Monday, January 5, 2015

தேங்காய் படுத்திய பாடு !


"அங்கு மண்ணெல்லாம் எப்படி இருக்கு?,என்னென்ன மரம் செடிகளைப் பார்க்க முடிகிறது?, என்னென்ன பறவைகள் & விலங்குகள் இருக்கின்றன‌? " என்று ஏதோ இயற்கை சூழலை ஆராய்ச்சி செய்ய வீட்டுக்காரர் அமெரிக்கா போனதுபோல் இது மாதிரியான கேள்விகளைத்தான் முதலில் கேட்டு வைத்தேன்.

அவரிடமிருந்து எல்லாவற்றுக்கும் ஒரே பதில்தான், "வந்து பாக்கதான போற", என்பதுதான் அது.

என‌க்கோ வெளிநாடு என்பதைப் பற்றி ஒரு ஐடியாவும் கிடையாது. நெருங்கிய உறவினரில் யாராவது போய் இருந்தால்தானே தெரிந்துகொள்வதற்கு.

ஒரு நல்ல நாளில் இங்கு வந்தாச்சு. மரம், செடி, கொடிகளைத் தவிர மற்றவற்றை பார்ப்பது சிரமமாய் இருந்தது.

வீட்டிலிருந்த ஆளுயர ஃப்ரிட்ஜில் என்ன இருக்கும் எனும் ஆவலில் திறந்து பார்த்தால் ராட்சஸ சைஸில் கோஸ், காலிஃப்ளவர், சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிற பெரிய வெங்காயங்கள் போன்றவை ஆக்கிரமித்திருந்தன.

விலை அதிகம் என்பதாலோ அல்லது அதிலிருந்து ஒரு வாசனை வரும் என்பதாலோ அல்லது அதை சமைக்கவே தெரியாது என்பதாலோ என்னவோ எங்க‌ அம்மா காலிஃப்ளவரை சமைத்ததேயில்லை. மேலும் அதில் 'புழு' வேறு இருக்கும் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருந்ததால் அதைத் தொடவே பயம்.

வந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே பக்கத்தில் இருந்த ஒரு கடைக்குப் போனோம். கடையின் பெயரைப் பார்த்ததும் ( Albertsons ) son க்கு முன்னால் '&' போடாமல் விட்டிருக்கிறார்களே என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் safeway ( நினைத்ததென்னவோ sefe ) போகலாம் என்றார். ஸ்பெல்லிங்கைக் கேட்டுத் தெரிந்துகொண்டு , "இப்படி கூடவா பேர் வைப்பாங்க !" என மனதில் எண்ணம்.

இவரைக் கேட்டாலோ, "ஏதோ தெரியாம‌ வச்சிட்டாங்க, மன்னிச்சு விட்டுடு " என்பார்.

இதுவரை வெங்கடேஸ்வரா மளிகை ஸ்டோர், முரளி & சன்ஸ் ஆயில் மில், மீனா மெடிக்கல் இப்படியான பெயர்களையேப் பார்த்துப் பழகிய என‌க்கு இதெல்லாம் புதிதாகவே இருந்தன.

அதேபோல் எந்தக் கடையில் பார்த்தாலும் காய்கள் பலநாள் குளிரில் அடிபட்டு வாடி வதங்கிப்போய் இருந்ததே தவிர ஃப்ரெஷ்ஷாக எதுவுமில்லை. தேங்காயைத் தேடிப் பார்த்தால் கிடைக்கவேயில்லை.(இப்போது இது எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது)

ஊரில் இருந்தவரை தினமும் தேங்காய் சேர்க்காமல் சமையல் இல்லை என்பதால், "தேங்காய் வேணும், எங்கு கிடைக்கும் ?" என்றேன்.

"கோகனட் ஹில் போனால் கிடைக்கும், சனிக்கிழமை போகலாம்", என்றார்.

நாங்கள் இருக்கும் ஊரைச் சுற்றிலும் தூரத்தில் மலைகள் இருப்பது தெரியும் என்பதால் அங்குள்ள ஏதோ ஒரு மலையில்தான் இந்த 'கோகனட் ஹில்' இருக்க வேண்டும். அப்படி போனால் "நிறைய இளநீரும், தேங்காய்களும் வாங்கி வர வேண்டும்" என எண்ணினேன்.

இவரிடமிருந்து எந்த  விவரமும் கிடைக்கப் போவதில்லை என்பதால் அமைதி காத்தேன்.

