Wednesday, June 8, 2016

ஏழிரண்டாண்டு !

வினாத்தாளில் "ஏழிரண்டாண்டு" எனத் தொடங்கும் இராமாயணச் செய்யுளை அடி பிறழாமல் எழுதுக ____ என்ற கேள்வியைப் பார்த்ததும், இதுவே முழு ஆண்டுப் பொதுத்தேர்வில் கேட்டிருந்தால் கேள்வி எண்ணைப் பதிவு செய்து சுளையாக முழு மதிப்பெண்ணை பெற்றிருப்போம்' என எனக்குள் ஒரு நமுட்டுச் சிரிப்பு.

ஆர்வமிகுதியில் பக்கத்தில் அமர்ந்திருந்த மாணவியிடம், " இராமாயணம் பகுதியில் மனப்பாடப் பகுதியில் இல்லாத பாடலைக் கேட்டிருக்கிறார்களே " என்றேன்.

அவளோ "இந்தப் பாடல் மனப்பாடப் பகுதியில் இருக்கிறது" என்று அடித்துச் சொன்னாள்.

இல்லை, இப்படி ஒரு செய்யுளை நான் படிக்கவே இல்லை " என்று வாதிட்டேன்.

எவ்வளவு நேரம் ஆகும், தமிழ் புத்தகத்தை எடுத்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள ! இருந்தாலும் நான் சொல்வதுதான் சரி என்பது என் எண்ணம்.

என்னைப் போலவே வகுப்பில் உள்ள மாணவிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் சந்தேகம், அதனால் வகுப்பு முழுவதும் சலசலப்பு.

"எங்கே சொல்லு பார்க்கலாம்" என்றேன். கடகடவென சொல்லி முடித்துவிட்டாள். தூக்கிவாரிப்போட்டது. எப்படி பார்க்காமல் விட்டோம் என்றிருந்தது.

அன்றைக்கு முதல் வேலையாக அந்தப் பாடலை மனனம் செய்து எழுதிப் பார்த்துக்கொண்டேன்.

அரையாண்டுக்கும் முழு ஆண்டுக்கும் இடையில் மூன்று திருப்புதல் தேர்வுகள் வரும்.

முதல் தேர்வு எழுதப்பட்டு விடைத்தாள்கள் திருத்திக் கொடுக்கப்படும்.

இரண்டாம் தேர்வு எழுத மட்டுமே செய்வோம், திருத்திக் கொடுக்க‌மாட்டார்கள்.

மூன்றாவது தேர்வு ? எழுதுவதுமில்லை, அதனால் திருத்த வேண்டிய அவசியமுமில்லை என்பதனால் கேள்வித்தாள் கையிலேயே கொடுக்கப்பட்டுவிடும்.

அப்படி கொடுக்கப்பட்டபோது நடந்ததுதான் மேலேயுள்ள நிகழ்வு.

நான் ஏதோ புத்தகத்துடன் தேர்வு எழுதப் போனதாகவும், பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டும் எழுதுகிறேன் என்றெல்லாம் கற்பனையில் வந்திருக்குமே !  ஹா ஹா ஹா   :))))

ஆண்டு முழுவதும் நடந்த தேர்வுகளில் இருந்து தப்பித்த அப்பாடல், இப்போது கேட்கப்பட்டதால்தான் நானும் முழுஆண்டுத் தேர்வில் தப்பித்தேன் !

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் முதல்தாள் எழுதி முடித்து வெளியில் வந்ததும் என் தோழிகள், " அந்த செய்யுளே வந்துருச்சுபோல " என புன்னகைத்தனர்.

பல வருடங்களுக்குமுன் படித்தது, ஆனாலும் அந்த வருடம் படித்த மற்ற செய்யுள் பகுதிகளில், திருக்குறள் உட்பட எதுவுமே நினைவிலில்லை, இந்தப் பாடலைத் தவிர. எழுத்துப் பிழைகள் இருக்கலாம்.  இருந்தாலும் .........

பாடல் இதோ :

" ஏழிரண்டாண்டு யான்போந் தெரிவனத் திருக்க ஏன்றேன்
வாழியாய் அரசர் வைகும் வளநகர் வைகல் ஒல்லேன்
பாழியந் தடந்தோள் வீரப் பார்த்திலை போலும் அன்றே
யாழிசை மொழியோடன்றி யானுறை இன்பம் என்னோ "

'மழை விட்டும் தூவானம் விடாது' என்பதுபோல பள்ளிகள் ஆரம்பித்து ஒரு வாரமாகியும், நினைவுகள் மட்டும் அங்கேயே சுற்றிச் சுழல்கின்றன.

