Wednesday, November 30, 2016

முறுக்கு அச்சு !

காலிங் பெல்லை அழுத்தியது புது இடத்து புது தோழி சொப்னாதான் எனத் தெரிந்துகொண்டு கதவைத் திறந்தாள் ராகிணி.

"முறுக்கு அச்சு இருக்குமா ? ரொம்ப நாளா செய்யணும்னு ஆசை" என்றாள் சொப்னா.

"இதோ எடுத்து வரேன், எடுத்துட்டு போ" என முறுக்கு அச்சை எடுத்து வந்து நீட்டினாள் ராகிணி.

"தொலைத்துவிட சான்ஸ் இருக்கு, அதனால இந்த தேன்குழல் அச்சை மட்டும் எடுத்துக்குறேன்" என ஒரு வில்லையுடன் முறுக்கச்சை எடுத்துச் சென்றாள் சொப்னா.

அடுத்த நாள் முறுக்கச்சு திரும்பி வந்தது, கூடவே சில அழகழகான‌ முறுக்குகளும் !

"அட இது நல்லாருக்கே, கஷ்ஷ்ஷ்டப்பட்டு சுடாமலே முறுக்குகள் வந்துள்ளதே !

சொப்னா மாதிரி இன்னும் நான்கு நம்ம ஊர் மக்கள் இந்த அப்பார்ட்மெண்டில் இருந்தால் போதும் போலவே, வருடம் முழுவதும் நம்ம முறுக்கச்சு சுற்றிச் சுழன்று முறுக்குகளைக் கொண்டுவந்து சேர்த்துவிடும் போலவே" என தனக்குள் நகைத்துக்கொண்டாள்.

துளி எண்ணெய் இல்லாமல், சும்மா கரகர மொறுமொறுவென, மிளகாய்த்தூள் சேர்த்து செவசெவவென செய்து தான் ஒரு ஆந்திரப் பெண் என்பதை காரசாரமாக நிரூபித்திருந்தாள் சொப்னா.

ராகிணி, "ரெசிபி சொல்லேன்" என்றதும்,

சொப்னா "கடலை மாவை நல்லா வறுத்து " என முடிக்குமுன்னே,

ராகிணி "என்னது கடலை மாவை வறுக்கணுமா?" என்று ஆச்சரியப்பட்டதும்,

சொப்னா " சரி சரி, நீ எப்போ ஃப்ரீயா இருப்பேன்னு சொல்லு, வந்து செஞ்சு காட்டிட்டுப் போறேன்" என்றாள்.

போகும்போது அப்படியே "அடுத்த தடவ ஓமப்பொடிதான் செய்யணும், சுதாவுக்கு(சுதாகர்) ரொம்ப பிடிக்கும்" என்றாள்.

இரண்டொரு நாளில் இருவருமாக சேர்ந்து ராகிணி வீட்டில் முறுக்கு மாவு தயார் செய்தனர்.

"மாவு ரொம்ம்ம்ப கெட்டியா இருக்கே, பிழிய வருமா ?" என்றாள் ராகிணி.

"கெட்டியா இருந்தாதான் எண்ணெய் குடிக்காம, மொறுமொறுவென வரும்" என்றாள் சொப்னா.

ராகிணி முறுக்கு அச்சில் மாவு போட்டு பிழிய முனைந்தாள். ம் ... ம் ....ம்..... ஒன்னும் முடியல.

"கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு பெசஞ்சுக்கிறேனே" என்றாள் ராகிணி. முறுக்கச்சு ஒடஞ்சிடுமோன்னு பயம்.

"நீ அந்தப் பக்கம் புடி, நான் இந்தப் பக்கம் புடிக்கிறேன், ரெண்டு பேருமா சேர்ந்து பிழியலாம், எங்க வீட்டிலும் நானும் சுதாவுமா சேர்ந்துதான் எல்லா முறுக்குகளையும் பிழிஞ்சோம்" என்றாள் சொப்னா.

ராகிணிக்குக் கண்களில் கண்ணீர் ஊற்று. பிழிந்தவர்களின் கஷ்டத்தை நினைத்து அல்ல, முறுக்கு அச்சை நினைத்துதான். உடைந்திருந்தால் ??

நல்லவேளை தேன்குழல் அச்சை எடுத்துச் சென்றாள். இதுவே ஓமப்பொடி அச்சாக இருந்திருந்தால் ??

இனி ஏதாவது சாக்குபோக்கு சொல்லி  ஓமப்பொடி வில்லையை மட்டும் கொடுக்கக் கூடாது என தனக்குத்தானே தீர்மானம் போட்டுக்கொண்டாள்.

சில நாட்களுக்குப்பின் மீண்டும் சொப்னா வந்து கதவைத் தட்டியதும் ஏற்கனவே போட்ட தீர்மானத்தை மனத்திரையில் ஒருமுறை ஓடவிட்டு உறுதி செய்துகொண்டு கதவைத் திறந்தாள் ராகிணி.

"சுதாவுக்கு வேல போச்சு, இன்னிக்கு நைட்டுக்கே நான் இந்தியா கெளம்புறேன், இங்க கொஞ்சம் வேல இருக்கு, அதையெல்லாம் முடிச்சிட்டு சுதா அடுத்தவாரம் கெளம்பிடுவார், கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டி இருக்கு, வரட்டுமா, பார்த்துக்கோ " ஒப்பித்துவிட்டு ஓடினாள் சொப்னா.

அதற்குமேல் அங்கு நின்றிருந்தால் இரண்டு பேருமே அழுதுவிடுவார்கள் போன்ற சூழல்.

"சொப்னா போகாதே, இந்தா முறுக்கச்சு, ஓமப்பொடி சுடு, இல்ல ஒடச்சுகூட போடு, ஏன்னு ஒரு வார்த்தை கேக்க மாட்டேன், ஆனா இங்கிருந்து மட்டும் போயிடாதே" என சொல்ல வேண்டும்போல் இருந்தது ராகிணிக்கு.

ஆனால் அவளால் சொப்னா அந்தத் தெருவில் சென்று மறையும்வரை நின்று பார்த்துக்கொண்டுதான் இருக்க முடிந்தது.

Sunday, October 30, 2016

நீதான் கேட்கவே இல்லையே !

புதுமணத் தம்பதி தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

கணவன் மனைவியிடம் சொன்னான், "உனக்கு ஏதேனும் விருப்பம் இருந்தா சொல்லு, நிறைவேத்த முடியுதான்னு பார்க்கிறேன்"னு.

மனைவி சொன்னாள், "மொதல்ல‌ நா(ன்) வேலைக்குப் போகக் கூடாது".

கணவனோ, " நீ வேலைக்குப் போவது உனக்காகத்தானே, எதுக்கும் மறு பரிசீலனை செய்" என்றான்.

"படிக்கும் காலத்திலிருந்து இப்போ வரைக்கும் காலையிலேயேக் கிளம்பி ..... பஸ்ஸைப் பிடித்து ..... போரடிச்சாச்சு, அதனால அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்காவது நான் வீட்டில் இருக்கிறேனே" என்றாள்.

"சரி, உனக்கு அதுதான் விருப்பம் என்றால் எனக்கும் ஓகே, வேறு ஏதேனும்" என்றான்.

"துணி துவைக்கக் கூடாது" என்றாள்.

"சரி, நான் இனிமே துணியே துவைக்கமாட்டேன்" என்றான் சிரித்துக்கொண்டே.

"அய்ய்யோ, என்னைச் சொன்னேன்" என்றாள்.

"சரி அடுத்து" என்றான்.

"பாத்திரம் கழுவக் கூடாது, வீடு பெருக்கக் கூடாது" என அடுக்கினாள்.

"இதையெல்லாம் ஈஸியாக்க ஒவ்வொன்னா வந்திட்டிருக்கு, பார்க்கலாம்" என்றான்.

"முக்கியமா சமைக்கவேக் கூடாது" என்றாள்.

