Wednesday, November 30, 2016

முறுக்கு அச்சு !

காலிங் பெல்லை அழுத்தியது புது இடத்து புது தோழி சொப்னாதான் எனத் தெரிந்துகொண்டு கதவைத் திறந்தாள் ராகிணி.

"முறுக்கு அச்சு இருக்குமா ? ரொம்ப நாளா செய்யணும்னு ஆசை" என்றாள் சொப்னா.

"இதோ எடுத்து வரேன், எடுத்துட்டு போ" என முறுக்கு அச்சை எடுத்து வந்து நீட்டினாள் ராகிணி.

"தொலைத்துவிட சான்ஸ் இருக்கு, அதனால இந்த தேன்குழல் அச்சை மட்டும் எடுத்துக்குறேன்" என ஒரு வில்லையுடன் முறுக்கச்சை எடுத்துச் சென்றாள் சொப்னா.

அடுத்த நாள் முறுக்கச்சு திரும்பி வந்தது, கூடவே சில அழகழகான‌ முறுக்குகளும் !

"அட இது நல்லாருக்கே, கஷ்ஷ்ஷ்டப்பட்டு சுடாமலே முறுக்குகள் வந்துள்ளதே !

சொப்னா மாதிரி இன்னும் நான்கு நம்ம ஊர் மக்கள் இந்த அப்பார்ட்மெண்டில் இருந்தால் போதும் போலவே, வருடம் முழுவதும் நம்ம முறுக்கச்சு சுற்றிச் சுழன்று முறுக்குகளைக் கொண்டுவந்து சேர்த்துவிடும் போலவே" என தனக்குள் நகைத்துக்கொண்டாள்.

துளி எண்ணெய் இல்லாமல், சும்மா கரகர மொறுமொறுவென, மிளகாய்த்தூள் சேர்த்து செவசெவவென செய்து தான் ஒரு ஆந்திரப் பெண் என்பதை காரசாரமாக நிரூபித்திருந்தாள் சொப்னா.

ராகிணி, "ரெசிபி சொல்லேன்" என்றதும்,

சொப்னா "கடலை மாவை நல்லா வறுத்து " என முடிக்குமுன்னே,

ராகிணி "என்னது கடலை மாவை வறுக்கணுமா?" என்று ஆச்சரியப்பட்டதும்,

சொப்னா " சரி சரி, நீ எப்போ ஃப்ரீயா இருப்பேன்னு சொல்லு, வந்து செஞ்சு காட்டிட்டுப் போறேன்" என்றாள்.

போகும்போது அப்படியே "அடுத்த தடவ ஓமப்பொடிதான் செய்யணும், சுதாவுக்கு(சுதாகர்) ரொம்ப பிடிக்கும்" என்றாள்.

இரண்டொரு நாளில் இருவருமாக சேர்ந்து ராகிணி வீட்டில் முறுக்கு மாவு தயார் செய்தனர்.

"மாவு ரொம்ம்ம்ப கெட்டியா இருக்கே, பிழிய வருமா ?" என்றாள் ராகிணி.

"கெட்டியா இருந்தாதான் எண்ணெய் குடிக்காம, மொறுமொறுவென வரும்" என்றாள் சொப்னா.

ராகிணி முறுக்கு அச்சில் மாவு போட்டு பிழிய முனைந்தாள். ம் ... ம் ....ம்..... ஒன்னும் முடியல.

"கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு பெசஞ்சுக்கிறேனே" என்றாள் ராகிணி. முறுக்கச்சு ஒடஞ்சிடுமோன்னு பயம்.

"நீ அந்தப் பக்கம் புடி, நான் இந்தப் பக்கம் புடிக்கிறேன், ரெண்டு பேருமா சேர்ந்து பிழியலாம், எங்க வீட்டிலும் நானும் சுதாவுமா சேர்ந்துதான் எல்லா முறுக்குகளையும் பிழிஞ்சோம்" என்றாள் சொப்னா.

ராகிணிக்குக் கண்களில் கண்ணீர் ஊற்று. பிழிந்தவர்களின் கஷ்டத்தை நினைத்து அல்ல, முறுக்கு அச்சை நினைத்துதான். உடைந்திருந்தால் ??

நல்லவேளை தேன்குழல் அச்சை எடுத்துச் சென்றாள். இதுவே ஓமப்பொடி அச்சாக இருந்திருந்தால் ??

இனி ஏதாவது சாக்குபோக்கு சொல்லி  ஓமப்பொடி வில்லையை மட்டும் கொடுக்கக் கூடாது என தனக்குத்தானே தீர்மானம் போட்டுக்கொண்டாள்.

சில நாட்களுக்குப்பின் மீண்டும் சொப்னா வந்து கதவைத் தட்டியதும் ஏற்கனவே போட்ட தீர்மானத்தை மனத்திரையில் ஒருமுறை ஓடவிட்டு உறுதி செய்துகொண்டு கதவைத் திறந்தாள் ராகிணி.

"சுதாவுக்கு வேல போச்சு, இன்னிக்கு நைட்டுக்கே நான் இந்தியா கெளம்புறேன், இங்க கொஞ்சம் வேல இருக்கு, அதையெல்லாம் முடிச்சிட்டு சுதா அடுத்தவாரம் கெளம்பிடுவார், கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டி இருக்கு, வரட்டுமா, பார்த்துக்கோ " ஒப்பித்துவிட்டு ஓடினாள் சொப்னா.

அதற்குமேல் அங்கு நின்றிருந்தால் இரண்டு பேருமே அழுதுவிடுவார்கள் போன்ற சூழல்.

"சொப்னா போகாதே, இந்தா முறுக்கச்சு, ஓமப்பொடி சுடு, இல்ல ஒடச்சுகூட போடு, ஏன்னு ஒரு வார்த்தை கேக்க மாட்டேன், ஆனா இங்கிருந்து மட்டும் போயிடாதே" என சொல்ல வேண்டும்போல் இருந்தது ராகிணிக்கு.

ஆனால் அவளால் சொப்னா அந்தத் தெருவில் சென்று மறையும்வரை நின்று பார்த்துக்கொண்டுதான் இருக்க முடிந்தது.