Tuesday, April 15, 2014

வெட்கத்தில் ஒரு குளியல் !

நான் என் மகளை அழைத்துக்கொண்டு இந்தியாவுக்கு சென்றேன். 'ஜெட் லாக்'காவது ஒன்னாவது, எப்போதும்போல் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு உறவுகளின் வீடுகளுக்குப் பயணமானேன்.

முதல் பயணம் தம்பியின் வீடு. அங்குதான் இரண்டு குட்டீஸ்கள் இருக்கிறார்கள். சென்ற முறை போனபோது அவர்களது பெண் ப்ரியா மூன்றாம் வகுப்பிலும், பையன் அர்ஜுன் முதல் வகுப்பிலும் அடியெடுத்து வைத்திருந்தார்கள். இரண்டு வருடங்களுக்குப் பின் இன்றுதான் பார்க்கப் போகிறோம்.

அவர்கள் பள்ளிக்கு செல்லுமுன் சென்றுவிட வேண்டும் என்பதில் தீவிரமாய் இருந்தேன். எவ்வளவு முயற்சித்தும் கிளம்பிப் போக காலை பத்து மணிக்குமேல் ஆகிவிட்டது.

"அக்கா வர்றதால இன்னிக்கு  நாங்க ஸ்கூலுக்குப் போகமாட்டோம்" என்று காலையிலேயே அடம் பிடித்தார்களாம். பிறகு மிரட்டி & உருட்டி அனுப்பியிருக்கிறார்கள்.

பள்ளி வேன் மாலை நான்கு மணிக்குத்தான் வரும் என்றாலும் என் மகள் இரண்டு மணிக்கே பால்கனியில் போய் நின்று அவர்கள் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த வெயிலிலேயே தவமிருந்தாள்.

கடிகாரத்தின் முட்கள் மணி நான்கை நெருங்க நாங்களும் பால்கனிக்கு விரைந்தோம்.  "இந்த வேன் இல்ல, அந்த வேன் இல்ல" என்று சொல்லிக்கொண்டே இருக்கும்போதே " இதோ வேன் வந்தாச்சு" என்று தம்பி  சொல்லவும், முதலில் இறங்கியது அவர்களின் மகள். நிறையவே மாற்றம் தெரிந்தது.

இறங்கியதும் அவள் கண்கள் வீட்டை நோக்கி அலைபாய்ந்தன‌. ஆச்சரியத்துடன் "ஹை, அக்கா வந்துட்டாங்க" என்று சொல்லிக்கொண்டே மேலே ஓடி வந்தாள்.

ஆனால் பையன் இறங்கியவன்தான், திரும்பவே இல்லை. இவர்கள் கூப்பிட்டும் அங்கேயே நடு சாலையிலேயே டென்னிஸ் விளையாட ஆரம்பித்துவிட்டான். பைக்குகளும், ஆட்டோக்களும் பறந்துகொண்டிருந்தன.

தம்பியோ, "நான் கீழ வரணுமா, இல்ல நீயே மேல வந்திடுறியா ?" என்றதும் பின்பக்கமாகவே(backward)  நடந்து வந்தான். மூன்றாவது மாடியிலுள்ள வீட்டுக்கும் படிகளில் அப்படியேதான் ஏறி வந்தான்.

வந்தவன் யாரையும் பார்க்காமல் ஓடிப்போய் சோஃபாவில் ஏறி கவிழ்ந்து படுத்துக்கொண்டு அதிலிருந்த தலையணைகளை மேலே போட்டு மூடிக்கொண்டான். எவ்வளவு கூப்பிட்டும் காதிலேயே வாங்காத மாதிரி என்னமாய் நடிக்கிறான் !

இரண்டு அக்காக்களும் அவனருகிலேயே விளையாடிக்கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தான், பிறகு தன்னுடைய பைக், ஹெலிகாப்டர், கார் என பலவற்றைக் கொண்டுவந்து கடைபரப்பி தனியாகவே முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டே, யாரையும் நிமிர்ந்துகூட பார்க்காமல் விளையாடினான். இவர்கள் பேச்சுக் கொடுத்தாலும் அவன் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

பிறகு தம்பியின் மனைவி வந்து, "இதுக்கு மேல அழுக்காக்க இதுல ஒன்னுமில்ல, போய் குளிச்சுட்டு ட்ரெஸ் மாத்திட்டு வா, சாப்பிடலாம்" என்று தன் மகனின் வெள்ளை நிற யூனிஃபார்ம் அநியாயத்துக்கு செம்மண் நிறமாகி இருப்பதைப் பார்த்துக்கொண்டே சலிப்புடன் சொன்னார்.

