Tuesday, December 23, 2014

இந்தப் பூ, எந்தப் பூ !! ____ 3


மின்னலடிக்கும் பளீர் வெண்மையில் இருக்கும் இந்தப் பூ ... ஹும் ....எந்தப் பூ'வாக இருக்கும் ?                   

ஒரு சின்ன க்ளூ ..... பூவின் நிறமும் விதையின் நிறமும் எதிர்மாறாக இருக்கும். இந்தப் பூவும் அதிலுள்ள எறும்பும் மாதிரியேதான், இது வெள்ளை என்றால் அது கருப்பு. 

செடி முழுவதுமே பயன்பாட்டில் இருந்தாலும்கூட விதையைத்தான் நாம் அதிகம் பயன்படுத்துவோம்.

                    இந்தப் பூவுல‌ தேன் இருக்கும்னு அப்பவே தெரியாமப் போச்சே !!

****************************************************************************** 
                          ஹா ஹா, மஹி சொன்னமாதிரி 'எள்ளுப்பூ'வேதாங்க !!
 .
அம்மா வீட்டுத் தோட்டத்தில் எள்ளைப் புடைத்துப் போட்ட இடத்தில் தப்பி முளைத்த செடிகளில் பூத்திருந்த பூக்கள்தான் இந்த அழகிய எள்ளுப் பூக்கள்.

                                              காய் பிடித்திருக்கும் எள் செடி. 
 இந்த கடைசிப் படம் வீட்டுக்காரரிடம் இருந்து கடனாக வாங்கினேன்.

******************************************************************************

Sunday, December 14, 2014

கிராமத்து காலை !

ஊருக்குச் சென்றிருந்தபோது சகோதரி வீட்டு மொட்டை மாடியிலிருந்து ரசித்த சூரிய உதயம்.

                         கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, இதோ வந்திடுவார் கதிரவன் !

                                                                 வந்   தாச்   சூஊஊஊ !

                                                    தென்னை மரங்களுக்கிடையில்
                           
                                                      மறைக்க முயலும் மேகம்

                                                  கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு,

                                                            மேகம் விலகிய பிறகு

                                                      தென்னங் கீற்றுக்கிடையில்

                                               முழுமையடைந்த நிலையில்

**********************************************************************************

                                அதே இடம்தான், ஆனால் வேறொரு நாள் உதயம்.

Wednesday, December 10, 2014

கிராமத்து மாலை !


வானுயரக் கட்டிடங்களின் அணிவகுப்பு இல்லாத இடத்தில் சூரியனின் மறைவு எவ்வளவு  கொள்ளை அழகாக இருக்கிற‌து ! ஊரில், சகோதரி வீட்டில் இருந்தபோது எடுத்தது.

                                 கிராமம் என்றாலே காக்கை, குருவி இல்லாமலா !

 'இயற்கை ஒழுங்காகத் தன் வேலையை செய்கிறதா' என வேவு பார்க்கும் காக்கைகள் !

         'கொஞ்சம் நீ பாத்துக்கோ' என சொல்லி பறந்துவிட்டதோ ஒரு காக்கா !

                                  ஹா ஹா ! என்னை நம்பி அடுத்தவரும் எஸ்கேப்.

கதிரவனை இங்க அங்கனு எங்கயும் நகரவிடாம‌ எவ்வளவு பத்திரமா பிடிச்சிருக்கேன் பாருங்க !!
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிராமத்து மாலை இருந்தால் காலையும் இருக்கும்தானே ! அது அடுத்த பதிவில் !

Monday, December 8, 2014

ஒருவேளை தேடியிருப்பாங்களோ !!

சுஜா த‌ன் மனதிற்குள், 'அம்மாவுடன் போக‌லாமா ? அல்லது வேண்டாமா ?'  என்ற கேள்வியுடனேயேக் கிளம்பினாள். அம்மாவுடன் கிளம்பிப் போனால் புதிதாக முளைத்திருக்கும் உறவுகளைப் பார்க்கலாம், அவ்வளவே. பெரிய‌ பரிச்சயமெல்லாம் இல்லை.

