Sunday, September 29, 2013

எங்கள் வீட்டுத் தோட்டம் ____ புதினா

எங்கள் வீட்டில் சிறியதும், கொஞ்சம் பெரியதுமான இரண்டு தொட்டிகளில் எப்போதும் புதினா செடி வைத்திருப்பேன். அவை நன்கு செழித்து வளரும்.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பறித்துவிடுவேன். இதைவைத்து துவையல் அல்லது சட்னி செய்தால் யாரும் சாப்பிடமாட்டார்கள் என்பதால், புதினாவுடன்  கொத்துமல்லி தழை சேர்த்து புதினா & கொத்துமல்லி சாதம் செய்துவிடுவேன். இநத சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.

படத்திலுள்ள இந்த சிறிய தொட்டியில் ஏற்கனவே புதினா செடி அடர்த்தியாக‌ இருந்தது. அதன் வேர் தொட்டி முழுவதும் பரவிவிட்டதால் தண்ணீர்கூட ஊற்ற முடிவதில்லை.


மகியின் முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்த ஆலோசனையின் பேரில் மண் முழுவதையும் கீழே கொட்டி, வேரை எல்லாம் நீக்கிவிட்டு, அந்த மண்ணையே அரை தொட்டி அளவிற்கு போட்டு, புதினாவின் ஒரு வேரை மட்டும் தொட்டியில் வட்டமாக வைத்து, மேலே சிறிது மண் தூவி, தண்ணீர் தெளித்து விட்டு ஊருக்குப் போய்விட்டேன்.


ஐந்து நாட்கள் கழித்து வந்து பார்த்தால் நான்கைந்து இடங்களில் அழகாகத் துளிர் வந்திருந்தது. என் கண்ணே பட்டுவிடும்போல் இருந்தது.


அது மேலும் வளர்ந்து இப்போது எவ்வளவு அழகாக இருக்கிறது பாருங்கள் !

Friday, September 27, 2013

இன்று ஒருநாள் மட்டும் ...

ஓ ஓ மரங்களே !
ஓரிரு நாள்களின் அசுர வளர்ச்சியில்
உங்களைவிட உயரம் என இறுமாந்திருந்தேன்,
நிதான வளர்ச்சிதான் நிலையானது என‌
ஓங்கி உயர்ந்து உணர்த்திவிட்டீர்கள்.

சித்ராவின் கைவண்ணத்தால் (காமிரா உதவியால்)
இன்று ஒருநாள் மட்டும்
உங்களைவிட உயரமாக
இருந்துவிட்டுப் போகிறேனே, ப்ளீஸ்!!


சமீபத்தில் ஒரு ஷாப்பிங் மாலுக்குப் போனபோது அங்கு வாசலில் இருந்த இந்த அழகான நினைவுத்தூண் என்னைக் கவர்ந்தது. அதன் ஒருபக்கம் நின்று பார்த்தால் முதல் படத்தில் உள்ளதுபோலவும், மறுபக்கம் பார்க்கும்போது அதன்மீது சூரியக் கதிர்கள் பட்டு இரண்டாவது படத்தில் உள்ளதுபோல் தகதக & ஜிகுஜிகு என‌ பளபளப்பாக, பல வண்ணங்களில் ஜொலித்தது அழகாக இருந்தது.

Thursday, September 26, 2013

நடக்குதான்னு பார்ப்போமே !!

எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் பேசி முடித்துவிட்டு  'சரி பத்திரமா இருந்துக்கோ, வச்சிடட்டுமா?', தொலைபேசியின் இந்தப்பக்கம்.

'சரிம்மா, அம்மா அம்மா, இருஇரு, சொல்ல மறந்துட்டேனே, வந்து', தொலைபேசியின் அந்தப் பக்கம்.

'சரிசரி சொல்லு', ஆவலில் இந்தப் பக்கமிருந்து.

'அம்மா, இப்போ நான் நிறைய வெயிட் குறைஞ்சுட்டேன்', அந்தப் பக்கமிருந்து.

'அப்படியா,எப்படி?', இது தெரிந்தால் நாமும் அதைப் பின்பற்றி (உடல்) எடையைக் குறைக்கலாமே என்ற நப்பாசையில் இந்தப் பக்கமிருந்து நான்.

"நாங்கள் (தோழிகளுடன்) சாப்பிடுமுன்பும் சாப்பிட்ட பிறகும் வளாகத்தை சுற்றி வந்து போகிறோம், அதனால்தான்", அந்தப் பக்கமிருந்து மகள்.

