Wednesday, April 8, 2015

இன்பச் சுற்றுலா _ 3


ஆறிலிருந்து ஏழாம் வகுப்புக்கு வந்தாச்சு. 'இந்த வருடம் எந்த ஊருக்கு நம் வகுப்பை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வார்கள்' என மாணவிகளுக்குள் பல கருத்துக்களை சொல்லிக்கொண்டோம்.

அறிவியலோ, வரலாறோ எந்தப் பாடத்தைப் பற்றி படித்தாலும் அது சம்பந்தமான ஊருக்குப் போவோமோ என்று  சொல்லி சிரிப்போம்.

இப்போது வருடத்துக்கு இரண்டு சுற்றுலாவானது. ஒன்று கல்வி சம்மந்தமானது, இன்னொன்று ஜாலிக்கானது. இப்படித்தான் நிறைய இடங்களுக்குப் பயணமானோம்.

நாங்கள் சுற்றுலாவாக செல்லுமிடம் நெய்வேலி என்பதை ஒருவழியாக முடிவுசெய்து வகுப்பாசிரியை சொன்னபோது எனக்கு ஒரே மகிழ்ச்சி. அதற்கு காரணமில்லாமல் இல்லை. இதுவரை எனக்கு நெய்வேலி என்பது எட்டாக் கனியாகவே இருந்துவந்தது.

அப்போதெல்லாம் பண்ருட்டியிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் போகும்போது காடாம்புலியூர் தாண்டியதுமே பேருந்திலுள்ள பெரும்பாலானவர்கள் சொல்வது, " ஆர்ச் கேட் வரும் பாரு, அதுக்குள்ள போனா அதுதான் நெய்வேலி டவுன்ஷிப்" என்பார்கள்.

அதனால் அதற்குள் போக வேண்டுமென ஆவலாக இருக்கும். வெளியிலிருந்து பார்க்கும்போதே ஏதோ காடு மாதிரி இருக்கும்.

அதுவுமில்லாமல் உடன் படித்த நெய்வேலி மாணவிகள்வேறு 'அப்படி இப்படி' என்று ஏகத்துக்கும் உசுப்பேத்தி விட்டதால், அங்கு போவது ஒரு கனவாகவே இருந்தது. கனவு பலிக்கப் போவதால் நெய்வேலி சுற்றுலாவுக்கு ஆயத்தமானேன்.

சென்றமுறை போல் இல்லாமல் இந்த தடவை நல்ல பிள்ளையாக அப்பாவிடம் மட்டுமே பணம் கேட்டு வாங்கி கட்டியாகிவிட்டது.

அதிகாலையே இரண்டு பேருந்துகளில் எங்களை நிரப்பிக்கொண்டு நெய்வேலிக்குக் கிளம்பினார்கள் எங்களின் ஆசிரியைகளும், வார்டன்களும். வழியிலுள்ள முந்திரிக் காடுகளை ரசித்துக்கொண்டே போனோம். ஒருசில மாணவிகள் 'அங்குதான் அசம்பாவிதங்கள் நடக்கும்' என்று ரசிக்க விடாமல் தடுத்த‌னர்.


சுரங்கப் பகுதிக்கு செல்ல முன்கூட்டியே அனுமதி வாங்கியிருந்தாலும் ஓரிடத்தில் பேருந்துகளை நிறுத்திவிட்டு ஆசிரியைகள் மட்டும் உள்ளே சென்று மீண்டும் எங்களிடம் வந்து, இரண்டிரண்டு பேராக கை கோர்த்துக்கொண்டு வருமாறு சொல்லவும், கை கோர்த்துக்கொள்வதில் ஒரு பெரிய அரசியலே நடக்கும்.

"எனக்கு நீ ஃப்ரெண்ட் இல்லையா ? உனக்கு நான் ஃப்ரெண்ட் இல்லையா ?" என ஒரு பெரிய சலசலப்பு தோன்றி மறைய சில நிமிடங்களாவது ஆகும். இதனால் பயணம் முழுவதுமே 'உம்'மென்று வருபவர்களும் உண்டு.

மேலேயிருந்து சுரங்கத்தைப் பார்த்தோம். மனிதர்களும், வாகனங்களும் சிறிய அளவில் தெரிந்தனர். எங்கும் 'கன்வேயர் பெல்ட்'டில் கரிய நிறத்தில் நிலக்கரி பயணமாகிக் கொண்டிருந்தது. பிறகு உரங்கள் தயாரிக்கும் இடத்திற்கு அழைத்து சென்றதாக நினைவு.

