Tuesday, April 28, 2015

வானத்தின் வர்ண ஜாலம் _ 1


குளிர்காலத்தில் வானம் அப்படியே எடுத்துப்போட்ட மாதிரி ஒரே பழுப்பு நிறமாக இருக்கும். மற்ற சமயங்களில் மேகமே இல்லாமல் ஒரே நீல நிறமாக இருந்து சலிப்படைய வைக்கும்.

வசந்தத்தில்தான் வானம் மேக மூட்டத்துடனும், சூரியனின் தோற்றம் & மறைவின்போது வித்தியாசமான நிறங்களுடனும் ரசிக்கும்படி இருக்கும்.

எங்கள் வீட்டிலிருந்து மறைவின்போது வானம் நடத்தும் நாடகத்தை மட்டுமே பார்க்க முடியும். கிடைத்தவரை என்ஜாய் பண்ண வேண்டியதுதான் என்பதால் அழகான மாலை நேரத்தை சில சமயங்களில் க்ளிக் பண்ணி வைப்பேன்.

சமீபத்தில் அவ்வாறு க்ளிக் பண்ணிய படங்கள்தான் இவை.

 

Saturday, April 25, 2015

இன்பச் சுற்றுலா _ 4

விடுதியில் தங்கி படித்தபோது பல சுற்றுலாக்கள் சென்றோம். சிக்கனம் கருதி அப்பாவுக்கு உதவுவதாக நினைத்து நாங்களாகவே சில சுற்றுலாக்களைத் தவிர்த்துவிட்டோம். அவற்றுள் கடைசியாக சென்ற சுற்றுலா மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது.

ஒவ்வொரு வகுப்பும் ஒவ்வொரு ஊருக்குத்தான் செல்லுவார்கள். ஏனோ அந்த தடவை மட்டும்  10 & 12 வகுப்புகள் ஒன்றாக செல்ல ஏற்பாடானது. அப்படியானால் ..... அப்படியானால் ....... சகோதரியுடன் செல்வேன். நினைக்கும்போதே சந்தோஷமாக இருந்தது.

தனியாகப் போனால் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும், அதுவே சகோதரியுடன் போனால் அவர் நம்மைப் பார்த்துக்கொள்வார் என்பதால்தான். இப்போதும் இந்த பாதிப்பு என்னுள் உண்டு :(

செல்லப்போவது திருச்சி என்றதும் என் சகோதரிக்கு ஒரு யோசனை. "ஏன் (தாய்)மாமாவை அங்கு வந்து நம்மை பார்க்கச் சொல்லக்கூடாது" என்று.

அவர் இராணுவத்தில் இருந்ததால் அவரைப் பார்க்கவோ, பேசவோ எனக்கு பயம். அதனால் மனதுக்குள் "வேண்டாமே" என்றிருந்தது.

சகோதரி வழக்கம்போல் இன்லேண்ட் லெட்டரின் முதல் முழு பக்கத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டு பின்னால் உள்ள பக்கத்தை எனக்கு ஒதுக்கினார்.

நானும் ஏதோ இரண்டு முழு பக்கக் கட்டுரையை நான்கைந்து வரிகளுக்கு மிகாமல், கருத்து மாறாமல் எழுதச்சொன்ன மாதிரி அவர் எழுதியதையே சுருக்கி நான் எழுதினேன். ஒட்டி போட்டுவிட்டு பதிலுக்காகக் காத்திருந்தோம்.

நல்லவேளை, சுற்றுலா செல்லும் நாள்வரை பதில் வரவில்லை. 'அப்பாடா, தப்பித்தோம்' என்றிருந்தது எனக்கு.

நான்கு பேருந்துகளில் சென்றோம். வழியில் நிறுத்தி காலை உணவாக ப்ரெட் ஜாம் சாப்பிடக் கொடுத்தனர்.

சமயபுரம் சென்று மாரியம்மனை வணங்கிவிட்டு, அங்கிருந்து நேரே கல்லணையில் இறக்கி விடும்போது 'பனிரெண்டு மணிக்கெல்லாம் தண்ணீர் வசதி இருக்கும் இடமாகப் போய்ப் பார்த்து சாப்பிடுவோம், அதுவரை சுற்றிப் பாருங்கள் ' என்று கூறி எங்களை அவிழ்த்துவிட்டனர்.

அவ்வளவுதான், கல்லணை முழுவதும் மாணவிகள். அணையின் குறுக்கே நடக்கும்போது சிலீரென்று எழும்பி அடித்த சாரலால் பலமுறை மீண்டும்மீண்டும் குறுக்கே ஓடினோம். கீழே பார்த்தால் தண்ணீரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து துள்ளிக் குதித்த மீன்களை ரசித்தபடியே வந்தோம். ஆங்காங்கே இருந்த சிலைகளையும், பசுமையையும் ரசித்தோம்.

