Sunday, September 27, 2015

எங்கள் வீட்டுத் தோட்டம் ___ மணத்தக்காளி கீரை !


சென்ற மாதத்தில் ஒருநாள் நம்ம ஊர் கடையில் அதிசயமாக மணத்தக்காளி கீரை வந்திருந்தது. வாங்கிவந்து கீரையை ஆய்ந்துகொண்டு,  தண்டுகளை (வேரில்லாதவைதான்) சும்மா 'பார்ப்போமே' என நட்டு வைத்தேன்.

ஆஹா, அடுத்த நாளே 'துளிர்த்துவிடும்' என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.

                                           கபகபனு இலைகள் பெரிதாகின.

இனி நினைத்த மாத்திரத்தில் வீட்டிலிருந்து பறித்துக்கொள்ளலாம் என சந்தோஷப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே .................

......................... கருப்பு எறும்புகள் வர ஆரம்பித்துவிட்டன.  இலைகள் சுருண்டு, அதன் அடிப்பகுதியில் கருப்புநிற முட்டைகள் இருந்தன.  இதுதான் இலைப்பேனோ !!

தொட்டியில் பூண்டு நட்டு வச்சிருக்கேன். அது முளைத்து வருவதற்குள் பூச்சி வந்துவிட்டதே. பூச்சி விழுந்த, சுருண்ட இலைகளை எல்லாம் பறித்து கசக்கி குப்பையில் போட்டுவிட்டு,  .................

........................ பூண்டு அரைத்து ஒவ்வொரு இலையின் மேலும், பின்னாலும் தடவி விட்டேன். இப்போது 'பரவாயில்லை' எனும் அளவிற்கு இலைகள் நன்றாக உள்ளன. மேலும் பூக்களும் பூக்க ஆரம்பித்துவிட்டன.

காய் காய்த்து, பறித்ததும் நிச்சயம் இங்கே எடுத்து வருவேன் :)

Wednesday, September 23, 2015

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை !

'இந்த வருடம் பத்தாம் வகுப்பு மாணவிகள் தஞ்சாவூருக்கு சுற்றுலா போகிறார்களாம்' என்ற ரகசியம் கசிந்ததும், முதலில் நினைவுக்கு வந்தது தஞ்சாவூரு தலையாட்டி பொம்மைதான்.

என்னுடைய‌ சின்ன வயசுல அப்பா தஞ்சாவூர் போனபோது இந்த பொம்மையை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார். பல வருடங்களுக்கு அது என்னுடைய விளையாட்டுப் பொருள்களுடன் ஒரு அங்கமாக‌ இருந்தது.

முறையான அறிவிப்பு வந்ததும் கூடிய சீக்கிரமே பத்து ரூபாயைக் கட்டிவிடுவதாகச் சொல்லி முதல் ஆளாக என் பெயரைப் பதிவு செய்துவிட்டேன்.

விடுதி சலுகையால் எங்களுக்கெல்லாம் பத்து ரூபாய். வெளியில் இருந்து வரும் மாணவிகளுக்கு இருபது ரூபாய்.

அப்பாவுக்குக் கடிதம் எழுதி விவரங்களைச் சொல்லி ..... வரவழைத்து ...... இல்லையில்லை ..... அப்பா தினமும் எங்களைப் பார்க்க வருவார் :) அதனால் பிரச்சினை இல்லாமல் உடனே கட்டியாகிவிட்டது.

என் சகோதரி பூம்புகார், வேளாங்கண்ணி, நாகூர், நாகப்பட்டினம் என அவரது வகுப்புடன் சென்றுவிட்டார்.

ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலையில் பேருந்தில் சன்னல் ஓரம் இடம் பிடித்து, சந்தோஷமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டே, காலை உணவையும் பேருந்திலேயே முடித்துக்கொண்டு, நேரே தஞ்சை பெரிய கோயிலில் இறக்கி விடப்பட்டோம்.

கோயிலின் சிறப்புக்களாக நிறைய சொல்லிக்கொண்டே வந்தார்கள். பல புரிந்தும் சில புரியாமலும் இங்கும் அங்குமாக போய்க்கொண்டிருந்தோம்.

