Tuesday, June 23, 2015

சோதனைத் தலைவலி !!

சில நாட்களுக்குமுன் காலையில் மகள் வகுப்புக்கு போகும்போது வழக்கம்போல் அலைபேசியில் அழைத்து பேசிவிட்டு, "அம்ம்ம்மா இங்கு நல்ல வெயில்" என்றாள். ஏதோ நான் மட்டும் அந்நேரத்திற்கு நியூஸிலாந்தில் இருப்பதுபோல்.

"இங்கும் நல்ல வெயில்'தான் என்றேன். வகுப்பு முடிந்து மீண்டும் அழைப்பு, பேச்சு, மீண்டும் வகுப்பு, பேச்சு என முடிந்த பிறகு மாலையில், வெயிலால தனக்குத் தலைவலியே வந்துவிட்டதாகச் சொன்னாள்.

"அச்சச்சோ, அறைக்குப் போனதும் சூடா ஒரு டீ போட்டுக் குடி" என்றேன்.

பதிலுக்கு, " தலைவலி இருக்கும்போது சூடா குடிக்கக் கூடாதுமா, நிறைய ஜில் தண்ணி(ஃப்ரிட்ஜ் வாட்டர் அல்ல, சாதாரண tap water) குடிச்சுட்டு சிறிது ஓய்வு எடுத்தால் போதும், சரியாகிவிடும்" என்றாள்.

இது தெரியாமத்தானே நம்ம ஊர் தலைவலிக்கு எவ்வளவு மாத்திரைகள் போட்டிருப்பேன் !!

பத்தாததற்கு என் சகோதரி ஒரு இரண்டு மாத்திரைகளின் பெயரைச் சொல்லி, "நீ வேணா ரெண்டையும் ஒன்னாப் போட்டுப்பாரு, நொடியில 'டக்'குன்னு நிக்கும்" என அவற்றை ஒன்றாகப் போட்டுக்கொள்ளச் சொல்லி சிபாரிசு வேறு. நானும் அவற்றைப் பலமுறைப் பயன்படுத்தியிருக்கேன்.

அதேபோல் உடன் வேலை செய்த ஒரு தோழியின் கணவர் மருத்துவமனையில் மருத்துவம் அல்லாத வேறொரு வேலையை செய்தாலும் அவரது பரிந்துரையின்பேரில் தோழி தலைவலி ஜுரத்திற்கான மாத்திரைகள் நிறைய வைத்திருப்பார்.

அவரிடம் சொன்னால் போதும், அடுத்த நொடியில் மாத்திரை நம் கையில் இருக்கும். நான் மட்டுமல்ல, நாங்க எல்லோருமே சாப்பிட்டிருக்கிறோம்.

மேலும் தலைவலின்னாலே சூடா ஒரு டம்ளர் காபி அல்லது டீதான் முதலில் நினைவுக்கு வரும்.

எவ்வளவு தலைவலிகள் !!!

காலையில் எழுந்து குக்கரை வைத்ததும் விசில் வருவதற்கு முன்னே தலைவலியும் வந்துசேரும். விசில் வந்தாலும் 'இனி கடகடனு சமைக்கணும்'னு ஒரு தலைவலி, விசில் வர மேற்கொண்டு சில நொடிகள் எடுத்துக்கொண்டாலோ 'தண்ணி விடாமலேயே வச்சிட்டோமோ" என வேறொரு வகையில் சந்தேகத் தலைவலி.

அடுத்து பேருந்துக்கு போய் நின்றாலோ ஒன்று அரைமணி நேரம் லேட்டா வரும், இல்லாட்டி ரெண்டு நிமிடம் முன்னாலே போயிருக்கும். இப்போ தலைவலி வருமா வராதா நீங்களே சொல்லுங்க.

இப்படித்தான் ஊரில் இருந்தவரை எல்லாவற்றுக்கும் தலைவலி. உண்மையில் தலைவலி இருந்துதோ இல்லையோ, தலைவலி என்ற சொல்லைச் சொல்லாமல் அன்றைய நாள் போனதாக நினைவில்லை.

இங்கு வந்தபிறகுதான் தலைவலி என்ற சொல்லே கொஞ்சம் கொஞ்சமாக  மறந்துபோனது. ஒருவேளை பிரச்சினைகள் குறைந்ததாலோ அல்லது பிரச்சினைகள் உடன் இல்லாததாலோ  (இங்கே மாமியார், நாத்தனார் என நினைத்துவிட வேண்டாம்) எனத் தெரியவில்லை.

பிறகு இரவு எட்டு மணிபோல் மகள் அழைத்தாள்.

"தலைவலி இப்போ எப்படி இருக்கு ? " என்றேன்.தலைவலியின்மேல் எனக்கு அவ்வளவு பாசம் !!