மாமாவுக்குக் கடிதம் போட்டதோ, பதில் வராததோ அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. எனக்குத் தேவை 'மாமா அங்கே வரக்கூடாது' என்பதுதான். என் வேண்டுதல் நிறைவேறியதில் அளவிலா மகிழ்ச்சி.

இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டிருந்தோம். இடையில் 'அக்க்க்காஆஆஆ' என ஒரு குட்டிப்பெண் ஓடிவந்து கைகளைப் பற்றிக்கொண்டாள். அவளைப் பார்த்ததும் ஏகத்துக்கும் சந்தோஷம், ஆனாலும் அவளின் அப்பா வந்திருப்பாரோ என கவலையும் தொற்றிக்கொண்டது.

"'மாமா'வால வர முடியல, அதனாலதான் நானும் பாப்பாவும் மட்டும் வந்தோம்" என அக்கா(மாமாவின் மனைவி) சொன்னதும்தான் எனக்கு உயிரே வந்தது.

அக்கா அல்வாவும், மிக்ஸரும் செய்து கொண்டு வந்திருந்தார். சாப்பிட சாப்பிட அமுதமாய் இனித்தது. ஆமாம், அக்காவைப் போலவே அவரது சமையலும் சூப்பராக இருக்கும். பழங்கள் எல்லாம் வாங்கி வந்திருந்தார். ஏதேதோ கதைகளை எல்லாம் பேசிக்கொண்டே காலி பண்ணினோம்.

சிறிது நேரத்திற்குப் பிறகு "வீட்டு சாப்பாடு சாப்பிடுவோமே" என்று சொல்லி இட்லி, தக்காளி சட்னியை எடுத்துக் கொடுத்தா

சின்ன வயசுல‌ சாதாரணமாகவே எனக்கு இட்லி பிடிக்காது. அதுவும் மதிய நேரத்தில் ...?  'வேண்டாம்' என சொல்ல எனக்குக் கூச்சம்.

அதற்குள் மாணவிகளும் உணவுப் பொட்டலங்களுடன் ஆங்காங்கே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். எங்களுக்கும் இரண்டு சாப்பாட்டுப் பொட்டலங்கள் கொடுக்கப்பட்டன. அவர்களுடன் சேர்ந்து புளி சாதத்தையும் உருளைக் கிழங்கையும் ஒரு பிடி பிடிக்க வேண்டும்போல் இருந்தது.

சாப்பாட்டு பார்ஸலில் இரண்டு பேர் சாப்பிடும் அளவில் புளி சாதமும், அதில் பாதியளவிற்கு உருளைக்கிழங்கு பொரியலும் இருக்கும். இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது 'ஆஹா' என்றிருக்கும். முட்டை வேண்டுமென்றாலும் வாங்கிக்கொள்ளலாம். ஆனால் யாரும் முட்டையைக் கேட்கமாட்டோம்.

"சாதத்த என்னக்கா செய்யிறது ?" என்று சகோதரி கேட்டதும், சுவைத்துப் பார்த்துவிட்டு, "நல்லாதான் இருக்கு, வீணாக்க வேண்டாம், உங்க அக்கா பொண்ணுங்க உங்களுக்கு ஆசையா சாப்பாடு கொடுத்து அனுப்பி இருக்காங்கன்னு மாமாகிட்ட கொடுக்கிறேன்" என்று சொல்லி எடுத்துக்கொண்டார்.

"போகுதே போகுதே புளிசாதம் போகுதே" என மனம் வயலின் வாசித்தது.

நீண்ட நேரம் எங்களுடன் இருந்துவிட்டு, நாங்க எல்லோரும் உச்சி பிள்ளையார் கோவிலுக்குக் கிளம்பும்போது பிரியா விடை கொடுத்துப் பிரிந்தார்.

அன்று மட்டுமல்ல, பல ஆண்டுகள் கழித்து இன்றும்கூட அந்த கடைசி புளிசாதத்தையும் , உருளைக்கிழங்கையும் மிஸ் பண்ணிவிட்டேனே என்ற வருத்தம் உண்டு.

2001 ல் என் சகோதரியோடு மீண்டும் கல்லணை போனபோது பழைய உற்சாகம் வந்துவிடாதவாறு என் மகளும், அவரது பிள்ளைகளும் பார்த்துக்கொண்டார்கள். இவர்களை மேய்க்கவே எங்களால் முடியவில்லை. தண்ணீரும் வறண்டு ஒருவித கெட்ட நாற்றம் அடித்துக்கொண்டிருந்தது. அங்கு இருக்கவே பிடிக்கவில்லை.