நல்லவேளை, 'சமைத்தே தீருவேன்'னு அடம் பிடிக்காமல் போனதில் அவனுக்கு மகிழ்ச்சியே.

ஒருசில வருடங்கள் கழித்து கணவனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து குடும்பத்துடன் அங்கே போய் குடியேறினார்கள்.

ஒரு வழியா செட்டில் ஆனபின், " வேலைக்குப் போகாமல் இருப்பது தொடங்கி நீ கேட்டது எல்லாமும் நிறைவேத்திட்டேனா ?" என்றான் சந்தோஷமாக. தற்போதைக்கு அவளே விரும்பினாலும் வேலைக்குப் போக முடியாது என்பது வேறுவிஷயம்.

"ம்ம்ம்ம்ம் .... ஆனால் வீட்லதான் ஜனங்களே(சுற்றம்) இல்ல" என்றாள் சோகமாக‌.

" அப்போ, நீ இத கேக்கவே இல்லயே" என்றான் கணவன்.

Friday, October 14, 2016

Half Moon Bay Beach !



எங்க ஊருக்குக்(?) கொஞ்சம் பக்கத்தில் இருக்கும் ஒரு ஊர் Half Moon Bay. ஜூன் மாதத்தில் ஒருநாள் அங்குள்ள பீச்சுக்குப் போனபோது எடுத்த கடல் அலைகளின் படங்கள் !

கடல் அலைகளில் எவ்வளவு நேரம் காலை நனைத்துக்கொண்டு இருந்தாலும் அலுப்பு வராதுதானே. அப்படி நினைத்துத்தான் போனேன். ஆனால் இரண்டொருமுறை காலை நனைத்ததுமே குளிர் ஜுரமே வந்திடும்போல இருந்தது. அந்தளவுக்குத் தண்ணீர் ஜில்ல்ல்லுன்னு இருந்துச்சு. வெயிலும் அதிகம், அதற்கு இணையாக‌ குளிரும் போட்டிபோட்டது !

கோடையிலேயே இந்த போடு போட்டால் ? குளிர்காலத்தில் எப்படி இருக்குமோ !!

இதற்குமேல் நின்றால் urgent care குத்தான் போகணும்னு வெறும் மணலிலேயே நீண்ட தூறம் காலாற நடந்துவிட்டுத் திரும்பினோம்.

                               போகும் வழியில் ஓரிடத்தில் கிறிஸ்துமஸுக்காகத் தயாராகும் மரங்கள் !

எங்க ஊரு பீச்சிலும் குதிரை சவாரி உண்டுங்கோ ! என்ன ஒன்னு, இதுக்குனு தனி பாதை இருக்கு.
கடலின் அழகில் மயங்கி, வர்ணிக்க வார்த்தைகள் வராததால் (ஹி ஹி தெரியாது என்பதுதான் உண்மை) படங்களை அப்படியே பார்த்துக்கொண்டே செல்வோமே ! !
நாங்கள் போனபோது ஆள் அரவமே இல்லாமல் இருந்தது. நேரம் ஆகஆக சேர், குடை, பந்து என இவை சகிதமாக மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. ஒரு பக்கம் மக்கள் கூட்டம் தாங்கள் கொண்டு வந்திருந்த கட்டுசோத்தைப் பிரிச்சு ஒரு வெட்டு வெட்டிக்கொண்டிருந்தனர். பார்க்கும் நமக்கும் பசி வரத்தானே செய்யும் !
மதியம் வீட்டுக்குக் கிளம்பும்போது நல்ல பசி. சரி அங்குள்ள நம்ம ஊர் ரெஸ்டாரண்ட் எப்படி இருக்கும்னு போனோம். ஒரு மணி ஆச்சே, எவ்வளவு கூட்டம் இருக்குமோன்னு கொஞ்சம் பயம்தான். ஏன்னா, எங்க ஊர்ல சாதாரணமாவே கூட்டம் வழியும், அதிலும் சனிஞாயிறு என்றால் அவ்வளவுதான். கடைக்கு வெளியிலயே ஒரு பெரிய க்யூ தென்படும். ஆனால் இங்கே கடையில் ஒரு காக்காகுருவியைக் கூடக் காணோம் ! நாங்க மட்டுமே :) நாங்க பாதி சாப்பிட்ட நிலையில் ஓர் அமெரிக்கர் வந்து சூப் வாங்கி டேஸ்ட் பார்த்துவிட்டு, ஆல்இன்ஆல் ஆன அங்கிருந்த அம்மாவிடம் 'அருமை' எனக் கூறினார். எங்களுக்கும் 'இல்லாத ஊரில் இது பரவாயில்லை' எனும்படியே இருந்தது.

போய்வரும் வழியெங்கும் காடும், மலைகளும் இருப்பதால் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. வழியில் ஆங்காங்கே நிலத்தில் காய்கறிகள், பழங்கள் விற்பனை நடந்தது. இறங்கி வாங்கும் பொறுமையெல்லாம் இல்லை, அடுத்த தடவை வந்தால் வாங்கலாம் என பேசிக்கொண்டோம் !

Saturday, September 3, 2016

டீ கடை டீ க்ளாஸ் !


நாம் ஊரில் ரசித்து, சுவைத்த சிலவற்றை வெளியூரில் மிஸ் பண்ணுவோம். அதுமாதிரி நான் பெரிய அளவில் மிஸ் பண்ணியது டீ'கடை டீ :)

வீட்டில் எத்தனை விதமான கப்புகளில் டீ குடித்தாலும், கடையிலிருந்து வாங்கிக் குடிக்கும் டீ'கடை க்ளாஸ் 'டீ' மாதிரி வராதுதானே. என்னதான் சுத்தத்தைப் பற்றி யோசித்தாலும் ஒன்றும் வேலைக்காகாது.

டீ கடைகளில் Tea glass போயி ப்ளாஸ்டிக் கப்புகள் வந்து ..... இப்போது எப்படி எனத் தெரியவில்லை ...... இன்னமும் அந்த tea glass டீ'தான் பிடிக்கிற‌து.

Tea glass ஐ கையில் பிடிக்கும்போது தெரியாத சூடு, குடிக்கும்போதுதான் தெரியும் ....  டீ எவ்வளவு சூடாக இருக்கிறதென.

Glass ல் கொஞ்சமே கொஞ்சம்தான் டீ இருக்கும், ஆனால் பார்ப்பதற்கு நிறைய இருப்பதாகத் தெரியும்.

காஃபி மட்டுமே குடித்த எனக்கு இந்த டீ பழக்கம் இடையில் வந்து ஒட்டிக்கொண்டதுதான்.

முன்பு இங்கிருந்து எப்போது ஊருக்குப் போனாலும் பெரிய லிஸ்ட் ஒன்று போடுவேன். அந்த லிஸ்டில் கட்டாயம் டீ'கடை டீயும் இருக்கும்.

என்னவொன்று, இப்போதெல்லாம் ஏனோ அந்த பழைய சுவை கிடைப்ப‌தில்லை. அல்லது எனக்கு சுவை மாறிவிட்டதா எனத் தெரியவில்லை.

நிச்சயமா எனக்குத்தான்(நட்பூ ஒருவருக்கும் :) ) மாறியிருக்க வேண்டும். இல்லையென்றால் உடன் வருவோர், " நல்லாத்தானே இருக்கு" என குடிக்கமாட்டார்களே !

ஒன்று பால் காயாத மாதிரியே இருக்கும்.

இல்லாவிட்டால் டீ தூள் சரியாகக் கொதிக்காமல் போட்டதுபோல் டீ தூள் வாசம் வரும்.

கால் சர்க்கரை போட்டுக் கொடுக்கச்சொல்லிக் கேட்டாலும் ஒன்றரை சர்க்கரை அளவில் போட்டுக் கொடுத்து ...... வெறுத்துவிட்டது.

உறவுகளும் அப்படியே.