ஓடிப்போய் குளித்தான். அவன் குளித்து முடித்து வருவதற்குள் எங்களின் ஆலோசனைப்படி இரண்டு அக்காக்களும் சமையலறை கதவின் பின்னால் ஒளிந்துகொண்டனர்.

பாத்ரூமிலிருந்து வந்தவன் லிவிங் ரூம் சென்று பார்த்தான். அக்காக்களைக் காணவில்லை. பிறகு படுக்கையறைகளில் சென்று தேடினான். அங்கும் இல்லை. இன்னொரு பாத்ரூமுக்கு ஓடினான். பால்கனியில் தேடிவிட்டு, மொட்டை மாடிக்கு விரைந்தான். அங்கும் அவர்களைக் காணாமல் சமையல் அறையிலிருந்த த‌ன் அம்மாவிடம் கேட்டான், "அம்மா , ரெண்டு அக்காவும் எங்கம்மா? என்று.

"புது அக்காகிட்ட நீதான் பேசமாட்டிங்கிற, கோபமா இருக்க, அதான் கோச்சிகிட்டு அவங்க ஊருக்குப் போயிட்டாங்க" என்றார்.

"அத்த மட்டும் இங்க இருக்காங்க ?" என்று எனக்குக் கேட்காத அளவில் குரலைத் தாழ்த்தி கேட்டான்.

"அவங்க பெரியவங்க, கண்டுக்கல, ஆனா அக்காகூட பேசணுமா இல்லையா?" என்று கேட்கவும், சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு "எனக்கு அக்கா வேணும்" என்று 'ஓ'வென அழத் தொடங்கினான்.

அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் கதவிடுக்கில் ஒளிந்திருந்த இரண்டு அக்காக்களும் "ஹேஏஏஏ" என சத்தம் போட்டவாறே ஓடிவந்து அவனை கட்டிப் பிடித்துக்கொண்டனர்.

இவ்வளவு நேரமும் தண்ணீரில் குளித்தது போதாதென்று, இப்போது வெட்கத்திலும் குளித்துக்கொண்டிருந்தான் அந்தக் குட்டிப் பையன்.

8 comments:

 1. அட...! என்னவொரு சந்தோசம்...!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க, அதெல்லாம் குட்டிப் பசங்களின் தனி உலகம் !

   Delete
 2. நீங்களும் பாசமழையில் குளித்து விட்டீர்கள் போலிருக்கிறதே! பதிவு எழுத நேரம் இருக்குமா உங்களுக்கு?

  ReplyDelete
  Replies
  1. இரண்டு நாட்களுக்குமுன் ஃபோட்டோ ஆல்பத்தைப் பார்த்தபோது நினைத்துக்கொண்ட முதல்நாள் காட்சிதாங்க அது.

   எப்போதாவது பதிவுகளைப் பார்த்து சிரித்துக்கொள்வோம், அவ்வளவே. பதிவெல்லாம் இங்கே வந்தபிறகுதான் எழுதுவேன். பேசி முடிக்கவே நேரமிருக்காது.

   Delete
 3. சில குழந்தைகள் இப்படித்தான்! (கோடையில் பறவைக் குளியல் பற்றி எழுதியிருப்பீர்கள் என்று நினைத்தேன்!)
  வெளி ஊரிலிருந்து வந்திருக்கும் அக்கா வந்து தன்னை விளையாட அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பானோ??

  ReplyDelete
  Replies
  1. வெட்கத்தை மறைக்க கோபமாய் இருப்பதுபோல் நடித்தான். எவ்ளோ நேரம்தான் நடிக்க முடியும், அதனால அவனாவே அழுதுட்டான். அதன்பிறகு வரும்வரை பிரியவில்லை. நல்ல்ல்ல பசங்க .

   Delete
 4. மழலைகள் உலகம்....

  வெட்கத்தில் குளித்த அக்காட்சி இப்போது மனத் திரையில்......

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க, ஏறக்குறைய மூன்று வருடங்களுக்குமுன் நடந்தது. மனத் திரையில் இன்னும் அப்படியேதான் இருக்கிறது.

   வருகைக்கு நன்றிங்க வெங்கட்.

   Delete