Monday, August 31, 2015

டவுன்பஸ் அனுபவம் !!


ஊருக்குப் போனால் டவுன் பஸ்ஸிலும், ஆட்டோவிலும் ஏறி இறங்காமல் வரமாட்டேன். எனக்குப் பிடித்த வாகனங்கள் இவை இரண்டும்.

அந்த பளிச் வெண்ணிறமும், சிவப்பு நிற கோடும் இருந்த டவுன்பஸ்'களின் நிறம் மாற்றப்பட்டதில் கொஞ்சம் வருத்தம்.

சென்றமுறை ஊருக்குப் போனபோது வேலைப்பளுவினால் ஆட்டோவில் ஏற மறந்தே போனேன். அந்த வருத்தம் இன்னமும் இருக்கிற‌து.

அடுத்த தடவை ஊருக்குப் போனால் ? வேறென்ன ? ஆட்டோ பயணத்தை இரட்டிப்பாக்கிவிட வேண்டியதுதான் :)

ஒரு நாள் மாலையில் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கடலூர் செல்லும் டவுன் பஸ்ஸில் நானும் என் பெண்ணும் ஏறினோம். துண்டுபோட்டு ஸீட்டு பிடிக்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது என்பது புரிந்தது.

என்னவொன்று இந்த தடவை துண்டுக்குப் பதிலாக லன்ச் பேக், டிஃபன் பாக்ஸ் என பொருட்கள் கொஞ்சம் வித்தியாசமாக ஸீட்டுகளில் நிறைந்திருந்தன. பள்ளி விட்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.

எப்போதும் அடித்துப்பிடித்து ஏறி இடம் பிடிப்பவர்களைக் கீழே நின்று ரசித்துப் பார்த்துக்கொண்டிருப்பேன். இப்போதும் அப்படியே !

கடைசியாக ஏறி உள்ளே போனால், அந்தளவிற்கு கூட்டம் இல்லை. நாலைந்து பேர் மட்டுமே நின்றிருந்தோம்.

நான் நின்றிருந்த ஸீட்டில் ஒரு பெண்  ஜன்னலோரம்  லன்ச் பேக்கை வைத்துவிட்டு ஸீட்டின் நுனியில் உட்கார்ந்துகொண்டு வெளியில் எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு முன், பின் இருக்கைகளில் அவரைப் போலவே பெண்கள் அமர்ந்திருந்தனர். எல்லோருமாக பேசி சிரிக்கவும் ஓரிடத்தில் வேலை செய்கிறவ‌ர்கள் அல்லது ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்பதும் தெரிந்தது.

ஸீட்டு காலியாக இருக்கவும், " பேக்'க எடுத்தீங்கன்னா நான் உட்கார்ந்துப்பேன் இல்ல " என்றேன்.

அவரிடமிருந்து " இல்ல, இங்க உட்காரும் ஆள் வந்துட்டே இருக்காங்க" என்ற பதில் வந்தது. சரியென விட்டுவிட்டேன்.

சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஓட்டுனர் வந்து பேருந்தை எடுத்தார். அப்படியே ஆமைபோல் நகர்த்தினார். இன்னமும் அந்த ஸீட்டு காலியாகவே இருந்தது. கடைசி நேரப் பயணிகள் ஓரிருவர் ஓடிவந்து ஏறினர்.

மகள் " அம்ம்மா, யாரும்தான் வரலையே, அந்த ஸீட்டு எதுக்காக அப்படியே காலியா இருக்கணும், இப்போ கேட்டுப் பார்" என்றாள். உண்மையில் என்னைவிட என் மகள்தான் ஆர்வமாய் இருந்தாள்.

கேட்டேன். " பஸ் வெளில போறதுக்குள்ள வந்திடுவாங்க" என்றார் அப்பெண்.

சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே இருந்தார். இல்லாத ஆளுக்காக‌ ஸீட்டு பிடித்து வைத்திருப்பது என் பெண்ணிற்கு ஆச்சரியமாய் இருந்தது.

இப்போது பஸ் சாலைக்கு வந்து வேகமெடுத்தது.

சிரித்துக்கொண்டே, "இப்போ உட்காரலாமா ?" என்றேன்.

உம்மென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாரே தவிர அசைந்து கொடுக்கவில்லை.

"கண்டக்டர் வர்றார், ஏன் இந்த ஸீட்ல யாரும் உட்காரக் கூடாதான்னு ? அவரிடமே கேட்கிறேன்,  " என்றேன் நான் .

பத்து நிமிடங்களுக்குள்ளாகவே நாங்கள் இறங்கும் இடம் வந்துவிடும். இருந்தாலும், எனக்கு சீண்டிப் பார்க்க ஆசை.

பிறகு பின் இருக்கையில் இருந்த அவரது தோழியிடம் தான் ஏதோ கண்டு பிடித்துவிட்டது போல், " பார்க்க‌ வெளியூர் மாதிரி தெரியுறாங்க, இந்த ரூல்ஸ் எல்லாம் தெரியாது போல " என கிசுகிசுத்தார்.

