் கொடுத்தாள். (ஹி ஹி படத்தினால் காலைச் சிற்றுண்டி 'காபி'யாகிவிட்டது)

"பிள்ளைங்க, வீடு, வேலை .... எவ்ளோதான் முடியும் ? இவர் போயி கதவைத் தொறந்தா ஆஃபீஸு, இல்லாட்டி லீவு, ஆனா நமக்கு அப்படியா ? பசங்களே வராட்டியும் நாம வந்துதானே ஆகணும் " விடுவதாயில்லை சாரு.

" நீங்கள்ளாம் கொடுத்து வச்சவங்க வரு. உங்க வீட்ல நீங்க சொன்னதை கேட்கிறார், ஒரு வார்த்தை அதிர்ந்து பேசமாட்டேன்கிறார். இப்படி அமைஞ்சா கோயில் கட்டி கும்பிடலாம், இதுவும் இருக்கே !! " என்றார் கோபமாக‌ . கை நீண்டதால்தான் மரியாதை இல்லாமல் போனதோ !

இடைமறித்த வரு, "நீங்க வேற, நாள் முழுசும் கத்தினாலும் ஒரு வார்த்தை பதிலா வராது, ஏதாவது பதில் வந்தாத்தானே நம்ம பேச்சுக்கு ஒரு மரியாதை இருக்குன்னு நினைக்கலாம். கை நீட்றத சொல்லல, மத்தபடி அது மாதிரி அமைஞ்சா கோயில் என்ன, கோயில் கட்டி கும்பாபிஷேகமே பண்ணலாம் " என்றார்.

Tuesday, September 8, 2015

ஆள் மாறினாலும் செயல் மாறுவதில்லை !!

எங்கள் குடியிருப்பு வளாகத்தில் மாலை நேரமோ அல்லது விடுமுறை நாட்களோ நம்ம ஊர் பிள்ளைகளின் விளையாடும் ஆற்றலுக்கு ஒரு அளவேயில்லை எனலாம்.

எந்நேரமும் காது கிழியும் சத்தத்துடன் கத்துவதும், பந்து விளையாடுகிறோம் பேர்வழின்னு எல்லார் வீட்டு முக்கியமாக எங்கள் வீட்டு வாசல் (மர)கதவு, பேட்டியோ கண்ணாடி கதவு இரண்டும் உடைந்துபோகும் அளவுக்கு அடித்து ஆடுவதும் வாடிக்கையான ஒன்று. நாள் தவறினாலும், பந்து தவறாது.

அப்படியே நம் வீட்டு பேட்டியோவில் விழுந்துவிட்டால் அவ்வளவுதான் நம் வீட்டுக்கதவு உண்டுஇல்லை என்றாகிவிடும். தட்டுதட்டுனு தட்டி ஓர் அசௌகரியத்தைக் கொடுப்பார்கள்.

நம் பிள்ளைகளுக்கு எதைஎதையோ கற்றுக்கொடுக்க முயற்சிக்கிறோம், ஆனால் அவர்களிடம் உள்ள சில வேண்டாத‌ பழக்கங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.

உதாரணத்திற்கு, வார இறுதி நாட்களில் வாக் போகும்போது பார்க்கும் காட்சி இது. நாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பூங்காவில் வெளிநாட்டு, இல்லையிலை இந்த‌ நாட்டு உயர்நிலை, மேல்நிலை பள்ளிப் பிள்ளைகள் குழு குழுவாக நாடகம், நடனம், வாள் சண்டை போன்ற‌ பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். பார்க்கவே ஆசையாக இருக்கும்.

சளைக்காமல் பல மணி நேரத்திற்கு சிறு பிசிறுகூட இல்லாமல் வரும்வரை தொடர்ந்து செய்ததையே திரும்பத்திரும்பச் செய்வார்கள்.

தான் உண்டு, தன் வேலையுண்டு என போவோர் வருவோருக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் ஏதாவது ஒரு பகுதியில் அவர்கள் வேலையை அழகாக செய்துகொண்டிருப்பார்கள். இவர்கள்தான் பிள்ளைகள் !

அதைவிட்டு அடுத்தவருக்கு தொந்தரவு கொடுத்தால் என்ன சொல்வது ? இவ்வாறாகப் புலம்புகிறேன் என்றால் காரணம் இல்லாமல் இல்லை.

