Monday, June 29, 2015

எதிர்பாராத உபசரிப்பு !! ___ தொடர்ச்சி

ஒரு வழியாகத் திங்கள் முதல் வியாழன் வரை மொழிப் பாடத் தேர்வுகள் முடிந்ததும் வெள்ளிக்கிழமை அனைவரும் பள்ளிக்கு வந்து தலை காட்டினர்.

தலைமை ஐயா தன் பெண்ணின் திருமண நிச்சயத்திற்கான அழைப்பிதழை எல்லோருக்கும் கொடுத்தார். ஒரு திருமண மண்டபத்தில், புதன் கிழமை மாலை, தேர்வு நடைபெறும் ஊரில்தான் விசேஷம்.

காயுவிற்கு பள்ளியில் உடன் வேலை செய்பவர்களிடம் மிகப் பெரிய நல்ல பெயர் ஒன்று உண்டு. அது 'யார் வீட்டு விசேஷத்திலும் கலந்துகொள்ளமாட்டார்' என்பதுதான்.

யாரும் கோபித்துக்கொள்ளமாட்டார்கள், ஏனேனில் அவள் பயணிக்கும் நீண்ட தூரமும், அதற்கான நேரமும்தான்.

நல்ல மனம் கொண்ட நல்லவர்கள் சிலர் காயுவிடம், " என்ன நிச்சயத்திற்கு வருவீங்கதானே ?" என்றனர்.

"தேர்வு முடிந்து வீட்டிற்கு போய் மீண்டும் திரும்புவதோ அல்லது மாலை வரை காத்திருப்பதோ அல்லது கலந்துகொண்டுவிட்டு வீட்டிற்குத் திரும்புவதெல்லாம் இயலாத காரியம், அதனாஆஆல் ........ " என்று இழுக்கவும்,

"மற்றவர்களின் விசேஷம் என்றால் பரவாயில்லை, தலைமை எனும்போது .......  பிரச்சினை அவருக்கும் தெரியும், இருந்தாலும் அன்று தேர்வு முடிந்ததும் அவர்கள் வீட்டிற்கு சென்று தலையைக் காட்டிவிட்டுக் கிளம்பிவிடுங்கள், சொல்லியாச்சு, பிறகு உங்கள் விருப்பம்",  என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

நண்பகலில் அங்கே போவது காயத்ரிக்குப் பிடிக்கவில்லை.

'குறைந்தபட்சம் சிலமணி நேரமாவது கழித்துப் போகலாமே' என பொதுக் குழுவில் புலம்பிக்கொண்டிருந்தாள்.

சோஷியல் ஐயாவோ, " உங்களுக்கு நேரம்தானே போகணும், எங்க வீட்டுக்கு வாங்க, வந்து என் மனைவி, மகளுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினால் சரியாகிவிடப் போகிறது" என்று தன் வீட்டு முகவரியைக் கொடுத்தார்.

"இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே" என நினைத்த காயு, "நிச்சயம் வருகிறோம் ஐயா" என்று சொல்லிவிட்டு வாங்கி வைத்துக்கொண்டாள்.

ஆனால் அலமுவிற்கு இதில் சுத்தமாக விருப்பமில்லை.

புதன் அன்று நண்பகல் தேர்வு முடிந்ததுமே இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது.

"நாம உலகளந்த பெருமாளைப் பார்த்துவிட்டுப் போகலாம் வா " என்றாள் அலமு.

காயத்ரியோ, " போன வாரம்தானே கோயிலுக்குப் போனோம், இன்னைக்கு நாம சோஷியல் ஐயா வீட்டுக்கு போயிட்டு கொஞ்சம் ரீஃப்ரெஷ் பண்ணிட்டுப் போகலாமே" என்றாள்.

"சொன்னா கேக்கமாட்ட, சரி வா, ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டுவிட்டாவதுக் கிளம்புவோம்" என்றாள் அலமு.

காயுவிற்காகத்தான் அலமு தங்கியிருக்கிறாள், இல்லையென்றால் பக்கத்து ஊரில் இருக்கும் தன் வீட்டிற்கு போய் விசேஷத்திற்கு மாலை வந்துவிடுவாள்.

தோழியர் இருவரும் சாப்பிட்டு முடித்து ஒரு வழியாக முகவரியிலுள்ள அந்தத் தெருவிற்கு வந்துவிட்டார்கள்.

இப்போது வீட்டைக் கண்டு பிடிக்க வேண்டும்.