என்னதான் வளாகத்தை சுற்றிசுற்றி வந்தாலும்...ம்... ஒரே நாளில் வெயிட் குறைந்திருக்கிறாள் என்றால்? சாப்பாட்டைப் பொறுத்தவரை பழகிய, பிடித்த சாப்பாடுதான்.

இது ஏதோ பார்த்து ஆறு மாதத்திற்குப் பிறகான அல்லது ஒரு வருடத்திற்கும் மேலான தொலைபேசி உரையாடல் அல்ல.

ஞாயிறு நண்பகல் மகளை விடுதியில் விட்டுவிட்டு வந்து, மீண்டும் திங்கள் மாலை விடுதிக்கு சென்று பார்த்துவிட்டு, செவ்வாய் கிழமை மாலை வீட்டுக்கு வந்ததும் தொலைபேசியில் எனக்கும் மகளுக்குமிடையில் நடந்த ஒருநாள் பிரிவின் உரையாடல்தான் மேலேயுள்ளவை.

மகள் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறாள் என்பதில் மகிழ்ச்சி. ஆனால் வீட்டிலிருந்தே போய் வருகிறாள் என்பதாக இருந்தால் மகிழ்ச்சி பல மடங்கு எகிறி இருக்கும்.

இப்போது  தொலைவிலுள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். அதனால் சிறு குடும்பமாக இருந்த எங்கள் வீடு இப்போது மிகச்சிறு குடும்பமாகிவிட்டது.

எப்படியும் பக்கத்து ஊரில் உள்ள கல்லூரியில்தான் சேர்த்துவிடுவார் என்றே நம்பியிருந்தேன். தினமும் வீட்டிலிருந்தே அல்லது விடுதி என்றாலும் வார இறுதி நாட்களில் வீட்டிற்கு வந்து செல்வாள் என்றே நினைத்திருந்தேன். ஆனால் ஏப்ரல் மாதத்தில் என் ஆசை நிறைவேறாது என்று தெரிந்தவுடன் ஏகக் குழப்பத்தில் இருந்தேன்.

மகள் விடுதிக்கு சென்றுவிட்டால் இங்கே எப்படி இருப்பது என நான்கைந்து மாதங்களாகவே கொஞ்சம் மன உளைச்சலில்தான் இருந்தேன்.

விடுதியில் சேர்த்த அன்று முதல்நாள் சிறிது சஞ்சலத்துடனே நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பி வந்தோம்.

அடுத்தநாள் விடுதிக்கு போனபோது எங்களை சந்திப்பதற்கு மகளுடன் இரண்டு புது தோழிகளும் (ஹாங்காங் & வியட்நாம்) உடன் வந்தனர். மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இப்போது ஓரளவிற்கு மனபாரம் குறைந்தாற்போல் இருக்கிற‌து.

முன்பு எங்களுக்குள் நிறைய சின்னச்சின்ன செல்லச் சண்டைகள் அடிக்கடி வரும். அப்பா எப்போது வீட்டிற்கு வருவார் எனப் பார்த்துக்கொண்டே இருப்பாள். வந்ததும் இவரையே நாட்டாமை ஆக்கி, நல்ல தீர்ப்பை சொல்லச் சொல்லி, சமயங்களில் தீர்ப்பை மாற்றி சொல்லச்சொல்லி, பயங்கர காமெடியா இருக்கும்.

முன்பெல்லாம் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் கதவுக்குப் பின்னாலேயே பையை வைத்துவிட்டு, பிடித்த வீட்டுப்பாடமாக இருந்தாலோ அல்லது மாலை விளையாட்டு வகுப்புக்கு போவதாக இருந்தாலோ அங்கேயே உட்கார்ந்து வீட்டுப்பாடம் எழுத ஆரம்பித்து, ஒவ்வொரு பாடம் முடிந்ததும் முடித்த இடத்தில் வைத்துவிட்டு, கொஞ்சம் நகர்ந்து அடுத்த பாடத்தை ஆரம்பித்து,... இப்படியே பையும் மகளும் சாப்பாட்டு மேசை வரை அல்லது படுக்கையறை வரை பயணித்திருப்பார்கள்.

