Tuesday, September 8, 2015

ஆள் மாறினாலும் செயல் மாறுவதில்லை !!

எங்கள் குடியிருப்பு வளாகத்தில் மாலை நேரமோ அல்லது விடுமுறை நாட்களோ நம்ம ஊர் பிள்ளைகளின் விளையாடும் ஆற்றலுக்கு ஒரு அளவேயில்லை எனலாம்.

எந்நேரமும் காது கிழியும் சத்தத்துடன் கத்துவதும், பந்து விளையாடுகிறோம் பேர்வழின்னு எல்லார் வீட்டு முக்கியமாக எங்கள் வீட்டு வாசல் (மர)கதவு, பேட்டியோ கண்ணாடி கதவு இரண்டும் உடைந்துபோகும் அளவுக்கு அடித்து ஆடுவதும் வாடிக்கையான ஒன்று. நாள் தவறினாலும், பந்து தவறாது.

அப்படியே நம் வீட்டு பேட்டியோவில் விழுந்துவிட்டால் அவ்வளவுதான் நம் வீட்டுக்கதவு உண்டுஇல்லை என்றாகிவிடும். தட்டுதட்டுனு தட்டி ஓர் அசௌகரியத்தைக் கொடுப்பார்கள்.

நம் பிள்ளைகளுக்கு எதைஎதையோ கற்றுக்கொடுக்க முயற்சிக்கிறோம், ஆனால் அவர்களிடம் உள்ள சில வேண்டாத‌ பழக்கங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.

உதாரணத்திற்கு, வார இறுதி நாட்களில் வாக் போகும்போது பார்க்கும் காட்சி இது. நாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பூங்காவில் வெளிநாட்டு, இல்லையிலை இந்த‌ நாட்டு உயர்நிலை, மேல்நிலை பள்ளிப் பிள்ளைகள் குழு குழுவாக நாடகம், நடனம், வாள் சண்டை போன்ற‌ பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். பார்க்கவே ஆசையாக இருக்கும்.

சளைக்காமல் பல மணி நேரத்திற்கு சிறு பிசிறுகூட இல்லாமல் வரும்வரை தொடர்ந்து செய்ததையே திரும்பத்திரும்பச் செய்வார்கள்.

தான் உண்டு, தன் வேலையுண்டு என போவோர் வருவோருக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் ஏதாவது ஒரு பகுதியில் அவர்கள் வேலையை அழகாக செய்துகொண்டிருப்பார்கள். இவர்கள்தான் பிள்ளைகள் !

அதைவிட்டு அடுத்தவருக்கு தொந்தரவு கொடுத்தால் என்ன சொல்வது ? இவ்வாறாகப் புலம்புகிறேன் என்றால் காரணம் இல்லாமல் இல்லை.

சென்ற மாதத்தில் ஒருநாள் மாலை எங்கள் பேட்டியோவில் இடி விழுந்த மாதிரி ஒரு சத்தம். வழக்கம்போல கதவு டமால்டமால் என உடைந்து விழாத குறையாகத் தட்டல், கூடவே பத்துக்கும் மேற்பட்ட‌ பிள்ளைகளின் கூச்சலும்.

நான் உள்ளிருந்து வெளியே வருவதற்குள் எல்லோருமாக‌ சேர்ந்து உற்சாகப்படுத்தியதால் ஒரு பையன் ஒன்றரை ஆள் உயரத்திற்கு இருக்கும் மர‌ வேலியை ஏறிக் குதித்து எங்கள் பேட்டியோவில் கிடந்த பந்தை எடுத்துக்கொண்டு மீண்டும் ஏற முயற்சித்தான்.

நான் அவனருகில் வந்து நிற்பதைக்கூட கவனிக்கவில்லை. நான் கூப்பிட்டும் அவன் கண்டுகொள்ளவில்லை.

பந்தின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத மிளகாய்ச்செடி தொட்டி ஒன்று உடைந்து  உருண்டுகொண்டிருந்தது.. எனக்குக் கோபம்னா கோபம்.

சத்தமாகக் கூப்பிட்டதும் 'ஸாரி' சொல்லிவிட்டு மீண்டும் ஏற முயற்சித்தான்.

"இதுமாதிரி உங்க வீட்டு பேட்டியோவுல‌ யாராவது ஏறி குதிச்சு வந்தா உங்கம்மாவுக்கு பிடிக்குமா ?" என்றேன்.

"பிடிக்காது" என்றான்.