சனிக்கிழமை காலையும் வந்தது. 'கோகனட் ஹில்'லுக்கும் கிளம்பியாச்சு. கிளம்பிய சில நிமிடங்களிலேயே சில கடைகள் இருந்த வளாகத்திற்குள் வண்டி நின்றது.

"இறங்கி வா போகலாம்" என்றார் இவர்.

"ஓ, ஒருவேளை அதற்கான நுழைவுச் சீட்டை இங்குதான் வாங்க வேண்டுமோ" என எண்ணிக்கொண்டே உள்ளே நுழையும் முன் மேலே எழுதியிருந்த கடையின் பெயரைப் பார்த்துவிட்டேன்.  "Coconut Hill" என்றிருந்தது. அட‌, இது நம்ம ஊர் கடை ! கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அதிலிருந்து பெயரை வைத்து எடைபோட மறந்தேன்.

அதன்பிறகு சில மாதங்களில் நம்ம ஊர் பெண் ஒருவர் அறிமுகமானார். அவர் இங்கு வந்து ஒன்றிரண்டு வாரங்களே ஆகியிருந்தன. இரண்டொரு நாளில் நெருங்கிய‌ தோழிகளாகிவிட்டோம்.

ஒரே குடியிருப்பு வளாகம் என்பதால் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம்.

"எந்த ஊர்?, எங்க இருக்கீங்க? " என்ற முக்கியமான கேள்விகளுக்குப் பின் அதி முக்கிய கேள்வியான "இன்னைக்கு உங்க வீட்ல என்ன சமையல் ? " என்ற கேள்வி பிறந்தது.

அவர் ஏதோ ஒரு குழம்பைச் சொன்னார். நான் பதிலுக்கு "வாழைப்பூ & முருங்கைக் கீரை சாம்பார்" என்றேன்.

அவர் ஆச்சரியமாகி "வாழைப் பூ, முருங்கைக் கீரை எல்லாம்கூட‌ இங்கு கிடைக்குதா? எங்கு வாங்கினீங்க? " என்றார்.

நான் எதேச்சையாக "கோகனட் ஹில் போய் வாங்கி வந்தேன்" என்றேன்.

அவரோ "இங்கு ஃப்ரெஷ் கோகனட்டே கிடைக்காதாமே. ஆனா நீங்க கோகனட் ஹில் போய் வாங்கி வந்தேன்னு சொல்றீங்க. அது எங்கிருக்கு? இங்கிருந்து எவ்வளவு தூரம்?" என்றார் ஆவலாக.

"ஆஹா, நம்மை மாதிரியே ஒரு ஆள் கிடைசிருக்காங்க, இவங்கள லேசுல விட்டுடக் கூடாது" என உள்ளே உறங்கிக்கொண்டிருந்த மன‌ பூதம் எதிரில் வந்து நாட்டியமாடியது.,

நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து நடந்து போகும் தூரம்தான். ஆனாலும் "யான் பெற்ற இன்பத்தை நீயும் பெற வேண்டாமா" என்ற நல்ல்ல்ல எண்ணத்தில், "நானும் உங்கள மாதிரிதானே புதுசா வந்திருக்கேன், இடமெல்லாம் சரியா தெரியல, கண்டிப்பா உங்க வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சிருக்கும், வந்ததும் கேட்டுட்டு சொல்லுங்க‌", என்றேன்.

மாலை நெருங்க நெருங்க கண்டிப்பாக அந்தத் தோழியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும் என‌ எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

நினைத்த மாதிரியே தொலைபேசி அழைக்கவும் எண்ணைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன் அந்தத் தோழியின் அழைப்புதானென்று.

அவரின் செல்லக் கோபத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் விரைந்து அழுத்தினேன் talk பட்டனை.

33 comments:

  1. //எந்தக் கடையில் பார்த்தாலும் காய்கள் பலநாள் குளிரில் அடிபட்டு வாடி வதங்கிப்போய் இருந்ததே தவிர ஃப்ரெஷ்ஷாக எதுவுமில்லை. // நான் 2007ல வந்தபோது இருந்து பெரும்பாலான கடைகளில் ஃப்ரெஷ் காய்களைத்தான் சித்ராக்கா பாத்திருக்கேன். அரிதாக சில நாட்களில் வாடிப்போன காய்கள் இருக்குமே தவிர வாடி வதங்கின காய்களைப் பார்த்ததில்லை. சொல்லக் கஷ்டமாக இருந்தாலும் சொல்கிறேன், ஊருக்குப் போயிருந்த போது இவ்வளவு ஃப்ரெஷ்ஷான காய்களை (நாமே வீட்டில் செடி வளர்த்துப் பறித்தாலன்றி) பார்க்க முடியவே இல்லை..ல்லை..லை...ஐஐஐ!!

