Friday, June 27, 2014

கோடைகாலப் பூக்கள்

இந்த கோடை சீஸனுக்காக எங்கள் குடியிருப்பு வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பல நிறங்களில் மனதைக் கொள்ளைகொள்ளும் ஸின்னியா, காஸ்மோஸ், டாலியா பூக்கள்.  இவற்றின் இதழ்கள்  அடுக்கடுக்காக இருப்பது இன்னும் அழகாக உள்ள‌து.

இதோ ... அவை உங்கள் பார்வைக்கும் ! படங்களை 'க்ளிக்' பண்ணி பெரிதாக்கிப் பாருங்க, இவற்றின் இதழ்களும், மகரந்தமும் மனதைக் கொள்ளைகொள்ளும்.

இப்பூக்களில் தேனீக்களைக் காணவில்லை. அதற்கு பதிலாக 'நான் இருக்கிறேனே' என்று போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும் எறும்பு.


                   அம்மாவும் பொண்ணுமா இருப்பாங்களோ ? அல்லது தோழிகளா ?
Wednesday, June 25, 2014

மியாவ் ..... மியாவ் !

சாதுவாக உள்ள முதல் 'மியாவ்'கள் நம்ம ஊர்க்காரங்க.

கீழே 'உர்ர்ர்ர்' என பார்க்கும் 'மியாவ்' இந்த ஊர்க்காரர்.

2007 ல் ஊருக்குப் போயிருந்தபோது யார் வீட்டுப் பூனையோ தெரியவில்லை, அது தன் மூன்று குட்டிகளுடன் எங்கள் வீட்டிற்குள் வந்தது. குட்டிகள் மகளுடன் ஒன்றிவிட்டன. சாக்லேட், பிஸ்கட் என கொடுத்து தன் வசப்படுத்திக்கொண்டாள்.  அவை விளையாடும்போது மகள் எடுத்த படங்கள்தான் இவை.

காலையில் பார்த்தால் எங்கள் படுக்கையில்தான் இருப்பார்கள். அவள்மீது ஏறி, உருண்டு, புரண்டு விளையாடுவார்கள். ஒரு பத்து நாட்கள் வெளியூர் போய்விட்டு வந்தபோது அவை ஓடி வந்து மகளுடன் விளையாடின.

இங்கு வந்த பிறகும் சில மாதங்கள்வரை அவர்களின் நினைவாகவே இருந்தாள். "அம்மா, நாம இப்போ போனாக்கூட அவங்களுக்கு என்னை அடையாளம் தெரியும்மா" என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

இரண்டு வருடங்கள் கழித்து 2009_ல் போனபோது அவை இருந்த சுவடே தெரியவில்லை எனும்போது எனக்கும் வருத்தம்தான்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

இன்று காலை  'வாக்' போனபோது பக்கத்து குடியிருப்பு வளாகத்திலிருந்து எங்கள் வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த பூனையார் .


                           ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍   Parking lot _ ல்  என்னமா கம்பீரமாய் நடந்து போகிறார் !

ஒவ்வொரு வண்டியைக் கடக்கும்போதும் தன்னை உஷார்படுத்திக்கொண்டு .....
                                                      
                                                   சுற்றுமுற்றும் ஒரு பார்வை ......
                                                          
"நம்மைப் பார்த்து இவங்களே பயப்படும்போது, நாம ஏன் இவங்களைப் பார்த்து பயப்படணும் ?" என அலட்சியமாக‌ நடையைக்கட்டியபோது ........

'வீட்டிற்குபோய் காலை 'டீ'யைப் போட வேண்டுமே' என நானும் வீட்டை நோக்கி நடையைக் கட்டினேன்.

சிறிது நேரம் 'மியாவ்'வுடன் ஓடிப் பிடித்து விளையாடுவது போலவே இருந்தது.
                  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Saturday, June 21, 2014

எங்கள் வீட்டுத் தோட்டம் _ புளிச்சகீரை & மீண்டும் தக்காளி !

உழவர் சந்தையிலிருந்து புளிச்சகீரை வாங்கிவந்து கீரையை ஆய்ந்த பிறகு அதன்  குச்சிகளை மட்டும் நட்டு வைத்தேன். எப்படி துளிர்த்து வந்திருக்கிறது பாருங்கள் !  'மீள்சுழற்சி புளிச்சகீரை'ன்னு பேர் கொடுத்திடலாமா !

