Saturday, September 3, 2016

டீ கடை டீ க்ளாஸ் !


நாம் ஊரில் ரசித்து, சுவைத்த சிலவற்றை வெளியூரில் மிஸ் பண்ணுவோம். அதுமாதிரி நான் பெரிய அளவில் மிஸ் பண்ணியது டீ'கடை டீ :)

வீட்டில் எத்தனை விதமான கப்புகளில் டீ குடித்தாலும், கடையிலிருந்து வாங்கிக் குடிக்கும் டீ'கடை க்ளாஸ் 'டீ' மாதிரி வராதுதானே. என்னதான் சுத்தத்தைப் பற்றி யோசித்தாலும் ஒன்றும் வேலைக்காகாது.

டீ கடைகளில் Tea glass போயி ப்ளாஸ்டிக் கப்புகள் வந்து ..... இப்போது எப்படி எனத் தெரியவில்லை ...... இன்னமும் அந்த tea glass டீ'தான் பிடிக்கிற‌து.

Tea glass ஐ கையில் பிடிக்கும்போது தெரியாத சூடு, குடிக்கும்போதுதான் தெரியும் ....  டீ எவ்வளவு சூடாக இருக்கிறதென.

Glass ல் கொஞ்சமே கொஞ்சம்தான் டீ இருக்கும், ஆனால் பார்ப்பதற்கு நிறைய இருப்பதாகத் தெரியும்.

காஃபி மட்டுமே குடித்த எனக்கு இந்த டீ பழக்கம் இடையில் வந்து ஒட்டிக்கொண்டதுதான்.

முன்பு இங்கிருந்து எப்போது ஊருக்குப் போனாலும் பெரிய லிஸ்ட் ஒன்று போடுவேன். அந்த லிஸ்டில் கட்டாயம் டீ'கடை டீயும் இருக்கும்.

என்னவொன்று, இப்போதெல்லாம் ஏனோ அந்த பழைய சுவை கிடைப்ப‌தில்லை. அல்லது எனக்கு சுவை மாறிவிட்டதா எனத் தெரியவில்லை.

நிச்சயமா எனக்குத்தான்(நட்பூ ஒருவருக்கும் :) ) மாறியிருக்க வேண்டும். இல்லையென்றால் உடன் வருவோர், " நல்லாத்தானே இருக்கு" என குடிக்கமாட்டார்களே !

ஒன்று பால் காயாத மாதிரியே இருக்கும்.

இல்லாவிட்டால் டீ தூள் சரியாகக் கொதிக்காமல் போட்டதுபோல் டீ தூள் வாசம் வரும்.

கால் சர்க்கரை போட்டுக் கொடுக்கச்சொல்லிக் கேட்டாலும் ஒன்றரை சர்க்கரை அளவில் போட்டுக் கொடுத்து ...... வெறுத்துவிட்டது.

உறவுகளும் அப்படியே.

பால் பொங்கி வந்ததும், டீ தூளைப் போட்டு, சுடு தண்ணீர் காலில் கொட்டியதுபோல் பட‌க்கென அடுப்பிலிருந்து இறக்கி ...... பால் வாசமும் டீதூள் வாசமும் போட்டி போட்டு வெறுப்பேற்றும்.

எங்க அம்மா யார் காதிலும் விழாதவாறு, " புது பால்ல போட்டுக் குடுக்கறது உனக்குப் பிடிக்காதுதான், என்ன பண்றது, ஒரு வாரத்துக்கு ஐஸ்'ல‌ வச்சி குடிச்சு பழகிட்ட"னு சொல்லுவாங்க‌ :))

"சரி, நீயே போட்டுக்கிட்டா என்ன?" என்பதுதானே உங்க கேள்வி :)

ஹா ஹா ஹா :))) 'சிலிண்டரில் உள்ள gas முழுவதையும் காலி பண்றாளோ' என்ற பார்வை வரும்.

எனக்கு டீ 10 to 15 நிமிடங்களுக்காவது கொதிக்க வேண்டும்.

ஆ ஆங் .... குறை சொல்லும் ஆர்வத்தில் சொல்ல வந்ததையே மறந்துட்டேனே !