சென்ற மாதத்தில் ஒருநாள் மாலை எங்கள் பேட்டியோவில் இடி விழுந்த மாதிரி ஒரு சத்தம். வழக்கம்போல கதவு டமால்டமால் என உடைந்து விழாத குறையாகத் தட்டல், கூடவே பத்துக்கும் மேற்பட்ட‌ பிள்ளைகளின் கூச்சலும்.

நான் உள்ளிருந்து வெளியே வருவதற்குள் எல்லோருமாக‌ சேர்ந்து உற்சாகப்படுத்தியதால் ஒரு பையன் ஒன்றரை ஆள் உயரத்திற்கு இருக்கும் மர‌ வேலியை ஏறிக் குதித்து எங்கள் பேட்டியோவில் கிடந்த பந்தை எடுத்துக்கொண்டு மீண்டும் ஏற முயற்சித்தான்.

நான் அவனருகில் வந்து நிற்பதைக்கூட கவனிக்கவில்லை. நான் கூப்பிட்டும் அவன் கண்டுகொள்ளவில்லை.

பந்தின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத மிளகாய்ச்செடி தொட்டி ஒன்று உடைந்து  உருண்டுகொண்டிருந்தது.. எனக்குக் கோபம்னா கோபம்.

சத்தமாகக் கூப்பிட்டதும் 'ஸாரி' சொல்லிவிட்டு மீண்டும் ஏற முயற்சித்தான்.

"இதுமாதிரி உங்க வீட்டு பேட்டியோவுல‌ யாராவது ஏறி குதிச்சு வந்தா உங்கம்மாவுக்கு பிடிக்குமா ?" என்றேன்.

"பிடிக்காது" என்றான்.

"எனக்கும்கூட பிடிக்காது, இது நல்ல பழக்கமும் இல்லை ", என்றேன்.

மீண்டும் பேட்டியோ பக்கம் போனான் ஏறி குதிக்க.

"இந்த வழியா போ", என்று வீட்டுக் கதவைத் திறந்து விட்டேன். ஓடி விட்டான்.

அடுத்த ஓரிரு நாட்கள் பிரச்சினை இல்லாமல் போனது.

மீண்டும் ஒருநாள் அடுத்தடுத்து இரண்டு பந்துகள் வந்து விழுந்தன. கதவும் தட்டப்பட்டது.

"பந்து எங்கள் பேட்டியோவில் இல்லை" என்று சொல்லி வெறுங்கையுடன் அனுப்பிவிட்டேன். கஷ்டமாகத்தான் இருந்தது, வேறு வழியில்லை.

இப்போதைக்கு மேலும் மூன்று பந்துகளுடன் அட்டைப் பெட்டி ஒன்று எங்கள் பேட்டியோவில் உள்ளது. வீடு மாறுவதற்குள் மேலும் இந்த‌
எண்ணிக்கைக் கூடலாம்.

ஆறு வருடங்களாக இங்கே இருக்கிறோம், வருடந்தோறும் பிள்ளைகள்தான் மாறிக்கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்களின் குணம், செயல்கள் எல்லாம் அப்படியே, ஒன்று போலவே உள்ளன.

Wednesday, September 2, 2015

காணாமல் போன நான் !!

எப்போதும் காலையில் வீடு காலியனதும் கடகடவென தெருவில் இறங்கி, அருகில் இருக்கும் பூங்காவுக்கு போய் 'வாக்' பண்ணி முடிந்து திரும்ப குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது ஆகும். சில மாதங்களுக்கு முன்புவரை இப்படித்தான் போய்க்கொண்டிருந்தேன்.

சிலபல காரணங்களால் இப்போது வெளியில் 'வாக்' போகாமல், " வேண்டாம், சில நாட்கள் போகட்டும் " என 'வாக்' போவதை அப்பார்ட்மென்ட்டிலேயேத் தொடர ஆரம்பித்து போய்க்கொண்டிருக்கிறது. இது கொஞ்சம் போரடிக்கும் 'வாக்'தான்.