பால் பொங்கி வந்ததும், டீ தூளைப் போட்டு, சுடு தண்ணீர் காலில் கொட்டியதுபோல் பட‌க்கென அடுப்பிலிருந்து இறக்கி ...... பால் வாசமும் டீதூள் வாசமும் போட்டி போட்டு வெறுப்பேற்றும்.

எங்க அம்மா யார் காதிலும் விழாதவாறு, " புது பால்ல போட்டுக் குடுக்கறது உனக்குப் பிடிக்காதுதான், என்ன பண்றது, ஒரு வாரத்துக்கு ஐஸ்'ல‌ வச்சி குடிச்சு பழகிட்ட"னு சொல்லுவாங்க‌ :))

"சரி, நீயே போட்டுக்கிட்டா என்ன?" என்பதுதானே உங்க கேள்வி :)

ஹா ஹா ஹா :))) 'சிலிண்டரில் உள்ள gas முழுவதையும் காலி பண்றாளோ' என்ற பார்வை வரும்.

எனக்கு டீ 10 to 15 நிமிடங்களுக்காவது கொதிக்க வேண்டும்.

ஆ ஆங் .... குறை சொல்லும் ஆர்வத்தில் சொல்ல வந்ததையே மறந்துட்டேனே !

இங்கு வந்த புதிதில், 'சரி நாமே வீட்டில் டீ'கடை டீயைப்போட்டுக் குடிக்கலாம்' என எண்ணி tea glass தேட ஆரம்பித்தேன். ப்ளாஸ்டிக்கில்தான் கிடைத்தது. அதையும் வாங்கிவந்தேன்.

சூடாக டீயை அதில் ஊற்றியதும் கரகர என ஒரு சத்தம். கீறல் விட்டுக்கொண்டிருந்தது.

ஜில்'லுனு ஜூஸ் ஊற்ற வேண்டியதில், சூடான டீயை ஊற்றினால்?    :)))))

கடைக்குப் போனால் தவறாமல் tea glass மாதிரியே ஏதாவது இருக்கானு தேடுவேன்.

சில‌ வருடங்களுக்குப் பிறகு 2006 ல் ஒரு பெரீஈஈஈய கடைக்கு வேறு ஏதோ ஒன்றை வாங்கப்போய் glassware இருக்கும் செஷனில் கண்ணாடியால் ஆன சாமான்களை 'ஆ' என வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டே வரும்போது இந்த கண்ணாடி டம்ளர்களைப் பார்த்து, ஆச்சர்யமாகி ஒவ்வொன்றும் $ 1:99 என இரண்டு க்ளாஸ்களை வாங்கிக்கொண்டு வந்து டீ போட்டுக் குடித்த பிறகுதான் பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைத்தது.

Iced tea glass ஐ hot tea glass ஆக மாற்றிய பெருமை என்னையே சாரும்.

காஃபியோ அல்லது டீயோ இந்த glassல்தான் குடிப்பேன். கால் டம்ளர் என்றாலும் பாதி க்ளாஸ் நிறைந்துவிடும். அரை டம்ளர் என்றால் சொல்லவேத் தேவையில்லை, நுரையுடன் முழு க்ளாஸ் ஆகிவிடும்.

இதனால் டீ, காபி கொஞ்சமாத்தானே இருக்கு என்ற‌ நினைவே வராது.

நல்ல கெட்டியா இருக்குறதால‌ கீழே விழுந்தாலும் உடைவது கடினம். இது வரைக்கும் எனது கவனக் குறைவினால் ஒரு க்ளாஸ் மட்டுமே உடைந்திருக்கிற‌து.

இதன் தற்போதைய விலை $2:99


உங்களில் யாருக்காவது இந்த டீ கடை glass ல் டீ குடிக்கணும்னு ஆசையா ? விற்கும் கடையின் பெயரைத் தெரிந்துகொள்ள ஆவலா ?

தொடர்பு கொள்ளவும்  chitrasundars blog கிற்கு  :)))

Tuesday, August 9, 2016

குரு பார்வை !


கோடை விடுமுறையில்(ஜூன் முதல் வாரம்) மகள் வருவதற்கு விமான‌ டிக்கெட் புக் பண்ணியதுமே இதுவரை பிடிக்காமல் இருந்த இந்த வீடு கொஞ்சம் அழகானதுபோல் தோன்றியது.

இன்னும் இரண்டு மாதங்களில் குரு பெயர்ச்சி வருதுன்னு சொல்றாங்களே, ஒருவேளை நம்ம ராசியை(?) குரு பார்க்கப் போகிறாரோ ! அதனால்தான் திடீரென இந்த வீடு பிடிக்கிறதோ !

இதுவரை கொஞ்சம் மூடினாற் போலவே கிடந்த ஜன்னல்கள், கதவுகள் திறக்கப்பட்டதும் ...... வீட்டிற்குள் நல்ல வெளிச்சம் ! நிச்சயம் இது குரு பார்வை வரப்போவதற்கான அறிகுறிக‌ள்தான்.

முன்பு எப்போதோ(மார்ச் ?) ஒருமுறை 'வாக்' போகும்போது வழியில் பார்த்து 'ஹாய்' சொன்ன நம்ம ஊர் தோழியை இரண்டு வாரங்களுக்குமுன் மீண்டும் வழியில் சந்திக்க நேர்ந்தது.

வீட்டிற்கு வருமாறு அழைப்பு. நான்தான் தயங்கினேன். காரணம் அவருடன் துறுதுறுவென வந்திருந்த வளர்ப்பு செல்லம்.

நான் அழைக்கவில்லை. குற்றவுணர்ச்சிதான், வேறு வழியில்லை.

வழியில் பார்கும்போதே பயம். வீட்டுக்குப் போனால் ? அல்லது வீட்டுக்கு வந்துவிட்டால் ?

அடுத்த நாளே மீண்டும் வழியில் சந்திப்பு.

"நீங்க தினமும் வாக் போறீங்கன்னா நானும் வருகிறேனே" என்றார்.

தோழிகளுடன் 'வாக்' போயி பல வருடங்களாகிவிட்டது. எப்போதாவது ஒரு சமயம்தான் இது மாதிரியெல்லாம் வாய்க்கும்.

நான் சொல்லலை ? ஆகஸ்ட் 2 அருகில் வந்துவிட்டதே !

சென்ற வாரம் திங்கள் கிழமை 'வாக்' போகும்போதே வழியில் இருக்கும் அவரது வீட்டிற்கு, "அதெல்லாம் பார்த்துக்கலாம் வாங்க'னு அழைத்துச் சென்றுவிட்டார்.

அவர் வீட்டு செல்லம் புதியவர் வருகையால் குஷியாகி என்னிடம் வரவும், என் வள்ளல் தெரிந்தபடியால், "வேண்டாம்" என்று தோழி சொன்னதும் என்கிட்டே வரவேயில்லை .

'அப்பாடா' என்றிருந்தது.

நானும் பயந்துநடுங்கி ஒரு வழியாக ஓடியே வந்துவிட்டேன்.

ஏனோ தெரியவில்லை, அடுத்த நாள் 'வாக்' முடிந்து நானும் அவர் வீட்டுக்குப் போனேன்.

இன்று செல்லம் என்ன நினைத்ததோ தெரியவில்லை, என்னைப் பார்த்ததும் தலையை உள்ளே இழுத்துக்கொண்டது.

வெட்கமா ? அல்லது என் நல்ல்ல்ல மனம் அதற்குத் தெரிந்துவிட்டதா ?

"வெளில வா, உன்னைப் பார்க்கணுமாம், யார் வந்திருக்காங்க பாரு ?" என்றார்.

ம்ஹூம் ....

தோழி உள்ளே போய் அழைத்து வந்தார்.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நான் அதைத் தடவி விடவும் என் பக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.

இங்கே, "விலங்குகளோடு பழக்கமில்லாதவர்கள் அவற்றின் கண்ணோடு கண் பார்க்கக் கூடாது" என்ற கீதாவின் வரிகள் நினைவுக்கு வந்தாலும் ....... தவிர்க்க‌ முடியவில்லை.