ஆனால் வீட்டிலேயே இருந்தால் தெருவை ஒரு சுற்று சுற்றி வந்துவிடலாம். தோழிகளுடன் ஓடிப்பிடித்து விளையாடி, எல்லோரது வீட்டிற்குள்ளும் புகுந்து, ஒளிந்து விளையாடலாம். மகிழ்ச்சிக்கு அளவேயிருக்காது. விடுமுறையாச்சே !

அப்பா சொல்லிவிட்டார், "அம்மாவுடன் போய்ட்டு வாம்மா" என்று.

'போகப் பிடிக்கவில்லை' என்று சொல்லலாம்தான். சொன்னாலும் அப்பா ஒன்றும் சொல்லப் போவதில்லை. ஆனாலும் அப்பாவின் வார்த்தைக்கு மரியாதை வேண்டுமே.

அதனால்,  "இன்று மாலையே திரும்பிவிட வேண்டும்" என்ற வேண்டுகோளுடன்தான், அரை மனதுடனேயே அம்மாவுடன் கிளம்பிப் போனாள்.

உறவு வீட்டில் தன்னுடன் விளையாட‌ தன் வயதொத்த பிள்ளைகள் யாரையும் காணோம். சுஜாவின் அக அழகு முகத்தில் தெரிந்ததால், அவ்வீட்டிலிருந்த ஒரு பெண் சுஜாவிடம் வந்து, "போரடிக்குதா?" என்றார்.

"ஆமாங்க, ஆமாம்" என்பதுபோல் சுஜா பலமாகத் தன் தலையை ஆட்டினாள்.

"உனக்கு புத்தகங்கள் பிடிக்குமா?", என்றார் அப்பெண்.

'நல்லவேளை, தப்பித்தோம்' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு, "ம், பிடிக்கும்" என்றாள் சுஜா.

அப்பெண் அவளிடம் வார, மாத இதழ்களையும், தினசரிகளையும் எடுத்துவந்து கொடுத்தார்.

அவ்வளவையும் பார்த்த சுஜாவிற்கு 'இன்று மாலைவரை பொழுதுபோவது தெரியப் போவதில்லை' என்ற சந்தோஷத்துடன் கார்ட்டூன், நகைச்சுவை, துணுக்குகள் என ஒன்று விடாமல் புரட்டிக்கொண்டிருந்தாள்.

அன்றுமாலை அங்கிருந்து கிளம்பும்போது வீட்டிலிருந்த‌ எல்லோரும் கேட்டுக் கொண்டதால் அம்மாவால் தட்டமுடியவில்லை.

"இன்றிரவு மட்டும் தங்கி, நாளைக் காலையில் போய்விடலாம்" என்று அம்மா சொன்னதும் வந்த இடத்தில் அடம்பிடிக்க முடியாமல் அமைதிகாத்தாள் சுஜா.

'நேரத்தை ஓட்ட வேண்டுமே' என்று மீண்டும் அடுக்கி  வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை இழுத்துப்போட்டு அதிலுள்ள நகைச்சுவைத் துணுக்குகளுக்கான படங்களை வரைந்து பொழுதைக் கழிக்கப் பார்த்தாள்.

ம்ஹூம்,  அப்படியும், நேரம் போவதாக இல்லை. அம்மாவை நச்சரிக்க ஆரம்பித்தாள்.

சுஜாவின் நிலையை உணர்ந்த அப்பெண்  உள்ளே போய் ஒரு சிறிய, அழகான‌ இளஞ்சிவப்பு நிற, வட்டவடிவ, ப்ளாஸ்டிக்கால் ஆன விளையாட்டுப் பொருளை எடுத்து வந்து கொடுத்து,  "இதிலுள்ள ஐந்து குண்டுகளையும் நடுவிலுள்ள இந்த சிறு வட்டத்துக்குள் தள்ளு பார்க்கலாம்" என்றார்.

இப்போது சுஜா பிரச்சினைகளை மறந்து ஆர்வமுடன் குண்டுகளை சிறு வட்டத்துக்குள் தள்ளுவதிலேயே குறியாய் இருந்தாள். முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. இரண்டாவதும் தோல்வி.