பார்க் என்றால் நிறைய மனிதர்கள், குழந்தைகள், குளிர்ச்சியாக மரங்கள், பசுமையான புல்வெளி, பறவைகள், அணில்கள் என ஏதோ பிக்னிக் வந்த மாதிரி அலுப்பு இல்லாமல், உற்சாகமாக‌ இருக்கும்.

அப்பார்ட்மென்ட்டிலோ வேலை செய்யும் ஆட்களைத் தவிர்த்து என்னை மாதிரி ஒரு சிலர் மட்டும்தான் நடமாடுவர். வெயில், குளிர் எதுவாக இருந்தாலும் கொஞ்சம் கூடுதலாகவேத் தெரியும். நானும் ஒரு முக்கால் மணி நேரத்திற்குள்ளாகவே நடையை முடித்துக்கொண்டு வந்துவிடுவேன்.

கொஞ்சம் வெயிட் போட்டிருப்பதும் தெரியுது  :) 

நீண்ட‌ விடுமுறையில் வீட்டிற்கு வந்த என் பெண்ணிடம் இதைபற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.

"அம்ம்ம்மா, நீ ஒன்னும் கவலைப்படாதே, 1 வீக் சேலஞ்ச், 30 டேய்ஸ் சேலஞ்ச்லாம் இருக்கு. அதுல‌ உன்னை ஒல்லியாக்கிடலாம் " என ஆறுதல் சொன்னாள் பெண் .
 .
பெர்சனல் ட்ரெய்னர் கிடைத்த சந்தோஷம் எனக்கு. நான் மறந்தாலும் அவள் என்னை விடப்போவதில்லை

ஒருநாள் காலை எனக்கு எது சரிவரும் என 'யூ டியூப்'ல ஒரு வீடியோவைத் தேடி எடுத்து பயிற்சியை ஆரம்பிக்க நாங்கள் இருவரும் தயாரானோம்.

" 30 நாட்களில் ஆங்கிலம் கற்கலாம் மாதிரியா ? " என இவர் கிண்டலடித்துவிட்டு ஆஃபீஸ் கிளம்பிப் போய்விட்டார்.

மதிய உணவுக்கு வந்தபோதுகூட‌ ஆச்சரியமான பார்வை வந்தது இவரிடமிருந்து.

மாலை ஆஃபீஸ் முடிந்து வந்ததும் சாப்பிட சுடச்சுட இட்லியும் சாம்பார் & சட்னியும் எடுத்து வைத்தேன்.

சாப்பிட உட்கார்ந்தவர் பெண்ணைப் பார்த்து, " அம்மா எங்க ? காணோமே !! " என்றார் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு.

" D:<   Oh come ஆஆஆஆon  "   என்றாள் மகள்.

" :)))))))) " _____  இது நான்.

***************************************************************************** 
எப்படியும் எடுத்துக்கொள்ளலாம் :

ஒருநாள் பயிற்சியிலேயே ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாகிப் போய்விட்டேனாம் என்பது ஒன்று.

ஒரேநாள் பயிற்சியில் ஆளே காணாமல் போய்விட்டேன் என்பது மற்றொன்று.

Monday, August 31, 2015

டவுன்பஸ் அனுபவம் !!


ஊருக்குப் போனால் டவுன் பஸ்ஸிலும், ஆட்டோவிலும் ஏறி இறங்காமல் வரமாட்டேன். எனக்குப் பிடித்த வாகனங்கள் இவை இரண்டும்.

அந்த பளிச் வெண்ணிறமும், சிவப்பு நிற கோடும் இருந்த டவுன்பஸ்'களின் நிறம் மாற்றப்பட்டதில் கொஞ்சம் வருத்தம்.

சென்றமுறை ஊருக்குப் போனபோது வேலைப்பளுவினால் ஆட்டோவில் ஏற மறந்தே போனேன். அந்த வருத்தம் இன்னமும் இருக்கிற‌து.

அடுத்த தடவை ஊருக்குப் போனால் ? வேறென்ன ? ஆட்டோ பயணத்தை இரட்டிப்பாக்கிவிட வேண்டியதுதான் :)

ஒரு நாள் மாலையில் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கடலூர் செல்லும் டவுன் பஸ்ஸில் நானும் என் பெண்ணும் ஏறினோம். துண்டுபோட்டு ஸீட்டு பிடிக்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது என்பது புரிந்தது.