அந்தத் தெரு முழுவதும் ஒரே மாதிரியான சிறிய திண்ணையும், பெரிய திண்ணையும் வைத்துக் கட்டப்பட்ட, படிகளுடனான அந்தக் கால ஓட்டு வீடுகள்.

இதில் 'எந்த வீடு ?'  எனக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலாகத்தான் இருந்தது. ஏனெனில்  ஒவ்வொரு வீடும் அவ்வளவு உயரம் !

ஒரு வழியாக கதவு எண்ணைப் பார்த்துக்கொண்டே வந்து வீட்டைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.

ஒரே கதவு, மரத்தாலானது, சிறிது ஒருக்களித்தார்போல் திறந்திருந்தது. ஆர்வக் கோளாறில் காயுதான் கதவைத் தட்டினாள்........ ( தொடரும் )

Thursday, June 25, 2015

எதிர்பாராத உபசரிப்பு !!

காயத்ரி ஆசிரியை வேலையில் சேர்ந்த முதல் நாள். புது இடம், புதுசூழல். நேரம் 'போகமாட்டேன்' என அடம் பிடித்தது.

எப்படியோ ஒரு வழியாக நண்பகல் சாப்பாட்டு வேளை வந்தது. பெண்கள் எல்லோரும் ஒரு அறையில் சாப்பிடுவதற்காக வந்தனர். அங்கு பெண் ஆசிரியைகள் மட்டுமே ஒரு பத்து பேர் இருக்கலாம்.

எல்லோரும் ஒன்றுபோல், 'எங்க சாப்பாட்ட டேஸ்ட் பண்ணி பாருங்க, இல்லைன்னா ஹோட்டல்ல வாங்கி வரச் சொல்கிறோம்" என்றனர்.

"இருக்கு, சாப்பாடு கொண்டு வந்திருக்கேன் " என்றாள் காயத்ரி.

நல்லவேளை, 'வேண்டாம்' என்று சொல்லியும் கேட்காமல் அம்மா டப்பாவில் சோற்றைத் திணித்து வைத்திருந்தார்.

"உங்க பேரென்ன, எங்கிருந்து வர்றீங்க, இதுதான் முதல் போஸ்டிங்கா,  ரொம்ப தூரம்போல் தெரியுது, இங்கேயே தங்கிப்பீங்களா அல்லது தினமும் வீட்டிலிருது வருவீங்களா" என்றெல்லாம் கேள்விமேல் கேள்வி கேட்கவும், புது மாணவியைப் போல் எல்லாவற்றுக்கும் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.

எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே திடுமென அங்கே வந்தார் ஒருவர். தன் வயதுக்கும், சுறுசுறுப்புக்கும் கொஞ்சம்கூட சம்பந்தம் இல்லாமல் இருந்தார் அவர்.

சிரித்துக்கொண்டே எல்லோரிடமும் கையை நீட்டினார். பாதி சாப்பிட்ட நிலையில் எல்லோருமே சிறிது உணவை அவர் உள்ளங்கையில் வைத்தனர். வாயில் போட்டுக்கொண்டார்.

பதிலுக்கு அவர் கொண்டு வந்திருந்த கேரியரைத் திறந்து எல்லோரையும் அதிலிருந்து எடுத்துக்கொள்ள சொன்னார்.

ஆனால் காயு இரண்டுக்குமே 'மாட்டேன்' என மறுத்துவிட்டாள்.

புதியவர்தானே, என்னைப்பற்றி அவருக்குத் தெரியாது, கொஞ்சம் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பஞ்சாய் பறந்துவிட்டார்.

"யாரிவர் ?" என்றாள் காயத்ரி பொதுவாக.

"சோஷியலாமாம் காட்டிக்கிறார்" என்று மைண்ட் வாய்ஸில் பேசினார் அருகிலிருந்த ஒருவர்.

இவர்களில் யாரைத் தன் நெருங்கிய தோழியாக்கிக்கொள்வது என இவ்வளவு நேரமும் கணக்குப் பண்ணிக்கொண்டிருந்த காயத்ரிக்கு 'ஹையா' என எகிறிக் குதிக்க வேண்டும்போல் இருந்தது.

பின்னே தானாக தன்னைப் போலவே ஒருவர் வந்து மாட்டினால் ?