இங்கு வந்த புதிதில், 'சரி நாமே வீட்டில் டீ'கடை டீயைப்போட்டுக் குடிக்கலாம்' என எண்ணி tea glass தேட ஆரம்பித்தேன். ப்ளாஸ்டிக்கில்தான் கிடைத்தது. அதையும் வாங்கிவந்தேன்.

சூடாக டீயை அதில் ஊற்றியதும் கரகர என ஒரு சத்தம். கீறல் விட்டுக்கொண்டிருந்தது.

ஜில்'லுனு ஜூஸ் ஊற்ற வேண்டியதில், சூடான டீயை ஊற்றினால்?    :)))))

கடைக்குப் போனால் தவறாமல் tea glass மாதிரியே ஏதாவது இருக்கானு தேடுவேன்.

சில‌ வருடங்களுக்குப் பிறகு 2006 ல் ஒரு பெரீஈஈஈய கடைக்கு வேறு ஏதோ ஒன்றை வாங்கப்போய் glassware இருக்கும் செஷனில் கண்ணாடியால் ஆன சாமான்களை 'ஆ' என வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டே வரும்போது இந்த கண்ணாடி டம்ளர்களைப் பார்த்து, ஆச்சர்யமாகி ஒவ்வொன்றும் $ 1:99 என இரண்டு க்ளாஸ்களை வாங்கிக்கொண்டு வந்து டீ போட்டுக் குடித்த பிறகுதான் பூர்வ ஜென்ம புண்ணியம் கிடைத்தது.

Iced tea glass ஐ hot tea glass ஆக மாற்றிய பெருமை என்னையே சாரும்.

காஃபியோ அல்லது டீயோ இந்த glassல்தான் குடிப்பேன். கால் டம்ளர் என்றாலும் பாதி க்ளாஸ் நிறைந்துவிடும். அரை டம்ளர் என்றால் சொல்லவேத் தேவையில்லை, நுரையுடன் முழு க்ளாஸ் ஆகிவிடும்.

இதனால் டீ, காபி கொஞ்சமாத்தானே இருக்கு என்ற‌ நினைவே வராது.

நல்ல கெட்டியா இருக்குறதால‌ கீழே விழுந்தாலும் உடைவது கடினம். இது வரைக்கும் எனது கவனக் குறைவினால் ஒரு க்ளாஸ் மட்டுமே உடைந்திருக்கிற‌து.

இதன் தற்போதைய விலை $2:99


உங்களில் யாருக்காவது இந்த டீ கடை glass ல் டீ குடிக்கணும்னு ஆசையா ? விற்கும் கடையின் பெயரைத் தெரிந்துகொள்ள ஆவலா ?

தொடர்பு கொள்ளவும்  chitrasundars blog கிற்கு  :)))

14 comments:

 1. //கரகர என ஒரு சத்தம்.// ;))

  இப்போ காலையில் கூட இந்த டீக்கடையை டீயை நினைத்தேன். சின்னக் காலத்தில் எனக்கு டீ பிடிக்கவே பிடிக்காது. ஆனால் டீக்கடை டீ மட்டும் பிடிக்கும். எங்கள் ஸ்கூலுக்கு சற்று எட்ட ஒரு டீ கடை இருந்துது. என் தாயாருக்கு உடம்புக்கு முடியாமலிருந்த காலங்களில் பல நாட்கள் ஸ்கூல் விட்டதும், சில நாட்கள் மதிய போசனமாகவும் கூட டீக்கடை டீ உதவி இருக்கிறது. ஒரு கொழும்பு பண் (அது பாட்டியின் கன்னம் போல சுருக்கங்களுடனும் மெத்தென்றும் இருக்கும்.) டீயில் தோய்த்துத் தின்ன... அப்படி இருக்கும். அதே நினைவில் இங்கு வந்தால்... டீ போஸ்ட் இருக்கு. :-) எனக்கு டீ குடிப்பதை விட அந்த மாமா அதை ஆற்றுவதைப் பார்ப்பது தான் அதிகம் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இமா,

   ஹா ஹா :))) பண்னுக்கான உம் சூப்பர் ! ஆமாம், எங்களுக்கும் அதுமாதிரி பண்'னு கிடைக்கும். சூப்பர் ஸ்வீட்டாய் இருக்கும். அந்த ஞாபகத்தில் இங்கும் சில சமயங்களில் ஹவாயன் பண்'னுனு ஒன்றை வாங்கிவந்து எஞ்ஜாய் பண்ணுவேன்.