தண்ணி குடிச்சுட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்ததும் சரியாகிவிட்டதாகச் சொன்னாள். ஆச்சரியமாகிப் போனேன் !

மகள் சொன்னதை சோதனை செய்து பார்க்க எனக்கும் ஆசைதான், ஆனால் அதற்கான நேரமும் காலமும் கூடி வர வேண்டுமே !

இப்போ நீங்க முயற்சிக்கலாமே, இப்பதிவினால் உங்களுக்கு நேரமும் காலமும் ஜோராகக் கூடி வந்திருக்குமே !!

14 comments:

  1. வணக்கம்
    மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் அட சாமி தலை வலியால் நான் படும் அவஸ்த்தை அதிகம் வரக்கூடாது..யாருக்கும்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ரூபன், தலைவலி மாதிரி ஒரு தலைவலியே கிடையாது..

      வருகைக்கு நன்றி

      Delete
  2. தலைவலிக்கு நல்ல மருந்து! ஓய்வு!

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வெங்கட், ஆனால் ஓய்வு எடுக்க விட வேண்டுமே. வெடுக் வெடுக் என இப்போது நினைத்தாலும் பயம் வரும்.

      வருகைக்கு நன்றி வெங்கட்.

      Delete
  3. சரியான நேரத்தில் சரியான ஓய்வு இருந்தால் போதும்...

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க தனபாலன். வருகைக்கும் நன்றி !

      Delete
  4. தலைவலியில நாங்கள் கூட சிறப்பான அனுபவம் உள்ளவர்கள்.நிறைய மாத்திரை ஆராய்ச்சி நடந்தது உண்டு

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா, நீங்களும் ஆராய்ச்சி பண்ணியிருக்கீங்களா !! ஏதாவது முடிவு தெரிஞ்சுதா !!

      வருகைக்கு நன்றி அனிதா .

      Delete
  5. தலைவலி வந்தாலே இல்லையில்லை, நினைத்தாலே வந்துவிடும். வேணாம் எழுதவே பயமாஇருக்கு. நல்ல தீர்வு சொல்லியிருக்கிறீங்க சித்ரா. நன்றி

    ReplyDelete
    Replies
    1. ப்ரியா,
      அவ்வளவு பயமா !! ரொம்பத்தான் கஷ்டப்பட்டிருக்கீங்க போல.
      வருகைக்கும் நன்றி ப்ரியா.

      Delete
  6. நான் முடிந்த அளவு மாத்திரைகளை தவிர்த்து விடுவேன். உங்களது கடமைகளை சரிவர செய்யவில்லை என்றால் தலைவலி வரும் என்பார் நாங்கள் போய்வந்த ஒரு யோகா வகுப்பின் ஆசிரியர். தலைவலி வந்தவுடன் நான் எந்தக் கடமையைச் சரிவர செய்யவில்லை என்று யோசிக்க ஆரம்பித்துவிடுவேன். அதனாலோ என்னவோ தலைவலி மறைந்துவிடும்! வேறு விஷயங்களில் கவனம் செலுத்தினால் இது மறைந்துவிடும் அவ்வளவுதான்.
    உங்கள் பெண் சொல்லியிருக்கும் குறிப்பும் நன்றாக இருக்கிறது. முயற்சி செய்யலாம்!

    ReplyDelete
    Replies
    1. ரஞ்சனி வாங்கோ, உங்க யோகா டீச்சர் சொன்னதுதான் எனக்கும் பொருத்தமாக இருந்திருக்கும். கடமையை சரிவர செய்யாதது, தாமதமாக செய்வது, நாம் சரியாக செய்ய நினைத்தாலும் புறக்காரணிகளால் தாமதமாவது என்று இருக்கலாம்.

      யோசிக்க ஆரம்பிப்பதும் நல்ல ஐடியாதான். மாத்திரை, தைலம் எல்லாம் கவனத்தை திசை திருப்பத்தானே. வருகைக்கு நன்றிங்க.

      Delete
  7. உங்கள் பெண் சொல்லும் குறிப்பு சரியே! நாங்களும் அப்படித்தான் செய்வதுண்டு...தண்ணீர் குடித்துவிட்டு ஓய்வு எடுத்துவிட்டால் சரியாகிவிடும். உடம்பில்தண்ணீர் குறைவதால் தலைவலி வருவதுண்டு...முகத்திலும் நல்ல தண்ணீர் விட்டு நன்றாக ர்ஃப்ரெஷ் செய்து விட்டலும்ப னல்ல இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. சகோ துளசி & கீதா,

      வலி வந்தால் உடனே தீர்வு வேண்டும் என்பதால்தான் மாத்திரை விழுங்குவது என நினைக்கிறேன். நீங்க சொல்வது போலவும் செய்து பார்க்கலாம். நன்றி துளசி & கீதா.

      Delete