என்னையே என்னால் நம்ப முடியவில்லை. மனதினுள் அவ்வளவு சந்தோஷம் !

யாரிடமாவது இதைச் சொல்ல வேண்டாமா ?

வீட்டுக்காரர் ?

இந்த ஒரு விஷயத்தில்தான் எங்களுக்குள் ஏகத்துக்கும் ஒற்றுமை. அதைக் கெடுத்துக்கொள்ள வேண்டாமென என் பெண்ணிடம் சொன்னேன்.

ஏற்கனவே "நாய் & பூனை adopt பண்ணி இருவருக்கு லைஃப் கொடு" என என்னை ப்ரெய்ன் வாஷ்  செய்துகொண்டிருப்பவள் ஆச்சரியப்பட்டு, "பேர் என்ன வச்சிருக்காங்க ?" என்றாள்.

"குரு" என்றேன்.

"அப்படின்னா உனக்கு குரு பார்வ கெடச்சிடுச்சுனு சொல்லு " என்றாள் :)))

Thursday, July 28, 2016

சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூல் _ தொடர்ச்சி !

சித்ரா'ஸ் குக்கிங் ஸ்கூலுக்குக் கூவிக்கூவி அழைத்தும், கட்டணத்தைக் காரணம் காட்டி யாருமே எட்டிப் பார்க்காத‌ சூழலில், இழுத்து மூடுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் ?

சோகத்துடன் மூடப்போகும்  தருணத்தில் எலி ஒன்று, வந்து, வசமாக சிக்கியது மகள் வடிவத்தில்.

"அம்ம்ம்மா, ஈஸியா இருக்கணும், அதே நேரத்துல‌ சுவையாவும் இருக்கணும், அது மாதிரி ஏதாவது ரெஸிபி இருந்தா லீவுல‌ சொல்லிக்குடும்மா " என்றாள் லீவுக்கு வருமுன்னமே.

ஆறு மாதங்கள் வீட்டுப்பக்கம் தலை காட்டாததன் விளைவு இது.

எளிமையான‌ சிலவற்றை வரிசையாக  லிஸ்ட் போட்டோம்.

சாம்பார் _ வேண்டாம் ! பருப்பு வேகவச்சு, காய் கட் பண்ணி .... நானே வேண்டாம்னு சொல்லிட்டேன்.

ரிஜெக்ட் ஆன லிஸ்டில் புளிக்குழம்பு, குருமா, கீரை எல்லாம் இருந்தன.

லிஸ்டில் முதலாவதாக எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு பொரியல், முட்டை இவை மூன்றும் இடம் பிடித்த‌ன.

மகள் சொன்னாள், " அம்மா, நீ ஒரு சூப் வப்பியே, சூப்பரா இருக்குமே, அத கத்துக்கிறேனே" என்றாள்.

நானாவது சூப் வைப்பதாவது ?

"முறுங்க கீரை தண்ணி சாறு வைப்பேனே ...... அத சொல்றியா, நீ இருக்கும் ஊர்ல அது கிடைக்காது. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும், இப்போதானே லயா வீட்ல செடி வாங்கி வச்சிருக்காங்க‌, அது    வளர்ந்ந்ந்து ...... கீர பறிக்க ......... எவ்ளோஓஓ நாளாகுமோ,  அப்போ பார்த்துக்கலாம்" என்றேன்.

"அது இல்லம்மா, அதுல கீர எதுவுமே இருக்காது, கொஞ்சம் ப்ரௌன் கலர்ல இருக்குமே, சூப்பராவும் இருக்குமே, அது" என்றாள்.

நெஜமாவே எனக்கு என்னன்னு புரியல, விட்டுட்டேன்

விடுமுறையில் வீட்டுக்கு வந்து சாப்பிடும்போது சாம்பார் முடிந்து ரசம் ஊற்றியதும்,  "இதேதான், இததான் நான் சூப்னு சொன்னேன்" என்றாள்.

இப்போ லிஸ்ட்ல ரசமும் சேர்ந்துகொண்டது.

நல்ல நாள் பார்த்து kitchen boot campஐ ஆரம்பிச்சாச்சு.

முதல் இரண்டு நாட்கள் 'இதை எடு, அதை வை' என ஒரே மிரட்டல்தான் :)) சரியா செய்யாட்டி push ups, sit ups என பனீஷ்மெண்ட்டுடன் முடிந்தது .

எலுமிச்சை சாதம் எந்தவித‌ப் பிரச்சினையும் இல்லாமல் வந்துவிட்டது. முட்டையும் எளிதோ எளிதாகிவிட்டது.

உருளைக்கிழங்கு ? கைவிட்டாச்சு !

ரசம் கற்றுக்கொண்டு mid term testம் வைத்து, finalம் முடிந்துவிட்டது.

ஆனாலும் 'பூச்சி மாதிரி இருக்கு'னு புளியைக் கரைக்காமலும், தக்காளி பிடிக்காது என்பதால் அதைப் பிழியாமல் பொடியாக நறுக்கிப் போட்டதாலும் மதிப்பெண்கள் கொஞ்சம் குறைந்துதான் போனது.

இருந்தாலும் கொத்துமல்லி விதை, மிளகு & சீரகம் இவற்றை வறுத்துப் பொடிப்பதை "ஸோ இண்ட்ரஸ்டிங்", "ரசம் வைப்பதிலேயே இதுதான் ஃபன் பார்ட்" என சொன்னதால் A + கொடுத்தாச்சு.

விடுதிக்குப்போய்  தக்காளியை நறுக்கியோ, புளியைக் கரைக்காமலோ ரசம் வைப்பதும் வைக்காததும் இனி அவள்பாடு, அதை ருசிக்கப் போகும் அவளின் தோழிகள் பாடு  !!

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி சூப்பர் ரசம் வைத்து சாப்பிட்டதாக படத்துடன் வாட்ஸ் அப் சொன்னது.

பார்த்தீங்களா ?  சக்தி, சக்தி இல்லாட்டி ஆச்சி,  மெட்ராஸ், ஆனந்த் என போகாமல் தினமும் ரசத்துக்குப் பொடிப்பதை ஃபன் பார்ட்டா நெனச்சுக் கத்துப்பீங்க‌.

அடுத்த வகுப்புகள் ஆரம்பிக்க இன்னும் சில நாள்களே உள்ளன. Summer  சலுகையும் உண்டு. உஷாராகி உடனே பதிஞ்சுக்கோங்க :))))

Sunday, July 24, 2016

மஞ்சள் செம்பருத்தி !



என்னமோ தெரியல, திடீர்னு மஞ்சள் நிறப் பூச்செடி வாங்க வேணும்போல் தோனியது. இரண்டு வாரங்களுக்குமுன் கடைக்குப் போனேன், துளுக்கு சாமந்தி ஈர்த்தது. ஆனாலும் வாங்கிவந்து நிழலில் வைத்து காயவைக்க வேணுமா ? பாவம், அது கடையிலேயே இருந்துவிட்டுப் போகட்டும் என வந்துவிட்டேன்.

கடையிலயுமே சரியா தண்ணி விடாம செடிகள் வாடிப்போய் இருந்தன. அதன் பிறகு அந்தக்கடை பக்கமே தலை காட்டல! நிறைய மல்லிச்செடிகள் வந்திருந்தது. சிவப்பு நிறத்திலேயே கொஞ்சம்கொஞ்சம் நிறம் மாறினாற்போல் செம்பருத்தி செடிகளும் இருந்தன.

நேற்று 'ட்ரேடர் ஜோஸ்' போனபோது சிவப்பு நிற செம்பருத்தி செடிகளுடன் இந்த மஞ்சள் நிற செம்பருத்தி செடியும் (நிறைய மொட்டுக்களுடன்) இருந்தது. ஏதோ தைரியத்தில் வாங்கி வந்துவிட்டேன்.

எல்லாம் சென்ற வாரம் செக்கிங்'கு வந்த  Apt mgmt ppl, தொட்டிச் செடிகளை வேலியின்மேல் வைத்துக்கொள்ள பச்சைக்கொடி காட்டியதால் வந்த தைரியத்தில்தான்.