21 comments:

  1. இது கம்ப ராமாயணத்தில் வருகிறது என்று எண்ணுகிறேன். கம்ப ராமாயணம் படிக்க வேண்டும் என்பது என் பேரவா. ஒவ்வொரு செய்யுளிற்கும் அதன் விளக்கத்தோடு படித்தல் அதன் சுவையே தனி தான். உங்கள் பதிவு என் விருப்பத்தை மேலும் அதிகமாக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

    உங்களின் பரீட்சை நினைவு மிகவும் அருமையாக இருக்கிறது. அதை விடவும் உங்கள் நினைவாற்றல் அபாரம். அப்படியே பாசுரத்தை எழுதி விட்டீர்களே!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க, இது கம்ப இராமாயணத்தில்தான் வருகிறது. எனக்கும் படிக்க‌ விருப்பம்தான். எப்போ ஆரம்பிக்கலாம்னு சொல்லுங்க :)

      'தெரியாம விட்டுட்டோமே'னு கொஞ்சம் பயந்துட்டேன். அது அப்படியே மனசுல பதிஞ்சுபோச்சு.

      வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க !

      Delete
    2. நான் ரெடி. எப்படி படிக்க ஆரம்பிக்கலாம் என்று சொல்லுங்கள் . படிக்க ஆரம்பிப்போம். தனியாக படிப்பது சற்று அலுப்பு தட்ட ஆரம்பிக்குமோ என்கிற பயம் தான் . படிப்பதற்கு துணை இருந்தால் படிப்பைத் என்று நினைக்கிறேன் . ஶ்ரீ ராமரின் திருவுள்ளம் நம்மை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.

      Delete
    3. ரெடினு சொல்லிட்டு ஆளையே காணோமே :))

      சீக்கிரமே ஆரம்பிச்சிடலாம், மெயில் செக் பண்ணுங்க ! உற்சாகமான வார்த்தைகளில் மகிழ்ச்சிங்கோ !

      Delete
  2. தமிழில் இலக்கணத்தை விட இலக்கியம் பிடிக்கும். ஏன் என்றா அதை எங்க ஆசிரியர் அழகாக புரியவைப்பார். இந்த பாடல்கள் எல்லாம் நானும் மனப்பாடம் செய்ததுதான். இப்ப கேட்டா ஙே.... தமிழில் அதிக மதிப்பெண் எடுப்பது இதனால்தான்.
    உங்க தேர்வு முறைகள் தலை சுத்துது......!! அப்பப்பாஆஆ..
    சில நினைவுகளை மறக்கமுடியாது...குறிப்பா பள்ளிநினைவுகள்.

    ReplyDelete
    Replies
    1. ஆஆஆ ப்ரியா எனக்கு இலக்கியமும், இலக்கணமும் அவ்வ்வ்வளவு பிடிக்கும். இலக்கண செய்யுள்களை விரும்பிப் படிப்பேன். இப்போது எப்படினு கேட்டுடாதீங்கோ. எழுத்துப் பிழைகளே ஏகத்துக்கும் வருகிறது.

      உங்க ஊரு தேர்வு முறைகளை எழுதினாதானே எங்க தலை சுத்துதான்னு தெரியும் :) நன்றி ப்ரியா.

      Delete
  3. நல்ல இலக்கணத்துடன் அழகான செய்யுள். இவ்வளவு வருஷங்களாகியும் மனதில் இடம் பிடித்ததற்குக் காரணமும் அழகாக அமைந்துள்ளது. ட்விஸ்ட் மாதிரி நாமொன்று நினைக்க நம்மைப் பின் தொடர்பவர் வேறொன்று நினைத்திருப்பார்கள் என்ற எண்ணம் தோன்றியதும் ஹாஹாஹாதான். அழகாக இருக்கிறது அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. காமாக்ஷிமா,

      என்னையறியாமலே ஆழ்ந்து படித்திருக்கிறேன் போலும், அப்படியே பதிந்துவிட்டது.

      வருகைக்கு நன்றிமா, அன்புடன் சித்ரா.

      Delete
  4. எனக்குக்கூட உங்களை மாதிரிதான் சில செய்யுள்கள் வரி பிசகாமல் நினைவிற்கு வரும். சில சினிமா பாடல்கள் கூட! ரொம்பவும் வியப்பாக இருக்கும். ஆழ் மனதில் படிந்திருக்கும் போல!
    ரொம்ப நாட்களாகக் காணுமே, உங்களை. (அதே கேள்வியை நீங்கள் என்னைக் கேட்டுவிடப் போகிறீர்கள்!)

    ReplyDelete
    Replies
    1. அதையேன் கேக்குறீங்க, பழைய சினிமா பாடல் வரியைச் சொன்னால் போதும், யார் பாடியது என சொல்லிவிடுவேன். முழு பாடலுமே மனதில் இருக்கும். அந்தளவுக்கு அந்த நாளில் பாடல்களை விரும்பிக்கேட்பேன்.

