Wednesday, March 11, 2015

நினைத்தது ஒன்று, கேட்ட‌து வேறு !

எனக்கு எப்போதும் ஊர் பெயர்களின்மேல் ஒருவித‌ ஈர்ப்பு உண்டு. அது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தால் போதும் அதை நாட்குறிப்பில் எழுதி வைக்கும் பழக்கம் ஒன்று என்னிடமுண்டு.

இதற்கு காரணமில்லாமலில்லை. எங்கள் ஊர் பக்கம் ஏதாவது ஒரு பெயருடன் 'பேட்டை' அல்லது 'குப்பம்' அல்லது 'பாளையம்' என சேர்த்தால் போதும், ஒரு ஊரின் பெயர் வந்துவிடும்.

இட நெருக்கடியால் சிலர் ஊருக்கு வெளியில் வந்து வீடு கட்டினால் அந்த இடம் 'புதுகுப்பம்' அல்லது 'திடீர்குப்பம்' என பெயரெடுத்துவிடும். இது மாதிரி ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கிளை ஊர் தோன்றிவிடும். கொஞ்சம் போரடிக்கத்தான் செய்தது.

ஒரு சமயம் திருவண்ணாமலை பக்கம் போகும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு திருவண்ணாமலையைச் சுற்றிலும்  'தாங்கல்' என முடியும் ஊர்கள் நிறைய இருந்தன. எனக்கு அது வித்தியாசமாக இருந்தது.

எந்தப் பேருந்திலாவது அதுபோல் முடியும் ஊர் பெயர்கள் இருந்தால் வழக்கம்போல் எழுதி வைத்துக்கொள்வேன். உடன் பயணிக்கும் தோழிகளையும் உண்டுஇல்லை என்று பண்ணிவிடுவேன். இரண்டொருமுறை பெங்களூர் போனபோதும் அப்படியே.

இதுபோல் இன்னமும் நிறைய பெயர்களை சேமித்திருக்கலாம்தான். ஆனால் அப்போது அதைத்தாண்டி போகும் வாய்ப்பெல்லாம் எனக்குக் கிட்டவில்லை.

முதன்முறையாக அமெரிக்கா வந்தபோது நாங்கள் இருந்த ஊரைத் தவிர சான்ஃப்ரான்சிஸ்கோ மட்டுமே கேள்விப்பட்டிருந்தேன்.

ஒன்று தங்கப்போகும் ஊர், மற்றொன்று விமானம் எங்களை இறக்கி விடும் ஊர். மற்றபடி கேள்விப்பட்டிருந்த‌ ஊர்களான‌ சிகாகோ, நியூயார்க், பாஸ்டன் போன்றவை எங்கேஏஏயோ இருந்தன.

ஒரு சீனியர் தோழி, " இங்கே வெளில எங்கேயும் போனீங்களா சித்ரா ?  எங்கெங்க போனீங்க‌ ?" என்றார்.

"இதுவரை உள்ளூர் மட்டுமே, இங்குள்ள‌ தெருக்களின் பெயர்கள்கூட மனதில் பதிய மாட்டிங்கிது, அடுத்த வாரம்தான் சான்ஃப்ரான்சிஸ்கோ போறோம்" என்றேன்.

"போகப்போக சரியாகிடும் சித்ரா . இங்குள்ள ஊர்களின் பெயர்கள்கூட‌ அழகா இருக்கும். இப்ப சொல்லு, 'மௌண்டன் வியூ' நல்லாருக்கா?"  என்று தூபம் போட்டார்.

"ஹை, சூப்பரா இருக்கே, இன்னும் ஏதாவது பேர் தெரிஞ்சா சொல்லுங்க", என்றேன்.

"'ரெட் வுட் சிட்டி, மென்லோ பார்க் ' இது எப்படி இருக்கு?" என்றார். என்ன அழகான பெயர்க‌ள்.

இதுவரை பூனையாய் பதுங்கியிருந்த மனம் இப்போது புலியாய் சீறிப் பாய்ந்தது.

வழக்கம்போல தெரு, ஊர் பெயர்களை அறியும் ஆவலில் வீட்டிலிருந்த ஊர், மாவட்டம், வட்டம் போன்றவற்றின் வரைபடங்களை வைத்துக்கொண்டு தேடலானேன். ஒவ்வொரு ஊரின் பெயரும் என்னைக் கவர்ந்தன.

