Wednesday, May 4, 2016

ஊருக்குப் போனபோது !


மார்ச் மாதம் ஊருக்குப் போனபோது புடிச்சு வந்தவை !!

                   ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்குப் பிற‌கு பங்குனி உத்திர விழாவைப் பார்த்தேன்.

                                        ஹை, விறக‌டுப்பை கவனிக்க ஆள் வந்தாச்சு !

 
முன்பெல்லாம் தொடர் மழையின்போது முறுக்கு, பஜ்ஜியைப்போல் இந்த பட்டாணிக்கும் எங்க வீட்டில் ஒரு சிற‌ப்பிடம் உண்டு. எங்க அப்பா சுடச்சுட வாங்கிவந்து ஒரு நியூஸ் பேப்பரில் கொட்டிவிட்டால் போதும், சுற்றிலும் வட்டமாக உட்கார்ந்து காலி பண்ணுவோம். பொரிந்த பட்டாணியை மட்டுமே கொறித்துவிட்டு 'கடிக்க முடியாது'னு கடைசியில் கொஞ்சம் விட்டுடுவாங்க. ஹி ஹி .... எனக்குப் பிடித்ததே அதுதான். தேடித்தேடி எடுத்து கடிப்பேன்.

 ஊருக்குப் போனதும் உப்பு கடலையையும் சுவைக்காமல் வரமாட்டேன். இது இங்கும் கிடைக்கிற‌து. ஆனால் சுவையில் வித்தியாசம் இருக்கு.

கொடுக்காப்புளி ___ பெயர் சரியா எனத் தெரியல. நாங்க கொடுக்கலிக்கா என்போம். இதைம் பல வருடங்களுக்குப் பிறகு பார்க்கிறேன். முன்பு தோட்டங்களில் உள்ள மரங்களில் பொறுக்கி சாப்பிடுவோம். இப்போது அந்த மரங்கள் இல்லை.

பிஞ்சாக இருந்தால் துவர்க்கும். பிஞ்சோ அல்லது முற்றியதோ எதுவாக இருந்தாலும் எனக்கு இஷ்டம்தான். அந்த நாளில் அதன் விதைகளை உரித்து, இரண்டாகப் பிரித்து, ..... அதே நினைவில் இப்போதும் செய்தேன், ஆனால் அப்போது உடன் இருந்தவர்கள் எல்லோரும் இப்போது வேறு எங்கெங்கோ ! சிலர் இல்லாமலும் போய்விட்டார்கள் !


                        பண்ருட்டி வரைக்கும் போயிட்டு இதை சாப்பிடாமல் எப்படி திரும்புவது ?

இது கிளம்பும் நேரம் கிடைத்தது. இருந்தாலும் விடுவதாய் இல்லை. முழுசாவும் & நறுக்கி துண்டுகள் போட்டு, உப்பு போட்டு குலுக்கி ஒரு கை பார்த்தாச்சு. இப்போது நினைத்தாலும் ஆஹா என்றிருக்கிற‌து.

முந்திரி பழம் சாப்பிட்டால் சிலருக்கு ஜுரம் வரும் என்பார்கள். ஊர் திரும்பியதும் இரண்டு வாரங்களாக எனக்கும் இங்கே நல்ல ஜுரம். ஒருவேளை பல வருடங்களுக்குப் பிற‌கு சாப்பிட்டதால்கூட இருக்கலாம்.

எப்போதாவது ஒன்றிரண்டு முந்திரி கொட்டைகள் எங்களுக்குக் கிடைக்கும். அவற்றை உடைத்து உள்ளிருக்கும் பருப்பை எடுக்க முற்பட்டு, அதிலிருந்து வரும் பால்பட்டு தோல் புண்ணானதுதான் மிச்சம். பிறகு யாரோ சொல்லக்கேட்டு நெருப்பு அடுப்பில் சுட போட்டோம். அதன் கரி மட்டுமே கிடைத்தது :))) அதன்பிறகு கொஞ்சம் பொறுமை காத்து வெயிலில் காயப்போட்டு தினமும் ஒரு தடவைக்குப் பல தடவை 'காஞ்சு போச்சா காஞ்சு போச்சா' என டெஸ்ட் பண்ணி ..... கடைசியில் ஏதோ குருவியோ அல்லது அணிலோ தூக்கிட்டுப் போயிடுவாங்க. ஒரு தடவையும் உடைத்து சாப்பிட்டது கிடையாது. இந்த அளவுக்குத்தான் அதனுடனான அனுபவம்.