காலையில் ஒரு ஐந்து நிமி இடது பக்கமும், மாலையில் ஒரு ஐந்து நிமி வலது பக்கமுமாக வெயில் வரும். இதில் (ஏதோ)பாதுகாப்பு கருதி(யாம்), இடது பக்கம் மட்டுமே வைக்க அனுமதி.

                                         இன்று அதிகாலையில் ஒரு பூ பூக்கத் தொடங்கியது.

                    வாக் போயிட்டு 8 மணிக்கெல்லாம் வந்து பார்த்தால் நன்றாகப் பூத்திருந்தது.

                                        10 மணி வாக்கில் மற்றொன்றும் பூத்துவிட்டது :))
இந்த ரெண்டு பூக்களையும்தான் வளைச்சுவளைச்சு படம் எடுத்து வச்சிருக்கேன் ! இனிமேல் பூப்பதையும் இங்கேயே கொண்டுவந்துவிடுவேன்.

நாள் முழுவதும் பார்த்துக்கொண்டிருந்தாலும் ஆசை தீரவில்லை, மஞ்சளும், இளஞ்சிவப்பும் கலந்து .... அவ்வ்வ்வளவு அழகு !!

Wednesday, July 13, 2016

Pokémon Go !

என் பெண்ணிற்கு விடுமுறை என்றால் அது விடுமுறைதான். அவசியம் என்றால் தவிர வீட்டை விட்டு வெளியே வரமாட்டாள்.

அதெல்லாம் அப்போ ! அப்படின்னா இப்போ ???

கடந்த சில தினங்களாக காலையில் நானே மறந்தாலும் நினைவுபடுத்தி என்னை நடைப்பயிற்சிக்கு அழைத்து செல்கிறாள். அதுவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெரு வழியாக.

இந்த வார இறுதியில் அதிசயமாக எங்களுடன் பூங்காவிற்கு வந்தாள். கடைகளுக்கும் விஜயம் த‌ந்தாள்.

மாதத்தில் ஓரிரண்டு முறை சந்தித்துக்கொள்ளவே சிரமப்படும் என் பெண்ணும் அவளின் தோழிகளும் இந்த வாரத்தில் மட்டுமே இரண்டுமுறை சந்தித்துக்கொண்டார்கள்.

இன்று 'நூலகம் செல்லலாம்' என்றாள்.

'அடடே புத்தகங்களின் மேல் என்ன ஒரு ஈர்ப்பு' என வியந்து(போனேன்) போனேன். நூலகத்தை அலசு அலசு என அலசிவிட்டு,  'நூலகத்தின் பின்னால் இருக்கும் பூங்காவுக்குப் போகலாம்' என சொல்லி ஆச்சரியப்படுத்தினாள்.

வழக்கத்துக்கு மாறாக அங்கோ ஏகத்துக்கும் கூட்டம். 'பின்னே இருக்காதா ? பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாச்சே' அப்படின்னுதானே நினைக்கத் தோன்றும் !! ஹா ஹா ஹா :))))

எல்லாம் இவளைப் போலவே மேனிலை & கல்லூரிப் பிள்ளைகள் தனித்தனியாகவும், குழுகுழுவாகவும் தங்கள் அலைபேசியுடன் சுற்றித் திரிந்தனர்.

வேறெதெற்கு ? Pokémonகளை  catch பண்ணத்தான்.

எங்கெங்கோ வெளி மாநிலங்களில் இருக்கும் தோழிகளுக்குள், " நீ எவ்வளவு போக்கிமான்களைப் பிடிச்சிருக்க, எந்த நிற டீம்ல நீ இருக்க ? "என்றெல்லாம் கேள்விகள் பறக்கினறன.

வீட்டிலே இருந்தாலும் Couch Potatoவாக இல்லாமல் இங்கும் அங்குமாக‌ நடந்துகொண்டே இருப்பதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியில் வந்தது ஆரோக்கியமானதே என்றபோதிலும், எங்கெல்லாம் போவது பாதுகாப்பு, எங்கெல்லாம் போகக் கூடாது என்ற அறிவுரைகளுடன்  உள்ளூர் & உலக செய்திகளில் தினமும் இந்த விளையாட்டை விளையாடுபவர்களைப் பற்றிய செய்தி தவறாமல் இடம் பிடித்துவிடுகிறது.

என் அலைபேசியை நான் தொட்டாலே "நீயும் ஆரம்பிச்சிட்டியா, இன்னிக்கு நீ எத்தனை Pokémonகளைப் பிடிச்ச‌ " என்ற கேள்வி என் வீட்டிலிருந்தே என்னை நோக்கி வருகிறது.

இதனால் சாதாரணமாகத் தெரிந்த அலைபேசி, இப்போது அதை யார் நடந்துகொண்டே பயன்படுத்தினாலும் 'போக்கிமான் கேம் விளையாடுறாங்களோ" என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ஹலோஓஓ !! அலைபேசியோட எங்க கெளம்பிட்டீங்க ??

ஹா ஹா .....இப்போ உங்களுக்கும் 'Pokémon Go' fever வந்துடுச்சா :))))

Tuesday, July 5, 2016

தேறுமா ? தேறாதா ?


இப்படி காய்ஞ்சு போய் கிடக்கே !! கழித்தல், கூட்டல், பெருக்கல் எல்லாம் தேவையா ? இல்லாட்டி அப்படியே விட்டுடலாமா ?  ஏதாவது ஐடியா சொல்லுங்க !!

                      **********************************************

இதே மாதிரியான‌ கோடைகாலத்தில்தான் ஏற்கனவே இருந்த அப்பார்ட்மென்டிற்கு  குடி வந்தோம். பக்கத்திலுள்ள பார்க்'கிற்கு வாக் போக ஆரம்பித்தபோது குளிர்காலமே வந்துவிட்டது

ஒருசில மரங்கள் & செடிகளைத் தவிர பார்க் முழுவதுமே காய்ந்துபோய் கிடந்தன. அங்கிருந்த மற்ற மரங்கள் & செடிகளை எல்லாம் அளவோடு வெட்டிவிடும்போது இந்த செடியை மட்டும் அப்படியே விட்டுவிட்டார்கள். கவனக் குறைவால் பிடுங்காமல் விட்டிருப்பார்கள் என‌ நினைத்தேன்.

ஆனால் வசந்தம் வந்ததுமே நம்ப முடியாத அளவிற்கு பச்சைப்பசேல் என துளிர்க்க ஆரம்பித்துவிட்டது. 

கோடையில் மின்னல் பூச்சிகள் பறப்பதுபோல் அந்த இடமே பளிச் என பூக்களால் நிரம்பிவிட்டது. அங்கிருந்தவரை வருடந்தோறும் இதை ரசிப்பதுண்டு. 

                    *************************************************

                                             வருகை தந்த அனைவருக்கும் நன்றி !

Thursday, June 23, 2016

குருவிக் கூடு !


எண்ணிச் சொல்லுங்க, இந்த மரத்தில் சுமார் எத்தனை குருவிகள் கூடு கட்டியிருக்குமென !



சரியா எண்ணியிருக்கீங்களா என நாளை வந்து சரி பார்க்கிறேன் :)

   /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////// 

ஹி ஹி !! வாங்க எண்ணலாம், 1, 2, 3, ....

குளிர்காலத்தில்தான் தெரியும் ஒவ்வொரு மரத்திலும் எவ்வளவு கூடுகள் உள்ளன என்பது.  ஒரு மரத்தில் ஒன்றிரண்டு கூடுகளைப் பார்ப்பது உண்டு, ஆனால் இந்த மரத்தில் மட்டும் இவ்வளவு கூடுகள் !! 

வருடந்தோறும் பார்ப்பதுதான் என்றாலும் ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் (எனக்கு) ஆச்சர்யம்தான் !



