Tuesday, August 27, 2013

பூட்டாத பூட்டுகள்

ஒருவழியாக ஒருநாள் நண்பகல் வேளையில் அமெரிக்காவில் வந்து காலடி வச்சாச்சு. ஒன்றரை வருடம் கழித்து சுந்தரைப் பார்த்ததில் அளவில்லா மகிழ்ச்சி.

அடுத்த நாளே Toy R Us போனோம். விளையாட்டுப் பொருள்கள் வாங்குமிடம் என்று நினைத்துப் போனால் அது குட்டீஸ்களின் விளையாட்டு உலகமாகவே இருந்தது. எதை எடுப்பது எதை விடுவது எனத் தெரியாமல் முழித்தேன்.

மகள் ஆர்வமாக சிலவற்றை எடுத்தாள். அவற்றையே வாங்கிக்கொள்ளலாம் என முடிவு செய்தோம். பிறகு அழகான குட்டி சைக்கிள் ஒன்றும் வாங்கிக்கொண்டு நேராக பூங்காவுக்கு சென்றோம்.(பிறிதொருநாள் இந்தப் பூங்காவைப் பற்றி பதிவிடுகிறேன்)

மகள் விளையாடி சோர்வடையும்வரை அங்கேயே இருந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். அன்று இரவு இவருக்கு ஆஃபீஸ் செல்ல வேண்டி இருந்தது. மாலை வீட்டிலிருந்து கிளம்புமுன் சிலவற்றை சொல்லிவிட்டு சென்றார்.

அதில் முதலாவது எமர்ஜென்ஸி வண்டிகள் போகும்போது வரும் சத்தத்தைக் கேட்டு பயந்துவிட வேண்டாம் என்பது ஒன்று.

அடுத்து கதவை எப்படி பூட்டுவது & திறப்பது என்பது இன்னொன்று. கூடவே இன்னொன்றையும் சொல்லியிருக்கலாம். மறந்துவிட்டாரோ!!

ஒருவேளை இரவு நேரம் என்பதால் நாங்கள் வெளியில் வரமாட்டோம் என்றுகூட இவர் நினைத்திருக்கலாம். நாங்களாவது வெளியில் வராமல் இருப்பதாவது!!

ஊரில் நாங்கள் இருந்தது கிராமம் என்பதால் யார் வீட்டுக் கதவும் மூடிய நிலையில் இருந்து நான் பார்த்ததில்லை. வீடு திறந்துதானே கிடக்கிறது என யாராவது வெளியிலிருந்து வரும் ஆட்கள் நுழைந்துவிட முடியுமா என்ன?

வெளியிலிருந்து ஈ,எறும்பு வந்தால்கூட எல்லோருக்கும் தெரிந்துவிடும். அதனால் வீட்டைப் பூட்டி வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

அதனால் 'சாவி' பற்றிய சிந்தனையெல்லாம் எனக்கில்லை. ஏதோ சொல்கிறார், ஓ கே என்றுதான் நினைத்தேன்.

வந்த மறுநாளே என்பதால் jet lag பிரச்சினை வேறு. இரவு முழுவதும் தூங்கவில்லை. ஊருக்கு ஃபோன் செய்துகொண்டும், இங்குமங்கும் நடந்துகொண்டும், ஏதாவது சாப்பிட்டுக்கொண்டும் .... பாவம், கீழ் வீட்டில் இருந்தவர்கள்.

இவர் அதிகாலை 6:00 மணிக்கு ஃபோன் செய்து ஆஃபீசிலிருந்து கிளம்பிவிட்டதாக சொன்னார்.

வேலை செய்த இடம் நீண்ட தொலைவு என்பதால் வந்துசேர ஏறக்குறைய ஒரு மணி நேரமாவது ஆகும். இருந்தாலும் அப்பொழுதே கிளம்ப ஆரம்பித்துவிட்டேன், கீழே சென்று இவர் வருவதைப் பார்க்க.

