Monday, March 30, 2015

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ரோஜா !


வசந்த காலமாதலால் உழவர் சந்தையில் ஏகத்துக்கும் செடிகள் விற்பனைக்கு வருகின்ற‌ன. நான் பூண்டு எடுக்கும் கடையில் பெயர் தெரியாத செடிகள் எல்லாம் நிறைய வைத்திருந்தனர்.

அவற்றுள் இந்த குட்டி ரோஜா செடி என்னை மிகவும் கவர்ந்தது. வேறு நிறங்களிலும் இருந்தன. எனக்கென்னமோ அந்த நாளில் என் தோழிகள் தலையில் வைத்துக் கொண்டு வரும் பன்னீர் ரோஜா நினைவுக்கு வரவும் வாங்கிவிட்டேன்.

ஒரு பூத்த பூ, நான்கு மொட்டுக்கள் & மூன்றுநான்கு கண்ணுக்குத் தெரியாத சிறு மொட்டுக்களுடனும் வந்தது.

நாமே விதை போட்டு, தண்ணீர் தெளித்துவிட்டு, அது முளைத்து வரும் அழகோ அல்லது பதியம் போட்டுவைத்த குச்சிகள் காய்ந்து சிலபல நாட்களுக்குப் பிறகு முதல் துளிர் வரும்போது இருக்கும் மகிழ்ச்சியோ, உழைப்போ இதில் இல்லை. ஹும், இருந்தாலும் பரவாயில்லை .

முதலில் வழக்கம்போல் அரிசி, பருப்பு & உளுந்து கழுவிய தண்ணீரைத் தெளித்துவிட்டதால் செடி மட்டுமல்லாமல் பூவுமே அழுக்கான நிலையில் இருந்ததைப் பார்த்ததும் ஒரு முடிவெடுத்து அந்தத் தண்ணீரையே வேர் பகுதியில் விட்ட பிறகு என்ன ஒரு அழகான நிறத்தில் பூத்திருக்கிறது பாருங்கோ !!

முதலில் சாதாரணமான ரோஸ் நிறத்தில் பூத்த‌ பூக்கள், தன்னை எந்நேரமும் ரசிக்க இந்த வீட்டில் ஒரு ஆள் இருப்பதைத் தெரிந்துகொண்டு மீதமிருந்த மொட்டுக்கள் அநியாயத்திற்கு அழகான நிறத்தில் பூத்தன.

ஒருவேளை டீ தூள் செய்த மாயமோ என்னவோ ! பள்ளியில் படித்தபோது தோழிகள் சொன்ன டிப்ஸ்தான் இது.

                      மொட்டு ஒரு அழகு என்றால் ...... பூத்த பூவும் ஒரு அழகுதான் !


                                        சாதாரண நிறத்தில் முதலில் பூத்த பூக்கள் !

பல‌ வருடங்களுக்குப் பிறகான பூ செடி என்பதால் அது 'குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை' கணக்காய் என் அலைபேசியில் சிக்கி படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது.

படாத பாடுபடும் வரிசையில் அடுத்து இணைந்திருப்பது ஜாதிமல்லி ! நன்றாகப் பூக்க ஆரம்பித்த பிறகு அவரும் இங்கே உலா வருவார்.

Thursday, March 19, 2015

என்ன அப்பா இவர் ? ____ (தொடர்ச்சி)

........ அவரது பையனைப் பற்றி நான் சொன்னதும் அவருக்கு என்மேல் இன்னும் பாசம் அதிகமாகிவிட்டது.

தனது வீட்டுக்காரரின் ஆறு மாத ப்ராஜக்ட் மேலும் நீட்டித்திருப்பதால், தான் இங்கு வந்ததாகவும், எப்போது வேண்டுமானாலும் இந்தியா திரும்பவேண்டியிருக்கும் என்றும், அதற்குள் சில இடங்களை சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்றும் கூறினார்.

வாரத்தில் ஒரு நாள்தான் வருவார். சில சமயங்களில் அதுகூட வரமாட்டார். மொத்தமே எண்ணி நான்கைந்து முறைதான் சந்தித்திருப்பேன்.

அம்மா வந்துள்ளதை அவரது பையன் பார்த்துவிட்டால் போதும், விளையாட்டோ அல்லது ஓய்வோ ஓடிவந்து கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விட்டுத்தான் செல்வான்.