மேலேயுள்ள படம் இப்போது எடுத்தது. கீழேயுள்ளது குளிர்காலத்தில் எடுத்தது.

Friday, June 10, 2016

ஏப்ரிகாட் / Apricot


நாங்கள் இருக்கும் ஊரில் உள்ள ஏப்ரிகாட் தோட்டம். வார இறுதி நாட்களில் இங்குதான் வாக் போவோம். பருவ நிலைக்கேற்ப அது மாறும் அழகே தனிதான்.

ஊரின் நடுவில் இருக்கும் இத்தோட்டம் இதுவே நம் ஊரில் என்றால் யாரோ ஒரு பெரிய ஆளின் கண்ணில் பட்டு நம் கண்களில் இருந்து காணாமலே போயிருக்கும் என நினைக்கத் தோன்றும்.

இலையுதிர் காலத்தில் இலைகளை உதிர்த்து, .......


வசந்தத்தில் பூத்து,.........

பின் இலைகள் தழைத்து


காய்த்து

கோடையில் பழுத்து சாப்பிடத் தயாரான நிலையில் ....


இப்போது sales போய்க்கொண்டிருக்கிறது.

சரி வாங்கலாம் என போனால் $ 3, $ 5 என விலை குறித்த பெட்டிகளில் இருந்த பழங்களில் ஒன்றுகூட‌ நன்றாக இல்லை. எல்லா பழங்களும் அடி பட்ட மாதிரியே இருந்தன. பொறுக்கி எடுக்க அனுமதியில்லை.

ஆனால் $ 25 பெட்டியில் இருந்தவை மட்டும் நல்லநல்ல‌ பழங்களாக இருந்தன. வாங்கினாலும் நான் மட்டுமே சாப்பிட வேண்டும். அவ்வளவு விலை போட்டு வாங்க வேண்டுமா என வந்துவிட்டேன்.

எனவே இப்போதைக்கு "சீ சீ இந்தப் பழம் புளிக்கும்" என வந்திருக்கிறேன். (உண்மையில் அவர்கள் free sample குக் கொடுத்த (நாவல் பழம் சைஸில்) இந்த பழத்தின் இனிப்பு இன்னமும் நாவில் இரு(னி)க்கிறது)

ஒருவேளை நாளையே இனிக்கவும் செய்யலாம், அப்போது கட்டாயம் வாங்கி வந்துவிடுவேன்.

Wednesday, June 8, 2016

ஏழிரண்டாண்டு !

வினாத்தாளில் "ஏழிரண்டாண்டு" எனத் தொடங்கும் இராமாயணச் செய்யுளை அடி பிறழாமல் எழுதுக ____ என்ற கேள்வியைப் பார்த்ததும், இதுவே முழு ஆண்டுப் பொதுத்தேர்வில் கேட்டிருந்தால் கேள்வி எண்ணைப் பதிவு செய்து சுளையாக முழு மதிப்பெண்ணை பெற்றிருப்போம்' என எனக்குள் ஒரு நமுட்டுச் சிரிப்பு.

ஆர்வமிகுதியில் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவியிடம், " இராமாயணம் பகுதியில் மனப்பாடப் பகுதியில் இல்லாத பாடலைக் கேட்டிருக்கிறார்களே " என்றேன்.

அவளோ "இந்தப் பாடல் மனப்பாடப் பகுதியில் இருக்கிறது" என்று அடித்துச் சொன்னாள்.

இல்லை, இப்படி ஒரு செய்யுளை நான் படிக்கவே இல்லை " என்று வாதிட்டேன்.

எவ்வளவு நேரம் ஆகும், தமிழ் புத்தகத்தை எடுத்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ! இருந்தாலும் நான் சொல்வதுதான் சரி என்பது என் எண்ணம்.

என்னைப் போலவே வகுப்பில் உள்ள மாணவிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் சந்தேகம், அதனால் வகுப்பு முழுவதும் சலசலப்பு.

"எங்கே சொல்லு பார்க்கலாம்" என்றேன். கடகடவென சொல்லி முடித்துவிட்டாள். தூக்கிவாரிப்போட்டது. எப்படி பார்க்காமல் விட்டோம் என்றிருந்தது.

அன்றைக்கு முதல் வேலையாக அந்தப் பாடலை மனனம் செய்து எழுதிப் பார்த்துக்கொண்டேன்.

அரையாண்டுக்கும் முழு ஆண்டுக்கும் இடையில் மூன்று திருப்புதல் தேர்வுகள் வரும்.

முதல் தேர்வு எழுதப்பட்டு விடைத்தாள்கள் திருத்திக் கொடுக்கப்படும்.

இரண்டாம் தேர்வு எழுத மட்டுமே செய்வோம், திருத்திக் கொடுக்க‌மாட்டார்கள்.

மூன்றாவது தேர்வு ? எழுதுவதுமில்லை, அதனால் திருத்த வேண்டிய அவசியமுமில்லை என்பதனால் கேள்வித்தாள் கையிலேயே கொடுக்கப்பட்டுவிடும்.

அப்படி கொடுக்கப்பட்டபோது நடந்ததுதான் மேலேயுள்ள நிகழ்வு.

நான் ஏதோ புத்தகத்துடன் தேர்வு எழுதப் போனதாகவும், பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டும் எழுதுகிறேன் என்றெல்லாம் கற்பனையில் வந்திருக்குமே !  ஹா ஹா ஹா   :))))

ஆண்டு முழுவதும் நடந்த தேர்வுகளில் இருந்து தப்பித்த அப்பாடல், இப்போது கேட்கப்பட்டதால்தான் நானும் முழுஆண்டுத் தேர்வில் தப்பித்தேன் !

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் முதல்தாள் எழுதி முடித்து வெளியில் வந்ததும் என் தோழிகள், " அந்த செய்யுளே வந்துருச்சுபோல " என புன்னகைத்தனர்.

பல வருடங்களுக்குமுன் படித்தது, ஆனாலும் அந்த வருடம் படித்த மற்ற செய்யுள் பகுதிகளில், திருக்குறள் உட்பட எதுவுமே நினைவிலில்லை, இந்தப் பாடலைத் தவிர. எழுத்துப் பிழைகள் இருக்கலாம்.  இருந்தாலும் .........

பாடல் இதோ :

" ஏழிரண்டாண்டு யான்போந் தெரிவனத் திருக்க ஏன்றேன்
வாழியாய் அரசர் வைகும் வளநகர் வைகல் ஒல்லேன்
பாழியந் தடந்தோள் வீரப் பார்த்திலை போலும் அன்றே
யாழிசை மொழியோடன்றி யானுறை இன்பம் என்னோ "

'மழை விட்டும் தூவானம் விடாது' என்பதுபோல பள்ளிகள் ஆரம்பித்து ஒரு வாரமாகியும், நினைவுகள் மட்டும் அங்கேயே சுற்றிச் சுழல்கின்றன.

Thursday, May 26, 2016

கோடை விடுமுறை !!

பள்ளி வாழ்க்கையை விட்டு விலகி பல வருடங்கள் ஓடிவிட்டாலும், நம் ஊரிலிருந்து எவ்வளவு தொலைவில் சென்று தங்கி இருந்தாலும், இன்னமும் ஏப்ரல் & மே மாதங்கள் இரண்டும் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏப்ரல் மாதம் வந்தாலே ஒரு புத்துணர்ச்சி வந்துவிடும். தேர்வு நடந்துகொண்டிருக்கிறதே என்றுகூட யோசிக்கத் தோணாது.

அதுவும் ஏப்ரல் 10 தேதியானால் அவ்வளவுதான், 'இன்னும் ஒன்றிரண்டு நாட்கள்தான், சித்திரை 1 வந்துவிடும்' என சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போய்விடும்.

இப்போது புரிந்திருக்குமே நான் எங்கே வருகிறேன் என்று.