என்னவொன்று இந்த தடவை துண்டுக்குப் பதிலாக லன்ச் பேக், டிஃபன் பாக்ஸ் என பொருட்கள் கொஞ்சம் வித்தியாசமாக ஸீட்டுகளில் நிறைந்திருந்தன. பள்ளி விட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.

எப்போதும் அடித்துப்பிடித்து ஏறி இடம் பிடிப்பவர்களைக் கீழே நின்று ரசித்துப் பார்த்துக்கொண்டிருப்பேன். இப்போதும் அப்படியே !

கடைசியாக ஏறி உள்ளே போனால், அந்தளவிற்கு கூட்டம் இல்லை. நாலைந்து பேர் மட்டுமே நின்றிருந்தோம்.

நான் நின்றிருந்த ஸீட்டில் ஒரு பெண்  ஜன்னலோரம்  லன்ச் பேக்கை வைத்துவிட்டு ஸீட்டின் நுனியில் உட்கார்ந்துகொண்டு வெளியில் எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு முன், பின் இருக்கைகளில் அவரைப் போலவே பெண்கள் அமர்ந்திருந்தனர். எல்லோருமாக பேசி சிரிக்கவும் ஓரிடத்தில் வேலை செய்கிறவ‌ர்கள் அல்லது ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்பதும் தெரிந்தது.

ஸீட்டு காலியாக இருக்கவும், " பேக்'க எடுத்தீங்கன்னா நான் உட்கார்ந்துப்பேன் இல்ல " என்றேன்.

அவரிடமிருந்து " இல்ல, இங்க உட்காரும் ஆள் வந்துட்டே இருக்காங்க" என்ற பதில் வந்தது. சரியென விட்டுவிட்டேன்.

சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஓட்டுனர் வந்து பேருந்தை எடுத்தார். அப்படியே ஆமைபோல் நகர்த்தினார். இன்னமும் அந்த ஸீட்டு காலியாகவே இருந்தது. கடைசி நேரப் பயணிகள் ஓரிருவர் ஓடிவந்து ஏறினர்.

மகள் " அம்ம்மா, யாரும்தான் வரலையே, அந்த ஸீட்டு எதுக்காக அப்படியே காலியா இருக்கணும், இப்போ கேட்டுப் பார்" என்றாள். உண்மையில் என்னைவிட என் மகள்தான் ஆர்வமாய் இருந்தாள்.

கேட்டேன். " பஸ் வெளில போறதுக்குள்ள வந்திடுவாங்க" என்றார் அப்பெண்.

சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே இருந்தார். இல்லாத ஆளுக்காக‌ ஸீட்டு பிடித்து வைத்திருப்பது என் பெண்ணிற்கு ஆச்சரியமாய் இருந்தது.

இப்போது பஸ் சாலைக்கு வந்து வேகமெடுத்தது.

சிரித்துக்கொண்டே, "இப்போ உட்காரலாமா ?" என்றேன்.

உம்மென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாரே தவிர அசைந்து கொடுக்கவில்லை.

"கண்டக்டர் வர்றார், ஏன் இந்த ஸீட்ல யாரும் உட்காரக் கூடாதான்னு ? அவரிடமே கேட்கிறேன்,  " என்றேன் நான் .

பத்து நிமிடங்களுக்குள்ளாகவே நாங்கள் இறங்கும் இடம் வந்துவிடும். இருந்தாலும், எனக்கு சீண்டிப் பார்க்க ஆசை.

பிறகு பின் இருக்கையில் இருந்த அவரது தோழியிடம் தான் ஏதோ கண்டு பிடித்துவிட்டது போல், " பார்க்க‌ வெளியூர் மாதிரி தெரியுறாங்க, இந்த ரூல்ஸ் எல்லாம் தெரியாது போல " என கிசுகிசுத்தார்.

" கலைவாணி டீச்சர் பஸ்'ஸ விட்டுட்டாங்கபோல, சரி அந்த‌ ஸீட்டை அவங்களுக்கே விட்டுடுங்க‌ " என உத்தரவு பறந்து வந்தது அத்தோழியிடம் இருந்து .

இவரும் போனால் போகுதுன்னு நகர்ந்து இடம் கொடுத்தார்.