சாப்பிட்டு முடித்து அனைவரும் வெளியில் வந்தனர். அவர்கள் எல்லோருக்கும் இவளது பெயர் தெரிந்துவிட்டது. ஆனால் இவளுக்கு அவர்களின் பெயர் ? இனிதான் கேட்க வேண்டும்.

முதலில் தன் தோழியாக நினைத்த பெண்ணிடம் "பெயரென்ன ?" என்றாள் காயத்ரி.

அலர்மேல்வல்லி" என்றாள் அப்பெண்.

'அலமு'ன்னு கூப்பிடலாமா ? " கேட்டாள் காயத்ரி.

"தாராளமாக, நான்கூட உங்களை 'காயு'ன்னு கூப்பிடலாமா" என்றாள் அலமு .... அதாங்க நம்ம அலர்மேல்வல்லி.

இருவரும் 'காயு'வாகவும் 'அலமு'வாகவும் சுருங்கி ஸாரி நெருங்கிப் போனார்கள்.

இப்போது கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, " உள்ளே ஒருவர் வந்தாரே, அவர் யார் ? என்றாள் காயத்ரி புன்னகைத்துக்கொன்டே.

"ஓ, அவரா ?" என ஒரு மூன்று நான்கு பெயர்களை சேர்த்தாற்போல் சொல்லி, "உங்க விருப்பம், இதில் எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம்" என்றாள் அலமு.

"சோஷியல் ?" என்றாள் காயு.

இருவருக்குமே சிரிப்பை அடக்க முடியவில்லை.

இவர்கள் இருவரையும் ஏதோ 'ரவுடிகள்' என தப்பாக எடை போட்டுவிட வேண்டாம். அங்கிருந்த மற்றவர்களுக்குப் பெயர் வைக்கவில்லையே.

ஓவர் ஸீன் போட்டதால் வந்த எரிச்சலில்தான் பெயர் வைத்தார்கள். அதாவது தான் எல்லோரிடமும் சமநிலையில் பழகுவதாகக் காட்டிக்கொண்டார் என்பது மட்டும் புரிந்தது.

இனி காயு, அலமு என சுருக்கி சொல்வதுபோல் அவரையும் சோஷியல் என்றே சொல்லுவோமே.

சோஷியலிலின் சுறுசுறுப்பையும் முகத்தையும் வைத்து அவரது வயது முதிர்வைக் கண்டுபிடிக்க முடியாது. நடுவில காணாமல் தலையை சுற்றியுள்ள முடியை வைத்தே ஓரளவுக்குக் கணக்கிட முடியும்.

 நாட்கள் ஓடிக்கொண்டே இருக்கிறது ..........................

இப்போதுதான் காயு ஜூன் மாதத்தில் வேலையில் சேர்ந்ததுபோல் இருந்தது, அதற்குள் பிப்ரவரி மாதம் வந்துவிட்டது.

பிப்ரவரி வந்தால்  ....... ? கூடவே பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பிற்கான தேர்வு சலசலப்பும் வந்து சேரும்.

அது முடிந்ததும் மீண்டும் ஏப்ரலில் பத்தாம் வகுப்பிற்கான சலசலப்பு.

"எனக்கு இங்க டூட்டி, உனக்கு எங்க ?" என்ற பேச்சுக்கள் அடிபட்டன.

காயுவிற்கும் அலமுவிற்கும் ஒரே இடத்தில் திருக்கோவிலூர் 'பாய்ஸ்'சில். தெரிந்துகொண்டவரை சோஷியலுக்கு அதே ஊரில் 'கேர்ல்ஸ்'சில்.

சோஷியல் காயுவிடம், "எங்க ஊருக்கு வர்றீங்க, அப்படியே ஒரு நாளைக்கு எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போகணும்" என்று அழைப்பு விடுத்தார்.

சும்மாதானே என காயுவும் தான் கண்டிப்பாக ஒருநாள் வருவதாகக் கூறினாள்.

அது கூடிய சீக்கிரமே அமையப் போகிறது என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
                                                                                                         ( தொடரும் )

      ***********************************************************************************

பின்குறிப்பு :

கதைக்கரு மிக மிகப் பழமையானது. கதையின் மாந்தர்களும் அப்படியே, சுமார் இருபது வருடங்களுக்கு முந்தியவர்கள். ப்ளாக் ஆரம்பித்ததில் இருந்தே எழுத வேண்டும் என நினைத்த கதை, இப்போதுதான் உருவம் பெற்றது.