எழுதி முடிக்கப்பட்ட தாள்கள் வளைந்து நெளிந்து (எங்க ஊர் பக்கம் உள்ள சாலை மாதிரி) போயிருக்கும். எல்லாவற்றையும் முடித்தபிறகு அவளாகவே வந்து எடுத்து அடுக்கி வைத்துக்கொள்வாள். சிலசமயம் இவர் கதவைத் திற‌ந்ததும், பார்த்து உள்ளே வரவேண்டியிருக்கும்.

இவளுடைய பொருள்களையெல்லாம் எவ்வளவுதான் எடுத்துயெடுத்து வைத்தாலும் மீண்டும் அவற்றை எங்கும் பார்க்கலாம். ஆனால் இப்போது ஊரிலிருந்து வந்ததும் வேக்யூம் போட்டுவிட்டு இரண்டு நாட்களாகியும் களைத்துப்போட ஆளில்லை. வைத்த பொருள்கள் வைத்த இடத்திலேயே இருப்பதால் எனக்குமே போரடிக்குது.

இவரிடம் சொல்லியிருக்கிறேன், 'நீங்களாவது களைச்சுப் போடுங்க'னு. வாக்குறுதி கொடுத்திருக்கிறார், பார்க்கலாம் நடக்குதான்னு!

Tuesday, September 10, 2013

வந்தாச்சூ !!! ....

விடுபட்ட இடங்களை நிரப்பிக்கொண்டு வந்திட்டேங்க!!

Glue இல்லாமல் மைதா பசை போட்டு ஒட்டியதால, அது காயாம இருந்ததால, கூடவே விநாயகரைக் கவனிக்க வேண்டி வ‌ந்ததால வர தாமதமாகிடுச்சு, ஸாரி, ஸாரி.


ஒரு சமயம் சுந்தர் ஒரு கம்பெனியில்  சேர்ந்த‌ முதல் நாள், மாலை வீட்டுக்கு வந்ததும் ஆஃபீஸ் கம்ப்யூட்டர், வேலை சம்பந்தமான முக்கிய பேப்பர்களை எல்லாம் உள்ளே வைத்துவிட்டு, ஒருசிலவற்றை எடுத்துவந்து டேபிளின்மீது வைத்துவிட்டு சென்றார்.

அதிலிருந்த இந்த emoticons அட்டை என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவ்வளவுதான், அதிலிருந்து பாதியை பிய்த்தெடுத்துக்கொண்டு அங்கிருந்து நான் எஸ்கேப்.

இவர் வந்து அட்டையைப் பார்த்துவிட்டு "ஸ்டிக்கர்ல பாதியைக் காணோம், Bag லதான் கொட்டியிருக்கணும், என்று சொல்லிக்கொண்டே சாப்பிட வந்தார்.

என்னைப் பார்த்ததும் இவருக்கு சிரிப்பு. "பாப்பா செய்ற வேலைய எல்லாம் நீ செஞ்சுட்டிருக்க" என்றார்.

ஆமாங்க, emoticons  ல அவர் காணோம்னு சொன்ன ஸ்டிக்கரை எல்லாம் ஃப்ரிட்ஜில் ஒட்டிக்கொண்டிருந்தேன். நான் செய்யும் சில வேலைகளை இன்னமும் அவரால் நம்ப முடியாது & புரிந்துகொள்ளவும் முடியாது.


திரும்பிப்பார்த்து படத்துல இருக்கற மாதிரிதான் சிரித்துவைத்தேன்.

இந்த வேலை எனக்கு ரொம்ப பிடிக்கும். மகளது முக்கியமான பள்ளி பேப்பர்களின்மீது round table pizza கடையில் இருந்து வரும் advertisement லிருந்து, dentist இடமிருந்து வரும் ஸ்டிக்கர்வரை fridge ல் ஒட்டி வைத்திருப்பேன். இப்போது அவையெல்லாம் ஓரங்கட்டப்பட்டு இந்த  emoticons தான் இருக்காங்க.

எப்போதாவது வீட்டிற்கு package வந்தால் உள்ளே உள்ள பொருள் எப்படி வந்திருக்குன்னு பார்க்கமாட்டேன். முதல் வேலையாக அதிலுள்ள bubble wrap ஐ  எடுத்து பபுள்ஸை எல்லாம் வெடித்துவிடுவேன். சிலசமயம் அடுத்த நாளுக்காக‌ சேமித்தும் வைப்பேன்.