பிறகு ஒரு பூங்காவில் பேருந்துகளை நிறுத்தி மதிய உணவு முடித்துக்கொண்டு ஒரு தேவாலயத்தில் கொண்டுபோய் நிறுத்தி, ..... கிறித்துவப்பள்ளி என்பதால் எங்கு சுற்றுலா போனாலும் கடைசியாக ஒரு தேவாலயத்துக்கு அழைத்துக் கொண்டுபோய் ஜெபம் செய்துவிட்டு, நாங்கள் இங்கும் அங்குமாக சுற்றிக் கொண்டிருக்கும்போது எங்களுடன் வரும் வார்டன்கள், ஆசிரியைகள் அனைவரும் ஆலயத்தில் உள்ள முக்கியமானவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள்.

இப்போதும் அப்படியே ! மனம் முழுவதும், "எப்போது ஷாப்பிங் விடுவாங்க, எப்போது பொம்மை வாங்கலாம்" என்பதிலேயே இருந்தது.

ஒருவழியாக அவர்களின் உரையாடல் முடிந்து கடைகள் இருக்குமிடத்தில் இறக்கிவிட்டதும் நாலா திசைகளிலும் பஞ்சாய் பறந்துவிட்டோம்.

நானும் அடித்துப் பிடித்து தலையாட்டி பொம்மைகள் இருக்கும் கடைக்குச் சென்று பார்த்தேன். பல வண்ணங்களில் ஆண்க‌ளும், பெண்களுமாகக் கண்ணைக் கவரும் அழகழகான பொம்மைகள்.

பச்சை நிற பெண் பொம்மை என்னைக் கவர்ந்தது, நிறைய பொன்னிற நகைகளுடன், நீளமான ஜடையுடன், ஒரு பக்கமாகப் பெரிய கொண்டையுடனும், அழகான நெத்திச் சுட்டியுடனும் இருக்கவும் வாங்கிவிட்டேன். ( அந்த நாளில் என்னால் அதிகமான முறை வரைந்து பார்க்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்)

பொம்மை விலையும், சுற்றுலாவுக்கான பணமும் ஒன்றுதான். ஆமாம், பொம்மையின் விலை பத்த்த்து ரூபாய்.

எங்களைப் பார்க்க சனிக்கிழமை அப்பா வந்தார். அவரிடம் பொம்மையைக் கொண்டுவந்து கொடுத்து வீட்டிற்கு எடுத்து செல்லச் சொன்னேன்.

'உனக்குதானே வாங்கின, நீ வீட்டுக்கு வரும்போது எடுத்துட்டு வா" என்றார் அப்பா.

எனக்கோ நான் வாங்கிய‌தை வீட்டிலுள்ள‌ எல்லோருக்கும் காட்ட வேண்டுமென ஆசை. அதனால் கொடுத்தனுப்பிவிட்டு விடுமுறைக்காகக் காத்திருந்தேன்.

ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு விடுமுறை வந்தது, வீட்டுக்குப் போனேன்.

மனம் முழுவதும் பொம்மையின் மேலேயே இருந்தாலும் உறவுகளின் பேச்சு சுவாரசியத்தில் ஆர்வத்தைக் கொஞ்சம் தள்ளிப் போட்டேன்..

பள்ளி விட்டு தம்பி வந்தான். என்னைப் பார்த்ததும் ஆவலுடன் ஓடிவந்து, " அப்பாவிடம் நீ வாங்கி கொடுத்து அனுப்பினியே தலையாட்டி பொம்மை, அதுக்குள்ள என்ன இருந்துச்சு தெரியுமா ? ஒரு கொட்டாஞ்சிக்குள்ள, களிமண்ண அடைச்சு வச்சு, பேப்பர பிச்சு பிச்சு வச்சு ஒட்டி பொம்மை செஞ்சிருக்காங்க" என்றான். காகிதக் கூழைத்தான் அப்படி சொன்னான்.

எந்த ஒரு விளையாட்டுப் பொருளையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப்போட்டு அதன் உள்ளே என்ன இருக்கும்னு பார்த்துவிடும் தம்பி இந்த தலையாட்டிப் பொம்மையையும் பிச்சு எடுத்துவிட்டான்.