தெரு பெயர்கள், ஊர் பெயர்களில் எல்லாம் ஒட்டு மொத்த ஐரோப்பிய நாடுகளின் தாக்கம் இருந்தது. ஆங்கிலப் பெயராக இருந்தால் சிரமமில்லை. கொஞ்சம் மெனக்கெட்டால் நினைவில் வைத்துக்கொள்ளலாம். ஆனால் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மன், கிரீஸ் பெயர்களாக இருந்தால் ஏகத்துக்கும் சிரமமாய் இருந்தது.

நம் ஊரில் யாராவது ஒரு தலைவரின் பெயரிலோ அல்லது அங்குள்ள கோயிலின் பெயரிலோதானே தெருக்கள் இருக்கும்! ஆனால் இங்கு ஊரின் பெயரிலேயும், மாநிலத்தின் பெயரிலேயும் தெருக்கள் இருந்தது வித்தியாசமாக இருந்தது.

உதாரணத்திற்கு Fremont Ave, California Dr என்பன தெருக்களின் பெயர்கள்.

இப்போது ஒருவாறாகத் தேறிவிட்டேன். சுத்துப்பட்டு 18 பட்டியைப் பற்றி அந்நேரம் ஒரு தேர்வு வைத்திருந்தால் முழு மதிப்பெண்கள் வாங்கியிருப்பேன்.

எப்படியும் ஊருக்குப் போனதும் எல்லோரும் "எங்கு இருந்தீங்க, நீங்க இருந்த ஊர் பிடிச்சுதா?, பக்கத்துல இருக்கும் ஊர்களைப் பற்றி சொல்லேன்", என்று கேட்கும்போழுது தட்டுத் தடுமாறாமல், பட்டென சொல்லிவிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன்.

சில மாதங்கள் கழித்து ஊருக்கும் போனேன். நலன் விசாரித்தவர்கள் எல்லோரிடமிருந்தும் என்னை நோக்கிப் பாய்ந்து வந்த கேள்விக் கணைகளோ,                               
                             " நியூயார்க் போனியா? நயாகரா பார்த்தியா?" !!!!!!!                

22 comments:

  1. அடடா...! "தேர்வு" சரியில்லையோ...?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா, out of portion ல இருந்து கேட்டா நான் என்ன பண்ணுவது ?

      Delete
  2. வித்தியசமான சிந்தனை ............

    ReplyDelete
  3. வணக்கம்
    எங்கு வாழ்ந்தாலும் நம்ம ஊர் போல வருமா.... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்தக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான், எங்கு போய் சுற்றி வந்தாலும் நம்ம ஊருக்கு நிகர் இல்லைதான். நன்றி ரூபன் .

      Delete
  4. ஹஹஹாஹஹ்ஹ....இதுதாங்க நாம நினைக்கறது ஒண்ணு...நம்ம சுத்தி இருக்கும் பந்தங்கள் கேட்டு நம்மள பல்பு வாங்க வைச்சுடும்.....பரவாயில்லை நீங்க தேறிட்டீங்கல்ல....

    ReplyDelete
    Replies
    1. எங்கங்க, தேர்ச்சியாகாததால் வந்த ஆதங்கம்தான் பதிவாகிவிட்டது !

      இது கீதாவா அல்லது துளசிதரனா ? இப்போ நெஜமாவே குழம்பிட்டேங்க, ஆனாலும் துளசிதரன்'தான் என்று கண்டுபிடித்ததாக நினைக்கிறேன்.

      Delete
  5. என் மனதிலும் அதே கேள்வி தான் சித்ரா. நியு யார்க் போனீங்களா? நயாகரா பார்த்து விட்டீர்களா?
    ஆமாம்..... நீங்கள் சமீபத்தில் ஜோசியம் பார்த்த போது, உங்களுக்கு White Houseற்குக் குடியேறும் யோகம் இருப்பதாக சொன்னதாக நினைவு. சரி தானே ! ஜோசியம் பலிக்கட்டும்! . ( கோபித்துக் கொள்ள வேண்டாம்.)(LOL)

    ReplyDelete
    Replies
    1. ஜோஸியம் பலிக்க வேண்டாங்கோ, பஸ்ஸில் போகணும், ஆட்டோ பிடிக்கணும், கடைத்தெரு கூட்டத்தில் நுழையணும், வழியில் திடீரென தெரிந்தவர் வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கணும், அப்புறம் முக்கியமா உங்க எல்லாருடைய வலைப்பூவுக்கும் வரணும், ... இதுமாதிரி நிறைய இருக்குங்க‌. அதனால வேண்டாம்.