தன்னிடம் வருகின்ற பந்தை அவன் அடித்துவிட்டால் எல்லோரும் கை தட்டுவதைப் பார்த்து, மகிழ்ந்து, அடுத்து வரும் பந்தை கண்டு கொள்ளாமல்,  தான் ஏதோ சாதனை நிகழ்த்திய‌துபோல்(சாதனைதான்) சுற்றிலும் ஒரு பார்வை பார்ப்பான் பாருங்கோ ..... அது கொள்ளை அழகாக இருக்கும்.

பயிற்சியாளரோ உடன் விளையாடும் பிள்ளைகளோ யாருமே எதுவுமே சொல்லமாட்டார்கள். மாறாக அவனை உற்சாகப்படுத்துவர்.

இதுவரை எல்லாமும் நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருநாள் வழக்கம்போல் நான் உட்பட பலரும் கோர்ட்டுக்கு வெளியே நின்றும், உட்கார்ந்துகொண்டும் இருந்தோம். நவம்பர் மாதமாதலால் சீக்கிரமே இருட்டத் தொடங்கியிருந்தது.

விளையாடி முடித்த பிள்ளைகள் வழக்கம்போல் பெற்றோர் வந்து அழைத்து போகும்வரை உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர். என் மகள் மாதிரியான வாண்டுகள் பெற்றோர் வந்தும்கூட வீட்டுக்கு போகாமல் தன் தோழமைகள் விளையாடுவதை ரசித்தும், உற்சாகப்படுத்திக்கொண்டும் இருந்தனர்.

திடீரென ஒரு குரல், "ச..... எழுந்து வா" என்ற குரல் கேட்டு திடுக்கிட்டுப் போனேன். திரும்பிப் பார்த்தால் அச்சு அசலாக அந்தக் குட்டிப் பையன் போலவே இருந்தார் ஒருவர். சந்தேகமே இல்லை, இது சாய் அப்பாதான் என்பது புரிந்தது.

அந்த வட்டத்துக்குள் உட்கார்ந்து விளையாடிக்கொண்டிருந்த சாய் தன் அப்பாவின் குரலைக் கேட்டதும் எல்லோரிடம் bye சொல்லிவிட்டு எழுந்து வந்தான்.

அதற்குள் என்ன அவசரமோ, "எரும மாடு மாதிரி வர்றத பாரு, சீக்கிரம் வா" என்றார்.

'அப்பா என்ன சொல்கிறார்' என்பது பையனுக்கு புரிந்ததோ என்னவோ அவனது முகம் சுருங்கிவிட்டது.

இந்தப் பேச்சுக்கள் எல்லாம் நம் ஊரிலும் கேட்டதுதான் என்றாலும், அவையெல்லாம் கோபத்தில் வந்திருக்குமே தவிர, இவ்வளவு வெறுப்பில் வந்திருக்காது.

கிராமத்தில் கேட்காத வார்த்தைகளா ? அல்லது கடைத்தெருவில் நுழைந்தால் கடைக்காரரிடம் பெறாத வார்த்தைகளா ?

அங்கு எல்லோருமே சத்தம் போட்டு பேசுவதால் அவற்றின் வீரியம் தெரியாது. ஆனால் இங்கு ? யாருக்கும் புரியப் போவதில்லை, இருந்தாலும் ?

அடுத்த தடவை அவனது அம்மா வந்தால் 'எப்படி அவரை எதிர்கொள்வது' என எனக்குக் கொஞ்சம் கூச்ச‌மாக இருந்தது.

அடுத்தடுத்த வாரங்களில் சாய்'யையும் காணோம், அவனது அம்மாவையும் காணோம். ஊருக்குத் திரும்பியிருப்பார்களோ !

என் மகளைக் கேட்டபோது, அவனுக்கான சிறப்புப் பள்ளியில் இடம் கிடைத்து சென்றுவிட்டதாகக் கூறினாள்.

நல்லவேளை, சாய் அம்மாவை நான் மீண்டும் சந்திக்காமல் போனேன் !

Tuesday, March 17, 2015

என்ன அப்பா இவர் ?

பள்ளி முடிந்த பிறகு தினமும் நான் பள்ளிக்கு வர வேண்டும், தான் விளையாடுவதை அம்மா பார்க்க வேண்டும் அல்லது பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது இடையிடையே என்னைப் பார்த்து புன்னகைக்க வேண்டும் என்பது மகளின் விருப்பம், என் விருப்பமும்கூட.