"எனக்கும்கூட பிடிக்காது, இது நல்ல பழக்கமும் இல்லை ", என்றேன்.

மீண்டும் பேட்டியோ பக்கம் போனான் ஏறி குதிக்க.

"இந்த வழியா போ", என்று வீட்டுக் கதவைத் திறந்து விட்டேன். ஓடி விட்டான்.

அடுத்த ஓரிரு நாட்கள் பிரச்சினை இல்லாமல் போனது.

மீண்டும் ஒருநாள் அடுத்தடுத்து இரண்டு பந்துகள் வந்து விழுந்தன. கதவும் தட்டப்பட்டது.

"பந்து எங்கள் பேட்டியோவில் இல்லை" என்று சொல்லி வெறுங்கையுடன் அனுப்பிவிட்டேன். கஷ்டமாகத்தான் இருந்தது, வேறு வழியில்லை.

இப்போதைக்கு மேலும் மூன்று பந்துகளுடன் அட்டைப் பெட்டி ஒன்று எங்கள் பேட்டியோவில் உள்ளது. வீடு மாறுவதற்குள் மேலும் இந்த‌
எண்ணிக்கைக் கூடலாம்.

ஆறு வருடங்களாக இங்கே இருக்கிறோம், வருடந்தோறும் பிள்ளைகள்தான் மாறிக்கொண்டிருக்கிறார்களே தவிர, அவர்களின் குணம், செயல்கள் எல்லாம் அப்படியே, ஒன்று போலவே உள்ளன.

18 comments:

  1. மாறாதையா மாறாது...
    மனமும் குணமும் மாறாது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எங்கிருந்தாலும், எவ்வளவு வருடங்களானாலும் மாறாதுதான் போல. நன்றி தனபாலன்.

      Delete
  2. உண்மை சித்ரா க்கா. எங்கள் காரில் ஒரே பையன் 3 முறை வந்து நேராக மோதி விட்டான் 3 வது முறை பொறுக்க முடியாமல் அவன் அம்மாவிடம் சொல்லி விட்டேன். அதற்கு அவன் அம்மா ஏன்டா போய் மோதின? னு கூட கேட்கல அக்கா. இனிமே மோத கூடாதுனு கூட சொல்லல. எனக்கு ரொம்ப கஷ்டமா போயிட்டுது. பெற்றோர் முதலில் சரியாக இருக்கணும் அக்கா அவங்கள பார்த்து தான் குழந்தைகள் வளரும்.பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. காலையில் அவசரமாக டைப் செய்தேன் அக்கா. எப்படி மோதினான்னே சொல்லலையே பார்க் பண்ணியிருக்க கார்ல சைக்கிளை வேகமா ஓட்டிட்டு வந்து மோதி ட்டான்.

      Delete
    2. ஓ, இதெல்லாம் ரொம்பவே ஓவர் !

      Delete
  3. அபிநயா,

    அவங்கவங்க வீட்லதான் செல்லம், அடுத்தவங்க வீட்டிலும் அதை எதிர்பார்க்கக் கூடாது இல்லையா ! ரிப்பேர் பண்ண 'பில்'லை எடுத்துட்டு போய் அவங்க அம்மாகிட்ட கொடுத்திருக்கணும்.

    நானும் தினமும் எடுத்துஎடுத்துக் கொடுத்து ரொம்ப டயர்டாயிட்டேன். கொஞ்சம் லேட் ஆனதும் இவ்ளோ உயர சுவரில் ஏறிக்குதிச்சு ? அப்படின்னா நாங்க இல்லாதபோது இப்படி பலமுறை நடந்திருக்கணும்.

    பேட்டியோவுக்கு வெளிப்பக்கமா ஏணி வச்சு மேல் வீட்டு பேட்டியோவுக்கு ஏறுவதற்கே 'அப்பார்ட்மென்ட்'ல நம்ம பர்மிஷன் கேப்பாங்க. இந்தப் பசங்க என்னடான்னா எவ்ளோ ஈஸியா உள்ள வந்துட்டானுங்க. மீண்டும் திரும்பத்திரும்ப போடுவது .... அதான், கடுப்பா ஆயிடுச்சு. நிறைய புலம்பிட்டேன்,

    நன்றி அபிநயா.