ஆவலுடன் "வர்றியா காட்டுறேன், தோட்டத்துல கிட‌க்கு", என்றவனிடம் "இப்போ வேண்டாம், அப்புறமா போய் பார்க்கலாம்" என்றேன்.

Monday, September 14, 2015

இக்கரைக்கு அக்கரை வசந்தம் !!


  படம் இணையத்திலிருந்து.
வெளிநாட்டுப் பெண்மணிகளை நம் நாட்டு
    பெண்களாக்கியது மட்டும் நான் :)

'வரு'வும் 'சாரு'வும் பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் மட்டுமல்ல, தங்களின் எதிர்மறையான குணங்களாலும் பிரிக்க முடியாத, நெருங்கியத் தோழிகளாக உள்ளனர்.

பள்ளியில் வேலை செய்கின்ற அவர்களில் ஒருவர் கணித ஆசிரியை என்றால் மற்றொருவர் மொழிப்பாடம். இதிலும் வேறுபாடுதான்.

இவர்களைப் போலவே இவர்களின் கணவர்களும் எதிர்மறையானவர்கள்தான். இப்போதைக்கு இவர்களைப் பற்றிய‌ வம்பு நமக்கெதுக்கு. அதுதான் பதிவின் முடிவிலே தெரிந்துவிடப் போகிறது !

வரலஷ்மி ப்ரியா அதாங்க நம்ம  'வரு' கலகலப்புக்குப் பஞ்சமில்லாதவர். துணிச்சலாகப் பேசும் தைரியமிக்கவர். முக்கியமாக‌ எந்த ஒரு வேலையையும் ஆறப் போடமாட்டார்.

அப்படின்னா நம்ம சாருமதி அதாங்க நம்ம 'சாரு' மருந்துக்கும் சத்தம்போட்டு பேசமாட்டார். அமைதியோ அமைதி. தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர். அவ்வப்போது கொஞ்சம் சோம்பேறித்தனம் எட்டிப்பார்ப்பது உண்டு.

இப்படியான குணமுள்ள இவர்கள் தோழிகளானதில் ஏதும் சந்தேகமில்லைதானே !

வெளியூர் என்பதால் 'வரு' சீக்கிரமே பள்ளிக்கு வந்துவிடுவார். மதிய உணவுடன் காலை உணவையும் கட்டிக்கொண்டு வந்துவிடுவார்.

உள்ளூர் வாசம் என்பதால் சாரு சரியான நேரத்திற்குதான் வருவார்.

வழக்கம்போல் ஒருநாள் காலையில் வரு வேலைக்கு வந்தபோது அதிசயமாக இவருக்குமுன் சாரு அங்கிருந்தார்.

வரு, "என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க ?" என்று சொல்லிக்கொண்டே பள்ளியின் 'கேட்'டுக்கு வெளியே வாங்கிய ரோஜாக்களில் ஒன்றை 'ஹேர்பின்'னுடன் 'சாரு'வுக்குக் கொடுத்தார்.

மேசையிலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்து, "அந்த ஆளு இன்னைக்கு லீவு போட்டுட்டு வீட்ல உக்காந்திருக்கு, அதான் பிரச்சினை வேண்டாமே என முன்னமேயே கிளம்பி வந்துட்டேன்" என்று சொல்லும்போதே 'சாரு'வுக்குக் கண்கள் கலங்கிவிட்டன.

"லீவுதானேன்னு கொஞ்சம் நிம்மதியா இருக்க விடறதில்ல, வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு இடத்தில் மாற்றிமாற்றி வைக்க வேண்டியது. எந்த பொருள் எங்க இருக்குன்னே மறந்து போச்சு. ஒரு நாளைக்கு இந்தப் பக்கம் திரும்பியிருக்கும் சோஃபா அடுத்த வாரமே வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருக்கும். கடுப்பா இருக்கு வரு" என்றார் சாரு.

"கேக்க நல்லாத்தானே இருக்கு, வீடும் சுத்தமாச்சு, பார்க்கவும் புதுசா இருக்கும்" என்றார் வரு.