சென்ற வருடம் ஒரு செடி மட்டும் நட்டு வைத்துப் பார்த்தேன். நன்றாகத் துளிர்த்தும் வந்தது, நான்கைந்து பூக்கள் பூத்துக் காய்களும் வந்தன. ஆனால் வெயிலின் கொடுமையில் எவ்வளவுதான் தொட்டியை நிழல் பக்கமாக நகர்த்திநகர்த்தி வைத்தாலும் ஒன்றும் முடியவில்லை, கருகிவிட்டது.

இந்த வருடமாவது தப்பிப் பிழைக்குதான்னு பார்க்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


'காய்ல‌ ஏதோ அழுக்கு இருக்கே'ன்னு நினைச்சிடாதீங்கோ ! எலிக்குப் பயந்து பூண்டு அரைத்து காய்களுக்குப் பூசி விட்டிருக்கிறேன். பூண்டு வாசனைக்கு வந்து கடிக்காது என்ற நினைப்பு.

சென்ற வருடம் போட்ட தக்காளி விதைகளிலிருந்து இந்த வருடமும் செடிகள் வந்த வண்ணமே இருந்தன. அதில் இரண்டு செடிகள் தப்பிப் பிழைத்தன. நல்ல வளமாகத்தான் வந்தன. காய்கள் முற்றி வரும்போது கூடவே ஒரு செடியின் நுனிப்பகுதி பசுமையான இலைகளுடனும், மற்ற பகுதி காய்ந்தார்போலும் ஆகிவிட்டது. வெயிலினாலா? அல்லது பூச்சியினாலா?  தெரியவில்லை. எந்தப் பூச்சியும் கண்ணுக்குப் புலப்படவில்லை.


இருந்தாலும் பயத்தினால்(யாருக்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கு பாருங்க) செங்காயாகவேப் பறித்து பழுக்க வைத்திருக்கிறேன். இந்த தடவ ஏமாறாம‌,  உஷாராயிட்டோமில்ல‌ !

                                                            பழுக்க ஆரம்பிச்சாச்சு ...

                                                 ஹையோ ! நெஜமாவே பழுத்தாச்சூ !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கீழேயுள்ள‌து மற்றொரு செடி.


இப்போதைக்கு நன்றாகவே உள்ளது. அப்படியே காயாமல் இருக்க வேண்டுமே என மனம் நினைக்கிறது, பார்க்கலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

[பின்குறிப்பு: பூண்டு  அறுவடையை அப்டேட் பண்ணியாச்சு. அங்கு போய் பார்க்க ஒரேயொரு கண்டிஷன் மட்டுமே. அதாவ‌து விளைச்சலைப் பார்த்து யாரும் சிரிக்கக் கூடாது என்பதுதான்அது ]

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Sunday, June 8, 2014

டார்க் பிங்க் ரோஸ் !

ஏறக்குறைய ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு இன்று அதிகாலையில் எங்கள் வீட்டின் முன் பூத்துக் குலுங்கும் ரோஜாக்களைப் பார்க்கலாம் என வந்தால் ....... எல்லாப் பூக்களும் பனியில் நனைந்து ......  ஆஹா ...... எவ்வளவு அழகு !!


பதிவில் உள்ளவை எல்லாமே Dark pink roseதான். இளங்காலை வெயிலில், பனித் துளிகளினால் கொஞ்ச‌ம் நிறம் மாறித் தெரிகிறது, அவ்வளவே !   
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

                   இரண்டு மாதங்களுக்கு முன் எடுத்த படங்கள் கீழேயுள்ள‌வை.   ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, June 6, 2014

முடிவல்ல, ஆரம்பம் !

'இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும், பசங்க படிச்சு முடிச்சதும் நான் என் விருப்பப்படி எப்படி வளர்க்கிறேன் பார்' என்று , அருண் அதாங்க நம்ம கதையின் நாயகன் மனைவியிடம் தன் முடிவை சபதமாக்கிக் கொண்டிருக்கவும், நான் அவர்கள் வீட்டில் நுழையவும் சரியாக இருந்தது.

இந்த சபதத்தை அவன் இன்றைக்கு நேற்றைக்கு எடுத்ததல்ல. அவனது இளம் வயது முதலே எடுத்துக் கொண்டிருப்பதுதான். "அது எப்படி உனக்குத் தெரியும்"னுதானே கேக்குறீங்க? எல்லோரும் ஒரே வீட்டில்தானே வளர்ந்தோம். தெரியாமல் இருக்குமா !