ஆமாங்க நம்ம ஊர் கோடை விடுமுறையைத்தான் சொல்கிறேன். நல்லவேளை அந்நாளில் கோடை வகுப்புனா என்னன்னே தெரியாமல் வள‌ர்ந்தாச்சு. இல்லாட்டி, 'கோடை விடுமுறை ஏன்தான் வருகிறதோ!" என்றே வருத்தப்பட்டிருப்போம்.

இதோ மே மாதம் முடியப்போகும் இப்போதும் எனக்குள் தானாகவே ஒரு சோகம் வந்துவிட்டது. அது அடுத்த வாரம் பள்ளி திறந்துவிடுவார்களே என்றுதான் !

என்னதான் புதுத்துணி, புது நோட்டு, புது புத்தகங்கள் என்றாலும் முகம் மட்டும் கொஞ்சம் வாடிப்போய்தான் இருக்கும்.

ஜூன் 1 திங்கள் கிழமையில் வந்தால் அவ்வளவுதான், 'ஒரு வாஆஆரம் தொடர்ந்து போக வேண்டுமே' என்றிருக்கும்.

அதுவே திங்கள் தவிர்த்து மற்ற எந்த நாட்களில் வந்தாலும் எங்களுக்குப் பிரச்சினையில்லை.

செவ்வாய் என்றால் கண்டிப்பாக புதன்கிழமைதான் பள்ளி திறப்பார்கள். ஆரம்பத்திலேயே இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும்.

மற்ற நாட்களில் ஆரம்பிக்குமானால் பிரச்சினையே இல்லை, இரண்டுமூன்று நாட்கள் பள்ளி, உடனேயே விடுமுறை வந்துவிடும் என ஆயிரம் கணக்கு போடுவோம்.

'வெயில் காரணமாக பள்ளி ஒரு வாரம் கழித்து திறக்கப்படும்' என்றால் அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணை ஏது ?

இப்படியெல்லாம் பிள்ளைகள் மட்டுமா கணக்கு போடுவார்கள் ? ....... ஹா ஹா ஹா :))))

*************************************************************************************

(பள்ளியில் படித்த காலங்களில் தோழிகளுக்குள் நாங்கள் பேசிக்கொள்வதுதான் இந்தப்பதிவு)

*************************************************************************************

Monday, May 23, 2016

செலவழித்த ஸெல்ஃபோன் நெம்பர் !!!

பல வருடத் தேடலுக்குப்பின் இப்போதுதான் பள்ளிக்கால நெருங்கிய தோழியின் அலைபேசி எண் கிடைத்தது, ஏதோ கலிஃபோர்னியா லாட்டரி அடித்ததுபோல் இருந்தது எனக்கு.

எத்தனை வருடங்களுக்குப் பிறகு பேசப் போகிறேன். பேச்சு மணிக் கணக்கில் நீளுமே !

ஒன்று முதல் பனிரெண்டு வரை எங்கள் பக்கத்தில் அமர்ந்த தோழிகள், அவர்களிடம் நடந்த செல்லச் சீண்டல்கள், போட்ட சண்டைகள், பொய்க் கோபங்கள், ஆசிரியைகள் ..... என ஏகத்துக்கும் பேச வேண்டாமா ?

மடித்துக்கட்டிய ரெட்டை ஜடையுடன் பள்ளியில் உலாவந்த அந்த‌ நாட்களை மறக்கத்தான் முடியுமா ? இவை எல்லாவற்றையும் இன்று பேசி மகிழ‌ வேண்டும்.

ஒரே ஊர், ஒரே பள்ளி, ஒரே வகுப்பு, கோபம் வந்து ஆசிரியை மாற்றி உட்கார வைத்தால் தவிர ஒரே டெஸ்க், ..... என எல்லாமும் பனிரெண்டு வரை எதிர்பாராமல் எங்களின் விருப்பம்போல்தான் போய்க்கொண்டிருந்தது.

அதன்பிறகு இருவருமே வேறுவேறு பாதைகளில் பயணமாகிப் போனோம். கடைசித் தேர்வான உயிரியல் தேர்வின்போது பார்த்ததுதான்.

எப்போதாவது யாரிடமாவது அவளைப்பற்றி கேட்டுத் தெரிந்துகொள்வேன். ஒருவேளை அவளும் என்னைப்பற்றி யாரிடமாவது விசாரித்திருக்கலாம்.

என்னவொன்று .... தன்னைப்பற்றி அந்த நாட்களிலேயே கொஞ்சம் படிபடியாக அளப்பாள். ஒருவேளை இப்போது மாறியிருக்கலாம்.

இதற்குமேல் பொறுமை இல்லை. நினைவுகளை பின்னுக்குத் தள்ளி பேசும் ஆவலில் எண்களை அழுத்தினேன். மறுமுனையில் ரிங் போகிறது.

'ஹலோ' சொல்லப்போகும் அவளது குரல் அப்படியேதான் இருக்குமா !! குரலை வைத்து என்னையும் கண்டுபிடித்து விடுவாளோ !!

"ஹலோ, யாரு, எங்கிருந்து பேசறீங்க ? நெம்பர் கொஞ்சம் வித்தியாசமா இருக்கே ! " என்றாள்.

"அகதா'தானே, நான் அனிதா பேசறேன்" என்றேன் ஆவலாக.

"எந்த அனிதா? " __ வந்த கேள்வியால் கொஞ்சம் ஏமாற்றம்.

பெயரைக் கேட்டதும் துள்ளிக் குதிப்பாள் என எதிர்பார்த்தேன். 'அனிதா' என்றால் நான்தானே நினைவுக்கு வரவேண்டும்.

குரல் மட்டுமல்ல, பெயரும் இங்கே எடுபடவில்லை.

ஒருவாறாக‌ சமாளித்து இரண்டு பேரும் ஒன்றாகப் படித்ததை நினைவூட்டவேண்டி வந்தது.

"இந்த பேர்ல நிறைய பேர் படிச்சிருக்காங்களே, நீங்க எந்த அனிதா ?", என்றாள்.

ஊரின் பெயரைச் சொன்னதும் "இப்படி சொல்ல வேண்டியதுதானே, மொட்டையாச் சொன்னா எப்படி ?", என்றாள் சாதாரணமாக‌.

'கூப்பிட்டிருக்க வேண்டாமோ' என்றிருந்தது. மாற்றியது காலமா அல்லது குடும்பப் பொறுப்புகளா ! அவள் மாறியிருக்கிறாள் என்றால் ? நான் ஏன் மாறவில்லை ?

முன்பு  படிக்கணக்கில் அளந்தவள் இப்போது பிறந்தவீடு(ஏற்கனவே தெரிந்ததுதான்) & புகுந்தவீட்டுப்(தேவையில்லாத ஒன்று) பெருமைகளை வண்டிவண்டியாய் ஏற்றிக்கொண்டிருந்தாள்.

மாறவில்லை அப்படியேதான் இருக்கிறாள் :)

"ஐயோ, இது எதுவுமே எனக்கு வேண்டாம், நம் ஊரில் யாரையாவது பிடித்தால் இந்த வேலை முடிந்துவிடும். நாம் நம் பள்ளி நினைவுகளைப் பற்றி பேசுவோமே" என சொல்ல நினைத்து இடையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக‌ நான் சந்தித்த‌ தோழிகளைப் பற்றியும், ஒருதடவை ஃபிஸிக்ஸ் டீச்சர் அவர் கையால் எனக்கு காஃபி கொடுத்ததையும், 'சும்மா உட்கார்' என கணித ஆசிரியை கஸ்தூரியை அவர் பக்கத்தில் அமர வைத்ததையும், நானும் ரெஜினாவும் ஒரு ட்ரெயினிங்'கின்போது எதிர்பாராமல் சந்தித்துக்கொண்டதையும் ஆவலுடன் சொன்னபோது, 'இதையெல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சிருக்க ?" என சொல்லவும் அவளிடமிருந்து யாராவது ஒருவரைப் பற்றியாவது தெரிந்துகொள்ள மாட்டோமா என்றிருந்த எனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

பேச்சை எந்தப்பக்கம் திருப்பினாலும் கடைசிவரை தன் குடும்பத்தைச் சுற்றிசுற்றியே வந்தாள், சலிப்பாகிவிட்டது.