       ***********************************************************************************

Tuesday, June 23, 2015

சோதனைத் தலைவலி !!

சில நாட்களுக்குமுன் காலையில் மகள் வகுப்புக்கு போகும்போது வழக்கம்போல் அலைபேசியில் அழைத்து பேசிவிட்டு, "அம்ம்ம்மா இங்கு நல்ல வெயில்" என்றாள். ஏதோ நான் மட்டும் அந்நேரத்திற்கு நியூஸிலாந்தில் இருப்பதுபோல்.

"இங்கும் நல்ல வெயில்'தான் என்றேன். வகுப்பு முடிந்து மீண்டும் அழைப்பு, பேச்சு, மீண்டும் வகுப்பு, பேச்சு என முடிந்த பிறகு மாலையில், வெயிலால தனக்குத் தலைவலியே வந்துவிட்டதாகச் சொன்னாள்.

"அச்சச்சோ, அறைக்குப் போனதும் சூடா ஒரு டீ போட்டுக் குடி" என்றேன்.

பதிலுக்கு, " தலைவலி இருக்கும்போது சூடா குடிக்கக் கூடாதுமா, நிறைய ஜில் தண்ணி(ஃப்ரிட்ஜ் வாட்டர் அல்ல, சாதாரண tap water) குடிச்சுட்டு சிறிது ஓய்வு எடுத்தால் போதும், சரியாகிவிடும்" என்றாள்.

இது தெரியாமத்தானே நம்ம ஊர் தலைவலிக்கு எவ்வளவு மாத்திரைகள் போட்டிருப்பேன் !!

பத்தாததற்கு என் சகோதரி ஒரு இரண்டு மாத்திரைகளின் பெயரைச் சொல்லி, "நீ வேணா ரெண்டையும் ஒன்னாப் போட்டுப்பாரு, நொடியில 'டக்'குன்னு நிக்கும்" என அவற்றை ஒன்றாகப் போட்டுக்கொள்ளச் சொல்லி சிபாரிசு வேறு. நானும் அவற்றைப் பலமுறைப் பயன்படுத்தியிருக்கேன்.

அதேபோல் உடன் வேலை செய்த ஒரு தோழியின் கணவர் மருத்துவமனையில் மருத்துவம் அல்லாத வேறொரு வேலையை செய்தாலும் அவரது பரிந்துரையின்பேரில் தோழி தலைவலி ஜுரத்திற்கான மாத்திரைகள் நிறைய வைத்திருப்பார்.

அவரிடம் சொன்னால் போதும், அடுத்த நொடியில் மாத்திரை நம் கையில் இருக்கும். நான் மட்டுமல்ல, நாங்க எல்லோருமே சாப்பிட்டிருக்கிறோம்.

மேலும் தலைவலின்னாலே சூடா ஒரு டம்ளர் காபி அல்லது டீதான் முதலில் நினைவுக்கு வரும்.

எவ்வளவு தலைவலிகள் !!!

காலையில் எழுந்து குக்கரை வைத்ததும் விசில் வருவதற்கு முன்னே தலைவலியும் வந்துசேரும். விசில் வந்தாலும் 'இனி கடகடனு சமைக்கணும்'னு ஒரு தலைவலி, விசில் வர மேற்கொண்டு சில நொடிகள் எடுத்துக்கொண்டாலோ 'தண்ணி விடாமலேயே வச்சிட்டோமோ" என வேறொரு வகையில் சந்தேகத் தலைவலி.

அடுத்து பேருந்துக்கு போய் நின்றாலோ ஒன்று அரைமணி நேரம் லேட்டா வரும், இல்லாட்டி ரெண்டு நிமிடம் முன்னாலே போயிருக்கும். இப்போ தலைவலி வருமா வராதா நீங்களே சொல்லுங்க.

இப்படித்தான் ஊரில் இருந்தவரை எல்லாவற்றுக்கும் தலைவலி. உண்மையில் தலைவலி இருந்துதோ இல்லையோ, தலைவலி என்ற சொல்லைச் சொல்லாமல் அன்றைய நாள் போனதாக நினைவில்லை.

இங்கு வந்தபிறகுதான் தலைவலி என்ற சொல்லே கொஞ்சம் கொஞ்சமாக  மறந்துபோனது. ஒருவேளை பிரச்சினைகள் குறைந்ததாலோ அல்லது பிரச்சினைகள் உடன் இல்லாததாலோ  (இங்கே மாமியார், நாத்தனார் என நினைத்துவிட வேண்டாம்) எனத் தெரியவில்லை.