அருணுக்கு சிறு வயதிலிருந்தே எல்லோரையும் போலவே நாய்க்குட்டி, பூனைக்குட்டி, செயற்கை வண்ணமூட்டப்பட்ட கோழிக் குஞ்சுகள், ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டி என இவற்றை எல்லாம் வளர்க்க வேண்டுமென கொள்ளை விருப்பம்.

பெரியவர்களையே கிறங்கடிக்கும் அழகு இவற்றிடம் உண்டு. பாவம், இவனும் சின்னப் பிள்ளைதானே, என்ன செய்வான் !

பள்ளிக்கு போக ஆரம்பிக்காத‌ அந்த‌ நாட்களிலேயே யார் வீட்டிலாவது பூனை, நாய் குட்டிகள் போட்டிருப்பதைக் கேள்விப்பட்டால் உடனடியாக அங்கு சென்று அவற்றில் ஒன்றிரண்டை வாரி அணைத்துக்கொண்டு வந்துவிடுவான்.

அப்போதைக்கு வீட்டில் அப்பா இல்லை என்பது உறுதியானால் தன் அம்மாவிடம் கெஞ்சி அதற்கு பால் புகட்ட வைத்து விளையாடுவான். அப்படியே வைத்து வளர்க்க ஆசைதான். என்ன செய்வது !

அவனது அம்மா 'எங்க இருந்து தூக்கிட்டு வந்தியோ அங்கேயே சீக்கிரமா கொண்டுபோய் விட்டுட்டு வா, அப்பா வந்தால் சத்தம் போடுவார்' என்பார்.

அதேபோல் அப்பாவும் என்றைக்காவது வீட்டில் இருந்து இவன் நாய், பூனை குட்டிகளுடன் வீட்டில் அடியெடுத்து வைத்தால் போதும் 'முதல்ல கொண்டுபோய் விட்டுட்டு வா' என்பார்.

அப்போதுமுதல் பிள்ளைகள் ஆரம்பப் பள்ளி போக ஆரம்பித்திருக்கும் இப்போது வரைக்கும் முதல் பத்தியில் போட்ட சபதத்தைத்தான் இன்னமும் போட்டுக்கொண்டிருக்கிறான்.

திருமணத்திற்குப் பிறகு வெளியூர் வாழ்க்கை. இப்போதாவது வளர்ப்புப் பிராணிகளை வாங்கி வளர்க்கலாம் என்றாலும், வாடகைக்கு வீடு விடும்போதே "அப்படி எதுவும் வளர்க்கக் கூடாது" என்ற கண்டிப்புடன்தான் வீடே வாடகைக்குக் கொடுத்தார்கள்.

வீட்டில் பெண், பையன் என‌ குட்டீஸ்களும் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். சொந்த வீடும் வாங்கியாகிவிட்டது. இனி எந்தத் தடையுமில்லை, ஒரு நாய்க் குட்டியோ அல்லது பூனைக் குட்டியோ ஒன்றை வாங்கி வந்து வளர்க்க‌ வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தான்.

அப்படித்தான் எதேச்சையாக ஒருமுறை தன் வேலை விஷயமாக கடலூர் சென்றுகொண்டிருந்தபோது வழியில் நெல்லிக்குப்பத்தில் ஒரு கடையின் எதிரில் நண்பகல் வேளையில் ஒரு சிறு கம்பிக் கூண்டுக்குள் வெள்ளை வெளேரென்ற அழகான பொமரேனியன் நாய்க்குட்டி ஒன்று வாடி வதங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவர்களிடம் போய் "பாவமா இருக்கு, ஏன் வெய்யிலில் வைத்திருக்கிறீர்கள்" என்று கேட்டிருக்கிறான்.

'கடையின் உள்ளே வைத்தால் யாருக்கும் தெரியமாட்டிங்கிது, அதனால்தான் வெளியில் வைத்திருக்கிறோம்' என்று கடை உரிமையாளர்  சொல்லியிருக்கிறார்.

அந்த நாய்க்குட்டி இவனைப் பாவமாகப் பார்க்கவும் மனசு கேட்காமல் 'என்ன விலை' என்று கேட்டு வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்.

நல்லவேளை, மனைவி, குழந்தைகள் எல்லோருக்குமே அந்த புது வரவைப் பிடித்துப் போனது. பின்னே இருக்காதா ! அதன் அழகில் அனைவரும் மயங்கித்தான் போனார்கள். அதற்கு 'ஜூலி' என பெயரும் சூட்டப்பட்டது.