    ReplyDelete
  4. ஆமாம் அக்கா ஒரு பார்ட் நசுங்கின மாதிரி ஆகிடுச்சு. நான் பில்ல கொண்டு போய் கொடுங்கனு சொன்னேன். என்னவர் அதெல்லாம் வேண்டாம் ப்பானு சொல்லிட்டார். 3 தடவையும் நான் இல்லைனே என்னவர் நேர்ல பாக்கும் போது மோதினது பார்க்காம எங்களுக்கு தெரியாம எத்தனை டைம் மோதினானோ?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அபிநயா, பைக்கால் மோதுவது, கீ போடுவது இதெல்லாம் பசங்களுக்கு ஒரு ஜாலி. அப்பாகூட ஒத்துப்பார், ஆனால் அம்மாக்கள்தான் ஏத்துக்க மாட்டாங்க. சரி விடுங்க, வேறென்ன செய்யறது !!

      Delete
  5. நம்ம நாட்டுப் பசங்களா, செல்லம் கொடுத்து குட்டிச்சுவர் ஆக்கி விடலாமா.
    புருஷப்பசங்களுக்குதான் தைரியம் அதிகம். வெளிநாடு போயும் கற்றுக்கொள்ளா விட்டால். வால்கள்தான். அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அம்மா, வால்கள்தான், அடுத்தவர் வீடாச்சேன்னு கொஞ்சமும் வருத்தம் இல்லை. அன்புடன் சித்ரா.

      Delete
  6. இங்கு இப்படி விளையாடுவது குறைவு. அதற்கென இடம் இருக்கு அங்குதான் விளையாடனும். எல்லாருக்கும் பொதுவான விதி.. அத்துடன் யார் எப்பொருள் உடைத்தாலும் இங்கு காப்புறுதி கண்டிப்பா கொடுக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. ப்ரியா, சுற்றிலும் நிறைய இடங்கள் உள்ளன. பிள்ளைகள் போனால் கவனிக்க ஆள் போக‌ வேண்டுமே. எல்லாம் சோம்பேறித்தனம்தான். எல்லா ரூல்ஸும் இங்கும் உண்டு. நம்ம ஊர்காரங்க, பின்பற்றினால் என்னாவது ? நேற்று இரண்டு, இன்று ஒன்று என கடுப்பாத்தான் இருக்கு.

      Delete
  7. ஸாரி சகோதரி எப்படியோ உங்கள் பதிவுகள் அப்டேட் எங்கள் கண்ணிலிருந்து தவறிவிட்டது...எப்படி என்று தெரியவில்லை....பார்க்கும் போது டேஷ் போர்டில் கீழே போய்விட்டது போலும்...ஸாரி..ஸாரி...

    பெற்றோர் தான் காரணம்....அங்கயும் இப்படி என்பது ஆச்சரியமாக இருக்கிறது....

    கீதா: அங்கு வளரும் நம்மூர் குழந்தைகள் அந்த ஊர் குழந்தைகளைப் பார்த்து வளருவதில்லையோ....அங்கு அபார்ட்மென்டில் நிறைய ரூல்ஸ் உண்டே ...நீங்கள் தனி வீடா? ம்ம்ம் ஆனால் நாங்கள் இருந்த ஏரியாவில் க்யூப்பர்டினோ, கலிஃபோர்னியா... வில் இந்தியன் குழந்தைகள் அதிகம்தான் நாங்கள் இருந்தது அபார்ட்மென்ட். மகன் படித்தது கென்னடி மிடில் ஸ்கூல். அங்கும் ஆசியக் குழந்தைகள், நம்மூர் குழந்தைகள் நிறைய உண்டு...விளையாடுவார்கள் ஆனால் எந்த ஒரு கம்ப்ளெயிண்டும் வந்தது இல்லை..இந்தியக் குழந்தைகளும் சைனீஸ் குழந்தைகள், மற்ற நாட்டுக் குழந்தைகளும் சேர்ந்துதான் விளையாடுவார்கள்...அப்போது நான் நினைத்தது...நம்மூர் வாலுங்க இங்க வந்தா அடங்கிடும் போல...இங்க பொறந்தா அடங்கிடுமோனு ...

    அப்ப நம்ம ஊர் மானம் அங்கயும் பறக்குதுனு சொல்லுங்க...பக்கத்துல அமெரிக்கர்கள் இல்லையா ? மற்ற நாட்டவங்க? அவங்க கம்ப்ளெயின்ட் கொடுத்துருவாங்களே உடனே....