புது சைக்கிள் வேறு, அதனால் வெளியில்போக என்னைவிட மகள்தான் ஆர்வமாக இருந்தாள் . தன்னுடைய சைக்கிளை பேட்டியோவில் இருந்து எடுத்துவந்து கதவைத் திறந்து வெளியில் வைக்க முற்பட்டாள்.

பக்கத்திலேயே படிக்கட்டுகள் இருந்ததால் நானும் உதவ‌லாமே என வெளியில் வந்தேன். அவ்வளவுதான்...

கதவு படாரென்று மூடிக்கொண்டது. கதவைத் தள்ளித் திறக்கிறேன், முடியவில்லை. என்னதிது, ஒருவேளை .....! அதை நம்பமாட்டேன், ஆனாலும் எந்தளவிற்கு நம்பிக்கை இல்லையோ அந்தளவிற்கு அதனிடம் பயம் உண்டு.

எனக்கொரு சந்தேகம், கதவைப் பூட்டாமலே எப்படி பூட்டிக்கொண்டது!! கதவைத் திறக்க வேண்டும், சாவி கையில் இல்லை. அதனால் உள்ளே போகவும் முடியாது. யாரையுமே தெரியாது. அவ்வளவு ஏன், முதலில் யாரையுமே வெளியில் காணோம்.

இப்போது ரஞ்ஜனி எழுதுவாங்களே, 'என்ன ஆள் நடமாட்டத்தையே காணோம்' என்பதாக, அப்போது அதுதான் எனக்குள் இருந்தது.

சரி எவ்வளவு நேரம்தான் அங்கேயே நின்றுகொண்டிருப்பது! நல்ல குளிர் வேறு. Mid_July என்றாலும் கோடையே எங்களுக்கு குளிராகத்தான் இருந்தது.

நல்ல வேளை, அடுப்பில் எதுவும் இல்லை. அதனால் தைரியமாக கீழே இறங்கி வந்து வெயில் வரும் பக்கமாக மகளை சைக்கிள் ஓட்டச்சொல்லி சமாளித்தேன்.

கையில் செல்ஃபோன் இல்லை. இருந்திருந்தால் இவரிடம் சொல்லியிருக்கலாம். ஒருமணி நேரத்திற்கும் மேலாக‌ அங்கேயே நின்று எப்படியோ ஓட்டினேன்.

பிடித்தமான வேலையாக இருந்தால் நேரம் போவதே தெரியாது. அதுவே பிடிக்காதது என்றால்?.... ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாக நகர்ந்தது.

கடைசியில் தூரத்தில் கார் வருவதைப் பார்த்ததும்தான் நிம்மதி வந்தது. உடனே காரை நோக்கி போனேன், இல்லையில்லை ஓடினேன்.

பிறகு காரில் ஏறிக்கொண்டேன், ஏறியதும் இவர் கேட்டது, 'எத்தன தடவ ஃபோன் செய்தேன், ஏன் எடுக்கல‌?' என்று!

முதல் வேலையாக அப்பார்ட்மென்ட் ஆஃபீஸ் இருக்குமிடம், அதன் ஃபோன் நெம்பர் எல்லாம் கொடுத்து, எங்க அப்பார்ட்மென்டிலேயே இருந்த ஒரு வீட்டினரை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு அவர்களை நான் பார்க்கவேயில்லை என்பது வேறு விஷயம்.

அதன் பிறகுதான் தெரிந்தது, எங்கள் வீட்டைச் சுற்றியே அருமையான, நல்லநல்ல தோழிகள் இருக்கின்றர் என்று. எந்த உதவியாக இருந்தாலும் நான் கேட்காமலேயே செய்தனர். நள்ளிரவு என்றாலும் அவர்கள் வீட்டிற்கு போகுமளவு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்களா இருந்தாங்க.