இப்படித்தான் மற்ற அம்மாக்களின் வருகையும் இருந்திருக்குமோ !

தினமும் ஆஜராவதால் பெரும்பாலும் எல்லா பெற்றோரையும் ஒருவருக்கொருவர் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும்.

இதெல்லாம் உயர்நிலைப் பள்ளிவரைதான். அதன்பிறகு என்றாவது ஒருநாள் போவதோடு சரி. இதில் என் பெண்ணிற்கு மிகுந்த வருத்தம் உண்டு.

வழக்கம்போல அன்றும் மாலை நான்கு மணியளவில் மகள் படிக்கும் பள்ளியின் விளையாட்டு மைதானத்தை நோக்கி நடையைக் கட்டினேன்.

விளையாட்டு முடியும் தருவாயில் அங்கு புதிதாக ஒரு அம்மா வருகை த‌ந்தார். இன்றுதான் அவரைப் பார்க்கிறேன்.

பார்த்த மாத்திரத்திலேயே அவ‌ங்க 'தமிழ்' என நானும், நான் 'தமிழ்' என அவங்களும் தெரிந்துகொண்டோம்.

புன்னகைக்கிடையில் "நீங்க இலங்கைத் தமிழரா? என்றார்.

எனக்குள் கொஞ்சம் சிரிப்பு, ""ஹைய்யோ, எப்படீங்க கண்டு பிடிச்சீங்க ? " என்றேன்.

"இ ..ல்....ல, பார்த் .... தாலே  தெரியு ... மில்ல, அ ... தா .... ன்" என்று இழுத்தார்.

பிறகு " அங்கு நீங்க எந்த ஊர் ?" என்றார்.

அவர் சொன்ன இலங்கையை சுத்தமாக மறந்துவிட்டு, "பண்ருட்டிக்குப் பக்கத்துல ஒரு சின்ன்ன்ன கிராமம்" என்றேன்.

"ஓ, அங்குகூட ஒரு பண்ருட்டி இருக்கா என்ன‌?" என்றார் ஆச்சரியமாக.

"நீங்கவேற, நம்ம ஊரைத்தான் சொல்றேன்" என்றேன் நான். முதல் சந்திப்பிலேயே ரொம்பவே நெருங்கிவிட்டோம்.

"அப்புறம் ஏங்க நீங்க எங்கிட்ட பொய் சொன்னீங்க ? " என்றார்.

நீங்களே சொல்லுங்க, மேலே நான் ஏதாவது பொய் சொன்னேனான்னு !!

'நான் நல்ல பிள்ளையாக்கும், பொய்யெல்லாம் சொல்லமாட்டேன்' என்பது பாவம் அவருக்கு எப்படித் தெரியும் ?

"நாங்க இந்தியாவுல‌ருந்து சமீபமாத்தான் இங்கு வந்தோம். ஒரு வாரமாத்தான் என் பையன் பள்ளிக்கு வந்துட்டிருக்கான், இருங்க அவனைக் காட்டுறேன் " என்று கூட்டத்தில் த‌ன் பையனைத் தேடினார்.

"அப்படின்னா நீங்க 'சாய்'யோட அம்மாவா?", என்றேன். அவருக்கு வேலை வைக்க வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில் !

"ஆ .... மா ..... ம், சாய் எம் பையன்தான். அவ‌ன உங்களுக்கெப்படித் தெரியும் ?" என்றார் சிறிது சந்தேகத்துடன்.

'மறுபடியும் இவள் நம்மைக் குழப்புகிறாளோ' என்றுகூட அவர் குழம்பியிருக்கலாம்.

விளையாட்டின் இடையில் சிறிது ஓய்வாக இருக்கும் பிள்ளைகள்,  அமைதியாக,  வட்டமாக‌ உட்கார்ந்து நகைச்சுவைத் துணுக்குகளோ அல்லது அவரவ‌ருக்கு விருப்பமான பாடலையோ பாடி நேரத்தை இனிமையாக்க முயல்வர். சில பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருப்பர்.

அப்படித்தான் சென்ற வாரத்தில் ஒருநாள் அவர்களின் மத்தியில் இருந்து 'தீ தீ தீ ஜக ஜோதி ஜோதி ஜோதி' என்ற பாடல் பறந்து வந்தது.