சுட்டெரிப்பதுபோல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, "இந்த வேலையை அவரே செஞ்சிட்டா ஒரு பிரச்சினையும் இல்ல. என்னையும் செய்யச் சொல்லும்போதுதான் பிரச்சினை பூதாகரமாவுது. ஒருவார்த்தை பேசுறதுக்குள்ள ஆயிரம் வார்த்தைகள் வந்து விழுது, சமயத்துல‌ கையும் நீண்டுடுது, அப்படித்தான் நேத்தும் .... " சாரு'வுக்குக் கண்கள் குளமாகின.

" கை நீட்றதெல்லாம் ரொம்பவே ஓவர்தான் " என்று சொல்லிக்கொண்டே வரு தன் 'ஃப்ளாஸ்க்'கிலிருந்த 'காபி'யை இரு கோப்பைகளில் ஊற்றி தனக்கொன்றும், காலையில் சாப்பிடாமல் வந்திருக்கும் தன் தோழிக்கும் ஒன்றைக் கொடுத்தாள். (ஹி ஹி படத்தினால் காலைச் சிற்றுண்டி 'காபி'யாகிவிட்டது)

"பிள்ளைங்க, வீடு, வேலை .... எவ்ளோதான் முடியும் ? இவர் போயி கதவைத் தொறந்தா ஆஃபீஸு, இல்லாட்டி லீவு, ஆனா நமக்கு அப்படியா ? பசங்களே வராட்டியும் நாம வந்துதானே ஆகணும் " விடுவதாயில்லை சாரு.

" நீங்கள்ளாம் கொடுத்து வச்சவங்க வரு. உங்க வீட்ல நீங்க சொன்னதை கேட்கிறார், ஒரு வார்த்தை அதிர்ந்து பேசமாட்டேன்கிறார். இப்படி அமைஞ்சா கோயில் கட்டி கும்பிடலாம், இதுவும் இருக்கே !! " என்றார் கோபமாக‌ . கை நீண்டதால்தான் மரியாதை இல்லாமல் போனதோ !

இடைமறித்த வரு, "நீங்க வேற, நாள் முழுசும் கத்தினாலும் ஒரு வார்த்தை பதிலா வராது, ஏதாவது பதில் வந்தாத்தானே நம்ம பேச்சுக்கு ஒரு மரியாதை இருக்குன்னு நினைக்கலாம். கை நீட்றத சொல்லல, மத்தபடி அது மாதிரி அமைஞ்சா கோயில் என்ன, கோயில் கட்டி கும்பாபிஷேகமே பண்ணலாம் " என்றார்.

Tuesday, September 8, 2015

ஆள் மாறினாலும் செயல் மாறுவதில்லை !!

எங்கள் குடியிருப்பு வளாகத்தில் மாலை நேரமோ அல்லது விடுமுறை நாட்களோ நம்ம ஊர் பிள்ளைகளின் விளையாடும் ஆற்றலுக்கு ஒரு அளவேயில்லை எனலாம்.

எந்நேரமும் காது கிழியும் சத்தத்துடன் கத்துவதும், பந்து விளையாடுகிறோம் பேர்வழின்னு எல்லார் வீட்டு முக்கியமாக எங்கள் வீட்டு வாசல் (மர)கதவு, பேட்டியோ கண்ணாடி கதவு இரண்டும் உடைந்துபோகும் அளவுக்கு அடித்து ஆடுவதும் வாடிக்கையான ஒன்று. நாள் தவறினாலும், பந்து தவறாது.

அப்படியே நம் வீட்டு பேட்டியோவில் விழுந்துவிட்டால் அவ்வளவுதான் நம் வீட்டுக்கதவு உண்டுஇல்லை என்றாகிவிடும். தட்டுதட்டுனு தட்டி ஓர் அசௌகரியத்தைக் கொடுப்பார்கள்.

நம் பிள்ளைகளுக்கு எதைஎதையோ கற்றுக்கொடுக்க முயற்சிக்கிறோம், ஆனால் அவர்களிடம் உள்ள சில வேண்டாத‌ பழக்கங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.