    பதிவு முழுக்க அங்கங்கே நீங்க தூவி இருக்கும் நகைச்சுவை சூப்பர்! ரொம்ப நல்லா இருக்கு. ரசிச்சுப் படிச்சேன், சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்கோ...

    ReplyDelete
    Replies
    1. மஹி,

      ஹா ஹா நான் 'இப்போ'ன்னு சொல்லவே இல்லையே. இவங்க ஊர் காய்கள் ஃப்ரெஷ்ஷாதான் இருக்கும். கத்தரி, வெண்டை, சுரை, வாழைப்பூ, கொத்தவரை, மரவல்லி, தேங்காய் என வாங்கிவந்து எவ்வளவு நாட்கள் அவற்றை குப்பையில் போட்டிருக்கிறேன் தெரியுமா ? மேலே பார்க்க அழகா இருந்தாலும் உள்ளே கருப்பு நிறம் பரவியிருக்கும். ஒருவேளை அப்போ வாங்கத் தெரியாமல் வாங்கினேனோ தெரியல. இப்போல்லாம் பிரச்சினையே இல்லை. எல்லாமே ஃப்ரெஷ்ஷா கிடைக்குது.

      எங்க ஊர் பக்கம் அளவில் சிறியதா இருந்தாலும் ஃப்ரெஷ்ஷாதான் இருக்கும். சுற்றியுள்ள ஊர்களில் காய்கறித் தோட்டங்கள் உண்டு. ஒருவேளை இப்போ ஐஸ்ல வச்சு தராங்களோ என்னவோ.

      நிறைய காமெடியெல்லாம் நடந்திருக்கு. ஒவ்வொன்னா கூடுமானவரை எடிட் பண்ணாமல் போட முயற்சிக்கிறேன். ரசிச்சு கருத்திட்டமைக்கு நன்றி மஹி.

      Delete
  2. முடியல சித்ரா சிரிச்சு. உங்க அனுபவத்தை நகைச்சுவையாக,சூப்பரா எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. உங்க பதிவுல ஒயின் க்ளாஸ் பத்தி படிச்ச‌திலிருந்தே ஒவ்வொரு காமெடியான விஷயமும் மனதில் வந்துவந்து போகிறது. பாராட்டுக்களுக்கும் நன்றி ப்ரியசகி.

      Delete
  3. அக்கம் பக்கம் சூப்பரா இருக்கே ..எப்ப ஸ்டார்ட் ஆச்சு ? இங்கிலீஷ் பேராச்சும் பரவால்ல நான் வலது கால் வச்ச இடம் ஜெர்மனி வித விதமா பல்ப் வாங்கிருக்கேன் :)

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஒரு நல்ல நாளா பார்த்து ஆரம்பிச்சுட்டேன்.

      இன்னமும் வாயில் நுழையாத zch, Schw, Schn என எழுத்துக்கள் வரும் பெயர்களைப் பார்த்தால் முயற்சிக்கமாலேயே இது ஜெர்மன் பெயர் என முடிவெடுத்திடுவேன். அங்கேயே இருந்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்?

      Delete
  4. என்னானு சொல்ரது? இந்த நகைசுவை நடை உஙக கூட பிறந்திருக்கு ;) நான் ரசிச்சு படிச்சத மேற்கோள் காட்டனும்னா எல்லாத்தயும் திரும்ப எழுதனும் :) லாஸ்ட்ல ஒரு பினிஷ்ங் டச் அடடா பதிவு முடிஞ்சுடுச்சா என்று :) நன்றி நன்றி :)

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசிச்சு படிச்சு, கருத்திட்டமைக்கு நன்றி ஞானகுரு. ஆஹா, ஃப்னிஷிங் டச்சைக் கண்டுபிடித்துப் பாராட்டியதற்கும் நன்றி.

      Delete
    2. இன்னோனும் கண்டுபுடிச்சுடேன். ஞாயிற்று கிழமை ஆனா தான் பின்னூட்டத்திற்கு பதில் எழுதனும் நு இருக்கிங்க :D ஹஹா

      Delete
    3. ஹா ஹா , கண்டுபிடிப்பைப் பொய்யாக்கிட்டேனே !