   கைப்பிடி வைத்த ஒரு அலுமினியக் குவளையைத் தூக்கி ரெண்டு ஆத்து ஆத்தி எல்லா க்ளாஸிலும் ஊத்திவிடும் அழகை நானும் ரசிப்பேன். இப்போதும் நானும் அப்படியே அதே நினைவுடனே டம்ளரில் இருந்து வேகமா க்ளாஸில் ஊற்றி நுரை ததும்ப குடித்தால்தான் ஒரு திருப்தி வரும்.

   உங்கள் இளமைக்கால நினைவுகளையும் தெரிந்துகொள்ள இந்த பதிவு ஒரு வாய்ப்பாகிவிட்டது.

   Delete
 2. இப்போதும் தமிழகம் வந்தால் நான் இம்மாதிரி கடைகளில் டீ குடிப்பது வழக்கம். தில்லியில் டீ கிடைத்தாலும் அங்கே தயாரிப்பது வேறு முறை!

  இன்னிக்கு வெளியே போகும்போது டீ குடிக்கணும்! இம்முறை இன்னும் குடிக்கவில்லையே!

  ReplyDelete
  Replies


  1. ஆமாம், எனக்கும் நம் ஊரைத் தவிர எங்கும் டீ குடிக்க பிடிக்காது. இப்போது அதுவும் இல்லை.

   அப்படினா? தமிழகத்துல‌ இருக்கீங்கன்னு சொல்லுங்க :))

   Delete
 3. டீ கிளாஸ் வழியாக உங்கள் இளமைக் காலத்திற்கு எங்களையும் அழைத்து சென்று விட்டீர்கள் சித்ரா. டீ ஆற்றுபவரின் திறமைக் கண்டு நானும் வியந்ததுண்டு. எல்லாமே மார்கெட்டிங் உத்தி தான்.
  இது போல் பஸ் நிறுத்தங்களில் பரோடா செய்பவர், மாவை வீசி வீசி செய்யும் திறமை ஆச்சர்யப்பட வைக்கும்.
  எல்லாமே மார்கெட்டிங் உத்தி தான்.

  ReplyDelete
  Replies
  1. இராஜலக்ஷ்மி,

   ஓ, இப்படியும் ஒரு உத்தியா ! இனி இவர்களைப் பார்க்கும்போது உங்க பின்னூட்டமும் சேர்ந்துதான் வரும்.

   நானும் பேருந்துக்காகக் காத்திருக்கும்போதுதான் டீ ஆத்துபவர், ஒரே கல்லில் 16 அல்லது 20 தோசைகள் ஊற்றுபவர், பரோட்டாக்காரர் என பார்த்து வியந்திருக்கிறேன். வீட்டுக்கு வந்து ஒரு தோசை மட்டுமே ஊத்த முடியும் கல்லில் குட்டிகுட்டியா ஏழு தோசைகள் ஊற்றுவேன் :))

   Delete
 4. காபி,டீ எதுவும் குடித்ததே இல்லை. இப்படியும் ஒரு பிரகிருதியா? ஆமாம் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த வாங்கும் டீயின் கலர் எனக்குப் பிடிக்கும். இங்கெல்லாம் வீட்டில் கூட யாரும் டீயை ஆற்றுவதில்லை. நெருப்புக்கோழி மாதிரி நேராக கப்பில் வடிக்கட்டி அப்படியே சுடச்சுட. ஒருபிராஞ்சில் லைட்டானடீ. இன்னொரு பிராஞ்சில் ஸ்ட்ராங்கானடீ. நான் டீ போடப் போவதே இல்லை. 10, 15 நிமிஷம் கொதித்தால் கசப்புச் சுவை மேலோங்காது? படிக்க மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. படங்களோ அருமை. அம்மா சொன்னதும் உண்மை. அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. காமாக்ஷிமா,

   காபி, டீ குடிக்காதது எவ்வ்வ்வளவு நல்லது ! நினைப்பதோடு சரி, விட முடியவில்லை, எப்படியோ இந்தப் பழக்கம் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. டீ தூள் திட்டமா போடுறதால கசப்பெல்லாம் இருக்காதும்மா. ஆமாம்மா, பாலின் சுவையும் வித்தியாசப்படுது. இங்கு வந்து டீ, காபி போட்டு குடிச்ச பிறகுதான் நிம்மதியாகும்.