இப்படியான என்னிடம் இவ்வளவு ஸ்டிக்கர்ஸ் உள்ள அட்டை வந்தால் சும்மா இருப்பேனா!!

அன்று இரவு மணி 8:30 ஆனது. மகளிடமிருந்து ஃபோன். அப்பார்ட்மென்ட் வாசலுக்கு விரைந்தேன். ஃபோன் வருவதற்கு முன்பே 8:25 க்கெல்லாம் ஃப்ரிட்ஜில் ஒட்டிய ஸ்டிக்கரை எல்லாம் மீண்டும் அதற்குரிய அட்டையிலேயே எடுத்துவந்து வைத்துவிட்டேன். மகளுடன் சேர்ந்து மீண்டும் பிரித்தெடுத்து ஒட்டுவதற்காக.

பள்ளியிலிருந்து அப்பார்ட்மென்ட் வாசல்வரை தனியாக வரும் அவள் உள்ளே வருவதற்கு மட்டும் நான் போய் அழைத்துவர வேண்டும். அவ்வளவு பயம்.

நானும்கூட சின்ன வயசுல அப்படித்தான் இருந்தேன். தோட்டம், தெரு என இரவு வரை ஒரு இடம்கூட‌ விடாமல் ஆட்டம் போடும் என்னால் பகலிலேயே வீட்டின் உள்ளே சென்று தண்ணீர் மொண்டு குடிக்க பயம். ஹி  ஹி, என்னை மாதிரியே மகளும் இருப்பதை நினைத்து பெருமைதான் எனக்கு !

சமயங்களில் எனக்குமே கொஞ்சம் பயம்தான். அப்பார்ட்மென்ட் வாசலில் இருந்து உள்ளே நடந்து வரும் வழி நெடுக ஆரஞ்சு கலந்த சிவப்பு நிற மின் விளக்குகள் தரையோடு தரையாக‌ இருந்தால் யாருக்குதான் பயம் வராது?

மகள் உள்ளே நுழைந்த‌துமே "ஹை,emoticons, வாம்மா ஃப்ரிட்ஜுல ஒட்டலாம்" என்று கிச்சனுக்குள் போனாள். சலிக்காமல் அதே வேலையை மீண்டும் செய்ய நானும் அவளைப் பின் தொடர்ந்தேன், "பாருங்க, பாப்பாவும் என்னை மாதிரியேதான் இருக்கிறாள்" என்று சொல்லிக்கொண்டே.

ஃப்ரிட்ஜில் ஒட்டிய இந்த ஸ்டிக்கர்ஸை எல்லாம் ஒரே இடத்தில் இருக்க விடமாட்டேன். அடிக்கடி ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம் மாற்றி வைத்துக்கொண்டே இருப்பேன். இன்று வலது மேல் கோடியில் இருக்கும் இவர்கள் அடுத்த நாளே இடது கீழ் கோடிக்கு இடம் பெயர்ந்திருப்பார்கள்.

ஒரு நாள் கூட்டாமாக இருப்பார்கள்,அடுத்த நாளே தனித்தனியாக்கப்படுவார்கள். இப்படியாக இவ்வளவு நாளும் ஃப்ரிட்ஜை ஆக்கிரமித்திருந்தவர்கள், சென்ற ஜூன் மாதம், முதல் வாரத்தில் இருந்து ஃப்ரிட்ஜில் இருந்து காணாமல் போய்விட்டனர்.

மகளுக்கு பள்ளி முடிந்த பிறகு, ஃப்ரிட்ஜில் இனி பேப்பர் ஒட்டி வைக்கும் வேலை இல்லாததால், எல்லாவற்றையும் எடுத்துவிட்டேன். பார்க்க ஃப்ரிட்ஜ் நீட்டா அழகாக‌ இருக்கவும், கொஞ்ச நாளைக்கு இப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.

இப்போது மீண்டும் இவர்களை தூசுதட்டி, ஃப்ரிட்ஜில் ஒட்டலாம் என பதிவு போட்ட அன்று மகளைக் கூப்பிட்டேன். அவள் "நீயே ஒட்டிடுமா" என்றாள்.

மகள் மாறிவிட்டாளோ !!!

மாறாமல் இருப்பது என்னைப் போன்ற, ஹி ஹி உங்களைப் போன்ற ஒருசிலர்தான் போல.