பிறகு நண்பகலில் தெருவிலுள்ள மரத்தடியில் சாப்பிட வைத்து விளையாட விட்டுவிட்டனர். ஜாலியோ ஜாலிதான்.

கேள்விப்பட்ட மாதிரியே தெருக்கள் எங்க ஊர் மாதிரி வளைந்துவளைந்து இல்லாமல் நேராக சென்ற‌து நன்றாக இருந்தது. ஒவ்வொரு வீடும் அடர்ந்த மரச்சூழலில் இருந்தது ரம்மியமாக இருந்தது.

அடுத்து வடலூர் நோக்கி பயணமானோம். அங்குள்ள பீங்கான் தொழிற்சாலையைப் பார்வையிட்டோம்.

மாலை "வாடிய பயிரை கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய வள்ளலாரின் சத்திய ஞான சபைக்கு சென்றோம். அணையா விளக்கைப் பார்த்தோம்.

அவருடைய வாழ்க்கை வரலாறை சிறுசிறு உருவங்களில் சிறுசிறு கண்ணாடி அறைகளில் வரிசையாக வைத்திருந்தனர். உஷ்ஷ்ஷ் ! சத்தம் போடாமல் பார்த்துவிட்டு வெளியேறினோம்.

வெளியில் வந்ததும் ஒரு பூட்டிய அறையைக் காட்டி அவர் ஜோதியான இடம் அதுதான் என்றனர். இன்னொரு பூட்டிய அறையையும் காட்டி 'இதில் சுரங்கப்பாதை இருக்கிறது' என்றனர்.

அங்கிருந்த ஒரு மரத்தையும் காட்டி 'பன்னிரண்டு வருடங்களுக்கொரு முறைதான் காய்த்து பழுக்கும்' என்றனர்.

"அந்த வருடம் இதுவாக இருந்திருக்கக் கூடாதா" என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

இருட்டிவிட்டது, விடுதிக்குத் திரும்பியாச்சு.

பள்ளியில் இனி எப்போதாவது நெய்வேலிக்கு டூர் என்றால் எஸ்கேப் ஆகிவிட வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டேன். உற்சாகமாக போன எங்களுக்கு இந்த சுற்றுலா கொஞ்சம் போரடிக்கத்தான் செய்தது.

நெய்வேலிக்கு போனதன் அடையாளமாக அங்கு உதித்த சூரிய உதயத்தையாவது ரசிப்போமே !

14 comments:

 1. சிறப்பான இடத்திற்கு சென்று வந்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி தனபாலன்.

   Delete
 2. எங்க பாடசாலையில் தூர இடத்திற்கு டூர் போக அப்பா அனுமதித்ததில்லை. ப்ரெண்ட்ஸ் வந்து கதைகள் சொல்லும்போது கடுப்பாவே இருக்கும்.பின்னாடி பிரச்சனைன்னு வந்ததால் அதுவும் இல்லாமல் போய்விட்டது.
  அக்கா வாங்கிதந்த பொம்மை,ப்ளாஸ்டிக் டப்பா என உங்க அனுபவங்களை எத்தனைதூரம் ஞாபகம்வைத்து எழுதியிருக்கிறீங்க சித்ரா.சூப்பர்.
  // கை கோர்த்துக்கொள்வதில் ஒரு பெரிய அரசியலே நடக்கும். // ஹா.ஹா..ஹா..செம.
  இது எங்களுக்கும் நடந்திருக்கு..செம ஜாலியா இருக்கும்.
  நெய்வேலி டூருக்கு றோயல் கோச் விட,சித்ரா பஸ் சர்வீஸ் ரெம்ப சீப்,ஆஆ? !!!!
  நல்ல இனிமையான சுற்றுலா.சூரிய உதயம் மிக மிக அழகாயிருக்கு சித்ரா. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஃப்ரெண்ட்ஸ் உடன் போவதுதான் ஜாலி. ஆனாலும் உங்க அப்பா அனுமதிக்காததற்கான காரணம் புரிகிறது. தூரமெல்லாம் இல்லை ப்ரியச‌கி, பக்கத்திலேயேதான் போனோம், ஆனாலும் அப்போது எங்களுக்கு அவையெல்லாம் தூரமாகத் தெரிந்தது.