நுங்கு, மாங்கா பிஞ்சு, பச்சை மல்லாட்டை எல்லாம்கூட சாப்டாச்சு :)

                                                     அழகழ‌கான பூக்கள் !

                                                                மஞ்சள் கனகாம்பரம்

இளம் பிங்க் நிறத்தில் அழகான செம்பருத்தி ! சரியான வெளிச்சம் இல்லாததால் படம் பளிச் என இல்லை. இதுவே அந்த நாள் சித்ராவா இருந்தா ? கெளைய ஒடச்சு, பூவ பறிச்சு, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருப்பேன் :))) 

                                                               மஞ்சள் செம்பருத்தி

 

                                                             சிவப்பு செம்பருத்தி

முன்பெல்லாம் ஊருக்குப் போனால் 'என்னதிது, எல்லோருக்கும் வயசாகிகிட்டே போகுதே'னு நினைப்பேன். ஆனால் இப்போதோ 'இப்போது பார்க்கும் இவர்கள் அனைவரையும் அடுத்த தடவை வரும்போதும் பார்க்க வேண்டும்' என மனம் நினைக்க ஆரம்பித்துவிட்டது.

18 comments:

  1. அழகழகா பூக்களையும் படங்களையும் போட்டு கடேசில இப்படி பன்ச் வைச்சுட்டீங்களே!! அவ்வ்வ்வ்வ்வ்...!! ;-( ;(

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவோ தவிர்த்தும் அந்த வரிகள் தானாகவே நுழைந்துவிட்டன :(

      Delete
  2. ஆஹா... அருமையான நினைவுகளைத் தந்த படங்கள். அதிலும் முந்திரிப் பழம்....

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊர் பக்கம் இருந்துதான் அந்த முந்திரி பழம் வந்தது :)

      Delete
  3. ஆஹா.... உங்கள் தயவால் நானும் ஊருக்குப் போய்வந்துவிட்டேன்.. அழகான காலங்களை நினைவுபடுத்தும் ரசனையான படங்கள்.. இறுதி பத்தியின் யதார்த்தம் மனம் கனக்கச் செய்துவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கீதா, கடந்த இரண்டு பயணங்களுமே வருத்தமளிப்பதுபோல் அமைந்துவிட்டன. யதார்த்தம் புரியுது, இருந்தாலும் 'இனியும் வேண்டாமே' என்பதுபோல்தான் உள்ளது.

      Delete
  4. நானும் நீ இருந்த ஸமயத்திலேதான் சென்னை ஒருமாத வாஸம். எல்லாம் நம்தென்னாற்காடு ஸாமான்கள் ருசிக்காமலா.. ஆனால் அன்த கொடுக்காப்ளிமரம் வீட்டிலேயே இருந்த காலத்தில் கூட இதெல்லாம் நாம் சாப்பிடரதில்லை. பித்தம். அது,இது என்று சொல்லி ருசிக்கவே விட்டதில்லை. இலையை அரைச்சு மஞ்சபொடி சேர்த்துக் கிளறி காலில் கட்டிகளில் கட்டுவார்கள். கட்டி உடைந்துவிடும். மரம் வெட்டி விறகுக்கு உபயோகப் படுத்துவார்கள்.முள்ளுமரம் ஜாக்கிரதை இந்த வார்த்தை ஞாபகம் வரது. அனுபவித்த நம் ஊர்பக்கம். அப்பா வெயிலோ,வெயில்.மல்லாட்டை சாப்பிட்டேன். அன்புடன் நல்லா எழுதியிருக்கே.