"ஹ்ம் !! யாரது ? " என திரும்பிப் பார்த்தால் நல்ல நிறத்தில், சிரித்த முகத்துடன், அழகான குண்டு பையன் ஒருவன்தான் இந்தப் பாடலைப் பாடி, ஆடிக்கொண்டிருந்தான்.

'பெற்றோரிடமிருந்தும் ஆசிரியரிடமிருந்தும் கொஞ்சமே கொஞ்சம் சிறப்பு கவனம் தேவைப்படும் குட்டிப்பையன் அவன்' என்பதை பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டேன். அவனது கள்ளங்கபடமற்ற, குழந்தைத்தனமான சிரிப்பு அதை சொல்லியது.

பிறகு பையனை விசாரித்து பெயர் தெரிந்துகொண்ட கதையைக்கூறி, "இப்படித்தான் எனக்கு அவனைத் தெரியும். அவனும் புதுசு, நீங்களும் இப்போதான் வந்திருக்கீங்கன்னு வேற‌  சொல்றீங்க, அதனாலதான் கேட்டேன்  " என்றேன் நான் ................ (தொடரும் ).
                                             ~ ~ ~ ~ ~  இடைவேளை  ~ ~ ~ ~ ~

////////////'ஹ் ஹும் ? .... பதிவுக்கும், பதிவின் தலைப்புக்கும் சம்மந்தமே இல்லையே, பதிவில் அப்பா கேரக்டரையே காணோமே' //////// _____ இது நீங்க‌.

///////////  "ஒருசில‌ படங்களில் ஓரிரு நிமிடங்களே வந்தாலும் சிலர் அந்த கேரக்டராகவே மாறி மனதில் பதிந்துவிடுவார்களே, அப்படித்தான் இந்த அப்பாவும், பதிவின் தொடர்ச்சியின் கடைசியில் அவரை அழைத்து வருகிறேனே ! " /////////  _______  இது நான் .
  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Wednesday, March 11, 2015

நினைத்தது ஒன்று, கேட்ட‌து வேறு !

எனக்கு எப்போதும் ஊர் பெயர்களின்மேல் ஒருவித‌ ஈர்ப்பு உண்டு. அது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தால் போதும் அதை நாட்குறிப்பில் எழுதி வைக்கும் பழக்கம் ஒன்று என்னிடமுண்டு.

இதற்கு காரணமில்லாமலில்லை. எங்கள் ஊர் பக்கம் ஏதாவது ஒரு பெயருடன் 'பேட்டை' அல்லது 'குப்பம்' அல்லது 'பாளையம்' என சேர்த்தால் போதும், ஒரு ஊரின் பெயர் வந்துவிடும்.

இட நெருக்கடியால் சிலர் ஊருக்கு வெளியில் வந்து வீடு கட்டினால் அந்த இடம் 'புதுகுப்பம்' அல்லது 'திடீர்குப்பம்' என பெயரெடுத்துவிடும். இது மாதிரி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கிளை ஊர் தோன்றிவிடும். கொஞ்சம் போரடிக்கத்தான் செய்தது.

ஒரு சமயம் திருவண்ணாமலை பக்கம் போகும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு திருவண்ணாமலையைச் சுற்றிலும்  'தாங்கல்' என முடியும் ஊர்கள் நிறைய இருந்தன. எனக்கு அது வித்தியாசமாக இருந்தது.

எந்தப் பேருந்திலாவது அதுபோல் முடியும் ஊர் பெயர்கள் இருந்தால் வழக்கம்போல் எழுதி வைத்துக்கொள்வேன். உடன் பயணிக்கும் தோழிகளையும் உண்டுஇல்லை என்று பண்ணிவிடுவேன். இரண்டொருமுறை பெங்களூர் போனபோதும் அப்படியே.

இதுபோல் இன்னமும் நிறைய பெயர்களை சேமித்திருக்கலாம்தான். ஆனால் அப்போது அதைத்தாண்டி போகும் வாய்ப்பெல்லாம் எனக்குக் கிட்டவில்லை.

முதன்முறையாக அமெரிக்கா வந்தபோது நாங்கள் இருந்த ஊரைத் தவிர சான்ஃப்ரான்சிஸ்கோ மட்டுமே கேள்விப்பட்டிருந்தேன்.

ஒன்று தங்கப்போகும் ஊர், மற்றொன்று விமானம் எங்களை இறக்கி விடும் ஊர். மற்றபடி கேள்விப்பட்டிருந்த‌ ஊர்களான‌ சிகாகோ, நியூயார்க், பாஸ்டன் போன்றவை எங்கேஏஏயோ இருந்தன.