"எனக்கு பண்ருட்டி, உங்களுக்கு ? " என்றேன். பதிலில்லை.

"நம்ம கண்டுபிடிப்பு அநியாயத்துக்கு இப்படி வீணாப் போச்சே " என நினைத்திருப்பாரோ !

ஆனால் அவர் எந்த ஊர் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன் !

' நான் எப்படி கண்டுபிடித்தேன் ' என்பதை இந்நேரம் நீங்களும் கண்டு பிடித்திருப்பீர்களே !!

" நீங்க சொன்ன அந்த சூப்பர் ரூல்ஸ்'ஸைப் போட்ட ஆள் யாருங்க ? தெரிஞ்சிக்கலாமா ? " என்று கேட்க ஆசைதான். கேட்டால் பதில் வந்திருக்கும்னா நெனக்கிறீங்க ?

ஹும்ம்ம், அந்த நாள்'ல நாங்க போடாத ரூல்ஸ்'ஸாஆஆ?  :))))))

Friday, August 28, 2015

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ மிதி பாவக்காய் !



'இவ்ளோஓஓ பாவக்காயா !!'னு கண்ணு வைக்கிறவங்க பதிவு முடிஞ்ச பிறகு, வைக்கலாமா ? வேண்டாமா ? ன்னு  முடிவு பண்ணி வைங்க.

ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் நம்ம ஊர் கடைக்குப் போனபோது ஒரு அட்டைப் பெட்டியில் குட்டிகுட்டிப் பாவக்காய்கள் இருக்கவும், ஆச்சர்யமாகி, ஏனென்றால் அதற்குமுன் இந்த பாவக்காயை நான் பார்த்ததே இல்லை. காமாஷிமா ப்ளாக்கில் ஒருதடவை பார்த்திருக்கிறேன், வாங்கலாம் எனப் பார்த்தால் ஒன்றும் நன்றாக இல்லை.

அவற்றுள் ஒரு காய் மட்டும் பழுத்து வெடித்து விதைகள் நல்ல சிவப்பு நிறத்தோலுடன் 'பளிச்' என கண்ணைப் பறிக்கவும், எடுத்துக்கொண்டு வந்து 'எங்கே முளைக்கப் போகிற‌து !!' என சும்மா ஒரு தொட்டியில் போட்டுவிட்டு ஏதாவது முளைத்து வந்துள்ளதா என தினமும் ஒருமுறை எட்டிப் பார்த்து ........ பிறகு சுத்தமாக மறந்தே போனேன்.

மே மாதத்தில் ஒருநாள் பருப்புக் கீரையைப் பறிக்கும்போது அவற்றிற்கிடையில் ஒரு குட்டி புது செடி ஒன்று வந்திருக்கவும், இலைகளை வைத்து அது பாவக்காய் என முடிவு செய்து, இலையில் சிறிது கிள்ளி கசக்கி முகர்ந்து பார்த்தால் :) பாவக்காயேதான் !!

                                  பிறகு அதை ராஜமரியாதையுன் கவனித்து .........


அருகில் இருந்த மிளகாய்ச் செடியைப் பற்றிப் படர்ந்து, வளர்ந்து, பூக்கள் விட்டும் காய் வராததால், காத்திருந்து, பிறகு காய்கள் வந்து ..... பெருசாகும் எனப் பார்த்தால் .... விட்டது விட்டபடியே இருந்து காய்ந்து போனது.

ஆண் பூ, பெண் பூ இரண்டும் ஒரே செடியில் பூக்கிறது. பெண் பூதான் காய்க்கிறது, ஆண் பூ கொட்டிவிடுகிறது

நிறைய காய்கள் காய்த்தாலும் சமையலுக்குப் பயன்படாமல் போகிறது. விதை வீரியமில்லாததால் காய்களும் பயனற்று உள்ளது. கொண்டைக்கடலை அளவுதான் உள்ளது.

இருந்தாலும் செடியைப் பிடுங்க மனமில்லாமல் "அழகாத்தானே இருக்கு, இருந்துட்டுப் போகட்டுமே" என விட்டுவிட்டேன். ஒரு காய் பெருசானாலும் ஓடி வந்து உங்களிடம் சொல்லிவிடுகிறேன் !