      Delete
  5. மலரும் நினைவுகள் அருமை மேடம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, அதை இப்போது நினைக்கையில் ஒரு மகிழ்ச்சி வரத்தானே செய்கிறது.

      Delete
  6. பட்ட கஷ்டத்தைக் கூட அழகா நகைச்சுவையா கொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க எழில், முன்பு பெரிய விஷயமாக இருந்த‌து இப்போது நகைச் சுவையாகத் தோணுவது இயல்புதானே.

      Delete
  7. சூப்பர்ங்க....:)) நீங்க வெளிநாடு! நான் வெளிமாநிலம்! ஆனா பல்ப் எல்லாம் ஒண்ணு தான்....:)) நானும் இந்த மாதிரி நிறைய மாட்டிகிட்டு முழிச்சிருக்கேன்....:)) வீட்டுல இவங்ககிட்டயெல்லாம் கேக்கறதும் கேட்காததும் ஒண்ணு தான். ...:)

    அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  8. நான் பெங்காலி, பஞ்சாபி, பீகாரின்னு பலவிதமான மனிதர்களிடம் மாட்டிக் கொண்டு பேந்த பேந்த முழிச்சிருக்கேன். இத்தனைக்கும் ஹிந்தி பள்ளிநாட்களிலிருந்தே எழுத படிக்கத் தெரியும்....:)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஆதி, இடம்தான் வேறே தவிர அனுபவம் எல்லாம் பெரும்பாலும் ஒன்றாகத்தான் இருக்கும்.

      ஓ, உங்களுக்கு ஹிந்தி தெரிந்தும் பிரச்சினையா ? நல்லவேளை அங்கே போகும் வாய்ப்பு எனக்கில்லாமல் போய்விட்டது.

      Delete
  9. ரசித்தேன்... சிரித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், ரசித்துப் பின்னூட்டமிட்டதற்கும் நன்றிங்க.

      Delete
  10. கோகனட் ஹில் ஹ்ஹ சூப்பர். அதுவும் பக்கத்து வீட்டு அம்மணிகிட்ட விளையாடினீங்க பாருங்க....ஹாஹ்ஹஹ்

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அவங்க கோவிச்சிக்க மாட்டாங்க என்ற ஒரு தைரியம்தான். வருகைக்கு நன்றி கீதா.

      Delete
  11. உங்கள் கணவர் உங்களைவிட காமெடி நிறைய பண்ணுவார் போலிருக்கே! எழுதுங்க எழுதுங்க...இதேபோல நிறைய எழுதுங்க!

    ReplyDelete
    Replies
    1. வரிசைப்படுத்துவதென்றால் முதலில் வீட்டுக்காரர், அடுத்து மகள், கடைசியில்தான் நான் வருவேன்.

      வருகைக்கும், உற்சாகப்படுத்தியதற்கும் நன்றிங்க.

      Delete
  12. சூப்பரக இருக்கு சும்மா களைகட்டிடுச்சு சிரிப்பு.....சிரிச்சு மாளவில்லை...நல்லா எழுதி இருக்கீங்க. உங்க வீட்டுக்காரர்....கொடுத்த அனுபாத்தை....பக்கத்து வீட்டுகார அம்மாவுக்கு குடுத்தீங்க பாருங்க. உங்கள சும்மா சொல்லக்கூடாது. ஹஹஹஹஆ.....

    ReplyDelete
    Replies
    1. உமையாள்,

      ஊரிலிருந்து வந்துட்டீங்களா ! சிலவற்றைத் திரும்பிப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி எழுத்திலும் வந்துவிடுகிறது. உங்க பின்னூட்டமும் சுவாரசியமாக உள்ளது.

      Delete
  13. தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
    கைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
    தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
    பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
    எனது மனம் நிறைந்த
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. யாதவன் நம்பி,

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  14. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆறுமுகம் அய்யாசாமி,

      தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். வாழ்த்துக்களுக்கும் நன்றி.

      Delete
  15. அன்பு தமிழ் உறவே!
    ஆருயிர் நல் வணக்கம்!

    இன்றைய வலைச் சரத்தின்,
    திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
    "வலை - வழி - கைகுலுக்கல் - 2"
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
    வாழ்த்துகள்!

    வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
    உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
    உவகை தரும் பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
    தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
    (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி புதுவை வேலு. குழலின்னிசையின் உறுப்பினராகிவிட்டேன்.

      Delete
  16. சுவையான பதிவு... ...வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Anuradha,

      தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி !

      Delete