ஒரு சீனியர் தோழி, " இங்கே வெளில எங்கேயும் போனீங்களா சித்ரா ?  எங்கெங்க போனீங்க‌ ?" என்றார்.

"இதுவரை உள்ளூர் மட்டுமே, இங்குள்ள‌ தெருக்களின் பெயர்கள்கூட மனதில் பதிய மாட்டிங்கிது, அடுத்த வாரம்தான் சான்ஃப்ரான்சிஸ்கோ போறோம்" என்றேன்.

"போகப்போக சரியாகிடும் சித்ரா . இங்குள்ள ஊர்களின் பெயர்கள்கூட‌ அழகா இருக்கும். இப்ப சொல்லு, 'மௌண்டன் வியூ' நல்லாருக்கா?"  என்று தூபம் போட்டார்.

"ஹை, சூப்பரா இருக்கே, இன்னும் ஏதாவது பேர் தெரிஞ்சா சொல்லுங்க", என்றேன்.

"'ரெட் வுட் சிட்டி, மென்லோ பார்க் ' இது எப்படி இருக்கு?" என்றார். என்ன அழகான பெயர்க‌ள்.

இதுவரை பூனையாய் பதுங்கியிருந்த மனம் இப்போது புலியாய் சீறிப் பாய்ந்தது.

வழக்கம்போல தெரு, ஊர் பெயர்களை அறியும் ஆவலில் வீட்டிலிருந்த ஊர், மாவட்டம், வட்டம் போன்றவற்றின் வரைபடங்களை வைத்துக்கொண்டு தேடலானேன். ஒவ்வொரு ஊரின் பெயரும் என்னைக் கவர்ந்தன.

தெரு பெயர்கள், ஊர் பெயர்களில் எல்லாம் ஒட்டு மொத்த ஐரோப்பிய நாடுகளின் தாக்கம் இருந்தது. ஆங்கிலப் பெயராக இருந்தால் சிரமமில்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் நினைவில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மன், கிரீஸ் பெயர்களாக இருந்தால் ஏகத்துக்கும் சிரமமாய் இருந்தது.

நம் ஊரில் யாராவது ஒரு தலைவரின் பெயரிலோ அல்லது அங்குள்ள கோயிலின் பெயரிலோதானே தெருக்கள் இருக்கும்! ஆனால் இங்கு ஊரின் பெயரிலேயும், மாநிலத்தின் பெயரிலேயும் தெருக்கள் இருந்தது வித்தியாசமாக இருந்தது.

உதாரணத்திற்கு Fremont Ave, California Dr என்பன தெருக்களின் பெயர்கள்.

இப்போது ஒருவாறாகத் தேறிவிட்டேன். சுத்துப்பட்டு 18 பட்டியைப் பற்றி அந்நேரம் ஒரு தேர்வு வைத்திருந்தால் முழு மதிப்பெண்கள் வாங்கியிருப்பேன்.

எப்படியும் ஊருக்குப் போனதும் எல்லோரும் "எங்கு இருந்தீங்க, நீங்க இருந்த ஊர் பிடிச்சுதா?, பக்கத்துல இருக்கும் ஊர்களைப் பற்றி சொல்லேன்", என்று கேட்கும்போழுது தட்டுத் தடுமாறாமல், பட்டென சொல்லிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன்.

சில மாதங்கள் கழித்து ஊருக்கும் போனேன். நலன் விசாரித்தவர்கள் எல்லோரிடமிருந்தும் என்னை நோக்கிப் பாய்ந்து வந்த கேள்விக் கணைகளோ,                               
                             " நியூயார்க் போனியா? நயாகரா பார்த்தியா?" !!!!!!!                

Tuesday, March 3, 2015

மலரும் வத்தல் நினைவுகள் !



இன்று வத்தல் போடுவதற்காக நேற்றிரவு அரிசிகூழ் செய்து வைத்தேன். அதிகாலை விழித்ததும் போய் வத்தலைப் பிழிந்துவிடலாம் என நினைக்கும்போதே என்னையறியாமலேயே எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. வேறென்ன? மலரும் நினைவுகள்தான் !

ஒரு சமயம் மே மாதத்தில் வத்தல் போடுவதற்காக அம்மா கூழ் செய்து கொடுத்தார்கள்.