உதாரணத்திற்கு, வார இறுதி நாட்களில் வாக் போகும்போது பார்க்கும் காட்சி இது. நாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பூங்காவில் வெளிநாட்டு, இல்லையிலை இந்த‌ நாட்டு உயர்நிலை, மேல்நிலை பள்ளிப் பிள்ளைகள் குழு குழுவாக நாடகம், நடனம், வாள் சண்டை போன்ற‌ பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். பார்க்கவே ஆசையாக இருக்கும்.

சளைக்காமல் பல மணி நேரத்திற்கு சிறு பிசிறுகூட இல்லாமல் வரும்வரை தொடர்ந்து செய்ததையே திரும்பத்திரும்பச் செய்வார்கள்.

தான் உண்டு, தன் வேலையுண்டு என போவோர் வருவோருக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் ஏதாவது ஒரு பகுதியில் அவர்கள் வேலையை அழகாக செய்துகொண்டிருப்பார்கள். இவர்கள்தான் பிள்ளைகள் !

அதைவிட்டு அடுத்தவருக்கு தொந்தரவு கொடுத்தால் என்ன சொல்வது ? இவ்வாறாகப் புலம்புகிறேன் என்றால் காரணம் இல்லாமல் இல்லை.

சென்ற மாதத்தில் ஒருநாள் மாலை எங்கள் பேட்டியோவில் இடி விழுந்த மாதிரி ஒரு சத்தம். வழக்கம்போல கதவு டமால்டமால் என உடைந்து விழாத குறையாகத் தட்டல், கூடவே பத்துக்கும் மேற்பட்ட‌ பிள்ளைகளின் கூச்சலும்.

நான் உள்ளிருந்து வெளியே வருவதற்குள் எல்லோருமாக‌ சேர்ந்து உற்சாகப்படுத்தியதால் ஒரு பையன் ஒன்றரை ஆள் உயரத்திற்கு இருக்கும் மர‌ வேலியை ஏறிக் குதித்து எங்கள் பேட்டியோவில் கிடந்த பந்தை எடுத்துக்கொண்டு மீண்டும் ஏற முயற்சித்தான்.

நான் அவனருகில் வந்து நிற்பதைக்கூட கவனிக்கவில்லை. நான் கூப்பிட்டும் அவன் கண்டுகொள்ளவில்லை.

பந்தின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத மிளகாய்ச்செடி தொட்டி ஒன்று உடைந்து  உருண்டுகொண்டிருந்தது.. எனக்குக் கோபம்னா கோபம்.

சத்தமாகக் கூப்பிட்டதும் 'ஸாரி' சொல்லிவிட்டு மீண்டும் ஏற முயற்சித்தான்.

"இதுமாதிரி உங்க வீட்டு பேட்டியோவுல‌ யாராவது ஏறி குதிச்சு வந்தா உங்கம்மாவுக்கு பிடிக்குமா ?" என்றேன்.

"பிடிக்காது" என்றான்.

"எனக்கும்கூட பிடிக்காது, இது நல்ல பழக்கமும் இல்லை ", என்றேன்.

மீண்டும் பேட்டியோ பக்கம் போனான் ஏறி குதிக்க.

"இந்த வழியா போ", என்று வீட்டுக் கதவைத் திறந்து விட்டேன். ஓடி விட்டான்.

அடுத்த ஓரிரு நாட்கள் பிரச்சினை இல்லாமல் போனது.

மீண்டும் ஒருநாள் அடுத்தடுத்து இரண்டு பந்துகள் வந்து விழுந்தன. கதவும் தட்டப்பட்டது.

"பந்து எங்கள் பேட்டியோவில் இல்லை" என்று சொல்லி வெறுங்கையுடன் அனுப்பிவிட்டேன். கஷ்டமாகத்தான் இருந்தது, வேறு வழியில்லை.

இப்போதைக்கு மேலும் மூன்று பந்துகளுடன் அட்டைப் பெட்டி ஒன்று எங்கள் பேட்டியோவில் உள்ளது. வீடு மாறுவதற்குள் மேலும் இந்த‌
எண்ணிக்கைக் கூடலாம்.