சந்தேகங்களுக்குப் பதிலளித்த தோட்டம் சிவா'வுக்கும் நன்றி.

       கையைக் காலை ஆட்டி இவங்க நாட்டியமாடும் அழகே தனிதான் !


                                              இனி காய்களைப் பார்ப்போமா !!

Wednesday, August 19, 2015

ஈச்சம் பழத்தின் இனிய நினைவுகள் !!

 கடலூர் டூ புதுவை போகும் வழியில் வாங்கிய ஈச்சம் பழம்
ஒவ்வொருவருக்கும் அவரவர் வீட்டில் ஏதோ ஒரு இடம் ஸ்பெஷலாக இருக்கும். அப்படித்தான் எனக்கும் எங்கள் வீட்டில் மெத்தை ரூம் ரொம்பவே ஸ்பெஷல்.

எங்களின் ஒட்டுமொத்த குறும்புத்தனங்களும் அரங்கேறிய இடமாயிற்றே !

அந்த அறைக்கு இரண்டு வழிகள், ஒன்று வெளி நடையில் இருந்து, மற்றொன்று வீட்டுக்குள்ளிருந்து. அதனால் ஓடிப் பிடித்து விளையாட வசதியாக இருக்கும்.

எங்களுக்குப் பிடித்தது, ஆனால் அதுவே பெரியவர்களுக்குப் பிடிக்காதது என நிறைய விஷயங்கள் உண்டு.

அவற்றுள் முக்கியமானது பழம் பழுக்க வைப்பது.   அதற்கு ஏற்ற இடம்தான் இந்த மெத்தை ரூம். நல்ல வெளிச்சமும், காற்று வசதியும், கொஞ்சம் தவிடு மூட்டைகளும் இருப்பதால் ரொம்பவே பிடிக்கும்.
ஈச்சமரம் மாதிரியே இங்குள்ள மரம்
பெரும்பாலானவர்களின் வீட்டுத் தோட்டத்தில் ஈச்ச மரங்கள் ஒன்றிரண்டு இருக்கும். அதில் இப்படித்தான் குலைகுலையாகக் காய்கள் காய்க்கும்.

எப்படியோ எங்களுக்கும் இந்தக் காய்கள் கிடைக்கும். அவற்றை மெத்தை ரூமிலுள்ள தவிடு மூட்டைகளில் மறைத்து வைத்து பழுக்க வைப்போம்.

ஒவ்வொரு முறையும் தவிடு அள்ளும்போதும் திட்டு கிடைக்கும். தவிடு எடுக்கறவங்க," உங்க அப்பா வரட்டும், சொல்றேன்" என்பார்கள்.

அம்மவைத் தாண்டித்தான் விஷயம் அப்பாவிடம் போகும். அதனால் ஒரு நம்பிக்கை, அம்மா கண்டிப்பாக  போட்டுக் கொடுக்கமாட்டாங்கன்னு :)

எதற்கு வம்பு என ஒரு சிறிய கூடையில் கொஞ்சம் தவிடு போட்டு அதில் இந்தக் காய்களில் பாதியைப் போட்டு மேலே கொஞ்சம் தவிடு தூவி கூடையை ஒரு ஓரமாக வைத்து பழுக்க வைப்போம்.

மீதி காய்களை வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் எடுத்துக்கொண்டு போய் இரண்டு மனைகள் தள்ளியுள்ள எங்கள் தோட்டத்தில் உள்ள வைக்கோல் போரில் துளைத்து, அதில் இந்த ஈச்சங்காய்களைக் கொட்டி மூடிவிடுவோம்.

காய்கள் கொஞ்சமாவது செங்காயாக இருந்தால் பழுக்கும். படு பிஞ்சாகத்தான் எங்களுக்குக் கிடைக்கும். அதைத்தான் பழுக்க வைப்போம்.

தினமும் போய் அவற்றை பார்த்துவிட்டு வருவோம். எப்போதெல்லாம் பார்க்கப் போகிறோமோ அப்போதெல்லாம் 'பழுத்தாச்சா' என தின்று பார்ப்போம்.

பச்சைக் காய்களாதலால் மேல் தோல் காய்ந்து போகுமே தவிர பழுக்காது. கடைசியில் காய்ந்துபோய் ஒன்றுக்கும் உதவாமல் போகும்.