கடைசியாக "நீகூட வேலைக்குப் போனியே ? " என்றாள் நினைவு வந்தவளாக. பேச்சைத் தொடரலாமா? வேண்டாமா? என்றிருந்தது எனக்கு.

"இல்ல, விட்டுட்டேன்" என்றேன் பேசும் ஆர்வமின்றி.

"ஏன் விட்டுட்ட, இப்போ எவ்ளோ சமபளம் தெரியுமா ? " என்றாள்.

"வீட்டுக்காரர் வெளியூர் வந்துட்டார், அதனால விட வேண்டியதாப் போச்சு " என்றேன்.

"இப்போ எங்க இருக்க ?" என்றாள்.

சொன்னதும் ஆச்சரியமாகி, "எவ்ளோ நாளா இருக்க ? வீட்டுக்காரர் என்ன செய்றார்? பசங்க என்ன பண்றாங்க ?" என்று கேட்டாள்.

பதிலை வாங்கிக்கொண்டு, " அப்படியே கொஞ்சம் ஹோல்ட் பண்ணிக்கோ, செகண்ட் ல வந்திடுறேன்" என்றாள்.

சொன்ன மாதிரியே வந்தவள் " என் வீட்டுக்காரர்ட்ட உன்னப்பத்தி சொன்னேன்(ஹா ஹா இவளுக்கு நான் யார் என்பதைப் புரிய வைக்கவே சில நிமிடங்கள் பிடித்தது), 'பொண்ணு கேளு பொண்ணு கேளுன்றார்' " என்றாள்.

"யாருக்கு பொண்ணு கேக்கணும் ?" என்றேன்.

"என் பையன் ஜீவாவுக்குத்தான்" என்றாள்.

"ஓ அப்படியா! யார(எந்த பெண்ணை) , யாரிடம் கேக்கணும் ?"_ வலிக்காத மாதிரியே நடித்தேன்.

"மறந்துடாதே, இனி அடிக்கடி பேசுவோம் " என்றாள்.

"அதுக்கென்ன, பேசலாமே" என சொல்லிக்கொண்டே,  தேடித்தேடி சில நிமிடங்களுக்கு முன்னால் பொக்கிஷமாக நினைத்து தொலைபேசியிலும், அலைபேசியிலும் சேமித்து வைத்த தோழியின் செல்ஃபோன் எண்ணை, ஏனோ இப்போது முற்றிலுமாக செலவழித்துவிட்டேன்.

Wednesday, May 4, 2016

ஊருக்குப் போனபோது !


மார்ச் மாதம் ஊருக்குப் போனபோது புடிச்சு வந்தவை !!

                   ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்குப் பிற‌கு பங்குனி உத்திர விழாவைப் பார்த்தேன்.

                                        ஹை, விறக‌டுப்பை கவனிக்க ஆள் வந்தாச்சு !

 
முன்பெல்லாம் தொடர் மழையின்போது முறுக்கு, பஜ்ஜியைப்போல் இந்த பட்டாணிக்கும் எங்க வீட்டில் ஒரு சிற‌ப்பிடம் உண்டு. எங்க அப்பா சுடச்சுட வாங்கிவந்து ஒரு நியூஸ் பேப்பரில் கொட்டிவிட்டால் போதும், சுற்றிலும் வட்டமாக உட்கார்ந்து காலி பண்ணுவோம். பொரிந்த பட்டாணியை மட்டுமே கொறித்துவிட்டு 'கடிக்க முடியாது'னு கடைசியில் கொஞ்சம் விட்டுடுவாங்க. ஹி ஹி .... எனக்குப் பிடித்ததே அதுதான். தேடித்தேடி எடுத்து கடிப்பேன்.

 ஊருக்குப் போனதும் உப்பு கடலையையும் சுவைக்காமல் வரமாட்டேன். இது இங்கும் கிடைக்கிற‌து. ஆனால் சுவையில் வித்தியாசம் இருக்கு.

கொடுக்காப்புளி ___ பெயர் சரியா எனத் தெரியல. நாங்க கொடுக்கலிக்கா என்போம். இதைம் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். முன்பு தோட்டங்களில் உள்ள மரங்களில் பொறுக்கி சாப்பிடுவோம். இப்போது அந்த மரங்கள் இல்லை.

பிஞ்சாக இருந்தால் துவர்க்கும். பிஞ்சோ அல்லது முற்றியதோ எதுவாக இருந்தாலும் எனக்கு இஷ்டம்தான். அந்த நாளில் அதன் விதைகளை உரித்து, இரண்டாகப் பிரித்து, ..... அதே நினைவில் இப்போதும் செய்தேன், ஆனால் அப்போது உடன் இருந்தவர்கள் எல்லோரும் இப்போது வேறு எங்கெங்கோ ! சிலர் இல்லாமலும் போய்விட்டார்கள் !


                        பண்ருட்டி வரைக்கும் போயிட்டு இதை சாப்பிடாமல் எப்படி திரும்புவது ?

இது கிளம்பும் நேரம் கிடைத்தது. இருந்தாலும் விடுவதாய் இல்லை. முழுசாவும் & நறுக்கி துண்டுகள் போட்டு, உப்பு போட்டு குலுக்கி ஒரு கை பார்த்தாச்சு. இப்போது நினைத்தாலும் ஆஹா என்றிருக்கிற‌து.

முந்திரி பழம் சாப்பிட்டால் சிலருக்கு ஜுரம் வரும் என்பார்கள். ஊர் திரும்பியதும் இரண்டு வாரங்களாக எனக்கும் இங்கே நல்ல ஜுரம். ஒருவேளை பல வருடங்களுக்குப் பிற‌கு சாப்பிட்டதால்கூட இருக்கலாம்.

எப்போதாவது ஒன்றிரண்டு முந்திரி கொட்டைகள் எங்களுக்குக் கிடைக்கும். அவற்றை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுக்க முற்பட்டு, அதிலிருந்து வரும் பால்பட்டு தோல் புண்ணானதுதான் மிச்சம். பிறகு யாரோ சொல்லக்கேட்டு நெருப்பு அடுப்பில் சுட போட்டோம். அதன் கரி மட்டுமே கிடைத்தது :))) அதன்பிறகு கொஞ்சம் பொறுமை காத்து வெயிலில் காயப்போட்டு தினமும் ஒரு தடவைக்குப் பல தடவை 'காஞ்சு போச்சா காஞ்சு போச்சா' என டெஸ்ட் பண்ணி ..... கடைசியில் ஏதோ குருவியோ அல்லது அணிலோ தூக்கிட்டுப் போயிடுவாங்க. ஒரு தடவையும் உடைத்து சாப்பிட்டது கிடையாது. இந்த அளவுக்குத்தான் அதனுடனான அனுபவம்.


நுங்கு, மாங்கா பிஞ்சு, பச்சை மல்லாட்டை எல்லாம்கூட சாப்டாச்சு :)

                                                     அழகழ‌கான பூக்கள் !

                                                                மஞ்சள் கனகாம்பரம்

இளம் பிங்க் நிறத்தில் அழகான செம்பருத்தி ! சரியான வெளிச்சம் இல்லாததால் படம் பளிச் என இல்லை. இதுவே அந்த நாள் சித்ராவா இருந்தா ? கெளைய ஒடச்சு, பூவ பறிச்சு, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருப்பேன் :))) 

                                                               மஞ்சள் செம்பருத்தி

 

                                                             சிவப்பு செம்பருத்தி

முன்பெல்லாம் ஊருக்குப் போனால் 'என்னதிது, எல்லோருக்கும் வயசாகிகிட்டே போகுதே'னு நினைப்பேன். ஆனால் இப்போதோ 'இப்போது பார்க்கும் இவர்கள் அனைவரையும் அடுத்த தடவை வரும்போதும் பார்க்க வேண்டும்' என மனம் நினைக்க ஆரம்பித்துவிட்டது.