ஆறு வருடங்களாக இங்கே இருக்கிறோம், வருடந்தோறும் பிள்ளைகள்தான் மாறிக்கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்களின் குணம், செயல்கள் எல்லாம் அப்படியே, ஒன்று போலவே உள்ளன.

Wednesday, September 2, 2015

காணாமல் போன நான் !!

எப்போதும் காலையில் வீடு காலியனதும் கடகடவென தெருவில் இறங்கி, அருகில் இருக்கும் பூங்காவுக்கு போய் 'வாக்' பண்ணி முடிந்து திரும்ப குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது ஆகும். சில மாதங்களுக்கு முன்புவரை இப்படித்தான் போய்க்கொண்டிருந்தேன்.

சிலபல காரணங்களால் இப்போது வெளியில் 'வாக்' போகாமல், " வேண்டாம், சில நாட்கள் போகட்டும் " என 'வாக்' போவதை அப்பார்ட்மென்ட்டிலேயேத் தொடர ஆரம்பித்து போய்க்கொண்டிருக்கிறது. இது கொஞ்சம் போரடிக்கும் 'வாக்'தான்.

பார்க் என்றால் நிறைய மனிதர்கள், குழந்தைகள், குளிர்ச்சியாக மரங்கள், பசுமையான புல்வெளி, பறவைகள், அணில்கள் என ஏதோ பிக்னிக் வந்த மாதிரி அலுப்பு இல்லாமல், உற்சாகமாக‌ இருக்கும்.

அப்பார்ட்மென்ட்டிலோ வேலை செய்யும் ஆட்களைத் தவிர்த்து என்னை மாதிரி ஒரு சிலர் மட்டும்தான் நடமாடுவர். வெயில், குளிர் எதுவாக இருந்தாலும் கொஞ்சம் கூடுதலாகவேத் தெரியும். நானும் ஒரு முக்கால் மணி நேரத்திற்குள்ளாகவே நடையை முடித்துக்கொண்டு வந்துவிடுவேன்.

கொஞ்சம் வெயிட் போட்டிருப்பதும் தெரியுது  :) 

நீண்ட‌ விடுமுறையில் வீட்டிற்கு வந்த என் பெண்ணிடம் இதைபற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.

"அம்ம்ம்மா, நீ ஒன்னும் கவலைப்படாதே, 1 வீக் சேலஞ்ச், 30 டேய்ஸ் சேலஞ்ச்லாம் இருக்கு. அதுல‌ உன்னை ஒல்லியாக்கிடலாம் " என ஆறுதல் சொன்னாள் பெண் .
 .
பெர்சனல் ட்ரெய்னர் கிடைத்த சந்தோஷம் எனக்கு. நான் மறந்தாலும் அவள் என்னை விடப்போவதில்லை

ஒருநாள் காலை எனக்கு எது சரிவரும் என 'யூ டியூப்'ல ஒரு வீடியோவைத் தேடி எடுத்து பயிற்சியை ஆரம்பிக்க நாங்கள் இருவரும் தயாரானோம்.

" 30 நாட்களில் ஆங்கிலம் கற்கலாம் மாதிரியா ? " என இவர் கிண்டலடித்துவிட்டு ஆஃபீஸ் கிளம்பிப் போய்விட்டார்.

மதிய உணவுக்கு வந்தபோதுகூட‌ ஆச்சரியமான பார்வை வந்தது இவரிடமிருந்து.

மாலை ஆஃபீஸ் முடிந்து வந்ததும் சாப்பிட சுடச்சுட இட்லியும் சாம்பார் & சட்னியும் எடுத்து வைத்தேன்.

சாப்பிட உட்கார்ந்தவர் பெண்ணைப் பார்த்து, " அம்மா எங்க ? காணோமே !! " என்றார் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு.

" D:<   Oh come ஆஆஆஆon  "   என்றாள் மகள்.

" :)))))))) " _____  இது நான்.

***************************************************************************** 
எப்படியும் எடுத்துக்கொள்ளலாம் :

ஒருநாள் பயிற்சியிலேயே ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாகிப் போய்விட்டேனாம் என்பது ஒன்று.

ஒரேநாள் பயிற்சியில் ஆளே காணாமல் போய்விட்டேன் என்பது மற்றொன்று.