    ReplyDelete
    Replies
    1. காமாக்ஷிமா,

      நீங்க சாப்டதில்லையா !! ஆமாம்மா, பித்தம்னு சொல்லுவாங்க, அப்போதைக்கு அதையெல்லாம் யார் காதுல வாங்குறது ? முள்ளு இருக்கும்தான், ஆடுகளுக்கு வெட்டி வந்து போடுவார்கள். அதன் இலைகள்கூட அழகாக இருக்கும். இந்த தடவை நானும் இஷ்டத்திற்கும் பச்சை மல்லாட்டை சாப்பிட்டேன்.

      தெரியாத்தனமா, நல்ல மதிய வெயில்ல பண்ருட்டி பஸ் ஸ்டான்ட்ல வந்து நின்னு ஒரு வழி ஆனோம் :) எவ்வளவு தூரம் போனாலும் அம்மாவை தென்னாற்காடு இழுத்து வந்துவிட்டதே !

      Delete
  5. போங்கப்பா இப்படி எழுதிட்டீங்களே கடேசில.......! நான் சாப்பிடாததெல்லாம் சாப்பிட்டிருக்கீங்க.
    முந்திரி நாங்களும்சுட்டு சாப்பிட்டது ஞாபகம் வந்தது. இதை விட மாங்கா பால் பட்டு நிறைய தடவை புண்ணாயிருக்கு. ம்.. நினைவுகள் மட்டுமே நெஞ்சில்... திரும்பவும் அந்த காலம் வரவா போகுது.
    படங்கள் அழகாயிருக்கு.
    tooooo late.. naan enaiya sonnen.

    ReplyDelete
    Replies
    1. நான் மட்டும் சும்மாவா :))) நிருபிச்சிட்டோமில்ல லேட்டா வந்து !

      Delete
  6. வாவ் முந்திரி பழம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா..ஜுரம் எல்லாம் வராது எனக்கு..
    இங்கே முந்திரி பழம்னு சொல்லி ஒரு முறை வித்தாங்க.. கூடை எல்லாம் எடுத்திட்டு ஓடி போய் வாங்க பார்த்தா.. திராட்சையை தான் இங்க முந்திரி சொல்றாங்க.. :) செம பல்பு எனக்கு..
    படங்கள் அனைத்தும் அருமை..
    மாதம் ஒரு முறை ஊருக்கு போகும் நான் கூட இப்படிதான் நினைக்கிறேன்.. அப்படி தான் இருக்கு இப்பல்லாம்..

    ReplyDelete
    Replies
    1. எனக்குமே ஜுரம் வராது அபி. பல வருடங்கள் ஆனதால் அப்படி நெனச்சேன். ஒருவேளை பயணத்தில் தொற்றிக்கொண்டு வந்திருக்கலாம்.

      திராட்சையை முந்திரிப்பழம்னு சொல்றாங்களா !!

      Delete
    2. தேனி பகுதியில் கருப்பு திராட்சையை தான் முந்திரி பழம் சொல்றாங்க..

      Delete
    3. அப்போ முந்திரி பழத்துக்கு என்ன பேரு சொல்லுவாங்கனு தெரியலயே !

      Delete
  7. அழகான படங்கள் சகோ/சித்ரா....மூதாதையர் படம் அருமை!!!! ஹிஹி..

    முந்திரிப்பழத்தை நாங்கள் கொல்லாம்பழம் என்போம். மிகவும் பிடிக்கும்.

    கொடுக்காப்புளியும் சிறுவயதில் தின்றதுண்டு. இப்போது பார்த்துப் பலவருடங்கள் ஆகிவிட்டது...

    ReplyDelete
    Replies
    1. கொல்லாம்பழம் என்பதை இப்போதான் கேள்விப்படுகிறேன். கொடுக்காப்புளி எல்லாம் இப்போது கிராமத்தில்கூட பார்க்க முடிவதில்லை. தேடிப்பாருங்க, ஒருவேளை சென்னையில் கிடைக்கலாம்.

      Delete