ஒழுங்கா அவை மரத்திலேயேப் பழுத்தாலும் சாப்பிட சுவையாக இருந்திருக்கும். அதை 'பழுக்க வைக்கிறோம்' என்ற பெயரில் பிஞ்சிலேயேப் பறித்து வீணாக்குவதே வருடந்தோறும் நடக்கும் வேடிக்கை.

சோகமயமாக இருக்கும் எங்களுக்குக் கடைசியில் யார் வீட்டிலிருந்தாவது குலைகுலையாக ஈச்சம் பழங்கள் கொடுத்துவிடுவார்கள். பிறகென்ன இஷ்டத்திற்கும் பிச்சு பிச்சு பறித்து தின்போம்.

ருசித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் சுவையை ! பனங்கிழங்கு, நுங்கு மாதிரிதான் இதுவும்.
ஃப்ரெஷ் பேரீச்சம் பழம்
அமெரிக்கா வந்தபோது உழவர் சந்தையில் படத்திலுள்ள இந்த பழங்களைப் பார்த்ததும், ஏதோ பிஞ்சு தேங்காய்கள் என்றுதான் முதலில் நினைத்தேன். 'இதை வைத்து என்ன செய்வார்கள்?' என ஒரு சந்தேகம்.

அடுத்த வாரம் போனபோது அதே காய்கள். இந்த முறை கேட்டாச்சு. 'ஃப்ரெஷ் பேரீச்சம் பழம்' என்றனர்.

எங்களுக்கோ ஈச்சம் பழத்தின் நினைவு வரவும், விலை அதிகமானாலும் பரவாயில்லை என வாங்கித் தின்று பார்த்தோம். சுவை ஈச்சம் பழத்தின் செங்காய்களைப் போலவே இனிப்பாக இருந்தது.

அதிலிருந்து எப்போது, எங்கே பார்த்தாலும் கொஞ்சமாவது வாங்கிவிடுவோம்.


படத்திலுள்ளவை இந்த வாரம் ஒரு மெக்ஸிகன் பழக்கடையில் வாங்கியவை. முன்புபோல் உழவர் சந்தைக்கு வராத சில பழங்களில் இதுவும் ஒன்று.

ஆனாலும் உழவர் சந்தையில் கிடைக்கும் பழத்தின் சுவைபோல் வெளியில் வாங்கும் பழத்தில் இருப்பதில்லை.

எனக்கொரு சந்தேகம், பழமாகக் கிடைக்கும்போது எதற்காக நாங்கள் அவற்றை ஒளித்து & மறைத்து பழுக்க வைத்தோம் என இதுவரை புரியவில்லை.

ஆனால் இங்கே வாங்கிய காய்களை இதுவரை பழுக்க வைக்க முயற்சித்ததில்லை.

மெத்தை ரூமுக்கும், தவிட்டுக்கும், வைக்கோல் போருக்கும் எங்கே போவது :)

Monday, August 17, 2015

பிரச்சினை என்னவோ ஒன்றுதான் !!



இட்லி மாவு !

புளிக்கலைன்னாலும் பிரச்சினை !

புளிச்சு வந்தாலும் பிரச்சினை !!

Sunday, August 16, 2015

கண்ணாமூச்சி !!



சென்ற வாரத்தில் ஒருநாள் வியர்க்க, விறுவிறுக்க(நெஜமாத்தான்) வாக் முடிச்சிட்டு அப்பார்ட்மென்ட் கதவை நான் திறக்க முயற்சிக்க, எனக்கும் முன்னால் கம்பிகளுக்கிடையே புகுந்து நுழைந்தவரைத் தேடினால் ஆளைக் காணோம்.

பக்கத்திலேயே புதரில் மறைந்து நின்று எப்படி பார்க்கிறார் !! எந்தப் பக்கம் வந்தாலும் அந்தப் பக்கமாகத் திரும்பி போஸ் கொடுத்தார்.

Tuesday, August 11, 2015

பதினைந்து வருட பந்தமாயிற்றே !!