'ஜூலி'யும் அவர்களின் குடும்பத்துடன் ஒன்றிப் போனது. பிள்ளைகள் பள்ளி விட்டு வந்ததும் எந்நேரமும் ஜூலியுடன்தான் ஆட்டம் போட்டனர். தன் சிறுவயது சபதம் நிறைவேறியதில் அருணுக்கு அளவிட முடியாத சந்தோஷம்.

ஒருநாள் வழக்கம்போல அருண் தன் வேலை முடிந்து வீட்டிற்குள் நுழையும்போது எல்லோருக்கும் முந்தி வரவேற்கும் 'ஜூலி'யை அன்று காணவில்லை.

பெயருக்கு கையில் புத்தகம் இருந்தாலும் பிள்ளைகள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு சோகத்துடன் உட்கார்ந்திருந்தனர். கேட்டால் பதில் ஏதுமில்லை.

வீடு முழுக்கத் தேடிவிட்டு மீண்டும் அவர்களிடமே வந்து கேட்டதற்கு  "நீங்களே போய் அம்மாகிட்ட கேளுங்க" என்ற பதில்தான் வந்தது.

மனைவியிடம் கேட்டதற்கு 'எங்க அம்மாவை வரச்சொல்லி ஜூலியைக் கொடுத்தனுப்பி விட்டேன்' என்றார்.

"எதுக்கு கொடுத்திட்ட ?" என்ற‌தும் 'போய் பிள்ளைகளின் ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டைப் பாருங்க, அப்புறம் நான் செய்தது சரிதான்னு நீங்களே சொல்லுவீங்க' என்றார்.

எந்நேரமும் ஜூலியுடன் விளையாடுவதால், படிப்பில் கவனம் குறைந்துவிட்டதால் எடுத்த முடிவாம் இது.

மனைவி சொன்னபடியே அவனும் போய் பார்த்தான். ஆமாம், முதல் வகுப்பு படிக்கும் மகனும், மூன்றாம் வகுப்பு படிக்கும் மகளும் மதிப்பெண்களில் கொஞ்சம் குறைந்துதான் போயிருந்தனர். இதை ஆசிரியரும் சுட்டிக் காட்டியுள்ளார்.

'வாரம் ஒருமுறை அல்லது மாதத்தில் ஒன்றிரண்டு முறை பிள்ளைகளை கூட்டிக்கொண்டு போய் காட்டிவிட்டு வந்துவிடலாம், விடுமுறையின்போது நாம் ஜூலியை இங்கே தூக்கிக்கொண்டு வந்துவிடலாம்" என்றார்.

வேறு வழியில்லை, அவனும் ஒத்துக்கொண்டான். அப்போது அவன் போட்ட சபதம்தான் முதல் பத்தியில் இருப்பது. அந்த நேரம் பார்த்துதான் நான் அவர்களின் வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தேன்.

'சபதம் இன்னும் முடியலை போலிருக்குன்னு' நான் சொல்லவும் சூழ்நிலையை மறந்து எல்லோருமே வாய்விட்டு சிரித்துவிட்டோம்.

நான் மனதிற்குள் "இவங்க எப்ப +2 முடிச்சுட்டு கல்லூரிக்காக வெளியூர் போவது ?  அருண் எப்போ தன் ஆசை தீர செல்லங்களை வளர்ப்பது?"  என நினைத்துக்கொண்டேன்.

Monday, June 2, 2014

Pansy flowers !

இங்கே வசந்தத்தில் (கற்பனையில்)மனித முகமுள்ள இந்தப் பூக்களைப் பார்த்ததும் உற்சாகமாகி, 'வந்துட்டாங்கையா வந்துட்டாங்கையா !' என்றே சொல்லத் தோன்றும்.


நிறைய படங்களில் இருந்து தேர்வு செய்து போட்டிருக்கிறேன். அதனால் ஒரு சிலர் இங்கே விடுபட்டிருக்கலாம். ஒருசிலர் இரண்டு தடவைகூட எட்டிப் பார்த்திருக்கலாம்.


சென்ற வருட பேன்ஸி மலர்களைப் பார்க்க இங்கே 'க்ளிக்'கவும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒற்றுமையை நிலைநாட்ட இவங்க ரெண்டு பேரும் சேர்ந்தேதான்      வருவாங்கலாம் !


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


எப்படியும் இன்னும் ஒருசில நாட்களில் பிடுங்கப்படுவார்கள். அதற்குமுன் இவர்களைப் படமெடுத்துக்கொண்டேன்.

இவ்வளவையும் பொறுமையாகப் பார்த்துக்கொண்டே வந்த உங்களுக்கும் பாராட்டுக்கள் !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~