   ஆமாம், இதெல்லாம் சகோதரிக்கே ஞாபகம் இருக்காதுதான். விளையாட்டு வகுப்புக்கு போவது மாதிரி எங்கெல்லாம் கை கோர்க்க சொல்கிறார்களோ அங்கெல்லாம் இந்த சணடை நடக்கும். ஹா ஹா !

   நெய்வேலி டூருக்கு றோயல் கோச் விட,சித்ரா பஸ் சர்வீஸ் ரெம்ப சீப்,ஆஆ? !!!! __________ ஹா ஹா ஹா, நெனக்க‌ நெனக்க‌ சிரிப்புதான் வருகிறது! நன்றி ப்ரியசகி !

   Delete
 3. நெய்வேலி டவுன்ஷிப் வீடுகள் எல்லாம் மரங்களுடன் இருக்கும் ப்ளான் பண்ணி கட்டியது போன்ற சாலைகள் இருக்கும். பலா மரங்கள் நிறைய இருக்கும்...போயிருக்கின்றேன், பாண்டிச்சேரியில் மகன் படித்த போது....

  கீதா

  ReplyDelete
  Replies
  1. கீதா,

   நீங்களும் போயிருக்கீங்களா ! பாண்டியிலும் சாலைகள் அழகாக இருக்கும். இப்போது கூட்டம் அதிகமானதாலோ என்னவோ சாலைகள் குறுகியதுபோல் தெரிகிறது. நன்றி கீதா.

   Delete
 4. வணக்கம்
  இவைகள் எல்லாம் மறக்க முடியாத நாட்கள்... நல்ல இடங்களை கண்டு மகிழ்ந்தமைக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கவலை இல்லா பள்ளி நாட்களை மறக்க முடியாதுதான். வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி ரூபன்.

   Delete
 5. அடடா எங்கள் ஊர் உங்களுக்குப் பிடிக்க வில்லை போல!

  பூத்துக் குலுங்கும் செடிகளும், காய்த்துக் குலுங்கும் மரங்களும், அழகிய சாலைகளும் எங்களுக்கு சொர்க்க பூமியாகத் தெரிந்தது. முந்தைய நெய்வேலிக்கும் இப்போதைய நெய்வேலிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஓரிரு வருடங்களுக்கு முன்னர் சென்றது. மீண்டும் எப்போது செல்லப் போகிறோம் என்ற கேள்வி எப்போதும் எனக்குள்.....

  ReplyDelete
  Replies
  1. பசுமையான ஊர் பிடிச்சிதுங்க‌, ஆனால் சுரங்கமும், தொழிற்சாலையும் கொஞ்சம் போரடித்தது.

   சென்ற கோடையில்கூட‌ போய்வந்தேன். அப்போது உங்க குடும்பம்தான் நினைவுக்கு வந்தது. ஆமாம், இருபது வருடங்களுக்கு முன் பார்த்ததற்கும் இப்போதைக்கும் நிறைய வித்தியாசம் தெரிந்தது.

   Delete
 6. மலரும் நினைவுகளா மேடம்! மகிழ்ச்சி மகிழ்ச்சி. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஆறுமுகம் !

   Delete
 7. திருமணத்திற்கு பின் தான் நானும் இரண்டு மூன்று முறை சென்று வந்துள்ளேன். ஊரே அமைதியாக இருக்கும். பேய்க் கதைகள், பாம்பு கதைகள் என நெய்வேலிக் கதைகளை என்னவர் சொல்லி கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் நல்லவேளை இவர்கள் நாம் வருவதற்குள் ஸ்ரீரங்கத்தில் செட்டிலாகிவிட்டார்கள். என்று தான் தோன்றும்....:))

  எனக்கு கோவை போல் என்னவருக்கு நெய்வேலி தான் சொர்க்கம்...:)

  ReplyDelete
  Replies
  1. ஆதி,

   பேய்க்கதை, பாம்புக்கதை என்றால்கூட பரவாயில்லை, அந்த முந்திரி தோப்பில் வைத்துத்தான் ..... சொல்லவே பயமா இருக்கு. அதனால சின்ன வயசுல அந்தப் பக்கம் போனாலே ஒரு பயம் வரும்.

   நெய்வேலிக்குப் போனபோது உங்க குடும்பம்தான் நினைவுக்கு வந்தது. ஹும், நீங்க நெய்வேலியிலேயே இருந்திருந்தா கொஞ்சம் பக்கத்து ஊர்க்காரங்களா இருந்திருக்கலாம்! என்ன இருந்தாலும் சொந்த ஊர் மாதிரி வராதுதான்.

   Delete