எடுத்துக்கொண்டு அப்பெண்ணிடமே ஓடினாள், ஏதாவது தந்திரம் இருக்குமோ என்றெண்ணி.

 "இதை எப்படி போடுவது?" என்று கேட்டாள் சுஜா. குண்டுகளை எப்படி சாமர்த்தியமாக நகர்த்த வேண்டும் என்றும் அப்பெண் காட்டினார்.

இப்போது சுஜா முதன்முறையாக‌ எல்லா குண்டுகளையும் வட்டத்துக்குள் தள்ளி விட்டுவிட்டாள். சந்தோஷம் தாங்க முடியவில்லை.

மீண்டும் அப்பெண்ணிடம் ஓடினாள். "இங்க பாருங்க, எல்லா குண்டுகளையும் நான் போட்    டுட்    டேனே !" என்றாள் சந்தோஷமாக.

"என் தம்பிதான் வாங்கிவந்தான். அவனைத் தவிர‌ எங்க வீட்டில் யாருமே போட்டதில்லை. இப்போது நீ " என்று சொன்னார் அப்பெண்.

அப்படியே அதை ஆடாமல், அசையாமல் அங்கிருந்த‌ மாடத்தில் கொண்டுபோய் வைத்தாள். அதைத் தொடுவதற்குக்கூட பயம். குண்டுகள் வெளியில் வந்தபிறகு மீண்டும் போட முடியாவிட்டால் என்ன செய்வது ?

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு குண்டுகளை வெளியேற்றி மீண்டும் முயற்சித்ததில் அடுத்த‌ வெற்றி. இப்போது திரும்பத் திரும்ப அதையே செய்து கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

அதிகாலையே அம்மா ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். சுஜா சந்தோஷமாகக் கிளம்பினலும் அந்த குண்டுகளைத் தள்ளும் விளையாட்டுப் பொருள் மட்டும் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியது.

வாயிற்படியில் நின்றுகொண்டு , "அம்மா அம்மா, இன்னும் ஒரே ஒரு தடவ" என்று மீண்டும் மீண்டும் விளையாடினாள்.

அப்பெண் புன்னகைத்தவாறே, "உனக்கு வேணும்னா எடுத்துக்கோ. அவனை வேறு வாங்கிக்கச் சொல்லலாம்" என்றார்.

வீட்டிற்கு வந்தாள் சுஜா . சகோதர, சகோதரிகளின் முயற்சியில் தோல்வி என்றதும் சுஜாவிற்கு தலைகால் புரியவில்லை..

அந்த விளையாட்டுப் பொருளை யாரிடம் காட்டினாலும் மீண்டும் வாங்கி பத்திரமாக வைத்துக்கொண்டாள்.

நாட்கள் வருடங்களானதில் அந்த வட்டத்தட்டின் மேல் பகுதியில் லேசான கீறல் விழுந்துவிட்டது. இப்போது அதை இன்னும் பத்திரமாக வைக்க வேண்டியதாயிற்று.

இப்போது வெளியூரில் தங்கும் நிலை. பெட்டியில் பத்திரமாக வைத்து விட்டுத்தான் போனாள். சில நாட்கள் கழித்துவந்து பார்த்தபோது அந்த  பொருளைக் காணவில்லை.

அம்மாவிடம் கேட்டாலோ, "பசங்க யாராவது எடுத்து விளையாடியிருப்பாங்க, அப்படியே எங்காவது வச்சியிருப்பாங்க, நல்லா தேடிப்பாரு" என்ற பதில்தான் வந்தது.

எல்லோரிடமும் கேட்டுப் பார்த்தாச்சு. யாரிடமும் உரிய பதில் இல்லை.

இப்போது அவள் மனம் வலித்தது, " அன்றைக்கு அவங்களும் இப்படித்தானே தேடியிருப்பாங்க ! ".

Thursday, December 4, 2014

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்


                                                                        ராஜ கோபுரம்

கோயிலுக்குள் காமிரா அனுமதி இல்லை என்பதால் வீட்டிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டேன். எவ்வளவு முயன்றும் அலைபேசியில் முழுதாக எடுக்க முடியவில்லை.