மழைபெய்து முடிந்த பிறகு உள்ள அந்த ஈரமன்ணில் கோடு கிழித்து ஸில்லு விளையாட, தாயம் & பல்லாங்குழி ஆட, ஊஞ்சல் ஆட, புதிர் விடுவிக்க, ஸ்கிப்பிங் விளையாட, ஓடிப்பிடித்து & கண்ணாமூச்சு ஆட, ........ இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்.

நீங்களே சொல்லுங்க, இவையெல்லாம், இன்றும் உங்களுக்குப் பிடிக்கும்தானே !!

Sunday, September 8, 2013

விடுபட்ட இடங்களை நிரப்புக :--


போன பதிவுல எல்லோரும் கேள்விமேல கேள்வி கேட்டு என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிட்டீங்க. அதனால உங்களுக்கெல்லாம் ஒரு டெஸ்ட்.

கீழே படத்திலுள்ள விடுபட்ட இடங்களை நிரப்ப வேண்டும்.இதற்கு நிபந்தனைகளும் உண்டு. அதாவது பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டோ அல்லது பார்த்தோ நிரப்பக்கூடாது.


அப்படியே நிரப்புவதற்கும் ஏதாவது க்ளூ (clue or glue எதுவாக இருந்தாலும் பரவாயில்லை) கொடுங்களேன் !!  (நிபந்தனைகளிலிருந்து எனக்கு மட்டும் விதிவிலக்கு)

விடுபட்ட இடங்களை மும்முரமாக நிரப்பிக் கொண்டிருப்பதால் நிரப்பிய படத்துடன் நாளை வருகிறேனே !!

Thursday, September 5, 2013

மறுபடியுமா !!!

வரலாற்றுப் பாடத்தில் இரண்டு முக்கியமான தேதிகள் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமானவை. முதலாவதை நினைவுகொள்ளும்போது இன்னொன்றும் கூடவே வந்துபோகும்.அவை சுதந்திர தினமும்,குடியரசு தினமும்.

சின்ன வயதில் இரண்டின் வித்தியாசத்தையும் படித்துத் தெரிந்துகொண்டாலும் புரிந்தும் புரியாததாகவே இருந்தன.

இந்த இரண்டில் ஒன்றின் தேதியைக் கேட்டால் இன்னொன்றையும் சேர்த்து நினைக்காமல் தேர்விலோ அல்லது வகுப்பில் ஆசிரியர் கேள்வி கேட்கும்போதோ பதில் சொன்னதாக எனக்கு நினைவில்லை.

ஒருவாறாக இந்தப் பிரச்சினைகளுடனேயே கொஞ்சம் பெரிய வகுப்பில் அடியெடுத்து வச்சாச்சு.

முதல் நாள் வரலாற்று ஆசிரியரின் வருகையை அனைவரும் எதிர்பார்த்து அமர்ந்திருந்தோம். அவரும் வந்தார்."உலக வரலாற்றைப்பற்றி இந்த வருடம் படிக்கப் போகிறோம்,முதல் நாளே பாடம் நடத்தி உங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை,அதனால் இதுவரை படித்த நம் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாமே" என்று சொல்லி சில‌பல கேள்விகளைக் கேட்டார்.

சிலவற்றிற்கு விடை தெரியவில்லை என்றாலும் சிரித்துப்பேசி சுவாரசியமாக போய்க்கொண்டிருந்தது வகுப்பு.

திருஷ்டி வைத்தாற்போல் அமைந்தது இடையே வந்த ஒரு கேள்வி. "இந்தியாவின் சுதந்திர தினத்தை எப்போது கொண்டாடுகிறோம்?" என்பதுதான் அது.

சிலர் தெரியும் என்றனர்.ஒருசிலர் தெரியாது என்றனர்.தெரியும் என்றவர்களிலும் பாதிபேர் குடியரசு தினத்துடன் சேர்த்து குழப்பினர். அன்றுதான் தெரியும் என்னைப் போலவே பலரின் நிலையும் உள்ளதென்று.

அவ்வளவுதான்,அதுவரை அமைதியாக வகுப்பை கொண்டுபோனவருக்கு வந்ததே கோபம்.

"வருடம் முழுவதும் திங்கள் & வெள்ளிக் கிழமைகளில் கொடி ஏற்றுகிறோம், அதில் இரண்டு நாட்களில் மட்டும் கொடியேற்றி மிட்டாய் கொடுத்து விடுமுறை விட்டு வீட்டுக்கும் அனுப்பி வைக்கிறோம், அப்படிகூட ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நீங்களெல்லாம் எதுக்கு படிக்க வர்றீங்க‌?" என்றார்.