கதவுப் பிரச்சினை இதோடு முடிந்ததா என்றால் அதுதான் இல்லை. அதன் பிறகும் இரண்டுமூன்று தடவை அதாவது அப்பார்ட்மென்ட் ஆஃபீஸிற்கு போகிறேன் என்றால் அது கதவுப் பிரச்சினைக்குத்தான் என எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

ஒருதடவ அப்பார்ட்மென்ட் ஆஃபீஸிலிருந்து அவங்க க்ளப் காரிலேயே வீட்டிற்கு கூட்டிட்டு வந்தாங்க. நானோ 'இஞ்ச் பை இஞ்ச்'சா, தெரிஞ்ச கடலூரிலேயே பஸ் அல்லது ஷேர் ஆட்டோவில்தான் போவேன்.

'நடந்தே வருகிறேன்' என்று சொல்லியிருக்கலாமோ என்றெல்லாம் குழம்பிப்போய் இருக்கும்போது என்மகள் என்னிடம் சிரித்துக்கொண்டே 'அம்மா, இந்தக் கார் சூப்பரா இருக்கில்ல' என்றாள்.

இன்றும்கூட அடிக்கடி என்னுள் வரும் கேள்வி, "இவர் ஆஃபீஸ் போனதும் இது நிகழ்ந்திருந்தால் என்ன செய்திருப்பேன்?',என்று.

பிறகு எனக்கு நானே "நடந்ததையே நினைத்து கவலைப்படக் கூடாது எனும்போது, நடக்காததை நினைத்து எதற்கு கவலைப்பட வேண்டும்?" என்று.

'கதவு தானாகவே பூட்டிக்கொள்ளும் அமைப்புடையது, அதனால எப்போதும் கையில் சாவி இருக்க வேண்டும்', என இவர் அப்போதே சொல்லி இருக்கலாம். சொல்லியிருந்தால் இவ்வளவு அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதிவை நீங்க இழந்திருப்பீங்க‌ !! ஹா ஹா ஹா.

(இன்று மிகச் சாதாரணமாக இருக்கும் இந்த விஷயம் அன்று எனக்கு பூதாகரமாகத் தெரிந்ததென்னவோ உண்மை)

Monday, August 12, 2013

அஸ்தமன அரங்கேற்றம்

ஒரு நான்கு நாட்களுக்கு நாங்கள் தங்கப்போவது மூன்றாவது மாடி என்று தெரிந்ததுமே மனதிற்குள் ஒரு சந்தோஷம். தங்கப்போகும் அறை கிழக்குப் பக்கமாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். அதற்கு ஒரு காரணமும் உண்டு. வாஸ்து சாஸ்திரத்தை சொல்ல வரலீங்க. கிழக்குப் பக்கம் அழகான மலைகள் இருந்தன. அதில் சூரிய உதயத்தைப் பார்த்து ரசிக்கலாமே என்ற ஆசைதான்.

அப்பார்ட்மென்டில் எப்போதும் மாடியிலேயே எங்களுக்கு வீடு அமையும். இந்த முறை விரும்பி கீழ்த்தளத்தை பெற்றுக்கொண்டோம். சூரியன் உதயம், மறைவு என எதுவுமே சரியாகத் தெரியாது. முன்பின் உள்ள வீடுகள் சொல்லி வைத்தாற்போல் சரியான நேரத்தில் அக்காட்சியை மறைத்துவிடும்.

சரி வெளியிடத்திற்கு வந்தாலாவது பார்க்கலாம் என்றால், கிடைத்ததோ மேற்கு பக்க அறை. அதனாலென்ன, சரி பரவாயில்லை, சூரியனின் மறைவைப் பார்க்கலாமே என மனதைத் தேற்றிக்கொண்டேன். (எதெதுக்குதான் கவலைப்படுவது என ஒரு வரைமுறையே இல்லாமப் போச்சு. அவரவர் கவலை அவரவர்கட்கு)

வழக்கம்போல் மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரம் வானத்தில் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, நீலம், ஊதா என நிறங்கள் கலந்துகட்டி அடித்தன.

கொஞ்சம்கொஞ்சமாக சூரியன் இறங்கிக்கொண்டிருந்தது. சரியாக அஸ்தமிக்கும் நேரத்தில் ஒரு பனைமரம் குறுக்கே வந்ததுபோல் தெரிந்தது.  அப்போதுதான் கவனித்தேன், அங்கே ஏகப்பட்ட பனைமரங்கள் இருந்ததை!