                                                ராஜ கோபுரம் _ பக்கவாட்டிலிருந்து

இனி கோயிலின் உள்ளே செல்வோமே. நேரமின்மையால், அவசரத்தில் எடுத்ததால் படங்கள் வரிசையின்றி இருக்கும்.

                           இங்கே நின்று மலையைப் பார்த்து ஒரு பெரிய கும்பிடு

                                                               கம்பீரமான மலை

கோயிலின் உள்ளே போகும்போதே பார்த்தோம், யானை வெளிநாட்டவர் உட்பட எல்லோருக்கும் ஆசீர்வாதம் கொடுப்ப‌தை. நடையை சாத்திவிடும் நேரம் என்பதல் படமெடுக்க நேரமில்லை. அப்பனை தரிசித்துவிட்டு வெளியே வந்தபோது ஓய்வெடுக்க(!) அழைத்து சென்றதை மட்டுமே என்னால் படமாக்க முடிந்தது. இவ்வளவு பெரிய யானையைக் கட்டிவைத்து , பணியவைத்து,  ...... !

                                        கம்பிவேலி போடப்பட்டுள்ள தீர்த்தக் குளம்

1989 ல் இருந்து திருவண்ணாமலைக்குப் போவதும், தீபத்தின்போது மலையை சுற்றுவதும் என 2000 வரை சென்றுவந்தேன். 99 தீபத்தின்போது அண்ணாமலையாரிடம், "அடுத்த வருட தீபத்திற்கெல்லாம் நான் அமெரிக்காவில் இருக்க வேண்டும்" என்ற கட்டளையுடன்தான் மலையைச் சுற்றினேன்.

அதன் காரணம் முதல் நாள்தான் வீட்டுக்காரர் அமெரிக்கா புறப்பட்டார். ஏர்போர்ட்டிலிருந்து நேராக சகோதரி வீட்டிற்கு திருவண்ணாமலைதான் போனோம். சோகத்தில் இருந்த நான் ப்ரீஃப்கேஸை ஆட்டோவிலேயே விட்டுவிட்டு இறங்கிவிட்டேன்.

"இப்போ என்ன செய்வது?" என சொல்லிக்கொண்டிருக்கும்போதே ஆட்டோக்காரர் திரும்பிவந்து கொடுத்துவிட்டு போனார். மறக்க முடியாத நபர்.

அடுத்த வருட(2000) தீபத்தின்போது ? ..... மீண்டும் அங்கேயேதான் மலையைச் சுற்றி வந்தேன். கொஞ்சமல்ல, இந்தமுறை நிறைய 'கர்ர்ர்ர்ர்'ருடன்.

அதன் பிறகு இங்கே வந்தாச்சு. அதிலிருந்து ஊருக்குப் போனால் 'பௌர்ணமிக்காவது மலையைச் சுற்ற வேண்டும்' என நினைப்பதோடு சரி. மாட‌ வீதியை மட்டும் வலம் வந்து வீட்டுக்கு வந்துவிடுவேன்.

இந்த வருடம் அதுவுமில்லை . அடித்துப் பிடித்து கோயிலுக்கு ஓடினேன். மதியம் 11:50 க்குத்தான் போகும் வாய்ப்பு. நடையை சாத்திவிடக்கூடும் என்பதால் நேராக மூலஸ்தானம், அம்மன் சந்நிதி. உடனே வீட்டுக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் என்னால் பொறுமையாகக்கூட படங்கள் எடுக்க முடியவில்லை. கோயில் தரிசனம் கிடைத்த சந்தோஷத்தில் வீடு வந்து சேர்ந்தேன்.

முன்பு ஒருமுறை வீட்டுக் குட்டீஸ்களுடன் மலையில் 2 கிமீ தூரம்வரை  ஏறி அங்கிருந்த ஒரு குளத்தைப் பார்த்துவிட்டு திரும்பிவிட்டோம்.

மலையைச் சுற்றும்போது அடிஅண்ணாமலையார் கோயிலுக்கும் சென்று வருவோம். வழி நெடுகிலும் உள்ள அஷ்ட லிங்கங்களையும் தரிசிப்போம்.