பிறகு இரவு எட்டு மணிபோல் மகள் அழைத்தாள்.

"தலைவலி இப்போ எப்படி இருக்கு ? " என்றேன்.தலைவலியின்மேல் எனக்கு அவ்வளவு பாசம் !!

தண்ணி குடிச்சுட்டு கொஞ்சம் ஓய்வு எடுத்ததும் சரியாகிவிட்டதாகச் சொன்னாள். ஆச்சரியமாகிப் போனேன் !

மகள் சொன்னதை சோதனை செய்து பார்க்க எனக்கும் ஆசைதான், ஆனால் அதற்கான நேரமும் காலமும் கூடி வர வேண்டுமே !

இப்போ நீங்க முயற்சிக்கலாமே, இப்பதிவினால் உங்களுக்கு நேரமும் காலமும் ஜோராகக் கூடி வந்திருக்குமே !!

Sunday, June 21, 2015

இந்தப் பூ எந்தப் பூ ......... 4

                   எங்க வீட்ல புதுசா பூக்கவிருக்கும் பூக்களின் மொக்குகள் இவை.

பார்ப்பதற்கு மல்லிகையின் மொட்டுக்கள் மாதிரியே இருக்கும் இதிலிருந்து என்ன பூ பூக்கும்னு நீங்க நினைக்கிறீங்க ?        

க்ளூ ? _____ தலையில வச்சிக்க முடியாது.

**************************************************************************************
பதிவின் நீட்சி !

                                        இன்றைக்குத்தான் பூ பூக்க ஆரம்பிச்சிருக்கு !

                                         நீல வானப் பிண்ணனியிலும் எடுத்தாச்சு !

****************************************************************************************

Thursday, June 11, 2015

சுழலும் உலக உருண்டை !சமீபத்தில் ஒரு நாள் சான்ஃப்ரான்சிஸ்கோ 'கோல்டன் கேட் பார்க்'கில் உள்ள கலிஃபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸஸ் _ ல் பலவற்றை ஆவலுடன் பார்த்துக்கொண்டே வந்தபோது, விடாமல் சுழன்றுகொண்டிருந்த இந்த பிரம்மாண்டமான உலக உருண்டை என்னை ஈர்த்தது.

அருகில் சென்று பார்த்தபோது ....... ஆமாம் ......... இப்போது உங்களுக்கு வருகிறதே அதே போலத்தான், எனக்கும் பழைய நினைவுகள் வந்துபோயின.


எங்கள் ஊரில் வறுமையோ வசதியோ எப்படி இருந்தாலும் எல்லோருக்குமே சொந்தமாக ஒரு வீடு இருக்கும், அவ்வீட்டுக்குப் பின்னால் நீளமாக ஒரு தோட்டம் இருக்கும்.

நீளமானத் தோட்டத்தின் முன் பகுதி மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். பின்னால் உள்ள பகுதியில் மரம், செடி, கொடிகள், புதர், பூண்டுகள் என மண்டிக் கிடக்கும்.

இந்த இரண்டு பகுதிகளுக்கும் இடையில் ஒரு பெரிய பள்ளம் இருக்கும். அவர்கள் பாஷையில் சொல்வதானால் அது 'கிணறு'. மேலே உட்கார்ந்தால் போதும், நாம் தானாகவே சர்ர்ர்ரென்று கீழே போய்விடுவோம். ஆனால் மீண்டும் மேலே ஏறி வருவதென்பது பெரிய சவால்தான்.

மண் புழுதிதான். 'போகக் கூடாது' என திட்டு விழும். எங்களுக்கும் தெரியும்தான், இருந்தாலும் விடமாட்டோம். அப்போதைக்கு எங்களுக்கெல்லாம் அதுதான் குட்டி ரோலர் கோஸ்டர்.

அதில்தான் தண்ணீர் எடுத்துக் குடித்ததாக எங்கள் ஆயா சொன்னால் எங்களுக்கு அது காமெடியா தெரியும்.

நாளடைவில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போனதால் கிணற்றில் நீர் ஊறவில்லை என பேசிக்கொள்வார்கள். சாதாரண தலைவலி, ஜுரம் என்றால்கூட தெரு பைப் தண்ணி குடிச்சுதான் உடல்நிலை கெட்டுப் போனதாகவும் சொல்லுவார்கள்.