எங்களுடன் வந்திருந்த‌ அம்மாவிடம், "எல்லாம் அக்கா பண்ண வேல, கடைசி புளி சாதத்த சாப்பிடாமப் போயிட்டேன். லெட்டர் போடாமலே இருந்திருக்கலாம்" என்று சீண்டினேன். இது அடிக்கடி நான் சொல்லும் டயலாக்'தான்.

அவரும் வழக்கம்போல, "இன்னமும் மறக்கல பாரேன். இவள யாரும்மா புளிசாதம் சாப்பிட வேணாம்ணு சொன்னது? நான் இட்லியே சாப்பிட்டுக்கிறேன்னு சொன்னது யாரு?" என்றார்.

    *********************************************************************************
அதன் பாதிப்போ என்னவோ நான் எப்போது புளி சாதம் செய்தாலும் உடன் உருளைக்கிழங்கும் இருக்கும். கூடவே சர்க்கரைப் பொங்கலும் சேர்த்து சாப்பிட சுவையோ சுவைதான். நீங்களும் கொஞ்சம் சாப்பிட்டுப் பாருங்க !
        
       ********************************************************************************

Tuesday, April 21, 2015

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ஜாதிமல்லி .... தொடர்ச்சி


                                                           முதல் இரண்டு பூக்கள் !!

  'என்ன்ன, உங்க வீட்டுப் பூக்கள் எல்லாம் மேலேதான் பார்க்குமா' என்கிறீர்களா ?

அப்படியெல்லாம் இல்லீங்கோ, நீல நிறப் பிண்ணனியில் எடுத்ததால் எல்லோருமே மேலே பார்க்க வேண்டியதாயிற்று. இதோ உங்களையும் பார்த்துப் புன்னகைக்க வந்  தாச்  சூஊஊ !
இப்பதிவிலுள்ள சதுர, செவ்வக வடிவமெல்லாமே நான் எடுத்ததுதான். கத்தரி போடும்போது செவ்வகம் சதுரமாகிவிட்டது.

Monday, April 20, 2015

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் _ ஜாதிமல்லி !


நீண்ட நாட்களாக ஜாதிமல்லி செடி வாங்க வேண்டுமென ஆசை. அடிக்கடி வீடு மாற வேண்டுமென்பதால் வாங்காமலேயே இருந்தேன். ஆனால் மார்ச் 20ந் தேதி சரியாக ஒரு மாதம் முன்பு உழவர் சந்தையில் இதைப் பார்த்ததும் வாங்காமல் வர மனசில்லை.

கடைக்காரர் இப்படித்தான் ஒரு காகிதப் பையில் போட்டுக் கொடுத்தார்.

வாங்கியபோது இருந்த மொட்டுக்கள் எல்லாம் கருகிப்போய் கொஞ்சம் கொஞ்சமாக புது மொட்டுக்கள் வைத்து அழகாக பூக்க ஆரம்பித்துவிட்டது.

                              நிழலில் தும்பி மாதிரி அழகா இருக்கு இல்லீங்களா !!

நிழல் உலகில் உலவும் இப்பூக்களை அடுத்த பதிவிலேயே வெளிச்சத்துக்கு அழைத்துக்கொண்டு வருகிறேனே !!

Thursday, April 16, 2015

ரோஜாப் பூந்தோட்டம் !


எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் உள்ள ரோஜா தோட்டத்துக்குப் போவோமா? நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை, அதனால பர்ஸைப் பற்றி கவலைப்படாம வாங்கோ!!

இதுதான் நுழைவாயில். நாங்கள் போன‌போது இரண்டு ஜோடிகள் தங்களின் ஃபோட்டோ ஷூட்டை முடித்துவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தனர். ஒரு ஜோடி வாசலில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்ததால் வாயிலை முழுமையாக எடுக்கவில்லை.

நேரே water fountain ஐப் போய் பார்த்துவிட்டு பிறகு நாலாபுறமும் சிதறி ஓடிப்போய் பூக்களை ரசித்து முடித்து, அல்லது நடந்துநடந்து கால்வலி வந்ததும் தொலைந்து போய் விடாமல் நேரே வாயிலை நோக்கி வந்திடுங்க. ஐந்தரை ஏக்கர்தான் என்பதால் தொலைய வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

பூக்களைவிட சுத்தமான இட‌மும், செடிகளை கவனமாக ட்ரிம் செய்யப்பட்ட அழகும் கவர்ந்தன.

ஒரு பூ பூத்தாலே கொள்ளை இன்பம், அவ்வளவு பூக்களையும் ஒருசேரப் பார்த்தபோது ..... தோட்டத்தை விட்டு வெளியே வரவே மனசில்லை.

செவ்வக வடிவிலான படங்கள் நான் எடுத்தவை, சதுரமானவை எல்லாம் (காசா ? பணமா ?) ஆத்துக்காரரிடமிருந்து வாங்கிக் கொண் டேன்.