      இன்னமும் போகலீங்க. ஏதாவது ஒரு காரணத்தால் போக முடியாமல் போகிறது. எவ்ளோஓஓ கோபத்தோட எழுதியிருக்கேன் பாருங்க :)

      பின்னூட்டத்தைப் பார்த்ததும் ஜாலியாயாச்சு. நன்றிங்கோ.

      Delete
  6. உங்க வலைப்பூ எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா. உங்கள் ஒவ்வொரு பதிவும், ரொம்ப எதார்த்தாமா, ஒரு அனுபவமா, படிப்பவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களை நினைத்துப் பார்க்கத் தூண்டுற மாதிரி அருமையா இருக்கு. நான் உங்கள் பதிவினைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் "அட ஆமால்ல..." இப்படி நம்ம வீட்டில் கூட நடந்திருக்கே என்று நினைத்து நினைத்து சிரித்திருக்கிறேன். :-)
    உங்க ஒவ்வொரு போஸ்டையும் தவறாமல் படித்தாலும், இது வரை எந்த கமெண்டும் போட்டதில்லை. இன்று இந்த ப்ளாக் படித்தபோது எனக்கு ரொம்பவே சந்தோசம், ஏதோ சொந்தக்கரங்கள கண்டுபிடிச்ச மாதிரி (நீங்கள் சொன்ன இடங்களை வைத்து நீங்க பே ஏரியாவில் வசிக்கிறீர்கள் என்று ஊகித்தேன்) .
    முதலில் "அக்கா நானும் அப்பப்போ வலைப்பூவில் எழுதுவேன்"னு சொல்லி, ப்ளாக் லிங்க்க குறிப்பிடலாம்ன்னு நினைச்சேன் (அது என்னமோ நானா சுய தம்பட்டம் அடிக்கற மாதிரி இருந்துச்சு). இருந்தாலும், நீங்க எப்போவாவது என்னோட ப்ளாக பார்த்து இருப்பிங்களோ என்ற நப்பாசையில், உங்களுடைய "வாசிக்கும் வலைப்பூக்கள்" பகுதியில தேடித்பார்தேனா, என்னோட blog பேரும் இருந்துச்சு. எனக்கு நிஜமாவே "செம ஹாப்பி" ன்னு சொல்ல முடியாது. இது அதுக்கும் மேல... :)

    ReplyDelete
    Replies
    1. சரண்யா,

      "நீங்கள் சொன்ன இடங்களை வைத்து நீங்க பே ஏரியாவில் வசிக்கிறீர்கள் என்று ஊகித்தேன்" _____ நீங்கல்லாம் இப்படி யூகிப்பீங்கன்னு தெரிஞ்சுதான் ரொம்ம்ம்ப தூஊஊரத்துல இருக்குற‌ ஊர்களாப் பார்த்து தெரிவு செஞ்சு எழுதினேனாக்கும் :) வெளியூர் வந்தபிறகு எல்லோருமே சொந்தக்காரங்கதான்.

      நானும் உங்க ப்ளாக்(Saranya's crafts (Tamil) ) பக்கம் வந்து கமெண்ட் போட பலமுறை முயற்சித்தும் கமெண்ட் பாக்ஸையே காண‌வில்லை. இப்போ சரியாயிடுச்சான்னு தெரியல.

      நீங்க இங்கே வந்ததில் எனக்கும் அளவற்ற மகிழ்ச்சி. ஆஹா, சொந்தத்தின் என்ணிக்கையில் ஒன்று கூடியாச்சு ! நன்றி சரண்யா !

      Delete
    2. என்னது ரொம்ம்ம்ப தூஊஊரத்துலா....? நீங்க சொன்னா நம்பறோம் ! :)
      என் பிளாக்-ல இப்படியொரு பிரச்சனை இருக்கறது எனக்குத் தெரியல, நான் செக் பண்றேன், தெரிய படுதினதுக்கும், reply போட்டதுக்கும் சேர்த்து எனது நன்றிகள் அக்கா !