வெயிலுக்குப் பயந்து சனிக்கிழமை காலையிலேயே 'வாக்' போய் வந்தாச்சு. மாலை வெளியில் போகக் கிளம்பியபோது car remote key ஐக் காணோம். சாவிக் கொத்திலிருந்து அது மட்டும் தனியாகக் கழண்டுவிட்டிருந்தது.

அங்கும், இங்கும், எங்கும் தேடியதில் கிடைக்கவேயில்லை. பிறகு 'ஒருவேளை 'வாக்' போனபோது தொலைந்து போயிருக்கலாம்' என்ற முடிவுக்கு வந்தாச்சு.

பதினைந்து வருடங்களுக்கும் மேலாகக் கூடவே இருந்தது, திடீரெனத் தொலைந்து போனால்?

மாற்று remote key இருக்கிறது. இருந்தாலும் வேண்டாதவர் கையில் கிடைத்து, அவர் இந்தப் பக்கமாக வந்து அழுத்தப்போய், "இதோ, நான் இங்கே இருக்கிறேன்" என காட்டிக் கொடுக்கப்போய் ...... வேடிக்கைதான். ஸ்டியரிங் லாக் இருப்பதால் பயமில்லை ...... இருந்தாலும் ?

வெளியில் போகும்போது பார்த்திருக்கிறேன், நம்மை மாதிரி நல்ல மனசு உள்ளவங்க:) தொலைத்தவர்களின் சாவியை எடுத்து மரத்தில் கட்டி வைத்திருப்பதை.

அப்போதெல்லாம், 'இது நல்ல ஐடியாவா இருக்கே' என சொல்லிக்கொண்டே போவோம்.

அதுபோல் 'நம்முடைய சாவியும் எங்காவது கட்டப்பட்டிருந்தால் நல்லாருக்குமே' என ஞாயிறன்று வாக் போகும்போது பேசிக்கொண்டே போனோம். ம்ம்ஹூம், அதைப்பற்றி பேசியதுதான் மிச்சம்.

'சூட்கேஸிலிருந்து மாற்று 'ரிமோட் கீ'யை நாளை கண்டிப்பாக தேடி எடுத்து வைக்கவேண்டும்' ___ நான் மனதினுள்.

திங்கள் காலை இவர் அலுவலகம் செல்ல ஷூவைப் போடும்போது காலில் ஏதோ தட்டுப்படவும் ..... பார்த்தால் ? ....... தொலைந்ததாக நினைத்த 'ரிமோட் கீ'யேதான் :))))) 'ஷூ'வினுள்ளேயே விழுந்திருக்கிறது ! அதுவும் வெள்ளிக்கிழமை மாலையே !!

எங்கள் வீட்டில் 'ஆட்டைத் தோலின் மேலேயே போட்டுக்கொண்டு தேடிய கதை'யில் இது பத்தோடு பதினொன்றானது !! ஹா ஹா ஹா :))))))

பதினைந்து வருடங்களுக்கும் மேலான பந்தமாயிற்றே, அவ்வளவு எளிதில் நம்மை விட்டுப் போய்விடுமா என்ன !!

Tuesday, July 28, 2015

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ மிளகாய் செடி



காய்ந்த மிளகாயின் விதைகளைத் தூவியதில் நிறைய நாற்றுகள் முளைத்தன. அவற்றைப் பிடுங்கி இங்கொன்றும் அங்கொன்றுமாக நட்டு வைத்தேன். இடம் பற்றாக்குறை இருந்தும் நன்றாகவே வளர்ந்தன.

                      நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து,

                                                              பூக்க ஆரம்பித்து .....

                                                      காய்க்கவும் தொடங்கியாஆஆச்சு :)
கீழேபோட மனமில்லாமல் ஜாதிமல்லி தொட்டியில் நடப்பட்ட செடியிலிருந்து ....

புதினா செடிகளுக்கிடையே போட்டிபோட்டு வளர்ந்து காய்க்க ஆரம்பித்துள்ள செடி.
                               இன்று முதன்முதலாக பறித்த மூன்று மிளகாய்கள்

பிஞ்சு மிளகாய்தான், இரண்டாக அரிந்ததும் பச்சைமிளகாயின் வாசம், நெஜமாத்தான், நம்புங்க, சும்மா கமகமனு வந்தது.

                                          பழங்கள் பழுக்க ஆரம்பிச்சாச்சு !!