சுதந்திரதினம் பற்றிய என் குழப்பமெல்லாம் அன்றுடன் அடியோடு காணாமல் போனது. சுதந்திரதினம் ஒருவாறாக முடிவுக்கு வந்தது.

அடுத்து குடியரசு தினம் __ இதை நினைவில்கொள்ளவும் ஏதாவது விஷயம் நடந்தாக வேண்டுமே. இனி ஆசிரியர் வந்து யாரையாவது திட்டித்தான் நினைவிலிருத்த வேண்டும் என்ற வயதையெல்லாம் கடந்தாச்சு.

நான் நினைக்கவேயில்லை குடியரசு தினத்தை நினைவில்கொள்ளும் முக்கியமான நிகழ்வு என் வாழ்க்கையில் வருமென்று!

ஆமாங்க,திருமண நாள் குறித்தபோது அது எதேச்சையாக ஜனவரி 26 ல் அமைந்துவிட்டது. (இதன்மூலம் சொல்லிக்கொள்வது என்னவென்றால் ஒவ்வொரு குடியரசு தினத்துக்கும் நீங்க நினைவு வைத்து எனக்கு வாழ்த்து சொல்ல மறந்துவிடக்கூடாது என்பதுதான் அது)

திருமணத்திற்குப் பிறகு சுதந்திர,குடியரசு தினங்களைக் கேட்டவுடன் யோசிக்காமல் டக்கென்று அதன் தேதிகளை சொல்லுமளவிற்கு தேறி வந்து பல வருடங்களாகிவிட்டது.

ஆனால் சென்ற ஆகஸ்டு மாதம் 15 ம் தேதி மாலை ஒரு ஃபோன்கால் செய்யப்போய் எதிர்முனையில் வந்தவர் என்னைக் குழப்பியதில் ரொம்பவே குழம்பிப்போனேன்.

நான் எப்போதும் என்னுடைய சகோதர,சகோதரிகளிடம் பேசுவதைவிட அவர்களின் பிள்ளைகளிடம் பேசவே அதிகம் விரும்புவேன்.(வீட்டில் கடைசி என்பதால் பழக்கதோஷத்தில் இன்னமும் என்னை மிரட்டுகிறார்கள், அவ்வ்வ்வ்)

அப்படித்தான் இந்த வருட சுதந்திர தினத்தன்று மாலை (நம்ம ஊரில் அடுத்த நாள் காலை)என் சகோதரியின் மகனிடம் பேச தொலைபேசியில் அழைத்தேன்.

அவனோ ஃபோனை எடுத்தவுடனே 'சித்தி,வெட்டிங்டே எப்படி போச்சு? என்னென்னெ செஞ்சீங்க?',என்று கேட்டான்.{ஆனாலும் எனக்குள் ஒரு சின்ன சந்தோக்ஷம்,பரவாயில்லையே உடன் பிறந்தவர்கள்தான் நான் சமைப்பதை நம்ப மறுக்கிறார்கள்,ஆனால் அவர்களின் பிள்ளைகளாவது நம்புகிறார்களே என்று}

"நல்லாதான் போச்சு,ஆனால் என்ன சமைத்தேன் என்பதெல்லாம் நினைவிலில்லை" என்றேன் சற்று குழப்பத்துடன்.ஆறு மாதங்களுக்கு முன் வந்த திருமண நாளைப்பற்றி இப்போது கேட்க வேண்டிய அவசியம் என்ன?

"என்ன சித்தி இன்னிக்கு செஞ்சது அதுக்குள்ள‌ மறந்துபோச்சா?" என்றான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.ஒருவேளை முக்கியமான ஒருவரின் திருமண நாளை நான் மறந்துவிட்டேனா என நினைத்து "யாருடைய வெட்டிங் டே, எப்ப வந்துச்சு?" என்றேன்.

"என்ன சித்தி மறந்துட்டீங்களா? சுதந்திரதினம் அன்னைக்குதானே உங்க வெட்டிங் நடந்துச்சு? நாங்கல்லாம் ஸ்கூலுக்கு லீவு போடாமலே லீவு கெடச்சுதே" என்றானே பார்க்கணும்.

நான் எனக்குள்,"மறுபடியும் ஆரம்பத்திலிருந்தேவா !!"