ஒரு வயதுகூட நிரம்பாத என் மகள், அதுபோல் இரண்டு வயதுகூட நிரம்பாத ஒரு சகோதரியின் மகன், இவர்களுடன், மற்ற சகோதர,சகோதரிகளின் பிள்ளைகளும் வீட்டில் இருந்தார்கள். இவர்களை வைத்துக்கொண்டு வத்தல் போடுவது எங்களுக்கு மிகப்பெரிய சவால்தான்.

காலையில் அழகாக மல்லிகைப் பூ போன்று இட்லிகளை சுட்டு, சட்னி & சாம்பாருடன் பாடிப்பாடி அழைத்தாலும் இவர்கள் வரமாட்டார்கள். ஆனால் இந்த வத்தலுக்கான கூழை 'இன்னும் இன்னும்' என கேட்டு வாங்கி சாப்பிட்டே காலி பண்ணிவிடுவார்கள்.

அன்று இதற்காகவே பயந்துகொண்டு "யாரும் மெத்தைக்கு(மாடி) வரக்கூடாது, நாங்கள் வரலாம் என்று சொன்ன பிறகுதான் வரவேண்டும்" என்று கண்ணாமூச்சு ஆடுவதுபோல், கொஞ்சம் விஷயம் தெரிந்த‌ பெரிய பிள்ளைகளிடம் சொல்லிவிட்டு, 'பிள்ளைகளை ஏமாற்ற வேண்டாமே' என ஒரு குண்டானில் கூழ் எடுத்து தனியாக மூடி ஆற வைத்திருந்தோம்.

மெத்தை ரூம் கதவு உடைபடாததுதான் குறை. சும்மா போட்டு தட்டுதட்டுன்னு தட்டி, "இப்போ வரலாமா, இப்போ வரலாமா"ன்னு கேட்டு எங்களை 'உண்டுஇல்லை'ன்னு பண்ணிவிட்டார்கள் குட்டீஸ்கள்.

வேகாத அந்த வெயிலில் தலையில் துணியைப் போட்டுக்கொண்டு, வேர்த்து, விறுவிறுத்து  நீளநீளமாக நான்கைந்து காட்டன் சேலைகளில் ஒருவழியாக வத்தல் போட்டு முடித்துவிட்டு, "சரி, இப்போ நீங்க வரலாம்" என்று குரல் கொடுக்கவும், 'திபுதிபு'வென எல்லோரும் மேலே ஏறி வந்தனர்.

சகோதரியின் இரண்டு வயது மகன் என்று சொன்னேனே, அவன் கொஞ்சம் விஷயம் தெரியாத அப்பாவி மாதிரியே இருந்து ஏதாவது விபரீதமாக செய்துவிடுவான்.

வந்தவனுக்கு வத்தலைப் பார்த்ததும் எப்படி இருந்ததோ தெரியவில்லை, ஒரு சேலையின் நுனியில் ஒரே ஜம்ப். அவ்வளவுதான், வழுக்கி வத்தலில் விழுந்தவன் சேலையின் நீளத்தை அளப்பதுபோல் 'சொய்ங்ங்ங்.....' என மறுநுனியில் 'அம்ம்ம்ம்ம்மாஆஆஆ' என கதறினான்.

விழ ஆரம்பித்ததும் சீரியஸாகிப் போன நாங்கள் இருவரும் பிறகு அவன் எழுந்து நின்ற கோலத்தைப் பார்த்து விழுந்துவிழுந்து சிரித்தோம். ஏதோ 'ஃபன்' (fun) என நினைத்து வத்தலில் குதிக்க முற்பட்ட மற்ற மக்களையும் ஒருவழியா கீழே அழைத்து வருவதற்குள் ....... வத்தல் போட்ட சோர்வைவிட இதுதான் எங்களைப் படுத்திவிட்டது.

இதுக்குத்தான் எங்கம்மா அடிக்கடி சொல்லுவாங்க, "நீங்க எல்லோரும் பேசாம போய் உக்காருங்க, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று. ஆனால் அம்மா வேலை செய்வதைப் பார்க்க எங்களுக்குத்தான் மனசு கேக்காது.

வழக்கம்போல அன்றும் அந்த வத்தல் காய்ந்து பொரித்து சாப்பிட்டிருந்தால்கூட மறந்து போயிருப்போம். ஆனால் 'வத்தல்' என்றாலே இன்றும் நினைத்து சிரிக்கும்படி அமைந்துவிட்டது அன்றைய நிகழ்ச்சி.