   நன்றிமா, அன்புடன் சித்ரா.

   Delete
 5. அட...நானும் டீ கடை டீ விரும்பி...

  இப்பொழுதும் கார் பயணத்தின் போது சின்ன டீ கடையில் நிறுத்தி டீ குடிப்பது...ஆஹா....!

  நானும் இது போல் கண்ணாடி தம்ளர் வச்சு இருக்கேன்..11 மணி டீ அதில் தான்..

  ReplyDelete
  Replies
  1. அனு,

   நானும் அதேதான், காலை 11 மணி & மாலை 4 மணிக்கு இதில்தான். இப்போ 11 மணி காபி'யைக் கட் பண்ணிட்டேன். எது எப்படி இருந்தாலும் காலை டீ மட்டும்(ஒரு டம்ளர் வழியவழிய‌) நீளமான ஒரு ஸ்டார்பக்ஸ் கப்பில் !

   முன்பு நானும் உங்கள மாதிரிதான் வழியில் வாங்குவேன். ஒரே சமயத்தில் இரண்டு டீ'கூட வாங்குவேன். இப்போ பிடிக்கல, பழைய நினைவுகளுடன் பார்ப்பதோடு சரி ! !

   Delete
 6. எனக்கு டீ ஆற்றுவதை பார்க்கத்தான் பிடிக்கும். வீட்டில் வந்து இப்படி ஆற்றி கீழே கொட்டி அம்மாவிடம் திட்டு வாங்கினதை நினைத்தேன். டீ கடை டீ நான் இந்தியாவிலான் குடித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ப்ரியா,

   பரவால்லயே நீங்க, டீ ஆத்துவதைப் பாத்ததோடு சரி ! எனக்கு ஆத்தினதும் என் கையில வாங்கிக்கணும்னு தோனும். ஹா ஹா நாங்களும் வீட்ல ட்ரை பண்ணி திட்டு வாங்கியிருக்கோம் :)))

   Delete
 7. நாங்கள் இப்போதும் இதே டீ க்ளாசில் டீக்கடையில் குடிப்பது வழக்கம். உங்கள் சுவையே....துளசிக்கு லைட் டீ...கீதாவிற்கு கொஞ்சம் ஸ்ட்ராங்க் டீ கிட்டத்தட்ட நீங்கள் சொல்லியிருக்கும் விதத்தில். எங்கள் இருவர் வீட்டிலும் டீ இந்த க்ளாசில்தான் குடிப்பது வழக்கம். நல்ல விவரணம். எங்கள் வீட்டிற்கு வந்தால் டீ நீங்கள் விரும்புவது போல் கிடைக்கும்.

  கீதா: கேரளத்தில் டீ குடித்திருக்கிறீர்களா? நன்றாக இருக்கும். நான் வீட்டில் டீ தயாரிக்கும் போது நீங்கள் சொல்லியிருப்பது போல் கொதிக்கவிட்டுத்தான் டீ போடுவேன் அவசர கதியில் இல்லை. எங்கள் வீட்டில் என் டீ கொஞ்சம் பாப்புலர்! நீங்கள் வாருங்கள் சித்ரா டீ போட்டுத் தருகிறேன் அதுவும் இந்த க்ளாசில். எங்கள் வீட்டில் இந்த க்ளாஸ் நானும் வைத்திருக்கிறேன். துளசி வீட்டிலும் அதே. என்ன அவர்கள் வீட்டில் லைட் டீ...எங்கள் வீட்டில் நீங்கள் சொல்லியிருக்கும் விதத்தில்..

  ReplyDelete
  Replies
  1. சகோ துளசி & கீதா,

   கொஞ்சம் அதிகமாவே போட்டு வைங்க, வந்துவிடுகிறேன். அழைப்புக்கு நன்றி கீதா.

   கேரளாவில் குடித்ததில்லை, ஆனால் இங்கு வந்த புதிதில் கேரளப் பெண் போட்டுக் குடுத்த டீயைக் குடிச்ச பிறகுதான், அவரது முறையில் கொதிக்க வச்சு போடுவது எல்லாம். அவங்க போட்டாங்கனா சூப்பரா இருக்கும்.

   இந்த டீ'க்காகவே அடுத்த தடவ தவற விடாம வந்துடுறேன் :)

   Delete