சரி, பனமரம் நகராது, சூரியனாவது இப்படி அப்படி நகர்ந்து (அறிவியல் கொள்கை, கோட்பாடுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு) போஸ் கொடுக்கும் எனப் பார்த்தால், ம்ஹூம், நடக்கவேயில்லை, ஸாரி நகரவேயில்லை.

கண்டிப்பாக பனைமரம் விட்டுக்கொடுக்கப் போவதில்லை, அதாவது நகரப் போவதில்லை, சூரியனும் விடாப்பிடியாக பிடிவாதம் பிடித்தது. எவ்வளவு நேரம்தான் நானும் படங்கள் எடுக்காமல் காத்திருந்து வீம்பு பிடிப்பது? எல்லோருமே பிடிவாதமாக இருந்தால் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எனவே நான்தான் கொஞ்சம் இறங்கிவந்தேன். (எனக்குத்தான் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொஞ்சம் அதிகமாச்சே, ஹி ஹி)

ஒன்றிரண்டு படங்களை எடுத்துவிட்டு பார்த்தபோது, "அட,இதுவும் அழகாத்தானே இருக்கு", என ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். வேறு வழியில்லை, ரசித்துதான் ஆகவேண்டும். பிறகென்ன, மளமளவென படங்கள் எடுத்தாயிற்று.அவற்றுள் சிலவற்றை மட்டும் வரிசைக்கிரமமாக இங்கே பதிந்து வைக்கிறேன்.

எனக்கென்னமோ படங்களைப் பார்த்தால், 'சிறு துரும்பும்...' என்ற பழமொழிக்கேற்ப, இவ்வளவு பலசாலியான சூரியன் ஏதோ பனைமரத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு தன்னுடைய அஸ்தமன நாடக‌த்தை அரங்கேற்றியது போலவே இருந்த‌து.


Tuesday, August 6, 2013

உன்னிப் பூ


இது ஒரு பூவின் மொட்டு. எங்கள் ஊர் கிராமங்களில் எங்கும் பூத்திருக்கும். இங்கு நாங்கள் இருக்கும் இடத்திலும் நிறைய பூத்திருக்கிறது. பூவின் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். நான் சொல்லும் பெயர் பொருந்துமா எனத் தெரியவில்லை. இது எந்தப் பூவின் மொட்டு என‌ நீங்கள் சொன்னால் தலைப்பாக்கிவிடுகிறேன்.

பூ கொத்தாகப் பூக்கும். காய்களும் அப்படியே. அவை பழுத்ததும் பறித்துத் தின்றதாகக்கூட‌ ஞாபகம்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இப்போதும்(05/30/14) இந்தப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

இவற்றைப் பார்க்கும்போதெல்லாம் சின்ன வயசுல ஒவ்வொரு பூவாக எடுத்து தேன் உறிஞ்சியதெல்லாம் நினைவுக்கு வரும் :)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Thursday, August 1, 2013

பறவையின் பார்வையில் .... ( 1 )


விமானப் பறவையின் பார்வையில் பூமி !!

சமீபத்தில் மேற்கொண்ட விமானப் பயணத்தின்போது மேலேயிருந்து எடுத்த படங்கள்தான் கீழேயுள்ளவை.

ஹை, இந்த முறை எனக்கு ஜன்னலோர இருக்கை! உள்ளூரில் ஒருமணி நேர பயணம் என்பதால் சோர்வாகாமல் படங்கள் எடுத்தாச்சு.நான் ரசித்த காட்சிகளில் சில‌, இதோ உங்களின் பார்வைக்கு  ...

வழி நெடுக மலைகள்தான். மலையில் ஆங்காங்கே குளம்,ஏரி போன்று நீர்நிலைகள் தெரிந்தன.

சில படங்களில் உள்ள சதுரம், செவ்வகம், வட்ட வடிவிலான பசுமையான நிறங்கள் விவசாயம் செய்யும் நிலங்களாக இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.