" கலைவாணி டீச்சர் பஸ்'ஸ விட்டுட்டாங்கபோல, சரி அந்த‌ ஸீட்டை அவங்களுக்கே விட்டுடுங்க‌ " என உத்தரவு பறந்து வந்தது அத்தோழியிடம் இருந்து .

இவரும் போனால் போகுதுன்னு நகர்ந்து இடம் கொடுத்தார்.

"எனக்கு பண்ருட்டி, உங்களுக்கு ? " என்றேன். பதிலில்லை.

"நம்ம கண்டுபிடிப்பு அநியாயத்துக்கு இப்படி வீணாப் போச்சே " என நினைத்திருப்பாரோ !

ஆனால் அவர் எந்த ஊர் என்பதை நான் கண்டுபிடித்துவிட்டேன் !

' நான் எப்படி கண்டுபிடித்தேன் ' என்பதை இந்நேரம் நீங்களும் கண்டு பிடித்திருப்பீர்களே !!

" நீங்க சொன்ன அந்த சூப்பர் ரூல்ஸ்'ஸைப் போட்ட ஆள் யாருங்க ? தெரிஞ்சிக்கலாமா ? " என்று கேட்க ஆசைதான். கேட்டால் பதில் வந்திருக்கும்னா நெனக்கிறீங்க ?

ஹும்ம்ம், அந்த நாள்'ல நாங்க போடாத ரூல்ஸ்'ஸாஆஆ?  :))))))

8 comments:

 1. இம்முறை நான் போதும்போதும் என்றளவிற்கு ஆட்டோவில் ஏறியாச்சு. டவுன்பஸ்ஸையும் விட்டுவைக்கவில்லை. எங்க ஊரில் இப்படி துண்டு போடுவது,லன்ச்பாக்ஸ் வைப்பது மிகக்குறைவு. "ஆள் வாராங்க " என்று சொல்வாங்க. மினிபஸ் என்று தனியார்பஸ் சர்வீஸும் இருக்கு.ஆனா நாங்க பாடசாலை நாட்களிலும், சரி இப்பவும் டவுன்பஸ் தான். என்னால் ஊரை கண்டுபிடிக்க முடியலப்பா.... பஸ் பயணம் மீண்டும் ஞாபகத்தில்.....நன்றி சித்ரா.

  ReplyDelete
  Replies
  1. "ஆள் வர்றாங்க" என்று சொல்லியும் கேட்காததால்தான் துண்டு போடுவது. அதையும் லபக்கிக்கிட்டு போறவங்க இருக்காங்க :))))

   எங்க ஊரிலும் மினி பஸ் இருக்கு ப்ரியா. அந்த பஸ்ஸுக்காகக் காத்திருந்து ஏறிய நாட்களும் உண்டு :))))

   எங்க ஊர் எல்லாம் நீங்க கேள்விப்படாத ஊர்களாகத்தான் இருக்கும். நன்றி ப்ரியா.

   Delete
 2. டவுன் பஸ் நினைவுகள் சூப்பர்.....

  ReplyDelete
 3. ஹ்ஹஹஹ்ஹ்...இப்படித்தான் நாங்களும் சீட் பிடித்த காலம் உண்டே...அதே சமயம் மத்தவங்க சீட் பிடிக்கறத ரசித்ததும் உண்டு. இப்பல்லாம் அடித்துப் பிடித்து ஏறுவதில்லை......ஆனால் சில சமயம் ஏறும் சூழல் கள் வந்துவிடுகிறது...ஏன்னா பஸ்ஸ நகர்த்திக்கிட்டே இருப்பாங்க இல்லனா நிறுத்தி உடனே எடுத்துருவாங்க....ஜர்கண்டி வேறு....கண்டக்டர், டிரைவரிடம் இருந்து வரும்.......

  என்றாலும் டவுன் பஸ் பஸ்தான்....மிகவும் ரசிப்பதுண்டு போகவும் பிடிக்கும்...ஆனா ஆட்டோ பிடித்தாலும் ரொம்ப ரேட், மீட்டரும் எகிறுவதால் தயக்கம்....

  அருமையான நினைவுகள்....இப்பல்லாம் ஆமாம் லஞ்ச் பேக், பை, கர்சீஃப்....இப்போதும் தொடரும்தான்...இதற்கு முடிவு எல்லாம் கிடையாது...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா :)))) நாங்களும் சீட் பிடிப்போம். மெனக்கெட்டு நடந்துபோய் பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பே உள்ள நிறுத்தத்தில் ஏறிவிடுவோம். தினமும் போய்வருவதால் டிக்கட் பிரச்சைனை வராது. புது கண்டக்டர் என்றால் எடுத்துதான் ஆகணும் :(

   ஒரு காலத்தில் ஆட்டோவில் ஏறினால் அஞ்சு ரூபா, பிறகு பத்து ரூபாய் என்றானது. இதைவிட ஷேர் ஆட்டோ ரொம்பவே பிடிக்கும். ஏறினால் ரூ 1:50 தான். இக்கதையெல்லாம் பதினைந்து வருடங்களுக்கு முந்தையவை.

   நன்றி சகோ துளசி & கீதா.

   Delete