      செய்யுளும் அப்படியே :)) எந்த செய்யுளை பதம் பிரித்து படிக்கவே கஷ்டமா இருக்கோ அதைத்தான் விரும்பிப் படிப்பேன் :)))

      மனதுக்குள் நான் நினைத்ததை நல்லவேளை, நீங்களே கேட்டுட்டீங்க !

      வருகைக்கு நன்றிங்க !

      Delete
  5. @சித்ரா, @ராஜலக்ஷ்மி
    பெங்களூரில் கம்பராமாயணம் முற்றோதல் நடந்தது. அதன் முதல் வகுப்பின் இணைப்பு இங்கே:
    https://www.youtube.com/watch?v=VAsL_y6xCqQ
    வரிசையாக நீங்கள் கேட்டுக் கொண்டே போகலாம். கூடவே புத்தகம் இருந்தால் படிக்கவும் செய்யலாம். விளக்கமும் கிடைக்கும். திரு என். சொக்கன், திரு ஹரிகிருஷ்ணன் இருவரும் இதை நடத்தியிருக்கிறார்கள். முழு கம்பராமாயணமும் வாசித்திருக்கிறார்கள். நான் ஒரே ஒரு வகுப்பிற்குப் போனேன் - நரசிம்மாவதாரம் அன்று.

    ReplyDelete
    Replies
    1. நீங்க கொடுத்திருக்கும் இணைப்பில் போய் பார்த்தேன், நன்றாக உள்ளது. தெரிந்தவர்களுடன் சேர்ந்து படிக்கும்போது இனிமையாகவே இருந்திருக்கும்.

      எனினும் நாமே படித்துணரும்போது வரும் சுகமே தனிதான். அவங்க(ராஜலக்ஷ்மி) ரெடியானதும் நானும் சேர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.

      மீள்வருகைக்கும், இணைப்பு கொடுத்து உதவியதற்கும் நன்றிங்க !

      Delete
    2. ரஞ்சனி அக்கா மிக்க நன்றி இணைப்பிற்கு..

      Delete
  6. படிக்க ஆரம்பிக்கும்போது சொல்லுங்க. நானும் வரேன்.

    ReplyDelete
    Replies
    1. அவங்கள இன்னும் காணோமே !!

      புத்தகம் வச்சிருக்கீங்களா ? இல்லை ஆன்லைனிலா ?

      http://www.tamilvu.org/library/l3700/html/l3700ind.htm இந்தப் பக்கத்தை பார்த்துட்டு சொல்லுங்க, ஒரு நல்ல நாளில் ஆரம்பிச்சிடலாம் :)

      Delete
    2. விளக்கவுரையுடன் கூடிய புத்தகம் இருக்கிறது. நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்பிலிருந்தும் வாசிக்கலாம். ரா..........ஜி.......! எங்க இருக்கீங்க? வாங்க உடனே.....!
      ஜூலை முதல் வாரம் ஆரம்பிக்கலாமா? சென்னையில் ஒரு திருமணம் அடுத்த வாரம் போய்விட்டு வந்துவிடுகிறேன். சரியா?

      Delete
    3. சரிங்க, சந்தோஷமா திருமணத்துக்கு போய்ட்டு வாங்கோ, ஜூலை முதல் வாரத்திலேயே ஆரம்பிப்போம். அதற்குள்ளாகவாவது ராஜியைக் கண்டுபிடிச்சிடுவோமா :)

      Delete
    4. சூப்பர் மிக நல்ல நினைவித் திறன். எங்களில் துளசிக்கு நல்ல நினைவுத் திறன். கீதாவிற்கு ஹிஹிஹி...

      கீதா: நான் கொடுத்து வைத்தவள். என் தமிழ்/ஆங்கில ஆசிரியர்கள் மிகமிக அருமையாகச் சொல்லித் தந்தகவர்கள். அதனாலேயே இரு மொழிகளையும் பாடங்களையும் மிகவும் விருப்பத்துடன் கற்றதுண்டு. திரும்பப் பெற முடியாதப் பொற்காலங்கள் அவை. நினைவில் ஆழமாகப் பதிந்தவை.

      Delete
    5. ஆமாம் கீதா, அந்த நாட்களைத் திரும்பப் பெற முடியாது. நான் படித்த பள்ளியை வாகனத்தில் போகும்போதும் வரும்போதும் ஏக்கத்தோடு பார்ப்பதோடு சரி. உள்ளே போகத் துணிவில்லை. ஒருமுறை போய்ட்டு(1992) :(( ஆசிரியைகளை மட்டுமே பார்த்தேன். தோழிகளின் நினைவுகளினால் ஒருவித அழுத்தம்தான் மிஞ்சியது.

      Delete