அவ்வாறு வரும்போது ஒரு இடத்தில் குறுகலான சிறு வழியில் நுழைந்து (விருப்பமுள்ளவர்கள் மட்டும்) வர வேண்டும். அப்போது நம்முடைய கவனம் முழுவதும் எப்படியாவது வெளியில் வந்துவிட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். அதனால் பக்கவாட்டில், சுவரில் உள்ள சிவனின் தரிசனத்தைப் பெற மறந்துவிடுவோம்.

கடைசியாக உள்ள ஈசான லிங்கம் வரும்போது எல்லோருமே சோர்ந்து விடுவோம். அதுதான் நமது ஆயுளின் கடைசிக் காலமாம். அப்படி சொல்வதாலோ என்னவோ எனக்கு அதன்பிறகு நடக்கவே சிரமமாக இருக்கும். எங்கும் மயானமாக இருக்கும்.

அடிக்கடி கோயிலின் உள்ளே ஒரு இடம் விடாமல் சுற்றியிருக்கிறேன். தரிசனம் முடித்து அங்கேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருப்போம்.

 விசேஷ தினங்களில் திருக்கோயிலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு மாலை நேரத்தில் பேருந்தில் வர வேண்டும். அப்போதுதான் மின்விளக்குகளின் அலங்கரிப்பால் கோயில் கோபுரங்கள் ஜொலிப்பதைப் பார்க்கலாம். ஏறக்குறைய இரண்டு வருடங்கள் அவ்வாறு வந்திருக்கிறேன்.

வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறையேனும் திருவண்ணாமலைக்குச் சென்று அண்ணாமலையாரை தரிசித்து வருவோமே !

மலரும் நினைவால் பதிவு நீண்டுவிட்டது. அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் !

சொல்ல மறந்திட்டேனே, கோயிலில் 'பாதாள லிங்கம்' உள்ளது. சில படிக்கட்டுகள் இறங்கி கீழே செல்ல வேண்டும். உடன் யாராவது வந்தால் தைரியமாகப் போவேன்.

Tuesday, December 2, 2014

சின்ன சின்ன மழைத்துளிகள் ! & ஒரு கண்டுபிடி !

ஆஹா, இங்கு ஞாயிறு இரவு நல்ல மழை! நேற்றிரவிலிருந்து மீண்டும் மழை. இப்போதுதான் கொஞ்சம் நின்றிருக்கிறது. மீண்டும் வருமாம். நினைக்கவே சந்தோஷமாக இருக்கிறது.

                                                                விழும் மழைத்துளி !

                                                      விழுந்து தெறித்த நிலையில் !

                                              இலையில் பட்டு அழகிய‌ முத்தாக !

                                                             மேலும் சில முத்துக்கள் !

                                     ஹை, இதில் என் உருவம் விழுந்திருக்கிறது !


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மேலே படத்திலிருப்பதும் மழையோடு நெருங்கியத் தொடர்புடையதுதான். சிறுவர்கள் மட்டுமல்லாது நம்மைப் போன்றவர்களுக்கும் மிகவும் பிடித்தது. இதைக் கண்டதும் நமக்கெல்லாம் கால்கள் பரபரக்குமே , ........ என்னன்னு சொல்லுங்க, நானும் நாளையே வந்து சொல்லிவிடுகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 
 பதிவின் நீட்சி :

படங்களை அடுத்தடுத்து பார்த்துக்கொண்டே வந்தால் என்ன என்பது தெரிந்துவிடும். வீட்டிலுள்ள அறையின்  கண்ணாடி வழியே எடுத்தது.

'கவர்ட் பார்க்கிங்'காக இருந்தாலும் உள்ளே தேங்கிய கொஞ்சம் நீரில்(puddle) பக்கத்து குடியிருப்பின் எங்கேயோ உள்ள‌ மரத்தின் நிழல் பட்டு, காற்றில் தண்ணீர் அசைந்து சில நேரம் மாடர்ன் ஓவியம்போல் மாறுவதும் பின் தெளிவதுமாக இருந்தது அழகாக இருந்தது.