      Delete
    3. சரண்யா,

      நீங்க நம்பினதை நானும் நம் பிட் டேஏஏன் :)

      மாலைக்குள் மீண்டும் ப்ளாக்'கை வந்து பார்க்கிறேன்.

      Delete
  7. நான் அப்பா அலுவலா வேறு ஊருக்கு சென்றால் நானும் போவேன்.அதனால என் ப்ரெண்ட்ஸ்(4) குரூபில் எனக்கு ஓரளவு ஊர் தெரியும் இது ஊர்ல. க்ளாஸ்ல நாங்க பேசும்போது ஊர்களை ஆங்கிலத்தில் மாற்றி வித்தியாசமா பேசுவோம். மற்றவர்கள் ஙே.. ன்னு விழிப்பாங்க.இங்கும் ஊர்களின் பெயரை ஆட்கள் வைத்திருப்பாங்க. சிலதை தமிழில் நினைத்தால்.............சிரிப்பா இருக்கும். நினைவை மீட்டமைக்கு நன்றி சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியசகி,

      ஓ, அப்போதே உங்களுக்கு நிறைய ஊர் பெயர்கள் தெரிஞ்சிருக்கு. வட்டமாக உட்கார்ந்து சினிமா படங்களைப் போலவே ஊர் பெயர்களையும் எழுத்துக்கள் சொல்லி கண்டுபிடித்து விளையாடியதுண்டு.

      நானும் நினைப்பதுண்டு ஊர் பெயரில் ஆட்களின் பெயர்களா ? அல்லது ஆட்களின் பெயரில் ஊர் பெயர்களா ? என்று. ஒருவேளை இப்போதுதான் நாம் இங்கு வந்திருப்பதால் நமக்குத்தான் தெரியலையோ ! ஐரோப்பிய நாட்டிலுள்ள ஊர் பெயர்கள் எல்லாம் அப்படியே இங்கு ஊருக்கும், தெருவுக்கும் வச்சிருக்காங்க.

      நம்மை வைக்கச் சொன்னால் 'மாரியம்மன் கோவில் தெரு, காமராஜர் வீதி' என்றெல்லாம் வைக்க மாட்டோமா என்ன ! அப்படித்தான் போலும். நன்றி ப்ரியசகி.

      Delete
  8. நல்ல சிந்தனை சித்ராக்கா.

    ReplyDelete
  9. நான் போனாலும் கேட்பாங்க பேர்லின் பக்கமா, போயிருக்கிறீங்களா என. ஆனா எனக்கும் capital போகோனும் என விருப்பபட்டு போய்வந்தாச்சு. நாங்களும் இன்னமும் கனடா,அமெரிக்கா பக்கம் வரல. அஅவுஸ்ரேலியா பக்கம் போய் வந்திருக்கோம். நன்றாக எழுதியிருக்கிறீங்க சித்ரா.

    ReplyDelete
    Replies
    1. நீங்கதான் எகிப்துக்கே போயிட்டு வந்துட்டீங்களே. நான் இங்கு லாஸ்ஏஞ்சலஸ் தவிர எங்கும் போனதில்லை.

      நான் முதன்முதலா வந்தப்போ உங்க நாடு(Frankfurt) வழியாதான் வந்தேன். உங்களை முன்பே தெரிஞ்சிருந்தா ப்ரியசகி நாட்டிற்கு வந்திருக்கோம்னு நெனச்சிருப்பேன். இப்பவும் உங்க ஊர் டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சானலைப் பார்க்கும்போது ஜெர்மன் நினைவுக்கு வராது, 'நம்ம ப்ரியசகி ஊர் நிகழ்ச்சி' என்றுதான் பார்ப்பேன். நன்றி ப்ரியசகி.

      Delete
  10. ஆஹா...வித்தியாசமாக நன்றாக இருக்கிறதே...பாதிவூர் பெயர் மறந்து போகுது

    இப்போ இங்கே வாயிலயே நுழைய மாட்டேன்ங்குது பெயர்...உங்கள் பதிவும் + கமண்டும் அபார ஸ்வாரஸ்யம் சித்ரா...

    ReplyDelete
    Replies
    1. உமையாள்,

      சரிதான், என மகள் ஆப்பிரிக்கக் கண்டம் பற்றி படித்தபோது ஒரு ஊர்கூட வாயில் நுழையவில்லை.

      வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி உமையாள்.

      Delete