இந்த நிலத்தடி நீர் பிரச்சினை வீட்டிற்கு மட்டுமல்ல நிலத்திற்கும் உண்டு. வருடந்தோறும் கழனி & கொல்லியில் உள்ள கிணற்றின் ஆழம் அதிகமாகிக்கொண்டே போகும்.

கோடையில் எல்லோரது நிலத்துக் கிணற்றிலும் பள்ளம் வெட்டும் பணி நடக்கும். நீர் மோட்டார் வந்த பிறகு பள்ளம் வெட்டுவது நின்றுபோனது.

அப்படி பள்ளம் வெட்டும்போது பொதுவாக எல்லோரும் சொல்லுவது, ' நெய்வேலியில நிலக்கரி சுரங்கம் வெட்றதாலதான் சுத்து வட்டாரத்துல இருக்கற தண்ணி எல்லாம் வத்திப்போச்சு", என்பார்கள்

ஒருமுறை அப்படி பள்ளம் வெட்ட வந்தவர்களீடம் எங்க அப்பா, " இப்படியே வர்ற வருமானத்தை எல்லாம் கிணத்துல பள்ளம் வெட்டவே செலவு பண்ணினா என்னத்த பயிர் வச்சு என்னத்த பண்றது" என சலித்துக்கொண்டார்.

அதற்கு அவர்களில் ஒருவர், " இப்படி தோண்டிகினே போனா ஒரு நாளைக்கு அமெரிக்காவே வந்துடும் " என்றார். அதைக் கேட்டதும் அங்கிருந்த எல்லோரும் சிரித்தனர்.

ஆனால் ஆரம்பப் பள்ளியின் இடைக்காலத்தில் இருந்த எனக்கோ, 'ஏன் இவங்க இப்படியே வெட்டிட்டு போய் அமெரிக்காவுல மேல ஏறி வரக்கூடாது?' என்றே தோன்றியது.

அப்போதைக்கு உள்ளே எங்க வீட்டுக்குழம்பு, உங்க வீட்டுக்குழம்பு, பக்கத்து வீட்டு எதிர் வீட்டுக் குழம்பெல்லாம் சேர்ந்து கொதிச்சிட்டிருக்கிறது தெரியாதே.

கூடவே இன்னொன்றும் தோன்றியது, அதாவது 'இந்தியாவுக்குப் பின்னால் அந்தப் பக்கம் அமெரிக்கா இருக்குமோ ! ' எனவும் சந்தேகம் வந்தது.

ஒருவேளை அந்த ஆள் சொன்னது சரிதானோ !!
இது புத்தகத்தில் தெரிய வாய்ப்பில்லை. தலைமை ஆசிரியர் அறையில் ஒரு மூலையில் தூங்கிக்கொண்டிருக்கும் உலக உருண்டையில் பார்க்கலாம். ஆனால் அங்கு சென்று, அனுமதி வாங்கி, ஆராய்ச்சி செய்யும் தைரியம் எல்லாம் அப்போதைக்குக் கிடையாது.

ஏதாவது ஒரு வேலையாக அந்த அறைக்குப் போக நேர்ந்தால் அதை ஒரு பார்வை பார்க்காமல் வரமாட்டேன். கண்கள் தானாக அங்கேதான் போகும்.

ஒருவேளை நான் தலைமையாசிரியரிடம் போய் கேட்டு, அவரும் என்னைப் பாராட்டி, புவியியல் ஆசிரியரை வரவழைத்து, என்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்து, பின்னாளில் அப்பாடத்தில் சிறந்து விளங்க உதவி இருக்கலாம்.

அல்  ல  து ........ அந்த நாளில் நம் ஊர் வழக்கப்படி "எவ்ளோ தைரியம் இருந்தா, இருந் தாஆஆஆ எங்கிட்டயே வந்து உலக உருண்டைய பாக்கணும்னு கேட்டிருப்ப ? " என முதுகில் நாலு சாத்து சாத்தி நாள் முழுவதும் அந்த அறையின் முன்னால் முட்டி போட வைத்து, பள்ளியை விட்டே ஓட வைத்திருக்கலாம் !!

இப்போதும் இந்த நினைவுகள் அடிக்கடி வந்து நிழலாடும். ஏனோ அந்தப் பள்ளி மட்டுமல்ல, நான் படித்த வேறு எந்தப் பள்ளியிலுமே அதை நகர்த்தி வைத்து நான் பார்த்ததில்லை.