    நம்ம ஊர்க்காரங்க இப்படி இருக்காங்களெனு மனசுக்கு கஷ்டமாதான் இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. சகோ துளசி & கீதா,

      கம்ப்லெயின்ட் கொடுக்கலாம், மனம் வர‌லை. நம்ம மக்கள்தான். மத்தவங்க இருக்கும் இடம் தெரியாது.

      நீங்க இருந்த ஊர்லதான் இருக்கோம் :) எந்தெந்த வருடங்களில் இங்கு இருந்தீங்க ? முன்னமே தெரிந்திருந்தால் பார்த்திருக்கலாம் :)

      Delete
    2. சித்ரா நாங்க இருந்தது ஜஸ்ட் 9 மாதம்தான் இவங்க வேலை பார்த்த கம்பெனி கவுந்து நிறைய கஷ்டங்களுக்கிடையில் இந்தியா வந்து சேர்ந்தோம். முதலில் ஃபுட் ஹில் அபார்ட்மென்டில் இருந்தோம். காஸ்ட்லி. அதனால் அடுத்து பள்ளியின் மிக அருகில், நடந்து போகும் தூரத்தில்...அந்த ட்ரெயின் ட்ராக் கூட வருமே...பப்ஸ் ரோட்டில் மெக்....என்று ஆரம்பிக்கும் அபார்ட்மென்டில்...மிக அருகில் 7 ஓ 11 கடை. பின்னர் சம்பளம் கட் ஆக தொடங்கியது...இல்லாமல் ஆனது. மகன் 7 ஆம் வகுப்பை முடிக்க வேண்டுமே என்று பல்லைக் கடித்துக் கொண்டு எப்படியோ தள்ளினோம்.

      ஆனால் நான் மிகவும் எஞ்சாய் செய்தேன் அந்த வாழ்க்க்கையை அருமையான ஊர். மலை அருகில்...அங்கு ட்ரெக்கிங்க் கூட போனோம்....நிறைய வெளி மானிலம் சென்று ஊர்கள் எதுவும் சுற்றிப் பார்த்தது இல்லை. எங்களுக்கே கஷ்டமாக இருந்ததாஅல்...நாங்கள் வந்த வேளை அப்படி..னாங்கள் வந்த 15 நாட்களில் பின்லேடன் அந்தக் கோபுரத்தைத் தகர்த்தெறிய....எல்லாமே ஆட்டம் கண்ட நேரம்......எனவே உள்ளூருக்குள் கொஞ்சம் இடங்கள் பார்த்ததுண்டு. சான்ஃப்ரான்ஸிஸ்கோ, அந்த ஃபெரி, லியர்மூர், நிறைய பார்க்குகள், விலங்கியல் பார்க்குகள், சான்டாக்ரூஸ், 17 மைல் ட்ரைவ்...இப்படிச் சில அவ்வளவே....

      கம்பெனி கவுந்த போது கணவர் அஃபிசியலாக இந்தியாவில், நான் மகன் மட்டும் அங்கு. அவர் அடுத்த ஒரு நாள்.. நாளுக்குள் அங்கு வந்து சேர்ந்தே ஆக வேண்டும். கம்பெனி யெல்லோ நோட்டிஸ் கோர்டில் ஃபல் செய்துடும் அப்புறம் இவரது எல் விசா கான்செல் ஆகிடும் உள்ளே என்டெர் செய்ய முடியாது. இப்படியான அனுபவங்கள்....இவர் எல் விசாவில் இருந்ததால் வேறு வேலை மாற முடியாத சூழல். இப்படியாக...2001 ல் ஹும் என்னவோ போங்க...

      கீதா

      Delete
  8. நம்ம வலைப்பதிவர் விழா பத்தி நிறைய லிங்குகள் கொடுத்துருக்கோம் பாருங்க...போட்டி எல்லாம் இருக்கு...என்ட்ரி போட்டுருங்க நீங்க வலைனாலும்....கையேடுல உங்க ப்ளாக் வரும் உங்கள பத்தின டிடெய்ல்ஸ் வரும் அதுக்காகவாவது....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வலைக்கு வந்து பார்க்கிறேன்.

      விவரங்களை அனுப்பி, பெயரும் வந் தாஆஆ ச்சே ! நன்றி கீதா !

      Delete
  9. அழைப்புக்கு நன்றி தனபாலன்.

    விவரங்கள் அனுப்பி, வலைப்பதிவர் கையேட்டில் பெயரும் வந்துவிட்டது :)

    ReplyDelete